Monday 23 February 2015

சாரல் துளிகள்

1)நகரத்தின் குறுக்கு மறுக்கான தெருக்களை ஒத்திருக்கும் இலை நரம்புப்பின்னலில், வழி தவறி அலைகிறது ஒரு பொன்வண்டு.

2)பயணியர் இருக்கையில் அமர்ந்திருக்கும் வரையில் வெறிச்சோடிக்கிடப்பதாய்த் தோன்றும் சாலை, ஓட்டுநர் இருக்கையில் அமர்ந்த நொடியிலிருந்து நெரிசல் மிகுந்ததாகத் தென்படத் தொடங்கி விடுகிறது.

3)மகளின் சமையலைச் சுவைத்த அம்மாக்களுக்கே தெரியும், ருசியென்பது நாவில் இல்லையென்பது..

4)எத்தனைதான் பாசமாக இருந்தாலும், அப்பாவைப் பெற்றவர்களை விட அம்மாவைப் பெற்ற ஆச்சிகள் மனதுக்கு மிகவும் நெருக்கமாகிப்போவதில் ஏதோவொரு கெமிஸ்ட்ரி இருக்கத்தான் செய்கிறது 

5)அடிக்கும் அலாரத்தை நிறுத்திவிட்டுத் தூங்கி, வாங்கிக்கட்டிக்கொள்ள நேர்ந்த யாரோ ஒரு மகானுபாவர்தான் ஸ்னூஸ் வசதியைக் கண்டுபிடித்திருக்க வேண்டும்..

6)குழந்தையொன்று சிந்திச்சென்ற புன்னகைகளைச் சேமிக்கத்தொடங்கிய கணத்திலிருந்து உயிரொளி வளர்க்கத்தொடங்கியது அமாவாசை நிலவு.

7)'இந்தச்சாலைகள் இப்பொழுதிருப்பதைப்போலவே பல காலம் உறுதியுடன் இருக்கும்' என்றுரைத்த அரசாங்கத்தின் சாயம் முதல் மழையிலேயே கரைந்து ஓடிக்கொண்டிருந்தது.

8)பெரியவர்களின் கண்ணாடியையும், காலணிகளையும் ஒரு தடவையேனும் விரும்பி அணிந்திடாத குழந்தை உலகில் இன்னும் பிறந்திடவில்லை.

9)கூரையில் சொட்டும் மேல்தளத் தொட்டி நீர் ஞாபகப்படுத்துகிறது மழையின் தாளத்தை.

10)காலத்தின் எந்த நொடிக்கும் உடனடியாக மனதளவில் இழுத்துச்சென்று விடுகின்றன ஒளிப்படக் கால இயந்திரங்கள்.

Thursday 19 February 2015

நாஞ்சில் நாட்டு சமையல் (வெள்ளரிக்காய் கிச்சடி)

நாஞ்சில் நாட்டின் விருந்துச்சமையலில், முக்கியமாக கல்யாண விருந்துகளில் கட்டாயம் இடம்பெறும் அயிட்டங்களில் வெள்ளரிக்காய் தயிர்ப்பச்சடியும் ஒன்று. மஹாராணிகளும் இளவரசிகளும் வீற்றிருக்கும் அரசவையில் ஒரு ஓரமாக ஆனால் தனக்குரிய மதிப்புடன் வீற்றிருக்கும் அரசகுல மகளிரைப்போல், அவியலும் எரிசேரியும் கொலுவிருக்கும் இலையில் இதுவும் உரிய மதிப்புடன் பரிமாறப்பட்டிருக்கும்.

நன்கு விளைந்த, காய்ப்பருவத்திலிருக்கும் கெட்டியான வெள்ளரிக்காய்தான் இதற்கு உகந்தது. வடக்கில் சாலட்டுக்கென்று குட்டிக்குட்டி வெள்ளரிகள் கிடைப்பதால் வித்தியாசம் காட்டுவதற்காக இதை இங்கே ‘மெட்ராஸ் காக்டி’ என்று அழைக்கிறார்கள். இப்பொழுதெல்லாம் எங்கும் காணக்கிடைக்கும் பரம்பொருளான இது முன்பெல்லாம் தென்னிந்தியக்காய்கறிகள் கிடைக்கும் கடைகளில் மட்டும்தான் கிடைத்துக்கொண்டிருந்தது. வாங்கியபின் வெகு நாட்களாக ஃப்ரிஜ்ஜில் ஆழ்ந்த துயிலில் இருந்த காரணத்தால் உருக்குலைந்திருந்தாலோ, மென்மைப்பட்டிருந்தாலோ அது பச்சடிக்கு உதவாது. இதை மேல்தோலைச்சீவி விட்டு நான்காக வகுந்து கொண்டு விதைகளைக் ‘கவனமாக’ நீக்கவும். பச்சடி சாப்பிடும்போது பல்லிடுக்கில் விதை அகப்படுவதென்பது பாயசத்திற்கு கடுகு தாளிப்பதற்குச் சமம். விதை நீக்கியபின் காயை பொடிப்பொடியாக நறுக்கிக்கொள்ளவும்.
வாணலியில் கொஞ்சம் எண்ணெய்யை (உத்தேசமாக இரண்டு ஸ்பூன்) சூடாக்கிக்கொள்ளவும். இதற்கு நல்லெண்ணெய் ஆகவே ஆகாது. சூரியகாந்தி எண்ணெய் உபயோகிக்கலாம்... தேங்காயெண்ணெய் உத்தமம் என்று சொல்பவர்களும் உண்டு. எண்ணெய் காய்ந்து  கடுகு போட்டு வெடித்ததும் உளுந்தம்பருப்பு, காய்ந்த மிளகாய் சேர்த்து லேசாக சிவக்க விடவும். பின் ஒரு இணுக்கு கறிவேப்பிலையை சொய்ங்க் என்று உருவிச் சேர்த்து, பொரிந்ததும் கால் டீஸ்பூன் பெருங்காயப்பொடியைச் சேர்த்து கரண்டியால் OOO என்று கிண்டும் நேரத்துக்கே கிளறி வெள்ளரித்துண்டுகளைச் சேர்க்கவும். பச்சடியின் மணம் எழுந்து வருவதை இப்பொழுதே அனுபவிக்கலாம். ருசிக்கேற்ப உப்பு சேர்த்து துண்டுகள் மூழ்கும் வரை தண்ணீர் சேர்த்து வேக விடவும். வெள்ளரித்துண்டுகள் முக்கால் வேக்காடு ஆகும் சமயம் தண்ணீர் வற்றியிருக்க வேண்டும், அதற்கேற்ப தண்ணீரை முதலிலேயே கவனமாகச் சேர்க்க வேண்டும்.

கேரளத்தைப்போலவே நாஞ்சில் பகுதியிலும் தேங்காயைச் சற்றுத் தாராளமாகவே.. அதாவது வட்டார வழக்கில் சொல்லப்போனால் ‘கொழூக்க்க’ சேர்ப்போம். காய் வேகும் சமயத்திலேயே அரை மூடி துருவிய தேங்காயுடன் மூன்று பச்சை மிளகாய், கால் டீஸ்பூன் சீரகம் சேர்த்து மையாக அரைத்து மசாலா தயார் செய்து கொண்டு விடலாம். காய் முக்கால் வேக்காடு ஆனதும் மசாலாவைச்சேர்த்து தேவைப்பட்டால் கால் கப் தண்ணீர் சேர்த்து வேக விடவும். காய் வெந்து தண்ணீரும் சுண்டியதும் இறக்கி விடலாம். இறக்கி வைத்ததும் உடனே தயிரைச்சேர்த்து விடக்கூடாது. ஆக்கப்பொறுத்தவர்கள் சற்று ஆறவும் பொறுக்க வேண்டும். 

தயிர்ப்பச்சடியில் தயிர்தான் அதற்கான தனி ருசியைக்கொடுக்கிறது என்பதால் அதன் தரத்தில் சமரசம் செய்து கொள்ளலாகாது. தயிர் என்ற பெயரில் கெட்டி மோரைச்சேர்த்தால் பச்சடியானது அவியல், துவரன், மோர் மிளகாய் போன்றவற்றுடன் இலையில் இரண்டறக்கலந்து விடும் அவல நிலைக்குத் தள்ளப்பட்டு விடும். சூடாக இருக்கும்போது தயிரைச்சேர்த்தாலும் அதே கதிதான். ஆகவே, பச்சடி அறை வெப்பநிலைக்கு வந்த பின் அல்வாத்துண்டு மாதிரியிருக்கும் தயிரைச்சேர்த்து கரண்டியால் மெதுவாகக் கிளறினால் தளதளவென்றிருக்கும் தயிர்ப்பச்சடி இலையில் அடக்கவொடுக்கமாக அமர்ந்திருக்கும்.

செய்முறை ஒரு சிறிய வீடியோவாக..

Wednesday 4 February 2015

இப்பொழுது இரண்டாமிடம்.. ச்சாய்ஸில் எப்போதும் முதலிடம்.

முத்து, மணி, என்று ஏதோ ஒரு பெயரில் கிராமங்களில் வளர்பவையாகட்டும், ஜிம்மி, ஜானி, சாக்லெட், ஃபேஸ்புக்,, ரூஷி என்று பெயரிடப்பட்டு நகரங்களில் வளர்க்கப்படுபவையாகட்டும் மனிதர்களோடு பிரிக்க முடியாத ஒரு அன்புப்பிணைப்பை ஏற்படுத்தி விடுகின்றன இந்த ஜீவன்கள். கிராமங்களைப்பொறுத்தவரை முதலில் காவலுக்காகத்தான் வளர்க்க ஆரம்பிக்கப்படுகின்றன. அதனாலென்ன,.. காவலரும் நம் குடும்பத்தில் ஒருவர்தானே.

எங்கள் தாத்தா வீட்டில் ஒரு நாய் வளர்ந்தது. தாத்தாவின் கூடவே அதுவும் விடியற்காலையில் வயலுக்குப்போய் கொக்குகளை விரட்டுவது, வரப்பில் முடங்கித்தூங்குவது போன்ற மேல்வேலைகளைப் பார்த்து விட்டு, இரவில் களைத்துத்தள்ளாடியபடி வரும். பகலில் ஆளையே காணாது. என்றாவது ஒரு நாள் தாத்தா சீக்கிரம் வந்து விட்டாலும் அது தனது வழக்கமான நேரத்துக்குத்தான் வரும். “கஞ்சிய நேரத்தோட ஊத்துனாத்தான் என்னா?” என்ற அலுப்பு தொக்கிய முகத்துடன் போய் கோழிக்கூட்டின் மேல்திண்ணையில் போய் முடங்கிக்கொள்ளும்.

சிறுவயதில், அப்போது கைக்குழந்தையாக இருந்த என் தம்பியை இடுப்பில் வைத்துக்கொண்டு படிக்கட்டில் படுத்துக் கண் வளர்ந்து கொண்டிருந்த நாயைக்காட்டி “பட்டி பாரு.. த்ச்.. த்ச்.” என்று விளையாட்டுக்காட்டிக்கொண்டிருந்தேன். கனவில் என்னத்தைக்கண்டதோ!!.. என் ஆள்காட்டி விரலைக்கவ்வி விட்டது. பல் பதிந்து ரத்தம் கொடகொடவென்று கொட்ட திருதிருவென்று விழித்துக்கொண்டிருந்த என்னைக்கண்டதும் அந்த வீட்டம்மா தரதரவென்று வீட்டினுள் கிட்டத்தட்ட இழுத்துச்சென்றார். ஒரு துண்டு கருப்பட்டியைக் கொடுத்து மென்று தின்னச்சொல்லி, ஒரு கிண்ணத்தில் நல்லெண்ணெய்யையும் கொடுத்து குடிக்கச்சொன்னார். கடிபட்டவருக்கு நாயின் உரிமையாளர் வீட்டிலிருந்து இதெல்லாம் செய்யவேண்டுமென்ற சம்பிரதாயமாம். கருப்பட்டியைக்கண்டு அகமகிழ்ந்தாலும் நல்லெண்ணையைக் கண்டதும் ஓடப்பார்த்தேன். விடாப்பிடியாகப் புகட்டி விட்டு என் வீட்டிற்குத்தகவல் சொல்வதற்காக கூடவே ஒரு ஆளையும் அனுப்பி வைத்தார்கள். ஆரம்பித்ததைய்யா வினை..

மறுநாள் அரசாங்க ஆஸ்பத்திரிக்குப்போய் ஒரு ஊசி, ஒரே ஒரு ஊசி போட்டு விட்டு வந்தேன். அன்றிலிருந்து நாற்பத்தொரு நாட்களுக்கு உப்பில்லாத பத்தியச்சாப்பாடுதான். சிறு பயிறை உப்பில்லாமல் அவித்துத் தின்னத்தருவார்கள். அதை உப்புப்போட்டு அவித்துத்தந்தாலே அப்பொழுதெல்லாம் சாப்பிடமாட்டேன். பற்றாக்குறைக்கு நான் சாப்பிட்டதிலிருந்து கொஞ்சத்தை எடுத்து தினமும் அந்த நாய்க்கும் போடுவார்கள். என்னைக் கடித்த தவறுக்காக அந்த நாயும் தினமும் உப்பில்லாப்பத்தியம் இருந்தது. போதாக்குறைக்கு வேறு யாரையும் கடித்து விடக்கூடாதென்று அதற்கு வீட்டுச்சிறை வேறு.
Great dane என்றும் அறியப்படும் German Mastiff இனத்தைச்சேர்ந்த இவரைப்பற்றிய தகவல்கள்  வலையில் நிறையக்கிடைக்கின்றன.
நாய் வளர்க்க வேண்டுமென்று ஆசையாக இருந்தாலும் இந்த சாங்கியங்களால் ஆசையை முளையிலேயே கிள்ளி விடுவதுண்டு. இருந்தாலும் எப்பொழுதாவது அப்பொழுதுதான் கண் திறந்த குட்டிகள் எங்கள் வீட்டிற்கு வந்து இரண்டொரு மாதங்கள் வளர்ந்து விட்டு வேறு எங்காவது போய் விடும். 

பக்கத்து வீட்டில் இருந்த அல்சேஷனுக்கு ரொம்பவும் குழந்தை மனசு. யார் லிப்டில் போனாலும் தன்னையும் கூட்டிப்போகச்சொல்லி அடம்பிடிக்கும். லிப்ட் கதவு திறக்கும் சத்தம் கேட்டதும் துள்ளிக்குதித்துக்கொண்டு ஓடி வந்து மேலே மோதும், இழையும். மனிதர்களிடம் கொண்டிருக்கும் தன் பிரியத்தைக் காண்பிப்பதற்காக அது செய்யும் வித்தைகள் இருக்கிறதே அட!! அட!! அட!! மகளுக்கு நாய் வளர்க்க ஆசையாக இருந்தாலும், கிட்டே நெருங்கப்பயப்படுவாள். அவள் கல்லூரி விட்டு வரும் நேரத்தில் நான் வாசற்கதவைத்திறந்தே வைத்திருப்பேன். லிப்ட் கதவின் கண்ணாடி வழியே பார்த்து விட்டு நாய் இல்லையென்றால் ஒரே பாய்ச்சலாய் வீட்டுக்குள் ஓடி வந்து விடுவாள். இல்லையென்றால் நான் பாதுகாப்பாய் கூட்டி வர வேண்டியிருக்கும். இதுவே ரங்க்ஸ் வரும்பொழுது பின்னாடியே எங்கள் வீட்டுக்குள்ளும் வந்து விடும். ஐந்து நிமிடமாவது கொஞ்சிக்குழைந்த பின் மனமேயில்லாமல் தன் வீட்டுக்குப்போகும்.

வீட்டுக்குக்கூட்டி வந்து வளர்த்தால்தான் வளர்ப்புப்பிராணியா? தெருக்களில் ஆதரவற்றுத்திரியும் நாய்க்குட்டிகள் எத்தனையோ இருக்கின்றன. பாசத்தை அவற்றுக்கும் கொஞ்சம் பங்கிட்டுக்கொடுக்கலாமே. வீட்டருகில் ஒரு நாய் ஐந்து குட்டிகளை ஈன்றிருந்தது. எலும்பும் தோலுமாக மடியே இல்லாமல் இருந்த அந்தத்தாயால் குழந்தைகளின் வயிற்றை நிரப்ப இயலவில்லை. அக்கம்பக்கத்துக் குழந்தைகள் பால், பிஸ்கட், ப்ரெட், சப்பாத்தி என்று கொண்டு வந்து ஊட்டுவார்கள். ஆனாலும் அது தன் கடமையை விடாமல் செய்தது. குழந்தைகள் பசித்திருக்கக் கண்டிருக்கும் தாய்மையும் உண்டா என்ன? தான் என்ன துன்பப்பட்டாலும் தன் குழந்தைகள் நன்றாக இருக்க வேண்டும் என்று நினைப்பதுதானே தாய்மை. இம்மாத பிட் தளத்தின் மாதாந்திரப்போட்டியும் இந்தத்தலைப்பையொட்டியே வந்ததால் நான் அனுப்பிய இந்தப்படம் இரண்டாம் இடத்தை வென்றது என்ற செய்தியை மகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொள்கிறேன்.
இப்பொழுதும் நாய் வளர்க்க வேண்டுமென்ற மகளின் ஆசையை பராமரிப்பைக் காரணம் காட்டித்தான் நொறுக்கிப்போடுகிறேன். அடுக்கு மாடிக்குடியிருப்புகளில் நாய் வளர்க்க அனுமதி கிடையாது. கிடைத்தாலும் அவர்கள் போடும் விதிமுறைகளில் அந்த ஆசை தானாகவே அழிந்து போகும் என்பது இரண்டாவது காரணம். வீட்டுக்குக் கூட்டி வந்து விட்டு சரியாகப் பராமரிக்காமல் விடுவதை விட, அது நல்லதொரு பராமரிப்பாளரின் கையில் சென்று சேர்வது நல்லதல்லவா?..

Monday 2 February 2015

சாரல் துளிகள்


1)  பலவீனமாக்குவதல்ல,.. மேலும் உறுதிப்படுத்துவதே அன்பு.

2) கட்டைவிரல் குறிப்பால் தாகத்தை உணர்த்திய சாலை வியாபாரிக்கு, புத்தம்புது தண்ணீர் பாட்டிலைக் கொடுத்துச் சென்ற வாகன ஓட்டுனர் உணர்த்திச்செல்கிறார் மனிதம் இன்னும் செத்து விடவில்லையென்பதை..

3) தெருவில் போகும்போது "டாய்ய்ய்ய்.. " என்று வலிய அழைத்து 'டாட்டா ' சொல்லிச் சிரிக்கிறது இளம்பிஞ்சொன்று # இந்த நாள் இனிது#

4) திரைப்படம் ஆரம்பிக்குமுன் ஒலித்த தேசியகீதத்துடன் தானும் கூடச்சேர்ந்து பாடிக்கொண்டிருக்கிறது கை கால் முளைத்த ஒரு புல்புல்..

5) எதிர்முனையிலிருக்கும் நபரின் நிலைமையைச் சற்றும் சிந்தியாமல், “ஏன் போனை உடனே எடுக்கலை?” என்று தேம்பும் அப்ரண்டீஸ்களைத் தேற்றியே பாலன்ஸ் தீர்ந்து விடுகிறது.

6) கூடை நிறைந்திருக்கிறது.. ஒவ்வொன்றாய் உண்கிறான் பசி பொறுக்காத வியாபாரி.

7) மெலிந்த கைகளை நீட்டி வானிடம் சில துளிகள் யாசகம் கேட்க ஆரம்பிக்கிறது மரம்.. கோடைகாலம் ஆரம்பம்.

8) காலோடு தலை போர்த்திக்கொண்டால் பேய் பிசாசால் நம்மைக் கண்டுபிடிக்க முடியாது என்று எண்ணும் குழந்தையின் அறியாமை ரசிக்கவே வைக்கிறது.

9) இளவெயிலில் உலர்ந்து கொண்டிருந்த வானவில்லிலிருந்து உதிர்ந்து கொண்டிருக்கின்றன வண்ணங்கள். உத்திரவாதம் வெளுத்துப்போயிற்றே இந்திரனே.

10) முதல் மழைத்துளியை அருந்திய நிலத்திலிருந்து வெளிப்பட்ட ஆவியாய் எங்கிருந்தோ மணத்துக்கொண்டிருக்கிறது ஒரு புல்லாங்குழல்.

LinkWithin

Related Posts with Thumbnails