Tuesday, 18 May 2010

மாம்பழமாம் மாம்பழம்....

"மாம்பழம்..." பேரைச்சொன்னாலே ச்சும்மா நாக்குல எச்சில் ஊறுதில்ல ". மாம்பழ சீசன் ஆரம்பமாகி செம போடு போட்டுக்கிட்டிருக்கு. பழக்கடைகளில் மாம்பழத்தையும், வாழைப்பழத்தையும் தவிர வேறு பழங்களை பார்க்க முடியல்லை. அதிலும் மும்பையில், 'அப்பூஸ்' என்று அழைக்கப்படும் அல்போன்ஸா மாம்பழம் வந்தாத்தான் சீசன் களைகட்டும். சீசன் ஆரம்பத்தில் டஜன் ஐந்நூறு ரூபாய்க்கு ஆரம்பித்து , இப்போ நானூற்றைம்பதில் நிற்கிறது. எக்ஸ்போர்ட் க்வாலிட்டி, அதான் இந்த விலை. இப்போ இயற்கை உரத்தில் வளர்க்கப்பட்டது , ரசாயன+இயற்கை உரத்தில் வளர்க்கப்பட்டதுன்னு ரெண்டு ரகம் விற்பனைக்கு வருது. இயற்கை வகை கொஞ்சம் விலை கூடுதல்.சீசன் முடியும்போது எப்படியும் இருநூற்றைம்பது வரை விலை இறங்கும்.

மாம்பழ சீசன் இருக்கும்வரை நிறைய வீடுகளில் ஆம்ரஸ், பூரி,சப்பாத்தி கண்டிப்பா இருக்கும். அப்பூஸ் விலை அதிகமா இருக்குன்னாலும், அதே மாதிரி சுவையுள்ள 'பாதாம் அப்பூஸ்' அந்த இடத்தை இட்டு நிரப்புகிறது. சில சமயங்களில் அப்பூஸைவிட பாதாம் பயங்கர டேஸ்டா இருக்கும். கிலோ வெறும் முப்பது, முப்பந்தஞ்சு ரூபாய்தான். மாங்காய் , மாம்பழம் எல்லாம் சீசன்ல மட்டும்தான் சாப்பிட முடியும்ன்னு இல்லை. இப்போ வாங்கி பதப்படுத்தி வெச்சுக்கிட்டா சீசன் முடிஞ்சப்புறம்கூட சாப்பிடலாம்.

அப்பூஸ்,.. ஹப்பூஸ்.. எப்டி வேணும்ன்னாலும் சொல்லலாம். எப்படி சொன்னாலும் இனிக்கும்.

கிளிமூக்கு மாங்காயை , கேரட் துருவுற மாதிரி துருவி வெச்சுக்கணும். ஒரு கடாயில் ஒரு ஸ்பூன் நெய் விட்டு மாங்காய் துருவலை வதக்கிக்கணும். ஒரே நிமிஷம்தான். அதுக்கு மேல வதக்கக்கூடாது. அப்புறம் ஒன்னரை மடங்கு சர்க்கரையை , அதனுடன் சேர்த்து கிளறிக்கிட்டே இருக்கணும். ரெண்டு ஏலக்காயை தட்டிப்போட்டுக்கலாம். எல்லாம் சேர்ந்து அல்வா பதத்தில் வந்ததும் இறக்கி ஆறவைத்து, சுத்தமான பாட்டிலில் வைத்து, ஃப்ரிஜ்ஜில் வெச்சிக்கலாம். கைபடாம எடுத்து பரிமாறினா கெட்டுப்போகாம இருக்கும். சப்பாத்தி, பூரி, ப்ரெட்டுக்கு நல்லா இருக்கும். ஜாமுக்கு பதிலா இதை உபயோகப்படுத்தலாம். சிலபேர் என்ன செய்வாங்கன்னா, மாங்கா துருவல், சர்க்கரை ரெண்டையும் ஒரு பாத்திரத்தில் வெச்சு, வெய்யிலில் வெச்சிடுவாங்க. வெய்யிலில் சர்க்கரை உருகி, பதம் தானாவே வந்துடும். வெய்யில் வீணாத்தானே போகுது... அப்பப்ப லேசா கிளறி வெச்சுடணும். ஒரு பத்து நாள் பொறுமையா செஞ்சா சர்க்கரையில் ஊறிய மாங்காய் அட்டகாசமா இருக்கும்.

லேசா பழுத்த மாங்காயை தோல்சீவி , பெரிய துண்டுகளாக்கி குக்கரில் ஒரு விசில் வரும்வரை வேகவெச்சுக்கணும். இன்னொரு பாத்திரத்தில் ஒண்ணரை மடங்கு சர்க்கரையை அரை கப் தண்ணீருடன் சேர்த்து,ஒரு கம்பிப்பதம் வரும்வரை பாகு காய்ச்சணும். அதில் இந்த மாங்காய்த்துண்டுகளை போட்டு, சிறு தீயில் கொதிக்க விடணும். மாங்காய்த்துண்டுகள் லேசா வெளிறி கண்ணாடித்துண்டுகள் போல் ஆகிடும். தின்னா ரத்தம்வருமான்னு எல்லாம் சந்தேகம் கேட்கக்கூடாது :-)))))). அப்றம் ஆறவெச்சு , தோணும்போதெல்லாம் திங்கவேண்டியதுதான் . இதை 'முரம்பா'ன்னு சொல்லுவாங்க.

மாம்பழத்துல ஆயிரத்துக்கு மேற்பட்ட வகைகள் இருக்காம். இங்கிலீஷுல mangoன்னு சொல்றாங்களே... அந்த வார்த்தை தமிழில் இருந்துதான் இங்கிலீஷுக்கு போயிருக்கு. தமிழில மாங்காய்ன்னும் மலையாளத்தில் மாங்ஙன்னும் சொல்லப்படுவதை கவனிச்ச போர்ச்சுக்கீசியர்கள் இதை mangaன்னு சொல்ல, இங்கிலீஷ்காரர்கள் mango ஆக்கிட்டாங்க. நாடுபிடிக்க வந்தவங்க மொழியையும் சேர்த்து பிடிச்சிக்கிட்டாங்க போலிருக்கு.

போர்ச்சுக்கீசியர்கள்தான் முதன்முதலில் அப்பூஸ் மாம்பழத்தை இந்தியாவுக்கு கொண்டு வந்திருக்காங்க. கொங்கண் பிரதேசத்தை சேர்ந்த கோவாவில்தான் இது பயிரிடப்பட்டது. கோவாக்காரங்க அப்பூஸ்ன்னு இதை அழைச்சா, பக்கத்துல இருக்கிற மராட்டிக்காரங்க ஹப்பூஸ்ன்னு சொல்றாங்க . மஹாராஷ்டிராவில் ரத்னகிரி, தேவ்கட் போன்ற இடங்களில் விளையுற மாம்பழங்கள்தான் வெளி நாடுகளுக்கு அதிகமா ஏற்றுமதி செய்யப்படுது. அமெரிக்கா இந்திய மாம்பழங்களின் மீதான தடையை 2007 ஏப்ரலில்தான் நீக்கியிருக்குது . நம்மூரு மாம்பழத்தோட ருசி அப்படி. ஆனானப்பட்ட அமெரிக்காவே அதிர்ந்து போச்சு :-))) . தடை நீக்கப்பட்டதும் மக்களெல்லாம் இந்திய மாம்பழம் சாப்பிடுறதை , செய்திகளில் கூட பார்த்த ஞாபகம்.

தள்ளுவண்டிகளில் மாம்பழம் விக்கிறதுக்கு வரும்போது ,"ஹப்பூஸ்,.. ஹப்பூஸ்.. ரத்னகிரி ஹப்பூஸ் ஆலா"ன்னு கூவிக்கிட்டே விப்பாங்கன்னா தெரிஞ்சுக்குங்க இதன் பெருமையை. Afonso de Albuquerque என்ற போர்ச்சுக்கீசிய போர்த்தளபதியின் ஞாபகமா இதுக்கு அல்போன்ஸான்னு பேர் வெச்சிருக்காங்க. இது இந்தியாவின் மேற்குப்பகுதிகளிலும், சவுத் ஈஸ்ட் பாகிஸ்தானிலும் அதிகமா விளைவிக்கப்படுது. இதோட சீசன் ஏப்ரல், மே ரெண்டு மாசமும் சக்கைப்போடு போடும் .

நம்ம கிரிக்கெட் ஸ்டார் சச்சின் டெண்டுல்கர் பேரைக்கூட ஒரு மாம்பழ வகைக்கு வெச்சுருக்காங்க. உத்தரப்பிரதேசம் லக்னோ மாவட்டத்தில் இருக்கும் Malihabadல் கலீமுல்லா கான் என்று ஒரு மாம்பழ விவசாயி இருக்கார். பத்மஸ்ரீ அவார்ட் வாங்கியவர் இவர். இவரோட தோட்டத்தில் ஏகப்பட்ட வகைகளை சேர்த்து உருவாக்கிய ஒட்டு மாமரம் ஒண்ணு பழம் தர ஆரம்பிச்சது. அப்படி ஒரு அருமையான சுவை அதுக்கு. சச்சின் டெண்டுல்கரின் பரம விசிறியான அவர் , சச்சினின் பெயரையே அதுக்கு வெச்சிருக்கார்.

நம்ம தமிழ்நாட்டிலும் "இமாம் பசந்த்" அப்டீன்னு ஒரு வகை இருக்கு. பயங்கர டேஸ்ட்டா இருக்கும். திருச்சிக்கருகே ஸ்ரீரங்கத்தில் ,.. தாத்தாச்சாரியார் தோட்டத்தில் விளைவிக்கப்படும் மாம்பழங்களுக்கு தனி ருசி உண்டாம். ஒரு தடவை திருச்சி போயிருந்தப்ப , ஸ்ரீரங்கம் போயிருந்தோம் . இன்னொருக்கா போய் நிதானமா தரிசிச்சுட்டு வரணும். அவ்வளவு பெரிய , சிற்ப வேலைப்பாடுகள் உள்ள கோயில் அது. தரிசனம் முடிச்சுட்டு வெளிய வந்தப்ப , எங்க ட்ரைவர்தான் இமாம் பசந்தைப்பற்றி சொன்னார். கேள்விப்படாத வகையா இருக்கேன்னு , கொஞ்சமா வாங்கினோம். வீட்டுக்கு வந்து டேஸ்ட் செஞ்சு பார்த்ததும்தான் , அடடா!!! இன்னும் கொஞ்சம் வாங்கியிருக்கலாமேன்னு தோணிச்சு.

மாம்பழம் அதன் அழகான கலருக்காகவும், சுவை மற்றும் வாசனைக்காகவும் விரும்பப்படுது . மாமரம் சுபநிகழ்ச்சிகளோட சம்பந்தப்பட்டது . மாவிலை தோரணங்களுக்கும், சமித்து (காய்ந்த மாஞ்சுள்ளிகள்) ஹோமத்துக்கும் பயன்படுது. மாங்காயாக இருக்கும்போது அதில் விட்டமின் சி நிறைஞ்சிருக்கு. அதுவே பழுத்து மாம்பழமாகும்போது விட்டமின் ஏ (beta carotene) அதிகமா இருக்கு.

இங்கே ஓடி வாருங்கள்.. பங்கு போட்டுத்தின்னலாம்.


மாமரம் நல்லா வளர்ந்து நல்ல பழங்களை கொடுக்க வெப்பமான சூழ்நிலை தேவைப்படுது. பழுக்காத மாங்காய்களை பேப்பர் பையில், இல்லைன்னா அரிசிப்பாத்திரத்தில் போட்டு வைச்சா சீக்கிரம் பழுத்துடும். மூடி வைக்கிறதால , பழத்திலிருந்து உண்டாகும் எத்திலீன் என்ற வாயு சீக்கிரம் உற்பத்தியாகி பழுப்பதை துரிதப்படுத்தும். இப்பல்லாம் என்னன்னவோ கெமிக்கல்களை உபயோகப்படுத்தி பழுக்க வெக்கிறாங்க. உடம்புக்கு கெடுதல் தரும்ன்னு தெரிஞ்சும் வியாபார நோக்கத்தோட, மக்களோட உடல் நலத்தோட விளையாடறாங்க .

முறையா பழுக்க வைக்கப்பட்ட மாம்பழம்தான் நல்லது. சில இடங்களில் , வைக்கோலால் மூடியும் பழுக்க வைப்பாங்களாம். விட்டமின் ஏ கண்பார்வைக்கு நல்லது . ஆனா,.. மாம்பழம் சூட்டைக்கிளப்பும்ன்னு சிலபேர் அதை தவிர்ப்பாங்க . மாம்பழம் சாப்பிட்டபின் ஒரு கப் பால் குடிப்பது சூட்டை தவிர்க்கும். மில்க் ஷேக் செஞ்சு சாப்பிடா இன்னும் நல்லது . டேஸ்ட்டுக்கு டேஸ்டும் ஆச்சு.... உடம்பும் கெடாது . மாம்பழத்தோட விறுவிறுப்பான சுவை பிடிக்காதவங்க உண்டா என்ன?.. ஃப்ரூட்டி, ஜம்பின் (jumpin) ,மாஸா, ஸ்லைஸ், ட்யூக்ஸ் போன்றவற்றின் புண்ணியத்தில் வருஷம் பூராவும் மாம்பழச்சுவையை அனுபவிக்கலாம்.

24 comments:

LK said...

உங்கள் பதிவு மாம்பழமாய் தித்திக்கிறது .. மாம்பழத்தை பற்றி பல விஷயங்கள் தெரிந்து கொண்டேன்

Chitra said...

முறையா பழுக்க வைக்கப்பட்ட மாம்பழம்தான் நல்லது. சில இடங்களில் , வைக்கோலால் மூடியும் பழுக்க வைப்பாங்களாம். விட்டமின் ஏ கண்பார்வைக்கு நல்லது . ஆனா,.. மாம்பழம் சூட்டைக்கிளப்பும்ன்னு சிலபேர் அதை தவிர்ப்பாங்க . மாம்பழம் சாப்பிட்டபின் ஒரு கப் பால் குடிப்பது சூட்டை தவிர்க்கும். மில்க் ஷேக் செஞ்சு சாப்பிடா இன்னும் நல்லது . டேஸ்ட்டுக்கு டேஸ்டும் ஆச்சு.... உடம்பும் கெடாது . மாம்பழத்தோட விறுவிறுப்பான சுவை பிடிக்காதவங்க உண்டா என்ன?.. ஃப்ரூட்டி, ஜம்பின் (jumpin) ,மாஸா, ஸ்லைஸ், ட்யூக்ஸ் போன்றவற்றின் புண்ணியத்தில் வருஷம் பூராவும் மாம்பழச்சுவையை அனுபவிக்கலாம்.


......mmmmmmmm...... yummy yummy yumm yumm yumm yumm yummy!

அமைதிச்சாரல் said...

வாங்க எல்.கே,

மாம்பழமாச்சே.. சுவைக்கு கேக்கவா வேணும்..

வருகைக்கு நன்றிப்பா.

அமைதிச்சாரல் said...

வாங்க சித்ரா,

ஹை,... உங்களுக்கு மாம்பழம் ரொம்ப பிடிக்குமா!!. சித்ராவுக்கு பத்துகூடை அப்பூஸ் பார்சல்ல்ல்ல்.

வருகைக்கு நன்றி.

வெங்கட் நாகராஜ் said...

ஸ்ரீரங்கம் தாத்தாச்சாரியார் தோட்டத்திலே இமாம் பசந்த் தவிர இன்னும் நிறைய வகையான மாம்பழம் கிடைக்கும். அந்த இடத்தின் பெயரே மாம்பழச்சாலை!!!

உங்க லிஸ்ல ஆந்திராவில் கிடைக்கும் “பங்கனபள்ளி” மாம்பழத்தையும் சேர்த்துக்கலாம். அப்படி ஒரு டேஸ்ட். ம்ம்ம். இங்க தில்லில ரெண்டு மூணு தினுசு மாம்பழம் தான் கிடைக்குது - ஒண்ணு பேரு “சோசா”!!

புதுகைத் தென்றல் said...

அப்பூஸ் ஞாபகப்படுத்தாதீங்கன்னு அப்பவே சொன்னேன். ஆசையைக் கிளப்பிட்டீங்க. உடனே மும்பைக்கு டிக்கெட் போட்டு வசாய் போவதற்கு பர்த்தி உங்க வீட்டுக்கு வந்திடுவேன். ஆமா சொல்லிட்டேன். மாமா ஆசை ஆசையாய் பழம் வாங்கி வந்து அடிக்கடி ஆம்ரஸ் பூரி நடக்கும் வீட்டில்.

சென்ற வருடம் மாமா இங்கே வந்து 5 கிலோ மாம்பழம் வாங்கி தன் கையாலேயே பிழிஞ்சி ஆம்ரஸ் செஞ்சுக்கொடுத்தாரு. இப்ப ஆம் ஞாபகமாம் மாம்ஸ் ஞாபகமா ஏதோ ஜாஸ்தியாகிடிச்சு.

அம்பிகா said...

நல்ல மாம்பழ பகிர்வு. எனக்கும் மாம்பழம் ரொம்ப பிடிக்கும்.

சந்தனமுல்லை said...

வாவ்! டேஸ்டி & யம்மி! :-)

ராமலக்ஷ்மி said...

சீசனுக்கு ஏற்ற பதிவு. எப்படிப் பதப்படுத்த வேண்டுமென்கிற குறிப்புகள் உபயோகமானவை. நன்றி சாரல்.

சௌம்யா கார்த்திக் said...

எனக்கும் மாம்பலம் பிடிக்கும். இப்ப நிறைய கிடைக்குது இங்க

அமைதிச்சாரல் said...

வாங்க வெங்கட் நாகராஜ்,

பங்கனபள்ளி ரொம்ப ஃபேமஸாச்சே.. நீங்க சொன்ன சோஸாவில் ஒரு வகைக்குத்தான் சச்சினின் பெயரிடப்பட்டிருக்கு.

வருகைக்கு நன்றி.

அமைதிச்சாரல் said...

வாங்க தென்றல்,

உங்களுக்கு புடிக்கும்கிறதாலயே பொட்டி நிறைய மாம்பழம் அடுக்கி வெச்சிருக்கேன். எவ்வளவு வேணுமோ எடுத்துக்கோங்க :-))))

கொசுவத்தி இப்பல்லாம் மேங்கோ வாசனையிலும் தயாராகுதாக்கும் :-))))

நன்றிங்கோ.

அமைதிச்சாரல் said...

வாங்க அம்பிகா,

இப்போ ஊரிலும் நல்ல சீசன்தான் இல்லையா..

வருகைக்கு நன்றிங்க.

அமைதிச்சாரல் said...

வாங்க சந்தனமுல்லை,

ச்சோ ஸ்வீட் அண்ட் tangy இல்லியா!!!

வருகைக்கு நன்றிப்பா.

அமைதிச்சாரல் said...

வாங்க ராமலஷ்மி,

கிடைக்கும்போது செஞ்சு வெச்சிக்கிட்டா சீசன் இல்லாதபோது சுவைக்கலாம். அதுவும் அடுத்து வர்ற மழைக்காலங்களில் மழையை ரசிச்சிக்கிட்டே முரம்பா+சப்பாத்தி சாப்பிட்டா ம்ம்ம்...

வருகைக்கு நன்றிங்க.

அமைதிச்சாரல் said...

வாங்க சௌம்யா,

முதல் வரவுக்கு நன்றிப்பா,

இப்ப சீசன் இல்லியா... மார்க்கெட் முழுசும் மாம்பழம் மலிஞ்சு கிடக்குது .

வருகைக்கு நன்றி.

நசரேயன் said...

மாம்பழம் வாங்க கடைக்கு போறேன்

கண்மணி/kanmani said...

மாதா ஊட்டாத சோறு மாம்பழம் ஊட்டும்.
ஆனா இப்போ கார்பைட்ட் கல்லு வச்சுப் பழுக்க வைப்பதால் உஷாராயிருக்கனும்.ஒன்லி கார்டன் ஃபிரஷ் தான் சேஃப்டி மேம்

அமைதிச்சாரல் said...

வாங்க நசர்,

நல்ல பழமா வாங்கிட்டு வந்து பங்குபோட்டு சாப்பிடணும் சரியா :-))

நன்றிப்பா.

அமைதிச்சாரல் said...

வாங்க கண்மணி டீச்சர்,

எல்லாம் அவசர யுகத்துக்கு நாம கொடுக்கிற விலைதான்.. வேறென்ன :-((

நன்றிங்க.

அப்பாவி தங்கமணி said...

அடப்பாவி... இப்படி டென்ஷன் ஆக வெக்கறீங்களே... நான் எங்க போக...

அமைதிச்சாரல் said...

வாங்க அப்பாவி,

டென்ஷன் எதுக்குங்க.... பக்கத்துல மால்ல மாம்பழம் கிடைக்குமே :-))))

நன்றிப்பா.

நானானி said...

எனக்குப் பிடிச்சதாச்சேன்னு ஓடி வந்துட்டேன். ஹை..யோ! மாம்பழத்திலே இம்மாம் சங்கதி இருக்கா? அதென்ன இம்மாம்பசந்த்? எனக்கு எங்க ராஜபாளையம் சப்பட்டை, பங்கனப்பள்ளி மாம்பழங்கள்தான் பசந்த்!

குறிப்புகளெல்லாம் இனிப்பாகவே சொல்லீட்டீங்க. இதெல்லாம் ஒரு காலத்தில் செஞ்சதுதான்.இப்ப நான் டையாபட்டீஸ் ரேஞ்சுக்குள்ள போயிட்டேனே..! இப்ப நான் என்ன செய்ய...இப்ப நான் என்ன செய்ய?

சாந்தி மாரியப்பன் said...

மன்னிக்கணும் நானானிம்மா. உங்க பின்னூட்டம் இப்பத்தான் கண்ணுல பட்டது.

இமாம் பசந்த் திருச்சிப்பகுதியில் கிடைக்கும் அசத்தலான மாம்பழ வகை. தாத்தாச்சாரியார் தோட்டத்து இமாம் பசந்துக்கு ருசி அதிகம். நாங்க திருச்சி போயிருந்தப்ப முதல் முறையா இதைச் சுவைத்தோம். செம தித்திப்பு. ஆமா,.. உங்களுக்கு ஊர்லேர்ந்து வீட்டுத்தோட்டத்து மாம்பழம் வந்துருக்குமே :-))

காக்க வெச்சதுக்கு இன்னொருக்கா மன்னிப்ஸ் கேட்டுக்கறேன்.

LinkWithin

Related Posts with Thumbnails