Tuesday 3 March 2020

சாரல் துளிகள்

பிய்த்துப் போட்ட இட்லித்துண்டுகளாய்ச் சிதறிக்கிடக்கும் முகிற்கூட்டத்தைக் கூட்டிப் பெருக்குகிறாள் தென்றல் பெண்.

சமையல் பழகும் சிறு பெண் வார்த்த தோசை போல் பிய்ந்து கிடக்கின்றன மேகங்கள்.

மலைமகளின் தோளில் முந்தானையெனத் தொற்றிக்கொண்டிருக்கிறது முகில்.

கழுவிக் கவிழ்த்த பாத்திரம்போல் நிர்மலமாயிருக்கும் வானத்தில், ஒட்டிக்கொண்டிருக்கும் பருக்கை போல் ஒற்றை முகில்.

இலக்கில்லாத வழிப்போக்கனைப்போல் காற்று இழுத்துச்செல்லும் வழி சென்று கொண்டிருக்கிறது முகில்.

வாழையிலையில் விழுந்த சூடான அல்வா போல் வழுக்கிக்கொண்டு ஓடுகிறது மேகம்.

எறும்புகள் இழுத்துக்கொண்டு போகும் சர்க்கரைத்துண்டுகள் போல், வான்வெளியில் ஊர்ந்து செல்கின்றன முகில்கள்.

எந்தக் குழந்தை சிந்திய தேங்காய்த் துருவலோ... சிதறிக் கிடக்கிறது வானமெங்கும் முகில்களாய். காரிருளில் பஞ்சு மிட்டாயென மெல்ல அசைந்த உருவத்திடம் 'யார் நீ?'யெனக் கேட்டேன். 'ம்யாவ்' எனக் கூறி விட்டு விர்ரென வானேகி நீந்தத்தொடங்கியது முகில்.

பருத்திப் பாலாய் முகந்தனவோ அத்தனை முகில்களும்! இத்தனை வெண்மை கொண்டிருக்கின்றன!

Tuesday 18 February 2020

காதல்ங்கறது..

'காதல்ங்கறது', வெடிகுண்டு வைக்கப்பட்டதாகப் புரளி கிளப்பப்பட்ட தேங்காய் மாதிரி.எதிர்பார்ப்பிலேயே வைத்திருந்து ஏமாற்றி விடும்.

'காதல்ங்கறது', சந்திர கிரகண நேரத்து நிலா மாதிரி. குறுக்கே யாராவது புகுந்துட்டா கமுக்கமா இருந்த இடமே தெரியாம ஒளிஞ்சுக்கும். தட், இருக்கு.. ஆனா இல்லை மொமெண்ட்.

அண்ணலும் அவளும்
நோக்கிக்கொண்டதை
அவள் அண்ணணும் நோக்கியதால்
அரசு மருத்துவமனையில் 
அட்மிட்டாகிக்கிடப்பவன்
'காதல்ங்கறது' என
பஞ்ச்டயலாக் பேச நினைத்தும்
மௌனித்துக்கிடப்பதற்கு
நேற்று அவள் அண்ணன் அளித்த பஞ்சும்
இன்று பஞ்ச் அளிக்கக் காத்திருக்கும்
அவன் அப்பனுமேயன்றி
வேறு காரணம் யாதுள?
தெறித்துச்சிதறிய இரண்டு பற்களும்
கிழிந்து வீங்கியிருக்கும் உதடுகளும்
சத்தியமாகக் காரணமில்லாததால்
நாம் அப்பால் விலகுவோம்.

'காதல்ங்கறது' ஆதார் கார்ட் மாதிரி. கை வசப்பட்டபின் லோ லோ லோன்னு அலைய வைக்கும்.

வேலண்டைன்ஸ் டே ஸ்பெஷலாய் உப்புமா பரிமாறிய மனைவிக்கு, ரிட்டர்ன் கிஃப்டாய் வாழைப்பூவைப்பரிசளித்த கணவன், உசிலிதான் வேண்டுமென அடமாய் உட்கார்ந்திருக்கிறான் கறுவிக்கொண்டு..
பழிக்குப்பழி..புளிக்குப்புளி..
பொங்கி வழியும் பாசத்தில் சறுக்கி விழாமல் சற்று ட்ராக் மாறிச்செல்வோம்.

'விடுமுறை தினங்களில் ரக்ஷா பந்தன் பண்டிகையும், வேலை நாட்களில் வேலண்டைன்ஸ் டேயும் வர வேண்டும்' என்பதைத்தவிர ஒரு இளசின் பிரார்த்தனை வேறென்னவாக இருக்க முடியும்?

'காதல்ங்கறது' பலவீனமாக்குவதல்ல,.. மேலும் உறுதிப்படுத்துவதே அன்பு என்பதைப் புரிந்து கொள்வதே.

Sunday 16 February 2020

சாரல் துளிகள்

கிடாரின் தந்தியென விட்டு விட்டு அதிர்ந்து கொண்டிருக்கும் புறாவோடு, சுதி சேராமல் இணைந்திசைக்கிறது இன்னொரு புறா.

ஒருவருக்கொருவர் உதவியும் கைத்தாங்கலுமாக இருக்க வேண்டும் மனித வாழ்வு. ஒருவழிப் பாதையாக அல்ல.

அத்தனை மொட்டுகளும் மலர்ந்தபின் தனக்கானதைத் தேர்ந்தெடுக்கவெனக் காத்திருக்கிறது பட்டாம்பூச்சி, சிறகுகள் வெளிறி உதிர்ந்து கொண்டிருப்பதை உணராமல்.

எருதை மேன்மேலும் புண்படுத்திக்கொண்டிருக்கும் காக்கைகள் ஒருபோதும் அறிவதில்லை, அவற்றுக்காகக் காத்துக்கொண்டிருக்கும் கரிச்சான்களை.

அரவமற்ற பின்னிரவில் இரைச்சல் அதிகம்.

எல்லா மொழியும் தெரிந்த கடவுளுக்கு எந்த மொழியில் சொன்னாலும் புரிவதில்லை. ஆகவே, செவி சாய்ப்பதுமில்லை.

ஆட்டோ கேப்பில் சைக்கிளில் போய்விட நினைப்பவரை, சைக்கிள் கேப்பில் நடந்து போக வைக்கிறது வாழ்க்கை.

அளவுக்கு மீறிய செயற்கையான பணிவுடன் காலில் விழுவதெல்லாம் காலை வாரி விடத்தானேயன்றி வேறெதற்குமல்ல.

நீட்டவும் குறுக்கவும் வேண்டியிருக்கும்  தாமரைத்தண்டுக்கு யாதொரு கவலையுமில்லை. கவலையெல்லாம், வற்றவும் பெருக்கவுமாயிருந்து அவதிப்படும் குளத்துக்குத்தான்.

கொந்தளிக்கும் நடுக்கடலில் அலைவுறும் படகில், துடுப்பு வலிப்பதை நிறுத்தி, பேரமைதியுடன் நிமிர்ந்து அமர்கிறான். விதி வழிப் பயணிக்கிறது படகு.

Saturday 15 February 2020

கோதுமை ரவை வெஜ் கிச்சடி.


உடல் நிலை சரியில்லையென்றால் நம்மூரில் ரசஞ்சாதம் சாப்பிடச்சொல்வதைப்போல, மஹாராஷ்டிரத்தில் டாக்டர்கள் கிச்சடி சாப்பிடச்சொல்வார்கள். காய்ச்சல் நேரத்தில் பட்டினி போட்டு உடலை மேலும் கெடுத்துக்கொள்ளாமல் சத்துள்ளதாகவும், வாய்க்கு ருசியாகவும் அதே சமயம் நலிவுற்றிருக்கும் உடலின் ஜீரணசக்திக்கு சோதனை வைக்காமலும் சாப்பிடக்கூடிய ஒரே அயிட்டம் கிச்சடிதான். செய்யப்படுவதென்னவோ அர்சீம்பருப்பு மாதிரிதான், ஆனாலும் சிற்சில மாற்றங்களுடன் செய்தால் அன்றாடச் சமையலிலும் ஓர் அயிட்டமாகச் சேர்த்துக்கொள்ளலாம். தினப்படிச் சமையல் போரடிக்கும்போதோ அவசர அடியாகவோ செய்ய உகந்தது. பையரும் ரங்க்ஸும் தற்சமயம் அரிசியில்லாக் கட்சியின் உறுப்பினர்களாக இருப்பதால் கோதுமை ரவையில் செய்தேன். 

இவ்வளவுதான் தேவை:
அரிசி 1 கப் அல்லது வறுக்கப்பட்ட கோதுமை ரவை 1 கப், 
வேக வைக்கப்பட்ட துவரம் பருப்பு கால் கப்
காரத்துக்கேற்ப மிளகாய்த்தூள்
கொஞ்சமாக மஞ்சட்பொடி
ருசிக்கேற்ப உப்பு
சிட்டிகை பெருங்காயப்பொடி
சீரகம் கால் ஸ்பூன்
நறுக்கப்பட்ட இஞ்சி, பூண்டு தலா அரை ஸ்பூன், வெங்காயம் ஒன்று
கொத்துமல்லி இலை 1 கப். 
நறுக்கப்பட்ட தக்காளி ஒன்று
நறுக்கப்பட்ட கேரட், பட்டாணி, முட்டைக்கோஸ் கலவை 1 கப்
இரண்டு கப் தண்ணீர்,
இரண்டு டேபிள்ஸ்பூன் சமையல் எண்ணெய்
கொஞ்சமாக நெய்
ஒரு அகலமான பாத்திரம்.

இப்படித்தான் செய்யணும் கிச்சடி:
1. சட்னி ஜாரில், வெங்காயம், இஞ்சி, பூண்டு, கொத்தமல்லி இலை, மிளகாய், மஞ்சள் தூள்களைப்போட்டு தண்ணீர் விடாமல் கொரகொரப்பாக அரைத்துக்கொள்ளுங்கள்.

2. அகலமான பாத்திரத்தை அடுப்பில் வைத்து இரண்டு டேபிள்ஸ்பூன் எண்ணெய்யை விட்டுச் சூடாக்கி அதில் சீரகத்தைப்போட்டுப் பொரிய விடவும். பொரிந்ததும், பெருங்காயப்பொடியைப்போட்டுக்கிளறி, உடனேயே அரைத்த மசாலையை அதோடு சேர்த்துக் கிளறி பச்சை வாசனை போனதும், தக்காளித்துண்டுகளைப்போட்டுக் கிண்டி,  ஒரு ஸ்பூன் உப்புப்போட்டு தக்காளி மென்மையாகும் வரை வேக விடவும்,

3. தக்காளி வெந்ததும் கேரட் முதலான காய்கறிக்கலவையைச்சேர்த்துக் கிளறி ஒரு நிமிடம் வேக விடவும்.

4. தண்ணீரைச் சேர்த்து, சூடானதும், கோதுமை ரவையைச்சேர்த்து அரை வேக்காடு வரும் வரை சமையுங்கள்.

5. இப்போது வெந்த பருப்பை நன்கு மசித்துச் சேர்க்கும் தருணம். சேர்த்தபின் நன்கு தளபுளவெனக்கொதிக்கும்போது கொஞ்சமாக நெய் சேருங்கள்.  இன்னும் சத்துள்ளதாகச் செய்ய விரும்பினால் ஏதாவதொரு கீரையை நறுக்கி கைப்பிடியளவு சேர்க்கலாம். கஸூரி மேத்தியை கொஞ்சமாக அள்ளிப்போட்டால் மணத்துக்கொட்டும். இங்கெல்லாம் ஹோட்டல்களில் "பாலக் கிச்சடி" மிகவும் பிரசித்தம். கிச்சடி இறுகலாகவோ, தளதளவெனவோ வேண்டுமென்றால் அதற்குத்தகுந்தாற்போல் தண்ணீர் சேர்த்துக்கொள்ளலாம். நன்கு சேர்ந்து மணம் வந்ததும், உப்பு காரம் சரி பார்த்து இறக்கி விடலாம். பொதுவாக மராட்டியத்தில் கொஞ்சம் தளதளவெனத்தான் கிச்சடி செய்வார்கள். பருப்பு சேர்ப்பதால் நேரமாக ஆக தானாகவே இறுகிக்கொள்ளும்.

அரிசி சேர்த்து கிச்சடி செய்வதென்றால், ஒரு கப் அரிசி, கால் கப் பருப்பு இரண்டையும் சேர்த்து நன்கு கழுவி, இரண்டரை கப் தண்ணீர் சேர்த்து குக்கரில் வேக வைத்து எடுத்துக்கொள்ளவும். அப்படிச்செய்யும் போது மூன்றாவது பாயிண்டிலிருந்து நேராக ஐந்தாவது பாயிண்டிற்குப் பாய்ந்து விடவும். மற்றவையெல்லாம் ஒரே மாதிரிதான்.

கிச்சடிக்குத்தொட்டுக்கொள்ள பப்படம், ஊறுகாய், சமோசா, ஃபாஃப்டா, வெங்காய ராய்த்தா என எத்தனை இருந்தாலும் எலுமிச்சை ஊறுகாய்தான் முன்னிலையில் இருக்கிறது. கிச்சடியில் காரம் கொஞ்சம் முன்னே பின்னே இருந்தாலும் அதை நிரவும் பெரும்பொறுப்பை சுர்ர்ர்ர்ரென நாக்கில் உறைக்கும் ஊறுகாய் எடுத்துக்கொள்கிறது.

Friday 14 February 2020

இதயமே.. இதயமே..

//ஒத்த வயதுள்ள எதிரெதிர் பாலினரிடத்தில் மட்டுமன்றி, சக மனிதர் அனைவரிடமும் சுரக்கும் மனித நேயத்திற்கு வெறுமனே காதல் என ஒற்றை வார்த்தையில் முத்திரை குத்தி அதை, சிமிழுக்குள் கடலென அடைத்து விட முடியுமோ!!  தாயிடத்தில், தந்தையிடத்தில், உடன் பிறந்தாரிடம், ரத்த உறவுகளிடம், மற்றும் ஊழின் துயரில் அழுந்திப் பரிதவிக்கும் ஒவ்வொரு மனிதரிடமும் ஏற்படுவதை அன்பு, பாசம் என பல்வேறு பொதுப் பெயர்களால் அடையாளமிட்டாலும் இரு நெஞ்சங்களினிடையே ஏற்படும் ஈர்ப்பு மட்டும் "காதல்" என வார்த்தை மகுடம் சூடிக்கொள்கிறது.// 

முன்பொரு முறை எழுதிய அதே வரிகளை மறுபடியும் நினைவூட்டுவதோடு ஒரு ஒளிப்படக்கலைஞராக இந்த வருடத்தைய எனது பங்களிப்புகள். இவற்றில் ஏற்கனவே வலையேற்றப்பட்ட சில படங்களைத்தவிர மற்றவை புதியவை.
















நாளும் கோளும் அன்பை வெளிப்படுத்துபவர்க்கில்லை. ஆதலால் அன்பு செய்வீர் உயிர்களனைத்திடமும், அனுதினமும்..

Tuesday 11 February 2020

கடலை மிட்டாய் டே..

தமிழ்நாட்டின் கடைக்கோடியில் ஒரு குக்கிராமம். குக்கிராமம் என்றதும் அதன் அமைப்பைப்பற்றிய கற்பனைக்குதிரையைப் பறக்க விட வேண்டாம். குக்குகள்.. அதாவது, சமையல் நிபுணர்கள் நிறைந்த கிராமம் ஆதலால் அது குக்கிராமம் ஆயிற்று. அங்கிருந்த நிபுணர்கள் ஒவ்வொருவரும் அக்கம்பக்கத்து நகரங்களிலும் பெரு நகரங்களிலும் "பவன், விலாஸ், கஃபே"  என்ற பெயர்களில் தங்கள் சமையல் சாம்ராஜ்யத்தை நிறுவி விஸ்தரித்திருந்தார்கள். ஆனால், ஒருவர் மட்டும் வெளியூருக்குச் சென்று சமையல் கலையை இன்னும் புது விதமாகப் பயின்று வந்து, தன் தாய்கிராமத்துக்கே தன் சேவை பயன்பட வேண்டுமென்றெண்ணி, அந்த கிராமத்திலேயே ஒரு ஹோட்டலைக் கட்டி அதற்கு தன் பெயரிலேயே "வேலன் டைன்ஸ்" எனப் பெயரும் சூட்டியிருந்தார். 
நகரத்தில் பயின்று வந்தவர் ஆதலால், நகரத்துப் பழக்கவழக்கங்களும் அவரோடு ஒட்டிக்கொண்டு வந்திருந்தன. அவரது நவ நாகரீக நடையுடை பாவனைகளை அங்கிருந்த மக்கள் மிகவும் ரசித்தனர். குறிப்பாக, அவரது அத்தை மகள். அத்தை மகளின் ரசனையை வேலனும் ரசித்தார். தன்னுடைய  விருப்பத்தை அவளிடம் வெளிப்படுத்தக் காத்துக்கொண்டிருந்தார். ஆனால் தைரியம் வரவில்லை. போகும்போது வெறுங்கையோடா போவது? அவளுக்குப் பிடித்த ஏதாவதொன்றைப் பரிசாகக் கொண்டு செல்ல எண்ணினார். அவளுக்கு மஞ்சள் செவ்வந்திப்பூக்கள் மிகவும் பிடிக்கும் என்பது நினைவுக்கு வந்தது. அது ஞாபகம் வந்ததும் ஹோட்டலின் பின்புறத்தோட்டத்தில் இருந்த இரண்டு மஞ்சள் ரோஜாப்பதியன்களைத் தொட்டியோடு எடுத்துக்கொண்டு, தைரியத்தை வரவழைத்துக்கொண்டு ஒரு நாள் அவள் வீட்டுக்குச் சென்றார். ரோஜாவா?! என ஆச்சரியப்படாதீர்கள். ஏனெனில் காதலுக்குக் கண்ணில்லை, ஆகவே இரண்டு பூக்களுக்குமுள்ள வித்தியாசம் அவருக்குத் தெரியவுமில்லை.

அவரைக்கண்டதும் நாணிக்கோணிக்கொண்டு வரவேற்றவள், ரோஜாக்களை மகிழ்வுடன் வாங்கிக்கொண்டாள். அண்ணலும் அவளும் நோக்கிக்கொண்டதை அவள் அப்பனும், அண்ணனும், அம்மாவும் கூட நோக்கினர். 

"என்னடே? காத்து இந்தப்பக்கம் வீசுது?" என்றார்கள்.

"வந்து.. வந்து.. உங்க பொண்ணைக் கல்யாணம் செஞ்சுக்க ஆசைப்படறேன்" என்று வழிந்தார்.. மன்னிக்கவும், முன்மொழிந்தார். பிறகென்ன? இருவருக்கும் திருமணம் செய்வதாய் இரு குடும்பத்தினரும் முடிவெடுத்தனர். பழம் நழுவி, கஸ்டர்டில் விழுந்தாற்போல் அகமகிழ்ந்து போன வேலன், "டவுன்லே எல்லாம் கல்யாணம் உறுதியாகிருச்சுன்னா, ஒருத்தருக்கொருத்தர் இனிப்பு ஊட்டிக்கிடுவாங்க" என்றபடி தன் பையிலிருந்த காகிதப்பெட்டியை எடுத்துத் திறந்தார். தன் ஹோட்டலிலேயே செய்த லட்டை ஊட்டி அவளை அசத்தி விட வேண்டுமென்று எண்ணியிருந்தவரை விழித்துப்பார்த்தன டப்பாவிலிருந்த கடலையுருண்டைகள்.

பின்னென்ன?.. ஒருவருக்கொருவர் கடலை மிட்டாய்களை ஊட்டி மகிழ்ச்சியைக் கொண்டாடிக்கொண்டது அக்குடும்பம். லட்டு மாறியதெப்படி என்ற விஷயம் வெகு காலத்துக்கு வேலனுக்குப் பிடிபடவேயில்லை. தன்னிடம் ஸ்வீட் மாஸ்டராக இருந்த வடஇந்தியத்தொழிலாளி, லட்டு என்ற சொல்லை லாடு எனப் புரிந்து கொண்டு கடலையுருண்டையைத் தயார் செய்த விவரம் பிற்காலத்தில்தான்  அவருக்குப் புரிய வந்தது.

புதுமையான அவ்விஷயம் வெகு காலத்துக்கு அவ்வூரில் பரபரப்பாகப் பேசப்பட்டு வந்தது. அமைச்சர் எவ்வழி, அதிகாரிகளும் அவ்வழியே என்பதாக அக்கிராமத்தில் ஒவ்வொருவரும் தத்தம் வாழ்வில் காதலை உறுதி செய்யும் மகிழ்ச்சியான தருணத்தைக் கடலை மிட்டாய்களுடன் கொண்டாடினார்கள்.  இன்றும், அவ்வூரில், "பொண்ணு பாத்துட்டு உறுதி செய்யணும். ஸ்வீட்டுக்கு என்ன வாங்கியிருக்கேடே?"என்று கேட்டால் வருவது ஒரே பதில்தான்.

"கடலை மிட்டாய் டே"

Friday 7 February 2020

ரோஸு.. ரோஸு.. ரோஸு டே.

உலக காதலர் வாரம் பிப்ரவரி 7-ம் தேதி தொடங்குகிறது. இதில் முதல் தினம் ‘ரோஸ் டே’, அதாவது ரோஜா தினம் எனக் கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் அன்பை வெளிப்படுத்தும் விதமாக ரோஜாக்கள் ஒருவருக்கொருவர் பரிசாக வழங்கப்படுகின்றன. ஒருவர் மீதான தன் எண்ணத்தை, விருப்பத்தை, கொடுக்கப்படும் ரோஜாக்களின் வண்ணத்தை வைத்தே வெளிப்படுத்தி விடுவர். 

காதலர் தினத்தன்று சிவப்பு ரோஜாக்கள்தான் அதிகமும் கொடுக்கப்படுகின்றன என்பது அனைவரும் அறிந்ததே. ஏனெனில் காதலை வெளிப்படுத்துவதற்கு சிவப்பு ரோஜாக்கள்தான் உகந்தவையாகக் கருதப்படுகின்றன. ஆனால், பிற வண்ணங்களிலிருக்கும் ரோஜாக்களும் ஒவ்வொரு உணர்வை வெளிப்படுத்துவதற்கு உபயோகிக்கப்படுகின்றன. 

பர்ப்பிள் வண்ண ரோஜா ஒருவரின் மீதான தனது ஈர்ப்பைத் தெரிவிக்க வழங்கப்படுகிறது. அந்த ஈர்ப்பு எப்போது வேண்டுமானாலும் காதலாக மாற வாய்ப்பிருக்கிறது என்பதைக் குறிப்பால் உணர்த்துவது அது.

வெள்ளை ரோஜாப்பூ கொடுப்பவரின் குற்றமற்ற மனதை வெளிக்காட்டும். தூய நட்பை வெளிப்படுத்தவும், காதலை நாகரிகமான முறையில் மறுப்பதற்கும் வழங்கப்படுகிறது.

பிங்க் நிற ரோஜாப்பூ கருணை, கனிவு மற்றும் நன்றியைத் தெரிவிக்குமுகமாக வழங்கப்படுகிறது.







அழகின் மீதான ரசனையை வெளிப்படுத்த பர்கண்டி அதாவது கருஞ்சிவப்பு நிற ரோஜாப்பூக்கள் கொடுக்கப்படுகின்றன.


ஆரஞ்சு நிற ரோஜாப்பூ உற்சாகம் மற்றும் விருப்பத்தை வெளிக்காட்டும்.
மஞ்சள் நிற ரோஜாப்பூ நட்பை வெளிக்காட்டும். நாம் நல்ல நண்பர்களாக மட்டும் இருப்போம் என்பதைக் குறிப்பால் உணர்த்தவும் இது கொடுக்கப்படுகிறது.




சிவப்பு ரோஜாப்பூ காதலை வெளிப்படுத்துவதற்காகக் கொடுக்கப்படுகிறது என்பது அனைவரும் அறிந்ததே. 









Sunday 26 January 2020

71-வது வாழ்த்துகள்


பக்கத்து ஊரிலிருக்கும் ரயில் நிலையத்தின் வெளியே உள்ள மைதானத்தில், நவி மும்பையின் சிட்கோவானது, நடைப்பயிற்சி, ஸ்கேட்டிங், போன்றவற்றுக்கான பாதைகளை அமைத்துள்ளது. ஸ்கேட்டிங்கிற்காக ஒரு குறிப்பிட்ட நேரம் மட்டுமே ஒதுக்கப்பட்டிருப்பதால் மீதமுள்ள நேரத்தை மற்றவர்கள் யோகா போன்ற உடற்பயிற்சிகள் செய்வதற்குப் பயன்படுத்திக்கொள்வது வழக்கம். பணி ஓய்வு பெற்ற மக்கள் அப்பகுதியில் மரக்கன்றுகளை நட்டு தங்கள் பொறுப்பில் வளர்த்தும் வருகிறார்கள். 

உடற்பயிற்சியில் ஆர்வமும் அனுபவமும் உள்ள மக்கள் தாங்களாகவே இணைந்து பல்வேறு குழுக்களாக அமைந்துள்ளனர். அதாவது, இது 'தானாச்சேர்ந்த கூட்டம்'. இதில், யோகாவில் பயிற்சி உள்ளவர், பிற உடற்பயிற்சிகளில் அனுபவமுள்ளவர்கள் தங்களுக்குத் தெரிந்ததை மற்றவர்களுக்குக் கற்றுக்கொடுப்பது வழக்கம். இங்கே எல்லோரும் மாணவரே, எல்லோரும் குருவே. 

கூட்டத்தில் இணைய விருப்பமில்லாதவர்கள் தனித்தனியாக சித்தம் போக்கில் வாக்கிங், ஜாகிங், சூரிய நமஸ்காரம், இன்ன பிற உடற்பயிற்சிகள் போன்றவற்றை ஆங்காங்கே அமர்ந்து செய்வது வழக்கம். இதில் இரண்டு குழுக்கள் கொடியேற்றுதல், உரையாற்றுதல், ஆண்கள் மற்றும் பெண்களுக்கான ஓட்டப்பந்தயம், கையில் தேசியக்கொடியை ஏந்தியபடி சிறு ஊர்வலம்,என இன்றைய குடியரசு தினத்தைக் கொண்டாடி மகிழ்ந்தார்கள். அவற்றில் சில காட்சிகள் இங்கே..





கொடி வந்தனம்


வந்தே மாதரம் என்போம்

எங்கள் பாரத தேசமென்று தோள் கொட்டுவோம்




தாயின் மணிக்கொடி பாரீர்..
வேற்றுமையில் ஒற்றுமை,.. அதுவே இந்தியா. அந்த ஒற்றுமையையும் ஒருமைப்பாடையும் அசைத்துப்பார்க்கவும் சோதித்துப்பார்க்கவும் அடிக்கடி சில நிகழ்வுகள் ஏற்படுவதுண்டு. முன்னெப்போதும் இல்லாத வகையில் சோதனைகள் சூழ்ந்துள்ளன. அவையெல்லாவற்றையும் புறந்தள்ளி நாம் எப்போதுமே ஒரு தாய் மக்கள்தான் என்பதை நிரூபிப்போம். தாயின் மணிக்கொடி வாழியவே. அனைவருக்கும் இனிய குடியரசு தின நல்வாழ்த்துகள்.

LinkWithin

Related Posts with Thumbnails