Tuesday, 13 March 2012

அறுவடை செஞ்ச அமோக பல்புகள்..


ஆனாலும் இது கொஞ்சம் பேராசைதான். இந்த ஊருக்கு வந்தப்புறம், தமிழ் நாட்டுல கிடைக்கறதெல்லாம் இங்கே கிடைக்கலியே.. முக்கியமா நமக்குத் தேவையான இந்தப் பொருளெல்லாம் கிடைக்கலையேன்னு அங்கலாய்க்கறதுல அர்த்தமே இல்லை. (மும்பையே என்றாலும் அது தமிழ் நாட்டைப் போலாகுமா!!.ன்னுதான் இப்பவும் பாடிக்கிட்டுத் திரியறது தனிக்கதை) அதுவும் சுமார் இருபது வருஷத்துக்கு முந்தைய நிலைமை. இப்போ மாதிரியா?.. இப்பல்லாம் வேணுங்கறதை நம்மாட்கள் கடையில் போயி சட்ன்னு வாங்கியாறலாம். அத்தியாவசப் பொருட்கள் தவிர தேவைப்படும் விசேஷப் பொருட்களும் சட்ன்னு கிடைச்சிருது.

புது ஊருக்கு ஏத்தமாதிரி வாழ்க்கையை நகர்த்தப் பழகிட்டாலும் இந்த ஊருக்கு வந்தப்புறம் முதல் பொங்கல் பண்டிகை வந்தப்ப மனசுக்கு ஏக்கமா இருந்தது. வீடு கழுவல், சுத்தப் படுத்தல்ன்னு அவலை நினைச்சு உரலை இடிச்சு பண்டிகையை வரவேற்க ஆயத்தமானாலும், கரும்பும் மஞ்சக்குலையும் வாழைப்பழமும், பனங்கிழங்குமா மணக்கும் நம்மூர்ப் பொங்கல் பண்டிகைக்கு ஈடாகலை!! அது செம்பூர், மாட்டுங்கா பகுதிகளைத் தவிர புற நகர்ப் பகுதிகளுக்கு தமிழகப் பொருட்கள் விற்பனைக்கு வராத போறாதகாலம் என்பதை நினைவில் கொள்க. ஜூஸ் கடையிலிருந்து ஒரு அடி நீளத்துல ரெண்டு வெள்ளைக் கரும்புத் துண்டுகளை வாங்கி வந்து சாஸ்திரத்துக்கு வெச்சாலும் பொங்கப் பானையைச் சுத்திக் கட்டுறதுக்கு மஞ்சள் குலைக்கு எங்கே போறது?ன்னு உக்காந்து அரிசியில் கல் பொறுக்கிக்கிட்டே யோசிச்சேன்.

ஊர்லேர்ந்து வரச்சே மங்களகரமா பேக்கிங்கை ஆரம்பிக்கணும்ன்னு சொல்லி, அரிசிப்பானைக்குள் அரிசியுடன் ஏழெட்டு குண்டு மஞ்சள்களையும் சேர்த்து வெச்சுருந்தாங்க. ஆஹா!!.. ஆப்டுச்சு ஐடியா. இங்கேயெல்லாம் பூக்கடைகளில் பூச்சரத்தை தேக்கிலையில் பொதிஞ்சு நல்ல ஏழெட்டு இழைகளாலான நூல்கயித்தால கடையில் கட்டிக் கொடுப்பாங்க. எதுக்காச்சும் உபயோகப்படுமேன்னு அந்த நூல்கயித்தைச் சேகரிச்சு வீட்ல எப்பவும் வெச்சிருப்பேன். அதுல கொஞ்சத்தை எடுத்தேன். மஞ்சப்பொடியை நல்லா தண்ணீர்ல குழைச்சு கயித்துல தடவிக் காய விட்டேன். காய்ஞ்சதும், அஞ்சாறு குண்டு மஞ்சள்களை அதுல கட்டி விட்டேன். நம்ம மஞ்சக்குலை ரெடி. அதை பானையின் கழுத்துல சுத்திக்கட்டி தலைப்பொங்கலை அமரிக்கையாக் கொண்டாடியாச்சு.

அங்கிருந்து நவி மும்பைப் பகுதிக்கு வீடு மாத்திக்கிட்டு போனப்ப ஆஹா!!.. ஒரு மினியிலும் மினி தமிழ் நாடே இங்க இருக்குதேன்னு கண்டுக்கிட்டேன். மஞ்சக்குலையும் கரும்புமா அங்கயிருந்தவரைக்கும் வாசனையோட பொங்கல் அமர்க்களப்பட்டது. நமக்கோ அடிக்கடி மாத்தலாகும் வேலைச்சூழ்நிலை. எல்லா இடத்துலயும் மஞ்சக்குலை கிடைக்குமுன்னு எதிர்பார்க்கவும் முடியாது. அதனால விவசாயி ஆகறதுன்னு முடிவு செஞ்சு ஒரு துண்டு மஞ்சளைத் தொட்டியில் நட்டு வெச்சேன்.

வந்தா சாமிக்கு,.. வரலைன்னாலும் சாமிக்குன்னு மனசைச் சமாதானப் படுத்திக்கிட்டாலும் தண்ணீர் ஊத்திக் கண்ணும் கருத்துமாப் பார்த்துக்கிட்டதுக்கு நல்லாவே விளைச்சல் கொடுத்துச்சு. அப்புறமென்ன?.. வருஷா வருஷம் பொங்கலுக்கு மஞ்சக்குலை நம்ம தோட்டத்தோட உபயத்துல தங்கு தடையில்லாமக் கிடைச்சிட்டிருந்தது. எப்பவுமே பொங்கல் முடிஞ்சதும் அறுவடை செஞ்ச கிழங்குகள்ல ஒரு துண்டை மறுபடி நட்டு வைக்கிறதுக்குன்னு எடுத்து வெச்சிட்டு, மிச்சத்தை சமையலுக்கும், காஸ்மெடிக் உபயோகத்துக்கும்ன்னு உபயோகப் படுத்துவேன்.

பசுமை மாறாம இருக்கற மஞ்சக்கிழங்கைத் தோல் சீவிட்டுச் சின்னச்சின்னத் துணுக்குகளா நறுக்கி நிழலில் நல்லாக் காயவெச்சு எடுத்துக்கிட்டு மிக்ஸியில் பொடிச்சுக்கலாம். கெமிக்கல் நிறமிகள் எதுவும் சேர்க்காத சுத்தமான மஞ்சப்பொடி சமையலுக்குத் தயார். இதே மாதிரி கடைகளில் கிடைக்கும் காய்ஞ்ச விரலி மஞ்சளை வாங்கிட்டு வந்து நல்லாக் கழுவி ஒரு இரவு முழுக்க தண்ணீரில் ஊற விட்டுட்டு, அப்புறம் இன்னொருக்கா ரெண்டு மூணு முறை தண்ணீரில் அலசிட்டு துணுக்குகளா நறுக்கிக் காயவெச்சும் வீட்லயே மஞ்சப்பொடி தயாரிச்சுக்கலாம்.

இது ஒரு சிறந்த கிருமி நாசினியா இருக்கறதுனால மருந்துகள்லயும் சருமத்துக்கான அழகு சாதனப் பொருட்கள்லயும் அதிகமா உபயோகப்படுத்தப் படுது. நம்மூரைப் பொறுத்தமட்டில் உணவே மருந்து. மருந்தே உணவுன்னு நோய்களை சாப்பாட்டாலயே விரட்டியடிச்சு ஆரோக்கியமா வாழறோம். அதனால சமையல்லயும் இது அதிக அளவுல சேர்க்கப்படுது. மஹாராஷ்ட்ரா,கோவா, கொங்கண், இந்தோனேஷியா போன்ற பகுதிகள்ல மஞ்சள் இலைகளையும் சமையலுக்கு பயன்படுத்தறாங்க.

கடலைமாவுடன், வெங்காயம், இஞ்சி, உப்பு, எண்ணெய், ரெட் சில்லி பவுடர், காயப்பொடி, மற்றும் எக்கச்சக்கமான கொத்தமல்லி இலைகளைச் சேர்த்துப் பிசைஞ்சு, சேப்பங்கிழங்கு இலைகளில் தடவிச்சுருட்டி, ஆவியில் வேக வைக்கணும். நல்லா வெந்ததும் ஸ்லைஸ் செஞ்சு அப்படியேவோ இல்லைன்னா தவாவில் ரெண்டு சொட்டு எண்ணெய்யில் வாட்டியோ சாப்பிடப்படும் ‘ஆலு வடி’ என்ற வஸ்து இங்கே ரொம்பவும் பிரசித்தம். இதில் சே.இலைகளுக்குப் பதிலா ம.இலைகளையும் பயன்படுத்திச் செய்வாங்க. மஞ்சள் வாசனையோட ரொம்பவே அருமையா, டேஸ்டியா, சத்தா இருக்கும். முக்கியமா மஹாராஷ்ட்ராவில் மஞ்சள் அதிகம் விளையும் சாங்க்லி பகுதியில் இது ரொம்பவே பிரபலமான உணவு.
சேப்பங்கிழங்கின் இலையில் செஞ்ச ஆலுவடி..
தாய்லாந்து, பெர்ஷியன் நாட்டுச் சமையல்ல இதுக்கு முக்கிய இடம் உண்டாம். மஞ்சப்பொடி சேர்க்காத இந்தியச் சமையல் உண்டோ!!.. அதுவும் அசைவம்ன்னா அதோட உடம்பு முழுக்க மஞ்சப்பொடி தடவி மஸாஜ் செஞ்சுட்டு அப்றம் சமைச்சு எடுக்கறதுதானே வழக்கம். இப்படிச் செய்யறதால அசைவத்துல இருக்கற கண்ணுக்குத் தெரியாத கிருமிகள் அழிக்கப்படுது. உலகத்துல பெருகி வரும் சுற்றுப்புற மாசு காரணமா நம்ம உடம்புக்குள்ள எவ்வளவு அசுத்தக் காத்து, வாகனங்கள் வெளியேத்தும் விஷ வாயுக்கள், நடமாடும் புகைபோக்கி எந்திரங்கள் வெளியேத்தும் சிகரெட் புகை எல்லாம் சேருது, அதனால நம்ம உடம்பு எவ்வளவு பாதிக்கப்படுதுன்னு சொல்லத் தேவையில்லை. ஆனா, நம்ம உணவில் தினசரி மஞ்சளைச் சேர்த்துக்கிட்டோம்ன்னா நம்ம ரத்தத்தைச் சுத்திகரிச்சு, அசுத்த வாயுக்கள் ஏற்படுத்தற பாதிப்புகள்லேருந்து நம்மைக் காப்பாத்துது.

வெளித்தாக்குதல்லேர்ந்து மட்டுமல்ல, உடம்புக்குள்ளே நடக்கும் அல்ஸீமர்ஸ், ஆர்த்ரைடிஸ் மாதிரியான தாக்குதல்கள்லேர்ந்தும் இது நம்மை பாதுகாக்குதான்னு கண்டுபிடிக்க ஆராய்ச்சிகள் நடந்துட்டிருக்குது. கான்சர் செல்களை இது அழிக்குதுன்னும் இதுவரையிலான ஆராய்ச்சியில் கண்டுபிடிச்சு, அதை நிரூபிக்க மேற்கொண்டு ஆராய்ச்சிகளும் நடந்துட்டு வருது. மஞ்சளிலிருக்கும் Tetrahydrocurcuminoids(THC)-ஐ பிரிச்செடுக்க தாய்லாந்து அரசு அந்தூரு ஆராய்ச்சியாளர்களுக்குப் பொருளுதவி செய்யுது. இந்த THC தோலின் நிறத்தைக் கூட்டுதுன்னு கண்டுபிடிச்சிருக்காங்க. தோல் சம்பந்தப்பட்ட வியாதிகளுக்கான மருந்துகள், காஸ்மெடிக்குகளில் இதை உபயோகப்படுத்தப் போறாங்களாம். வெள்ளைத்தோல் மோகம் யாரைத்தான் விட்டு வெச்சிருக்குது.

மங்களகரம்ன்னதும் நம்ம மனக்கண்ணுல மொதல்ல மஞ்சள்தான் வந்து நிக்குது. அதனாலத்தான் மாதாந்திர மளிகை லிஸ்ட்டாகட்டும், சுப நிகழ்ச்சிகளுக்காக தயாரிக்கிற பலசரக்கு லிஸ்ட்டாகட்டும், மஞ்சளைத்தான் லிஸ்டுல மொதல்ல எழுதுவாங்க. சுபச்செலவோட ஆரம்பிக்கணுமாம்.. அதேமாதிரி நாலு மூலைகளிலும் மஞ்சள் தடவி வர்ற அழைப்பிதழைப் பார்த்ததுமே, இது சுப நிகழ்ச்சிக்கானதுன்னும் நமக்குப் புரிஞ்சிருது இல்லையா..

நம்ம முன்னோர்கள் ரொம்பவே கில்லாடிகள்தான். இல்லைன்னா வெளி நாட்டுக்காரங்க ஆராய்ச்சி செஞ்சு இப்போ கண்டு பிடிச்சதையெல்லாம்,  எப்பவோ அந்தக் காலத்துலயே கண்டுபிடிச்சுச் சுவடிகள்ல எழுதி வெச்சுருக்க முடியுமா?. ஆயுர்வேதத்துலயும், நம்ம பாட்டிகளின் கைவைத்தியத்துலயும் இதுக்குத் தனியிடம் இருக்குதே. சளி, காய்ச்சல், இருமல், தீப்புண்,சரும வியாதிகள்ன்னு எந்த வியாதிக்கும் கஷாயத்தோட சேர்த்து உள்ளுக்குக் கொடுத்தும், வெளிப்பூச்சாகத் தடவியுமே குணப்படுத்திடுவாங்க. இருமல் வந்தாத்தான்னு இல்லை, பொதுவாகவே ராத்திரியில் ஒரு சிட்டிகை மஞ்சப்பொடி சேர்த்த பாலைக் குடிக்கிறதை வழக்கமா வெச்சுக்கிறது ரொம்பவே நல்லது.

வியாதிகளுக்கு மட்டுமல்ல பாம்பு, முதலை மாதிரியான விலங்குகளுக்கும் கூட மஞ்சள்ன்னா அலர்ஜி. வீட்ல மஞ்சள்செடி இருந்துச்சுன்னா அந்தப் பக்கமே பாம்பு எட்டிப் பார்க்காதுன்னு சொல்லிக்கிறாங்க. அதேமாதிரி உடம்பு முழுக்க மஞ்சளை அரைச்சுத் தடவிக்கிட்டு முதலைகள் இருக்கற குளத்துல இறங்கினா முதலைகள் நம்மை விட்டு ஓடிருமாம். ஆனாலும் இது கொஞ்சம் ஓவராத்தான் இருக்கு இல்லே.. விஷப்பரீட்சைக்குத் துணிஞ்சு யாரும் குளத்தில் ஐமீன் களத்துல இறங்கிடாதீங்க. அப்றம் மஞ்சள் தடவின கோழி நமக்கு விருந்தாகற மாதிரி, (மஞ்சள் தடவிக்கிட்ட) நாம முதலைக்கு விருந்தாகிருவோம். சாப்பிடறதுக்குத் தயாராத்தான் நம்மை அனுப்பியிருக்காங்கன்னு முதலை தப்புக் கணக்குப் போட்டுச் சாப்பிட்டுட்டு, “நல்லாத்தான் இருக்கு. காரம்தான் கொஞ்சம் கம்மி”ன்னு நொட்டை சொல்லிட்டுப் போயிரும் :-))

வருஷா வருஷம் செய்யும் வழக்கப்படி புதுத்தொட்டியில் மஞ்சக்கிழங்கை நட்டு வெச்ச கொஞ்ச நாளுக்கப்புறம் பார்த்தா பழைய தொட்டியிலும் கன்னுகள் முளைச்சு வந்துக்கிட்டிருந்தது. கொஞ்சமா வேர் மிச்சமிருந்தாக்கூடப்போதும். அதுலேர்ந்தும் புதுச்செடிகள் முளைச்சு வந்துருது போலன்னு நினைச்சுட்டு, அந்த கன்னுகளை வீணாக்க வேணாமேன்னு பிடுங்கி, புதுச்செடியோடவே நட்டு வெச்சு வளர்த்தேன். நல்லா தளதளன்னு தொட்டி நிறைய வளர்நது நின்னதுகளை சமீபத்திய பொங்கலுக்காக அறுவடை செஞ்சாச்சு. கொஞ்சம் அவசரப்பட்டதில் ஓரளவு பெரிய இலைகளோட இருந்த ஒரு செடி கிழங்கை தொட்டியிலேயே விட்டுட்டு, இலைப்பகுதி மட்டும் கையோட வந்துருச்சு. அப்றம் நிதானமா இன்னொரு செடியை எடுத்து பொங்கப்பானையில் கட்டி பண்டிகை கொண்டாடி முடிச்சது தனிக்கதை.

நல்ல மகசூல் இருக்கும்ன்னு நினைச்சுக்கிட்டு அகழ்வாராய்ச்சி செஞ்சதில் சுமார் ஐம்பது கிராம் அளவுக்கு மஞ்சள் தேறிச்சு. அவ்வ்வ்வ்வ்வ்வ்... ஏனோதானோன்னு கவனிக்கிறப்பல்லாம் நல்ல மகசூல் கொடுத்துட்டு, இப்ப பார்த்துப் பார்த்து கவனிக்கிறப்ப பல்பு கொடுத்துருச்சு.. சின்னச்சின்னதா சுமார் ஐம்பது கிராம் அளவுலான குண்டு பல்புகள். பல்புகளை உபயோகிக்கிறதைத் தவிர்க்கணும்ன்னு நடக்கற பிரச்சாரத்தை இது இப்படி தப்பாப் புரிஞ்சுக்கிச்சோ என்னவோ :-) சரி,.. உலகத்துல இருக்கற அத்தனை ஜீவன்கள் கிட்டயும் பாரபட்சமில்லாம பல்பு வாங்கியே தீரணும்ன்னு நாம கங்கணம் கட்டிக்கிட்டு காத்திருக்கறப்ப இது மட்டும் ஏமாத்திருமா என்ன?? :-)) 

ஊசிக்குறிப்பு: படங்கள்ல இருக்கறது எங்கூட்டுச் செடிகள்ன்னு சொல்லாமலேயே புரிஞ்சுக்கிட்டிருப்பீங்களே :-))


35 comments:

வெங்கட் நாகராஜ் said...

மஞ்சள் மங்களகரமா இருக்கு... பல்பு அதை விட சூப்பர்....

தமிழகத்தினை விட்டுச் சென்ற நம் போன்றவர்களுக்கு பண்டிகை சமயத்தில் கிடைக்காத விஷயங்கள் பல.... ஆனாலும் இருந்து தானே ஆக வேண்டியிருக்கிறது....

எல் கே said...

ரங்க்ஸ் இல்லாட்டி வாரிசுகள் கொடுத்த பல்புன்னு படிக்க வந்தா.... இப்ப நல்ல முன்னேறி செடிகிட்ட பல்பு வாங்கற அளவுக்கு வந்திருக்கீங்க. வாழ்த்துகள்

நித்திலம்-சிப்பிக்குள் முத்து said...

ஆகா.. மஞ்சள் செடியெல்லாம் வளர்க்கறீங்களா.. பரவாயில்லையே... ஆனா இந்த பல்ப் மேட்டர்தான் கொஞ்சம் வருத்தம்..போனாப்போகுது விடுங்க அடுத்த முறை நல்ல மகசூல் வந்து எக்ஸ்போர்ட் செய்யலாம்னு வாழ்த்துறேன்.....

Lakshmi said...

ஆஹா என்னே மஞ்சள் மகிமை நானும் டெரசில் தொட்டிவச்சு மஞ்சக்கிழங்கை நட்டுவப்பேன் நல்லா துளிர்விட்டு இலை தள, தளன்னு வரும் அடுத்தனா பறிச்சுக்கலாம்னு விட்டுடுவேன். மறு நாபோயிப்பாத்தா இலையெல்லாம் மாயமா மறைஞ்சிருக்கும். பக்கத்து வீட்டு பெங்காலிக்காரி இலையெல்லாம் பறிச்சுட்டு போயிருப்பா. சொல்லம கொள்ளாம கோவமா வரும். ஒரு வார்த்தை சொல்லிட்டு எடுக்கலாமில்லே. இல்லே ஆண்டி இந்த இலையில் ஒரு பாஜி பண்ணினா சூப்பரா இருக்கும் உனக்கும் டேஸ்ட்டுக்கு தரேன்னு கூலா சொல்லுவா. என்னத்த சொல்ல்?

ஹுஸைனம்மா said...

நாலஞ்சு நாளா சமையல்ல மஞ்சப்பொடி போடுறப்பல்லாம் ஒரே யோசனை, இதுல என்னத்தையெல்லாம் கலந்துருப்பானோ.. ஊருக்குப் போகும்போது முழுமஞ்சள் வாங்கிட்டு வந்து பொடி பண்ணிக்கனும்னு நினைப்பு ஓடிகிட்டிருந்துது.

அந்த எண்ண அலைகள் ஃப்ளைட் ஏறி மும்பை வந்துதோ என்னவோ. இந்தப் பதிவும் வந்துருக்கு. :-)))))

வீட்டில் மஞ்சளும் வளர்க்கலாம்கிறது புது செய்தி. ஆனா அதுக்கு பச்சை மஞ்சளுக்கு எங்கே போவேன்? கடைகளில் கிடைக்குமாப்பா?

//ஏனோதானோன்னு கவனிக்கிறப்பல்லாம் நல்ல மகசூல் கொடுத்துட்டு, இப்ப பார்த்துப் பார்த்து கவனிக்கிறப்ப பல்பு கொடுத்துருச்சு//

இது ஒரு பொதுவிதி போலருக்கு. ஸேம் ப்ளட்!! :-((((

மஞ்சப்பொடி தூவினாப்புல, அங்கங்கே நல்ல நகைச்சுவை தெளித்த ’தூள்’ படைப்பு. மிகவும் ரசித்தேன். மஞ்சப்பொடி போலவே பயனுள்ள குறிப்புகளும் உண்டு. மஞ்சப்பொடி மாதிரியே... சரி, சரி, அடிக்க வராதீக... :-)))

வாழையும் வச்சிருக்கீங்க போல... அப்ப ‘ஈரல்குலை போன்ற வாழைக்குலை’ன்னு பதிவு வரும் நாளை ஆவலோடு எதிர்பார்க்கிறேன்!! ;-)))))

Asiya Omar said...

மஞ்சளின் மகிமை சூப்பர்.நல்ல பகிர்வு.

கணேஷ் said...

மஞ்சள் ஒரு கிருமிநாசினின்னு கேள்விப் பட்டிருக்கேன. அதனாலதான் முன்னாட்களில் பெண்கள் முகத்தில் பூசிக் குளிச்சாங்கனனும் கேள்விப்பட்டிருக்கேன். இவ்வளவு விரிவி இப்பத் தெரிஞ்சுக்கிட்டேன். அடுத்த முறை பல்பு தராம மஞ்சள் உங்களுக்கு மகிழ்ச்சி தரணும்கறது என்னோட வாழ்த்து.

ராமலக்ஷ்மி said...

மஞ்சளைப் பற்றி நிறைய தெரிந்து கொள்ள முடிந்தது. ஆலுவடி இப்போதான் கேள்விப்படுகிறேன்.

ஆம், அடுத்த வருடம் அமோகமா இருக்கட்டும் விளைச்சல், என்ன செய்ய என்ன செய்யன்னு எங்க எல்லோருக்கும் பார்சல் அனுப்பும் அளவுக்கு:)!

Sekar said...

நல்ல அனுபவப்பதிவு அருமை வாழ்த்துகள்.

ஹேமா said...

சாரல்....மஞ்சளைப் பற்றி ஒரு பெரிய பாடமே எடுத்திட்டீங்க.சில விஷயங்கள் புதிதுதான்.அதுவும் மஞ்சள் இலைகளைச் சமைக்க எடுப்பது.
மஞ்சள் ஒரு கிருமிநாசினி.வெள்ளைக்காரர்கள்கூட அறிந்து பயன்படுத்துகிறார்கள் !

கோவை2தில்லி said...

மஞ்சள் பற்றி அருமையான பதிவு.

பண்டிகைக் காலங்களில் மட்டுமல்ல எப்போதுமே புலம்பலுண்டு. என்ன இருந்தாலும் தமிழ்நாடு போல வராதுன்னு.....என்ன செய்வது....

அடுத்த வருடம் நல்ல மகசூல் தந்தவுடன் எனக்கும் அனுப்பிடுங்கன்னு சொல்லணுமா....நீங்களே அனுப்பிடுவீங்களே...

பாச மலர் / Paasa Malar said...

மஞ்சள் வாசனையுடன் நல்லபதிவு..அந்த சேப்பங்கிழங்கு இலை சமாச்சாரம்...பாக்கறதுக்கே வித்தியாசமா இருக்கு..சீக்கிரமே மஞ்சள் அமோக விளச்சல் காண வாழ்த்துகள்..

ஸ்ரீராம். said...

படிச்சு முடிச்ச உடன் கண்ணு, கை எல்லாம் மஞ்சளாப் போற அளவுக்கு மஞ்சள் பற்றிய விவரங்கள். நல்ல கலெக்ஷன். ஆலுவடி பற்றி நானும் இப்போதான் தெரிஞ்சிகிட்டேன். சே. இலை, ம. இலை கிடைக்காட்டா வா. இலையில் வைக்கலாமோ...?!! முதலை விவரம் சிரிப்பை வரவழைத்தது!

thirumathi bs sridhar said...

ஆலு வடி இப்பதான் முதல் முறை கேள்விபடுகிறேன்.மஞ்சளுக்காக விவசாயத்தில் ஈடுபட்டதும்,பல்பு வாங்கியதாக பகிர்ந்துள்ளதும் சுவாரஸ்யம்.நல்ல பகிர்வுங்க.

வல்லிசிம்ஹன் said...

ஆஹா மஞ்சள் மஹிமை!! முதலை மகிமை;)
எத்தனை விவரம் சாரல்!!எங்க பாட்டி இங்க சேம்பு, மஞ்சள் இரண்டும் சேர்ந்து போடுவாங்க.
சேம்பு இலைல அடை செய்து சாப்பிடுவோம்.
அடுத்த விளைச்சல் நல்ல இருக்கட்டும்னு வாழ்த்தறேன்.

மாதேவி said...

மங்சள் குளித்து அள்ளிமுடித்து.....:))

ஆலுவடி புதிதாக இருக்கின்றது.

இராஜராஜேஸ்வரி said...

நம்ம முன்னோர்கள் ரொம்பவே கில்லாடிகள்தான். இல்லைன்னா வெளி நாட்டுக்காரங்க ஆராய்ச்சி செஞ்சு இப்போ கண்டு பிடிச்சதையெல்லாம், எப்பவோ அந்தக் காலத்துலயே கண்டுபிடிச்சுச் சுவடிகள்ல எழுதி வெச்சுருக்க முடியுமா?

அமைதிச்சாரல் said...

வாங்க வெங்கட்,

பல்பு ஜூப்பரா இருக்குதா?.. அவ்வ்வ்வ்வ்வ்.

வரவுக்கு நன்றி.

அமைதிச்சாரல் said...

வாங்க எல்.கே,

லாங் லீவுல இருக்கீங்களா என்ன?.. பதிவுகளை காணோமே. அடிக்கடி எழுதுங்க.

நாளப்பின்ன எனக்கு பல்பு கொடுக்கலையேங்கற குறை அந்தச்செடியோட மனசுல வந்துரக்கூடாதில்லையா.. அதான் பாரபட்சமில்லாம வாங்கிட்டிருக்கேன் :-))

அமைதிச்சாரல் said...

வாங்க சங்கரி,

உங்க வாக்குப் பலிச்சா அம்பேரிக்கா முதல் அண்டார்டிகா வரைக்கும் ஹோல்சேல் முறையில் நயமான மஞ்சள் ஏற்றுமதி செய்யப்படும்ன்னு போர்டு செய்ய ஆர்டர் கொடுக்கலாம்ன்னு இருக்கேன் :-))

அமைதிச்சாரல் said...

வாங்க லஷ்மிம்மா,

சமைச்சுக் கொடுக்க ஆளெல்லாம் இருக்குதா உங்களுக்கு?.. பரவால்லையே :-))

கடைத்தேங்காயை எடுத்து நல்லாவே வழிப்புள்ளையாருக்கு உடைக்கிறாங்க அந்தம்மா ;-)

அமைதிச்சாரல் said...

வாங்க ஹுஸைனம்மா,

அதென்ன வாங்கிட்டு வந்து பொடி செஞ்சுக்கறது?.. பொடியாவே கொண்டாரலாமில்லே..

ஊருல விடுமுறையை நல்லா எஞ்சாயுங்க :-)

வருகைக்கும் ஒரு இடுகையை தேத்த ஐடியா கொடுத்ததுக்கும் நன்ன்னிங்கோ..

அமைதிச்சாரல் said...

@ஹுஸைனம்மா,

பெரிய மால்களிலும் இப்போ இஞ்சியை மாதிரியே பச்சை மஞ்சளையும் பாக்கெட் போட்டு விக்கிறாங்க. உங்கூருலயும் கிடைக்குதான்னு பாருங்க. கிடைச்சா விடாதீங்க.

அமைதிச்சாரல் said...

வாங்க ஆசியா,

வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க..

அமைதிச்சாரல் said...

வாங்க கணேஷ்,

மஞ்சப்பூசிக் குளிக்கிறது நம்ம தென்னிந்தியப் பெண்களுக்கே உரித்தான ஒரு அடையாளம். அந்த அடையாளம் நம்மூர்லயே தொலைஞ்சுட்டு வர்றது வருத்தம்தான்.

வடக்கே கல்யாணங்கள்ல ஹல்தின்னு ஒரு சடங்கு நடக்கும். பெண், மாப்பிள்ளைன்னு ரெண்டு பேருக்குமே மஞ்சப்பூசி நலங்கிடுவாங்க.

அமைதிச்சாரல் said...

வாங்க ராமலக்ஷ்மி,

உங்க வாக்குப்பலிக்கட்டும்..

நன்றிங்க.

அமைதிச்சாரல் said...

வாங்க சேகர்,

ரொம்ப நன்றிங்க.

அமைதிச்சாரல் said...

வாங்க ஹேமா,

நாம பூவரசு,வாழை இலைகள்ல பொதிஞ்சு பணியாரம் அவிக்கிற மாதிரிதான் இங்கே மஞ்சள் இலையை உபயோகிக்கிறாங்க.

வரவுக்கு நன்றிப்பா.

அமைதிச்சாரல் said...

வாங்க ஆதி,

ஆஹா!!.. சொல்லணுமா என்ன?.. ப்ளைட்ல போட்டு அனுப்பிடறேன். கண்டக்டர் கிட்ட சொல்லி டெலிவரி வாங்கிக்கோங்க :-))

அமைதிச்சாரல் said...

வாங்க பாசமலர்,

இன்னொரு ரெசிப்பி பதிவு போட்டுருவோம்..

நீங்க வேணாம்.. வேணாம்ன்னு அலறுனாலும் விடப்போறதில்லை. அந்த விஷயத்துல நான் ரொம்ப ஸ்ட்ரிக்டு.. ஸ்ட்ரிக்டு.. ஸ்ட்ரிக்டு :-))

அமைதிச்சாரல் said...

வாங்க ஸ்ரீராம்,

வா..இலையில் சாப்பிடலாம். வா. இலையைச் சாப்பிடலாமோ.. :-))

அமைதிச்சாரல் said...

வாங்க ஆச்சி,

ஹி..ஹி..

ரொம்ப நன்றிங்க வரவுக்கு..

அமைதிச்சாரல் said...

வாங்க வல்லிம்மா,

வாசிச்சதுக்கும் வாழ்த்துக்கும் ரொம்ப நன்றிம்மா..

அமைதிச்சாரல் said...

வாங்க மாதேவி,

ஆலுவடிக்கு அதிக ஓட்டுகள் விழுதேப்பா.. ரெசிப்பி கன்ஃபர்ம்டு ;-)

அமைதிச்சாரல் said...

வாங்க ராஜராஜேஸ்வரி,

வாசிச்சதுக்கும் வரவுக்கும் நன்றிங்க.

LinkWithin

Related Posts with Thumbnails