Tuesday 11 February 2020

கடலை மிட்டாய் டே..

தமிழ்நாட்டின் கடைக்கோடியில் ஒரு குக்கிராமம். குக்கிராமம் என்றதும் அதன் அமைப்பைப்பற்றிய கற்பனைக்குதிரையைப் பறக்க விட வேண்டாம். குக்குகள்.. அதாவது, சமையல் நிபுணர்கள் நிறைந்த கிராமம் ஆதலால் அது குக்கிராமம் ஆயிற்று. அங்கிருந்த நிபுணர்கள் ஒவ்வொருவரும் அக்கம்பக்கத்து நகரங்களிலும் பெரு நகரங்களிலும் "பவன், விலாஸ், கஃபே"  என்ற பெயர்களில் தங்கள் சமையல் சாம்ராஜ்யத்தை நிறுவி விஸ்தரித்திருந்தார்கள். ஆனால், ஒருவர் மட்டும் வெளியூருக்குச் சென்று சமையல் கலையை இன்னும் புது விதமாகப் பயின்று வந்து, தன் தாய்கிராமத்துக்கே தன் சேவை பயன்பட வேண்டுமென்றெண்ணி, அந்த கிராமத்திலேயே ஒரு ஹோட்டலைக் கட்டி அதற்கு தன் பெயரிலேயே "வேலன் டைன்ஸ்" எனப் பெயரும் சூட்டியிருந்தார். 
நகரத்தில் பயின்று வந்தவர் ஆதலால், நகரத்துப் பழக்கவழக்கங்களும் அவரோடு ஒட்டிக்கொண்டு வந்திருந்தன. அவரது நவ நாகரீக நடையுடை பாவனைகளை அங்கிருந்த மக்கள் மிகவும் ரசித்தனர். குறிப்பாக, அவரது அத்தை மகள். அத்தை மகளின் ரசனையை வேலனும் ரசித்தார். தன்னுடைய  விருப்பத்தை அவளிடம் வெளிப்படுத்தக் காத்துக்கொண்டிருந்தார். ஆனால் தைரியம் வரவில்லை. போகும்போது வெறுங்கையோடா போவது? அவளுக்குப் பிடித்த ஏதாவதொன்றைப் பரிசாகக் கொண்டு செல்ல எண்ணினார். அவளுக்கு மஞ்சள் செவ்வந்திப்பூக்கள் மிகவும் பிடிக்கும் என்பது நினைவுக்கு வந்தது. அது ஞாபகம் வந்ததும் ஹோட்டலின் பின்புறத்தோட்டத்தில் இருந்த இரண்டு மஞ்சள் ரோஜாப்பதியன்களைத் தொட்டியோடு எடுத்துக்கொண்டு, தைரியத்தை வரவழைத்துக்கொண்டு ஒரு நாள் அவள் வீட்டுக்குச் சென்றார். ரோஜாவா?! என ஆச்சரியப்படாதீர்கள். ஏனெனில் காதலுக்குக் கண்ணில்லை, ஆகவே இரண்டு பூக்களுக்குமுள்ள வித்தியாசம் அவருக்குத் தெரியவுமில்லை.

அவரைக்கண்டதும் நாணிக்கோணிக்கொண்டு வரவேற்றவள், ரோஜாக்களை மகிழ்வுடன் வாங்கிக்கொண்டாள். அண்ணலும் அவளும் நோக்கிக்கொண்டதை அவள் அப்பனும், அண்ணனும், அம்மாவும் கூட நோக்கினர். 

"என்னடே? காத்து இந்தப்பக்கம் வீசுது?" என்றார்கள்.

"வந்து.. வந்து.. உங்க பொண்ணைக் கல்யாணம் செஞ்சுக்க ஆசைப்படறேன்" என்று வழிந்தார்.. மன்னிக்கவும், முன்மொழிந்தார். பிறகென்ன? இருவருக்கும் திருமணம் செய்வதாய் இரு குடும்பத்தினரும் முடிவெடுத்தனர். பழம் நழுவி, கஸ்டர்டில் விழுந்தாற்போல் அகமகிழ்ந்து போன வேலன், "டவுன்லே எல்லாம் கல்யாணம் உறுதியாகிருச்சுன்னா, ஒருத்தருக்கொருத்தர் இனிப்பு ஊட்டிக்கிடுவாங்க" என்றபடி தன் பையிலிருந்த காகிதப்பெட்டியை எடுத்துத் திறந்தார். தன் ஹோட்டலிலேயே செய்த லட்டை ஊட்டி அவளை அசத்தி விட வேண்டுமென்று எண்ணியிருந்தவரை விழித்துப்பார்த்தன டப்பாவிலிருந்த கடலையுருண்டைகள்.

பின்னென்ன?.. ஒருவருக்கொருவர் கடலை மிட்டாய்களை ஊட்டி மகிழ்ச்சியைக் கொண்டாடிக்கொண்டது அக்குடும்பம். லட்டு மாறியதெப்படி என்ற விஷயம் வெகு காலத்துக்கு வேலனுக்குப் பிடிபடவேயில்லை. தன்னிடம் ஸ்வீட் மாஸ்டராக இருந்த வடஇந்தியத்தொழிலாளி, லட்டு என்ற சொல்லை லாடு எனப் புரிந்து கொண்டு கடலையுருண்டையைத் தயார் செய்த விவரம் பிற்காலத்தில்தான்  அவருக்குப் புரிய வந்தது.

புதுமையான அவ்விஷயம் வெகு காலத்துக்கு அவ்வூரில் பரபரப்பாகப் பேசப்பட்டு வந்தது. அமைச்சர் எவ்வழி, அதிகாரிகளும் அவ்வழியே என்பதாக அக்கிராமத்தில் ஒவ்வொருவரும் தத்தம் வாழ்வில் காதலை உறுதி செய்யும் மகிழ்ச்சியான தருணத்தைக் கடலை மிட்டாய்களுடன் கொண்டாடினார்கள்.  இன்றும், அவ்வூரில், "பொண்ணு பாத்துட்டு உறுதி செய்யணும். ஸ்வீட்டுக்கு என்ன வாங்கியிருக்கேடே?"என்று கேட்டால் வருவது ஒரே பதில்தான்.

"கடலை மிட்டாய் டே"

4 comments:

Yaathoramani.blogspot.com said...

நல்லா இருக்கே கடலைமிட்டாய் கதை..வித்தியாசமான சிறப்புப் பகிர்வுக்கு வாழ்த்துகள்..

வெங்கட் நாகராஜ் said...

கடலை மிட்டாய் டே! ஹாஹா... சுவையான பதிவு.

கடலை மிட்டாய் எனக்கு மிகவும் பிடித்தது! எத்தனை கொடுத்தாலும் சாப்பிட்டு விடுவேன்! ஹாஹா...

சாந்தி மாரியப்பன் said...

வாங்க யாதோரமணி,

வரவுக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க வெங்கட்ஜி,

அதானே.. நம்மூரு ஃபெரரோ ரோஷரில்லையா அது :)

வரவுக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.

LinkWithin

Related Posts with Thumbnails