Monday 30 August 2010

இந்த கொசுத்தொல்லை தாங்கலைங்க....

கொசு கடிச்சா என்னாகும்....

சுரீர்னு வலிக்கும், நமநமன்னு ஊறல் எடுக்கும், பட்....டுனு அடிச்சிபோட்டுட்டு அடுத்த வேலையைப்பாக்க போயிடலாம். இப்பல்லாம் அதுங்களை மின் தகனம் செய்யன்னே சைனாக்காரன் bat-ல்லாம் கண்டுபிடிச்சிருக்கான். சுவிட்சை லேசா அழுத்திக்கிட்டு 'பறக்கும்....கொசு பறக்கும்...'ன்னு பாடிக்கிட்டே டென்னிஸ் விளையாடுற நெனப்புல கொசு அடிக்கலாம். ஸ்கோர் செட்டிங்கா.... அது உங்க விருப்பம்.

கடிச்ச கொசு சும்மா போகாதுங்க . டாக்டர் நம்ம கையிலே ஸ்பிரிட்டை தடவி ஊசி போடற மாதிரி, இது எச்சிலைத்தடவி இல்லே குத்திட்டு போயிருக்கு. 'அய்யே.... என்பவர்களுக்கு ஒரு நற்செய்தி,...'இந்த எச்சிலில் கிருமிகள் இருக்கு',.... 'அய்யய்யோ' என்பவர்கள் கவனிக்க... அவை அத்தனையும் மலேரியா கிருமிகள். இதோட மொத்த, சில்லறை வியாபாரங்களுக்கு அணுகுவீர்..' Anopheles' கொசுவை.


வியாபாரம்னா நாலும் இருக்கணும்.... இவர்கிட்டேயும் ,
1.plasmodium vivax... Benign malaria
2.plasmodium malaria -- Quartan malaria
3.plasmodium falciparum-- Malignant tertian
4.plasmodium ovale -- Mild tertian

நாலு வகை இருக்கு. எல்லாமே நாம இருக்கிற இடத்துக்கே வந்து சப்ளை செஞ்சுடுவாங்க.

மலேரியான்னா 'கெட்ட காத்து'ன்னு அர்த்தமாம். இந்த வார்த்தைய 1763-ல் Ford- என்பவர் மொதமொதல்ல உபயோகிச்சிருக்கார். அப்போல்லாம்.. கெட்ட காத்தாலதான் மலேரியா பரவுதுன்னு நம்பிக்கிட்டிருந்திருக்காங்க. Dr.King என்ற புண்ணியவான்தான், காத்துல இருக்கிற கொசுவால பரவுதுன்னு 1883-ல கண்டுபிடிச்சு சொன்னாரு.

'பிறக்க ஓரிடம், பிழைக்க ஓரிடம்' அப்படிங்கறது இதுங்களுக்குத்தான் பொருந்தும். 'மனிதனில் பாதி... கொசுவில் பாதி'ன்னு வளருதுங்களே...

மனுசனைக்கடிச்சதும், அதனோட உமிழ் நீரோடு சேர்ந்து கிருமிகளும் 'சொய்ங்ங்க்'ன்னு மனுச ரத்தத்தில் சேர்ந்து விடும். இப்போ இதோட பேரு 'sporozoites'. ஒத்தைக்கொரு ந்யூக்ளியஸ்... அதைச்சுத்தி எலாஸ்டிக் கியூடிகிள், அவ்ளவுதான் அங்க அடையாளம். (ஆனா இதுங்கதான் மனுசனை 'உன்னைப்பிடி... என்னைப்பிடி'...என்று ஆக்கிடுது.)

இதுங்கள்ளாம் ஜம்முன்னு, ரத்தத்துல மெதந்துகிட்டே... ஈரலுக்கு போய் சேர்ந்துடும். ஏனா?.... ஏன்னா.. அங்கேதான் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமா வளரும்..இப்போ அதுங்களோட அடை காக்கும் பருவமாம். இந்த நேரத்துல கூட , அதுங்க ரத்தப்பரிசோதனையில தெரியாது...அதுக்கு இன்னும் காலமிருக்கு. கடைசியில ஈரல்ல இருந்து வெளிய வந்து ரத்தத்துல கலந்துடும்.

சும்மா ஒரு 40-60 நொடிகளில், சிவப்பணுக்களை ஆக்கிரமித்துக்கொள்ளும். இந்த நிலையில் இதன் பேர் Trophozoite. அங்க போய் சும்மா இருக்காது. அதுங்களுக்கு ஊட்டச்சத்து வேணுமில்லே.... கொஞ்சம் கொஞ்சமா சிவப்பணுவின் செல் திரவத்தை உறிஞ்சி வளரும். நம்ம உடம்புல இருக்கிற ஹீமோகுளோபின் கொறைய ஆரம்பிக்கும்.ஹீமோகுளோபின் செரிமானமாவதன் பக்கவிளைவாக, கிருமியோட செல் திரவத்தில் சின்னச்சின்ன புள்ளிகள் தோன்றும். (இந்த புள்ளிகளை haemozoineன்னு சொல்லலாம்). கொஞ்ச நாளுக்கு பிறகு, தன்னோட ஆட்டத்தையெல்லாம் மூட்டை கட்டி வச்சிட்டு,, தன்னை ஒரு ரிங் (b)பால் மாதிரி வளையமாக்கிக்கிடும்.

இந்த ரிங்(b)பாலுக்கும்( இனிமே இதை schizont-ன்னே சொல்லலாம்) நம்ம சிவப்பணுதான் உணவு. மனுஷங்களுக்குதான் எல்லா கவலையும். இதுங்களுக்கு என்ன...சாப்பாடு... தூக்கம்... அதுக்குபிறகு என்ன... இனப்பெருக்கம்தான். இப்போ ஒன்னா இருந்த கரு, பலவா பெருகியிருக்கும். கூடவே வெஷத்தன்மையும் உருவாகியிருக்கும். அப்டியே இருந்தா கிருமிங்களோட பேரு கெட்டுப்போகாதா :-) .. அதனால,.. எல்லாம் ரத்தத்துல சேர்ந்துடும். மறுபடியும் ஆரம்பத்திலேர்ந்து எல்லாத்தையும் ஆரம்பிக்கும். இப்டியே.. ஒவ்வொரு செட்டா கொண்டாந்து, ரத்தத்துல சேர்க்கும். எவ்வளவுக்கு செட்டு சேருதோ, அவ்வளவுக்கு காய்ச்சல் வரும். கிருமிங்க ரத்தத்துல நுழையிறதிலிருந்து, காய்ச்சல் வர்ற வரை உள்ள காலத்தை, inoculation' காலம் ..அப்டின்னு சொல்வாங்க.

இதுவே, கொசு உடம்பில் மலேரியா கிருமி நுழைஞ்சா, என்ன ஆகும்...



(அடுத்த பாகத்தில் முடியும்)





Friday 27 August 2010

ப்ரெட் ஊத்தப்பம்ன்னே சொல்லலாம்...

சமையல் செய்யும்போது, மீதமாக்கி வீணாக்காம அளவா சமைக்கணும். நாட்டுல இப்போ விலைவாசி இருக்கிற நிலைமைல எந்த ஒரு பொருளையும் வீணாக்குறதே தேசத்துரோகம்தான். அதிலும், சாப்பாடு இல்லாம, எத்தனையோ பேர் கஷ்டப்படுறப்போ... உணவுப்பொருளை வீணாக்கலாமா??...அதுக்குத்தான் ஃப்ரிஜ் இருக்கே.. வெச்சிருந்து சூடாக்கி சாப்பிடலாமேங்கிறீங்களா!! ஒருதடவைக்கு மேல சாப்பாட்டை சூடாக்கினாலே, அதோட டேஸ்டும், பயனும் போயிடுது. திரும்பத்திரும்ப சூடாக்கப்படற உணவு கண்டிப்பா விஷத்துக்கு சமம்தான்.

அதுக்காக,..மிஞ்சிக்கிடக்குதேன்னு சாப்பிட்டு வைக்கமுடியுமா.. அது தேவையில்லாத உடல்பருமனைத்தான் கொண்டு வரும். ரெண்டே கரண்டி தோசைமாவு மிச்சம் வந்துடுச்சு,.. சாப்பிடவும் முடியல்லை, வீணாக்கவும் மனசு வரல்லையா!!! கவலையே வேண்டாம்,  ஊத்தப்பம் செய்யலாம். சாயந்திர டிபன் ரெடி..

தேவையானவை;

தோசைமாவு - 1 கப். (கூடுதலா இருந்தாலும் தப்பில்லை :-))
கடலைமாவு-1/2 கப்.
வறுத்த ரவை-2 டீஸ்பூன்.
நறுக்கின வெங்காயம்-1/2 கப்.
நறுக்கின கொத்தமல்லி இலை-ஒரு கைப்பிடி.
மிளகாய்த்தூள்(ருசிக்கேற்ப)-1 டீஸ்பூன் தாராளம்.
உப்பு- ருசிக்கேற்ப.
எண்ணெய்- தேவையான அளவு.
ப்ரெட்-6 ஸ்லைஸ்.
வெண்ணெய்- கொஞ்சூண்டு.

எப்படி சமைக்கிறது!!!

சின்ன வாணலி ஒண்ணை அடுப்பில் வெச்சு, ஒரு ஸ்பூன் எண்ணெயை சூடாக்கி, வெங்காயத்தை, லேசா வதக்கி எடுத்துக்கோங்க.

ப்ரெட், வெண்ணெய், எண்ணெய் தவிர மிச்சமிருக்கிற பொருட்களை கலந்துக்கோங்க. உப்பு, உறைப்பு சரி பார்த்துக்கலாம்.
தோசைக்கல்லை அடுப்பில் வெச்சு சூடாக்குங்க.
ப்ரெட் ஸ்லைஸ்களின், ரெண்டு பக்கமும் லேசா வெண்ணெய் தடவி, தோசைக்கல்லில் வெச்சு, லேசா வாட்டி எடுத்துக்கோங்க. லேசா பொன்னிறம் வந்தாப்போதும். எல்லா ஸ்லைசுகளையும் இப்படியே தயார் செஞ்சு எடுத்துக்கோங்க.

இப்போ ஒரு ஸ்லைசை தவாவில் வெச்சு அதுமேலே, மாவுக்கலவையை கொஞ்சூண்டு ஊத்தி நல்லா பரத்தி விடுங்க. அப்புறம், அதை திருப்பிப்போட்டு, மறுபக்கத்திலும் மாவுக்கலவையை பூசிவிடுங்க. இப்ப,.. ஸ்லைசை சுத்தி கொஞ்சூண்டு எண்ணெய் விடுங்க. நார்மலா தோசைக்கு ஊத்துவோமில்லையா!! அதுமாதிரி போதும்.

இப்ப... மூடிபோட்டு வேகவிடுங்க. தீ நிதானமா எரியட்டும்.. ஒண்ணும் அவசரமில்லை.

லேசா பஜ்ஜிவாசனை வந்ததும், ஸ்லைசை திருப்பிப்போடுங்க. மறுபடியும் எண்ணையை ஊத்தி, மூடிவிட்டு வேகவிடுங்க. ரெண்டு பக்கமும் நல்லா வேகணும். கொஞ்சம் பொன்னிறமாக்கூட சமைச்சுக்கலாம். கடலைமாவும், வெங்காயமும் சேர்ந்து லேசா பஜ்ஜி வாசனை வரும். ஆஹா!!.. சர்ர்ர்ரியான பதம்.

சும்மா அப்படியே வெச்சு பரிமாறிடக்கூடாது.. ஒவ்வொரு ஸ்லைசையும், கத்தியால குறுக்கு நெடுக்கா துண்டு போட்டு அழகா பரிமாறணும். இங்கே அப்படி இல்லையேன்னு கேக்குறீங்களா!!!. கடிச்சுத்தானே சாப்பிடப்போறோம்ன்னு அப்படியே வெச்சுட்டேன். ஹி..ஹி..ஹி. அடை, பெசரட்டுகளுக்கான மாவு மிஞ்சிடுத்துன்னா இன்னும் வசதி. அப்படியே ப்ரெட்டுல தடவி சுட்டெடுத்துடலாம். தேவையான எல்லாம்தான் ஏற்கனவே அதுல இருக்கே..... ஒரே மாவுல ரெண்டு டிபன் :-)))))) எப்பூடி..........

Saturday 21 August 2010

நாஞ்சில் நாட்டு சமையல் - (எரிசேரி, அவியல்)

என் மேல தப்பில்ல... சொல்லிட்டேன். எல்லாம் இந்த கவிமணி தாத்தாவால வந்தது. ஊர்லேர்ந்து வாங்கிட்டு வந்த 'நாஞ்சில் நாட்டு மருமக்கள் வழி மான்மியம்' என்னை இங்கே கொண்டாந்து நிறுத்திட்டுது. ரொம்ப ஆசைப்பட்டு தேடி வாங்கிய புத்தகமாக்கும். படிச்சிட்டு இருக்கையில,.. எச்சில் ஊறவைக்கும் ஒரு செய்யுள்;

'அவியல் பொரியல் துவையல் தீயல்
பச்சடி தொவரன் கிச்சடி சட்டினி

சாம்பார் கூட்டுத் தயிர்ப்புளி சேரி
சேனை ஏத்தன் சேர்த்தெரி சேரி
பருப்பு பப்படம் பாயசம் பிரதமன்
பழமிவை யோடு படைப்புப் போட '

இத்தனை கறிவகைகளும், ஓணம்,விஷூ, பொங்கல், புத்தரிசி பொங்குதல், பின்னே ஒரு நல்ல நாள், பெரிய நாள்கள்ல செய்றது உண்டு. இதுல,..நாடு முழுக்க தேடுனாலும் சரி.. நாஞ்சில் நாட்டு அவியலுக்கும், எரிசேரிக்கும் உள்ள ருசி வேற எங்கியும் கிடைக்காது. பின்னே, இப்ப ஓணம் வேற வருதா, கடைகள்ல அதுக்குண்டான கறிகாய்களும் கிடைக்குது. செஞ்சு பார்த்து ருசியுங்க.

1.கால் கிலோ சேனையை செதுக்கி வெச்சுக்கணும். கவனிக்க: நறுக்கச்சொல்லல. ஒரு ஓரமா ஆரம்பிச்சு,சேனையை உருட்டி, உருட்டி... அப்படியே சின்னச்சின்ன துண்டுகளா செதுக்கிக்கிட்டு வரணும். துண்டுகள் சின்ன பிரமிட் மாதிரி (முக்கோண சைஸ்ல) தானாவே வரும். இதை ஒரு பாத்திரத்துல தண்ணியில போட்டு வைக்கணும். இதே போல ஒரு ஏத்தங்காயையும் செதுக்கி தனியா, தண்ணியில போட்டு வைக்கணும்.

2. அரை டீஸ்பூன் சீரகம், அரை டீஸ்பூன் நல்லமுளகு ரெண்டையும் உடைச்சு வைக்கணும்.

3. ரெண்டு கப் தேங்காப்பூவை எடுத்துக்கணும். அதுல ஒரு கப் தேங்காப்பூவை முக்கால் டீஸ்பூன் மிளகாய்ப்பொடியோட சேர்த்து, பட்டுப்போல அரைச்சு வைக்கணும். மிச்சமிருப்பதை, மிக்ஸியில லேசா, சதைச்சாப்ல சுத்தி எடுக்கணும். இது எதுக்குண்ணாக்க ,.. தேங்காப்பூ, எரிசேரியில கொத்துக்கொத்தா இருந்தா, பல்லுல மாட்டும் மக்ளே :-))).

இப்பம், சேனையை அடுப்புல வெச்சு, தண்ணி ரெண்டு கொதி வரும்வரை சூடாக்கணும். பின்னே, அந்த தண்ணிய இறுத்து எடுத்துட்டு, சேனையை பின்னேயும் ரெண்டு கப் நல்ல தண்ணியில வேகவிடணும். (இது எதுக்குண்ணாக்க,.. சேனையை அப்படியே சமைச்சா, சாப்பிடும்போது, தொண்டையில் கிச் கிச் வரும்).இப்போ இதுகூட, வாழைக்காயை கழுவிப்போடணும்.

இப்பம், மஞ்சப்பொடி, உடைச்ச முளகுப்பொடி.. இது ரெண்டையும் காய்க்கலவையில போட்டு கொதிக்கவிடணும். மறக்காம காய்க்குண்டான உப்பையும் போடணும். அரை வேக்காடு ஆனபின்னே, அரைச்ச தேங்காய்க்கலவையை போடணும். தானமா, தண்ணியையும் சேர்த்துக்கணும். ஒரு டீஸ்பூன் தேங்காயெண்ணையை அதுல விட்டு நல்லா வேகவிடணும்.

இப்பம், ஒரு சின்ன சீனிச்சட்டியில(வாணலி)ரெண்டு ஸ்பூன் தேங்காயெண்ணையை விட்டு கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை, பின்னே, சதைச்சு எடுத்துவெச்ச தேங்காய் எல்லாத்தையும் போட்டு, தேங்காய் நல்லா சிவந்து வர்றவரை கிண்டணும். கருகிறக்கூடாது. இதை கொதிச்சுக்கிட்டு இருக்கிற எரிசேரிக்கலவையில ஊத்தி, கிளறிவிடணும். பின்னேயும் கொஞ்ச நேரம் கொதிக்கட்டும். எரிசேரி லேசா குழைஞ்சாப்ல இருக்கணும். உப்பு உறைப்பு சரியா இருக்கான்னு சரி பார்த்துக்கோங்க. இப்பம் கடைசியா அரைடீஸ்பூன் தேங்காயெண்ணையை விட்டு , ஒரு இணுக்கு கறியப்பிலையையும் உருவிப்போட்டு மூடிவிடணும். அவ்வளவுதான்.. எரிசேரியை இறக்கிடலாம்.

எரிசேரி ரெடி..

***************

இப்பம்.. அவியல் செய்யலாம்:

தேவையானவை:

சீனியவரைக்காய் - 100 கிராம்.
சேனை - கால்கிலோ.
முருங்கைக்காய் - 1
பேயன் அல்லது சிங்கன் வாழைக்காய் - 1 ( நாட்டு வாழைக்காய்ன்னும் சொல்லுவாங்க )
கத்தரிக்காய் - 2.
புடலங்காய் - சுமார் நாலு இஞ்சு நீளத்துக்கு.
வழுதலங்காய் ( நீளமாக இருக்கும் பச்சைக்கத்தரிக்காய் - 1
வெள்ளரிக்காய் - சின்னத்துண்டு.
தடியங்காய் - சின்னத்துண்டு ( வெள்ளைப்பூசணியைத்தான் சொன்னேன் :-))))
கோவைக்காய் - 5 எண்ணம்.
மாங்காய் - பாதி.

மசாலாவுக்கு:
தேங்காய் - 1 மூடி.
பச்சைமிளகாய் - 3
சீரகம் - அரை டீஸ்பூன்.
மஞ்சள் பொடி - ஒரு சிட்டிகை.

எப்படி செய்யணும்????

சீனியவரைக்காய், சேனை ரெண்டையும் ஒண்ணரை அங்குல நீளத்துண்டுகளா அரிஞ்சு, தனித்தனி கிண்ணங்கள்ல போட்டு வைக்கணும்.

முருங்கைக்காய், கத்தரிக்காய், புடலங்காய், வழுதலங்காய், சிங்கங்காய், (நெல்லை மண்ணில் இதை படத்திக்காய்ன்னு சொல்லுவாங்க) முதலான எல்லாக்காய்களையும் ஒன்னரை இஞ்சு நீளத்துக்கு மெல்லிசா நறுக்கிவைக்கணும்.

மசாலாவை, ஒன்னுரெண்டா சதைச்சு வைக்கணும்.

மொதல்ல, ஒரு வாணலியில ஒரு டீஸ்பூன் தேங்காயெண்ணையை விட்டு அதுல, சீனியவரைக்காயைப்போட்டு லேசா நிறம் மாறும்வரை வதக்கணும். அப்புறம் ஒரு கப் தண்ணீர் விட்டு, அதனுடன் சுத்தம் செஞ்ச சேனையை போடவும். லேசா கொதிவந்ததும் இறக்கி, தண்ணீரை வடிச்சுட்டு, நல்ல தண்ணியில ரெண்டு தடவை அலசி, தண்ணீரை இறுத்துக்கணும்.

இன்னொரு பாத்திரத்தில் எல்லாக்காய்களையும், சுத்தம் செஞ்சு போட்டு, அரை டீஸ்பூன் உப்பிட்டு வேகவைக்கணும்.இதோட சேனை, சீனியவரையையும் சேருங்க. காய்களிலிருக்கும் தண்ணீரே போதுமானது. தேவைப்பட்டா ரெண்டு ஸ்பூன் தண்ணீரை மருந்து மாதிரி விடணும். அதுக்கு மேல விட்டா குழம்பாயிடும். அவியல் செஞ்சு முடிக்கிறவரை, அடுப்பு மிதமாவே எரியட்டும்.

மாங்காய் கல்லுப்போல இருந்தா, எல்லாக்காய்கறிகளோடவே போட்டுடலாம். கொஞ்சம் பிஞ்சா இருந்தா, மசாலா போடும்போது சேர்க்கலாம். மாங்காய் போடுறதா இல்லைன்னா, ரெண்டு ஸ்பூன் தயிரைச்சேருங்க. ஏன்னா காயில் லேசா புளிப்பு வரணும்.

முக்கால் வேக்காடு வந்ததும், அரைச்சு வெச்சிருக்கிற மசாலாவை காய்களோட சேர்த்து, இன்னொரு அரைஸ்பூன் உப்பு, ஒரு டீஸ்பூன் தேங்காயெண்ணெய், உருவிய கறிவேப்பிலை எல்லாம் சேர்த்து லேசா கிளறி, மூடி போட்டு வைச்சிடுங்க. அவியல்ல இருக்கிற காய் நல்லா வெந்தப்புறம், இறக்கி ஆறினபிற்பாடு ரெண்டு ஸ்பூன் தயிரைவிட்டு லேசா கலந்துடுங்க. சூடா இருக்கும்போது தயிரை சேர்த்தா, நீர்த்துப்போயிடும்.. அவியல் நல்லாருக்காது . கவனமா இருங்க.அவ்வளவுதான்... அவியல் மணம், சாப்பிடணும்ன்னு கொதியை உண்டாக்கும் :-))))))

தமிழ் நாட்டின் மத்த பகுதிகள்லயும், கேரளாவுலயும் எப்படியோ??.... நாஞ்சில் நாட்ல இப்படித்தான் செய்வாங்க.
அவியல் ரெடி...
படம் நாளக்கழிச்சு, ஓணத்துக்கு அவியல், எரிசேரி செய்யும்போ... எடுத்துப்போடுகேன் :-)))))).

படம் போட்டாச்சு..

Friday 20 August 2010

ஆத்தா... நான் கவிதை எழுதிட்டேன்!!!..............

அது ஒரு அழகிய இளவேனில் காலம். அதாவது சூரியன் சுட ஆரம்பிக்காத காலைப்பொழுது. வழக்கம்போல கல்லூரிக்கு வந்தப்புறம்தான், வழக்கம்போல ஸ்ட்ரைக் நடக்குதுன்னு தெரிஞ்சது. இன்னிக்கி என்ன காரணம்ன்னு தெரியலை. காண்டீன் டீயில, உப்பு குறைச்சலா இருக்குதுன்னு சொல்லிக்கிட்டிருந்தாங்க. ஒரு வேளை அதுக்காக இருக்கலாமோ.. சீச்சி, அது போனவாரம்... இது இந்தவாரம். என்னத்துக்குன்னு தெரியலை, ஆனா நாலு நாளா நடக்குது.

வழக்கம்போல வகுப்புகள் நடக்காத அறையில் வந்து உக்கார்ந்தோம். ஒவ்வொரு வகுப்பிலும் பேருக்கு ஒரு ஆறேழு மாணவிகள்தான் உண்டு. பசங்கதான் மெஜாரிட்டி. எல்லாரும் ஸ்ட்ரைக்குக்காக வெளியே போயிட்டதால, நாலஞ்சு பேருக்கு.. என்னத்தை வகுப்பு எடுக்கிறதுன்னு, விரிவுரையாளர்களும் சும்மா வகுப்புக்கு வந்துட்டு போயிட்டு இருந்தாங்க.

காரிடாரில், 'லெஃப்ட்.. ரைட், லெஃப்ட்.. ரைட்'ன்னு சத்தம். உண்மையில் அது கல்லூரிக்கு முன்னால இருந்த மைதானத்துல இருந்து வந்துட்டு இருந்தது. கூடியிருந்த மாணவர் கூட்டத்தை 'பெருமையோட' பாத்துட்டு தன்னோட அறைக்கு, நடந்து போயிட்டிருந்த ப்ரின்சிபாலைப்பாத்துதான் பசங்க அப்படி சவுண்ட் விட்டுட்டு இருந்தாங்க. அவரோ எதையும் சட்டை செய்யாம தன்னோட ரூமுக்கு போயிட்டு இருந்தாரு.

அப்ப, எங்க வகுப்பறைக்குள்ளாற எங்க இங்கிலீஷ் விரிவுரையாளர் வந்தார். 'பாடம் நடத்தமாட்டேன்.. அதுக்கு வேற எதையாவது உருப்படியா பண்ணலாம். இப்ப, உங்களுக்கே தெரியாம நிறைய திறமைகள் உங்களுக்குள்ள பெட்ஷீட்டை போத்திக்கிட்டு ஒளிஞ்சிருக்கும். அதையெல்லாம் கண்டுபிடிச்சி, வெளிய கொண்டுவரணும். அதனால, அவரவருக்கு என்னென்ன எழுதணும்ன்னு தோணுதோ.. கதை, கவிதை, கட்டுரை.. இப்படி ஏதாவது எழுதுங்க'ன்னு சொல்லிட்டு அவர் கொண்டுவந்திருந்த நாவலை படிக்க ஆரம்பிச்சிட்டார்.

என்னடாயிது,..இந்த தமிழ்நாட்டுக்கு வந்த சோதனைன்னு நினைச்சிக்கிட்டு, 'என்ன எழுதலாம்'ன்னு கன்னத்துல கைவெச்சிக்கிட்டு உக்காந்தோம். அப்படி உக்காந்தாத்தான் கற்பனை ஓடுமாம். எங்கேன்னு தெரியலை :-)) அப்பத்தான் வராந்தாவுல நாற்காலி போட்டு உக்காந்திருந்த ஏழரைச்சனி என்னைப்பாத்து சிரிச்சான். நானும் பதிலுக்கு ஒண்ணரைப்பல்லை காமிச்சு வெச்சேன்... ஐடியா வந்துட்டது. கவிதையே எழுதலாம். கதைன்னா ரொம்ப கற்பனை வளம் வேணும். கட்டுரைன்னா நிறைய விஷயங்கள் தெரிஞ்சுருக்கணும். கவிதை எழுதறதுதான் ஈஸி. உடைச்சுப்போட்டா,..

க..
வி..
தை..
ஆகிடாதா என்ன??

என்ன விஷயத்தைப்பத்தி எழுதலாம். நாம எழுதறதையும் கவிதைன்னு நினைச்சு படிக்கிறவங்களுக்கு ஏமாத்தம் வரலாமோ!!!!. எவர்க்ரீன் டாப்பிக் " வரதட்சணை"
ரொம்ப செண்டியான விஷயம் இது. எப்படி எழுதினாலும் நிச்சயம் பாராட்டு வாங்கும். எழுத ஆரம்பிச்சேன்.

விளக்கேற்ற வரும் பெண்ணிடம்
வரதட்சணை வாங்கும்
மாமியார்களே..
கேட்ட தட்சணை
கிடைக்காததால்தான்
மருமகளையே
விளக்காக
எரிக்கின்றீர்களோ!!!!

எழுதிமுடிச்சிட்டு வெற்றியோட நிமிர்ந்து பார்த்தா, ஒவ்வொருத்தியும் செமஸ்பீடா எழுதிக்கிட்டு இருந்தாங்க. விட்டா.. அடிஷனல் ஷீட் கேப்பாங்க போலிருக்கு. நான் பேப்பரை கொண்டுபோய் சார்கிட்ட கொடுத்தேன். வாங்கி படிச்சுப்பார்த்தார்.. வேர்த்து விறுவிறுத்து முகத்தை துடைச்சிக்கிட்டு அப்படியே உக்காந்துட்டார். அப்றம் மெதுவா சமாளிச்சிக்கிட்டு, வகுப்புக்கு வெளியே போயிட்டார். அந்தக்கவிதை எழுதினதன் பலன் மறுநாள் கல்லூரிக்கு வந்தப்போதான் தெரிஞ்சது.

"ஸட்ரைக் முடிஞ்சு போச்சாம்"


டிஸ்கி: மொதமொத கவிதைன்னு எழுதினது அது. குத்தங்குறை இருந்தா பொறுத்தருளவும்.. ஒரு கவுஜையாளரை உருவாக வழிகாமிச்ச அந்த லெக்சரர், இப்போ இருக்காரான்னு தெரியலை. எனவே ஆட்டோ அனுப்ப வேண்டாம் :-)). இது சும்மா சுத்தின கொசுவத்தி.



Tuesday 17 August 2010

மஷ்ரூம் புலாவ்..

புலாவ் உருவான விதம்...

(இதான் ஷாஜீரா. நம்மூர்ல கருஞ்சீரகம்ன்னு சொல்லுவாங்கன்னு நினைக்கிறேன்)

ரூம் போட்டு யோசிக்காமலேயே செஞ்ச மஷ்ரூம் புலாவ் இது. காளானைப்பத்தி நான் புதுசா ஒண்ணும் சொல்லவேண்டியதில்லைன்னு நினைக்கிறேன். ஏற்கனவே இங்கே சொல்லியிருக்கேன்.

செய்யறதுக்கு ரொம்ப ஈஸியானது, டேஸ்ட்டானது, விடுமுறை மற்றும் ஸ்பெஷல் தினங்களுக்கான சமையலுக்கு ஏற்றது.. அப்படீன்னெல்லாம் பில்டப் கொடுக்காம.. நேரே அடுக்களைக்கு போய் சமையலை ஆரம்பிக்கலாமா....

வீட்ல இதெல்லாம் இருக்கான்னு சரி பார்த்துக்கோங்க. இல்லைன்னா, கடைக்குப்போயி வாங்கியாந்துடுங்க.

1. இதெல்லாத்தையும் நறுக்கிக்கணும்:
காளான் - 1 பாக்கெட்.
பெரிய வெங்காயம் - 1
தக்காளி -1

2. இதெல்லாம் ஒன்றிரண்டா தட்டி வெச்சுக்கணும்:
இஞ்சி - 1 இஞ்ச்.
பூண்டு - ஒரு நாலு பல்லை கழட்டி, கொண்டாங்க போதும்.
பச்சமொளகா - 2

3.இது தாளிக்க:
பட்டை -2 இஞ்ச்.
கிராம்பு - 6.
ஏலக்கா - 2.
பெருஞ்சீரகம் - 2 ஸ்பூன்.
எண்ணெய்+தேங்காயெண்ணெய்+நெய் = மூணு டீஸ்பூன் வரணும்.

4. இதை கால்கப் தண்ணீரில், கரைச்சு வெச்சுக்கணும்:
மல்லிப்பொடி - அரை டீஸ்பூன்.
மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன்.
உப்பு -ஒன்றரை டீஸ்பூன்.
மஞ்சப்பொடி - கால்டீஸ்பூன்.

5.கடைசியா முக்கியமான பொருள்:

பாஸ்மதி - 2 கப்.

மொதல்ல சாதத்தை தயார் செஞ்சுக்கலாம்.

ஒரு பாத்திரத்தில் சுமார் இரண்டு லிட்டர் தண்ணீரை எடுத்துக்கோங்க. அதுல ரெண்டு ஏலக்கா, ரெண்டு கிராம்பு, அரை டீஸ்பூன் ஷாஜீரா போட்டுக்கோங்க. (படத்துல ஷாஜீராவை தேடாதீங்க. சாதத்துல போட்டுட்டேன். இருந்தாலும் தனிப்படம் போட்டிருக்கேன் :-)). அதை கொதிக்க வையுங்க. இப்ப அதுல, ரெண்டுகப் பாஸ்மதி அரிசியை போட்டு, அரைவேக்காடுவரை வேக வையுங்க. அப்புறம், சாதத்தை வடிச்சு வெச்சுக்கோங்க.

இப்ப மசாலா தயார் செய்யலாம்.

எண்ணெய்+ நெய்+தே.எண்ணெய்யை பாத்திரத்தில் ஊற்றி சூடாக்கவும். அதுல, பட்டை, கிராம்பு, ஏலக்கா, பெருஞ்சீரகம் போட்டு தாளியுங்க.

அப்றம், இஞ்சிபூண்டு கலவையை போட்டு லேசா கிண்டுங்க. அடுத்ததா, நறுக்கிவெச்ச வெங்காயத்தை போட்டு பொன்வறுவலா ஆகிறவரை கிளறுங்க.

இப்ப, தக்காளியை போட்டு, அது மென்மையாகிறவரை கிளறுங்க. இதுதான் சரியான சமயம்,.. காளானையும் அதுகூட சேர்த்து, அரை டீஸ்பூன் உப்பு போட்டு கலக்குங்க. காளான் வெந்ததும் கரைச்சு வெச்சிருக்கிற பொடிக்கலவையை அதில் ஊற்றவும்.

காளான் நல்லா வெந்து, கூட்டுப்பதம் வரும்போது, அடுப்பை ஆஃப் பண்ணிடுங்க. இப்ப, தயார் செஞ்சு வெச்சிருக்கிற சாதத்தை அதில் கொட்டி, கலக்கோ கலக்குன்னு கலக்குங்க. (புலாவை சாப்பிட்டவங்க 'கலக்கிட்டே போ'ன்னு பாராட்டப்போவது நிச்சயம் :-)). இப்ப, எலக்ட்ரிக், மைக்ரோவேவ், ஏதாவது ஒரு அவன்லயோ அல்லது, நீங்க கண்டுபிடிச்சி வெச்சிருக்கிற உங்க முறைப்படியோ, புலாவை தம் போடுங்க... அவ்ளோதான்.

சைட் டிஷ்ஷா உங்களுக்கு என்ன வேணுமோ செஞ்சுக்கலாம். ரைய்த்தாவை சேர்க்க மறந்துடாதீங்க... அதுதான் ஜோடி நம்பர் - 1 :-))

டிஸ்கி : என்னடாயிது!!! சமையல் பதிவுகள் அடிக்கடி வருதேன்னு நினைக்காதீங்க. நல்லா சாப்பிட்டு தெம்பா இருந்தாத்தான், ப்ளாக் எழுத முடியும்.. :-)). அப்றம் படத்துல இருக்கிற எண்களுக்கும், தேவையான பொருட்கள் லிஸ்டில் கொடுத்திருக்கிற எண்களுக்கும் சம்பந்தமில்லை :-)


Thursday 12 August 2010

பச்சை நிறமே.. பச்சை நிறமே!!

அந்தக்காலத்துல ராஜாக்களெல்லாம், "மந்திரியே, மாதம் மும்மாரி பொழிகிறதா??" அப்படீன்னு கேப்பாங்களாம். நல்லா மழைபெஞ்சு, நல்ல விளைச்சல் கிடைச்சு ,மக்களெல்லாம் சுபிட்சமா இருக்கணும். அப்பத்தான் ராஜா நல்லா இருக்க முடியும். அதுவுமில்லாம பசுமை, செழுமைக்கு அடையாளமாம். இப்போ, மன்னராட்சி போய் மக்களாட்சி வந்துட்டது இல்லியா?.. அதனால மந்திரியை அனுப்பாம, நானே நேரடியா போயி, நாடு செழிப்பா இருக்குதான்னு பாத்துட்டு வந்திருக்கேன்.

சும்மா பாத்துட்டு வந்துடாம, உங்களுக்காக படங்களும் புடிச்சுக்கொண்டாந்திருக்கேன். பாத்துட்டு எந்தப்படம் நல்லாருக்குன்னு சொல்லுங்க. ஆகஸ்ட் மாதத்துக்கான பிட் போட்டிக்கு அனுப்பிடலாம். இந்த மாதத்துக்கான தலைப்பு 'பசுமை'யாம்.


சோலைவனம்.


தாமரைக்குளமும், குளம் சார்ந்த இடங்களும்.


வரிசையில் நிற்கும் சிப்பாய்கள்.

மலையோரம் வீசும் காத்து...

வயக்காடு..


பச்சைமலை..


இந்தப்பூங்கொத்து நட்புகளுக்காக .


Wednesday 11 August 2010

ஸ்வீட் எடுத்துக்கோங்க..

பண்டிகைக்காலம் தொடங்கி, வரிசை கட்டி நிக்க ஆரம்பிச்சுட்டது. அதுக்கு ஏத்தமாதிரி ஒரு அயிட்டத்தை இன்னிக்கு கத்துக்கலாம். இதை, தினமும் காலைபூஜைக்கு நைவேத்யமாவோ, இல்லை, சும்மா சாப்டுறதுக்காகவோ செஞ்சுக்கலாம். இதுக்குப்பேரு 'ஷீரா'. சத்ய நாராயணபூஜைக்கு கண்டிப்பா இதைத்தான் எங்கூர்ல செய்வாங்க. இதுல விஷேசம் என்னன்னா, பிடிச்ச சிலவகை பழங்களை இதுல சேர்த்துக்கலாம்.

தேவையானவை ;

ரவை - 1 கப்.
நெய் - 1 கப்.
சர்க்கரை -1 கப்.
ஏலக்காய் - 2(பொடித்தது)
வாழைப்பழம்-1
(அல்லது)
ஆப்பிள் - 1
சூடாக்கி ஆறவைத்த பால் - 1கப்.

எப்படி செய்யணும் :

அடுப்பை மொதல்ல லைட்டர்கொண்டு பற்றவைத்துக்கொள்ளவும் (சந்தேகம் கேக்க நெறைய பேர் இருக்காங்கப்பா :-))

1. மொதல்ல, நெய்யை ஒரு அடிபிடிக்காத வாணலியில் ஊற்றி சூடாக்கவும்.

2. பின் ரவையை அதில் போட்டு, லேசாக வாசனை வரும்வரை வறுக்கவும். கண்டிப்பாக சிவக்கக்கூடாது.

3. பின் கால்கப் பாலை அதில் ஊற்றி, கைவிடாமல் கிளறவும். ரவை, சமர்த்தாக அந்தப்பால் முழுவதையும், உறிஞ்சிக்கொண்டுவிடும். பின், மறுபடியும் கால்கப் பாலை ஊற்றவும். இப்படியே ஒருகப் பாலையும் ரவையுடன் சேர்க்கவும்.எல்லாத்தையும் குடிச்சிட்டு, இந்த ரவையும் பால் குடிக்குமான்னு அப்பாவியா இருக்கும்.

கவனம்: ரவை உதிரியாக ஆகும்வரை கிளறிவிட்டு அப்புறம்தான் அடுத்த கால்கப் பாலை சேர்க்கவும்.

4. பழத்தை பொடியாக ஸ்லைஸ் அல்லது துண்டுகளாக நறுக்கிக்கொள்ளவும்.

5. ரவையுடன் சர்க்கரையை கலந்து, அதன்மேல் நறுக்கிய பழத்துண்டுகளை பரத்தவும்,

6. ஏலக்காய் பொடியை மேலாக தூவிவிட்டு, வாணலியை தட்டுபோட்டு மூடிவிடவும்.

7. அடுப்பை மிதமாக எரியவிடவும்.

எண்ணி மூணே நிமிஷம்தான். (இப்ப அதை ஷீரான்னு சொல்லலாம்) ஷீராவை லேசா கிளறிவிடணும். உப்புமா மாதிரி உதிரியா வந்தா... இப்ப நீங்க ஒரு 'ஷீரா'
எக்ஸ்பர்ட். இல்லேன்னா, பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம் :-)))))))

உதிரியா இருந்தாத்தான் ஷீரா, இல்லேன்னா, அது கேசரி. அதனால, கவனமா உதிரியா ஆகிறவரை கிளறிவிடுங்க. அவ்வளவுதான்.

நான் இதில் ஆப்பிள் சேர்த்து செஞ்சிருக்கேன். எல்லோரும் எடுத்துக்கோங்க. ஒரு இனிப்பான செய்தி சொல்லப்போறேன்..

என்னுடைய வலைப்பூவான 'அமைதிச்சாரல்', தேவதையின் ஆகஸ்ட் 1-15 இதழில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது... அவர்களுக்கு என் நன்றிகள். இந்த இடத்தை அடைய, நண்பர்களாகிய நீங்கள் கொடுத்தஆதரவும், உற்சாகமும் ஒரு காரணம். ஆகவே, உங்களுக்கு என் வணக்கங்கள்.



புளிக்காய்ச்சல் தமிழ்நாடு முழுக்க தாறுமாறா பரவிடுச்சு போலிருக்கு :-)))

மொதல்ல வாழ்த்து சொன்ன ராமலஷ்மிக்கு இங்கே நன்றி சொல்லிக்கிறேன் :-)


Sunday 8 August 2010

வலைப்பூவில் அனிமேஷன் படங்கள்..

சென்ற இடுகையில் பார்த்த, அசையும் படங்கள்(GIF) ரொம்பப்பேருக்கு பிடிச்சிருக்கும்ன்னு நினைக்கிறேன். Graphics Interchange Format-ன் சுருக்கமே gif. அதில் அனிமேஷன் சேர்த்து அசையும் படமாக்கலாம். கூகிளில் இப்படிப்பட்ட படங்கள் நிறையக்கிடைக்கின்றன. நிறையப்பேருக்கு, இதை எப்படி இடுகைகளில் பயன்படுத்துவது என்பது தெரிந்திருக்கலாம்.. தெரியாதவர்களுக்காக இந்த இடுகை.

கூகிளின் முகப்புப்பக்கத்தில் படங்களை மட்டும் தேடுவதற்கென்று images என்ற குறிச்சொல் இருக்குமில்லையா.. அதை க்ளிக் பண்ணுங்க. ஒரு சின்ன பாக்ஸ் வரும். முதலில் நமக்கு வேண்டிய படத்தை தேடியெடுத்துக்கொள்ளவேண்டும். உங்களுக்கு விருப்பமான பெயர்.gif ஐ டைப் செய்தால்..(உதாரணமாக kitten.gif) நிறைய படங்களை கூகிளாண்டவர் தருவார். இடதுபக்கத்தில் அளவு, வகை, மற்றும் நிறங்களுக்கான தேர்வுகள் இருக்கும். அதில் வேண்டியதை தேர்ந்தெடுத்துக்கொள்ளவும் . நான் படங்களை தேர்ந்தெடுத்திருக்கிறேன். நம்முடைய வலதுபக்கம் படங்கள் வரும். அதை ஒவ்வொன்றாக open in new windowவில் திறந்து, க்ளிக்கிப்பார்த்து அனிமேட்டட் ஆக இருக்கிறதா!! என்று பரிசோதனை செய்து கொள்ளவும்.உதாரணத்துக்கு பாட்டுக்கேக்கும் பூனையாரை எடுத்துக்கலாம்..


தேவையான படம் கிடைத்தபின், அதை சிஸ்டத்தில் சேமித்துக்கொள்ளவும். animated gif படங்களை தனியாக ஒரு கோப்பில் சேமித்து வைத்துக்கொள்வது நலம்.

இடுகைகளில், இந்தப்படங்களை உபயோகிக்கவேண்டுமென்றால், சில சம்பிரதாயங்கள் இருக்கின்றன. அவற்றை கடைப்பிடித்தால்.. படங்களை அசைவுடன் பார்க்கலாம். இல்லையென்றால் வெறும் படமாகத்தான் பார்க்கமுடியும்.

இதற்கு, முதலில் photobucket.com சென்று ஒரு அக்கவுண்ட் ஆரம்பித்துக்கொள்ளவும். பின் லாகின் செய்து உள்ளே சென்றால் முகப்புப்பக்கத்திலேயே, படங்களை அப்லோட் செய்யும் பட்டன் இருக்கும்.
அதை க்ளிக் செய்தால், நம்முடைய கணினியில் ஒரு ஜன்னல் திறக்கும். அதில், எந்த கோப்பிலிருந்து படங்களை வலையேற்றவேண்டுமோ அதைத்திறந்து, வேண்டிய படத்தை தேர்ந்தெடுத்து, open-ஐ க்ளிக் செய்தால் தானாகவே photobucket-ல் அப்லோட் ஆகிவிடும். பின் அதை, ஒரு ஆல்பத்தில் சேமித்துவைத்துக்கொள்ளவும். இப்படி, photobucket-ல் சேமித்து வைக்கப்பட்ட படங்களை நமக்கு எப்போது வேண்டுமோ, உபயோகித்துக்கொள்ளலாம்.



இடுகைகளில், இந்தப்படங்களை உபயோகப்படுத்த நினைக்கும்போது, dashboard சென்று, புதிய இடுகையோ, அல்லது தேவைப்படும் இடுகையையோ திறந்துகொள்ளவும். பின்,edit mode-ல் வைத்துக்கொண்டு add image பட்டனை க்ளிக் செய்யவும்.


மறுபடியும் photobucket-ல் லாகின் செய்து உள்ளே நுழைந்து, சேமித்து வைக்கப்பட்ட படங்களில் தேவையான படத்தில், டபுள் க்ளிக் செய்து திறந்துகொள்ளவும். படத்தின் வலதுபுறத்தில், பகிர்வுகளுக்கான நான்கு லிங்குகள் இருக்கும். அதில் direct link-ஐ செலக்ட் செய்து காப்பி செய்துகொள்ளவும்.
பின், add image பக்கத்துக்கு வந்து, படங்களை வலையிலிருந்து ஏற்றும் பகுதியில் உரல் கேட்கப்பட்டிருக்கும் பெட்டியில் ஒட்டவும். பின் வழக்கம்போல் அப்லோட் செய்யவும். அவ்வளவுதான். படங்கள் உங்கள் இடுகைப்பகுதியில் வந்திருக்கும். பின் வழக்கம்போல் இடுகையில் எங்கெங்கு படங்கள் வரவேண்டுமென்று நினைக்கிறீர்களோ, அங்கே ஒட்டிக்கொள்ளலாம்.


இந்தப்படம் சிஸ்டத்திலிருந்து நேரடியாக வலையேற்றப்பட்டது.



இது photobucket மூலமாக வலையேற்றப்பட்டது.

இந்த gif படங்களை இடுகைகளில் மட்டுமல்லாமல், வலைப்பூவை அழகுபடுத்தவும் உபயோகிக்கலாம். என்னுடைய வலைப்பூவின் சைட்பாரில் மழைபெய்கிறதே அதுமாதிரியோ, இல்லை.. தலைப்பின் அருகிலேயோ உபயோகப்படுத்தலாம். அதற்கு, design பகுதிக்குச்சென்று add a gadget, அல்லது header- ஐ திறந்து அதில், உரல் கேட்கப்பட்டிருக்கும் இடத்தில், படத்தின் photobucket link-ஐ ஒட்டிவிடவும். பின் சேமிக்கவும்... அவ்வளவுதான்.

கம்ப்யூட்டரில் எனக்கு அதிகமா தெரியாது, இருந்தாலும் எனக்குத்தெரிந்தவரை விம்போட்டு விளக்கியிருக்கேன். விளக்கம் புரியும்ன்னு நினைக்கிறேன். ஹைய்யா!!! நானும் ஒரு தொழில்நுட்பப்பதிவு போட்டுட்டேனே :-)))

Saturday 7 August 2010

சும்மா இருப்பது எப்படி??...

பிஸியா இருக்கும்போதே 'சும்மா இருப்பது எப்படி??'ன்னு பழகிக்கணும். அப்பத்தான் நிஜமாவே சும்மா இருக்கவேண்டி வந்தா ஒண்ணும் கஷ்டமா இருக்காது. இதை ஏன் பரிசோதிச்சு பார்க்கக்கூடாது?..ன்னு ஒரு தோணல். சும்மா.. கொஞ்ச நாளைக்கு ப்ளாக்குக்கு லீவு வுட்டுட்டா என்ன?..

லீவ் விட்டுட்டு சும்மா இருந்தா, அடுத்து என்ன பதிவு போடலாம்.. எப்படி மேட்டர் தேத்தலாம்ன்னு துறுதுறுன்னு இருக்கிற மூளை துருப்பிடிச்சுடுமே :-). சும்மா இருக்கிற மனிதனின் மனசு, சாத்தானின் இருப்பிடம்ன்னு சும்மாவா சொன்னாங்க. சும்மாவே டென்ஷனான லைஃப்.. இதுல சாத்தானும் கூட்டணி வெச்சுக்கிட்டா கேக்கவா வேணும்.

மனுஷனுக்கு பிறக்கிறதிலிருந்து கடைசிவரை டென்ஷன்தான். பிறக்கும்போது, நல்லபடியா பிறக்கணுமேன்னு டென்ஷன்.. அப்புறம் வளர்ச்சிகள் சரியா இருக்கணுமேன்னு டென்ஷன். அப்புறம், நல்ல ஸ்கூலில் அட்மிஷன் கிடைக்கணுமேன்னு டென்ஷன். அப்புறம், நல்லாப்படிச்சு நல்ல மார்க் வாங்கணுமேன்னு டென்ஷன். அப்புறம் நல்ல வேலை கிடைக்கணுமேன்னு டென்ஷன். அப்புறம் நல்ல வாழ்க்கைத்துணை கிடைக்கணுமேன்னு டென்ஷன். அப்புறம் வாழ்க்கைல பிரச்சினை இல்லாம இருக்கணுமேன்னு டென்ஷன். அப்புறம் காலாகாலத்துல குழந்தை பிறக்கணுமேன்னு டென்ஷன். அப்புறம் அதை நல்லபடியா வளர்க்கணுமேன்னு டென்ஷன். அப்புறம்........O. வாழ்க்கை ஒரு வட்டம் என்பதை மறைமுகமா குறிப்பிட்டிருக்கேனாக்கும். இதில் பதிவு போடும் டென்ஷனை சேர்க்கலை. :-)). (அதையும் சேர்த்தா தலையை பிச்சிக்க வேண்டியிருக்கும்)

டென்ஷனை குறைக்க நிறைய வழிகள் இருக்கு. நெறைய பேர் பாட்டு கேக்கச்சொல்லி சிபாரிசு பண்ணுவாங்க. அதுக்காக வேலைவெட்டியெல்லாம் விட்டுட்டு எந்த நேரமும் பாட்டுக்கேட்டுக்கிட்டே இருந்தா.. அப்புறம், வீட்லயோ, இல்லை.. ஆப்பீசிலோ , பாட்டுக்கேக்க வேண்டியிருக்கும். விருப்பமான பாடல்களை கேட்டுக்கிட்டே வேலைசெஞ்சா, அலுப்பே தெரியாது. ஆடிப்பாடி வேலைசெஞ்சா அலுப்பிருக்காதுன்னு சும்மாவா சொல்லிவெச்சாங்க..


எங்கூர்ல சும்மாவே ஆடுவாங்க.. இப்போ பண்டிகை சீசன் வேற தொடங்கியாச்சு. இனி நவராத்திரி முடியறவரை, அங்கங்க கர்பா டான்ஸ் வகுப்புகள் நடக்கும். கர்பான்னா வேற ஒண்ணுமில்லை.. நம்மூர் கும்மிதான். வலையில் அடிக்கிற கும்மியில்லை... நிஜமான கும்மி :-)). டென்ஷனா இருக்கும்போதோ, இல்லை ஜாலிமூட்ல இருக்கும்போதோ, பிடிச்ச பாட்டை ஒலிக்க விட்டுட்டு, வேர்க்கவிறுவிறுக்க ஒரு ஆட்டம் ஆடிப்பாருங்க. மனசும் உடம்பும் அப்படியே லேசாகி காத்துல பறக்கிறமாதிரி இருக்கும்.

பக்கத்துல பூங்கா இருந்தா அப்படியே ஒரு வாக் போயிட்டு வரலாம். குழந்தைகள் விளையாடுறதைப்பாத்துக்கிட்டே இருந்தா எல்லா டென்ஷனையும் மறந்துடுவீங்க. யாரும் இல்லைன்னா அந்த ஊஞ்சலில் உக்காந்து, கொஞ்ச நேரம் ஆடிப்பாருங்க. என்ன தப்பு??. (தோட்டக்காரர் பார்த்தா ஆபத்து). அப்பப்போ, நமக்குள்ள இருக்கிற சின்னக்குழந்தையை, கொஞ்சம் வெளியே வரவிடுங்க. ஒருமுறைதான் பிறக்கிறோம்.. ஒருமுறைதான் இறக்கிறோம். இடைப்பட்ட காலத்தை சந்தோஷமாக, பிறருக்கு உபயோகமாக கழிப்பதை விட்டுட்டு என்ன சாதிக்கப்போறோம்??.

டீயில ஈ விழுந்துடுச்சேன்னு கவலைப்படறவனைவிட, 'என்ன்ன்ன பெருசா.. ரெண்டு சொட்டு டீயை வேண்ணா குடிச்சிருக்கும்' ன்னு சமாதானப்படுத்திக்கிட்டு, அதை தூக்கிப்போட்டுட்டு.. டீயை குடிக்கிறவந்தான் வாழ்க்கையில் சந்தோஷமா இருப்பான் :-)))

தலைப்புக்கும் இடுகைக்கும் ஏதாவது சம்பந்தம் இருக்கா?.. ஹி..ஹி.. இந்த வழிமுறைகளை எல்லாம் கடைப்பிடிக்கணும்ன்னா, அவ்வப்போது சும்மா இருந்தாத்தான் முடியும், அவ்வளவுதான்.... வேணும்ன்னா, இதெல்லாம் நம்மை ரீசார்ஜ் செய்யுதுன்னு நினைச்சுக்கோங்களேன் :-))).



LinkWithin

Related Posts with Thumbnails