Monday, 16 May 2016

பொறுமைக்கும் எல்லையுண்டு ( திரை விமர்சனம்)

குடும்ப வன்முறையால் பெண்கள் பாதிக்கப்படுவதாகப் புள்ளிவிவரம் சொல்கிறது. இதில் துணிச்சலாக வெளிவந்து தனக்கு நேரும் கொடுமைகளைப் பற்றிப்பேசவும் எதிர் நடவடிக்கை எடுக்கவும் துணியும் பெண்கள் மிகச்சிலரே. “பொறுத்துப்போ.. அடங்கிப்போ” என்று கூறும் பெரியவர்களின் வார்த்தைகளுக்குக் கட்டுப்பட்டும், சமூகத்தின் பார்வைக்குப் பயந்தும் மிக முக்கியமாக, பெற்ற குழந்தைகளின் எதிர்கால நலனை உத்தேசித்தும், முடங்கிவிடும் பெண்களே அதிகம். இதில் உலக நாடுகளின் எந்த மூலைகளில் வசிக்கும் பெண்களும் விதிவிலக்கல்ல. அவர்களில் “பொறுத்தது போதும்” என்று பொங்கியெழுந்து தன்னைக்கொடுமைப்படுத்தியவனைத் துவம்சம் செய்யும் ஒரு பெண்ணின் கதைதான் ‘enough’.

கதாநாயகி ‘ஸ்லிம்’மின் கணவன் பிற பெண்களுடன் சுற்றுபவனாக, கட்டுப்பாடற்ற மணவாழ்க்கையை விரும்புபவனாக, தட்டிக்கேட்டால் அடித்துத்துவைப்பவனாக, அதேசமயம் குழந்தையின் முன் நல்லவனாக நடிப்பவனாக இருந்தபோதிலும் தங்களது பெண்குழந்தைக்காக அவனைச் சகித்துக்கொள்கிறாள். குழந்தைகளுக்கு தாயைப்போலவே தகப்பனும் அவசியம் தேவை என்று எண்ணுகிறாள். ஆகவேதான் போலீசில் புகார் செய்ய ஆலோசனை அளிக்கும் தோழியிடம், “என் குழந்தையின் தகப்பனை ஜெயிலுக்கு அனுப்ப என்னால் இயலாது” என்று கூறிவிடுகிறாள்.

ஒரு கட்டத்தில் நண்பர்களின் உதவியுடன், குழந்தையுடன் வீட்டை விட்டு வெளியேறி. செல்லுமிடமெல்லாம் தன்னைக் கொலைசெய்யத்துரத்தும் கணவனிடமிருந்து தன்னையும் குழந்தையையும் காப்பாற்றிக்கொள்ளப்போராடுகிறாள். இறுதியில் எந்தக்குழந்தைக்காக அவ்வளவையும் சகித்துக்கொண்டாளோ அதே குழந்தை இந்தப்போராட்டத்தில் அலைக்கழிக்கப்படுவதைச் சகியாமல் எல்லாவற்றுக்கும் முடிவு கட்டத்துணிந்து, “தற்காப்புக்காகத்திருப்பித் தாக்க நேரும்போது எதிரி மரணமடைய நேர்ந்தால் அது கொலையாகாது” எனக் கூறும் பயிற்சியாளரின் சொல்லையும் நினைவில் கொண்டு கணவனைத்திருப்பித்தாக்க தற்காப்புக்கலையும் கற்றுக்கொள்கிறாள். அத்தனை கொடூரமான கணவனை என்ன செய்தாள் என்று விவரிக்கும் உச்சகட்டக்காட்சிகள் நம்மை உலுக்கி விடுகின்றன. ஆரம்பத்தில் கணவன் அறையும்போது ஒரே அடியில் சுருண்டு விழும் பலகீனமானவளாக, அவனிடமிருந்து தப்ப ஊரூராய் ஓடியலையும் அபலையாக, இறுதியில் அவனை அவனது இருப்பிடத்திற்கே சென்று பழி வாங்கும் ஆவேசமுற்றவளாக என்று நடிப்பில் பல பரிமாணங்களைக் காட்டியிருக்கிறார் ஜெனிஃபர் லோபஸ். 

குடும்பங்களில் நடக்கும் வன்முறைகளில் பொறுமை எல்லை மீறும்போது அது நாள்வரை தாக்கப்பட்டுக்கொண்டிருந்தவர் ஒரு கட்டத்தில் திருப்பித்தாக்கத்தொடங்குகிறார். அப்படித்தாக்கத்தொடங்கும் புள்ளிக்கு வருவதற்கு அவர் தன்னளவில் நிறைய மனத்தடைகளையும் கேள்விகளையும் தாண்டியே வந்திருப்பார் ஆதலால் அவரது கொந்தளிப்பைச் சமாளிக்க மற்றவர்களால் நிச்சயமாக இயலாது. அடி பணிந்தே ஆகவேண்டும். இதைத்தானே “சாது மிரண்டால் காடு கொள்ளாது” என்று சொல்லிச்சென்றிருக்கிறார்கள் நம் முன்னோர்கள்.

எழுத்தாளர் அன்னா குயிண்ட்லென்னின் Black and Blue என்ற நாவலை அடிப்படையாகக் கொண்டு, மைக்கேல் அப்டெட்டின் இயக்கத்தில் 1998-ம் ஆண்டு வெளியான இந்தப்படம் ஏராளமான அளவில் எதிர்மறை விமர்சனங்களை எதிர்கொண்ட போதிலும் நடிகர்களின் திறமை பெருமளவில் பாராட்டப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. அதிலும் கொடுமைக்காரக் கணவனாக நடித்திருக்கும் Billy Campbellன் நடிப்பு செம. குழந்தையின் முன் தன் குட்டு வெளிப்படும் இடத்தில் அவரது நடிப்பு மிளிர்கிறது.

கணவனிடமிருந்து தப்பி ஒவ்வொரு ஊராகத் தலைமறைவாக வாழும் கதாநாயகியின் மேல் முதலில் சற்று எரிச்சல் வரத்தான் செய்கிறது. இவ்வளவு பயந்தாங்கொள்ளியாக, கோழையாக ஒரு பெண் இருக்கத்தான் வேண்டுமா? என்றும் தோன்றுவது இயல்பே. ஆனால், அவளைக் கட்டிப்போட்டிருப்பது தாய்ப்பாசமேயன்றி வேறேதும் இல்லை. பெண் தாயாகவும் வாழ நேரிடும்போது அதுவும் இயல்பாகி விடுகிறதே. அவளது வாழ்வு தனது குழந்தைகளின் வாழ்வோடு பின்னிப்பிணைந்தல்லவா இருக்கிறது. வாழ்நாள் முழுதும் தனியாக வாழ்ந்தாலும் ஆணைக் கேள்வி கேட்காத இந்த சமூகம் பெண்ணை அப்படி விட்டு வைக்கிறதா என்ன?. அவளை நோக்கி எத்தனை கணைகளை ஏவுகிறது. தானே தனக்குப் பிரச்சினையாகிப்போன பெண்கள் எத்தனை பேர் இருக்கிறார்கள்!!. தனது பிரச்சினையை இந்தக்கதாநாயகி தீர்த்த விதம் பலருக்குப் பிடிக்காதுதான். ஆனாலும், "வன்முறையால் அடக்குபவரிடம் அடங்க மறு" என்ற நீதியையாவது எடுத்துக்கொள்ளலாம்.

Monday, 2 May 2016

உழைப்பாளர் தினம் - மே தினம் - மஹாராஷ்ட்ர தினம்.

இந்தியா சுதந்திரமடைந்தபோது, மேற்கு மற்றும் நடு இந்தியாவில் ஆங்கிலேயரின் நேரடி ஆட்சிப்பிரதேசங்கள், மன்னர்கள் ஆண்ட ராஜ்ஜியங்கள் போன்றவற்றை இணைத்து மராட்டிய மாகாணம் உருவானது. தற்கால குஜராத் மாநிலம், மகாராட்டிர மாநிலத்தின் கொங்கன், தேஷ், கான்தேஷ் பகுதிகள், கர்நாடகத்தின் வடமேற்குப் பகுதி, பாகிஸ்தானின் சிந்து மாகாணம், ஏமன் நாட்டின் ஏடன் நகரம் ஆகிய பகுதிகள் இதில் அடங்கியிருந்தன. 


தனி மாநிலம் வேண்டுமென்று போராடிய சம்யுக்த மராட்டிய இயக்கத்தினரின் ஒரு போராட்டத்தின் போது 105 பேர் போலீசாரால் கொல்லப்பட்டதைத்தொடர்ந்து, முதல் மாநில சீரமைப்பு குழுவின் பரிந்துரைப்படி மராட்டிய மாகாணம் கலைக்கப்பட்டு, தற்போதைய மகாராட்டிர மாநிலம் மே 1, 1960ல்உருவானது. மஹாராஷ்டிர மாநிலம் பிறந்த இத்தினத்தை இங்குள்ள மக்கள் "மஹாராஷ்டிர திவஸ்" என்ற பெயரில் கொண்டாடுகிறார்கள். மராட்டிய மாநிலத்தில் உழைப்பாளர் தினமான மே தினமும், மஹாராஷ்ட்ர தினமும் ஒவ்வொரு வருடமும் இணைந்தே கொண்டாடப்பட்டு வருகிறது. மராத்தி மொழி பெரும்பான்மையாகப் பேசப்படும் முந்தைய பாம்பே, தக்கண் மாநிலம் மற்றும் விதர்பா பகுதிகள், முந்தைய ஹைதராபாத் மாகாணத்தின் எட்டு மாவட்டங்கள் போன்றவை இணைக்கப்பட்டு உருவாக்கப்பட்டது. குஜராத்தி மொழி பெருவாரியாகப்பேசப்படும் பகுதிகள் இணைக்கப்பட்டு குஜராத் மாநிலமும் இதே நாளில்தான் உருவானது. இன்றைய தினம் தாதரிலிருக்கும் சிவாஜி பார்க்கில் ஊர்வலங்கள், மற்றும் கொண்டாட்டங்கள் நடைபெறுவதோடு மராட்டிய மாநில ஆளுநரின் உரையும் கட்டாயம் இடம் பெறும். மஹாராஷ்டிர தினத்தன்று மாநிலம் முழுவதும் மதுபான விற்பனையும் கண்டிப்பாகத்தடை செய்யப்பட்டிருக்கும்.
வால்: மஹாராஷ்டிர தினத்தையும் உழைப்பாளர் தினத்தையும் இணைத்துக்கொண்டாடும் எங்கள் வழக்கப்படி, உழைப்பாளர்களின் உழைப்பும் சாதனைகளும் இங்கே ஒளிப்பட வடிவில் கொண்டாடப்படுகின்றன :-)

LinkWithin

Related Posts with Thumbnails