Friday, 25 May 2012

தந்திரங்களாலும் நிறைஞ்சது இவ்வுலகம் :-)

“வாங்க,.. குர்த்தியா?.. டாப்ஸா?.. என்ன மாதிரி வேணும்?”

“குர்த்தி பார்க்கறோமே”

“இதெல்லாம் லேட்டஸ்ட்டா வந்தது”ன்னு சொல்லியபடியே ஒவ்வொண்ணா எடுத்து அதோட அருமை பெருமைகளை விவரிச்சுட்டிருந்தார் விற்பனைப்பிரிவில் நின்னுட்டிருந்தவர்.

வழக்கமா போற இடம்ங்கறதால அவரே ஸ்லீவ்லெஸ்ஸை தவிர்த்துட்டு, கொஞ்சம் நீளமான குர்த்திகளா எடுத்துப் போட்டுக்கிட்டிருக்கார். அதுல பிடிச்சிருந்த நாலஞ்சை தனியா எடுத்து வெச்சுட்டு, “போதும்,.. மேற்கொண்டு எடுத்துப்போடாதீங்க”ன்னு சொல்லிட்டு, தனியா எடுத்து வெச்சதெல்லாம் அளவு சரியாயிருக்கான்னு போட்டுப்பார்க்கறதுக்காக ட்ரையல் ரூமுக்குக் கொண்டு போயிட்டா பொண்ணு. ஒவ்வொண்ணா போட்டுக்கிட்டு ஒரு நிமிஷம் வெளியே வந்து எங்கிட்ட ட்ரெஸ்ஸை காமிப்பாங்க. நல்லாருக்கா இல்லையான்னு சொல்ல வேண்டிய பொறுப்ஸ் அம்மாவுக்கான கடமையை ஆத்தறதுக்காக நானும் கூடவே போய் வெளியே நின்னுட்டிருந்தேன்.

இணையத்துல சுட்ட படம்..
“அந்த மேல் தட்டுல இருக்கற டாப்ஸை எடுத்துப்போடுங்க” என்ற குரல் கேட்டுத் திரும்புனேன். இருபதாம் பிறந்த நாளைக் கொண்டாட எப்படியும் இன்னும் ரெண்டு மூணு வருஷமாவது ஆகும்ன்னு நினைக்க வைக்கிற வகையில் ரெண்டு யுவதிகள் நின்னுட்டிருந்தாங்க.

கடையிலிருந்த  விற்பனையாளர் சலிக்காம அவங்க கேட்டதையெல்லாம் எடுத்துப் போட்டுட்டிருந்தார். இப்ப லேட்டஸ்ட்டா என்ன டிசைன் மார்க்கெட்டுல சூடு பிடிச்சுருக்கு?.. என்ன மாதிரியான ஸ்லீவுக்கு இப்ப பொண்ணுங்க மத்தியில் வரவேற்பு இருக்கு? நீளக்கையா, குட்டைக்கையா? பார்ட்டி வேரில் புதுசா என்ன வந்துருக்குன்னு எல்லாம் அலசிட்டு இருந்தாங்க. கூடவே விலை விசாரிப்பும் நடந்துட்டிருந்தது.

ஒவ்வொண்ணாப் பார்த்துட்டு பிடிச்சிருந்த அயிட்டங்களெல்லாம் ஓரம் கட்டப்பட்டன. அதெல்லாம் நிதானமா ஆராய்ஞ்சு அலசி, ட்ரையல் ரூம்ல போய்ப் போட்டுப்பார்த்துட்டு, முடிவு செய்யப்பட வேண்டியவை. வந்திருந்த ரெண்டு பெண்களில் ஒருத்தி அதையெல்லாம் எடுத்துக்கிட்டு இன்னொரு ட்ரையல் ரூமுக்குப் போய்விட, இன்னொருத்தி மொபைலில் மூழ்கி முத்தெடுக்க ஆரம்பிச்சா.

இப்படியே கொஞ்ச நேரம் போயிருக்கும்.. எல்லா டாப்ஸையும் போட்டுப்பார்த்துட்டு வெளியே வந்த யுவதி நம்பர் ஒன் அத்தனையையும் அள்ளிட்டு வந்து டேபிளின் மேல் வைக்கவும், அவளோட மொபைல் அலறியது. எடுத்துப் பேசினவ, “அப்படியா?. இதோ,.. இப்ப வந்துடறோம்”ன்னு சொல்லிட்டு தோழியைக் கூட்டிட்டு திரும்பிப்பார்க்காம வெளியே கிளம்பிப்போயிட்டா. எடுத்துப்போட்ட துணிகள் வேணுமா வேண்டாமான்னு கூட விற்பனையாளர் கிட்ட சொல்லிக்கலை.

அவரும் ஒண்ணும் கண்டுக்கலை. அம்பாரமாக் குவிஞ்சுருந்த துணிகளை மத்த பிரிவுகள்ல சும்மா நின்னுட்டிருந்த ரெண்டு பேரைத் துணைக்கு வெச்சுக்கிட்டு பரபரன்னு சுறுசுறுப்பா மடிச்சு வைக்க ஆரம்பிச்சுட்டார். பாவமாத்தான் இருந்தது. ஒரு நிமிஷத்துக்கு “அங்காடித்தெரு” படத்தோட காட்சிகள் கண்ணு முன்னாடி வந்துட்டுப்போச்சு.

இப்போ மால்களிலிருக்கும் தியேட்டர்களில் படம் பார்க்கப் போறச்சே, படத்துக்கு இன்னும் நிறைய டைம் இருக்குன்னு தெரிஞ்சா அது வரைக்கும் பொழுதைப்போக்கறதுக்காக அங்கிருக்கற கடைகள்ல நுழைஞ்சு எதையோ வாங்கற மாதிரி கொஞ்ச நேரம் போக்குக்காட்டி நேரம் போக்குவோமில்லையா,.. அதைத்தான் இதுங்க இங்கே செஞ்சுருக்குதுங்க. 

ஏதாவது வேலையா ஒரு இடத்துல ஒண்ணு கூடறதா பேசி வெச்சுருக்கும் ஃப்ரெண்ட்ஸ்களில் யாராவது சீக்கிரம் வந்துட்டா மத்தவங்க வர்ற வரைக்கும் ரோட்டுல வெட்டு வெட்டுன்னு காத்திருக்காம இப்படி துணிக்கடைகள்ல நுழைஞ்சு பொழுதைப்போக்கறது ஒரு தந்திரம். டைம்பாஸும் ஆச்சு,.. மார்க்கெட்ல என்ன புதுசா வந்துருக்குன்னும் தெரிஞ்சுக்கலாம். டைம் ஆனதும் வெளியே இருந்து போன் கால் வரும்,.. இல்லைன்னா, வந்துருக்கும் தோழிகளில் ஒருத்தி நைசா தன்னோட மொபைல்ல இருந்து கால் பண்ணுவா. அப்புறமென்ன, வெளியே இருந்து போன் வந்த மாதிரி சீன் போட்டுக்கிட்டே நழுவிடறதுதான்.

கடைக்காரங்களுக்கும் இவங்க தந்திரம் நல்லாவே தெரியும். வந்திருக்கறவங்க உண்மையிலேயே ஜவுளி எடுக்க வந்துருக்காங்களா, இல்லை சும்மா நேரம் போக்க வந்துருக்காங்களான்னு கொஞ்ச நேரத்துலயே அவங்களுக்குப் பிடிபட்டுப்போகும். ஆனாலும் வந்துருக்கறவங்க கேட்ட எல்லாத் துணிகளையும் முகம் சுளிக்காம எடுத்துப் போடுவாங்க. 

இங்கே இப்படி வந்துட்டுப் போறவங்களுக்கு கட்டாயம் ஏதாவதொரு அயிட்டம் பிடிச்சுப்போகும். அதை வாங்கறதுக்காக மறுபடியும் கண்டிப்பா வருவாங்க. கூடவே தோழிப்பட்டாளமும் வரும், அவங்களுக்கான ஷாப்பிங்கும் நடக்கும்ன்னு சொல்லணுமா என்ன?.. இது சின்ன மீனைப்போட்டு பெரிய மீனைப்பிடிக்கற  கடைக்காரங்களோட தந்திரம். அதனால போகட்டும் போன்னு விட்டுருவாங்க. இருந்தாலும் கலைச்சுப்போட்ட அத்தனைத் துணிகளையும் மறுபடி அழகா மடிச்சு வைக்கறதைப் பார்க்கறப்ப பாவமாத்தான் இருக்கு. அதுக்காகத்தான் அவங்களுக்குச் சம்பளம் கொடுக்கறாங்கன்னு மனச்சமாதானமானாலும்..

Wednesday, 23 May 2012

பெங்களூர் விஜயமும் சந்திப்பும் - 2


பெங்களூரில் நம்ம மக்கள் நிறையப்பேர் இருந்தாலும் எல்லோரையும் சந்திக்க நேரம் வாய்க்கலைன்னாலும் ஒண்ணு ரெண்டு பேரையாவது சந்திக்காம போக மனசு வரலைன்னு சொன்னேன் இல்லையா. பெங்களூர்ன்னா மொதல்ல ஞாபகத்துக்கு நம்ம ராமலக்ஷ்மிதான் வராங்க.:-) இருக்கும் அவகாசத்தில் மினி சந்திப்பாகவாவது இருக்கட்டுமேன்னு நினைச்சு ராமலக்ஷ்மியிடம் பேசினேன்.

வல்லமை மின்னிதழோட நிறுவனர் அண்ணா கண்ணன், தமிழில் புகைப்படக்கலையைக் கற்றுத்தரும் ஆசிரியர்களில் ஒருவரான ஜீவ்ஸ் என்ற ஐயப்பன் கிருஷ்ணன், அப்றம் “நிசப்தம்” என்ற வலைப்பூவை எழுதி வரும் வா.மணிகண்டன் இவங்களோட பணியிடங்கள் ஒரே வளாகத்தில் இருப்பதால் அங்கியே சந்திப்பை வெச்சுக்கலாம்ன்னு நேரமும் குறிச்சோம்.
ஞாபகார்த்தம்.. :-)
சந்திப்பு அன்னிக்கு எதேச்சையா மெயில் செக் செஞ்சப்பத்தான், லால்பாகிலும் சந்திக்கலாம்ன்னு கொடுத்திருந்த ஆலோசனை கண்ணுல தட்டுப்பட்டுச்சு. ஆஹா!!.. வட போச்சே.. அங்கே போயிருந்தா நிறையப் படங்கள் சுட்டுக்கிட்டு வந்துருக்கலாம். நிறைய டிப்ஸ் கிடைச்சுருக்கும். இப்படியொரு அரிய சந்தர்ப்பம் இனிமே எப்ப வாய்க்கப் போகுதுன்னு தெரியலை :-)

தம்பி துணையாய் வர அன்னிக்குச் சாயந்திரம் கிளம்பினேன். இடத்தைக் கண்டுபிடிக்கச் சிரமப்படலை. ரிசப்ஷனில் இன்னாரைப்பார்க்கணும்ன்னு சொன்னதும் ரிஜிஸ்டரில் விவரங்கள் பதியச்சொல்லி விசிட்டர்ஸ் பாஸ் கொடுத்தாங்க. வாங்கிட்டு காத்திருக்கும்போது ஜீவ்ஸ் வந்தார். அவரோட ஃப்ளிக்கர் தளத்திலும், சமீபத்துல “பிட்”டிலும் புகைப்படத்தைப் பார்த்திருந்ததால் கண்டுபிடிக்கச் சிரமப்படலை. உணவகத்தில் போய் செட்டிலானதும் அரட்டை ஆரம்பம்.. 

வல்லமையின் சார்பாக புகைப்படக்குழுமம் ஒண்ணைத்தொடங்கலாம்ன்னு ஆலோசனை சொல்லி அதுக்கு என்னைப் பொறுப்பாளரா நியமிக்கப் பரிந்துரைத்த சகோதரர் ஜீவ்ஸுக்கு பெங்களூரில் வெச்சுச் சொன்னது மட்டுமன்றி இங்கேயும் நன்றி சொல்லிக்கக் கடமைப்பட்டிருக்கேன். கூடவே என்னை நம்பிப் பொறுப்பை ஒப்படைச்ச அண்ணா கண்ணனுக்கும் நன்றி சொல்லிக்கிறேன் :-)

காமிராக் கண்ணால் கண்டு ரசிச்ச காட்சிகளை மற்றவர்களுடனும் பகிர்ந்துக்கிட்டு நிறை குறைகளை அலசறது மூலம் தங்களோட திறமையை இன்னும் மெருகேத்திக்க நினைக்கும் புகைப்பட ஆர்வலர்களின் துணையோட குழுமம் வெற்றிகரமா இயங்கிக்கிட்டு வருது. ஆரம்பிச்ச அன்னிக்கே பதினேழு உறுப்பினர்கள் சேர்ந்தது ரொம்பவே உற்சாகத்தைக் கொடுத்தது. அவர்கள் அனைவருக்கும் என்னுடைய நன்றி. புகைப்படக் கலையில் ஆர்வமும், ஃப்ளிக்கரில் அக்கவுண்டும் இருக்கும் அனைவரும் இதுல கலந்துக்கலாம். அக்கவுண்ட் இல்லைன்னா ஆரம்பிச்சுட்டு குழுமத்துல சேர்ந்து நீங்க எடுத்த படங்களைப் பகிர்ந்துக்கிட்டுக் கலக்குங்க.  

கொஞ்ச நேரம் கழிச்சு அண்ணா கண்ணனும் வந்து கலந்துக்கிட்டார். கலகலன்னு அரட்டை ஜமா சேர்ந்துருச்சு. மூன்றாமாண்டில் அடியெடுத்து வைத்திருக்கும் வல்லமை, புகைப்படக்கலை, அப்றம் வல்லமையின் புகைப்படக் குழுமம் என்று அலசிக் காயப்போட்டுக்கிட்டு இருக்கும்போது ராமலக்ஷ்மியும் வந்து விடவே அவங்களும் பேச்சில் கலந்துக்கிட்டாங்க. வல்லமை மின்னிதழின் முதல் வல்லமையாளர் விருதை வென்ற அவருக்கு அதற்கான பரிசும் வழங்கப்பட்டது. லேட்டானாலும் லேட்டஸ்ட்டா வா.மணிகண்டனும் சந்திப்பில் கலந்துக்கிட்டார்.

எல்லோரையும் நேர்ல பாக்கறது இப்பத்தான் முதல் முறைன்னாலும் ஏதோ எல்லோரோடயும் ரொம்ப நாள் பேசிப்பழகியிருந்த மாதிரியே தோணுச்சு. சுருக்கமாச் சொன்னா நிறைவான சந்திப்பு, அருமையான நண்பர்கள். ராமலக்ஷ்மிக்கு ஒரு ஸ்பெஷல் நன்றி :-)

இதுக்கு முன்னாடி பெங்களூர் போனதுக்கும், இந்தத்தடவை போயிருந்ததுக்கும் நிறைய வித்தியாசம் கண்கூடாத்தெரியுது. மெட்ரோ ரயில் நிறைய மரங்களைப் பலி வாங்கியிருக்குது. பலன்,... ஊருக்கே ஏ.சி போட்டது மாதிரி குளுகுளுன்னு இருக்கும் பெங்களூரில் ஏ.சி பஸ்கள் நிறைய ஓடுது. ரோட்டோட ரெண்டு பக்கமும் குல்மொஹர் மரங்கள் குடை மாதிரி கவிஞ்சு நிற்க, தரையில் கொஞ்சம் கூட வெய்யில் படாத இடங்களுக்குப் பெயர் போனது பெங்களூர். அந்தப்பெருமையைக் கொஞ்சம் கொஞ்சமா இழந்து வருதோன்னு தோணுது. இப்பல்லாம் அந்த மாதிரிச் சாலைகள் அங்கங்கே அரிதாத்தான் இருக்குன்னு உடன்பிறப்பு சொன்னார்.

மறுநாள் கிளம்பி பஸ்ஸைப்பிடிச்சு பயணம் வந்துட்டிருக்கும்போதும் நல்ல மழை. ஹுப்ளி வரைக்கும் மழை துணையாய் வந்தது. இங்கே நல்லா வெயிலடிச்சுட்டிருந்த மும்பையில் இருந்த பொண்ணுக்குப் போன் செஞ்சு சொல்லி, “எஞ்சாய்..”ன்னு காதுல புகையோட வந்த பதிலை வாங்கிக்கிட்டேன்.

வீட்டுக்கு வந்தப்புறமும் பையர், “இனிமே தொலைதூரப் பயணத்துக்கு பஸ்ஸுல போகவேப்டாது”ன்னு சொல்லிட்டிருந்தார். பார்க்கலாம்.. பார்க்கலாம்.. எத்தனையோ வைராக்கியங்களைப் போல் இது “பயண வைராக்கியம்”.. இதுக்கும் ஆயுசு கம்மிதான் :-)

Monday, 21 May 2012

பெங்களூர் விஜயமும் சந்திப்பும் - 1


பெங்களூர் கடந்த பத்துப்பதினஞ்சு நாட்களா வழக்கத்தை விட ரொம்பவே குளுரா இருந்துச்சாம். நல்லவங்க நெறைய இருக்கற அந்த பூமி ரொம்ப ரொம்ப நல்லவங்க ஒருத்தங்க போன வாரம் விஜயம் செஞ்சதால தினமும் சாரலில் நனைஞ்சு இன்னும் ஜில்லுன்னு ஆகிருச்சு. அந்த நல்லவர் யாருன்னு சொல்லலாம்ன்னா தன்னடக்கம் தடுக்குதுங்க :-))
தோட்ட நகரத்தில் பூத்தவை..
உடன்பிறப்பு வீட்டு இளவரசரை அவரோட பெயரிடும் வைபவம் சமயம் பார்த்தது,.. அதுக்கப்புறம் பார்க்கப்போக வேளையே வாய்க்கலை. அவரோட வளர்ச்சியையும் குறும்புகளையும் மெயிலில் அனுப்பற படங்களையும் வீடியோக்களையும் பார்த்தே திருப்திப் பட்டுக்கிட்டு இருந்தோம். இந்த லீவு சமயத்துலயாவது போயே ஆகணும்ன்னு என் பையர் சொன்னதால நானும் பையருமா கிளம்பிட்டோம்.

ஆனாலும், கடைசி நிமிஷம் வரைக்கும் பயணம் ரத்து செய்யப்படற ஆபத்து இருந்ததால் பறக்கும், ஊரும் வாகனங்களைத்தவிர்த்து ஓடும் வாகனத்துல,.. (அட! பஸ்ஸில்தாங்க) டிக்கெட் புக் செஞ்சோம். Neeta,Raj இன்னபிற வோல்வோ பஸ்களில் ஒரு நாள் அவகாசத்துல கூட டிக்கெட் புக் செஞ்சுக்கலாம். சிரம பரிகாரத்துக்காக நல்ல ரெஸ்டாரண்டுகளில் மட்டுந்தான் நிறுத்தப்படுது. மும்பையிலிருந்து கிளம்பினா லோனாவ்லா மற்றும் பூனாவில் மட்டுமே பயணிகளை ஏத்திக்கறதுக்காக நிக்கிறாங்க, அதுக்கப்புறம் வில்லிலிருந்து விடுபட்ட அம்பு மாதிரி சல்ல்ல்லுன்னு பெங்களூருல போய்த்தான் ஸ்டாப்புவாங்க.

ஏற்கனவே சொல்லியிருந்தபடி கலசிப்பாளையம் பஸ் நிலையத்துல இறங்கி, அங்கே காத்துட்டிருந்த உடன்பிறப்பைக் கண்டுக்கிட்டோம். பரஸ்பர நலம் விசாரிப்புக்கு அப்றம் வீட்டை நோக்கி விரைந்தோம். போகும் வழியில் அடையார் ஆனந்தபவனின் பெங்களூர்க்கிளையில் இளவரசருக்குப் பிடிச்ச முறுக்கும், சீடையும் வாங்கிக்கிட்டோம். நொறுக்ஸில் அவருக்கு இந்த ரெண்டும்தான் பிடிக்குமாம். மும்பையிலேயே வாங்கிக்கலாம்ன்னா வாஷியிலிருந்த கிருஷ்ணா ஸ்வீட்ஸைக் காணோம். ஹாட் சிப்ஸ் போன்ற கடைகளில் கிடைக்கிறதை வாங்கிக்கலாம்ன்னா அவங்க உபயோகப்படுத்தற எண்ணெய்யின் தரத்தைப் பத்தி ரொம்பவே யோசனையா இருக்குது. அதான் ஒரே எண்ணெய்யை எத்தனை முறை சூடாக்கி பதார்த்தங்கள் தயாரிக்கப்படுதுன்னுதான் கண்ணு முன்னாடியே பார்க்கறோமே. ஆரோக்கியத்துல ரிஸ்க் எடுக்க மனசு வரலை.

வீட்டுக்குப் போனப்ப குழந்தை நல்ல தூக்கத்துல இருந்தார். இன்னும் பதினஞ்சு நிமிஷம் பொறுத்திருந்தா தானாவே எழுந்துருவார். எதுக்கு தூங்கற குழந்தையை எழுப்பி வீணே சிரமப்படுத்தணும்?.. தானைத்தலைவர் தானே எழுந்து வரட்டும்ன்னு நாங்க சிரம பரிகாரமெல்லாம் முடிக்கவும், அவர் எழுந்து வரவும் சரியா இருந்தது. அவருக்கு நினைவு தெரிய ஆரம்பிச்சப்புறம் இப்பத்தான் பார்க்கறோம்ன்னாலும் குழந்தைக்கு வேத்து முகமே இல்லை. உடனேயே ஒட்டிக்கிட்டார். சாயந்திரம் குடியிருப்பிலேயே இருக்கும் விளையாட்டுப் பகுதிக்குக் கூட்டிட்டுப் போனதும் பயங்கர ஜாலியாகிட்டார்.

அப்பா அம்மா ரெண்டு பேரும் வேலைக்குப் போறதால இளவரசரை அம்மா வழிப்பாட்டி பார்த்துக்கறாங்க. அருமையான பெண்மணி. அத்தைன்னு சொல்லாம இன்னொரு அம்மான்னே சொல்லலாம். அந்தளவுக்கு அருமையா அங்கே தங்கியிருந்த நாட்களில் என்னையும் கவனிச்சுக்கிட்டாங்க.
தெளிவா இருக்கும் பெலந்தூர் ஏரி..
வீட்டோட பால்கனியில் நின்னா, காத்து சும்மா பிச்சுக்கிட்டுப் போகுது. பக்கத்துலயே பெலந்தூர் ஏரி இருக்கறதால குளுமையாவும் இருக்குன்னு சொன்னப்ப அத்தை சிரிச்சாங்க. காத்து மட்டுமல்ல, சில நேரங்கள்ல ‘வாசனை’யும் சேர்ந்து வரும்ன்னாங்க. அக்கம்பக்கத்துல உள்ள கட்டிடங்களிலேர்ந்து கழிவு நீரெல்லாம் அங்கே வந்துதான் சேருதாம். அடப்பாவமே!!.. ஏரி இருக்கறதால நிறையப் பறவைகள் அங்கே நிச்சயமா வரும். ஒரு நாள் போய்ச் சுட்டுக்கிட்டு வரலாம்ன்னு காமிராவைத் தீட்டிக்கிட்டுக் காத்திருந்த என் நினைப்பில் ஒரு வண்டி மண். பறவைகள் வரக்கூட லாயக்கில்லாம போயிட்டதாம் அந்த ஏரி.

130 வயசான இந்த ஏரியோட பரப்பளவு 892 ஏக்கர். ஒரு காலத்துல சுத்திலும் இருக்கற பதினெட்டுப் பட்டி மக்களும் தங்களோட அடிப்படைத்தேவைகளுக்கு இந்தத்தண்ணியைத்தான் உபயோகப்படுத்திக்கிட்டு இருந்திருக்காங்க. அந்தளவு சுத்தமாத்தான் இருந்திருக்குது. அப்றம் எண்பதுகளில் இந்த ஏரிக்கு மத்த குளங்கள்லேர்ந்து தண்ணீர் வந்துட்டிருந்த வழிகள் அடைபட்டதாலும், நகர மயமாக்கலின் விளைவா பெருகிட்ட குடியிருப்புகள்,தொழிற்சாலைகள், கொண்டு சேர்த்த கழிவுகளிலாலும் ஏரி மெல்லமெல்ல மோசமடைய ஆரம்பிச்சுருக்கு. பத்தாக்குறைக்கு மழைத்தண்ணீர் ஏரியில் வந்து சேர்றதுக்கான வடிகால் வசதிகளும் இந்த குடியிருப்புகள், மற்றும் தொழிற்சாலைகளால மறிக்கப்பட்டுருச்சு.

தண்ணீர் கெட்டுப்போனதால அதுலேர்ந்த மீன்களெல்லாம் செத்துப்போய் தங்களோட வாழ்வாதாரம் பாதிக்கப்படுதுன்னு மீனவர்கள் புகார் கொடுத்ததால மீன் வளத்துறை ஏரியில் மீன் குஞ்சுகளை மறுபடியும் விட்டு வளர்க்க முயற்சி செஞ்சு பார்த்தாங்க. மீனெல்லாம் மறுபடியும் செத்து மிதந்ததுதான் மிச்சம். இப்போ அங்கே களைகளையும், புல் பூண்டுகளையும் தவிர எதுவுமே காணக்கிடைக்கலை.
மறுபடியும் குழம்பிருச்சோ?????... அப்றமா தெளிவு கிடைக்குமாயிருக்கும் :-)
முழுக்க முழுக்க தண்ணீர்ப் பரப்பா இருந்த ஏரி நான் பார்த்துக்கிட்டிருக்கும் போதே கொஞ்சம் கொஞ்சமா வீடுகளால்(weeds) மறைஞ்சுட்டே வந்தது. இன்னும் கொஞ்ச நேரம் கழிச்சுப் பார்க்கறப்ப சின்னச்சின்ன தீவுகள் மாதிரியான திட்டுகள் மிதந்துட்டு வர்றதைப் பார்த்தேன். ஏரிகளில் ஆகாயத்தாமரை போன்ற செடிகள் மிதந்துக்கிட்டே நகர்ந்து போறதைப் பார்த்த எனக்கு, பெலந்தூர் ஏரியில் சின்னச்சின்ன தீவுத்திட்டுகள் மிதந்து போறதைப் பார்த்தது ரொம்பவே ஆச்சரியமா இருந்தது. இதுகளில் வளர்ந்து நிற்கும் புற்களை, காலை நேரங்கள்ல ஆட்கள் பரிசலில் வந்து அறுத்துக் கட்டிக்கிட்டுப் போவாங்கன்னு அத்தை விவரம் சொன்னாங்க.

இதைப் பார்க்கறதுக்காகவே நடுராத்திரி ஆறரை மணிக்கே எழுந்து, காமிராக்கண்ணைத் திறந்து வெச்சுட்டுக் காத்திருந்தேன். ரெண்டு மூணு பேர் பரிசல் வலிச்சுட்டு வந்து தீவுகளில் இறங்கி, பரிசலை ஒரு ஓரமாக் கட்டி வெச்சுட்டு அங்கியும் இங்கியும் ஆளுயரத்துக்கு வளர்ந்து நிக்கிற புல்லை மளமளன்னு அறுத்துக் கட்டி, பரிசலில் ஏத்துனாங்க. மாடு,குதிரைகளுக்கான தீவனப்புல்லோன்னு தோணுது. இந்தக் கெட்டுப்போன தண்ணியில் வளரும் புல் எந்த அளவுக்கு கால்நடைகளுக்கான ஆரோக்கியமான தீவனமா இருக்கும்கறது மில்லியன் டாலர் கேள்வி. பரிசல் நிரம்பி வழியுற அளவுக்கு கல்லா கட்டுனதும், அவங்களும் கடையைக் கட்டிடறாங்க.
கவனம்... ஆட்கள் வேலை செய்கிறார்கள்.
மூணு நாள் மட்டுமே அவகாசம் இருந்ததால் எங்கேயும் சுத்திப்பார்க்கக் கிளம்பலை. முழுக்க முழுக்க குட்டிப்பையன் கூடவேதான் இருக்கணும்ன்னு மும்பையிலிருந்து கிளம்பும்போதே அப்பாயிண்ட்மெண்ட் ஃபிக்ஸ் செஞ்சுருந்தாலும், ஒண்ணு ரெண்டு மக்களையாவது மீட்டாம மும்பை திரும்ப மனசு வரலை.

டிஸ்கி: இறுதிப்பகுதியான அடுத்த பகுதியில் சந்திக்கலாமா..


Monday, 7 May 2012

சித்திரை மாதத்து நிலவு..

வழி விடு மேகமே.. வழி விடுன்னு பாடத்தேவையில்லாதபடிக்கு நேத்து வானம் தெள்ளத்தெளிவா மப்பெல்லாம் இறங்கி இருந்தது :-) உடனேயே சுட்டுட்டேன்.
புளிக்காத ஆரஞ்சுப்பழம் :-)
எல்லோரும் சித்ரா பௌர்ணமியை சுட்டுக்கிட்டு இருக்க, நான் மறு நாளைக்கு மிச்சம் மீதி இருந்ததைச் சுட்டேன். முதல் நாள் எல்லோருக்கும் போஸ் கொடுத்துக்கொடுத்து கொஞ்சம் களைப்பா இருந்தாலும் காமிராவைக் கண்டதும் அலுக்காம, டக்குன்னு சூப்பர் மாடலாட்டம் பளீர்ன்னு சிரிச்சா. நேத்து ஏன் உன்னைக்காணலைன்னு என்னைக்கேட்டா. அவளைச் சுடறதுக்காக புது லென்ஸ் வாங்கியாரப் போனேன்னு அவ கிட்டயே சொல்ல முடியுமா?.. அதான் உங்க கிட்டச் சொல்றேன் :-)

என் பீரங்கியோடு கிடைச்ச வைட் ஆங்கிள் லென்ஸில் படம் எடுக்கும்போது ஒரு சில செட்டிங்குகளில் மட்டும் ஓரளவு தெளிவான நிலவு கிடைச்சது. அதுவும் கூர்ந்து கவனிச்சா மட்டுமே லேசான விவரங்கள் தெரியும்படியா இருந்தது. அதனால், புது லென்சுக்கு அடி போட ஆரம்பிச்சேன் (அதெல்லாம் நல்ல லென்ஸ் இருந்தா அருமையா நிலவைப் படம் பிடிக்கலாம் தெரியுமோன்னு அப்பப்ப டயலாக் விடணும்)

சந்தடி சாக்குல மார்ச் மாதம் வந்த சூப்பர் மூனையும் இங்கே பதிச்சிட்டேன்..
ஆனா, டயலாக் விடத் தேவையில்லாதபடிக்கு, என்னை ஒரு நிபுணர் ஆக்கியே தீரணும்ன்னு ரங்க்ஸ் கங்கணம் கட்டிக்கிட்டிருந்ததால் வேலை சுலபமா முடிஞ்சது. மும்பையில் ஃபோட்டோஃபேர் நடந்தப்பவே ட்ரைபாட் வாங்கி வெச்சுக்கிட்டு, அப்பப்ப காமிராவை அதில் மாட்டிக்கழட்டி பயிற்சி எடுத்ததால் நேத்து சட்ன்னு ரெடியாகவும் முடிஞ்சது.

அலசி ஆராய்ந்து canon EFS 55-255mm லென்ஸ் சரியா இருக்கும்ன்னு வாங்கியாந்து வீட்டுக்கு வரப்ப நிலா உச்சி வானத்துக்குப்போயிருச்சு. உதய நிலாவில்தான் விவரங்கள் ரொம்ப அருமையாவும், நிலாவின் அளவும் பெருசா இருக்கும்ன்னும் நிபுணர்கள் சொல்ல வாசிச்சிருந்ததால், மறு நாளைக்காகக் காத்திருந்து ஃபோகஸ் தகராறில் இருக்கும் காமிராவை தாஜா செஞ்சு, ஃபோகஸ் செஞ்சப்ப,.. ஹைய்யோ!! கண் கொள்ளாக் காட்சி. பாட்டி வடை சுடுற மணம் மும்பை வரை வருதுங்க :-)). ஓரளவு தேத்துனதை உங்கள் பார்வைக்காகக் கொண்டாந்துருக்கேன்.
ஜூப்பரா இருக்கும் சூப்பர்மூன்-2012
இந்த நிலாவைக் கொஞ்ச நேரம் முந்திதான் பிடிச்சேன்..
வழக்கத்தை விட அளவில்14 சதவீதம் பெரிதாகவும், 30 சதவீதம் பிரகாசமாவும் இருக்கும் இந்த நிலாவுக்கு "சூப்பர்மூன்- 2012"ன்னு நாசா விஞ்ஞானிகள் பெயரிட்டிருக்காங்க. சூப்பர்மூன் ஜூப்பராத்தான் இருக்குது :-))

Tuesday, 1 May 2012

புளிக்கும் காயில் செஞ்ச இனிக்கும் சர்பத்..

சந்தையில் மாங்காய், வரத்தொடங்கியிருக்கும் வேனிற்காலத்தில் இவற்றை உபயோகப்படுத்தி, மாங்காய் ஊறுகாய், தொக்கு போன்றவை மட்டுமல்ல, சர்பத்தும் செய்யலாம். பொதுவாக ஜூஸ் செய்ய மாம்பழத்தையே உபயோகப் படுத்துவது நம் வழக்கம். ஆனால், மாங்காயையும் உபயோகப்படுத்தி சத்துள்ள சர்பத் செய்யலாம். பி-1,பி-2, நியாசின், மற்றும் வைட்டமின் சி போன்ற உயிர்ச்சத்துகளைக் கொண்ட மாங்காய், நம் உடல் கோடைக்காலத்தில் இழக்கும் சோடியத்தின் அளவை ஈடு கட்டுகிறது. உடலில் தேங்கும் நச்சுகளை வெளியேற்றி இரத்தத்தைச் சுத்தப்படுத்துகிறது.

இதில் இரும்புச் சத்து நிறைந்திருப்பதால் இந்த சர்பத்தைத் தினமும் எடுத்துக் கொள்வதன் மூலம் இரத்த சோகையைக் கட்டுப்படுத்த முடியும். உடற்சூட்டைத் தணிப்பதுடன், சூட்டினால் வரும் வயிற்று உபாதைகள், செரிமானக் கோளாறுகள் போன்றவையையும் தவிர்க்கலாம். “ஆம் பன்னா” என்ற பெயருடன் வட மேற்கு மாநிலங்களிலும், “கைரி கா சர்பத்” என்ற பெயரில் மராட்டிய மாநிலத்திலும் வழங்கப்பட்டு வரும் இந்த சர்பத்தைச் செய்வது மிகவும் எளிது. வேண்டிய அளவு செய்து குளிர்சாதனப் பெட்டியில் வைத்துக் கொண்டு, தேவைக்கேற்ப அவ்வப்போது கலந்து கொள்ளலாம்.
தேவையானவை:
மாங்காய் – 1 (பெரியது)
வெல்லம் – கால் கிலோ
வறுத்துப் பொடித்த சீரகம் – 1 தேக்கரண்டி
காலா நமக் (இந்துப்பு அல்லது ராக் சால்ட் என்றும் சொல்வார்கள்) – கால் தேக்கரண்டி.
செய்முறை:
மாங்காயை நன்கு கழுவித் துடைத்து விட்டுக் கத்தியால் அதன் மேல் அங்கங்கே லேசாகக் கீறி விட்டுக் கொள்ளவும். பின் அதைத் தோல் நன்கு மிருதுவாகும் வரை வேக வைத்துக் கொள்ளவும். குக்கரில் வைப்பதனால் ஒரு விசில் போதும்.
வெந்த மாங்காயை நன்கு ஆற விட்டு, பின் தோலுரிக்கவும். ஒரு கரண்டியின் உதவி கொண்டு, சதைப்பற்றான பாகத்தை நன்கு வழித்து ஒரு கிண்ணத்தில் வைத்துக் கொள்ளவும். இதை மிக்ஸியில் நன்கு மைய அரைத்துக் கொள்ளவும்.
சர்க்கரையை ஒரு கப் தண்ணீரில் கரைய விட்டு, கல் மண் போக வடிகட்டிக் கொள்ளவும். பின் இந்தக் கரைசலுடன் மேலும் மூன்று கப் தண்ணீர் விட்டுக் கொதிக்க விடவும். வெல்லக் கரைசல் நன்கு கொதி வந்ததும், அரைத்த மாங்காய், சீரகப்பொடி, இந்துப்புப்பொடியைச் சேர்க்கவும். லேசாகக் கொதிக்க விட்டு இறக்கி ஆற விடவும். நன்கு ஆறியதும் பாட்டில்களில் ஊற்றி குளிர்சாதனப் பெட்டியில் சேமித்துக் கொள்ளலாம். வெளியில் வைத்திருந்தால் சீக்கிரமே கெட்டு விடும்.
பரிமாறும்போது அரை கப் சர்பத்துடன், அதன் அடர்த்திக்கேற்பக் குளிர் தண்ணீரைக் கலந்து, அத்துடன் பொடியாக நறுக்கிய புதினா இலைகளைத் தூவிப் பரிமாறவும்.

LinkWithin

Related Posts with Thumbnails