Sunday 26 January 2020

71-வது வாழ்த்துகள்


பக்கத்து ஊரிலிருக்கும் ரயில் நிலையத்தின் வெளியே உள்ள மைதானத்தில், நவி மும்பையின் சிட்கோவானது, நடைப்பயிற்சி, ஸ்கேட்டிங், போன்றவற்றுக்கான பாதைகளை அமைத்துள்ளது. ஸ்கேட்டிங்கிற்காக ஒரு குறிப்பிட்ட நேரம் மட்டுமே ஒதுக்கப்பட்டிருப்பதால் மீதமுள்ள நேரத்தை மற்றவர்கள் யோகா போன்ற உடற்பயிற்சிகள் செய்வதற்குப் பயன்படுத்திக்கொள்வது வழக்கம். பணி ஓய்வு பெற்ற மக்கள் அப்பகுதியில் மரக்கன்றுகளை நட்டு தங்கள் பொறுப்பில் வளர்த்தும் வருகிறார்கள். 

உடற்பயிற்சியில் ஆர்வமும் அனுபவமும் உள்ள மக்கள் தாங்களாகவே இணைந்து பல்வேறு குழுக்களாக அமைந்துள்ளனர். அதாவது, இது 'தானாச்சேர்ந்த கூட்டம்'. இதில், யோகாவில் பயிற்சி உள்ளவர், பிற உடற்பயிற்சிகளில் அனுபவமுள்ளவர்கள் தங்களுக்குத் தெரிந்ததை மற்றவர்களுக்குக் கற்றுக்கொடுப்பது வழக்கம். இங்கே எல்லோரும் மாணவரே, எல்லோரும் குருவே. 

கூட்டத்தில் இணைய விருப்பமில்லாதவர்கள் தனித்தனியாக சித்தம் போக்கில் வாக்கிங், ஜாகிங், சூரிய நமஸ்காரம், இன்ன பிற உடற்பயிற்சிகள் போன்றவற்றை ஆங்காங்கே அமர்ந்து செய்வது வழக்கம். இதில் இரண்டு குழுக்கள் கொடியேற்றுதல், உரையாற்றுதல், ஆண்கள் மற்றும் பெண்களுக்கான ஓட்டப்பந்தயம், கையில் தேசியக்கொடியை ஏந்தியபடி சிறு ஊர்வலம்,என இன்றைய குடியரசு தினத்தைக் கொண்டாடி மகிழ்ந்தார்கள். அவற்றில் சில காட்சிகள் இங்கே..





கொடி வந்தனம்


வந்தே மாதரம் என்போம்

எங்கள் பாரத தேசமென்று தோள் கொட்டுவோம்




தாயின் மணிக்கொடி பாரீர்..
வேற்றுமையில் ஒற்றுமை,.. அதுவே இந்தியா. அந்த ஒற்றுமையையும் ஒருமைப்பாடையும் அசைத்துப்பார்க்கவும் சோதித்துப்பார்க்கவும் அடிக்கடி சில நிகழ்வுகள் ஏற்படுவதுண்டு. முன்னெப்போதும் இல்லாத வகையில் சோதனைகள் சூழ்ந்துள்ளன. அவையெல்லாவற்றையும் புறந்தள்ளி நாம் எப்போதுமே ஒரு தாய் மக்கள்தான் என்பதை நிரூபிப்போம். தாயின் மணிக்கொடி வாழியவே. அனைவருக்கும் இனிய குடியரசு தின நல்வாழ்த்துகள்.

Friday 24 January 2020

பாகற்காய்- கசப்பும் ஓர் சுவையே..

பாகல் (Momordica charantia) என்பது உணவாகப் பயன்படும் பாகற்காய் என்னும்  கசப்புச்சுவையுள்ள காயைத் தரும், பாகற்கொடியைக் குறிக்கிறது. குக்குர்பிட்டேசியே (Cucurbitaceae) என்னும் செடி, கொடி குடும்பத்தைச் சேர்ந்ததாகும். இரட்டை விதையிலைத்தாவரமான இது ஐந்து மீட்டர் அதாவது, பதினாறடி வரைக்கும் நீளமாக வளரக்கூடியது. தண்டில் எதிரெதிராக அமைந்திருக்கும் இலைகள் பிளவு பட்டு மூன்று முதல் ஐந்து துண்டுகளாகப் பிரிந்து உள்ளங்கையும் விரல்களும் போல் தோற்றமளிக்கும். இலையளவு 4–12 செ. மீ. (1.6–4.7 அங்குலம்) வரை இருக்கும். 

முளைத்து சுமார் ஓரடி வளர்ந்ததும் இலைகளின் இடுக்குகளிலிருந்து மெல்லிய இழைகள் வளர்ந்து நீண்டு சுருள ஆரம்பிக்கும். இந்த இழைகள்தான் கொழுகொம்பைச் சுற்றிப்பற்றிக்கொண்டு தாவரம் படர்ந்து செல்ல உதவியாக இருக்கின்றன. இலைக்காம்புகள் தண்டுடன் இணையுமிடத்தில் சிறுசிறு மொட்டுகள் போன்று துளிர்த்து அவையும் கொடியாகப் படர ஆரம்பிப்பதால் மிக விரைவிலேயே பந்தல் முழுவதையும் ஆக்கிரமித்துக்கொண்டு காய்க்க ஆரம்பிக்கும்.

இத்தாவரத்தில் ஆண், பெண் பூக்கள் தனித்தனியாக இருக்கின்றன. பெண் பூ மொட்டாக இருக்கும்போதிருந்தே சிறிய பிஞ்சுடன்தான் அரும்ப ஆரம்பிக்கும். பூத்தபின் பிஞ்சு முதிர்ந்து பாகற்காயாகும். வண்ணத்துப்பூச்சிகள், வண்டுகள் ஆகியவற்றைக் கவர்ந்திழுக்கும்படி பிரகாசமான வண்ணத்தைக் கொண்டிருக்கும்  இப்பூக்களின் அமைப்பை ஒப்பு நோக்க இவற்றில் பெரும்பாலும் தன் மகரந்தச்சேர்க்கை நடைபெறவே வாய்ப்புள்ளது எனவும் தோன்றுகிறது. 




பெண் பூக்கள்

பிஞ்சு முற்றிக் காயான பின்
முற்றிக்காயான பின் ஒரு கட்டத்தில் பழுக்க ஆரம்பிக்கும். மேல்தோலில் கொஞ்சம் கொஞ்சமாக ஆரஞ்சு நிறம் படர்ந்து முழுக்காயும் ஆரஞ்சு நிறமாகி இறுதியில் பட்டைகளாக வெடித்துப்பிளக்கும். உள்ளே விதைகளைச்சூழ்ந்திருக்கும் வெண்பகுதி முழுவதும் சிவந்திருக்கும். விதைகளும் நன்கு முற்றி கடினமானவையாக ஆகியிருக்கும். நல்ல காய்ப்பு உள்ள கொடியில் விளைந்து பழுத்துத் தயாரான விதைகளைக் காய விட்டுப் பாதுகாத்து வைத்தால் அடுத்த முறை விதைப்பதற்கு ஆகும்.


ஆண் பூக்கள்
ஒவ்வொரு கணுவிலும் பூக்கள் தோன்றி, அவற்றில் பெரும்பாலானவை பிஞ்சுகளைக்கொண்ட பெண் பூக்களாக இருக்க நேரினும் அவையெல்லாம் காய்ப்பருவத்தை எட்டிவிடுவதில்லை. ஒரு சில பிஞ்சுகள் வெம்பிப்பழுத்து உதிர்ந்து விடுகின்றன. சத்துக்குறைபாடு, வெப்பநிலை, தண்ணீர் சரியாகக் கிடைக்காதது என இதற்குப் பல காரணங்கள் இருக்கலாம். வியாபார நோக்கோடு பயிரிடப்படும்போது இதைக் கண்டு கொள்ளாமல் விட்டுவிட்டால் பெருத்த நஷ்டம் ஏற்படும். வீடுகளில் தொட்டியிலோ அல்லது நிலத்திலோ வளர்க்கப்படும் செடிகளில் பூக்கள் உதிரும் பிரச்சினைக்கு மிக எளிய தீர்வு ஒன்று இருக்கிறது. 

தேங்காய்ப்பால், மோர் ஆகிய இரண்டையும் சம அளவில் எடுத்துக்கொண்டு ஒரு பாட்டிலில் ஊற்றி சுமார் ஒரு வாரம் வரைக்கும் புளிக்க விட்டு எடுத்துக்கொள்ள வேண்டும். அதில் கால் கப் அளவு எடுத்துக்கொண்டு அத்துடன் ஒரு லிட்டர் தண்ணீர் சேர்த்து செடியின் மேல் தெளித்தும், வேரில் ஊற்றியும் வந்தால் பூ உதிரும் பிரச்சினை தீர்ந்து நன்கு காய்க்க ஆரம்பிக்கும்.



வெம்பிப்பழுத்தவை(pre matured)
பாகற்காயில் பல வகைகள் உள்ளன. அடர்ந்த பச்சை, வெளிர் பச்சை, மிக மிக வெளிறிய பச்சை, இரண்டு செ.மீ அளவே உள்ள குட்டிக்காய்கள், நீளமானவை, உருண்டையானவை எனப் பல வகை. இதில் குட்டியான காய் வகையை "மிதி பாகல்" என அழைப்பார்கள். நீளமான காய் வகையை "கொம்புப்பாகல்" என அழைப்பார்கள். இது போக, "மெழுகுப்பாகல்" என்றொரு வகையுண்டு. அதில் கொஞ்சங்கூட கசப்பே இருக்காது. 

பொதுவாக எல்லா வகைப் பாகற்காய்களிலும் சொரசொரப்பான முள் போன்ற மேல் தோல் இருக்கும். இவை இந்தியன் வகையைச்சேர்ந்தவை. மிக மிக வெளிறிய பச்சை நிறத்திலிருக்கும் பாகற்காயின் மேல் தோல் வழுவழுப்பாக இருக்கும். முனைகளும் மழுங்கி இருக்கும். இது சீன வகையைச் சேர்ந்தது.  

பாகற்காயில் “பீட்டா-கரோட்டின்”மற்றும் “வைட்டமின்-ஏ” உள்ளதால், கண் சம்பந்தமான நோய்களுக்குத் தீர்வாக உள்ளது. மேலும் இதில் உள்ள “வைட்டமின்-சி” மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள், கண்களுக்கு ஏற்படும் பாதிப்பில் இருந்து நம்மைப்  பாதுகாக்கும்.
பலரும் சுலபத்தில் சாப்பிட விரும்பாமல் தட்டிக்கழிக்கும் ஒரு காயாகப் பாகற்காய் இருக்கிறது. ஆனால் இதில் கொட்டிக்கிடக்கும் மருத்துவ குணங்கள் எக்கச்சக்கம். பாகற்காய்,.. முக்கியமாக மெழுகுப்பாகல் நீரழிவு நோய்க்கும், கண் பார்வைக்குறைபாட்டுக்கும் நல்லதொரு மருந்தாகும்.  இதையும் துவரன் செய்து சாப்பிடலாம். பாகற்காய், இலை போன்றவற்றின் சாறு, சூப் போன்றவை உடலுக்கு மிகவும் நல்லது. டைப்-2 வகை நீரழிவு நோயாளிகள் வாரத்தில் இரு முறை பாகற்காயை சாப்பாட்டில் சேர்த்துக்கொண்டால் ரத்தத்திலிருக்கும் அதிகப்படியான சர்க்கரையின் அளவு குறைந்து கட்டுக்குள் வருகிறது. 

பாகற்காய்கள்
பாகற்காயில் இரும்புச்சத்து, நார்ச்சத்து, பொட்டாஷியம், மெக்னீஷியம், விட்டமின் சி ஆகிய ஊட்டச்சத்துகள் நிறைந்துள்ளன. உடல் எடையைக் குறைக்க விரும்புபவர்களுக்கும் வயிற்றுப்பூச்சித் தொந்தரவு உள்ளவர்களுக்கும் பாகற்காய் ஜூஸ் அருமருந்து. கசந்து வழியும் ஜூஸ், சூப் போன்றவற்றை அருந்த விரும்பாதவர்கள், பொரியல், துவரன், வறுவல், வத்தக்குழம்பு, பாகற்காய் பிட்ளை என ஏதாவதொரு வகையிலாவது சாப்பிட்டு வர வேண்டும். வெல்லம் போட்டுப் பச்சடி செய்து வைத்தால் பாகற்காய் வேண்டாம் என்று ஓடுபவர்கள் கூட கொஞ்சமாவது சாப்பிடுவார்கள்.  பாகற்காய் வெல்லப்பச்சடி செய்முறைக்கு எங்கே போவது என்றுதானே நினைக்கிறீர்கள். இதோ இங்கே இருக்கிறது.

Saturday 18 January 2020

பனங்கிழங்கு.

வீட்டை ஒட்டினாற்போல் அமைக்கப்பட்டிருந்தது புறவாசலுக்குச்செல்லும் பாதை. அதில் சுவரோரமாக இரண்டடி அகலத்துக்கு முழங்கால் உயரத்துக்குக் குவித்துப்போடப்பட்டிருந்த மண், ஓரளவு இறுகி மென்பாறை போல் ஆகியிருந்தது. அதனருகில் குத்த வைத்து அமர்ந்திருந்த சித்தப்பா தன் கையிலிருந்த அரிவாளால் மண்ணை மெதுவாகக் கொத்திக்கொத்தி இளக்கி விட்டுக்கொண்டிருந்தார். அருகில் நின்றிருந்த நாங்களெல்லாம் கண் கொட்டாமல் பார்த்துக்கொண்டிருக்கும்போதே உள்ளிருந்து பனங்கொட்டையும் அதன் மேல் முளை விட்டிருந்த பனங்கிழங்குமாக ஒவ்வொன்றாக மெதுவாக வெளிப்பட்டன.

சேதப்பட்டு விடாமல் ஒவ்வொன்றாகப் பிடுங்கிப்போட்டு பனங்கிழங்கு தனியாகத் தறித்து எடுக்கப்பட்டது. பத்துப்பதினைந்து கிழங்குகள் சேர்ந்ததும் அவற்றைக் கட்டி சித்தியிடம் கொடுத்து, "எல்லாப் பிள்ளேளுக்கும் அவிச்சுக்குடு" என்றவர். "ஏ பிள்ளேளா.. பொறவாசலுக்கு வாங்க, தவுணு வெட்டித்தாரேன்" என்றபடி இன்னொரு தடிமனான அரிவாளும், வெட்டுப்பலகையுமாக பின் வாசலில் இருந்த கொடுக்காப்புளி மரத்தடிக்கு நடந்தார். கைக்குக் கிடைத்த பனங்கொட்டைகளை அள்ளிக்கொண்டு நாங்களும் தொடர்ந்தோம். 

அப்பாவின் அம்மாவுக்குப் பச்சை விரல்,.. அதாவது க்ரீன் ஃபிங்கர் இருந்திருக்க வேண்டும். பட்டுப்போன கம்பை நட்டு வைத்தாலும் துளிர்த்து விடுமென ஊரில் சொல்வார்கள். புறவாசலில் அவர் நட்டு வைத்திருந்த  மருதாணி, வாழை இன்ன பிறவுக்கிடையே இரண்டு கொடுக்காப்புளி மரங்களும் வானுயர வளர்ந்திருந்தன. சீசனில் காய்த்துக்கொட்டும் அளவுக்குக் கணக்கே கிடையாது. அதன் நிழலில் வாட்டமாக உட்கார்ந்து கொண்டு வெட்டுப்பலகையில் ஒரு பனங்கொட்டையை வைத்து ஒரே போடு. பனங்கொட்டை இரண்டாகப் பிளந்து விழுந்தது. தேங்காய் மூடியைப்போல் ஆனால், நீள்வட்டமாகக் காட்சியளித்த அதனுள்ளே, வெனிலா ஐஸ்க்ரீம் கலரில் ஒரு வஸ்து இருந்தது. அரிவாளின் கூர்முனையால் அதை நெம்பியெடுத்து எங்களிடம் கொடுத்து, "சாப்பிடு" என்றார்.

தொடும்போது கொஞ்சம் திடமாகத்தோன்றினாலும், வாயில் வைத்ததும் பஞ்சாகக்கரைந்து லேசான பதநீர் மணத்துடன் இனித்தது. "இது என்ன சித்தப்பா?" என்று ஆர்வத்துடன் கேட்டோம். "இதா?.. இத தவுணுன்னு சொல்லுவோம். நுங்குக்கு உள்ள தண்ணி இருக்கும்லா? அதுதான் வெளைஞ்சு தவுணா ஆவும். சாப்புடுங்க. மேலுக்கு நல்லது." என்றார்.

"அப்பம் நுங்கு என்னவாட்டு ஆவும்?"

"வெட்டிப்போட்ருக்கம்லா? அந்த பனங்கொட்டைய எடு. சொல்லுதேன்"

எடுத்துக்கொடுத்தேன்.

"இன்னா,... வெளில இருக்க ஓட்டை ஒட்டுனாப்ல வெள்ளையா கல்லு மாரி இருக்குல்லா. அதான் நுங்கு. பனங்கெழங்கு வெளைஞ்சுட்டுன்னா அப்றம் இப்படித்தான் ஆவும்."

"ஏஞ்சித்தப்பா... தேங்காயத் திருவற மாரி இத திருவி கொழம்புக்கு அரைக்க முடியாதா?"

"அது ஒண்ணுக்கும் ஆவாது. வெளஞ்சுட்டுன்னா அப்படித்தான் வம்பாப்போயிரும்."

"கெழங்கு வெளஞ்சுட்டுன்னு எப்படிக் கண்டுபிடிப்பீங்க?"

"அதுக்கு ஒரு காலக்கணக்கு இருக்கு. அப்பிய(ஐப்பசி) மாசம் பனங்கொட்டைய வெதச்சா மார்கழி, தைக்கு வெளஞ்சு மண்ணுக்கு மேல குருத்து தெரிய ஆரம்மிச்சிரும். அந்தாக்ல வேணுங்கப்பட்ட சமயம்லாம் வெட்டிக்கிட வேண்டியதுதான். அர வெளச்சல்ல வெட்டுனா தவுணு வந்துருக்காது. நொளுநொளுன்னு கெடக்கும். அத கஞ்சின்னு சொல்லுவோம். திங்கதுக்கு வாக்கா இருக்காது. பொறுமையா காத்துருந்தா, கெழங்கும் தவுணும் திங்கலாம். டவுன்லேயே இருக்கப்பட்ட பிள்ளேளு. ஒண்ணுமே தெரியாம வளருதுவோ" என்றபடி எழுந்து போனார் சித்தப்பா.

பனங்கிழங்குகளை லேசாக தலையும் வாலும் நறுக்கி, மேல் தோலைக் கழட்டி வீசி விட்டு, உயரமான ஒரு பானையில் நட்டக்குத்தற நிறுத்தி, அது மூழ்கும் வரை தண்ணீர் ஊற்றி, தேவையான உப்புடன் கொஞ்சம் மஞ்சளையும் அரைத்துப்போட்டு அடுப்பிலேற்றி வைத்தார் சித்தி. வீட்டுக்கு அடங்காத வாலுப்பசங்களைப்போல் பானைக்கு வெளியே நீட்டிக்கொண்டிருந்தன கிழங்குகள். இதை தட்டு போட்டு மூட முடியாது, ஆகவே, இன்னொரு சிறிய பாத்திரத்தால் மூட வேண்டும். மிதமான நெருப்பில் நன்கு வெந்ததும் இறக்கி, தண்ணீர் வடிய விட்டு, பரத்திப்போட்டு கொஞ்சம் ஆறியதும் சுளவில் கொட்டி வைத்து விட்டார்கள். அன்று இரவு யாருக்கும் சாப்பாடே தேவையிருக்கவில்லை. கிழங்காகத் தின்று தீர்த்தோம்.
நாகர்கோவிலில் வடசேரி சந்தையிலும் பனங்கிழங்கு கிடைக்கும், ஆனாலும் வாங்க அவசியமிருக்கவில்லை. அம்மாச்சி வீட்டிலிருந்தோ அப்பாச்சி வீட்டிலிருந்தோ கிழங்குகள் கட்டுக்கட்டாக வந்துவிடும். பொங்கல் சமயம்தான் என்றில்லை, நினைத்த போதெல்லாம் பஸ் ஏறி வந்துவிடும். தின்று திகட்டி அலுத்துப்போனபின், கிழங்கைக் கண்டாலே ஓடி விடுவோம். 'இதுகளுக்கு இனிமே எங்க தொண்டைல எறங்கப்போகுது' என்றபடி அம்மா அத்தனைக் கிழங்குகளையும் துண்டு துண்டாக நறுக்கி வெயிலில் காயப்போடுவாள். சுக்காகக் காய்ந்தபின் அவற்றை உரலிலிட்டு ஒன்றும் பாதியுமாக இடித்து அதன் பின் காய்ந்த மிளகாய் வற்றல், பூண்டு, உப்பு போட்டு இடித்துப் பொடியாக்கி வைப்பாள். இட்லி தோசைக்குத் தொட்டுக்கொள்ள நன்றாக இருக்கும். மஹாராஷ்ட்ராவின் லஸுன் சட்னியும் இதுவும் தூரத்து உறவு. ஒரு கட்டத்தில் அதுவும் அலுத்துப்போனது.

மும்பைக்கு வந்தபின், பனங்கிழங்கு காணாப்பண்டமாக ஆனபின் அதன் அருமை தெரிந்தது. பொங்கல் சமயம் வாஷியிலிருக்கும் 'வள்ளி ஸ்டோர்ஸில்" டப்பாவில் கிடப்பவற்றில் நல்லதாக நாலைந்தை வாங்கி வந்து அவித்துச் சாப்பிட்டு மனதைத் தேற்றிக் கொள்வது வருடா வருடம் நடக்கும் சடங்கு. சில வருடங்களுக்கு முன் ஒரு செப்டம்பர் மாதத்தில் ஊருக்குப் போயிருந்த போது, என் இரண்டாவது தம்பி சுமார் ஐம்பது கிழங்குகளை, 'அக்காவுக்கும் பிள்ளைகளுக்கும் அவித்துக்கொடு' என்று கொண்டு வந்து போட்டதை ஜென்மத்துக்கும் மறக்க முடியாது.

ஈழத்தில் பனங்கிழங்கை பச்சையாகவே வெயிலில் காய விட்டு இடித்து மாவாக்கி, 'ஒடியல்' கூழ் தயாரிப்பார்கள் எனக்கேள்வி. தமிழகத்திலும் வெந்த பனங்கிழங்கைக் காய விட்டு அரைத்து மாவாக்கி பதார்த்தங்கள் தயாரிப்பார்களாம். கேள்விதானே தவிர கண்டதுமில்லை, சாப்பிட்டதுமில்லை. திருச்செந்தூர் கோவிலின் வெளியே, நறுக்கிய கிளிமூக்கு மாங்காய், இலந்தைப்பழம் போன்றவை மட்டுமல்ல, அவித்த பனங்கிழங்கும் அதிக அளவில் விற்கப்படுவதுண்டு.

நன்கு பருத்த கிழங்கு வெந்தபின் அதை இரண்டாகப் பிளந்து, நடுவிலிருக்கும் பனங்குருத்தை எடுத்து வீசி விட்டு, கிழங்கைத்  துண்டு துண்டுகளாக உடைத்து, சாப்பிடும் அனுபவமே தனி. கிழங்கின் நடுவிலிருக்கும் பனங்குருத்து நுனி வெந்து பதமாக இருக்கும். அதையும் விட்டு வைக்காமல் சாப்பிடுவோம். பல்லுக்குப் பதமாக நன்றாகவே இருக்கும். தண்ணீரிலிட்டு வேக வைத்து மட்டுமன்றி, நெருப்பிலிட்டுச் சுட்டும் சாப்பிடலாம். தைப்பொங்கலின்போது, அடுப்பில் எரியும் சுள்ளிகளூடே மேல் தோல் உரிக்காத ஒன்றிரண்டு கிழங்குகளைச் சொருகி விட்டால் போதும். தோல் கருகி, கிழங்கு கருகாமல் நன்கு பதமாக வெந்து விடும்.
ஒரு முனை கூராகவும் மறு முனை ஒன்று அல்லது ஒன்றரை அங்குல விட்டம் கொண்டதாகவும் கூம்பு வடிவத்தில் இருக்கும் பனங்கிழங்கை நாரை எனும் பறவையின் அலகிற்கு ஒப்பிட்டு,

//பழம்படு பனையின் கிழங்கு பிளந்தன்ன: பவளக் கூர்வாய் செங்கால் நாராய்//

என, சத்திமுற்றப்புலவர் நாரை விடு தூதில் பாடியுள்ளது ஒப்பு நோக்க வியப்பூட்டக்கூடியது. நமக்குக் கிழங்கைக்கண்டால் தின்பதைத்தவிர வேறு சிந்தனையில் மனம் செல்லாது, புலவருக்கோ நாரையின் அலகொடு ஒப்பிட்டு அழகானதொரு உவமை தோன்றி, நாரையைத் தன் மனைவிக்குத் தூது செல்ல வேண்டி, அழகானதொரு பாடலையும் நமக்களித்திருக்கிறார். என்ன இருந்தாலும், மேன் மக்கள் மேன் மக்களே..

Saturday 11 January 2020

வெந்தயக்காடி

சற்றே புளிக்க வைத்த கஞ்சி வகைகளைக் காடி என்று சொல்வார்கள். ஒரு காலத்தில் நெல்லைச்சீமையில், சோளத்தைக் குத்தி அரிசியாக்கி களி போல் வேக வைத்து, ஆற விட்டு, மறு நாள் நீத்தண்ணி, மோர் போன்றவற்றை விட்டுக் கரைத்துக் கஞ்சியாகக் குடிப்பார்கள். இதை சோளக்காடி அல்லது சோளங்காடி என அழைப்பர். வேனிற்காலங்களில் ஏற்படும் உடற்சூட்டைத்தணிக்கும் வல்லமை கொண்டது அது. ஆனால் வெந்தயக்காடி அப்படிப்பட்டதல்ல, செய்த சூட்டோடு சாப்பிட மிகவும் ருசியாக இருக்கும். காலையில் செய்ததை இரவிலோ, அல்லது இரவில் செய்ததை மறுநாள் காலையிலோ கூட சாப்பிடலாம். நன்றாகவே இருக்கும். ஃப்ரிஜ்ஜில் ஒரு வாரம் வரை வைத்துச்சாப்பிட்டாலும் தீங்கில்லை. வெந்தயத்தின் மணத்தோடு, கருப்பட்டியின் ருசியோடு உள்ளத்தைக் கொள்ளை கொள்ளும்.  புளிப்பு ஏறுமுன் தீர்த்து விட வேண்டும். புளித்து விட்டால் சாக்கடைக்கு அபிஷேகம் செய்து விட வேண்டியதுதான்.
வெந்தயக்காடி
வெந்தயக்காடி பொதுவாக குளிர் மற்றும் மழைக்காலங்களில் ஏற்படும் நெஞ்சுச்சளிக்கு அருமருந்தாகக் கருதப்படுகிறது. உளுந்து சேர்ந்திருப்பதால் இடுப்பெலும்பைப் பலமாக்கும். இதில் கலந்திருக்கும் வெந்தயமோ கோடை காலத்தில் உடற்சூட்டைத் தணித்து சூட்டு வலியிலிருந்து பாதுகாக்கிறது. சுருங்கச்சொன்னால், இதை இன்ன பருவகாலத்துக்கு மட்டும் ஏற்றது எனக் குறுக்கி விட முடியாது. வருடம் முழுவதும் எப்போது வேண்டுமானாலும் சாப்பிடலாம். காடி எனப் பெயர் கொண்டிருக்கிறதே தவிர ருசியில் பாயசத்திற்கு தூரத்துச் சித்தி முறை.

மூலப்பொருட்களைப் பொதுவாக நன்கு ஊற விட்டு அரைத்துத்தான் செய்ய வேண்டும். ஆனால் அந்தக்காலத்தில், ஊற வைக்காமல், நேரடியாக  ஆட்டுரலில் இட்டு தண்ணீர் சேர்த்து அரைத்துத் தயாரிப்பார்கள் என ஒரு முறை கேள்விப்பட்டேன். இக்காலத்தில் மிக்ஸியில் அப்படியெல்லாம் அரைக்கப் புகுந்தால் இயந்திரம் பணாலாகி விடுமென்பது மட்டும் உறுதி. ஆகவே ரிஸ்க் எடுக்காமல் ரஸ்க் சாப்பிடவும்.


மூலப்பொருட்கள்
பச்சரிசி அரை கப் எனில், உடைத்த ஆனால் தோல் நீக்காத உளுந்து அரை கப் என்ற வீதத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும். இதில் அரிசிக்குப் பதிலாக, சோளம், கம்பு, குதிரை வாலி , கேழ்வரகு, பனிவரகு போன்ற சிறு தானியங்களை எடுத்துக்கொள்ளலாம். அதாவது, கோதுமையைத்தவிர மற்ற எல்லா தானியங்களுக்கும் அனுமதியுண்டு.  பொதுவாகவே, அடுக்களையில் சட்டென்று வேலை ஆக வேண்டுமென்பதற்காக பெண்கள் சில 'ஜோல்ஜப்பாட்டா' வேலைகளைச் செய்வதுண்டு. அதாவது, சிறு தானியங்கள் முழுதாக இல்லாமல் மாவாகத்தான் இருக்கின்றன என்றாலும் பாதகமில்லை. அவற்றையும் எடுத்துக்கொள்ளலாம். தோல் நீக்கிய உளுந்து மட்டும் என்ன பாவம் செய்தது?. அதுதான் இருக்கிறதென்றால் அதையே எடுத்துக்கொள்வோம்.

ஒரு பாத்திரத்தில், பச்சரிசி அல்லது சிறு தானியம் அல்லது தானிய மாவை அரை கப் எடுத்துக்கொண்டு அத்துடன் அரை கப் உளுந்தைச் சேர்த்து கால் டீஸ்பூன் வெந்தயம் சேர்த்து, தண்ணீர் ஊற்றி தேய்த்து அலசி வடித்து விட வேண்டும். பின் நன்கு மூழ்கும் வரை தண்ணீர் ஊற்றி, ஒரு மணி நேரம் ஊற வைக்கவும். மாவை உபயோகிப்பதானால், அரிசியைக் கழுவிக்கொண்டு அதன் பின் பிற பொருட்களைச் சேர்க்கவும். அரை மூடி தேங்காயைத் துருவி எடுத்துக்கொள்ளவும். இரண்டு அங்குலம் அளவில் சுக்கை எடுத்து நன்றாகக் கழுவி, ஒன்றிரண்டாகத் தட்டி வைத்துக்கொள்ளவும். இரண்டு வட்டுக்கருப்பட்டிகளை ஒன்றிரண்டாக உடைத்து வைக்கவும். உடைத்துப்போட்டால் சட்டெனக்கரைந்து சமையல் எரிவாயு மிச்சப்படும். உடங்குடிக் கருப்பட்டிகளின் இனிப்பும் சுவையும் தனி என்ற தனிக்குறிப்பு இங்கே சேர்க்கப்படுகிறது. நீங்கள் இருக்கும் பகுதியில் கருப்பட்டி கிடைக்கவில்லை எனில் ஆன்லைனில் ஆர்டர் செய்து தருவித்துக்கொள்ளலாம் என்ற ஆலோசனையும் இங்கே இலவசமாகக் கொடுக்கப்படுகிறது.


அர்ஸீம்பருப்பும்... மன்னிக்கவும், அரிசியும் உளுத்தம்பருப்பும் வெந்தயமும் ஊறிய பின், அதை ஊற வைத்த தண்ணீருடன் மிக்ஸியிலிட்டு, இடித்து வைத்த சுக்கையும் சேர்த்து கொரகொரப்பாக அரைக்கவும். பின் அத்துடன் தேங்காயைச் சேர்த்து நன்கு அரைத்து எடுத்துக்கொள்ளவும். வெண்ணெய் பதத்துக்கு அரைத்ததை விட சன்ன ரவை பதத்துக்கு அரைத்தெடுத்த மாவில் காடி காய்ச்சினால் அருமையாக வரும்.

ஒரு பாத்திரத்தில், மூன்று கப் தண்ணீரை ஊற்றி சூடானதும் தட்டி வைத்த கருப்பட்டித்துண்டுகளைப்போட்டு அது கரையும் வரை சூடாக்கவும். கரைந்தபின் கல், மண், பிசிறுகள் போக நன்றாக வடிகட்டி எடுத்துக்கொள்ள வேண்டும். இந்த கருப்பட்டிப்பாலை மறுபடியும் ஒரு பெரிய பாத்திரத்தில் ஊற்றி அத்துடன் குறைந்தது இரண்டு லிட்டர் தண்ணீரை ஊற்றிச் சூடாக்கவும். கொதிக்க விடக்கூடாது. தண்ணீர் சூடானதும், அரைத்த மாவை இதில் கொஞ்சங்கொஞ்சமாக ஊற்றி கட்டிகளில்லாமல் கிளறிக்கொடுக்கவும். எல்லா மாவையும் சேர்த்தபின் தணலை நன்கு எரிய விட்டு, காடி அடிப்பிடிக்காமல், நீளமான அகப்பையொன்றால் நிமிடத்துக்கொரு முறை கிளறிக்கொடுக்கவும். கிராமங்களில் இம்மாதிரியான சமையல்களுக்காகவே 'துடுப்பு' என்ற நீளமான மரக்கரண்டியை வைத்திருப்பர். பெயருக்கேற்றாற்போல் துடுப்பின் தோற்றத்தை ஒத்ததாக அதன் மினியேச்சர் போல் இருக்கும். சூடான பதார்த்தம் கொதித்துத்தெறிக்கும்போது அது நம் கையில் படாமல் பாதுகாத்துக்கொள்ள இது ஏற்றது. 


காடி தளபுளவெனக்கொதித்து, ஒன்று சேர்ந்து வெந்து பளபளவென வரும். அந்நிலையில், தணலைக்குறைத்து இரண்டு நிமிடங்களுக்கு காடியைக் கைவிடாமல் கிளறி இறக்கவும். 

இதைச்செய்வது ஒரு கலை எனில், சாப்பிடுவதும் இன்னொரு கலையே. சூப் கிண்ணங்களில் ஊற்றி நாசூக்காகப் பருகலாம், தம்ளர்களில் ஊற்றி சர்ர்ர்ர்ரென்று உறிஞ்சிப் பருகலாம், அகன்ற தட்டங்களில் ஊற்றி கரண்டியால் எடுத்துக் குடிக்கலாம். அத்தனை விதங்களிலும் ருசித்திருந்தாலும், எங்கள் அப்பாவைப்பெற்ற ஆச்சி வீட்டில் ஒரு முறை வெந்தயக்காடி குடித்த அனுபவத்தை மறக்கவே முடியாது.
 கொதிக்க ஆரம்பித்து
வெந்தயக்காடி தயார்
வீட்டருகே வளர்ந்திருந்த வடலிப்பனையிலிருந்து இளங்குருத்தாக அகலமான இலைகளை ஆய்ந்து வந்து, கரண்டியின் அளவுக்கு துண்டு துண்டாக நறுக்கி அதை உபயோகித்து, காடியைக் குடிக்கச்சொன்னார்கள். உளுந்தின் ருசியும், வெந்தயத்தின் மணமும், கருப்பட்டியின் இனிப்புமாக தித்தித்துக்கிடந்த காடியின் ஊடே பனையோலையின் மணமும் ருசியும் ஊடறு பாவாகக் கலந்து சுவையைக் கூட்டியது வித்தியாசமானதுதான். அந்த ருசியும் அனுபவமும் அப்புறம் வாய்க்கவேயில்லை.

Sunday 5 January 2020

மாம்பழம் வாங்கலையோ..

மா, பலா, வாழை என்ற முக்கனிகளில் மாம்பழம் முதலாம் இடத்தில் வைத்துப்போற்றப்படுகிறது. இந்தியாவில் ஏப்ரல், மே மாதங்களில் கோடை மட்டுமல்ல மாம்பழக்காலமும் ஆரம்பிக்கிறது. அப்பொழுது அல்போன்ஸாவோடு ஆரம்பிக்கும் மாம்பழக்காலம், ஜூலையில் மழைக்காலத்தில் கிளிமூக்கு மாம்பழங்களின் வருகையோடு நிறைவடையும்.  பாதாம் அப்பூஸ், கேஸர், லங்கடா, தஸேரி, நீலம், பங்கனபள்ளி, மல்கோவா என நாம் சுவைக்க பல்வேறு வகைகள் ஒவ்வொன்றாய் அணி வகுத்து வரும் மாம்பழக்காலத்தில் அதைப் பழத்துண்டுகளாகவும், சாறாகவும், மற்றும் பல இனிப்புகளாகவும், உணவு வகைகளாகவும் அவரவர் விரும்பிய வகையில் உண்பர் மக்கள்.

மாம்பழக்காலம் தொடங்கி விட்டது என்பதைக் கட்டியம் கூறி அறிவிக்கிறது அல்போன்ஸா மாம்பழங்களின் வருகை. அளவில் சற்றே சிறியதாய் இருந்தாலும் சுவை மிகுந்தது. மெல்லிய தோலும் அதிக அளவு சதைப்பற்றும் , மிகுந்த சுவையும் கொண்ட இப்பழம் வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. மஹாராஷ்ட்ராவின் ரத்னகிரி, தேவ்கட் போன்ற இடங்களில் விளையும் அல்போன்ஸா மாம்பழங்கள் மிகுந்த பிரசித்தி பெற்றவை. நார் சற்றும் இருக்காது ஆகவே, சீசனின்போது அல்போன்ஸாவை உபயோகித்து, வீடுகள் தோறும் ஆம்ரஸ் எனும் இனிப்பு செய்யப்படுவது வழக்கம். மற்ற மாம்பழ வகைகளிலும் செய்யலாமெனினும் அல்போன்ஸாவிலிருந்து தயாரிக்கப்படும் ஆம்ரஸ்ஸிற்குச் சுவையும் நிறமும் அதிகம்.


ருசி மற்றும் இதன் மற்ற குணங்கள் காரணமாக அல்போன்ஸாவானது "மாம்பழங்களின் ராஜா" என வழங்கப்படுகிறது. மஹாராஷ்ட்ராவைப் பொறுத்தவரை இது டஜன் கணக்கில்தான் விற்பனையாகிறது. சீசன் ஆரம்பிக்கும்போது ஒரு டஜன் ஆயிரம் ரூபாய்க்கும் மேல் இருக்கும். மெல்ல மெல்லக்குறைந்து முன்னூறு ரூபாய் வரைக்கும் வருவதுண்டு. ஒரு டஜன் மட்டுமல்லாமல் இரண்டு, நான்கு, ஐந்து டஜன் மாம்பழங்கள் கொண்டவை என வகை வகையாகப் பெட்டிகள் விற்பனைக்கு சந்தையில் அடுக்கப்பட்டிருக்கும். மொத்தமாக வாங்கும்போது விலை சற்றுக்குறையும். அவரவர் சாமர்த்தியத்தைப்பொறுத்து பேரம் பேசி மேலும் விலையைக்குறைக்கலாம்.




பாதாம் அப்பூஸ்: வடிவிலும் நிறத்திலும் அல்போன்ஸாவைப்போன்றே தோற்றமளிக்கும் அதே சமயம், அளவில் சற்றுப்பெரிதான பாதாம் அப்பூஸ் மாம்பழம், கர்நாடகாவிலிருக்கும் பதாமி என்னும் இடத்தைத் தாயகமாகக் கொண்டது. ஆகவே அப்பெயர். அல்போன்ஸாவின் விற்பனை சற்று உச்சத்தை எட்டும் காலத்தில் இது சந்தையில் நுழையும். ருசியில் அல்போன்ஸாவிற்குச் சற்றும் குறைந்ததல்ல. ஆகவே அப்பூஸ் அளவிற்கே இதற்கும் வரவேற்பு கிடைப்பதுண்டு. இதுவும் நாரில்லா வகையைச் சேர்ந்ததே ஆகையால் ஜூஸ் முதலானவை தயாரிக்கப் பயன்படுகிறது.

கேசர்: நீள்வட்ட வடிவமும் பொன்னிறமும் கொண்டது. காம்பையொட்டிய பகுதியில் சிவந்திருக்கும். சந்தையில் அல்போன்ஸா மாம்பழங்களின் வரத்து சற்றுக்குறைய ஆரம்பிக்கும்போது கேசர் மாம்பழம் வர ஆரம்பிக்கும். கவர்ந்திழுக்கும் நறுமணம் மற்றும் இனிய சுவையின் காரணமாக இதுவும் அதிக அளவில் விற்பனையாகிறது. பழச்சாறு, பழக்கூழ், ஜாம் மற்றும் மாம்பழத்தைப் பயன்படுத்தித் தயாரிக்கப்படும் உணவு வகைகளில் அதிகம் பயன்படுத்தப்படுகிறது. குஜராத் மற்றும் மேற்கு இந்தியாவில் அதிகம் விளைகிறது. அல்போன்ஸா வகையை விட அளவில் சற்றுச் சிறியதான இப்பழம் "மாம்பழங்களின் ராணி" எனப் போற்றப்படுகிறது.

கிளிமூக்கு: சற்றே நீளமாய் அதே சமயம் உருண்டு திரண்டு இருக்கும் இந்த மாம்பழ வகை, கிளிமூக்கு, தோத்தாபுரி, பங்களோரா, கல்லாமணி, சந்தேர்ஷா என பற்பல பெயர்களால் அறியப்படுகிறது. தென்னிந்தியாவில் அதிகம் விளையும் கிளிமூக்கு மாங்காய் அதிகம் புளிப்பதில்லை, அதேசமயம் பழுத்தால் அதிகம் இனிப்பதுமில்லை. ஆகவே இது ஊறுகாய், பச்சடி, உப்பிலிடு போன்ற பதார்த்தங்களைத் தயாரிக்க அதிகம் பயன்படுத்தப்படுகிறது. அவியல், சாம்பார், கூட்டாஞ்சோறு போன்ற அயிட்டங்களில் சேர்த்தால் ருசி கூடும். பொதுவாக மாம்பழ சீசன் முடியப்போகும் காலத்தில்தான் இது சந்தைக்கு வரும்.
லங்கடா: உள்ளே நன்கு பழுத்தபின்னும் தோல் சற்று கெட்டியாக பச்சை வண்ணத்திலேயே இருக்கும். சற்று நீள் வடிவத்தில் இருக்கும். மாம்பழக்காலம் கிட்டத்தட்ட முடியப்போகும் சமயம் கேஸர் வகையுடன் இதுவும் சந்தையில் வர ஆரம்பிக்கும். சதைப்பகுதி லேசான நார் கொண்டது.

மீதமுள்ள வகைகள் வரும் மாம்பழக்காலத்தில் பகிரப்படும்.

முன்னொரு முறை பகிர்ந்ததை வாசிக்க சுட்டியைச் சொடுக்கவும்.

LinkWithin

Related Posts with Thumbnails