Showing posts with label பண்புடன் இதழில் வெளியானது. Show all posts
Showing posts with label பண்புடன் இதழில் வெளியானது. Show all posts

Sunday, 26 July 2026

காவூ - ராமசந்திரன் உஷா (புத்தக மதிப்புரை)


நூல்: காவூ
ஆசிரியர்: ராமசந்திரன் உஷா
வெளியீடு: தேநீர் பதிப்பகம்

ராமசந்திரன் உஷா எழுதிய ‘காவூ’ நாவல், தேநீர் பதிப்பகம் – சித்தாவரம் அறக்கட்டளை இணைந்து நடத்திய நாவல் போட்டியில் பரிசு பெற்றது. இது கடந்த நூற்றாண்டின் இந்திய வரலாற்றையும், ஒரு எளிய பெண்ணின் வாழ்வியலையும் நேர்த்தியாகப் பிணைத்து எழுதப்பட்ட ஓர் அழுத்தமான சமூகப் புனைவாகும். சுதந்திரப் போராட்டக் காலத்தின் தொடக்கத்தில் விரிந்து, நெருக்கடி நிலை காலம் வரை நீளும் இந்நாவல், சமூக யதார்த்தத்தையும் பெண்களின் வாழ்க்கைப் போராட்டங்களையும் மிக நுட்பமாகப் பேசும் ஒரு முக்கியப் படைப்புமாகும். 1933 முதல் 1975 வரையிலான காலகட்டத்தில், ஒரு மாத்வக் குடும்பத்தின் பின்னணியில் கட்டமைக்கப்பட்டுள்ள இந்நாவல், காவேரி எனும் பெண்ணின் வாழ்க்கைப் பயணத்தை மையமாகக் கொண்டு, அக்காலகட்டத்தில் நிகழ்ந்த சமூக, அரசியல் மற்றும் பண்பாட்டு மாற்றங்களை விவரிக்கிறது.

நாவலின் ஆகப்பெரிய பலமே இதன் நாயகியான 'காவூ' என அழைக்கப்படும் காவேரி என்ற எளிய பெண்தான். ஒரு சாதாரணப் பெண், நாட்டின் மாபெரும் அரசியல் மாற்றங்களுக்கும் சமூகக் கொந்தளிப்புகளுக்கும் இடையே தன் வாழ்க்கையை எவ்வாறு எதிர்கொண்டு வாழ்ந்து முடிக்கிறாள் என்பதை நூலாசிரியர் நெகிழ்ச்சியாகச் சித்தரித்துள்ளார். காவேரியின் வாழ்க்கை ஒரு தியாகமாகவோ அல்லது அபலைக் கோலமாகவோ சித்தரிக்கப்படாமல், அவள் தன் சூழ்நிலைகளை எப்படி எதிர்கொள்கிறாள் என்பதே கதையின் மையமாக உள்ளது. வாழ்நாள் முழுவதும் போராடினாலும் இறுதியில் அவள் வாழ்வில் மிஞ்சியது என எதுவுமில்லை, தனது ஒரு குழந்தையையாவது நன்றாக வாழ வைத்துவிட்ட திருப்தியைத்தவிர.

நாவலின் தொடக்கத்தில், பட்டாம்பூச்சியை வேடிக்கை பார்க்கும் அறியாமை நிறைந்த, மழலை மாறாத ஒரு சிறுமியாக காவூ நமக்கு அறிமுகமாகிறாள். ஆண்-பெண் உறவு பற்றியோ அல்லது திருமண வாழ்வு பற்றியோ எவ்விதப் புரிதலும் இல்லாத வயதிலேயே அவளுக்குக் குழந்தை மணம் செய்விக்கப்படுகிறது. வயதுக்கு வராத காரணத்தால் பிறந்த வீட்டிலேயே தங்கியிருக்கும் அவளது தொடக்கக் கால வாழ்க்கை, அந்த காலகட்டத்து எளிய மற்றும் படிப்பறிவில்லாத சராசரி இந்தியப் பெண்களின் வாழ்வியலைப் பிரதிபலிக்கும் ஒரு குறியீடாகவே அமைகிறது. முதல் கோணல் முற்றும் கோணல் என்பார்கள். கணவன் சரியானவனாக அமையாத காரணத்தால் உடலாலும், மனதாலும் புண்பட்டு, பிள்ளைகளின் வாழ்வும் சரியாக அமையாமல் அவர்களில் இருவரைப் பறிகொடுத்து என அவள் படும் துயரங்கள் அநேகம். எவ்விதப்பொருத்தமும் இல்லாமல் நடந்த அவளது திருமணத்தால் துன்பங்களையே அனுபவித்த அவளுக்கு ஒரே ஆறுதல் அன்பும் அனுசரணையுமாய் அமைந்த மாமியார் மட்டுமே. 

அடக்குமுறைகள் நிறைந்த அன்றைய வாழ்வியலிலிருந்து, விரும்பியதைச்செய்யும் இன்றைய வாழ்வியலை அடைவதற்குப் பெண்கள் கடந்து வந்திருக்கும் தூரமும், அவர்கள் அனுபவித்திருக்கும் வலியும் மிகப்பெரியது. அந்த தூரத்தைக்கடக்க பெருமுயற்சி எடுத்த பெண்கள் பலர். அவர்களுக்கு வழிகாட்டிய ஆண்களும் பலர். அவர்களின் பிரதிநிதியாகவே அம்மாளு, வாசு பாத்திரப்படைப்புகள் விளங்குகின்றனர். தங்கைக்குக் கடைசி வரை உறுதுணையாக வாசு இருப்பதும் அவளுக்குக் கல்வியின் அருமையை உணர்த்தி எழுதப்படிக்கத்தெரியாதவளாக இருந்தவளை, கடிதம் எழுதும் அளவுக்கு முன்னேற்றுவதும் சிறப்பு.  

இந்நாவலின் மற்றொரு தனித்துவமான சிறப்பு, புனைவோடு நிஜ வரலாற்று ஆளுமைகள் இயல்பாகக் கலந்து வருவதாகும். மகாத்மா காந்தி, இராஜாஜி, மூவலூர் ராமாமிர்தம் அம்மையார், தோழர் மன்னார்குடி சீனிவாச ராவ் போன்ற அரசியல் மற்றும் சமூகப் போராட்டவாதிகளும்; காஞ்சி பெரியவர் போன்ற ஆன்மீக ஆளுமைகளும்; ராம்நாத் கோயங்கா, 'சோ' போன்ற பத்திரிகையாளர்களும்; ஜெமினி கணேசன், வகிதா ரஹ்மான், மார்டன் தியேட்டர்ஸ் சுந்தரம் போன்ற திரையுலகப் பிரபலங்களும் கதையின் போக்கில் இயல்பாக வந்து செல்கின்றனர். இது வாசகருக்கு அந்தந்தக் காலக்கட்டத்திற்கே நேரில் சென்று வந்த உணர்வைத் தருகிறது.

வரலாற்றின் பின்னணியில் மனித உணர்வுகளையும், ஒரு பெண்ணின் அகப்பயணத்தையும் வாசிக்க விரும்பும் ஒவ்வொரு தீவிர வாசகரும் தவறவிடக் கூடாத ஒரு சிறந்த நாவல் இது. கால நதியில் அடித்துச் செல்லப்பட்டு, பின்னர் அதிலேயே நீந்தக் கற்றுக்கொள்ளும் ஒரு சாமானியப் பெண்ணின் வாழ்வாதாரப் போராட்டமே காவூவின் ஒட்டுமொத்த வடிவமாகும். 

டிஸ்கி: புத்தக மதிப்புரையை வெளியிட்ட பண்புடன் மின்னிதழுக்கு நன்றி.

Sunday, 31 May 2026

மீட்சி - சிறுகதை (பண்புடன் மின்னிதழில் வெளியானது)

                             
கொல்லைப்புறத்திலிருந்த தொழுவத்தில் கட்டப்பட்டிருந்த பசுவின் அருகில் நின்று, அதன் முகத்தை மெதுவாக வருடிக்கொடுத்துக்கொண்டிருந்தார் சுந்தரம். ஐந்து நாட்களாக இரை எடுக்காமல் தண்ணீர் எதுவும் அருந்தாமல் பிடிவாதமாக கொலைப்பட்டினியாகக் கிடந்தது அந்தப்பசு. வழக்கமாக கொடுப்பதையெல்லாம் தின்றுவிட்டு போதாக்குறைக்கு கொடியில் காயும் துணிகளையும் ருசி பார்க்கும் போக்கிரி அது. ஆனால், இப்போது வைக்கப்பட்ட இரையை மோந்து கூட பார்க்காமல் முகத்தைத் திருப்பிக்கொண்டு படுத்துக்கிடந்ததைக் காணச் சகியாமல், கைகளில் அதன் முகத்தை ஏந்தி கண்களை உற்றுப்பார்த்தார். கோலிக்குண்டுகள் போல் பளபளக்கும் அந்தக்கண்கள் இப்போது வெறுமையின் ஆழத்தில் அமிழ்ந்திருப்பது போல் ஒளியிழந்து காணப்பட்டன.  உதட்டை அழுத்தி தன்னைச் சமன்படுத்திக்கொண்டு, பெட்டியில் கிடந்த புல்லை ஒரு கை அள்ளி அதற்கு ஊட்டினார். அது அவரை ஏறிட்டுப்பார்த்தது. 

“நீ பட்டினி கெடக்கறதால போனவ வந்துரப்போறாளா? பிடிவாதம் பிடிக்காம தின்னு” அவரின் கண்டிப்பு புரிந்ததுபோல் புல்லை உண்ணத்தொடங்கியது. கொஞ்சம் வைக்கோலை அள்ளி அதன்முன் உதறிப்போட்டுவிட்டு கைகளைக் கழுவிக்கொண்டு வீட்டுக்குள் நுழைந்தார். அவளில்லாத வீடு.. அவள் குரல் கேட்காத வீடு.. வெறிச்சோடிக்கிடந்தது. மெதுவாக நடந்து வந்து வரவேற்பறையிலிருந்த சாய்வு நாற்காலியில் சாய்ந்துகொண்டார். திடீரென பத்து வயது அதிகமாகிவிட்டாற்போல் சோர்வும் தள்ளாமையும் அவரை வாட்டியது. அதிகாலை வேளையில், எப்போதும் அவளது வளையல் ஓசையோடும், காபித்தூள் மணத்தோடும் விழித்துக் கொள்ளும் அந்தச் சமையலறை, இன்று மௌனத்தைப் போர்த்திக்கொண்டு நின்றது. கொல்லைப்புறத்தில் கொடியில் உலர்ந்துகொண்டிருந்த அவளது புடவை காற்றில் அசையும்போதெல்லாம் அவரது மனம் அவளது நடமாட்டத்தை எண்ணி துணுக்குற்றது. மூடியிருந்த இமைகளினோரம் உப்பு நதியொன்று உற்பத்தியாகி காது மடல்களில் சங்கமித்தது. 

அவள் இல்லை என்பதை ஏற்க மறுத்து சண்டித்தனம் செய்த மனதை ஓரளவு கட்டுக்குள் கொண்டு வந்திருந்தார். என்ன ஒன்று.. எல்லாவற்றையும் அவளிடம் மட்டுமே பகிர்ந்து பழகிய அந்த இதயத்திற்கு, இப்போது சுவர்களையும் அவர்களது மகன் ஷ்யாமையும் விட்டால் பேசுவதற்கு வேறு ஜீவன் இல்லை. என்னதான், மகன் வளர்ந்த பிள்ளை என்றாலும் அவளிடம் பகிரும் எல்லாவற்றையும் அவனிடம் பேச முடியுமா என்ன? அவளது இடத்தை இந்த உலகத்தில் எவராலும் நிரப்ப முடியாது என்ற நிஜம் உறைத்தது. அவள் நீரூற்றிய தோட்டம், சமைத்த அடுப்படி, அமர்ந்த கொல்லைப்புறப் படிக்கட்டு என ஒவ்வொரு இடமாய் தொட்டுத்தடவி உணர்ந்து அவளது இன்மையைப் பிடிவாதமாய் விலக்க முயன்றார். கடைசியாய் அவள் உடுத்தியிருந்த.. அவளது வாசனையைத் தன்னுள் தேக்கி வைத்துக்கொண்டு, அவளது இன்மையைப் பேரமைதியோடு பிரகடனப்படுத்திய புடவையை முகத்தோடு போர்த்திக்கொண்டு அவளது அண்மையை உணர்ந்த நிம்மதியோடு உறங்க முயன்றார். 

நாளாக ஆக சுந்தரத்தின் உலகம் அந்த வீட்டின் வரவேற்பறையோடு சுருங்கிப் போயிருந்தது. சுவரில் மாட்டப்பட்டிருந்த திலகாவின் புகைப்படத்தில் இருந்த மாலை காய்ந்து போய் உதிர்ந்து கொண்டிருந்தது. திலகா மறைந்து நாற்பது நாட்களாகிவிட்டன. ஆனால், அந்த வீட்டின் ஒவ்வொரு மூலையிலும் அவளது வாசனை இன்னும் மிச்சமிருப்பதாகவே சுந்தரத்திற்குத் தோன்றியது.
"அப்பா, காபி.." என்று ஷ்யாம் நீட்டிய கோப்பையைச் சட்டை செய்யாமல் ஜன்னல் வழியே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தார் சுந்தரம்.

"என்னத்துக்கு நான் இன்னும் பிழைச்சுக்கிடக்கேன்? அவ இல்லாத இந்த வீடும் அமைதியும் என்னைத் தின்னுடும் போலிருக்கு. அவளோட பேச்சு, இந்த வீட்டோட கலகலப்பு எல்லாம் அவளோடயே போயிடுச்சு ஷ்யாம்," என்று பெருமூச்செறிந்தவர் மங்காத புன்னகையுடன் சுவரில் படமாய்த் தொங்கிக்கொண்டிருந்தவளைப் பார்த்து, “சிரிக்கறியா?.. நல்லாச் சிரி. ஒத்தைல விட்டுட்டுப்போனா இவன் என்ன பண்ணுவான்னு என்னைப்பத்தி ஒரு நிமுசம் நினைச்சியா?” எனப்புலம்பினார். இன்னும் அவள் எதிரில் இருப்பதுபோல் பேசிக்கொண்டே இருக்க ஆரம்பித்தார். கோபத்தில் அவளிடம் கத்திய தருணங்களும், அவள் கேட்ட சில சின்னஞ்சிறு ஆசைகளை நிறைவேற்றாமல் தள்ளிப்போட்ட நாட்களும் இப்போது குற்ற உணர்ச்சியாய் மாறி, நெஞ்சுக்குள் முள்ளாய் குத்தின அவருக்கு. “அப்பாவை சரியா கவனிச்சுக்க ஷ்யாம், அவருக்கு உடம்பு சரியில்லையா?” என ஒவ்வொருவரும் விசாரிக்கும் அளவுக்கு தாடியும் மீசையுமாய் ஆளே உருமாறிப்போனார்.

அடுத்த ஒரு வாரம் ஷ்யாம் தீவிரமாகத் தன் லேப்டாப்பில் வேலை செய்தான்.  அம்மாவின் நூற்றுக்கணக்கான புகைப்படங்கள், வீடியோக்கள் மற்றும் அவரது தனிப்பட்ட டைரிகள் ஆகியவற்றைத் திரட்டினான். தனது அறையில் அடைந்து கொண்டு இரவும் பகலும் வேலை செய்துகொண்டிருந்தான்.

ஒரு ஞாயிற்றுக்கிழமை காலை, சுந்தரத்தின் அருகில் அமர்ந்தான் ஷ்யாம்.

"அப்பா, அம்மா உங்ககிட்ட பேசணும்னு சொல்றாங்க," என்றான் மெல்லிய குரலில்.

சுந்தரம் அதிர்ச்சியுடன் மலங்க மலங்க அவனைப் பார்த்தார். "அம்மாவா?.. என்னடா விளையாடுறியா?"

"இல்லப்பா... இது ‘ஏஐ’ன்னு ஒரு தொழில் நுட்பம்.  அம்மாவோட எல்லா நினைவுகளையும், அவங்க குரலையும் வெச்சு நான் அம்மாவை.. அதாவது அவங்களோட படத்தை உருவாக்கியிருக்கேன். இதோ பாருங்க," என்று கூறி போனை அவர் முன்னால் நீட்டினான்.

திரையில் திலகா தெரிந்தாள். அவளுக்குப் பிடித்த அதே இளம்பச்சை நிறப் புடவை, நெற்றியில் சிறிய குங்குமப் பொட்டு, அந்த மென்மையான புன்னகை. அவரைப் பார்த்து முறுவலித்தது திரையில் தெரிந்த உருவம்.

"என்னங்க... ஏன் இப்படிச் சாப்பிடாம உடம்பைக் கெடுத்துக்கறீங்க? நான் எங்க போயிட்டேன்? பக்கத்துலதானே இருக்கேன்," என்றது அந்த உருவம்.

சுந்தரத்தின் கைகள் நடுங்கின. "திலகா... திலகாவா இது?" என்று போனைத் தொட்டுப் பார்த்தார்.

"ஆமாப்பா. அம்மாவைப்பத்தின எல்லா விஷயங்கள், அவங்க பேசும் விதம்னு எல்லாத்தையும் உபயோகிச்சு இதை உருவாக்கியிருக்கேன். நீங்க என்ன கேட்டாலும் அம்மா மாதிரியே பதில் சொல்லும்" என்றான் ஷ்யாம்.

“இப்பல்லாம் தனக்கு நெருங்கினவங்களோட மெழுகு பொம்மையைச் செஞ்சு, அவங்களையே நேரில் பார்த்தது மாதிரி ஆறுதலடையறாங்களே.. இது அது மாதிரியா?” என்ற சுந்தரத்தின் கைகளை மென்மையாகப் பற்றிக்கொண்டு, “இது அதுக்கும் மேல. பொம்மை பேசாது, ஆனா, இந்த ஏஐ அம்மா உங்க கூட பழைய மாதிரியே பேசுவாங்க” என்றான். மொபைல் திரையில் தெரிந்த திலகாவையே கண்கொட்டாமல் பார்த்துக்கொண்டிருந்தார் சுந்தரம். 

முதலில் அது ஒரு விசித்திரமான அனுபவமாக இருந்தது. அதன்பின் தன் மனைவியுடன் வீடியோ காலில் பேசுவது போல் நினைத்துக்கொண்டு சகஜமானார். தினமும், திலகாவின் உருவம் அவரிடம், "இன்னைக்கு மாத்திரை போட்டீங்களா?", "போன தீபாவளிக்கு வாங்கித்தந்தேனே.. அந்த க்ரீம் கலர் சட்டைதான் இந்த பாண்டுக்குப் பொருத்தமா இருக்கும். அதைப்போடுங்க" என பேசத் தொடங்கியபோது, நாளாக ஆக சுந்தரம் மெல்ல மெல்ல மாறத் தொடங்கினார். பழைய சுந்தரத்தின் கலகலப்பும் குறும்பும் மெல்ல மெல்ல எட்டிப்பார்க்கத்தொடங்கியது. கண்களில் பழைய ஒளி திரும்பியது. அவர் தனிமையை விட்டு எந்நேரமும் மொபைலும் கையுமாக இருக்கத்தொடங்கினார். அவ்வப்போது, “ஷ்யாம்.. உங்கம்மா சாம்பாருக்கு அப்பளம் தொட்டுக்கக்கூடாது, கொலஸ்ட்ரால்ங்கறா, என்னன்னு கேளு” என பஞ்சாயத்தைக்கூட்டினார். அவர்கள் வீட்டுக்குத் தெரியாமல் ரகசியமாய் ஊட்டிக்குச் சென்ற கதைகளையும், முதல் முறை சமைத்தபோது ஏற்பட்ட குளறுபடிகளையும் அவளது பழைய டைரி குறிப்புகளிலிருந்து அந்த ஏஐ திலகா பேசுவதை வியப்போடு கேட்டுக்கொண்டிருந்தார். தூக்கம் வராத இரவுகளில் சுந்தரம் தன் மனக்குறைகளை எல்லாம் அந்தத் திரையிடம் கொட்டுவார். அந்த உருவம் பொறுமையாகக் கேட்டுக்கொண்டு, "வருத்தப்படாதீங்க, நான் இருக்கேன்ல" என்று ஆறுதல் சொல்லும்.

சுந்தரத்தின் முகம் மலர்ந்தது. மீண்டும் பழையபடி நடைப்பயிற்சி செல்ல ஆரம்பித்தார். ஷ்யாமிற்கு மகிழ்ச்சியாக இருந்தது. சுந்தரம் நிஜ உலகை விட, அந்தத் திரைக்குள் இருக்கும் திலகாவையே அதிகம் நேசிக்கத் தொடங்கினார். 

ஒரு நாள் இரவு இடி மின்னலுடன் மழை பெய்து கொண்டிருந்தது. சுந்தரம் திலகாவின் உருவத்திடம் பழைய காலத்து நினைவுகளைப் பேசிக் கொண்டிருந்தார். திடீரென போன் திரை மினுங்கியது. ஒரு விசித்திரமான சத்தம் எழுந்தது.

"திலகா.. திலகா.. என்னாச்சு?" என்று பதறினார்.

திரை கருப்பாக மாறியது. மீண்டும் மீண்டும் மொபைலின் பட்டன்களை மாறி மாறி அழுத்தி சரி செய்ய முயன்றார். முடியவில்லை. ஏதோ ஒரு வைரஸ் பாதிப்போ அல்லது மென்பொருள் கோளாறோ, அந்தச் செயலி வேலை செய்ய மறுத்தது.

"ஷ்யாம்! ஷ்யாம்! சீக்கிரம் வாடா... அம்மாவுக்கு என்னாச்சுன்னு பாரு," என்று அலறினார்.

ஷ்யாம் ஓடி வந்து போனைப் பார்த்தான். "அப்பா, இது ஒரு சின்ன சாப்ட்வேர் பிரச்சினைதான். நான் சரி பண்ணிடுறேன், பயப்படாதீங்க."

"இல்லடா.. என்னவோ ஆகிருச்சு. அவளோட முகம் தெரியல. எனக்கு அவளைப் பார்க்கணும், இப்பவே பார்க்கணும்!" சுந்தரத்தின் கண்கள் சிவந்திருந்தன. அவர் ஒரு குழந்தையைப் போல அழத் தொடங்கினார்.

ஷ்யாம் எவ்வளவு முயன்றும் மொபைலை உடனே சரி செய்ய முடியவில்லை. "அப்பா, சர்வர்ல ஏதோ பிரச்சனை. இப்ப மழையும் மின்னலுமா இருக்கு, ரௌட்டரை உபயோகிக்கக்கூடாது. அமத்தி வெச்சுட்டு நாளைக்கு விடிஞ்சதும்  சரி செய்யப் பார்க்கறேன்" என்றான்.

அந்த இரவு சுந்தரத்திற்கு நரகமாக இருந்தது. தன் மனைவி மறுபடியும் இறந்துவிட்டது போன்ற ஒரு உணர்வு அவருக்கு ஏற்பட்டது. இருட்டில் அமர்ந்து போன் திரையையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தார். அதன் மௌனம் அவரை அச்சுறுத்தியது. உயிரற்ற ஒரு இயந்திரத்தின் மீது அவர் வைத்திருந்த அதீதப் பிணைப்பு, இப்போது அவரை மனரீதியாகச் சிதைத்துக் கொண்டிருந்தது.
மறுநாள் காலை, ஷ்யாம் எப்படியோ கஷ்டப்பட்டு அந்தச் செயலியைச் சரிசெய்தான். மீண்டும் திலகாவின் முகம் திரையில் தோன்றியது.

"என்னங்க... இன்னிக்கு சனிக்கிழமை. ஆஞ்சநேயர் கோவிலுக்குப் போகலாமா?" என்று அந்த ஏஐ கேட்டது.

சுந்தரம் போனை கையில் வாங்கினார். திரையில் தெரிந்த மனைவியைப் பார்த்தார். அவள் சிரிக்கிறாள்... ஆனால் அந்தக் கண்களில் உயிர் இல்லை. அவள் பேசுகிறாள்... ஆனால் அதில் ஆன்மாவின் துடிப்பு இல்லை. ஏதோ ஓர் இயந்திரத்தன்மை இப்போது தெரிந்தது. நேற்று இரவு அவர் அனுபவித்த அந்தத் தவிப்பு அவருக்கு ஒரு உண்மையைப் புரிய வைத்தது.
மெல்ல போனை மேஜையில் வைத்தார்.

"ஷ்யாம்..."

"சொல்லுங்கப்பா, இப்போ அம்மா வந்துட்டாங்கல்ல? இனி கவலைப்படாதீங்க."

"இல்லடா ஷ்யாம். இது அம்மாவோட நினைவுகளைச் சொல்லுது, அந்த நினைவுகளும் கூட நீ ஊட்டியவை. அம்மாவோட குரல்ல பேசுது. ஆனா இது அம்மா இல்ல. அவளோட நிழலுருவம்.. அவ்வளவுதான். நேத்து இது வேலை செய்யாமப் போனப்போ.. திலகாவைப் பார்க்க முடியாம ஆனப்போ.. நான் துடிதுடிச்சுப் போயிட்டேன். அந்த உணர்வு உன் அம்மாவை நிஜமா இழந்தப்போ அடைஞ்சதை விட அதிகமா இருந்துச்சு. ஒரு மெஷின் மேல நான் இவ்வளவு பித்துப் பிடிச்சு அலைஞ்சது தப்புன்னு இப்ப தோணுது."

சுந்தரம் எழுந்து சென்று, சுவரில் இருந்த திலகாவின் நிஜமான புகைப்படத்தைப் பார்த்தார்.

"இந்தச் சிரிப்பு போதும்டா எனக்கு. அவளோட நினைவுகள் என் மனசுல இருந்தா போதும். போன்ல அவளைப் பிடிச்சு வைக்க நினைச்சது என்னோட பலவீனம். இதை 'அன்-இன்ஸ்டால்' பண்ணிடு," என்றார் உறுதியான குரலில்.

ஷ்யாம் ஆச்சரியத்துடன் பார்த்தான். சுந்தரம் இப்போது நிதானமாக இருந்தார்.

"நிஜமான பிரிவை விட, அந்தப் பிரிவை ஏத்துக்காம ஒரு பொய் உலகத்துல வாழுறதுதான் ரொம்ப வலி தருது ஷ்யாம். உன் அம்மா என் நினைவுகள்ல வாழட்டும், இந்தத் திரையில வேணாம்," என்றார்.

டிஜிட்டல் தேவதை மறைந்துவிட்டாள், அதே பொழுதில் சுந்தரம் மீண்டும் மனிதராக மீண்டிருந்தார். 

அன்று மாலை, சுந்தரம் நீண்ட நாட்களுக்குப் பிறகு பால்கனியில் ஊஞ்சலில் அமர்ந்து நிஜமான பறவைகளின் சத்தத்தையும், காற்றின் தழுவலையும் ரசித்துக் கொண்டிருந்தார். திலகா அவரோடு இல்லைதான், ஆனால் அவளது நினைவுகள் ஒரு மெல்லிய தென்றலாக அவருள் சுகந்தம் எழுப்பிக் கொண்டிருந்தது. அதன் லயிப்புக்கேற்றவாறு மெல்ல அசைந்தாடத்தொடங்கியது ஊஞ்சல்.

டிஸ்கி: சிறுகதையை வெளியிட்ட பண்புடன் மின்னிதழுக்கு நன்றி.

Monday, 27 April 2026

மௌனத்தின் நறுமணம் - சிறுகதை (பண்புடன் மின்னிதழில் வெளியானது)


சென்னையின் எழும்பூர் இரயில் நிலையத்தில் நின்றிருந்தபோது, அவனது காதுகளில் நகரத்தின் ரீங்காரம் கேட்டுக் கொண்டே இருந்தது. அது வெறும் புறவுலகின் சத்தமல்ல; கடந்த ஐந்து ஆண்டுகளாக அவனது மூளையை சதா அரித்துக் கொண்டிருந்த இலக்குகளின், மின்னஞ்சல்களின், மற்றும் அர்த்தமற்ற உரையாடல்களின் தொகுப்பு. குளிரூட்டப்பட்ட அறைக்குள் அமர்ந்து வண்ணவண்ண எண்களோடும் எழுத்துகளோடும் படங்களோடும் மல்லுக்கட்டிய அவனது மூளை, இப்போது சிக்னலில் தெரியவிருக்கும் ஒரு சொட்டுப் பச்சை நிறத்திற்காக ஏங்கியது. எப்போது ஊருக்குப்போய் நிம்மதியாக இருப்போம் என்றிருந்தது.

சென்னையின் அசுரவேகப் பிடியிலிருந்து தப்பித்து, ஒரு நீண்ட பெருமூச்சோடு இரயிலேறினான். குளிர்சாதனப் பெட்டியின் செயற்கைக் குளிர் காற்று அவனது நுரையீரலைச் சுட்டது. கையில் இருந்த லேப்டாப் பையை ஒருமுறை பார்த்தான். ஐந்து ஆண்டுகள்… ஐந்து ஆண்டுகளில் அவன் புழங்கியது வெறும் எண்களோடும் குறியீடுகளோடும், இழந்தது சொந்த மண்ணின் ஈரத்தையும், அந்த மனிதர்களின் அன்பையும்.

இரயில் தண்டவாளங்களில் தாளம் தட்டியபோது, சுபாஷின் மனம் காலச் சக்கரத்தில் பின்னோக்கி உருண்டது. ஊருக்குப் போகிறோம் என்ற எண்ணமே அவனுக்குள் ஒரு கலவையான மாற்றத்தை ஏற்படுத்தியிருந்தது. கடைசியாக அவன் ஊருக்குப்போனது ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு. இப்போது ஊர் எப்படியிருக்கும்? மனிதர்கள் எப்படியிருப்பார்கள்? தெரு முனையிலிருந்த அந்தப் பழைய வீட்டை அதன் சொந்தக்காரர்கள் இடித்துப் புதிதாகக் கட்டுகிறார்கள் என அம்மா ஒரு முறை சொல்லியிருந்தாள். எனில், அதன் வாசலிலிருக்கும் செண்பகப்பூ மரத்தையும் வெட்டியிருப்பார்களோ?! என யோசித்தான்.

அதிகாலை நான்கு மணிக்கு இரயில் நிலையத்தில் இறங்கியபோது, மார்கழியின் அதிகாலைப்பனியிலும் அவனது மண்ணுக்கே உரித்தான அந்த இளம் சாரல் காற்றிலும் தேகம் சிலிர்த்தது. ரயில் நிலையத்தை விட்டு வெளியே வந்தபோது, அந்த அதிகாலையிலும் ஒரு சில தேநீர்க்கடைகள் இயங்கிக்கொண்டிருந்தன. விபூதி பூசிய பாய்லர், பால் பாத்திரம், கடைக்குத் தனி அழகைக்கொடுத்தன. சாம்பிராணியும் மலர்களும் மணக்க சுவரில் அடித்திருந்த ஷெல்பில் வீற்றிருந்தனர் தெய்வங்கள். அன்றைய தினம் முதன்முதலாய்க் காய்ச்சிய பால் ஒரு தம்ளரில் அவர்கள் முன் வைக்கப்பட்டிருந்தது. கூடவே இரண்டு வடைகளும். தூக்கத்தை உதற ஒரு டீ குடிக்கலாமா? என நினைத்தவன், வீட்டிற்குப் போய் அம்மாவின் கையால் குடித்துக்கொள்ளலாம் என முடிவெடுத்து, நிலையத்தின் வாசலில் நின்ற ஆட்டோவில் ஏறினான். தன் வீட்டின் வாசலில் நின்றபோது, பழைய வேப்பமரத்தின் கசப்பு கலந்த மணம் அவனை அணைத்துக் கொண்டது.

அவனது அம்மா அலமேலு, வாசலில் கோலமிட்டுக் கொண்டிருந்தவள், மகனைக் கண்டதும் கையில் இருந்த கோலமாவைச் சிறதவிட்டு ஓடி வந்தாள்.

“வா மக்களே.. தேகம் ஏன் இப்படிக் கறுத்துப் போயிருக்கு? ஆளே மெலிஞ்சுட்டியே. நேரத்துக்குச் சாப்புடுகியா இல்லியா?” – அம்மாவின் பாசம் எப்போதும் மாறாதது, அது காலத்தைக் கடந்த ஒரு மகா நதி.

மறுநாள் காலை, கோயிலுக்குச் சென்ற சுபாஷ், அந்தக் காட்சியைக் கண்டான்.

பிள்ளையார் கோயிலின் வெளியே அந்த சின்ன பூக்கடையில், பூங்காவனம் அமர்ந்திருந்தாள். பூக்காரம்மாளின் மகள் அவள்.

அவள் கைகள் பூக்களைத் தொடுக்கும் விதம் ஒரு கவிதை போல இருந்தது. ஒவ்வொரு மலரையும் நாரிடம் ஒப்படைக்கும்போதும், அதனிடம் ஏதோ ஒரு ரகசியத்தை பகிர்கிறாளோ, அந்த சுவாரஸ்யத்தில் அவை தன்னைத்தானே தொடுத்துக் கொள்கின்றனவோ எனும்படி இருந்தது. தியானம் போல் பூத்தொடுத்துக்கொண்டிருந்த அவளது முகத்தில் எந்தச் சலனமும் இல்லை. அவளது கண்கள் ஒரு பேராழியைப் போலத் தெளிந்திருந்தன.

சுபாஷ் அவளையே பார்த்துக் கொண்டிருந்தான். அவளது இயல்பல்லாத விசித்திரமான அமைதி, அவனை ஒருவித அசௌகரியத்திற்கு உள்ளாக்கியது. அவள் ஒரு மொட்டைப் போலத் தன்னைத் தானே சுருக்கிக் கொண்டு, உலகத்திற்கும் தனக்கும் இடையே ஒரு கண்ணுக்குத் தெரியாத திரையைத் தொங்கவிட்டிருந்தது போலத் தோன்றியது.

மதிய உணவின் போது, அலமேலு சூடாகப் பரிமாறிக் கொண்டிருக்கும்போது சுபாஷ் மெல்லப் பேச்சைத் தொடங்கினான்.

“அம்மா, கோயிலில் பூங்காவனத்தைப் பார்த்தேன். பூக்காரம்மா மகள்தானே? ஏன் அவ ஒரு மாதிரியா இருக்கா? பூ வாங்க வர்றவங்க கிட்ட கூட ஒண்ணு ரெண்டு வார்த்தைகள்தான் பேசறா. முன்னாடி நல்லாத் துறுதுறுன்னு பேசிட்டுத் திரிவாளே?”

அலமேலு பெருமூச்சு விட்டு ஒரு கணம் அமைதியானாள். “அவ ஒரு மாதிரி ஆயிட்டாடா சுபாஷ். ‘ஏண்டி இப்படி இருக்க?’ன்னு கேட்டா, அவ சிரிப்பா… ஆனா அந்தச் சிரிப்புல சத்தமே இருக்காது. அவளுக்குப் படிப்பு வரும், ஆனா படிக்கப்போக மாட்டேன்னுட்டா. வீட்டு வேலை, தோட்ட வேலைன்னு எல்லாமும் அழகா நறுவிசா செய்ய வரும். அவ கையால ஒரு சொம்பு தண்ணி ஊத்துனாலே அந்த மகிழ்ச்சியில தோட்டமே பூத்துச்சொரிஞ்சுரும். ஆனா அவ எதையும் அவளுக்கா மனசுல தோணுனாத்தான் செய்வா. பட்டணத்துல இருக்கற அவ அக்கா வீட்டுக்குக் கூட்டிட்டுப்போனாலாவது அங்க அவ வயசுல இருக்கற பிள்ளைகளைப்பார்த்து இவளும் கலகலப்பா இருப்பான்னு நினைச்சாங்க. ம்ஹூம்.. போக மாட்டேன்னுட்டா. இந்த ஊர்ல இருக்குற பூக்களோடவே அவளோட காலம் கழிஞ்சுட்டு இருக்கு.”

“ஏன்மா, அவளுக்கு ஏதாவது மனசுக்கஷ்டமா?”

“தெரியலடா. நீ தட்டைப் பார்த்து சாப்பிடு. இன்னுங்கொஞ்சம் பொரியல் வைக்கட்டுமா?“

ஊரே அவளைப் பற்றி ஒரு விசித்திரமான கதையைச் சொல்லிக் கொண்டிருந்தது—”பூக்காத மொட்டு” என்று. அவள் யாரிடமும் பேசுவதில்லை, சிரிப்பதில்லை என அம்மா சொன்னதிலிருந்து, ‘ஏன் இப்படியிருக்கிறாள்?’ என்ற கேள்வி அவன் தலைக்குள் குளவியாய்க் குடைந்து கொண்டிருந்தது.

அன்றைக்கு மாலை வேளையில், காலாற நடந்துகொண்டிருந்த சுபாஷ், கோவிலிலிருந்த நந்தவனத்திற்குச் சென்றான். அங்கே பூங்காவனம் தனியாகப் பூக்களைப் பறித்துக் கொண்டிருந்தாள். செடிகளுக்கு இடையே அவள் மறைந்து மறைந்து தெரிவது, ஒரு தேவதை தன் தோட்டத்தைப் பராமரிப்பது போல இருந்தது. சுபாஷ் மெல்ல அவளை நெருங்கினான்.

“பூங்காவனம்… என்னை ஞாபகம் இருக்கா?”

அவள் நிமிர்ந்து பார்த்தாள், அந்தப் பார்வையில் ஒரு தீட்சண்யம் இருந்தது. புன்னகைத்தாள். “ஞாபகம் இருக்கு சுபாஷ். சென்னைக்குப் போயிட்டு வந்திருக்கீங்க. அஞ்சு வருஷம் உங்க உருவத்துல நிறைய மாற்றத்தைக் கொண்டு வந்திருந்தாலும் உங்க குரல் அப்படியே இருக்கு.”

அவளுக்குத் தன்னை ஞாபகமிருப்பது குறித்து அவனுக்கு சந்தோஷமாக இருந்தது. பூப்பறித்துக்கொண்டே நகர்ந்த அவளை அவனும் தொடர்ந்தான்.

“ஆனா நீ நிறைய்ய மாறியிருக்கே. ஏன் பூங்காவனம் இப்படி மௌனமா இருக்க? ஊரே உன்னைப் பத்திப் பேசுது. ஏன் யார்கிட்டயும் பேசுறது இல்லை? யாரோடாவது உனக்கு மனத்தாங்கலா?”

பூங்காவனம் தன் கையில் இருந்த ஒரு மல்லிகை மொட்டை வருடியபடி பேசினாள்.

“சுபாஷ்… சென்னை எப்படி இருக்கு?”

“நல்லா இருக்கு… ஆனா, இங்க இருக்கற மாதிரி அமைதியா இருக்காது, நம்ம ஊரை நான் ரொம்பவே நினைச்சுப்பேன்” என்றான் தயக்கத்துடன். “நான் கேட்டதுக்கு நீ இன்னும் பதில் சொல்லலை. சின்னப்பிள்ளைகளா நாம விளையாடறப்ப எவ்ளோ கலகலப்பா வாய் ஓயாம பேசிட்டே இருப்ப. நீ ஏன் பூங்காவனம் இப்படி மாறிட்ட? ஏன் யார்கிட்டயும் பேசுறது இல்ல? ஊரே உன்னை ‘பூக்காத மொட்டு’ன்னு கிண்டல் பண்றது உனக்கு வருத்தமா இல்லையா?”

பூங்காவனம் அருகில் மரத்தின் கிளையில் இருந்த ஒரு செண்பகப் பூவைப் பறித்துக் கூடையில் போட்டாள். “பூக்குறதுன்னா என்ன சுபாஷ்? இதோ இந்தச் செம்பகப்பூ போல இதழ் விரிச்சுத் தன்னை, தன் மனசை, தன் எண்ணங்களை மத்தவங்களுக்குக் காட்டுறது மட்டும்தான் பூக்குறதா? என் மௌனமும் ஒரு பூதான். அதை நுகரத் தெரிஞ்சவங்களுக்குத்தான் அதோட வாசனை புரியும்.”

அவள் நிமிர்ந்து அவனைப் பார்த்தாள். அந்தப் பார்வையில் ஒரு முதிர்ச்சி இருந்தது. “உங்க நகரத்துல ஒரு நிமிஷமாவது சத்தம் இல்லாம இருக்க முடியுமா? உங்க போன், உங்க கம்ப்யூட்டர், உங்க கார்… எல்லாம் சத்தம் போட்டுட்டே இருக்கு. அந்தச்சத்தம் எனக்குப் பிடிக்கவேயில்லை. இங்க, இந்த இயற்கைக்கு நடுவுல இருக்குற அமைதியிலும், இந்தப்பூக்களின் மௌனத்திலும் எனக்கு என்னவோ இனம் புரியாத நிம்மதி கிடைக்குது”

சுபாஷ் பேச முடியாமல் நின்றான். அவளது வார்த்தைகள் வெறும் பேச்சல்ல;

“இங்க பாருங்க… இந்தச் செடியில இருக்குற ஆயிரம் மொட்டுகளை.. நானும் பூக்காத மொட்டாவே இருக்க விரும்புறேன். ஏன்னா, மொட்டுக்குள்ள தான் அந்தப் பூவோட மொத்த வாசமும் செறிஞ்சு இருக்கு. விரிஞ்சா சில மணித்துளிகள்ல அது காத்துல கரைஞ்சு போயிரும். என் மௌனமும் அப்படித்தான். அமைதியா இருக்கேன், அதனால நிம்மதியா இருக்கேன். ஆனாலும், இந்தப் பூக்களோடு, இந்த மண்ணோட ஈரத்தோடு, இந்தக்காத்தோடு, இந்தத் தேனீக்களோடு நான் நிறைய்யப் பேசிக்கிட்டுதானிருக்கேன்.

“நான் ஏன் பூக்கணும் சுபாஷ்? பூத்தாப் பறிப்பாங்க… இல்லன்னா வாடி காய்ஞ்சு விழும். மொட்டாவே இருக்கும்போது நான் எனக்குள்ளே முழுமையா இருக்கேன்

அவள் தொடர்ந்தாள், “நீங்க எல்லாரும் ஒருத்தரோடொருத்தர் பேசறீங்க, ஒருத்தரையொருத்தர் நல்லாப் புரிஞ்சுக்கிட்டதா நினைச்சுக்கறீங்க. உண்மையில் யாரும் யாரையும் புரிஞ்சுக்கறது இல்லை. இங்க, நான் அதிகமா பேசாம இருக்கேன்.. அதனாலயே எல்லோரையும் எல்லாத்தையும் கவனிச்சு ஆழமாப்புரிஞ்சுக்கறேன். நீங்கல்லாம் பேசிப்பேசி பிரச்சினைகள் கூடுதலாகி ஒருத்தருக்கொருத்தர் மனத்தாங்கலோடு கடைசியில் பேசாம இருந்துடறீங்க. நான் ஆரம்பத்துலயே பேச்சைக் குறைச்சுக்கிட்டேன். அது அப்படியே பழகிடுச்சு, நல்லாருக்கு.. அவ்ளோதான்”

சூரியன் மறையத் தொடங்கியது. பூங்காவனம் தன் கூடையைத் தூக்கிக் கொண்டு மௌனமாகப் படியிறங்கினாள். அவளது பாதங்கள் மண்ணில் படாதது போல ஒரு பிரமை. அவள் விட்டுச் சென்ற அந்தப் பூக்களின் வாசனையை விட, அவளது வார்த்தைகளின் மணம் சுபாஷின் மனதிற்குள் ஆழமாக இறங்கியது.

அவளது அறிவு, அவளது முதிர்ச்சி, அவளது தெளிவு… இவை எதையும் அவன் எங்கேயும் யாரிடமும் இதுவரை கண்டதில்லை. அவள் பூக்காத மொட்டு அல்ல; அவள் பூக்கத் தேவையில்லாத அளவுக்குத் தன்னுள் மலர்ந்துவிட்ட ஒரு முழுமை.

அன்று இரவு சுபாஷால் உறங்க முடியவில்லை. ஜன்னல் வழியாக நிலவைப் பார்த்துக் கொண்டிருந்தான். விடியற்காலையில் பூஜைக்காக தூரத்தில் கோயில் மணியின் சத்தம் மெலிதாகக் கேட்டது. சுபாஷ் ஜன்னல் வழியாகப் பார்த்தபோது, தூரத்தில் பூங்காவனம் கோயிலுக்குப் பூக்கூடையுடன் செல்வது தெரிந்தது. உடன் நடந்துகொண்டிருந்தவர்கள் ஏதோ பேசிக்கொண்டிருந்தபோதும், அவள் இப்போதும் அமைதியாகவே நடந்துகொண்டிருந்தாள். அவளது மௌனம் அந்த ஊர் முழுவதும் ஒரு நறுமணமாகப் பரவிக் கொண்டிருந்தது. அவனுக்கு இப்போது புரிந்தது.. அவள் அதிகம் பேசாத ஒரு பூக்காத மொட்டாகவே இருக்கத் தீர்மானித்திருப்பது, இந்த உலகத்திடமிருந்து தன் மௌனத்தின் நறுமணத்தைத் தற்காத்துக் கொள்ளத்தான்.

மறுநாள் காலை, அவன் மீண்டும் சென்னைக்குக் கிளம்பத் தயாரானான். ஆனால், இம்முறை அவனது கண்களில் ஒரு தெளிவு இருந்தது. அவன் தன் பையில் ஒரு காய்ந்த மகிழம்பூவை எடுத்துப் போட்டுக்கொண்டான். அந்தப் பூவின் நறுமணம் அவனுக்குப் பூங்காவனத்தின் மௌனத்தை நினைவூட்டிக் கொண்டே இருக்கும். அவனுக்குள் பூங்காவனம் விதைத்த அந்த மௌனத்தின் விதை ஒரு விருட்சமாக வளரத் தொடங்கியிருந்தது.

வண்டி நகரத் தொடங்கியது..

டிஸ்கி: சிறுகதையை வெளியிட்ட பண்புடன் மின்னிதழுக்கு நன்றி.

Sunday, 8 March 2026

வலை ஜிமிக்கி - பண்புடன் மின்னிதழில் வெளியானது.


அந்த ஜிமிக்கி அவளுடைய பாட்டி அவளுக்குப் பரிசாகக் கொடுத்தது. நுணுக்கமான தங்க வேலைப்பாடுகள் கொண்ட அந்த டிசைன், சீராகப் பின்னிப்பின்னி பூவும் கொடியுமாக நிறைந்து, விளிம்பில் சின்னஞ்சிறு முத்துகள் தொங்க, சின்ன குடை போல் அவளது காதுகளில் அசைந்து கொண்டிருக்கும். பேசும்போது அவளுடைய தலையாட்டலுக்கேற்ப மெலிதாக அசைந்து கன்னங்களின் ஓரத்தை உரசிச்செல்வது தனி அழகு. வலை ஜிமிக்கி வேண்டுமென்று அவள் ஆசைப்பட்டுக்கேட்டதற்காக பிரத்தியேகமாக அவளது பாட்டியே அதை வடிவமைத்து நகைக்கடையில் ஆர்டர் கொடுத்து வாங்கிக்கொடுத்திருந்தாள். அம்மாதிரி நுணுக்கத்தை இப்போது வரும் மெஷின் கட் நகைகளில் பார்க்கவே முடியாது.

அந்த ஆண்டு குலதெய்வக்கோவிலின் பொங்கல் திருவிழாவிற்காகத் தன் அப்பாவுடன் சொந்தக் கிராமத்திற்குச் சென்றிருந்தாள் சுவாதி. ஊரே கோலாகலமாக இருந்தது. உறவினர்கள் அனைவரும் பெரியப்பா வீட்டில் கூடியிருந்தார்கள். சுவாதியின் நெருங்கிய உறவினரான பெரியம்மா கஸ்தூரி, சுவாதியை உச்சி முகர்ந்து வரவேற்றார்.

அன்று மாலை திருவிழா முடிந்து அனைவரும் வீட்டில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தபோது, கஸ்தூரி சுவாதியின் காதுகளைக் கவனித்தார். வலை ஜிமிக்கியோடு அதன் முத்துகளுக்குப் பொருத்தமாக முத்துகள் கோர்த்த மாட்டலையும் அணிந்திருந்தது வசீகரமான அழகைக் கொடுத்திருந்தது. "சுவாதி, இந்த ஜிமிக்கி எங்கே வாங்கினே? என்னமா ஒரு அழகா இருக்கு! இப்போலாம் இப்படி ஒரு கைவேலைப்பாட்டைப் பார்க்கவே முடியாது," என்று வியந்து சொன்னார்.

சுவாதி பெருமையாகச் சிரித்தாள். "ஆமா பெரியம்மா, இது எங்க பாட்டி எனக்குக் கொடுத்தது."

கஸ்தூரி "சரோஜாக்கும் வலை டிசைன்ல ஒரு ஜோடி ஜிமிக்கி செய்யணும்னு ஆசை. இந்த டிசைன் ரொம்ப அழகாயிருக்கு. ஒரு ரெண்டு நாளைக்குக் கழட்டிக்கொடுத்தீன்னா கடையில் மாடலுக்குக் காமிச்சுட்டுத் திருப்பித்தந்திருவேன்" என்றார். சரோஜா அவரது மகள். சமீபத்தில் திருமணமாகி முதல்முறையாக அம்மா வீட்டுக்கு வந்திருந்தாள்.

சுவாதிக்கு இதயம் ஒரு நொடி நின்றது போலிருந்தது. காதுகளிலிருந்து அந்த பாரத்தை இறக்கி வைப்பது, தன் உயிரையே கழற்றிக் கொடுப்பது போல அவளுக்குத் தோன்றியது. அதை அணிந்த நாளிலிருந்து இது வரை கழட்டியிராததால் "பெரியம்மா... இது..." என அவள் இழுத்தாள்.

அப்பா பக்கத்துல இருந்துகொண்டு, "மக்கா, பெரியம்மதானே கேக்கா? குடு... ஒரு ரெண்டு நாள்ல தந்துருவாள்லா? சொந்தக்காரங்ககிட்ட என்ன தயக்கம்?" என்றார். அப்பாவின் சொல்லுக்கு மறுபேச்சு பேசத் தெரியாத சுவாதி, கைகள் நடுங்க அந்த ஜிமிக்கிகளைக் கழற்றிக் கொடுத்தாள். கழற்றிய பின் தன் காதுகள் வெறுமையாக இருப்பதை அவளால் சகிக்க முடியவில்லை.

அடுத்த நாள் காலை, எதிர்பாராத விதமாக அப்பாவிற்கு ஒரு முக்கியமான அவசர அழைப்பு வரவே, குடும்பத்துடன் உடனே ஊருக்குத் திரும்ப வேண்டிய சூழல். சுவாதி பதறிப்போனாள். 

"பெரியம்மா, அந்த ஜிமிக்கி..."

"அதற்குள் என்னம்மா அவசரம்? நகைக்கடைக்குப் போயிட்டு, அடுத்த வாரம் உன் தம்பி ஊருக்கு வரும்போது அவன்கிட்டக் கொடுத்து அனுப்புறேன். இல்லன்னா நானே நேர்ல வந்து தர்றேன்," என்றார் கஸ்தூரி உறுதியாக. சுவாதி கனத்த இதயத்துடன் ஊருக்குத் திரும்பினாள்.

வாரம் ஒன்று கடந்தது. சுவாதி தன் செல்போனை அவ்வப்போது எடுத்துப் பார்த்துக்கொண்டே இருந்தாள். கஸ்தூரியிடமிருந்து அழைப்பு வரவில்லை. பொறுத்துப் பார்த்துவிட்டு அவளே அழைத்தாள்.

"சுவாதி, இப்போதான் கூப்பிடலாம்னு இருந்தேன்.  இன்னும் ரெண்டு நாள்ல கொண்டு வரேன்" என்றார் கஸ்தூரி. அடுத்த வாரம் அழைத்தபோது, "உங்க ஊருக்குத்தான் பொறப்பட்டுட்டு இருந்தேன், ஒங்க மாமா சொந்தத்துல ஒரு இறப்பு, இப்ப அங்கதான் இருக்கேன். ஊருக்கு வந்ததும் மொத வேலையா ஒங்க வீட்டுக்குத்தான் வருவேன்" என்றார். இப்படி வாரங்கள் மாதங்களாகின. சுவாதிக்கு அழுகையே வந்துவிட்டது. அவளது காதுகளில் ஒரு சாதாரணக் கம்மலைப் போட்டிருந்தாள், ஆனால் அது அவளுக்கு ஏனோ அந்நியமாகவே இருந்தது.

மூன்று மாதங்கள் கழித்து, ஒரு ஞாயிற்றுக்கிழமை மாலை சுவாதி மீண்டும் அழைத்தாள். இந்த முறை கஸ்தூரியின் குரலில் ஒருவித நடுக்கம் இருந்தது.

"பெரியம்மா, போதும். என் ஜிமிக்கியைக் கொடுத்துடுங்க. நான் நேர்ல வந்து வாங்கிக்கவா?" என்றாள் கோபமும் அழுகையுமாக.

கஸ்தூரி நீண்ட பெருமூச்சு விட்டார். "சுவாதி... என்னை மன்னிச்சிடுமா. சரோஜாவுக்கு ஜிமிக்கி ஆர்டர் கொடுக்கைல கொஞ்சம் பணத்தட்டுப்பாடு ஆகிட்டுது. கடையில் நின்னுக்கிட்டு இன்னும் நாலு கிராம் எடை கூடுதலாச் செய்யச்சொல்லுங்க, அப்பத்தான் பாரிக்கமா இருக்கும்ன்னு ஒரே நச்சு. எங்க பட்ஜெட்டையும் தாண்டிப்போயிட்டுது. கையிருப்பிலும் காசு இல்ல.  வேற வழியில்லாம உன் ஜிமிக்கியை அடகு வச்சிட்டேன்..."

சுவாதிக்குத் தலை சுற்றியது. "என்ன பெரியம்மா சொல்றீங்க? அது என் பாட்டி எனக்குக் கொடுத்தது. அதை எப்படி நீங்க அடகு வைக்கலாம்?"

"சூழல் அப்படி சுவாதி... இன்னும் ரெண்டு மாசத்துல வயல் அறுவடையானதும் மீட்டுத் தந்துடுறேன்..." என்று அவர் ஏதேதோ சமாதானம் சொன்னார். ஆனால் சுவாதியின் காதுகளில் எதுவும் விழவில்லை. அவள் அடைந்த கோபத்திற்கு எல்லையே இல்லை. பெரியம்மா செய்த நம்பிக்கை துரோகம் அவளைக் குலைத்தது. சுவாதி கோபத்துடன் போனை வைத்தாள். "உறவுன்னா என்னப்பா? ஒருத்தரோட பலவீனத்தை இன்னொருத்தர் லாபமாக்குறதுதானா? ஏன் மனுஷங்க இவ்வளவு சுயநலமா இருக்காங்க?" என்று தன் அப்பாவிடம் பொருமினாள். மாதங்கள் ஓடின. ஆனால் ஜிமிக்கி வந்தபாடில்லை. கண்ணாடியில் முகம் பார்க்கும் போதெல்லாம் அக்காட்சி அவளை வதைத்தது.

ஓராண்டு கழித்து, ஒரு அதிகாலை நேரத்தில் வாசலில் ஆட்டோ நிற்கும் சப்தம் கேட்டது. சுவாதியின் அப்பா கதவைத் திறந்தார். வெளியே கஸ்தூரி நின்றிருந்தார். முகம் வாடிப் போயிருந்தது.

அப்பா எதையும் பேசவில்லை. கஸ்தூரி நேராக சுவாதியின் அறைக்குள் நுழைந்தார். சுவாதி அவரைப் பார்த்து முகத்தைத் திருப்பிக்கொண்டாள். கஸ்தூரி மெதுவாக அவள் அருகில் வந்து அவள் கையைப் பற்றிக்கொண்டார். "சுவாதி..  என்னைய மன்னிச்சிருடி. அந்த ஜிமிக்கிய அடகு வச்ச இடத்துல இருந்து மீட்க முடியல. வட்டி ஏறிப்போச்சு. இப்போ அந்த நகை மூழ்கிப்போச்சு மக்கா..." என்று விம்மினார்.

சுவாதிக்குத் தலையே சுற்றுவது போலிருந்தது, எதிர்பார்த்த அளவுக்கு வயலில் வருமானம் கிடைக்காததால் சரியான நேரத்தில் நகையை மீட்க முடியாமல் மூழ்கிப்போனதையும், எப்பாடு பட்டேனும் அதே போல் நகையைச் செய்து கொண்டு தந்தபின்தான் இனி இந்த வாசல்படி ஏறுவேன் என்றும் பெரியம்மா சொல்லிவிட்டுச் சென்றது கூட கவனத்தில் ஏறாமல் உணர்விழந்து அமர்ந்திருந்தாள். துக்கமும் கோபமும் பொங்கிப்பொங்கி வந்தது. இப்படியும் மனிதர்கள் இருப்பார்களா!! என உள்ளுக்குள் கசந்தது.

இரண்டு ஆண்டுகள் உருண்டோடின. கொஞ்சங்கொஞ்சமாக அந்த நினைவுகளையெல்லாம் மறக்க முயன்று கொண்டிருந்தாள் அவள். என்னதான் எதிர்பாராதவிதமாக நடந்திருந்தாலும் தன்னை ஒரு வார்த்தை கேட்டிருக்கலாம் எனத்தோன்றியது. அப்பாவிடம் சொல்லி அந்தப் பணத்தைக் கொடுத்து, தானே அந்த நகையை மீட்டிருந்தால் மூழ்கியிருக்காதே! எனவும் யோசித்தாள். பாட்டி ஞாபகமாக வைத்திருந்ததை இப்படிக் கை நழுவ விட்டுவிட்டோமே என தன் மீதே கோபம் கொண்டாள். கோபம் கொஞ்சங்கொஞ்சமாக ஆறிப்போயிருந்தாலும் அதன் வடு இன்னமும் இருந்தது. 

சரோஜாவுக்குக் குழந்தை பிறந்து, அதற்குப் பெயர் சூட்டும் விழாவுக்கு விருப்பமே இல்லாமல்தான் சுவாதி சென்றிருந்தாள். அங்கே போனால் அவர்களையெல்லாம் பார்க்க நேரிடும், நீறு பூத்திருக்கும் நெருப்பு கனன்று கொள்ள ஆரம்பிக்கும் எனப் பயந்தாள். வீட்டினுள் கஸ்தூரி பெரியம்மா ஒரு மூலையில் ஒடுங்கிப் போய் அமர்ந்திருந்தார். சரோஜாவின் புகுந்த வீட்டிலும் நிலைமை சரியில்லை எனக் கேள்விப்பட்டிருந்தாள். ஏதோ பணப் பிரச்சனை வர, சரோஜாவின் நகைகளை எல்லாம் அவளது மாமியார் பிடுங்கிக் கொண்டதாகத் தகவல்.

சுவாதியைக்கண்டதும் கஸ்தூரி ஓடி வந்து கட்டிப்பிடித்துக் கொண்டார். கன்னம் தடவி முத்தினார். “நீ வருவேன்னு காத்திருந்தேன் மக்கா” எனச்சொன்னபோது கண்களில் அதே பழைய பாசம் மினுமினுத்ததைக் கண்ட சுவாதிக்கும் உள்ளுக்குள் ஏதோ கரைந்தது. அவளைத் தனியாகக் கூட்டிப்போனவர், பர்ஸ் உள்ளிருந்து ஒரு சிறிய ரோஸ் நிறக் காகிதப்பொட்டலத்தை எடுத்தார். அதனுள்ளிருந்த ஒரு சிறிய பட்டுத் துணியை விரித்தார். உள்ளே அதே வலை டிசைன் ஜிமிக்கி மின்னிற்று.

சுவாதி அதிர்ச்சியுடன் பார்த்தாள். "இதோ உன் சொத்து சுவாதி. இதை மீட்கத்தான் இவ்வளவு நாள் கஷ்டப்பட்டேன். அடகு வெச்சிருந்தவங்க கிட்ட கெஞ்சிக்கூத்தாடி மறுபடி தவணை கேட்டு எப்படியோ பணத்தைப்புரட்டி உன்னோட நகையையே மீட்டுட்டேன். உன் பாட்டியையே உங்கிட்ட சேர்த்த மாதிரி தோணுது. இப்போதான் என் மனசு நிம்மதியா இருக்கு," என்றார் கண்ணீருடன்.

சுவாதி அதை வாங்கிப் பார்த்தாள். ஒரு காலத்தில் அவளது உயிராக இருந்த அந்த ஜிமிக்கி, இப்போது அவளுக்கு வெறும் பொருளாக மட்டுமே தெரிந்தது.

கஸ்தூரியின் கைகள் நடுங்கிக்கொண்டிருந்தன. சுவாதியின் கோபம் ஒரு நொடியில் பனியாகக் கரைந்தது. 

"பெரியம்மா, இதுக்காக நீங்க ஏன் இவ்வளவு கஷ்டப்பட்டீங்க?" என்றாள் சுவாதி அவரை அணைத்துக்கொண்டு.

"மானம் பெருசு சுவாதி. அதைவிட உன் அன்பு பெருசு. இந்த நகை நம்ம மனசுல ஏற்படுத்தின விரிசல் ரொம்பப்பெருசு. அதை எப்படியாவது நிரப்பணும், என் பிள்ளை நீ.. என்னை விட்டு விலகிடக்கூடாதுன்னு நினைச்சேன். நம்ம பொருளை நம்மோட அனுமதி இல்லாம இன்னொருத்தர் அழிச்சா, மனசு என்ன பாடுபடும்ன்னு புரிஞ்சுக்கிட்டேன். என்னை மன்னிச்சிடு," என்றார் கஸ்தூரி.

அவள் மெதுவாகச் சொன்னாள், "நகை திரும்ப வந்துட்டுது. ஆனா என் மனுஷங்க மேல இருந்த அந்த நம்பிக்கை போயிட்டுதே? நகை போனா மீட்டுரலாம், ஆனா போன நம்பிக்கையை எப்படிக் கொண்டு வர்றது? இப்போ, இந்தப் பொன் எனக்குப் பெருசாத் தெரியல பெரிம்மா. நீங்க உங்க தப்ப உணர்ந்தீங்களே, அதுதான் எனக்குப் பெரிய நகை. போயிட்டுப்போகுது. காலம் எல்லாத்தையும் ஆத்தும்ன்னு சொல்வாங்க. ஆத்தட்டும்…” என்றவள், கையிலிருந்த நகையை தொட்டிலில் கிடந்த குழந்தையின் கையில் வைத்து அதன் உள்ளங்கையை மூடி, “இது இந்தச் சித்தியோட பரிசு செல்லம்.. வளர்ந்தப்புறம் போட்டுக்கோ” என்றாள். “சரோஜா கழுத்துல, காதுல எதுவுமில்லாம இருக்கா, இதைப்போட்டுக்கச்சொல்லுங்க பெரிம்மா” என கஸ்தூரியின் காதுகளில் கிசுகிசுத்தாள். கண்கலங்கப்பார்த்துக்கொண்டிருந்த கஸ்தூரி, குழந்தையை எடுத்து சுவாதியின் மடியில் இட்டாள். கொஞ்சத்தொடங்கிய சுவாதியையும் மடியிலிருந்த குழந்தையையும் ஒரு சேர அணைத்தன அவள் கைகள்.

டிஸ்கி: சிறுகதையை வெளியிட்ட "பண்புடன்" மின்னிதழுக்கு நன்றி.

Thursday, 14 August 2025

மனத்துக்கண் மாசிலன்.. ( பண்புடன் இதழில் வெளியானது)


செக்கச்சிவந்திருந்தது வானம். அங்கொன்றும் இங்கொன்றுமாக மேகங்கள் விளிம்புகளில் செம்பஞ்சுக்குழம்பைப்பூசிக்கொண்டு மிதந்து கொண்டிருந்தன. வினோதுக்கு மருதாணியின் சிவப்பு மிகவும் பிடிக்கும். பூசிய மறுநாள் தோன்றும் இளஞ்சிவப்பு, நாளாக ஆக மெருகேறி அடர்வண்ணமாய் மின்னும் ரத்தச்சிவப்பு, கொஞ்சங்கொஞ்சமாய் நிறமிழந்த ஜாங்கிரி வண்ணம் என ஒவ்வொன்றையும் ரசிப்பான். சூரியனும் பளீரென்ற நீலவானில் ஒரு ஜாங்கிரியாக மிதந்து கொண்டிருந்தது. அழகான வளையம் வளையமாக ஜீராவின் மினுமினுப்புடன் பார்த்தாலே தின்னத்தூண்டுவதாக.. அவனால் ஆசையை அடக்க முடியவில்லை. கையை நீட்டி அதை எடுத்தான். கைக்குச்சிக்காமல் அது நழுவிக்கொண்டேயிருந்தது. அவனுக்கு அழுகையும் கோபமுமாக வந்தது. “அம்மா..” என கத்தினான். 

“இங்கேதான்ப்பா இருக்கேன், என்ன வேணும்?” கமலம்மாளின் மென்மையான குரல் பக்கத்தில் கேட்டது.

“இந்த ஜாங்கிரி தட்டோடு ஒட்டிக்கிச்சு. எடுக்க வரலை, எடுத்துக்கொடுங்களேன்” என்றான்.

“எங்கேப்பா?”

“இங்கதான்..” என்றவாறு திரும்பியவன் திகைத்தான். எங்கே போச்சு அதுக்குள்ள!! எனக்குழம்பினான். டேபிளின் துணியை இழுத்து அதனடியில் பார்க்க முற்பட்டான். அம்மா சட்டென்று கையை நீட்டித்தடுத்தாள். “போகட்டும் விடு.. உனக்கு ஜாங்கிரிதானே வேணும். சாயந்திரம் அண்ணனை வாங்கிட்டு வரச்சொல்றேன். இப்ப இந்த இட்லியைச்சாப்பிடு. அம்மா வேண்ணா ஊட்டி விடட்டா?” அவனது பதிலுக்குக் காத்திராமல் கொஞ்சிக்கெஞ்சி ஊட்டி விட்டு, வாய் துடைத்து, அவனது மாத்திரைகளையும் எடுத்துக்கொள்ள வைத்தார். சோபாவில் அமர்ந்திருந்தவன் அப்படியே சரிந்து தூங்க ஆரம்பித்தான்.

‘இன்னிக்கு மனப்பிரமையால கொஞ்சம் அதிகமா கஷ்டப்படறான் போலிருக்கே’ கவலையுடன் அவனையே நோக்கியபடி பக்கத்தில் அமர்ந்தார் கமலம்மாள். சில நாட்களாகவே வினோத் சரியாகத் தூங்கவில்லை. ஆகவே இப்படியெல்லாம் நடக்கும் என்பதை அவர் எதிர்பார்த்தே இருந்தார். எனவே அவனது வழக்கமான மாத்திரைகளோடு தூக்க மாத்திரையையும் சேர்த்து கொடுத்து விட்டிருந்தார். எப்போதுமே தூக்கமின்மையைத் தொடர்ந்து வரும் சில நாட்களை அவன் பெரும் அவஸ்தையுடன் கடக்க வேண்டியிருந்தது. அவனுக்கு மட்டுமே தெரியும் மாயக்காட்சிகளால் பெரும் குழப்பமடைந்தான். அவன் சொல்வதை யாராவது நம்ப மறுத்தாலோ அல்லது காதில் போட்டுக்கொள்ளாமல் அலட்சியமாகக் கடந்தாலோ பெருங்கோபம் கொண்டான். “இல்லாததைச்சொல்ல நானென்ன பைத்தியமா?” எனக்கத்தியபடி கையில் கிடைத்ததைப் போட்டுடைப்பது வழக்கமாக ஆகியிருந்தது. 

“இதை ஹாலுஷினேஷன்னு சொல்லுவாங்க”

அவனைப் பரிசோதித்து முடித்து, கைகளைக் கழுவிக்கொண்டு அமர்ந்த டாக்டரின் முன் அவனது மெடிக்கல் ஃபைல் விரிந்து கிடந்தது. ஏகப்பட்ட டெஸ்டுகள், அவற்றின் ரிசல்ட் ரிப்போர்ட்டுகளோடு சமீபத்தில் எடுத்த எம் ஆர் ஐ ரிப்போர்ட்டும் இணைந்திருந்தது. அவற்றையெல்லாம் பார்த்து அலசி விட்டுத்தான் அதைச்சொன்னார். 

“அப்படீன்னா?” என வினோதின் அப்பா கேட்டார்.

“மாயத்தோற்றம். ஒரு விஷயம் இருக்கு.. ஆனா இல்லே. இல்லே.. ஆனா இருக்குங்கற மாதிரியான விஷயம்” என்றார் டாக்டர்.

“கொஞ்சம் புரியற மாதிரி சொல்லுங்களேன் டாக்டர்”

“இப்ப, இந்த ரூம்ல நீங்க, நான், இந்த டேபிள், சேர்ன்னு இருக்கறது எல்லாம் வினோதுக்கு மட்டும் வேற மாதிரி தெரியும். வேற மாதிரி உணர்வார், வேற எங்கியோ இருக்கற மாதிரி புரிஞ்சுக்குவார். அதையே நம்பவும் செய்வார்”

“ஆமா டாக்டர். ரிசப்ஷன்ல வெயிட் பண்ணிட்டிருந்தப்ப கூட ‘அப்பா.. ஃப்ளைட் ஏன் லேட்டாகுதுன்னு கவுண்டர்ல விசாரிங்கன்னு நச்சு பண்ணிட்டிருந்தான்”

“எங்க ஆஸ்பத்திரியோட லைட்டிங் அமைப்பு, யூனிஃபார்ம் உடுத்திய ரிசப்ஷன் பெண்கள், அடுத்த நோயாளிக்கான அழைப்பைச்சொல்லும் ஸ்பீக்கர் இதெல்லாமும் அவருக்கு ஏர்போர்ட்டை நினைவுபடுத்தியிருக்கு. அதான் ஆஸ்பத்திரி அவருக்கு ஏர்போர்ட்டா தெரிஞ்சுருக்கு, அதனால அப்படிக் கேட்டிருக்கார்”

“இது இப்படியேதான் இருக்குமா டாக்டர்? சரியாகாதா? வாழ வேண்டிய வயசுப்புள்ளை இவன்” தழுதழுத்தாள் கமலம்மாள்.

“கவலைப்படாதீங்க, நம்ம உடம்பு அடிப்படையில் கெமிக்கல்களாலதான் கட்டமைக்கப்பட்டிருக்கு. உடம்போட சுரப்பிகள், ஹார்மோன்கள் எல்லாத்துக்குமே அடிப்படை உப்புகள்தான், அதாவது கெமிக்கல்கள்தான். இதோட விளையாட்டுதான் நம்ம உணர்ச்சிகள், நம்ம சிந்தனைகள் எல்லாத்துக்கும் அடிப்படை. இவரோட எண்ணங்களும் மனசும் ஒண்ணையொண்ணு இயக்குது. ஒரு செயின் ரியாக்ஷன் மாதிரின்னு வெச்சுக்கோங்க. மனசைக்கட்டுப்படுத்தத்தெரிஞ்சா எண்ணங்களும் கட்டுப்படும். இந்த பிரமைகளும் குறையும். ஆனா, எண்ணங்களால சுரக்கற கெமிக்கல்களால இவரோட மனசு கட்டுப்பட மறுக்குது. இவரோட ரத்தத்துல சோடியம் அதிகமா இருக்கறதால கொஞ்சம் உக்கிரமா இருக்கார். இவரோட சாப்பாட்டில் உப்பைக்குறைங்க” 

“மத்த ரிப்போர்ட்ஸ் எல்லாம் நல்லாருக்கு, முன்னைக்கு இப்ப முன்னேற்றம் தெரியுது. மருந்துகளோட உங்க ஒத்துழைப்பும் கவனிப்பும் பாசமும் அவருக்கு இப்ப ரொம்பவே தேவை. அவர் மனபிரமையால ஏதாவது பேசறப்ப மறுத்துப்பேசாம அவர் போக்கிலேயே பேச விடுங்க. கொஞ்ச நேரத்துக்கப்றம் தான் என்ன பேசினோம்ங்கறதே அவருக்கு ஞாபகம் இருக்கப்போறதில்லை. அதனால அவர் பேசறதை சீரியஸா எடுத்துக்காதீங்க. மறுக்கறப்பதான் வயலண்ட் ஆவாங்க. மனசறிஞ்சு எந்தத் தீங்கும் செய்யவோ பேசவோ மாட்டார். அதை நீங்க புரிஞ்சுக்கணும். மருந்துகளோட டோஸைக் கொஞ்சம் மாத்தியிருக்கேன். கொஞ்சம் தூங்குவார்.. தூங்க விடுங்க. அடுத்த மாசம் கூட்டிட்டு வாங்க. ஆல் தி பெஸ்ட்”. ப்ரிஸ்க்ரிப்ஷனை டைப் செய்து பட்டனைத்தட்டினார். அருகிலிருந்த ப்ரிண்டர் துப்பிய ப்ரிஸ்கிரிப்ஷனை ஃபைலின் உள்ளே வைத்து மூடி நீட்டினார். 

ஒரு வாரமாக அவர் அறிவுறுத்தியபடியேதான் எல்லோரும் அவனைக் கண்ணும் கருத்துமாகக் கவனித்துக்கொள்கிறார்கள். அவன் என்ன பேசினாலும் பொறுமையாகக் கேட்டுக்கொண்டார்கள். பக்குவமாகப் பதிலளித்தார்கள். ஆனாலும் சில சமயங்களில் சற்று மிகையாக நடந்து கொள்ளும்போது, கீறல் விழுந்த ரெக்கார்டு போல சொன்னதையே திருப்பித்திருப்பிச்சொல்லும்போது தங்கள் பொறுமை உடைந்து விடக்கூடாதே எனப் பயந்தார்கள். அவனது உடல் தன்னைச்சரி செய்து கொள்வதற்கான நேரத்தை நாம் கொடுத்துத்தான் ஆக வேண்டும் என்ற மருத்துவரின் அறிவுரையை அம்மாதிரியான சமயங்களில் ஒருவருக்கொருவர் ஆறுதல் போல் சொல்லிக்கொண்டார்கள்.
 
கடந்த சில மாதங்களாகத்தான் இப்படியிருக்கிறான். அதற்கு முன் அவனும் மற்ற ஆண்களைப்போல் இயல்பாக இருந்தவன்தான். கல்லூரி முடித்ததுமே வேலையும் கிடைத்துவிட, வழக்கமான அம்மாக்கள் போல் தன் பிள்ளைக்கொரு கல்யாணத்தைப்பண்ணிப் பார்த்து விட வேண்டுமென கமலம்மாள் முனைந்திருந்த நேரம். அன்றைக்கு மட்டும் அந்தச்சம்பவம் நடக்காமல் இருந்திருந்தால் எல்லாம் கூடி வந்து இன்றைக்கு அவனும் ஒரு குடும்பஸ்தனாகியிருப்பான்.

அன்றைக்கு கமலம்மாள் மும்முரமாகச் சமைத்துக்கொண்டிருந்தாள். பருப்பு டப்பாவைத்தேடியபோதுதான் கை மறதியாக அதை மேல்தட்டில் வைத்தது ஞாபகத்துக்கு வந்தது. எட்டி எடுக்க முனைந்தாள், எட்டவில்லை. நாற்காலியைப்போட்டுக்கொண்டு ஏறி எடுக்கலாம் என அவள் ஒரு ப்ளாஸ்டிக் நாற்காலியை எடுத்து வரத் திரும்பும்போதுதான் வினோத் தண்ணீர் குடிக்க அடுக்களைக்குள் நுழைந்தான். இல்லையில்லை… விதி அவனை இழுத்து வந்தது. 

“இதுக்குத்தான் அப்பாவையும் என்னையும் மாதிரி ஒசரமா வளரணும்ங்கறது. நகருங்க.. நான் எடுத்துத்தரேன் என்றவாறு டப்பாவை இழுத்தவன் தலையில் நங்கென்று ஏதோ விழுந்தது. “அம்மா..” எனக்கத்தியவாறு தலையைப்பிடித்துக்கொண்டு உட்கார்ந்து விட்டான். டப்பா விழுந்து மொத்தமும் சிதறியதையும் பையன் தலையைப்பிடித்துக்கொண்டு உட்கார்ந்ததையும் கண்டவள் பதறியடித்து மகனிடம் ஓடி வந்தாள். நல்லவேளையாக ரத்தம் எதுவும் வரவில்லை என உறுதிப்படுத்திக்கொண்டாள். அதற்குள் எலுமிச்சை அளவுக்கு உச்சந்தலையில் புடைத்து வீங்கியிருந்தது. “தேய்ச்சு விட்டுராதே.. ஐஸ் ஒத்தடம் கொடுத்தா சரியாப்போயிரும்” என்றபடி அவனை அழைத்து வந்து ஹாலில் உட்கார வைத்து, துணியில் கட்டிய ஐஸ் துண்டங்களால் ஒத்தடம் கொடுத்தாள்.

களேபரம் கொஞ்சம் ஓய்ந்தபின் அடுக்களைக்குச்சென்று அத்தனையையும் சீராக்கியபோதுதான் அவன் தலையில் விழுந்தது என்னவென்று கண்டாள். இஞ்சி, பூண்டு, ஏலக்காய் போன்றவற்றை இடிப்பதற்காக வைத்திருந்த சின்ன கல்பத்தா சரிந்து கிடந்தது. காலையில்தான் மூத்தவனின் குழந்தை அடுக்களையில் வந்து குறும்பு செய்து கொண்டிருந்தபோது, அவன் காலில் போட்டுக்கொண்டு விடக்கூடாதென அவசரத்தில் கைக்குக்கிடைத்த இடத்தில் அதைச் செருகி வைத்திருந்தாள். இப்போது அதுவே தீம்பாக முடிந்ததையெண்ணி தன்னைத்தானே கடிந்துகொண்டாள். “புள்ளைய ஆஸ்பத்திரிக்குப்போயி வீக்கம் வத்தறதுக்கு ஒரு ஊசியைப்போட்டுட்டு வரச்சொல்லணும். சரியாப்போயிரும்” என எண்ணிக்கொண்டாள்.

ஆனால், அவள் எண்ணியது போல அது சரியாகப்போகவில்லை. அப்போதைக்கு வீக்கம் வற்றி அவர்களும் அதை மறந்து விட்டிருந்தார்கள். ஒரு மாதம் போல் கழிந்திருக்கும். அடிக்கடி தலை வலிக்கிறது என வினோத் சொல்ல ஆரம்பித்தான். விண்விண்ணெனத் தெறிக்கும் வலியோடு தலையைப்பிடித்துக்கொண்டு கண்ணீர் வழிய அமர்ந்திருப்பான். சாத்தியமான எல்லா நோய்க்கூறுகளுக்கும் டாக்டர் பரிந்துரைத்த டெஸ்டுகளையெல்லாம் எடுத்து எல்லாமே நார்மல் என ரிப்போர்ட் வந்தது. எங்கேயோ வெறித்துப்பார்த்துக்கொண்டு வெகு நேரமாய் அவன் அமர்ந்திருப்பது ஆரம்பித்தது. டிவியிலிருந்து ஆட்கள் இறங்கி வந்து தன்னுடன் பேசிக்கொண்டிருந்ததாக அவன் சொன்ன அன்றுதான் குடும்ப மருத்துவர், “நீங்க ஒரு ந்யூராலஜிஸ்டைப் பார்க்கறது நல்லது” என்றார். 

ஆதியோடந்தமாய் அத்தனையையும் கேட்டுக்கொண்ட ந்யூராலஜிஸ்ட், அவர் பங்குக்கு சில டெஸ்டுகளை எடுத்தார். சில விவரங்களை அவனிடமும் குடும்பத்தினரிடமும் தனித்தனியாகக் கேட்க வேண்டுமென்றார். அவனிடம் பேசியபின், “அம்மாவை வரச்சொல்லுங்க, நீங்க வெளிய வெயிட் பண்ணுங்க” என்றார். வெளியே வந்தவன், “அம்மா.. டாக்டர் கேக்கறதுக்கு கவனமா பதில் சொல்லுங்க, இல்லைன்னா எனக்கு ஏதாவது ப்ராப்ளம் இருக்குன்னு நினைச்சுக்கப்போறார்” என்றான்.

“போடா..” என்றுவிட்டு அம்மா உள்ளே சென்றாள்.

அவளிடமும் பேசி விவரங்களை அறிந்து கொண்டபின், “இதோ பாருங்கம்மா, தலைல கனமான பொருள் விழுந்ததால ஒரு சின்ன ரத்தக்கட்டி ஏற்பட்டிருக்கு. மருந்துகளால அதைக் கரைச்சிரலாம். ஒண்ணும் பயப்படாதீங்க. ஆனா அந்தக்கட்டியால ரத்த ஓட்டம் தடைபட்ட பகுதிகள்ல சின்ன பாதிப்பு இருக்குது. ஆண்டவன் அருளால, நினைவாற்றல் பாதிக்கப்படலை, கை கால் இயக்கம் முடங்கலை. ஆனா கொஞ்சம் சித்தப்பிரமை மாதிரி அப்பப்ப ஒரு அஞ்சு பத்து நிமிஷத்துக்கு ஏற்படும். மாயத்தோற்றங்கள் தென்படும். அதால அவருக்கு எது நிஜம்? எது மாயைங்கற குழப்பம் ரொம்பவே இருக்கும். அந்த சமயங்கள்ல அதெல்லாத்தையும் அவர் நம்பறதோட நீங்களும் நம்பணும்ன்னு எதிர்பார்ப்பார். சில சமயம் அந்தக் கனவுலகிலேயே வாழவும் செய்வார். கொஞ்சம் பொறுமையா கையாண்டுதான் இதை சரி செய்யணும். எப்பவுமே குடும்பத்தாரோட ஒத்துழைப்பு இருந்தாதான் எதையும் சரிவர நடத்த முடியும். அதுவும் நீங்க அவரோட அம்மா. இதில் பெரும்பான்மையான பங்கு உங்களோடதாத்தான் இருக்கும். புரிஞ்சுக்குவீங்கன்னு நம்பறேன். மருந்துகள் எழுதித்தரேன், நாளடைவில் சரியாகிரும்” என்றார் மருத்துவர்.

ஆடிப்போயிருந்தாள் கமலம்மாள். ‘தெய்வமே.. என் குழந்தையை காப்பாற்றிக்கொடு, உன் சந்நதிக்கு வரேன் தாயே’ என கண்ணீருடன் வேண்டிக்கொண்டாள். “எல்லாம் சரியாப்போயிரும்” என எல்லோருக்கும் சொல்லிக்கொள்வது போல் தனக்குத்தானேயும் சொல்லிக்கொண்டாள். வினோதின் அண்ணன் தினேஷுக்கு மட்டும் மருத்துவர் சொன்னதை சொல்லி வைத்தாள். ‘மெடிக்கல் லீவ் போடேன்ப்பா.. உடம்பைச் சரியாக்கிட்டு அப்றம் வேலைக்குப் போகலாமில்லே?’ என வினோதைத் தாஜா செய்து லீவ் போட வைத்தாள். பிரமை கூடிவரும் நேரங்களில் பிள்ளை எங்காவது தொலைந்து விடுவானோ அல்லது அவனைப்பற்றி அக்கம் பக்கம் யாராவது வம்பு பேசி அதனால் அவனது பிற்காலத்தில் அமையப்போகும் திருமண வாழ்வுக்குப் பங்கம் வந்துவிடுமோ எனப் பயந்தாள். சிகிச்சையாலும் அவளது அன்பான கவனிப்பாலும் அவனும் கொஞ்சங்கொஞ்சமாகத் தேற ஆரம்பித்திருந்தான்.

மொபைல் கிணுகிணுத்தது… சத்தத்தில் திடுக்கிட்டு விழித்தாள். ‘அடக்கடவுளே.. உட்கார்ந்து கொண்டே தூங்கிட்டேன் போலிருக்கு’ கண்களைத்தேய்த்து விட்டுக்கொண்டவள் சுற்றுமுற்றும் பார்த்தாள். வினோத் படுத்திருந்த இடம் வெறுமையாக இருந்தது. பாத்ரூம் போயிருப்பான் என எண்ணிக்கொண்டவள் மணியைப்பார்த்தாள், மதியம் இரண்டரை ஆகியிருந்தது. “வினோத்.. சாப்பிட வாப்பா. தட்டு வைக்கிறேன்” குரல் கொடுத்து விட்டு அடுக்களையை நோக்கி நகர்ந்தாள். தெருவில் கலவையான குரல்கள் கூச்சலும் குழப்பமுமாய்க் கியாமுயாவெனக் கேட்டுக்கொண்டிருந்தன. நகர்ந்து ஜன்னல் வழியே எட்டிப்பார்த்தாள். அவள் கண்ட காட்சி விசித்திரமாயிருந்தது.

முழு சீருடை அணிந்த ஒரு போலீஸ் அதிகாரியை, சாதாரண லுங்கியும் பனியனும் அணிந்த, பொதுஜனம் போல் தோன்றிய ஒருவன் கைகளைக் கயிற்றால் கட்டி அழைத்துச்சென்று கொண்டிருந்தான். தெருவில் நடமாடிக்கொண்டிருந்தவர்கள் அனைவரும் அதை வேடிக்கை பார்த்தார்களேயன்றி யாரும் அதைத்தடுக்க முயலவில்லை. நடப்பதை வேடிக்கை பார்த்தவாறே வீட்டுக்குள் நுழைந்த தினேஷிடம்,  ‘ஒரு போலீஸை இப்படி நடத்துவது அரசாங்கக்குற்றம் அல்லவா?’ என மருகினாள் கமலம்மாள்.

“ஐயோ அம்மா!.. உங்களுக்கு விஷயமே தெரியாதில்லே. அந்த போலீஸ் யூனிஃபார்ம்ல இருக்கறவன் உண்மைல ஒரு ஃப்ராடு. வாடகைக்கு யூனிஃபார்மை வாங்கிப்போட்டுக்கிட்டு அங்கங்க மிரட்டி காசு பிடுங்கிட்டிருந்தான். அவனை கையும் களவுமா பிடிக்க ஒரு நிஜமான போலீஸ் ஆபீசர் ரொம்ப நாளா மஃப்டில சுத்திட்டிருந்தார். இன்னிக்கு, அவர் கிட்டயே கைவரிசையை காமிச்சிருக்கான். அதான் அந்தக்கையைக்கட்டி இழுத்துட்டுப்போறார். தெருமுனைலதான் போலீஸ் ஜீப் நிக்குது. பாத்துட்டுதான் வரேன்” என்றான் தினேஷ்.

“பல நாள் திருடன் ஒரு நாள் அகப்படுவான்னு சும்மாவா சொல்லியிருக்காங்க! சட்டத்தின் கைகள் நீளமானவை, அதன் பிடியிலேர்ந்து தப்ப முடியுமா. சரி.. அது அதன் கடமையைச்செய்யட்டும், நாம நம்ம கடமையைச்செய்வோம். சாப்பாடு ஆறி அவலாகறதுக்குள்ள மொதல்ல சாப்பிடுவோம்” என்றாள்.

“சட்டத்தோட கைகள் மட்டுமில்லே.. இந்த பொடிப்பயலோட கைகளும் வரவர நீளுது. பாருங்க, எப்படி கிள்ளறான்னு. ஆமா, வெளில என்ன கலாட்டா? ஒரே சத்தமா கேட்டுது?” முகத்தைத்துடைத்த டவலை நாற்காலியின் முதுகில் போட்டு விட்டு அமர்ந்தான் வினோத்.

“அது ஒண்ணுமில்லைப்பா.. சும்மா ஏதோ சத்தம்” வினோதுக்குத்தெரியாமல் அம்மாவுக்கு மட்டும் ‘எதுவும் பேசாதீங்க’ என்பது போல் கண்ணைக்காட்டி ஜாடை செய்தான் தினேஷ். பேசும் வார்த்தைகளில் ஏதாவது ஒன்று கூட வினோதைத் தூண்டுவதாக அமைந்து விடலாம் என்பதால் அவனிடம் சற்றுக் கவனமாகவே பேசுவது வழக்கம்.

மனம் ஒரு விசித்திரமான ஜந்து. அதை ஆற்றுப்படுத்தும் சொற்களையோ செயல்களையோ விட, அதை ஆட்டுவிக்கும் விதமாய் நடப்பவற்றையே அது மனமுவந்து ஏற்றுக்கொள்கிறது. இறுகப்பற்றிக்கொள்கிறது, மிட்டாயைக் கொடுக்க மறுக்கும் குழந்தையாய் நம்முடைய சமாதானச்சொற்களைக் காதிலேயே வாங்கிக்கொள்ளாமல் அலறி அழுகிறது. அதன் போக்கிலேயே விட்டுத்தான் அதை வசப்படுத்த வேண்டும். கடைசிச்சந்திப்பின்போது மருத்துவர் சொல்லியிருந்தது நினைவில் மோத ‘வினோதின் மனமும் விரைவிலேயே அவன் வசப்படும். என் குழந்தையும் மற்றவர்களைப்போல் நன்றாக வாழ்வான்.. வாழ வேண்டும்’ என அந்தத்தாயுள்ளம் பிரார்த்தித்தபடி பூஜையறை இருக்கும் திசை நோக்கி கை கூப்பியது.

டிஸ்கி: கதையைப் பிரசுரித்த பண்புடன் மின்னிதழுக்கு நன்றி.

Monday, 15 April 2013

வாங்க.... ரசிக்கலாம் (பண்புடன் இதழில் வெளியானது)


“ஹைய்யோ.. என்னமா ஜொலிக்குது இந்த நட்சத்திரங்களெல்லாம்”.. பயணத்தின்போது கார் ஜன்னல் வழியே வானத்தை எட்டிப்பார்த்த பையர் ஆச்சரியத்துடன் கூச்சலிட்டார். டிட்வாலா போய் சனிக்கிழமை சதுர்த்தியும் அதுவுமாக பிள்ளையாரைத் தரிசனம் செய்து விட்டு நல்ல இருட்டில் திரும்பிக்கொண்டிருந்தோம்.

சட்டென அப்படியே பதினெட்டு வருடங்கள் பின்னால் சென்று விட்டாற்போன்ற குதூகலம் பையர் குரலில் தொனித்தது. “வீட்டுல பால்கனியில் நின்னாக்கூட நட்சத்திரம் பார்க்கலாம்ப்பா” என்று சொன்னேன். “ஆனா, இந்த அளவுக்குத் தெளிவாத்தெரியாதும்மா. நகரத்துல ஒளி மாசு அதிகமா இருக்குது, அதோட வீரியத்தால வானத்துல இருக்கற நட்சத்திரங்கள் தெளிவாத் தெரியறதில்லைன்னு எங்கியோ வாசிச்சேன். ஆனா, இது காட்டுப்பாதையா இருக்கறதால மினுக் மினுக்ன்னு மின்னுறது நல்லாவே தெரியுது” என்று ஆச்சரியம் அகலாமல் சொல்லிக்கொண்டிருந்தார்.உண்மைதான், கருகருவென்ற வெல்வெட்டில் வெண்முத்துகளையும் வைரங்களையும் சிதறி விட்டிருந்தாற்போல் சோகையாகவும் பளீரென்றும் டாலடித்துக் கொண்டிருந்தன விண்மீன்கள்.

“இந்த மாதிரி அழகான இருட்டுல நட்சத்திரங்களைப்பார்த்து எவ்ளோ காலமாச்சு!!..” தன்னை மறந்து லயித்துச் சொல்லிக்கொண்டிருந்தார்.

“ம்.. அதான் தெனமும் பார்க்கறோமே..” என்று கொக்கி போட்டேன்.

“இல்லைம்மா,.. ராத்திரியில் கரண்டு போகணும். அந்த இருட்டுல வானத்துல தெரியுற நட்சத்திரம் பார்க்கணும். எவ்ளோ அழகா இருக்கும் தெரியுமா?.. ஒருக்கா,.. ஆச்சி வீட்டுக்குப் போயிருந்தப்ப ராத்திரி லைட்டு போயிருச்சு. அப்ப முத்தத்துல(முற்றத்தைத்தான் அப்படிச் சொல்கிறார் :-))) கட்டில் போட்டுப்படுத்துக்கிட்டு மேல வானத்துல தெரிஞ்ச நட்சத்திரத்தைப் பார்த்துக்கிட்டே இருந்தோம். எவ்ளோ நல்லா இருந்துச்சு தெரியுமா?” என்று சொல்லிக்கொண்டிருக்கும்போதே அந்த நாட்களுக்குள் நுழைந்து விட்டது புரிந்தது.

“அப்படியா?.. எப்போ பார்த்தோம்” என்றேன்.

“அப்ப நான் நாலாம் வகுப்பு படிச்சிட்டிருந்தேன். அதுக்கப்புறம் இன்னிக்கு மாதிரி ரசிச்சுப் பார்த்ததேயில்லை. அதென்னவோ,.. தோணவேயில்லை” என்றார். நான் கடைசியாக எப்பொழுது நட்சத்திரங்களை அவற்றுக்காகவே பார்த்தேன் என்று யோசிக்க ஆரம்பித்தேன்.

காலேஜ் படிக்கும்போது விடியற்காலையில் எழுந்து படிக்கும்போது (நம்புங்கப்பா.. :-)) முற்றத்தை அடுத்திருக்கும் முன்னறையின் மேற்கூரை மட்டத்தில் விடிவெள்ளி இருக்கும். கொஞ்ச நேரம் அதைப்பார்த்தபடியே கிடந்து விட்டு மெதுவாக எழுந்திருப்பேன். அதைத்தவிரவும் எனக்கு மிகவும் பிரியமான நட்சத்திரக்கொத்து ஒன்றும் உண்டு. அதற்கு கரடித்தலை என்றே பெயர் சூட்டியிருந்தேன். (அதன் உண்மையான பெயர் orion the hunter) அறுபது அல்லது எழுபது டிகிரி கோணத்தில் ஒரே நேர்கோட்டில் மூன்று நட்சத்திரங்கள் இருக்கும். பூமியின் சுழற்சியைப் பொறுத்து பாகையளவு மாறும். அதன் இடப்பக்கம் இந்தப்பக்கம் ஒன்றும் அந்தப்பக்கம் ஒன்றுமாக இரண்டு நட்சத்திரங்கள், அதில் ஒன்று இந்தக் கரடித்தலையிலிருக்கும் கண் மாதிரியே இருக்கும். நேரம் போவதே தெரியாமல் அதை ரசித்துக் கொண்டிருப்பது எனக்கு மிகவும் பிடித்த பொழுதுபோக்கு. ஆனால் இந்த ரசிப்பும், பொழுதுபோக்கும் ஏதோவொரு புள்ளியில் என்னையறியாமலேயே நின்று போயிருந்திருக்கின்றன. பையருடன் பேசிக்கொண்டிருக்கும்போதுதான் இதை உணர்ந்து ‘ஞே’வென விழிக்க ஆரம்பித்தேன்.

வாழ்க்கையில் இப்படித்தான்,.. ஒவ்வொரு அழகான விஷயங்களையும் கண்ணலக ஆச்சரியத்துடன் பார்த்து ரசித்துக்கொண்டு நம் விரல் பிடித்து நடந்து கொண்டிருந்த சிறு குழந்தை எப்போது விலகிச்சென்றது என்பதை அறியாமலேயே இருந்து விடுகிறோம். மாறுதல்களுக்கேற்ப மாறித்தானே ஆக வேண்டும் என்ற நியதிக்கேற்ப நாமென்னவோ பெரியவர்களாகி விடுகிறோம். ஆனால், நாம் விட்டு விட்டு வந்த அந்தக் குழந்தை நம் வரவை நோக்கி அங்கேயே நின்று கொண்டுதான் இருக்கும். சரியான சமயத்தில் அதைக் கண்டு கொண்டால் உதடு பிதுங்க, முகம் அழுகையில் கோணியபடி, கண்ணீர் நதிகள் பெருக்கெடுக்க ஓடி வந்து நம்மைக் கட்டிக்கொள்ளும். அந்தச் சிறுகுழந்தை வேறு யாருமல்ல. நம்முள் ஒளிந்து கொண்டிருக்கும் குழந்தை மனம்தான். நாம் பெரியவர்கள் ஆனாலென்ன?. அந்தக் குழந்தையும் அதன் பாட்டிற்கு ஒரு ஓரமாய் வந்து கொண்டிருக்கட்டுமே.

நாமெல்லோருமே ஒரு குறிப்பிட்ட வயது வரை, கேள்விக்குறி போல் வளைந்த நாயின் வால், பொன்வண்டின் முதுகில் மினுங்கும் வண்ணங்கள், மழையில் குளித்த ரோஜாக்கள் என்று ஒவ்வொரு விஷயத்தையும் ரசித்திருப்போம். மழை பெய்யும்போது வேண்டுமென்றே தொப்பலாக நனைவதும், நீர் தேங்கியிருக்கும் சின்னப்பள்ளங்களில் தபாலென்று குதித்து மற்றவர்களை நனைப்பது அல்லது வழிந்து சொட்டும் மழை நீரை உள்ளங்கையில் நிறைத்து நண்பர்களின் முகத்தை நனைப்பதுமாக   இருந்திருப்போம். ஆனால், ஒரு குறிப்பிட்ட கட்டத்தில் “சனியன் பிடித்த மழை” என்று திட்டத்தொடங்குவது ஆரம்பித்து விடுகிறது.

காரணங்கள் சுலபமானவை.. சிறு குழந்தைகளாக இருந்தவரைக்கும் கவலைகள் இல்லை, பொறுப்புகள் இல்லை… இந்தக்காலத்திய குழந்தைகளானாலும் கூட. அதுவே,.. வளர வளர எதிர்காலம் பற்றிய பயம், காத்திருக்கும் பொறுப்புகள் போன்றவை நம் மனதை ஆக்கிரமிக்கின்றன. குருவிகளின் கீச்.. கீச் போன்ற ரசித்த விஷயங்கள் இப்போது எரிச்சலூட்டுகின்றன அல்லது அமைதியாகக்கடந்து செல்கின்றன. கொஞ்சம் கொஞ்சமாக சிடுமூஞ்சிகளாகவோ இயந்திரங்களாகவோ மாறி விடுகின்றோம். மனதை இளமையாகவும் உற்சாகமாகவும் வைத்திருந்தால் இதைத்தவிர்க்கலாம். ‘அதற்காக எப்பொழுதுமே விளையாட்டுப்பிள்ளையாக இருக்க முடியுமா?’ என்ற கேள்வி எழலாம். எப்பொழுதும் இல்லாவிட்டாலும் சில சந்தர்ப்பங்களிலாவது நம் மனதை விளையாட்டுப்பிள்ளையாக இருக்க விடுதல் நல்லதே. இறுக்கங்கள் விலகி பழையபடி உற்சாகமாகி விடலாம்.

இந்த விஷயத்தில் பெண்களிடம் கவனித்த ஒரு சில விஷயங்களைப் பற்றிச் சொல்ல வேண்டுமென்று தோன்றுகிறது. ஒரு குறிப்பிட்ட வயது வரைக்கும் புடவை, பூ, லேசான மேக்கப், உடற்பயிற்சி என்று ரசனையுடன் பளிச்சென இருக்கும் நாம் ஏன் ஒரு குறிப்பிட்ட காலம் குறிப்பாகக் குழந்தைகள் பிறந்தபின் நம்மைக் கவனித்துக்கொள்வதில்லை? இனிமேல் என்ன வேண்டியிருக்கிறது என்று இழுத்துச் சொருகிய புடவை, அல்லது கசங்கிய நைட்டி, அள்ளி முடிந்த கூந்தல் என்று ஏனோதானோவென்று இருக்க ஆரம்பித்து விடுகிறோம். எங்கேயாவது வெளியே செல்ல வேண்டுமென்றால் மட்டுமே அலங்காரங்கள். சில இடங்களில் ஊர் வாய்க்குப் பயந்து கொண்டும் அப்படி இருப்பதுண்டு. எங்கள் கன்னியாகுமரி மாவட்டத்தில் மகள் பெரிய பெண்ணாக ஆனபின் தாய் பின்னலிட்டுக்கொள்வதில்லை. அப்படியே பின்னிக்கொண்டாலும் அதைச் சுருட்டிக் கொண்டையாக இட்டுக் கொள்வதைக் கண்டிருக்கிறேன். அதுவே மும்பையில் வயதானவர்கள் கூட காலையில் எழுந்ததுமே குளித்துப் ப்ரெஷ்ஷாகி சுத்தமான ஆடையணிந்து ஏதோ அந்த நிமிடம் வெளியே செல்லத் தயாராக இருப்பதைப்போல காட்சியளிப்பதையும் கண்டிருக்கிறேன்.வாழ்க்கையின் ஒவ்வொரு நிமிடத்தையும் ரசித்து வாழ்கிறார்களோ என்று சில சமயம் தோன்றும்.

எப்பொழுதுமே சில விஷயங்களை சீரியஸாய்ப் பார்க்காமல் சிரியஸாகவும் பார்ப்பது நல்லது. கவலைகள், துக்கங்கள் எல்லாம் வாழ்க்கையில் அது பாட்டிற்கு ஒரு ஓரத்தில் ஊறுகாய் மாதிரி இருந்து கொண்டிருக்கட்டுமே. கன்னத்தில் கை வைத்து உட்கார்ந்து விட்டால் மட்டும் சரியாகி விடுமா என்ன?. ஊறுகாய் ருசியில்லை என்று கவலைப்பட்டுக்கொண்டிருந்தால் பாயசத்தின் ருசியை அனுபவிப்பது எப்படி?. ‘அடடா!!.. உளுந்த வடையில் ஓட்டை போடாமல் இருந்திருந்தால் கூடுதலாக இன்னும் ஒரு விள்ளல் வடை கிடைத்திருக்குமே’ என்று கவலைப்படுவதை விட ‘அடடா!!. டோநட் தயாரிக்கிறதுக்கு நம்ம இந்தியர்கள்தான் ரோல் மாடல்களா இருந்திருக்காங்க” என்று பெருமையுடன் இன்னொரு ப்ளேட் வடை சாம்பாரை உள்ளே தள்ளுவது மேலல்லவா?..  ரசனையை முற்றிலும் தொலைத்து விடாத நம் மனக்குழந்தை செய்யும் மாயாஜாலமும் இதுதான். வாழ்க்கையில் சின்னச்சின்ன விஷயங்களை ரசிப்பவர்கள் தானும் மகிழ்ச்சியாக இருப்பதுடன் தன்னைச் சேர்ந்தவர்களையும் மகிழ்விப்பார்கள்.

டிஸ்கி: வெளியிட்ட பண்புடன்  மின்னிதழுக்கு நன்றி.

LinkWithin

Related Posts with Thumbnails