Friday, 25 May 2012

தந்திரங்களாலும் நிறைஞ்சது இவ்வுலகம் :-)

“வாங்க,.. குர்த்தியா?.. டாப்ஸா?.. என்ன மாதிரி வேணும்?”

“குர்த்தி பார்க்கறோமே”

“இதெல்லாம் லேட்டஸ்ட்டா வந்தது”ன்னு சொல்லியபடியே ஒவ்வொண்ணா எடுத்து அதோட அருமை பெருமைகளை விவரிச்சுட்டிருந்தார் விற்பனைப்பிரிவில் நின்னுட்டிருந்தவர்.

வழக்கமா போற இடம்ங்கறதால அவரே ஸ்லீவ்லெஸ்ஸை தவிர்த்துட்டு, கொஞ்சம் நீளமான குர்த்திகளா எடுத்துப் போட்டுக்கிட்டிருக்கார். அதுல பிடிச்சிருந்த நாலஞ்சை தனியா எடுத்து வெச்சுட்டு, “போதும்,.. மேற்கொண்டு எடுத்துப்போடாதீங்க”ன்னு சொல்லிட்டு, தனியா எடுத்து வெச்சதெல்லாம் அளவு சரியாயிருக்கான்னு போட்டுப்பார்க்கறதுக்காக ட்ரையல் ரூமுக்குக் கொண்டு போயிட்டா பொண்ணு. ஒவ்வொண்ணா போட்டுக்கிட்டு ஒரு நிமிஷம் வெளியே வந்து எங்கிட்ட ட்ரெஸ்ஸை காமிப்பாங்க. நல்லாருக்கா இல்லையான்னு சொல்ல வேண்டிய பொறுப்ஸ் அம்மாவுக்கான கடமையை ஆத்தறதுக்காக நானும் கூடவே போய் வெளியே நின்னுட்டிருந்தேன்.

இணையத்துல சுட்ட படம்..
“அந்த மேல் தட்டுல இருக்கற டாப்ஸை எடுத்துப்போடுங்க” என்ற குரல் கேட்டுத் திரும்புனேன். இருபதாம் பிறந்த நாளைக் கொண்டாட எப்படியும் இன்னும் ரெண்டு மூணு வருஷமாவது ஆகும்ன்னு நினைக்க வைக்கிற வகையில் ரெண்டு யுவதிகள் நின்னுட்டிருந்தாங்க.

கடையிலிருந்த  விற்பனையாளர் சலிக்காம அவங்க கேட்டதையெல்லாம் எடுத்துப் போட்டுட்டிருந்தார். இப்ப லேட்டஸ்ட்டா என்ன டிசைன் மார்க்கெட்டுல சூடு பிடிச்சுருக்கு?.. என்ன மாதிரியான ஸ்லீவுக்கு இப்ப பொண்ணுங்க மத்தியில் வரவேற்பு இருக்கு? நீளக்கையா, குட்டைக்கையா? பார்ட்டி வேரில் புதுசா என்ன வந்துருக்குன்னு எல்லாம் அலசிட்டு இருந்தாங்க. கூடவே விலை விசாரிப்பும் நடந்துட்டிருந்தது.

ஒவ்வொண்ணாப் பார்த்துட்டு பிடிச்சிருந்த அயிட்டங்களெல்லாம் ஓரம் கட்டப்பட்டன. அதெல்லாம் நிதானமா ஆராய்ஞ்சு அலசி, ட்ரையல் ரூம்ல போய்ப் போட்டுப்பார்த்துட்டு, முடிவு செய்யப்பட வேண்டியவை. வந்திருந்த ரெண்டு பெண்களில் ஒருத்தி அதையெல்லாம் எடுத்துக்கிட்டு இன்னொரு ட்ரையல் ரூமுக்குப் போய்விட, இன்னொருத்தி மொபைலில் மூழ்கி முத்தெடுக்க ஆரம்பிச்சா.

இப்படியே கொஞ்ச நேரம் போயிருக்கும்.. எல்லா டாப்ஸையும் போட்டுப்பார்த்துட்டு வெளியே வந்த யுவதி நம்பர் ஒன் அத்தனையையும் அள்ளிட்டு வந்து டேபிளின் மேல் வைக்கவும், அவளோட மொபைல் அலறியது. எடுத்துப் பேசினவ, “அப்படியா?. இதோ,.. இப்ப வந்துடறோம்”ன்னு சொல்லிட்டு தோழியைக் கூட்டிட்டு திரும்பிப்பார்க்காம வெளியே கிளம்பிப்போயிட்டா. எடுத்துப்போட்ட துணிகள் வேணுமா வேண்டாமான்னு கூட விற்பனையாளர் கிட்ட சொல்லிக்கலை.

அவரும் ஒண்ணும் கண்டுக்கலை. அம்பாரமாக் குவிஞ்சுருந்த துணிகளை மத்த பிரிவுகள்ல சும்மா நின்னுட்டிருந்த ரெண்டு பேரைத் துணைக்கு வெச்சுக்கிட்டு பரபரன்னு சுறுசுறுப்பா மடிச்சு வைக்க ஆரம்பிச்சுட்டார். பாவமாத்தான் இருந்தது. ஒரு நிமிஷத்துக்கு “அங்காடித்தெரு” படத்தோட காட்சிகள் கண்ணு முன்னாடி வந்துட்டுப்போச்சு.

இப்போ மால்களிலிருக்கும் தியேட்டர்களில் படம் பார்க்கப் போறச்சே, படத்துக்கு இன்னும் நிறைய டைம் இருக்குன்னு தெரிஞ்சா அது வரைக்கும் பொழுதைப்போக்கறதுக்காக அங்கிருக்கற கடைகள்ல நுழைஞ்சு எதையோ வாங்கற மாதிரி கொஞ்ச நேரம் போக்குக்காட்டி நேரம் போக்குவோமில்லையா,.. அதைத்தான் இதுங்க இங்கே செஞ்சுருக்குதுங்க. 

ஏதாவது வேலையா ஒரு இடத்துல ஒண்ணு கூடறதா பேசி வெச்சுருக்கும் ஃப்ரெண்ட்ஸ்களில் யாராவது சீக்கிரம் வந்துட்டா மத்தவங்க வர்ற வரைக்கும் ரோட்டுல வெட்டு வெட்டுன்னு காத்திருக்காம இப்படி துணிக்கடைகள்ல நுழைஞ்சு பொழுதைப்போக்கறது ஒரு தந்திரம். டைம்பாஸும் ஆச்சு,.. மார்க்கெட்ல என்ன புதுசா வந்துருக்குன்னும் தெரிஞ்சுக்கலாம். டைம் ஆனதும் வெளியே இருந்து போன் கால் வரும்,.. இல்லைன்னா, வந்துருக்கும் தோழிகளில் ஒருத்தி நைசா தன்னோட மொபைல்ல இருந்து கால் பண்ணுவா. அப்புறமென்ன, வெளியே இருந்து போன் வந்த மாதிரி சீன் போட்டுக்கிட்டே நழுவிடறதுதான்.

கடைக்காரங்களுக்கும் இவங்க தந்திரம் நல்லாவே தெரியும். வந்திருக்கறவங்க உண்மையிலேயே ஜவுளி எடுக்க வந்துருக்காங்களா, இல்லை சும்மா நேரம் போக்க வந்துருக்காங்களான்னு கொஞ்ச நேரத்துலயே அவங்களுக்குப் பிடிபட்டுப்போகும். ஆனாலும் வந்துருக்கறவங்க கேட்ட எல்லாத் துணிகளையும் முகம் சுளிக்காம எடுத்துப் போடுவாங்க. 

இங்கே இப்படி வந்துட்டுப் போறவங்களுக்கு கட்டாயம் ஏதாவதொரு அயிட்டம் பிடிச்சுப்போகும். அதை வாங்கறதுக்காக மறுபடியும் கண்டிப்பா வருவாங்க. கூடவே தோழிப்பட்டாளமும் வரும், அவங்களுக்கான ஷாப்பிங்கும் நடக்கும்ன்னு சொல்லணுமா என்ன?.. இது சின்ன மீனைப்போட்டு பெரிய மீனைப்பிடிக்கற  கடைக்காரங்களோட தந்திரம். அதனால போகட்டும் போன்னு விட்டுருவாங்க. இருந்தாலும் கலைச்சுப்போட்ட அத்தனைத் துணிகளையும் மறுபடி அழகா மடிச்சு வைக்கறதைப் பார்க்கறப்ப பாவமாத்தான் இருக்கு. அதுக்காகத்தான் அவங்களுக்குச் சம்பளம் கொடுக்கறாங்கன்னு மனச்சமாதானமானாலும்..

17 comments:

மகேந்திரன் said...

சில இடங்களில் வியாபாரிகளின் பேச்சுத் திறமை
நம்மை வியப்பில் ஆழ்த்தும்...
பேசிப்பேசியே விற்காத பொருட்களையும்
விற்றுவிடுவார்கள்...

அமைதிச்சாரல் said...

அதேதான்,.. அதுதான் அவங்க வியாபாரத் தந்திரம். அன்னிக்கு திரும்பிப்போன பெண்கள் எப்படியும் இன்னொரு நாளும் வருவாங்க. அயிட்டங்கள் ரொம்பவே பிடிச்சுப்போச்சுன்னு அவங்க முகத்துலயே தெரிஞ்சது.

நம்ம கடையில் முதல் போணி செஞ்சதுக்கு நன்றி மகேந்திரன் :-))

ஹுஸைனம்மா said...

இதுபோல் பொழுதைப் போக்கவென்று கடைகளில் நுழையவேண்டிய சந்தர்ப்பம் வந்தால், முதலிலேயே நம்மை நோக்கிவரும் விற்பனையாளரிடம் ‘எதுவும் வாங்கப்போவதில்லை’ என்று சொல்லிவிடுவேன், ஏமாற்றங்கள் தவிர்க்க.

இந்தியாவில் அப்படிச் சொன்னால்தான், நம் பின்னாடியே விற்பனையாளர்கள் நிற்பார்கள். சந்தேகம்!! :-))))) அவர்களுக்குக் கிடைத்த அனுபவங்கள் அப்படியாயிருக்கும். நானும் கண்டுகொள்வதில்லை.

துளசி கோபால் said...

விண்டோ ஷாப்பிங் இப்பெல்லாம் ட்ரயல் ரூமில் போட்டுப் பார்க்கும் ஷாப்பிங் ஆகிருச்சா?

ராமலக்ஷ்மி said...

நடப்பை நல்லா சொல்லியிருக்கீங்க.

நாஞ்சில் பிரதாப்™ said...

:))

புதுகைத் தென்றல் said...

நெசந்தான்

ஸாதிகா said...

இது சின்ன மீனைப்போட்டு பெரிய மீனைப்பிடிக்கற கடைக்காரங்களோட தந்திரம்.//உண்மைதான்.

FOOD NELLAI said...

நேரம் ஆனவுடன் எடுத்த துணிகளை வைத்துவிட்டு சென்றாலும், அதை எடுத்து வைக்கும் மனிதர்களுக்கு எதையும் சொல்லாமல் போனால், சிறிது மனம் வலிக்கத்தான் செய்யும்.

வல்லிசிம்ஹன் said...

எனக்கென்னவோ நிறையத் துணிமணிகளை எடுத்துப் போடச் சொல்லப் பிடிப்பதில்லை.
ஆனால் இப்ப காலத்து பெண்களுக்கு ஒரு புடவை எடுக்க நான்கு மணிநேரம் ஆகிறது:0)அனுபவத்தில சொல்றேன்பா.

நீங்க சொல்கிறமாதிரி துணிக்கடை உரிமையாளர்களும்சாமர்த்திய சாலிகள் தான்.
ஒரு புடவை எடுக்கப்போனால் நாலு தலையில் கட்டிவிடுவார்கள். துளசிக்கும் எனக்கும் தெரிந்த ஒரு கடைக்காரர் அப்படித்தான்.அலுக்காதவந்தான் வியாபாரி ஆக முடியும்!

ரிஷபன் said...

இருந்தாலும் கலைச்சுப்போட்ட அத்தனைத் துணிகளையும் மறுபடி அழகா மடிச்சு வைக்கறதைப் பார்க்கறப்ப பாவமாத்தான் இருக்கு. அதுக்காகத்தான் அவங்களுக்குச் சம்பளம் கொடுக்கறாங்கன்னு மனச்சமாதானமானாலும்..

நல்லா சொல்லியிருக்கீங்க.

ஸ்ரீராம். said...

கொடுமைதான். பாவமாத்தான் இருக்கு. ஆனால் நீங்கள் சொல்கிற மாதிரி பொழுதுபோக்காய்ப் பார்த்தாலும் இதில் எதாவது ஒன்றிரண்டு கவனத்தில் தங்கி மீண்டும் வியாபாரத்துக்கு வரக் கூடும்! நம்பிக்கைதானே...!

Kanchana Radhakrishnan said...

நல்லா சொல்லியிருக்கீங்க.

சத்ரியன் said...

//இன்னொருத்தி மொபைலில் மூழ்கி முத்தெடுக்க ஆரம்பிச்சா.//

ஹஹஹஹ, எதிர்முனையிலிருந்து ‘முத்தம்’ வந்திருக்கும் அதை எடுத்திருப்பாங்களோ?

//டைம் ஆனதும் வெளியே இருந்து போன் கால் வரும்,.. இல்லைன்னா, வந்துருக்கும் //

உலகத்தை என்னமா புரிஞ்சி வெச்சிருக்கீங்க!

//அத்தனைத் துணிகளையும் மறுபடி அழகா மடிச்சு வைக்கறதைப் பார்க்கறப்ப பாவமாத்தான் இருக்கு. //

என்ன பன்றதுங்க. வயித்து பொழப்பு. நானும் கூட 4 வருஷம் (பெங்களூர்) ஜவுளிக்கடையில வேலை பாத்தேன்.

மோகன்ஜி said...

நல்லா சொன்னீங்க. துணிகளைப் பார்த்து விட்டு வாங்காமல் வருவது ரொம்ப சங்கடமா இருக்கும் எனக்கு.

மாதேவி said...

எத்தனை விதமான மனிதர்கள் :).

கடைக்காரர்களை நினைத்தால் பாவமாகத்தான் இருக்கின்றது.

அமைதிச்சாரல் said...

கருத்துரையிட்ட
ஹுசைனம்மா,
துள்சிக்கா,
ராமலக்ஷ்மி,
பிரதாப்பு,
தென்றல்,
ஸாதிகா,
சங்கரலிங்கம் அண்ணா,
வல்லிம்மா,
ரிஷபன்,
ஸ்ரீராம்,
காஞ்சனா,
சத்ரியன்,
மோகன் அண்ணா,
மாதேவி..
அனைவருக்கும்,

[im]http://www.my-thank-you-site.com/images/iStock_thank_you_flower_resized.jpg[/im]

LinkWithin

Related Posts with Thumbnails