Saturday, 25 August 2012

என்ன டிபனோ?..


என்னதான் மெனு போட்டு வாய்க்கு வக்கணையா, தினம் தினம் விதவிதமாச் சமைச்சாலும் இல்லத்தரசிகளை தலையைப் பிச்சுக்க வைக்குது இந்தக்கேள்வி. வித்தியாசமாவும் இருக்கணும், அதே சமயம் ருசியா சத்தானதாகவும் இருக்கணும்ன்னு எவ்வளவோ மெனக்கெடறோம். ஆனாலும் ஒரே அயிட்டத்தை தினம் தினம் பரிமாறினா போரடிச்சுருமில்லே. மிஞ்சிப்போனா ரெண்டு இஞ்ச் இருக்கற இந்த நாக்கைத் திருப்திப் படுத்தறது ரொம்பவே கஷ்டம் இல்லையா?.

ரொட்டி சப்ஜின்னு செஞ்சாலோ, “போச்சு.. இன்னிக்கும் சப்பாத்திங்கற பேர்ல அந்தப் பறக்கும் தட்டைச் செஞ்சு வெச்சுட்டாளா!. நாமென்ன திடீர்ன்னு வட நாட்டுக்காரங்க ஆயிட்டோமா?”ன்னு வீட்ல இருக்கற பெரியவங்க முணுமுணுப்பாங்க. அதே சமயம் சில குழந்தைகள் சப்பாத்தியை மட்டும் சாப்பிட்டுட்டு சப்ஜியை ஒதுக்கி வெச்சுடும்.

“சப்பாத்திக்கு மாவு பிசைஞ்சு வெச்சுட்டேனே.. இப்ப என்ன செய்ய?”ன்னு முழிக்கிறீங்களா?.. வாங்க.. அந்தச் சப்பாத்தியை வெச்சே ஒரு ருசியான அயிட்டம் செய்யலாம். ஆனா, இன்னிக்கு சப்பாத்தி செய்யப்போறேன்னு வீட்ல சொல்லாதீங்க. இது என்னதுன்னு சாப்பிடறப்ப அவங்களே தலையைப் பிச்சுக்கட்டும் :-)

ஒரு நபருக்கு ரெண்டு சப்பாத்தி வீதம் மொதல்ல செஞ்சு தயாரா வெச்சுக்கோங்க. சப்பாத்தியை எவ்ளோ மெல்லிசா இட முடியுமோ அவ்ளோ மெல்லிசா இட்டு, எண்ணெய் எதுவும் விடாம கல்லுல திருப்பித்திருப்பிப் போட்டு கொஞ்சம் ‘கடக்’கா சுட்டு வெச்சுக்கோங்க. ஆறியதும் துண்டுகளாப் பிச்சுப்போட்டு மிக்ஸியில் பொடிச்சுக்கோங்க. அவல் மாதிரியான சைஸ்ல வந்தாலும் போதும்.

நறுக்கிய முட்டைக்கோஸ், பச்சைப்பட்டாணி, காரட், பீன்ஸ் எல்லாம் கலந்த கலவை ஒரு கப் அளவுக்கு எடுத்துக்கோங்க. தினசரிச் சமையலுக்காக நறுக்கும்போதே அதுல கொஞ்சத்தை எடுத்து ஒரு டப்பாவில் போட்டு ஃப்ரிஜ்ஜில் வெச்சுட்டா, வாரக்கடைசியில் டப்பா நிரம்பிரும். கலந்த காய்ப்பொரியல், வெஜ் ஃப்ரைட் ரைஸ் செய்யறதுக்கும் ஆகும். உப்புமா, அவல்ன்னு எல்லாத்துலயும் சேர்க்கலாம். வெரைட்டியா இருக்கும்.

ரெண்டு சப்பாத்திக்கு 1 மிளகாய்ங்கற அளவுல பச்சை மிளகாயை நறுக்கி வெச்சுக்கோங்க.

பெரிய வெங்காயத்தைப் பொடியா நறுக்கி வெச்சுக்கோங்க. அப்டியே கொஞ்சம் இஞ்சியையும், கறிவேப்பிலையையும் பொடிசா நறுக்கிக்கோங்க. ஒரு சின்னக் கிண்ணத்துல காரத்துக்கேற்ப மிளகாய்ப்பொடி, மஞ்சப்பொடி, கலந்து வெச்சுக்கோங்க. 

ஒரு வாணலியில் எண்ணெய்யைச் சூடாக்கி கடுகு, சீரகம், உளுத்தம் பருப்பு போட்டுப் பொரிஞ்சதும் கறிவேப்பிலை சேருங்க. அப்றம் வெங்காயமும் இஞ்சியும் சேர்த்து பொன்னிறமாகும் வரைக்கும் வதக்கணும்.

இது கூட நறுக்கிய காய்க்கலவையைச் சேர்த்து தேவையான அளவு உப்புப் போட்டு வேக விடுங்க. காய்களைக் கழுவிய ஈரமே போதும். மேல்கொண்டு தண்ணீர் சேர்க்க வேணாம். சப்பாத்தியில் ஏற்கனவே உப்பு இருக்கும். அதனால காய்களுக்கான அளவுல உப்பு எடுத்தாப் போதும். காய்கள் முக்கால் வேக்காடு ஆனதும் மிளகாய் மற்றும் மஞ்சள் தூளைச் சேருங்க. நல்ல வாசனை வந்ததும் பொடிச்ச சப்பாத்தியைப் போட்டு, நல்லாக் கிளறுங்க.

ஒரு ஸ்பூன் அளவுல தண்ணீரைத் தெளிச்சு மூடி போட்டு வேக விடுங்க. விரும்பினா கொத்தமல்லித்தழையும் சேர்க்கலாம். பொல பொலன்னு வந்ததும் இறக்கிச் சூடாப் பரிமாறுங்க.

அசைவப் பிரியர்கள் விரும்பினா முட்டையோ அல்லது விரும்பிய அசைவமோ தனியா வதக்கி வெந்ததும், காய்களோட சேர்த்துட்டு அப்றம் பொடிச்ச சப்பாத்தியைச் சேர்த்துச் செய்யலாம். அப்படி அசைவம் சேர்க்கறப்ப ஒரு ஸ்பூன் கரம் மசாலா சேர்த்துக்கோங்க.

மஹாராஷ்ட்ராவில் இதைச் 'சூரா'ன்னு சொல்லுவாங்க. காலையில் செஞ்சு மீந்த சப்பாத்திகளை வெச்சு இதைச் செஞ்சு சாயந்திர காப்பிக்குத் தொட்டுக்கறதுமுண்டு.22 comments:

சிநேகிதி said...

நல்ல ஐடியா.. விதியாசமாக இருக்கும்..

வல்லிசிம்ஹன் said...

அச்சோ.என்ன கலர்!!!!!சப்பாத்தியா இப்படி உரு மாறித்து.?மும்பையில உட்கார்ந்து என்ன செய்யறீங்க.
இங்கவந்து க்ளாஸ் எடுங்க:)
படம் சூப்பர்.

புதுகைத் தென்றல் said...

எங்க வீட்டுல இதுக்கு பேரு கொத்து சப்பாத்தி. :)) (கொத்து பரோட்டாவுக்கு தங்கசச்சி). தண்ணியை விட மீதமிருக்கும் சாம்பார் அல்லது தேங்காய்ப்பால் கொஞ்சமா சேர்த்தாலும் ருசிக்கும்.

Thanai thalaivi said...

"சூரா" ங்கிர பேரெல்லாம் தெரியாமலே எங்க வீட்டு சூரர் அதாங்க என் தலைவர் இந்த டிபன் பண்ணுவாரு. இதுக்கு எங்க வீட்டுல சப்பாத்தி உப்மானு பேரு. முந்தின நாள் இரவுக்கு செஞ்சு மீந்த சப்பாத்திய மறுநாள் இப்படி செய்து கொடுத்து பசங்களை அசத்துவார். ஹலோ ! அதுக்காக எல்லாமே அவர்தான் செய்வாருன்னு நினைச்சுக்காதீங்க. இந்த மாதிரி சில சமயம் நல்ல மூடுல செய்வாரு.

ஹுஸைனம்மா said...

//இன்னிக்கு சப்பாத்தி செய்யப்போறேன்னு வீட்ல சொல்லாதீங்க. இது என்னதுன்னு சாப்பிடறப்ப அவங்களே தலையைப் பிச்சுக்கட்டும் //

//கொஞ்சம் ‘கடக்’கா சுட்டு வெச்சுக்கோங்க//

இதெல்லாம் எங்கூட்ல டெய்லி நடக்கிறதுதான்.

தின்னவேலிக்கே அல்வாங்கிற மாதிரி, சப்பாத்திக்கே சப்பத்திகூட்டு!! நல்லா இருக்கு(ம்). :-))))

ஹுஸைனம்மா said...

ஓ, அப்ப இது சைட் டிஷ் இல்லியா? மெயின் டிஷ்ஷே இதானா? அவ்வ்வ்....

கொத்து பரோட்டா மாதிரி இது கொத்து-சப்பாத்தி!! (இது புதுகைத் தென்றல் சொன்னதுதான், ஆனா நானும் எதாவது சொல்லணும்ல) :-))))

ராமலக்ஷ்மி said...

புதுமையாய் இருக்கு சாந்தி. சூரா கேள்விப்பட்டதில்லை. குறிப்புடன் படமும் செய்யத் தூண்டுது:)!

வெங்கட் நாகராஜ் said...

சூரா... நல்லாத்தான் இருக்கு!

நமக்கு சப்பாத்தி தான் பிடித்த ஐட்டம். அதனால சப்பாத்தியாவே சாப்பிடுவேன். இதுக்காகவே சப்பாத்தி செஞ்சு பிறகு சூராவும் செய்து பார்க்க வேண்டியது தான்...

நல்ல பகிர்வு சகோ.

T.N.MURALIDHARAN said...

இப்படி எல்லாம் பதிவப் போட்டு ஆண்களுக்கு சமையல் கத்துக் கொடுக்கணும்னு முடிவு பண்ணிட்டீங்க!
சூப்பர்

இராஜராஜேஸ்வரி said...

எங்க வீட்டில் இதற்கு சப்பாத்தி நூடுல்ஸ் என்று பெயர்...

ஸ்ரீராம். said...

அட, இன்று மாலை கூட இதே பிரச்னைதான் எங்கள் வீட்டிலும்! அதே சப்பாத்தியா, கூட 'டாலா', குருமாவா வேறு மாதிரி மாற்றி செய்யலாமா (மாவிலேயே காரப்பொடி, மசாலாப்பொடி சேர்த்துப் பிசைந்து....) கடைசியில் இட்லி சாம்பாரிலே நின்று விட்டோம். இதை ட்ரை செய்யலாம் போல இருக்கே.... டான்க்சுங்கோ...! படத்தை மாதிரியாக வைத்து இதே மாதிரி வருகிறதா என்று பார்க்கலாம். அசைவம் சேர்க்கா விட்டால் என்ன, காலி ஃபிளவர், மீல் மேக்கர், பனீர் என்று சேர்த்துக்க வேண்டியதுதான்... என்ன சொல்றீங்க! பிரெட் கூட வறுத்துப் போடலாமோ?!

Anonymous said...

படம் கொத்து பரோட்டா சாயல்ல இருக்கு... புது டிஷ் டிரை செஞ்சி பார்க்கனும்... நன்றி

ஹேமா said...

இண்ணைக்கு மட்டும் ஒரு சமையல்.நாளைக்கு வேலை.பெரிசா சமைச்சா மிஞ்சிப்போகுமேன்னு கவலையா இருந்தேன் சாரல்.உங்க பதிவு.....இண்ணைக்கு இதேதான் என் சமையல்....நன்றி சாரல் !

சே. குமார் said...

அட... இது நல்ல ஐடியாவா இருக்கே...

Easy (EZ) Editorial Calendar said...

நல்ல கட்டுரைநன்றி,
ஜோசப்
http://www.ezedcal.com/ta (வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)

திண்டுக்கல் தனபாலன் said...

பதிவாக்கிப் பகிர்ந்து கொண்டதற்கு நன்றி...

தொடருங்கள்... வாழ்த்துக்கள்...(TM 4)

மோகன்ஜி said...

நல்லாத்தாங்க இருக்கு உங்க சூரா. செஞ்சி போட்டு தங்கமணிக்கிட்ட குட்பாய்ன்னு பேர் வாங்கிட மாட்டேனா?>

asiyao said...

சூரா சூரியகாந்தி மாதிரி சூப்பராக இருக்கு.

கவிநயா said...

படமே ரொம்ப ருசியா இருக்கு :) பகிர்ந்தமைக்கு நன்றி!

ஸாதிகா said...

சூப்பரா ஐடியா கொடுக்கறீங்க சாரல்.

கோமதி அரசு said...

நல்ல சமையல் குறிப்பு.

சூரா புதுமையான பேராய் இருக்கு.

முதல் நாள் போட்ட சப்பாத்தி , காலையில் போட்ட சப்பாத்தி மீந்து விட்டால் அருமையான சூரா செய்து கொடுத்து புதிதாக டிபன் செய்த மாதிரி அசத்தலாம்.
நன்றி.

Jaleela said...

ரொம்ப அருமையாக இருக்கு சாந்தி

LinkWithin

Related Posts with Thumbnails