Saturday 25 August 2012

என்ன டிபனோ?..


என்னதான் மெனு போட்டு வாய்க்கு வக்கணையா, தினம் தினம் விதவிதமாச் சமைச்சாலும் இல்லத்தரசிகளை தலையைப் பிச்சுக்க வைக்குது இந்தக்கேள்வி. வித்தியாசமாவும் இருக்கணும், அதே சமயம் ருசியா சத்தானதாகவும் இருக்கணும்ன்னு எவ்வளவோ மெனக்கெடறோம். ஆனாலும் ஒரே அயிட்டத்தை தினம் தினம் பரிமாறினா போரடிச்சுருமில்லே. மிஞ்சிப்போனா ரெண்டு இஞ்ச் இருக்கற இந்த நாக்கைத் திருப்திப் படுத்தறது ரொம்பவே கஷ்டம் இல்லையா?.

ரொட்டி சப்ஜின்னு செஞ்சாலோ, “போச்சு.. இன்னிக்கும் சப்பாத்திங்கற பேர்ல அந்தப் பறக்கும் தட்டைச் செஞ்சு வெச்சுட்டாளா!. நாமென்ன திடீர்ன்னு வட நாட்டுக்காரங்க ஆயிட்டோமா?”ன்னு வீட்ல இருக்கற பெரியவங்க முணுமுணுப்பாங்க. அதே சமயம் சில குழந்தைகள் சப்பாத்தியை மட்டும் சாப்பிட்டுட்டு சப்ஜியை ஒதுக்கி வெச்சுடும்.

“சப்பாத்திக்கு மாவு பிசைஞ்சு வெச்சுட்டேனே.. இப்ப என்ன செய்ய?”ன்னு முழிக்கிறீங்களா?.. வாங்க.. அந்தச் சப்பாத்தியை வெச்சே ஒரு ருசியான அயிட்டம் செய்யலாம். ஆனா, இன்னிக்கு சப்பாத்தி செய்யப்போறேன்னு வீட்ல சொல்லாதீங்க. இது என்னதுன்னு சாப்பிடறப்ப அவங்களே தலையைப் பிச்சுக்கட்டும் :-)

ஒரு நபருக்கு ரெண்டு சப்பாத்தி வீதம் மொதல்ல செஞ்சு தயாரா வெச்சுக்கோங்க. சப்பாத்தியை எவ்ளோ மெல்லிசா இட முடியுமோ அவ்ளோ மெல்லிசா இட்டு, எண்ணெய் எதுவும் விடாம கல்லுல திருப்பித்திருப்பிப் போட்டு கொஞ்சம் ‘கடக்’கா சுட்டு வெச்சுக்கோங்க. ஆறியதும் துண்டுகளாப் பிச்சுப்போட்டு மிக்ஸியில் பொடிச்சுக்கோங்க. அவல் மாதிரியான சைஸ்ல வந்தாலும் போதும்.

நறுக்கிய முட்டைக்கோஸ், பச்சைப்பட்டாணி, காரட், பீன்ஸ் எல்லாம் கலந்த கலவை ஒரு கப் அளவுக்கு எடுத்துக்கோங்க. தினசரிச் சமையலுக்காக நறுக்கும்போதே அதுல கொஞ்சத்தை எடுத்து ஒரு டப்பாவில் போட்டு ஃப்ரிஜ்ஜில் வெச்சுட்டா, வாரக்கடைசியில் டப்பா நிரம்பிரும். கலந்த காய்ப்பொரியல், வெஜ் ஃப்ரைட் ரைஸ் செய்யறதுக்கும் ஆகும். உப்புமா, அவல்ன்னு எல்லாத்துலயும் சேர்க்கலாம். வெரைட்டியா இருக்கும்.

ரெண்டு சப்பாத்திக்கு 1 மிளகாய்ங்கற அளவுல பச்சை மிளகாயை நறுக்கி வெச்சுக்கோங்க.

பெரிய வெங்காயத்தைப் பொடியா நறுக்கி வெச்சுக்கோங்க. அப்டியே கொஞ்சம் இஞ்சியையும், கறிவேப்பிலையையும் பொடிசா நறுக்கிக்கோங்க. ஒரு சின்னக் கிண்ணத்துல காரத்துக்கேற்ப மிளகாய்ப்பொடி, மஞ்சப்பொடி, கலந்து வெச்சுக்கோங்க. 

ஒரு வாணலியில் எண்ணெய்யைச் சூடாக்கி கடுகு, சீரகம், உளுத்தம் பருப்பு போட்டுப் பொரிஞ்சதும் கறிவேப்பிலை சேருங்க. அப்றம் வெங்காயமும் இஞ்சியும் சேர்த்து பொன்னிறமாகும் வரைக்கும் வதக்கணும்.

இது கூட நறுக்கிய காய்க்கலவையைச் சேர்த்து தேவையான அளவு உப்புப் போட்டு வேக விடுங்க. காய்களைக் கழுவிய ஈரமே போதும். மேல்கொண்டு தண்ணீர் சேர்க்க வேணாம். சப்பாத்தியில் ஏற்கனவே உப்பு இருக்கும். அதனால காய்களுக்கான அளவுல உப்பு எடுத்தாப் போதும். காய்கள் முக்கால் வேக்காடு ஆனதும் மிளகாய் மற்றும் மஞ்சள் தூளைச் சேருங்க. நல்ல வாசனை வந்ததும் பொடிச்ச சப்பாத்தியைப் போட்டு, நல்லாக் கிளறுங்க.

ஒரு ஸ்பூன் அளவுல தண்ணீரைத் தெளிச்சு மூடி போட்டு வேக விடுங்க. விரும்பினா கொத்தமல்லித்தழையும் சேர்க்கலாம். பொல பொலன்னு வந்ததும் இறக்கிச் சூடாப் பரிமாறுங்க.

அசைவப் பிரியர்கள் விரும்பினா முட்டையோ அல்லது விரும்பிய அசைவமோ தனியா வதக்கி வெந்ததும், காய்களோட சேர்த்துட்டு அப்றம் பொடிச்ச சப்பாத்தியைச் சேர்த்துச் செய்யலாம். அப்படி அசைவம் சேர்க்கறப்ப ஒரு ஸ்பூன் கரம் மசாலா சேர்த்துக்கோங்க.

மஹாராஷ்ட்ராவில் இதைச் 'சூரா'ன்னு சொல்லுவாங்க. காலையில் செஞ்சு மீந்த சப்பாத்திகளை வெச்சு இதைச் செஞ்சு சாயந்திர காப்பிக்குத் தொட்டுக்கறதுமுண்டு.



Tuesday 21 August 2012

வீட்டுப்பாடம்..

இணையத்தில் சுட்ட படம்..
அலாரம் கிணுகிணுக்க கண்களைக் கசக்கி விட்டுக்கொண்டு, உள்ளங்கைகளை முதலில் பார்த்தவாறே எழுந்த ஆனந்தின் பார்வை பக்கத்தில் இயல்பாகத் திரும்பியது. அவளில்லாத வெற்றிடக் காட்சி முகத்திலறைந்தாற்போல் இருக்கவே ஒரு கணம் திடுக்கிட்டவன், தன்னிலை திரும்பி அந்த வெற்றிடத்தைப் பார்வையால் மெல்ல வருடிக் கொடுத்தான். அவனையறியாமல் ஒரு மெல்லிய பெருமூச்சு எழுந்தடங்கியது. “அவ இல்லாம இந்தக் குழந்தைகளை எப்படித்தான் சமாளிக்கப்போறேனோ!!” என்று தனக்குள் புலம்பியவன் குழந்தைகளின் அறையை நோக்கி நடந்தான்.

குழந்தைகளின் தூக்கம் கலைந்து விடக்கூடாதென்ற ஜாக்கிரதையுணர்வுடன் மெல்ல எட்டிப்பார்த்தவனின் இதழ்களில் புன்னகை அரும்பியது. மூத்தவள் பத்து வயதுத் தாரிணி பாதங்கள் மட்டும் வெளித்தெரிய தலை வரை இழுத்துப் போர்த்தித் தூங்கிக் கொண்டிருந்தாள். சின்னவன் மூன்று வயது ஹரீஷ் அம்மாவின் புடவையொன்றைப் பக்கத்தில் போட்டுக்கொண்டு அதைப் பிடித்தவாறே தூங்கிக்கொண்டிருந்தான். அதைப்பார்த்ததும், “இதுங்களை விட்டுட்டுப்போக அவளுக்கு எப்படி மனசு வந்தது!!.. ம்.. எல்லாம் என் விதி” என்று நொந்து கொண்டவாறே வாசலை நோக்கி நடந்தான்.

செய்தித்தாளையும் அதன் மேல் படுத்திருந்த பால் பாக்கெட்டுகளையும் எடுக்கப் போனவன்,. “சை..” என்று செய்தித்தாளை உதறினான். பால் பாக்கெட் ஒன்றைச் சேதப்படுத்தி, அதன் வழியே வழிந்த பாலை நக்கிச் சுவைத்துக்கொண்டிருந்த பூனையொன்றும், தேங்கியிருந்த பால்துளிகளும் சிதறிப்போய் விழுந்தன. ஈரமாகியிருந்த செய்தித்தாளை அப்படியே வெறுப்பில் வீசி விட்டு வீட்டுக்குள் நுழைந்தான். இப்போது கடைக்குப்போய் பால் வாங்கும் புது வேலையொன்று முளைத்தது அவனை எரிச்சல் படுத்தியது. அவள் இருக்கும்போது இரவிலேயே கதவின் கைப்பிடியில் துணிப்பையொன்றைத் தொங்க விட்டு விடுவாள். காலையில் பால்காரர் பாக்கெட்டுகளை அதிலேயே போட்டு விடுவார். சிந்தாமல் சிதறாமல் எடுத்துக்கொள்ளலாம்.

தினத்தின் ஆரம்பமே சரியில்லையே என்று நொந்து கொண்டவாறே வீட்டினுள் நுழைந்தான். குழந்தைகளை எழுப்பிப் பல் தேய்க்க அழைத்துக்கொண்டு போனான். இரண்டும் பல் தேய்த்து முடிப்பதற்குள் பாலைக் காய்ச்சி விட்டால் கொடுக்க ஏதுவாக இருக்கும் என்றெண்ணி, பாலைப் பாத்திரத்தில் ஊற்றி அடுப்பில் வைத்து விட்டு வந்தான். பக்கெட் தண்ணீரை இறைத்து லூட்டியடித்துக் கொண்டிருந்த சின்னவனைச் சமாளிப்பதற்குள் மேல்மூச்சு கீழ்மூச்சு வாங்கியது. “துப்புடா.. துப்புடா..” என்று சொல்லச்சொல்ல பேஸ்டையும், கொப்பளிப்பதற்காக வாயில் ஊற்றிய தண்ணீரையும் விழுங்கிக்கொண்டிருந்தான். ஏதோ வித்தியாசமான வாசனை மூக்கைத்தாக்க, கூர்ந்து மோப்பம் பிடித்தவன், “ஐயோ.. காஸ் வாசனையாயிற்றே.. என்னாச்சோ..” என்று பதறியவாறு ஈரக்காலோடு வெளியே ஓடினான். பால் பொங்கி வழிந்து காஸ் அடுப்பை அணைத்து விட்டு மேடை வழியே தரைக்கும் இறங்கி இருந்தது.

மூத்தவள் கொஞ்சம் வளர்ந்தவளாதலால் சூழ்நிலையைப் புரிந்து கொண்டு, “அப்பா,.. தம்பியை அடுக்களைப் பக்கம் வராம நான் பார்த்துக்கறேன். நீங்க இதெல்லாம் சுத்தம் செய்யுங்க. அவனைக் குளிப்பாட்டி நானும் குளிச்சுட்டு வரேன். நீங்க கவலைப்படாதீங்க.” என்று ஆதரவாக அவன் தலை கோதிச் சொல்லிச்சென்றாள். அவனுக்கு மனைவியின் ஞாபகங்கள் பொங்கிப்பொங்கி அலை மோதிக்கொண்டிருந்தன. இதற்கே இப்படியென்றால் தாயில்லாத குறை தெரியாமல் இந்தக்குழந்தைகளைச் சமாளிக்க இன்னும் எத்தனை கஷ்டப்பட வேண்டியிருக்குமோ என்று நினைக்கவும் கழிவிரக்கம் சூழ்ந்து கொள்ள அப்படியே டைனிங் டேபிளருகே நாற்காலியில் மடங்கினான்.

குளித்து முடித்து வந்த குழந்தைகளுக்கு ட்ரெஸ் செய்யும்போது ஹரீஷின் லூட்டியுடன் பிடிவாதமும் சேர்ந்து கொண்டது. “எனக்கு இந்த டெச் வாணாம் போ. அந்த பைடர்மேன் தான் வேணும்” என்றான். இது வேண்டாம், அது வேண்டாம் என்று கிட்டத்தட்ட பீரோவையே கலைத்துப்போட்டு விட்டு இறுதியில் சாயம் போன ஒரு ட்ரெஸ்ஸில் சமாதானமானான் குழந்தை. ஹாலில் இருவரையும் உட்கார வைத்து விட்டு, “செல்லங்களா,.. என்ன டிபன் சாப்பிடுறீங்க?” என்று கேட்டான், ஆப்பு காத்திருந்ததை அறியாமல்.

“நாக்கு,.. பூன வேணூம்…” கையுயர்த்தி அறிவித்தான் ஹரீஷ். ‘பூனையா.. ஐயய்யோ’ என்று கலங்கி நின்றவனைப் பார்த்து, “அப்பா, அவன் பூனை ஷேப்ல தோசை கேக்கறான்” என்று விளக்கிய மகளை, ”ஆபத்பாந்தவியே.. அனாத ரட்சகியே.” என்று கையெடுத்துக் கும்பிட வேண்டுமென்று தோன்றியது அவனுக்கு.

மகளின் உதவியுடன் செய்த டிபனை, கார்ட்டூன் சேனல்கள் உதவியுடன் ஒரு வழியாக மகனுக்கு ஊட்டி முடித்து விட்டு, போர்க்களமாகக் கிடந்த சமையலறையை ஒரு வழியாகச் சுத்தம் செய்தான். தேய்க்கப் போட்டிருந்த பாத்திரங்களைத் தண்ணீருடன் தன் கண்ணீரையும் கலந்து கழுவிச் சுத்தம் செய்து, துணியால் துடைத்து அடுக்கி நிமிர்ந்த போதுதான், தான் இன்னும் சாப்பிடவில்லை என்பதே ஞாபகத்துக்கு வந்தது. இரைந்த வயிற்றை ஒரு கப் மோரில் சமாதானப்படுத்தியபோது, காலை எட்டுமணிக்கெல்லாம் டிபன் தட்டுடன் ஆவி பறக்கும் காபியையும் நீட்டும் அந்த வளைக்கரங்களின் நினைவுகள் கன்னங்களில் உப்புக்கோடுகளாய்ப் படிந்தன.

மகள் தானாகவே தயாராகி, வாசலில் வந்து நின்ற ஸ்கூல் பஸ்ஸில் ‘பை.. ப்பா” என்றபடி ஏறிக்கொண்டாள். “ப்பா.. மீனு பாக்கணும்..” என்றவாறு வந்து நின்ற ஹரீஷைத்தூக்கிக் கொண்டு, வீட்டின் ஷோகேசிலிருந்த மீன் தொட்டியருகே சென்றான். ”ஹை.. மீனு பாரு.. எப்பி நீஞ்சுது?. ம்.. ஒனக்குப் பசிக்கலையா. ப்பா,.. மீனுக்கும் நேத்திக்கி மம்மம் தா” என்றபடி ஏதேதோ பேசிக்கொண்டிருந்தான். தலையை மெதுவாகத் தோளில் சாய்த்துக்கொண்ட மகனை ஆதுரத்துடன் தடவிக்கொடுத்தபடி பேச்சுக்கொடுத்துக்கொண்டிருந்த ஆனந்த், “ஹரீஷ்,.. நீ விளையாடிட்டிருப்பியாம். அப்பா போய் காய் வாங்கிட்டு வந்து சமைப்பேனாம். சரியா..” என்று மெதுவாக இறக்கி விட முயல, ‘நானும் வாரேன். அம்மா மாதிர்யே நீயும் கூட்டிட்டுப்போ” என்று இன்னும் இறுக்கிக்கொண்டான்.

இறங்க மறுத்த மகனை ஒரு கையிலும், சுமைகளை இன்னொரு கைகளிலுமாகச் சுமந்து கொண்டு வீட்டுக்குள் வருவதற்குள் போதும் போதுமென்றாகி விட்டது. பசிக்களைப்பு வேறு கண்களை இருட்டிக்கொண்டு வந்தது. வீட்டுக்கு வந்ததும், அழுக்குத்துணிகளை மெஷினில் போட்டு விட்டு,

“டொண்டொடொயிங்க்… அப்பா இன்னிக்கு உங்க ரெண்டு பேருக்கும் வெஜிடபிள் பிரியாணி செஞ்சு தந்து அசத்தப்போறேனே” என்று குதூகலத்துடன் அறிவித்து விட்டு, மகனை டைனிங் டேபிளில் உட்கார வைத்துவிட்டுக் கதை சொன்னவாறே பிரியாணியைச் சமைக்கத் தொடங்கினான்.

என்னதான் பேச்சுலராக இருந்தபோது வகை வகையாய்ச் சமைத்திருந்தாலும், திருமணத்திற்கப்புறம், ‘இனிமே எல்லாம் உன் பாடு’ என்று மனைவியிடம் பொறுப்பைத்தள்ளி விட்டு விட்டதால் இப்போது எல்லாமே புதிதாக உணர்ந்தான். எது எங்கே இருக்கிறது என்று கூடத் தெரியாமல் தடுமாறினான். ஹாலுக்கு ஓடி விட்ட குழந்தை ஹரீஷையும் சமாளித்துக் கொண்டு விரலை நறுக்கிக்கொண்டு, கையைச் சுட்டுக்கொண்டு, ஒரு வழியாகச் சமைத்து முடித்தான். முந்தின நாளே அலுவலகத்தில் லீவு சொல்லியிருந்தபடியால் இன்று அலுவலகம் போகத்தேவையில்லை. ஆனால், மறுநாளை எப்படிக் கழிக்கப்போகிறோம் என்று இப்போதே கவலை சூழ்ந்து கொண்டது அவனை. ஹாலெங்கும் இறைந்து கிடந்த விளையாட்டுப் பொருட்களை அடுக்கி வைத்து நிமிர்ந்தவன், சோபாவிலேயே தூங்கி விட்டிருந்த ஹரீஷின் அருகில் ஆயாசத்துடன் அமர்ந்து கொண்டான்.

ஒரு பெண் இல்லையென்றால் வீடு எப்படிக் களேபரமாக ஆகி விடுகிறது என்று எண்ணும்போதே, “இங்கே ஏன் தூசியா இருக்கு?.. ஹரீஷோட பொம்மை கால்ல இடறுது. பார்த்து எடுத்து வைக்கத் தெரியாதா?. ரெண்டு வாய்ச் சாதத்தை அஞ்சு நிமிஷத்துல ஊட்டத்துப்பில்லை. சாப்பாடு ஊட்ட ஒரு மணி நேரமா?” என்று ஒவ்வொரு சின்ன விஷயத்துக்கும் மனைவியைக் கடிந்து கொண்டதும், நிற்கக்கூட விடாமல் வேலை ஏவிக்கொண்டே இருந்ததும், “வீட்ல சும்மாத்தானே இருக்கே,.. இதைச் செய்யக்கூடாதா?..” என்று அடிக்கடி குத்திக்காட்டியபடியே பாங்க், தபாலாபீஸ், டெலிபோன் எக்ஸேஞ்ச் என்று தன்னுடைய காரியங்களைச் சாதித்துக்கொண்டதும் ஏனோ இப்போது அவள் இல்லாத தனிமையில் நினைவில் வந்து இம்சித்தது. “நிழலின் அருமை வெயிலில் தெரியும்ன்னு பெரியவங்க சும்மாவா சொல்லி வெச்சிருக்காங்க” என்று நினைத்துக்கொண்டான்.

ஏதேதோ நினைவுகளில் கிடந்தவனை வாயில்மணி அழைத்தது. அதற்குள்ளாகவா மகள் வந்து விட்டாள் என்று வியந்தபடி, “ட்ரெஸ் மாத்திட்டு வா,.. சாப்பிடலாம். நான் தட்டு வைக்கிறேன்” என்றபடி அடுக்களைக்குள் நுழைந்தவனைத்தொடர்ந்தாள் மகள். “இல்லைப்பா,.. நல்ல பசி. மொதல்ல சாப்பிட்டுட்டு அப்றம் யூனிபார்ம் மாத்தறேனே.. ப்ளீஸ்” என்று கொஞ்சலாகக் கேட்ட மகளை மறுக்க மனம் வரவில்லை.

குக்கரைத் திறந்து தட்டில் பரிமாறிய தாரிணி, “ஹை.. அப்பா. இன்னிக்குப் பொங்கல் செஞ்சுருக்கீங்களா?” என்று வியந்தாள். பிரியாணி எப்படிப் பொங்கலானது என்று குழம்பினான். ‘எதுக்கும் இருக்கட்டும்ன்னு ரெண்டு கப் தண்ணீர் கூடுதலா ஊத்தினது தப்பாப்போச்சே’ என்று தன்னையே கடிந்தவன், “ஆ… ஆமாம்.. ஆமாம்.. வெஜிடபிள் மசாலா பொங்கல் செஞ்சேன். கல்யாணத்துக்கு முந்தி என் ரூம்மேட்ஸுக்கு மத்தியில் இது ரொம்ப ஃபேமஸான ரெசிப்பி தெரியுமோ!!” என்று சமாளித்தான். குழந்தைகளுக்கும் ஊட்டி, தானும் ஒரு வாய் அள்ளிப்போட்டபின் தான் உயிர் வந்தது அவனுக்கு. பகல் முழுதும் வேலை செய்த களைப்பும், உண்ட மயக்கமும் அவனைச் சற்றுப் படுத்து உறங்கச்சொன்னாலும், காய்ந்த துணிகளை அயர்ன் செய்து வைத்து விடலாமே என்று அந்த வேலையையும் முடித்தான்.

முதுகும் உடம்பின் ஒவ்வொரு கணுவும் ‘விண்.. விண்’ என்று வலிக்க “அக்கடா” என்று உட்கார்ந்தவன், “எப்படித்தான் அவள் இத்தனையையும் சமாளித்தாளோ!!..” என்று வியந்தான். “அவள் இல்லாத பொழுதுகளில்தான் அவள் எவ்வளவு பொறுப்புகளைச் சுமந்திருக்கிறாள் என்பது தெரிகிறது, முன்பே அவளைப் புரிந்து கொண்டிருந்தால் அவள் இந்த முடிவுக்குப் போயிருக்க மாட்டாளே” என்று பெண்ணின் சக்தியை, திறமைகளைக் குறைத்து மதிப்பிட்ட தன்னுடைய அறியாமையை நொந்து கொண்டான்.

“அப்பா,.. இந்த ஹோம்வொர்க்ல கொஞ்சம் ஹெல்ப் செய்யுங்களேன்” என்ற மகளின் குரல் அவனை நனவுலகத்துக்கு மீட்டுக்கொண்டு வந்தது. “ஐயோ.. இது வேறா?... தாங்காது சாமி” என்று மனதுக்குள் அலறியவன், “அப்பாவுக்கு ரொம்ப டயர்டா இருக்கும்மா. ப்ளீஸ்.. கொஞ்சம் பொறுத்துச் சொல்லித்தரேனே” என்றான்.

“போங்கப்பா,.. அம்மா இருந்தப்ப எவ்வளவு டயர்டா இருந்தாலும், எப்போ கேட்டாலும் ஹெல்ப் செய்வாங்க தெரியுமா?. சமைச்சுட்டே கூட பாடம் சொல்லித்தருவாங்க.” என்று சொல்லும்போதே கண்ணீர் திரையிட்டது தாரிணிக்கு.

சற்று நேரம் அமர்ந்திருந்தவன், மொபைலைக் கையிலெடுக்கவும் அழைப்பு மணி அலறியது.

யாராக இருக்கும் என்று எண்ணியபடியே கதவைத்திறந்தவன் வயிற்றில் ஆயிரம் குடம் அமிர்தம் பாய்ந்த உணர்வு.

“அதான் சொல்றேனில்லே.. பந்தயத்துல தோத்துட்டேன்னு. அப்றமும் என்ன நக்கல் சிரிப்பு வேண்டியிருக்கு..” என்று முணுமுணுத்தான்.

தர்ஷணா… அதுதான் அவன் மனைவி இன்னும் விழுந்து விழுந்து சிரித்துக் கொண்டிருந்தாள்.

முந்தின நாள் நடந்த வாக்குவாதத்தில் சற்று வார்த்தைகள் தடித்து விட, ”சரி,.. வீட்ல நான் சும்மா இருக்கறேன். நானில்லைன்னா இந்த வீடு ஒண்ணும் இருண்டு போயிராது. என்னை விட நல்லாப் பார்த்துப்பேன்னு என்னை பார்த்துச் சொன்னீங்கல்லே. நமக்குள்ள ஒரு பந்தயம் வெச்சுக்கலாமா?”

“என்ன பந்தயம்?.. சொல்லித்தொலை”

“நாளைக்கு முழுக்கக் குழந்தைகளையும் வீட்டையும் நான் எப்படிப் பார்த்துக்கறனோ அப்படிக் கிரமம் தவறாம நீங்க பார்த்துக்கணும். இதுல ஒரு கடமையில் தவறினாலும் நீங்க தோத்துட்டதா அர்த்தம். அப்படியில்லாம நல்லாக் கவனிச்சுக்கிட்டா நீங்க ஜெயிச்சுட்டதா அர்த்தம்.”

“தோத்தவங்களுக்கு என்ன தண்டனை?”

“கணவன் மனைவிக்கிடையே தண்டனைக்கு இடமில்லை. ஆனா பரிசுக்கு இடமிருக்கு. இதில் கிடைக்கும் அனுபவம்தான் பரிசு. ஆனாலும் ஊக்கப் பரிசா ஜெயிக்கறவங்க ஒரு வாரத்துக்கு ஹாய்யா ரெஸ்ட் எடுக்கலாம். தோத்தவங்க அந்த ஒரு வாரத்துக்கு வீட்டோட முழுப்பொறுப்பையும் சுமக்கணும், சரியா?”

கம்பெனியில் நூறு பேரை நிர்வாகம் செய்யும் தன்னுடைய திறமை மேல் அபார நம்பிக்கை வைத்து ஏற்றுக்கொண்டவனுக்கு பாதி நாளிலேயே விழி பிதுங்கி விட்டது. அம்மா வீட்டிற்குச் சென்றிருக்கும் அவளை அழைத்து தோல்வியை ஒப்புக்கொண்டு விடுவதே சரி என்று அவன் நினைத்த வேளையில்தான் அவளே வந்து விட்டாள்.

“என்னை மன்னிச்சுக்கோ தர்ஷி,.. உன் அருமையை நல்லா உணர்ந்துட்டேன். இனிமே உன் மனசு புண்படற மாதிரி பேச மாட்டேன். ஒத்துக்கிட்டபடி இந்த வாரம் முழுக்க வீட்டுப்பொறுப்புக்கு நான் பதவியேத்துக்கறேன். என்ன செய்யணும்ன்னு ஆணையிடுங்கள் மஹாராணி” என்றபடி சலாம் செய்தான்.

“அதெல்லாம் வேணாம்.. நீங்க உணர்ந்ததே போதும். பரிசை ஆளுக்குப் பாதி பகிர்ந்துக்குவோம். கொஞ்சம் கூட மாட உதவியாயிருங்க. அது போதும்”

“அப்பா,.. ஹெல்ப் செய்யறேன்னு சொன்னீங்களே. நான் இன்னும் வீட்டுப்பாடம் முடிக்கலை” என்றபடி அம்மாவின் மடியிலிருந்து இறங்கினாள் தாரிணி.

“ஆனா,.. நான் வீட்டுப்பாடம் படிச்சிட்டேன்ம்மா”.. என்று அர்த்தபுஷ்டியுடன் மனைவியின் முகத்தைப் புன்னகையுடன் நோக்கியவாறே மகளிடம் கூறினான்.

டிஸ்கி: அதீதம் இதழில் வெளியானதை இங்கேயும் பகிர்ந்துக்கறேன்.

Friday 17 August 2012

எல்லாம் ஆரஞ்சு மயம்- இம்மாத 'பிட்' போட்டிக்காக..

காமாலைக் கண்ணனுக்குக் கண்டதெல்லாம் மஞ்சள்ன்னு சொல்லுவாங்க. இம்மாதப் பிட் போட்டியின் தலைப்பு 'ஆரஞ்ச்'சா இருக்கப்போயி கண்ணுல கண்டதெல்லாம் எனக்கு ஆரஞ்சா தெரிய ஆரம்பிச்சுட்டது. அதில் சிலதைக் கண்டதும் துள்ளிக்குதிச்ச மனசை அது ஆரஞ்சில்லை சிகப்பாக்கும்ன்னு ரெண்டு தட்டு தட்டி உக்கார வெச்சுட்டு சில ஆரஞ்சுகளைப் பிடிச்சுட்டு வந்துருக்கேன். பார்த்து எஞ்சாயுங்க.
எல்ப் செய்யறதுக்காக வந்த வெட்டுக்கிளி. ஆரஞ்சுக்கலர்ல ஜொலிக்கிற அதோட கண்ணைப்பாருங்க ..
ஆரஞ்சுப்பின்னணியில் அதே வெட்டுக்கிளி..
ஜூஸ் போட ஆரஞ்சுப்பழங்கள்..
வெள்ளிக்கிழமை தலைக்குளிக்க ஷாம்பூ..
க்ளிப்.. தலைமுடிக்கானதில்லை :-)
ட்ரீட்டா பேஸ்ட்ரி எடுத்துக்கோங்க..

Wednesday 8 August 2012

உதவிக்கரங்கள்..

படம் கொடுத்த கூகிளாத்தாவுக்கு நன்றி
இரண்டு நாட்களாய் எப்படியெப்படியெல்லாமோ கேட்டுப் பார்த்து விட்டாள் ரங்கம்மா. நயமாகவும் பயமாகவும் விசாரித்துப் பார்த்தாலும் பயல் பிடி கொடுத்துப் பேசவில்லை. சரி,.. அவன் போக்கிலேயே விட்டுப்பிடிக்கலாம் என்று அவன் ஓரளவு நல்ல மன நிலையில் இருக்கும்போது, “உனக்கு எந்தூருப்பா.. சொல்லு மக்கா.” என்று கொஞ்சலாகக் கேட்டாள். கீழுதட்டைப் பற்களால் அழுந்தக் கடித்தபடி தலை குனிந்து நின்றான். சட்டென்று கண்ணீர் திரையிட்டு எப்போது வேண்டுமானாலும் விழுந்து விடுவேன் என்று பயமுறுத்தியது.

அவன் மோவாயை விரலால் பற்றி நிமிர்த்தியபடி, “சொல்லுடா தங்கம்..” என்று கேட்டவளின் அடிவயிறு குழைந்தது. கண்ணீரும் சோகமும் உறைந்த அவனது பார்வை அவளது நெஞ்சில் ஈட்டியெனப்பாய்ந்து உயிர்வரை ஊடுருவியது. “ஐயா,.. நான் ஒண்ணும் கேக்கலைப்பா.. நீயே உனக்கு எப்பத் தோணுதோ அப்பச் சொல்லு, போதுமா.. அழாதே” என்று அவனை இறுக்கிக்கொண்டாள்.

மளிகைக்கடையில் வேலை பார்க்கும் கணவனின் சம்பாத்தியத்தை மட்டும் நம்பியிருந்தால் மூன்று குழந்தைகளின் வயிற்றுப்பாட்டையும், வீட்டுச்செலவையும் இந்தக் காலத்து விலைவாசியில் சமாளிக்க முடியாது என்றெண்ணிக் காய்கறி வியாபாரம் செய்து கணவனின் சுமையைக் கொஞ்சம் குறைக்க முயன்று கொண்டிருந்தாள்.

“சுமையைச் சுமந்துக்கிட்டு இந்த வேகாத வெய்யில்லயும் கொட்டற மழையிலயும் தெருத்தெருவா அலைஞ்சு நீ சம்பாதிச்சுத்தான் ஆகணுமா?.” என்று கேட்டவனின் வாயை, “சும்மாருங்க.. நமக்கு ஒரு பொம்பளைப்புள்ளையும் இருக்குங்கறதையே சமயத்துல மறந்துடறீங்க. இப்பமே ஏதாச்சும் சேர்த்து வெச்சாத்தானே நாளைக்கு அதுக்கு காதுல கழுத்துல ஏதாச்சும் தங்கத்தை ஒட்ட வெச்சு அனுப்ப முடியும். மூணு புள்ளைங்களையும் எப்பாடு பட்டாச்சும் படிக்க வெச்சுட்டா, நம்ம குடும்பம் நிமிர்ந்துரும். நாளைக்கு அதுங்க சவுகரியமா இருக்கறதைப் பார்த்துட்டா நமக்க கஷ்டமெல்லாம் பறந்துராதா” என்று அடைத்து விட்டாள்.

அப்படி வியாபாரத்துக்குப் போயிருந்த ஒரு சமயத்தில், ஒரு வாரத்துக்கு முன் கதிரேசனைக் கண்டெடுத்துத் தன்னுடன் கூட்டி வந்த அந்த நாள் நினைவில் வந்தது ரங்கம்மாவுக்கு.

“என்னப்போ ஈஸ்வரா.. இப்பமே வெய்யில் என்னா போடு போடுது. எக்கா, குடிக்கக் கொஞ்சம் தண்ணி கொடேன்..” என்றபடி காய்கறிக்கூடையைக் கீழே இறக்கி வைத்து விட்டுச் சும்மாடாகத் தலையில் சுற்றி வைத்திருந்த புடவைத்தலைப்பை உதறி, வேர்த்துக் கசகசத்த கழுத்தையும் முகத்தையும் துடைத்துக் கொண்டாள். அதற்குள் பக்கத்து வீடுகளிலிருந்த பெண்கள் பையும் கையுமாக அங்கே குழுமி விட்டனர். பரபரவென்று கண்ணும் கையும் காதுகளும் தராசும் வேலை செய்ய ஆரம்பித்தன. நாலு தெரு சுற்றி வருவதற்குள் கூடை முக்கால்வாசி காலியாகி விட்டது. அலமேலுப்பாட்டி நேற்றே சொல்லி வைத்திருந்தபடியால் வாங்கித் தனியாக வைத்திருந்த கீரைக்கட்டுகளைக் கொடுத்து முடித்து விட்டு, காய்கறிக்கூடையின் சுமை சுருக்குப்பைக்கு இடம் மாறி விட்ட திருப்தியுடன் பேருந்து நிலையத்துக்குள் நுழைந்தாள்.

'அடடா!!.. இந்தச் சின்னவன் நேத்தே நாவப்பழம் வேணுமுன்னு கேட்டானே. இந்தா எதுக்காப்புலதானே சந்தை இருக்குது. வாங்கிட்டுப் போயிரலாம். ஹூம்.. ஒரு காலத்துல ரோட்டுக்கு ரெண்டு பக்கமும் வளந்து பறிக்க ஆளில்லாம சீப்பட்டுக் கிடந்த பழத்தை இப்போ காசு கொடுத்து வாங்க வேண்டியிருக்கு. எல்லாம் காலக்கொடுமை. ஒரு மரத்தையாவது விட்டு வைக்கிறாங்களா பாவிப்பசங்க’ என்ற நினைப்புடன் திரும்பினாள்.

பேருந்து நிலையத்தையும் சந்தையையும் பிரித்த சுவரை யாரோ ஒரு புண்ணியவான் கொஞ்சமாக உடைத்து வழி உண்டாக்கியிருந்தார். பழத்தைக் கொடுத்ததும் சின்னவனின் முகம் எப்படியெல்லாம் மலரும் என்பதைக் கற்பனையில் கண்டு மகிழ்ந்தபடி அந்தத் திட்டி வாசல் வழியே நுழைந்து பழக்கடையில் போய் நின்றாள்.

கால் கிலோவுக்குப் பழத்தை வாங்கிக்கொண்டு திரும்பும்போது எப்போதும் போல் அவள் பார்வை மரத்தடியை நோக்கிச் சென்றது. இன்றும் அந்தப்பையன் அங்கே உட்கார்ந்திருந்தான். கடைக்காரனிடம் விசாரித்தபோதும் ஒன்றும் தெரியவில்லை. “நானூறு பேரு வரப்பட்ட இடம். இதுல நாம என்னத்தைன்னு கண்டோம், யாருன்னு கண்டோம். பாவப்பட்டு நேத்திக்கு ரெண்டு பழம் கொடுத்தேன். தின்னுட்டு ‘இங்கே வேலை தருவீங்களா?’ன்னு கேட்டான். சின்னப்புள்ளையை வேலைக்கு வெச்சுட்டு அப்றம் நாம ஜெயில்ல களி திங்கவா?. பாவம் யாரு பெத்த புள்ளையோ. ” என்றுவிட்டு அவன் பாட்டைப் பார்க்கப் போய் விட்டான்.

‘சின்னவன் வயசுதான் இவனுக்கும் இருக்கும். என்னா ஒரு ரெண்டோ மூணோ கூடக்குறைய இருக்கும் போலிருக்கு. பெத்தவங்க எப்பிடிப் பரிதவிக்காங்களோ. நம்ம புள்ளயப் போலிருக்கு. சவம்… விட்டுட்டுப் போறதுக்கும் மனசு வர மாட்டேங்குதே” என்று தனக்குள் அரற்றியவள், அவனருகே சென்று, “மக்கா,.. எதுக்கு இங்க தனியா உக்காந்துருக்கே. ஒங்க அம்மை எங்கயும் போயிருக்காளா? இல்ல வீட்டுக்கு வழி தெரியலையா? நா வேண்ணா கொண்டு போயி விடவா?” என்று ஆதுரத்துடன் கேட்டாள்.

“இல்ல.. வேணாம்”

“மக்கா.. மழ வரும் போல இருக்குப்பா. வாரியா?.. எங்க வீட்டுக்குப் போலாம்”

அவள் முகத்தைப் பார்த்தவன், அதில் தாய்மையின் கனிந்துருகும் கருணையைத்தவிர ஏதோன்றும் காணாததால் சற்றுத்தெளிந்தான். ‘சரி’ என்பதுபோல் தலையாட்டியவனை வீட்டுக்குக் கூட்டி வந்து விட்டாளே தவிர கணவன் என்ன சொல்வானோ என்று அவள் மனம் கலங்கத்தான் செய்தது. அவள் நினைத்தது போலவே எகிறினான் அவன்.

“ஊரான் புள்ளைய அழைச்சுட்டு வந்துட்டியே. பெத்தவங்களை நினைச்சுப் பார்த்தியா”

“நினைச்சதுனாலதான் இங்கே கூட்டியாந்தேன்”

“என்ன ஒளர்றே.. புத்தி பிசகிப்போச்சா உனக்கு?”

“மூணு நாளாப் பாக்கேன். சின்னப்புள்ளை அங்க தனியா கெடக்கான். அந்தச் சூழல்ல அவனை விட்டுட்டு வர மனசில்லை எனக்கு. அங்கிருந்து வேற எங்கயாச்சும் போயிட்டா அப்றம் எங்க போயி இவனைப் பிடிக்கிறது?. நம்மூட்டுக்குக் கூட்டியாந்து வெச்சுக்கிட்டு மெதுவா பெத்தவங்களை விசாரிச்சு அவங்களுக்குத் தகவல் அனுப்பிரலாம். அது வரைக்கும் பாதுகாப்பா இருக்கட்டுமேன்னுதான் இங்கே கூட்டியாந்தேன்” என்ற அவளது பதிலில் சற்றுச் சமாதானமானான்.

வந்த சில நாட்களிலேயே இறுக்கம் தளர்ந்து, கொஞ்சம் கலகலப்பானான் கதிரேசன். ரங்கம்மாவின் குடும்பத்தோடு நன்றாக ஒட்டிக்கொண்டாலும், அவனது சொந்த விவரங்களைப் பற்றிப்பேச்செடுத்தால் அவனிடமிருந்து பதில் வராது. ரங்கம்மாவும் சந்தையில் தான் வாடிக்கையாகக் காய் வாங்கும் கடைக்காரர்களிடம் பையனைத்தேடிக்கொண்டு யாரேனும் வந்தால் தனக்கு தகவல் தெரிவிக்கும்படிச் சொன்னதுடன் பக்கத்து வீட்டுப் போன் நம்பரையும் அவர்கள் அனுமதியுடன் கொடுத்து வைத்திருந்தாள்.

அவனிடமிருந்து ஒன்றையும் தெரிந்து கொள்ள முடியவில்லையே என்ற கவலையுடன் அன்றும் பேருந்திலிருந்து இறங்கியவள், வியாபாரத்துக்காக காய்கறி வாங்குவதற்காக வழக்கம்போல் சந்தைப்பக்கம் நடந்தாள். சரேலென்று அவளைக் கடந்து போய் நடை மேடையில் நின்றது ஒரு பேருந்து. “ஆத்தாடி,.. போற போக்கைப் பாரு. இடிச்சுத்தள்ளீருவாம் போலுக்கே” என்று அந்தப் பேருந்தைப் பார்த்து வைது விட்டு நடையைத்தொடர்ந்தவளின் மூளையில் பளீரென்று மின்னல் வெட்டியது. பேருந்தின் பின்பக்கம் ஓடிச்சென்று பார்த்தாள். அங்கே போஸ்டரில் கதிரேசன் சிரித்துக் கொண்டிருந்தான். அவனது அம்மா படுத்த படுக்கையாக இருப்பதாகவும் தகவலறிந்தவர்கள் தெரிவிக்க வேண்டிய முகவரியையும் போன் நம்பர் உட்படச் சொன்னது போஸ்டர்.

அதன் பின் போன் செய்து தகவல் சொன்னதும், அவர்கள் குடும்பத்தோடு வந்து ரங்கம்மாவுக்கு ஆயிரம் முறை நன்றி சொன்னதுமாக நடந்தவைகளெல்லாம் அவளுக்குக் கனவு மாதிரியே இருந்தது. கதிரேசனைக் கண்டதும் கதறித்தீர்த்து விட்டாள் அவன் அம்மா. இறுக்கிக்கொண்டு முத்த மழை பொழிந்த அவளிடமிருந்து தன்னை முரட்டுத்தனமாக விடுவித்துக்கொண்டு ரங்கம்மாவின் முந்தானையின் பின் ஒளிந்து கொண்டு விட்டான்.

‘நான் வர மாட்டேன்..’ என்ற ஒரே பல்லவியைப் பாடிக்கொண்டிருந்தவன், கடைசியில், ‘உனக்கு உன் புள்ளையத்தானே பிடிக்கும். எல்லோரும் அவனையே விழுந்து விழுந்து கவனிக்கிறீங்க. அவன் என்ன சொன்னாலும் கேக்கறீங்க. என்ன கேட்டாலும் வாங்கிக் கொடுக்கறீங்க. எங்கூட மட்டும் யாரும் அத மாதிரி அன்பாப் பேச மாட்டேங்கறீங்க. பாட்டி என்னடான்னா அவன் எதையாவது ஒடைச்சா என்னையத்தான் திட்டுறாங்க. என்னைய யாருக்குமே புடிக்கல. நீங்க அவனையே வெச்சுக்கோங்க. நான் இங்கியே இருக்கேன்’ என்று வெடித்து அழவும் பெற்ற மனம் சுக்கு நூறாய்ச் சிதறியது.

இதற்கிடையில் கதிரேசனின் தந்தையிடமிருந்து ரங்கம்மாவின் கணவன் ஒருவாறு விஷயத்தைக் கிரகித்து விட்டிருந்தான். பிறப்பிலேயே சற்றே மன நலம் குன்றிய கதிரேசனின் அண்ணனைச் சற்று அதிகமாகக் கவனித்ததும், மூத்தபேரன் மேலுள்ள பாசத்தால் பாட்டி சற்று அதிகப்படியான கடுமையுடன் கதிரேசனிடம் நடந்து கொண்டதும் அவனது பிஞ்சு மனதில் தன் குடும்பம் தன்னை நேசிக்கவில்லை என்ற நஞ்சைக் கலந்து விட்டிருப்பதை அறிந்து கொண்டான். “உண்மையில் இவங்கிட்டயும் நாங்க பாசமாத்தான் இருக்கோம்ன்னு எத்தனையோ முறை புரிய வைக்க முயற்சி செஞ்சும் இவன் புரிஞ்சுக்கலே” என்று அழுத அந்தத்தந்தையைப் பார்க்க பாவமாகத்தான் இருந்தது ரங்கம்மாவுக்கும்.

“ஒங்களை என் கூடப்பிறந்தவங்களா நினைச்சுச் சொல்றேன் அண்ணே. நீங்க தப்பா நினைக்கலைன்னா கதிரேசன் கொஞ்ச நாளைக்கு இங்கியே இருக்கட்டுமே. பள்ளியூடத்துல இப்ப பெரிய லீவுதானே. ஒங்க அக்கா தங்கச்சி வீட்டுக்கு அனுப்பியிருக்கறதா நெனச்சுக்கோங்க. சின்னப்புள்ளதானே. விளையாட்டுத்தனமா செஞ்சுட்டான். அவன எப்பிடியாவது தேத்தி நானே கூட்டியாறேன். உங்கூடு அளவுக்கு இங்க வசதியில்லதான். ஆனாலும் அவனை நல்லாக் கவனிச்சுக்குவோம்” என்ற ரங்கம்மாவைக் கையெடுத்துக் கும்பிட்டார் கதிரின் அப்பா. மனதில்லா மனதுடன் விடைபெற்றுச் சென்றனர் அனைவரும்.

இனிமேல் இங்கேயே இருக்கப்போகும் நினைப்பே கதிரேசனுக்கு நிம்மதியாக இருந்தது. ஆனால், அவனறியாமல் அவனது குடும்பத்தார் அவனைப் பார்த்துச் செல்வது அவனுக்குத் தெரியாது. விளையாட்டுப்போல் ஒரு மாதம் ஓடி விட்டது. தெருவிலேயே அனைவருக்கும் செல்லப்பிள்ளையாகி விட்டிருந்தான் அவன்.

அன்று மதியம் அரக்கப்பறக்க ரங்கம்மாவிடம் ஓடி வந்தவன், “அத்தை.. சந்தையில சொல்லி வெச்சு வாழைப்பழத்தொலி கொண்டாரச்சொன்னேனே. கொண்டாந்தீங்களா?.. கொடுங்க” என்று கேட்டு வாங்கிக்கொண்டு, ”இத எங்கே கொண்டுட்டுப் போறே?” என்ற அவளின் கேள்வியைக் காற்றில் கலக்க விட்டு வெளியே ஓடினான். இது போல் அடிக்கடி ஏதாவது நடக்கவும், ஒரு நாள் பிடித்து வைத்து விசாரித்தாள்.

“அத்தை,.. நம்ம கோடி வீட்டு சம்முவம் மாமா இல்லே. அவுங்க வீட்ல ஒரு ஆடு வளக்காங்கல்லா, அது குட்டி போட்டிருக்கு. அதுல ஒரு குட்டிக்கு பாவம் கண்ணு தெரியாதாம். நல்லாருக்கற ஆட்டுக்குட்டி தானே நடந்து போயி சாப்பாடு எல்லாம் சாப்பிடும். இது பாவமே பாவம். அதான் நாங்கல்லாம் சேர்ந்து அதைக் கிட்டயே ஒக்காந்து கவனிக்கோம்.” என்றான்.

“ம்.. இப்படி ஒக்காரு” என்று அவனைத் தன் அருகில் அமர்த்திக்கொண்டவள், “ரெண்டு குட்டி இருக்கப்பட்ட எடத்துல ஒண்ணை மட்டும் நல்லாக் கவனிச்சா சரியா?.. இன்னொண்ணு பாவமில்லே” என்றாள்.

“இன்னொண்ணு நல்லாத்தானே இருக்கு. அதுக்கு எந்தக் கொறையுமில்லையே. இந்தக்குட்டிதான் பாவம். கண்ணு தெரியாம எவ்ளோ கஷ்டப்படுது தெரியுமா?. அதப் பாக்கவே பாவமா இருக்கு.. இதுக்குத்தான் ஒதவி தேவை அத்தை. ”

“ம்.. அப்படின்னா ஒதவி தேவைப்படுறவங்களைத்தான் கூடுதலாக் கவனிக்கணும்ன்னு சொல்லு,”

“ஆமா,.. அதுதான் சரி..”

“ஏன் கதிரு,.. ஒடம்பு சரியில்லாததுனால ஒதவி தேவைப்படற ஒங்கண்ணனையும் இப்படித்தானே ஒங்க வீட்டுக்காரங்க பாத்துக்கறாங்க. நீ ஆரோக்கியமாவும், புத்திசாலியாவும் இருக்கறதுனால ஒனக்கு அந்தளவு கவனிப்பு தேவையில்லேன்னு அவுங்க நெனைச்சிருக்கலாம். அவுங்க செஞ்சது தப்பு,… நீ செய்யறது சரியா?.. இது என்னப்பா ஊருலே இல்லாத ஞாயம்” என்று அதிசயித்தவாறே மோவாயில் கை வைத்துக்கொண்டாள்.

பொளேரென்று பிடரியில் அடி வாங்கியது போல் இருந்தது கதிரேசனுக்கு.

பிரபஞ்சமே தன் இயக்கத்தை நிறுத்திக் கொண்டாற்போல் பெருத்த அமைதி நிலவியது.

“அப்பாவும் அம்மாவும் பாவம் இல்லே.. என்றவன், சிறிது நேரம் கழித்து, “அத்தை, எனக்கு அண்ணனைப் பார்க்கணும் போலிருக்கு. நாளைக்கு எல்லோரும் போலாமா என்றான்.

“என் தங்கம்,… ஊருக்குப் போனாலும் இந்த அத்தையை மறக்க மாட்டியே” என்று பிரிவுத்துன்பத்தால் குரல் பிசிறடிக்கக் கேட்டவள் அவனை அப்படியே கட்டிக்கொண்டு உச்சி முகர்ந்தாள்.

“ம்ஹூம்.. மறக்க மாட்டேன்.” என்றபடி அவனும் அவள் கழுத்தைக் கட்டிக்கொண்டான்.

டிஸ்கி: வல்லமையில் எழுதுனதை இங்கியும் பகிர்ந்துக்கறேன்.

LinkWithin

Related Posts with Thumbnails