Showing posts with label சப்பாத்திக்கு சைடிஷ். Show all posts
Showing posts with label சப்பாத்திக்கு சைடிஷ். Show all posts

Thursday, 20 January 2011

பாலக் பேட்டீஸ் கறி.

உடம்புல வேணுங்கிற ஹீமோக்ளோபின் இல்லைன்னா, அதாங்க.. இரும்புச்சத்து இல்லைன்னா டாக்டர்கள் மொதல்ல சொல்றது, 'ரொம்ப அனீமிக்கா இருக்கீங்க. நெறைய கீரைவகைகள் சாப்டுங்க, பேரீச்சம்பழம், வெல்லமெல்லாம் சாப்டுங்க'ன்னுதான். பேரீச்சம்பழமும் வெல்லமும் எப்படியாவது வயித்துக்குள்ள தள்ளிடலாம். இந்த கீரைவகைகள் இருக்கே.. சிலபேருக்கு இறங்கவே செய்யாது.பொரியல், மசியல்ன்னு சிலவெரைட்டிகள்தான் அதுல செய்யவும் முடியும். குழந்தைகளைப்பற்றி கேக்கவே வேணாம். கீரையை தட்டுல வெச்சாலே முகம் அஷ்டகோணலாகும்.  தெனமும் ஒரேமாதிரி செஞ்சா போரடிக்காதா என்ன!!.. கொஞ்சம் நடையை மாத்துங்க :-))) எங்கேயா??.. மார்க்கெட்டுக்குத்தான் ...

நல்லதா ரெண்டு கட்டு பசலைக்கீரை வாங்கிக்கோங்க. இதை ,  'பாலக்'ன்னும் சொல்லுவாங்க .ஒரு சின்னகட்டு வெந்தயக்கீரை வாங்கிக்கோங்க. (வீட்டுல ஒரு தொட்டியில வெந்தயத்தை கொஞ்சூண்டு தூவிவிட்டுட்டா முளைச்சுடும். தேவையானப்ப பறிச்சுக்கலாம்), அப்புறம் வீட்டுல வெங்காயம், தக்காளி,   இஞ்சி, கொத்தமல்லி இலையெல்லாம் இருக்குதுதானே.. இல்லைன்னா அதையும் வாங்கிடுங்க. அப்புறம் உருளைக்கிழங்கும் வேணும். எல்லாம் வாங்கியாச்சா..

ரைட்டு.. இப்ப.. ஒரு வெங்காயத்தை பொடியா நறுக்கிக்கோங்க. ஒரு தக்காளியும் பொடியா நறுக்கிக்கோங்க.  ஒரு ஸ்பூன் நறுக்குன இஞ்சியும் ரெடியா இருக்கட்டும். அப்புறம் பசலைக்கீரை, வெந்தயக்கீரையை நல்லா ஆய்ஞ்சு மண்ணெல்லாம் போக கழுவி, தண்ணீரை வடியவிடுங்க. அப்புறம் பசலைக்கீரையை ஒரு பாத்திரத்திலும், ரெண்டு உருளைக்கிழங்குகளை நறுக்கி, இன்னொரு பாத்திரத்திலும் போட்டு, குக்கரில் வெச்சு வேகவிடுங்க. கிழங்குகளை கழுவியதே போதும். மேற்கொண்டு தண்ணீர் சேர்க்கவேண்டாம். நல்லா மசியறவரை வெந்ததும் எடுத்து ஆறவையுங்க. அப்புறம் கீரையை நல்லா மசிச்சு வையுங்க. மிக்ஸியில் போட்டும் அரைச்சுக்கலாம்.

ஒரு பாத்திரத்தில் எண்ணெய்யை சூடாக்கி, அதில் கடுகு, சீரகம் போட்டு வெடிக்கவிடுங்க. இப்ப, வெங்காயம், இஞ்சியை போட்டு லேசா வதக்குங்க. கொஞ்சம் வாசனை வந்ததும், தக்காளியைப்போட்டு நல்லா கரையுறவரை வதக்குங்க. ஆச்சா!!.. இப்ப மசிச்ச கீரையை அதுல ஊத்துங்க. கீரை ரொம்ப கட்டியா இருந்தா அரைகப் தண்ணியும் சேத்துக்கலாம். இப்ப, அரைஸ்பூன் மிளகாய்த்தூளும், சிட்டிகை மஞ்சள்தூளும், ருசிக்கேற்ப உப்பும் போட்டு கிளறிவுடுங்க. அரைஸ்பூன் கரம்மசாலாவும் போட்டு கொதிக்கவிடுங்க. கொதிவந்ததும், அடுப்பை சிம்மில் ஐந்து நிமிடம் வெச்சாப்போதும். அவ்ளோதான்..

இப்ப, பேட்டீஸ் செய்யலாம்... பொடியாக நறுக்கப்பட்ட ஒரு வெங்காயம்(விக்கிற விலைக்கு ஒண்ணுபோதும் :-)), கால்கப் கொத்தமல்லி இலை,  நறுக்கிய வெந்தயக்கீரை,வெந்த உருளைக்கிழங்கு,அரை ஸ்பூன் நறுக்கிய இஞ்சி, அப்புறம் சிட்டிகை மஞ்சள்பொடி, ஒரு டீஸ்பூன் மிளகாய்த்தூள், அதே அளவு உப்பு எல்லாத்தையும் கலந்து எலுமிச்சையளவு உருண்டைகளா பிடிச்சு, லேசா வடை மாதிரி தட்டிக்கோங்க. இந்த பேட்டீஸ்களை ரவையில் புரட்டி அடுக்கிவெச்சுக்கோங்க.

பேட்டீஸுக்கு தேவையானவை.

தயாரான பேட்டீஸ்.
அடுப்பில் லேசா குழிவான தோசைக்கல்லை(இதை அடைக்கல்லுன்னும் சொல்லுவாங்க)சூடாக்கி,  ரெண்டுமூணா பேட்டீஸ்களை அடுக்கி சுத்திலும் எண்ணெய்விட்டு, ரெண்டுபக்கமும் பொன்னிறமாகுறவரைக்கும் பொரிச்செடுங்க. டீப் ஃப்ரை செய்யவேணாம். பேட்டீஸ் உதிர்ந்து எண்ணெய் வேஸ்டாயிடும். shallow fryதான் இதுக்கு லாயக்கு.

பரிமாறும்வரைக்கும் ரெண்டும் தனித்தனியாத்தான் இருக்கணும். இல்லைன்னா, ரெண்டும் சேர்ந்து குழம்பிடும். சாப்பிடப்போகும்போது பேட்டீஸ்களை க்ரேவியில் போட்டாப்போதும். தனியா கிண்ணத்தில் பரிமாறுறதா இருந்தா பேட்டீஸைப்போட்டு, அது தலைல க்ரேவியை ஊத்திடுங்க.. சப்பாத்திக்கு அருமையான ஜோடி..
சப்ஜி ரெடி.
லிஸ்டை ஒருக்கா சரிபார்த்துக்கலாமா..
       
க்ரேவிக்கு:                                                                          :
பாலக்கீரை - ரெண்டு கட்டு 
ஒரு வெங்காயம்- நறுக்கியது
தக்காளி - 1 பொடியா நறுக்கியது.
இஞ்சி - நறுக்கியது அரை ஸ்பூன்
மிளகாய்த்தூள்- அரைடீஸ்பூன்,
மஞ்சள்தூள்- ஒரு சிட்டிகை
கரம்மசாலா- அரைடீஸ்பூன்
உப்பு - ருசிக்கேற்ப.

பேட்டீஸுக்கு:
வெந்தயக்கீரை- ஒரு சிறுகட்டு
ஒரு வெங்காயம்- பொடியாக நறுக்கியது
கொத்துமல்லி இலை - கால்கப்
நறுக்கிய இஞ்சி - அரைடீஸ்பூன்
மிளகாய்த்தூள்-ஒரு டீஸ்பூன்
மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை
வேகவைத்து மசித்த உருளைக்கிழங்கு - 2.
ரவை- கொஞ்சூண்டு..
உப்பு- ருசிக்கேற்ப.

வெறுமனே பேட்டீஸ் மட்டும் செஞ்சுக்கிட்டு, அதை சாப்பாட்டுக்கு முன்னாடி ஸ்டார்ட்டராவும் வெச்சுக்கலாம்.



Wednesday, 29 December 2010

காலி செஞ்சுட்டேன்..

ரொட்டி, சப்பாத்தி செய்யறதுகூட கஷ்டமில்லீங்க.. அதுக்கு சைடிஷ் செய்யறதுதான் நொள்ளைபிடிச்சது. ஒவ்வொரு நாளும் புதுப்புது வெரைட்டியா இருக்கணும். ரிப்பீட்ட்ட்ட்ட்டேய்ய்ய்ய்ய்ன்னு பின்னூட்டம் போடறது வேண்ணா நல்லாருக்கும். ஆனா, சைடிஷ் மட்டும் குறைஞ்சது ஒருவாரத்துக்கப்புறம்தான் ரிப்பீட் ஆகணும்.

காலையில எந்திருக்கும்போதே சப்பாத்தியோட முகத்தில முழிக்கிற எங்கூர்க்காரங்களுக்கே இது ஒரு சவால். மதியம் டப்பாவுக்கு, ராத்திரிக்குன்னு ஒரு நாளைக்கு ரெண்டுவிதம். இதுல, ரிப்பீட்டும் ஆகாம பாத்துக்கணும். என்னதான் வீட்டுல உள்ளவங்க டிமாண்ட் செய்யலைன்னாலும் நமக்குன்னு ஒரு கெத்து இருக்கில்ல... அதை விட்டுக்கொடுக்க முடியுமா :-)))).

இப்ப சொல்லியிருக்கிற கறி செய்றதுக்கு ரொம்ப சிம்பிளானது. பேச்சிலர்கள்கூட கஷ்டமில்லாம செஞ்சுடலாம். இப்ப இதை செஞ்சு டேஸ்ட் பாருங்க. அப்பப்ப இதைமாதிரி கறிவகைகளை எடுத்துவுடறேன்.

ஒரு காலிஃப்ளவர், ரெண்டு உருளைக்கிழங்கு, ஒரு டீஸ்பூன் சீரகம், மூணு பச்சைமிளகாய், அரைகிண்ணம் நறுக்கிய கொத்தமல்லி இலை, அரைகப் ஊறவைத்த கடலைப்பருப்பு, ஒரு சிட்டிகை மஞ்சள், 1டீஸ்பூன் எண்ணெய், 1 டீஸ்பூன் கரம்மசாலா, தேவைக்கேற்ப உப்பு இருந்தா இதை ஈஸியா செஞ்சுடலாம்.

 பருப்பு ஊறவைக்க நேரமாகுமேன்னு நினைக்கவேண்டாம்.  கொதிக்கவைத்த தண்ணீரை ஃப்ளாஸ்க், அல்லது ஹாட்பேக்கில் விட்டு அதுல பருப்பைப்போட்டு மூடிவெச்சுடுங்க. ஜஸ்ட்... பதினஞ்சு நிமிஷத்துல ஊறிடும். அதுக்குள்ள, நீங்க காய் நறுக்கி, மசாலா அரைச்சு வெச்சுட்டு, சப்பாத்தியை ரெடிபண்ணுங்க.. இல்லைன்னா வேற வேலை ஏதாவது இருந்தா பாத்துட்டு வாங்க.

காலிஃப்ளவரை சின்னச்சின்ன பூக்களாக உதிர்த்து வெச்சுக்கோங்க, உருளைக்கிழங்கை ஒரு இஞ்ச் அளவுக்கு துண்டுபோட்டுக்கோங்க.
சீரகம், கொத்தமல்லி இலை, பச்சைமிளகாய், மஞ்சள், கரம்மசாலா இதையெல்லாம் நல்லா மசிய அரைச்சு வெச்சுக்கோங்க.

இப்ப, அடுப்பில் சூடாகிக்கிட்டிருக்கிற கடாயில் ஒரு டீஸ்பூன் எண்ணெய் விட்டு, காய்களையும், கடலைப்பருப்பையும் லேசா வதக்குங்க. அப்புறம் அரைச்சுவெச்ச மசாலாவை போட்டு நல்லா கிளறிவுடுங்க. பச்சைவாசனை போனதும் அதை ஒரு பாத்திரத்தில் போட்டு, அரைகப் தண்ணீரும் ஊத்தி, தேவையான அளவு உப்பும் போடுங்க. இப்ப, இதை குக்கரில் ரெண்டுவிசில் வரும்வரை வேகவிடுங்க. ப்ரஷர் பேனில் செய்யறதாயிருந்தா அப்படியே மூடிபோட்டு வெயிட்டை போட்டுடலாம்.


அவ்வளவுதான்... வெந்ததும் அதை மறுபடி ஒரு நிமிஷம் கொதிக்கவெச்சா இன்னும் ருசியாயிருக்கும். விரும்பினால் பச்சைப்பட்டாணியும் கூடுதலா சேர்த்துக்கலாம். இப்ப சீசன்தானே...

டிஸ்கி: விருந்து எதுக்குன்னு சொல்ல மறந்துட்டேனில்ல..... தமிழ்மணம் முதல்சுற்றில், 'பாறையில் ரெண்டுமண்டபம்' , அப்புறம், 'குழந்தைகள் பலவிதம்' ரெண்டும் தேர்வாகி ரெண்டாம் சுற்றுக்கு போயிருக்கு. வாக்களித்த அனைவருக்கும் நன்றி...



LinkWithin

Related Posts with Thumbnails