Saturday 3 October 2015

உலர்பழ ஷீரா சாப்பிடலாம்..

ஷீராவுக்குத் துணையாக கொழுக்கட்டையும் மோதகமும்.
‘சற்றே ரவையை எடும் பிள்ளாய்.. பாந்தமாய் அதனை நெய்யில் வறுத்து, பாலும் சீனியும் சேர்த்துக்கிளறி, இன்னபிறவும்  கலந்தால் கிடைப்பது ட்ரைஃப்ரூட் ஷீரா தாமே’ என்று அடுக்களைச்சித்தர் அருளிச்செய்தபடி ஆக்கப்பட்டதே இந்த உலர்பழ ஷீரா. நம்மூர் சர்க்கரைப்பொங்கலைப்போல் வடக்கில் நல்ல நாட்களிலும் பண்டிகை சமயங்களிலும் "ஷீரா பூரி" இறைவனுக்குப் பிரசாதமாகப் படைக்கப்படுகிறது. பிள்ளையார் சதுர்த்தி தொடங்கி தீபாவளி வரைக்கும் கடைகளில் உலர்பழங்கள் அதிகமாகவும் மலிவாகவும் கிடைப்பதால் இங்கெல்லாம் அடிக்கடி செய்யப்படும் இந்த அயிட்டம், திருமண நாள் மற்றும் பிறந்தநாட்களில் நடக்கும் சிறப்பு விருந்துச் சமையலிலும் முக்கிய இடம் வகிக்கிறது. அசப்பில் நம்மூர் கேசரியை நினைவுபடுத்தினாலும் செய்யும் முறை மற்றும் சேர்க்கப்படும் பொருட்களால் இதற்கு அரச அந்தஸ்து கொடுக்கப்பட்டிருக்கிறது. ஆப்பிள், வாழை போன்ற புத்தம்புதுப் பழங்களை சேர்த்தும் ஷீரா செய்யப்படுகிறது எனினும் உலர்பழ ஷீராவின் சுவை அட்டகாசமானது. 

தேவையானவை:

ரவை – 1 பங்கு

நெய் – முக்கால் பங்கு

உலர்பழங்கள் (முந்திரி, கிஸ்மிஸ், பாதாம், சாரப்பருப்பு, பூசணி அல்லது வெள்ளரி விதை, அக்ரோட் எல்லாம் கலந்த கலவை) – 1 பங்கு. இவற்றில் பிஸ்தா அதன் மெலிதான கசப்புச்சுவை காரணமாக கண்டிப்பாகத் தவிர்க்கப்பட வேண்டும். 

பால் – 1 பங்கு

சர்க்கரை – 1 பங்கு (இனிப்புப்பிரியர்கள் சற்று அதிகம் சேர்த்துக்கொள்ள அனுமதி வழங்கப்படுகிறது)

ஏலக்காய் – 4. தோலை உரித்து உள்ளிருக்கும் விதைகளைப் பொடித்து வைத்த பின் தோலை தேயிலைத்தூள் டப்பாவில் போட்டு வைத்துக்கொண்டால் விரும்பும்போது வாசனையான ஏலக்காய் தேநீர் தயாரிக்கலாம். அப்படியில்லாமல் தோலுடன் பொடித்துக்கொள்ள விரும்பினால் அப்படியே செய்யலாம்.

இவற்றுடன் அடி கனமான வாணலியையும் பொறுமையையும் சேகரித்துக்கொள்ளவும்.

ஷீரா செய்யவிருக்கும் வாணலியில் இரண்டு ஸ்பூன் நெய்யைச் சூடாக்கி கிஸ்மிஸ் நீங்கலான உலர்பழங்களை மிதமான தீயில் வறுத்து, நெய்யிலிருந்து வடித்து எடுத்துத் தனியாக வைத்து ஆற விடவும். ஆறியபின் அவற்றைக் கத்தியால் பொடிப்பொடியாக நறுக்கிக்கொள்ளவும். எக்காரணம் கொண்டும் மிக்ஸியின் உதவியை இதற்கு நாடக்கூடாது. 

ஒரு பாத்திரத்தில் பாலையும் சர்க்கரையையும் கலந்து மிதமான தீயில் கொதிக்க விடவும். அதே நேரத்தில் நாம் ஷீரா செய்யும் நற்பணியை இன்னொரு அடுப்பில் தொடரலாம். உலர்பழங்கள் வறுக்கப்பட்ட வாணலியில் இருக்கும் நெய்யுடன் மீதமிருக்கும் நெய்யைச் சேர்த்துச் சூடாக்கவும். இதனால் நெய்யில் இறங்கியிருக்கும் உலர்பழங்களின் சாரம் வீணாகாமல் ஷீராவுடன் இரண்டறக்கலந்து மேலும் சுவை கூட்டும். 

இதில் ரவையை இட்டு மெல்லிய தீயில் கருகாமலும் சிவக்காமலும் வறுக்கவும். ரவை வறுபட்ட வாசனை வந்ததும் உடைத்து வைத்திருக்கும் உலர்பழக்கலவையையும் ஏலக்காய்ப்பொடியையும் சேர்த்து நன்கு கிளறவும். சுமார் இருபது நிமிடங்களுக்கு கிளறப்பட்ட ரவைக்கலவையில் நெய் மேலாக மிதந்து வர ஆரம்பிக்கும். சப்பாஷ்.. இதுவே சரியான சந்தர்ப்பம். அதை வீணாக்காமல் கொதித்துக்கொண்டிருக்கும் பாலை கால் கப் அளவில் எடுத்து ரவைக்கலவையில் சேர்த்து கை விடாமல் கிளறவும். 

பிள்ளையார் மட்டுந்தான் பால் குடிப்பாரா என்ன?. நம் ஷீராவும் அத்தனை பாலையும் உறிஞ்சி விட்டு உதிரி உதிரியாகும். மறுபடியும் கால் கப் பாலை அதன் தலையில் ஊற்றிக்கிளறவும். இப்படியே எல்லாப்பாலையும் கொஞ்சம் கொஞ்சமாகச் சேர்த்துக்கிளறவும். ஒவ்வொரு தடவை உதிரியாகும்போதும் ரவைக்கலவையில் நெய் பிரிந்து வரும். அதுவே பாலைச் சேர்க்க வேண்டிய பதமான நேரம் எனக்கொள்க. இத்தனை பணிவிடைகளுக்கிடையிலும் சர்க்கரை முறுகி விடாமல் ஒரு கண் வைத்துக்கொள்ள வேண்டும். அதே போல் அடுப்பையும் இறுதி வரை மெல்லிய தீயிலேயே எரிய விட வேண்டும். வறுக்கும்போது வெளுப்பாகவே இருக்கும் ரவையானது பாலைச் சேர்க்கச்சேர்க்க நிறம் கொஞ்சம் கொஞ்சமாக மாறி லேசான பொன்னிறத்துக்கு வர ஆரம்பிக்கும்.

எல்லாப்பாலையும் சேர்த்தபின் இறுதியாக நெய் மேலாக மிதந்து வரும் பொழுதில் அடுப்பை அணைத்து விட்டு கிஸ்மிஸை மேலாகத்தூவி மூடி விடவும். இச்சமயத்தில் பார்ப்பதற்கு ஷீரா “ரவை பாயசம்” போல் மாயத்தோற்றம் காட்டும். ஆனால், ஆறி அறை வெப்பநிலைக்கு வந்தபின் இறுகி உப்புமாவுக்கும் கேசரிக்கும் இடைப்பட்ட பதத்திற்கு வந்து விடும். இப்பொழுது அடிமேலாகக் கிளறி வைத்து பகவானுக்குக் கை காண்பித்தபின் இரண்டு மூன்று நாட்கள் வரை வைத்திருந்து உண்ணலாம், கெட்டுப்போகாது. விரும்பினால் குளிர்சாதனப்பெட்டியில் வைத்தும் உபயோகிக்கலாம்.

தீபாவளிக்கு பரிசாகக்கொடுக்கப்படும் உலர்பழங்களைத் தீர்த்துக்கட்ட இது சிறந்த வழி. எல்லாவற்றுக்கும் மேலாக உலர்பழங்களை விரும்பாத குழந்தைகளுக்கு ஊட்டச்சத்தை உடம்பில் சேர்க்க ஏற்றதொரு அருமையான வித்தை :-). ஆதலினால் ஷீரா செய்வீர்.

வால்: சமீபத்திய பிள்ளையார் சதுர்த்தியின்போது மகள் தன் கையால் நைவேத்தியத்திற்காக தயார் செய்தது இந்த ஷீரா. மோதகமும் அம்மணியின் கைவண்ணமே :-)

LinkWithin

Related Posts with Thumbnails