அமுதசுரபி மாத இதழில் வாசகர் அயன்புரம் த. சத்தியநாராயணன் அவர்களின் கருத்தின்படி நூற்றாண்டு நாயகர் கவியரசு கண்ணதாசனைப்பற்றி வெண்பாப்போட்டி அறிவிக்கப்பட்டிருந்தது. அந்தப்போட்டிக்காக நான் எழுதிய வெண்பாவும் தேர்வாகி பிரசுரமாகியிருக்கிறது.
தேர்வாகிப் பிரசுரமான வெண்பாவைத்தவிர, நான் எழுதிய மேலும் சில வெண்பாக்கள் இங்கே உங்கள் பார்வைக்கு:
காலத்தை வென்றாய் கவிஞனே நின்னெழுத்து
ஞாலத்து மாந்தர்க்கு ஞானமாம் - சீலமுறும்
கண்ணதா சாநின் கவிதையெனும் காரமுதம்
விண்ணோரும் மாந்துவர் வந்து.
பொன்னேபோல் வார்த்தைகளைப் பாட்டில் பொழிந்துலகில்
கன்னலாய்த் தந்த கவிஞனே - சொன்னதெலாம்
இன்னமுதத் தீந்தமிழ் இன்பமூட்டும் என்றுமே
நின்கவிதான் என்றும் நிலை
வாழ்வின் நெறியினை வான்புகழும் பாவாக்கித்
தாழ்வின்றித் தந்த தவமணியே - ஆழ்ந்ததமிழ்
மெய்ப்பொருளைப் பாட்டில் மறைத்துமிகத் தந்தாயே
பொய்யாது பெற்றாய் புகழ்
தெள்ளமுதத் தேன்பாகைத் தென்றல் இசையோடு
அள்ளிக் கொடுத்தாய் அரியகவி - கள்ளாய்
திரையுலகில் நீயமைத்த தீந்தமிழ்ப் பாட்டு
கரையாது நெஞ்சிலே காண்

2 comments:
அயன்புரம் த. சத்தியநாராயணன்.. பழம்பெரும் பத்திரிகை கடித எழுத்தாளர்!! பிரசுரத்தேர்வுக்கு வாழ்த்துகளும், பாராட்டுகளும்.
வாங்க ஸ்ரீராம்,
அவரேதான். 'அந்நியன் படத்தில் கூட ப்ரகாஷ்ராஜ் இவரது பெயரை ஒரு காட்சியில் தாங்கி நடித்திருப்பார், நினைவிருக்கிறதா? :)
வாழ்த்துகளுக்கு நன்றி.
Post a Comment