Thursday, 8 March 2012

குடத்திலிட்ட தீபம் - சாவித்திரிபாய் ஃபுலே


                                                            
“பட்டங்கள் ஆள்வதும் சட்டங்கள் செய்வதும்
பாரினில் பெண்கள் நடத்த வந்தோம்
எட்டுமறிவினில் ஆணுக்கிங்கேபெண்
இளைப்பில்லை காண்”என்று பெண் விடுதலைக்கும்மி பாடிய பாரதியின் வாக்கிற்கேற்பப் பெண்கள் இன்று எல்லாத் துறைகளிலும் சிறந்து விளங்குகின்றனர். ஆணுக்குப்பெண் சமமாக, ஏன்! ஒரு படி மேலாகவே இன்று முன்னேறியுள்ளனர். விண்வெளிக்குச் சென்று சாதனை புரிந்த கல்பனா சாவ்லா முதல் இந்தியாவின் உயர்பதவியை அலங்கரிக்கும் பிரதீபா பாட்டில் வரை நம் கண்முன் எத்தனையோ சாதனைப்பெண்கள் உலா வருகின்றனர்.

பெண்கள் கல்வி கற்பதே பாவம் என்று கற்பிக்கப் பட்டிருந்த நம் நாட்டில் அந்தத் தடைகளையெல்லாம் உடைத்தெறிந்து விட்டு இன்று கல்வியில் ஆண்களைவிட அதிகத் தேர்ச்சி விகிதமும் காட்டுகின்றனர். இந்த முன்னேற்றங்களெல்லாம் ஓரிரவில் நடந்து விடவில்லை. பெண்களுக்காக எத்தனையோ தியாக உள்ளங்கள் மெழுகுவர்த்தியாகத் தன்னையே உருக்கிக்கொண்டு நமக்காகப் பாடுபட்டதால்தான் நாம் இன்று இணையம் வரை கோலோச்ச முடிகிறது. இப்படிப்பட்ட தியாக விளக்குகளில் எத்தனையோ பேர் வெளியுலகத்திற்கு அதிகம் அறியப்படாமலேயே குடத்திலிட்ட தீபங்களாய் இருந்து மறைந்தும் போயினர். அத்தகையவரில் மராட்டிய மண்ணில் பிறந்த சாவித்திரிபாய் ஃபுலேயும் ஒருவர்.

இவர் மராட்டிய மாநிலத்தில் சதாரா மாவட்டத்தின் நைகாய் கிராமத்தில் லக்ஷ்மி பாய்க்கும், கண்டோஜி நாவ்ஸே பாட்டிலுக்கும் மகளாக 1831-ம் ஆண்டு ஜனவரித் திங்கள் மூன்றாம் தேதியன்று பிறந்தார். கல்வி கற்கும் வாய்ப்பு மறுக்கப்பட்டிருந்தாலும், வாசிக்கத் தெரியாவிட்டாலும் தனக்குச் சிறுவயதில் கிறிஸ்தவ அமைப்பொன்று கொடுத்த புத்தகத்தை அவர் திருமணமாகிப் புகுந்த வீடு செல்லும்போதும் உடன் எடுத்துச் சென்றதே புத்தகங்களின் மேலும், கல்வியின் மேலும் கொண்டிருந்த அவரது தணியாத ஆர்வத்தைக் காட்டுகிறது. அக்காலத்தில் நிலவிய குழந்தைத் திருமண முறைப்படி ஒன்பது வயதுச் சிறுமியான அவர், பதின்மூன்று வயது ஜோதிராவ் ஃபுலேயைக் கைப்பிடித்து பூனா வந்த போது இந்தத் திருமணம் தன்னுடைய வாழ்வையே மாற்றிவிடப்போகிறது என்று அறிந்திருக்கவில்லை.

தாயை இழந்திருந்த ஜோதிராவ் அச்சமயம் தன்னுடைய உறவினரான சகுணா பாயால் வளர்க்கப்பட்டு வந்தார். ஆங்கிலேயர் ஒருவரின் மகனைப் பார்த்துக்கொள்ளும் தாதிப் பொறுப்பில் அச்சமயம் இருந்த சகுணா பாய் நன்கு ஆங்கிலம் பேசுவதில் தேர்ச்சி பெற்றிருந்தார். அதனால் ஈர்க்கப்பட்ட ஜோதிராவுக்கும் கல்வியில் இயற்கையாகவே ஆர்வம் ஏற்பட்டது. பூவோடு சேர்ந்த நார் மணப்பது இயல்பு. ஆனால் இயற்கையாகவே மணமிக்க பூக்கள் ஒன்று சேர்ந்தால் அது கதம்பமாகி இறைவனுக்கு அர்ப்பணிக்கப்படும் பெருமையைப் பெறுகிறது. அவ்வாறே இக்குடும்பத்தில் வந்து இணைந்த சாவித்திரி பாயும் தன் பங்குக்குக் கல்வி மணம் பரப்பியதில் ஆச்சரியமில்லை.

தான் கற்ற கல்வியைப் பிறருக்கும் கற்றுக்கொடுக்க வேண்டுமென்று எண்ணி பூனாவின் நாராயண் பேட் என்ற பகுதியில் 1847-ல் மே ஒன்றாம் தேதியன்று ஜோதி ராவ் ஃபுலே ஒரு பள்ளியை ஆரம்பித்தார். ஒரு சில காரணங்களால் இப்பள்ளியை மூட வேண்டிய சந்தர்ப்பம் ஏற்படவே கல்விப்பணி தற்காலிகமாகத் தடைபட்டது. அச்சமயம் பூனாவில் பெண் குழந்தைகளுக்கெனத் தனிப்பள்ளி அமைக்கவேண்டுமென்று விரும்பிய ஜோதிராவ் அதன் முதற்கட்டமாகத் தன்னுடைய மனைவிக்குக் கல்விப்பயிற்சியளித்தார். கல்வியில் ஆர்வம் கொண்டிருந்த சாவித்திரிபாயும் மிகுந்த ஆர்வத்துடன் கற்றுத் தேர்ச்சியடைந்தார்.

பெண்கள் தாம் வேறு பிற வழிகளில் பெறமுடியாத முன்னேற்றத்தைக் கல்வியால் பெற முடியும் என்பது பாரதியாரின் அழுத்தமான நம்பிக்கை. பெண்களின் முன்னேற்றத்திற்கு மூன்று வழிகளைக் கூறுகின்றார்.

“அதற்கு மூன்றுவிதமான உபாயங்கள் இருக்கின்றன,
முதலாவது உபாயம் கல்வி; இரண்டாவது உபாயம் கல்வி;
மூன்றாவது உபாயம் கல்வியே! அதாவது கல்வியைத் தவிர
வேறு எல்லா விதமான உபாயமும் சிறிதேனும் பயன்படாது
என்பது கருத்து”

என்ற பாரதியின் வாக்கை மெய்ப்பிப்பது போல், அடிமைப் பட்டுக்கிடந்த பெண் சமூகத்தை முன்னேற்ற வேண்டுமானால் அவர்களுக்குக் கல்வி கற்பிப்பதே ஒரே வழி என்று எண்ணி 1848-ம் வருடம் ஜனவரி ஒன்றாம் தேதி பெண்குழந்தைகளுக்கென ஒரு பள்ளியை ஆரம்பித்துத் தங்களுடைய கல்விப்பணியைத் தொடர்ந்தனர். ஒன்பது மாணவிகளைக்கொண்ட இப்பள்ளியில் அனைத்து மாணவியரும் சாதி வேறுபாடின்றி சேர்க்கப்பட்டிருந்தனர். பூனாவில் அச்சமயம் நிலவிய சாதித்துவேஷச் சூழ்நிலையில் இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதனால் இவர் மிகுந்த எதிர்ப்புகளையும் சந்திக்க வேண்டியிருந்தது.

ஒரு தாழ்த்தப்பட்ட பெண் தங்களுக்கு நிகராகக் கல்வி கற்றதுமல்லாமல் கற்பிக்கும் பணியையும் மேற்கொண்டதை அவர்களால் பொறுத்துக் கொள்ள இயலவில்லை. தினமும் பாடசாலைக்கு சாவித்திரி பாய் நடந்து போகும்போது அவரைச் சொல்லாலும் செயலாலும் அவமானப்படுத்தினர். அவர் மீது கற்கள், சாணம், குப்பைகள் போன்றவையும் வீசப்பட்டன. இதனால் ஒரு கட்டத்தில் மனம் தளர்ந்த சாவித்திரிபாய் தான் இனிமேல் கல்விச்சாலைக்கு செல்லப் போவதில்லை என்று கூறி விட்டார். மனைவியைத் தேற்றிய ஜோதி ராவ் அவரிடம் இரண்டு புடவைகளைக் கொடுத்து, “இதில், சுமாரான புடவையைக் கட்டிக்கொண்டு பாடசாலைக்குப் போ. எதிர்ப்பாளர்கள் வீசும் அக அழுக்கையும் புற அழுக்கையும் அது சந்திக்கட்டும். பள்ளிக்குப் போனபின் நல்ல புடவையைக் கட்டிக்கொள்” என்று கூறினார்.

அதன் படியே நடந்த சாவித்திரி ஒரு கட்டத்தில் பொறுக்க முடியாமல் அந்த எதிர்ப்பாளர்களில் ஒருவனைக் கன்னத்தில் அறைந்தார். புழுவேயானாலும் ஒரு கட்டத்தில் பாம்பாய்ச் சீறி தன்னெதிர்ப்பைக் காட்டத்தானே செய்கிறது. அதன் பின் அவரைத் தொந்தரவு செய்தவர்கள் அவரது வழிக்கே வருவதில்லை. சாதிக்க வேண்டுமென்று உழைப்பவர்களின் பாதையில் மலர்கள் மட்டுமல்ல முட்களும் நிறைந்திருக்கும். சாவித்திரி பாயைப் போல் ஒரு சிலர் மட்டுமே அந்த முட்களையும் மலரச்செய்து தன்னுடைய பாதையில் மணம் வீசச் செய்கின்றனர். அவ்வருடமே பூனாவில் ஐந்து மகளிர் பள்ளிகள் துவங்கப்பட்டன. இதுவே இவர்களது இடைவிடாத உழைப்பிற்குக் கிடைத்த அங்கீகாரமும் பலனுமாகும். இவர்களது கல்விப்பணியைப் பாராட்டி ஆங்கிலேய அரசு இவர்களைக் கௌரவித்து சாவித்திரி பாயைச் சிறந்த ஆசிரியையாகவும் தேர்ந்தெடுத்தனர்.

இதை மட்டும் கண்ணுற நேர்ந்திருந்தால்,

ஏட்டையும் பெண்கள் தொடுவது தீமையென்
றெண்ணி யிருந்தவர் மாய்ந்து விட்டார்;
வீட்டுக் குள்ளேபெண்ணைப் பூட்டிவைப் போமென்ற
விந்தை மனிதர் தலைகவிழ்ந்தார்.

என்று பாரதி அப்போதே ஆனந்தக் கூத்தாடியிருப்பார்.

அந்தக் காலத்தில் பத்துப்பன்னிரண்டு வயது நிரம்பியதுமே பெண் குழந்தைகளுக்குத் திருமணம் செய்வித்து விடுவார்கள். பூனாவிலும் குழந்தைத்திருமணம் எனும் இக்கொடுமை நடந்து வந்தது. பால்ய விவாகத்தின் பலனாகப் பால்ய விதவைகளின் எண்ணிக்கையும் பெருமளவில் இருந்தது. தனக்கு என்ன நேர்ந்தது என்பதைக்கூட அறியாத சிறுமிகளான அவர்களின் நிலை மிகக்கொடியதாக இருந்தது. சதி என்றழைக்கப்பட்ட உடன் கட்டை ஏறுவதும், இல்லையெனில் தலை மழிக்கப்பட்டு வெள்ளையுடுத்தி மூலையில் முடங்குவதுமே அவர்களது தலையெழுத்தாக இருந்து வந்தது. பால்ய விதவைகள் குடும்பத்திலுள்ள சில ஆண்களால் வஞ்சிக்கப்பட்டுக் கர்ப்பமுறும் கொடுமையும் நடந்து வந்தது. அப்படிக் கர்ப்பமுறும் பெண்கள் ஒன்று தற்கொலை செய்து கொள்வார்கள் அல்லது செய்து கொள்ளத் தூண்டப்படுவார்கள், இல்லையெனில் பிறக்கும் குழந்தையைக் கொன்று விடுவார்கள்.

ஒரு சமயம் இப்படித் தற்கொலை முயற்சியில் இறங்கிய காசிபாய் என்னும் பால்யவிதவையைக் காப்பாற்றிய இத்தம்பதி, அவருக்குப் பிறக்கும் குழந்தையைச் சமூகத்தில் மற்றவர்களைப்போல் தலை நிமிர்ந்து வாழச்செய்வதாக உறுதியளித்தனர். அவருக்குக் குழந்தை பிறக்கும் வரை கண்ணும் கருத்துமாகக் கவனித்துக்கொண்டனர். குழந்தை பிறந்த பின் அதைத் தத்தெடுத்துத் தங்கள் குழந்தையாகவே வளர்த்தனர். யஷ்வந்த ராவ் என்று பெயரிடப்பட்ட அந்தக்குழந்தை பிற்காலத்தில் மிகவும் புகழ் பெற்ற டாக்டரானது. இப்படி ஒவ்வொருவராகத் தம்மால் கண்டுபிடித்துக் காப்பாற்ற இயலாதே என்று எண்ணிய தம்பதியினர் ஆங்காங்கே இதற்கெனப் பிரசவ விடுதிகளை அமைத்தனர். “சிசுக்கொலைத் தடுப்பு மையங்கள்” (பால்ஹத்யா ப்ரதிபந்தக் க்ருஹ) என்று பெயரிடப்பட்ட இந்த விடுதிகளில் ஆதரவற்ற பால்ய விதவைகள் தஞ்சமடைந்தனர்.

இனிமேல் பால்யவிதவைகளுக்கு தலை மழிக்க மாட்டோம் என்று அத்தொழிலைச் செய்து வந்தவர்களைக் கொண்டே அறிவிக்கச் செய்தார் சாவித்திரி. விதவை மறுமணத்தையும் ஆதரித்து அவ்வாறு செய்து கொள்ள விருப்பப் பட்டவர்களுக்கு மறுமணமும் செய்வித்தார். இவையெல்லாம் அவர் மீது உயர்சாதியினர் கொண்டிருந்த வன்மத்தை இன்னும் தூண்டியது. அடித்தட்டு மக்களுக்கும் உழைக்கும் மக்களுக்கும் கூட கல்வி புகட்டினாலொழிய ஒரு சமுதாயத்தை முழுவதுமாக முன்னேற்றி விட முடியாது என்பதை உணர்ந்திருந்த தம்பதியினர், அவர்களுக்கென 1855-ல் இரவுப்பள்ளியையும் தொடங்கினர்.
படங்கள் கொடுத்துதவிய கூகிளாண்டவருக்கு நன்றி
பெண்கல்வி மற்றும் விதவைகளுக்காக மட்டுமல்லாது, ‘சத்ய சோதக் சமாஜ்’ என்ற அமைப்பை ஏற்படுத்திச் சமூகத்திற்கும் தன்னாலியன்ற சேவை செய்து வந்தார். தாழ்த்தப்பட்டவர்கள் என்று அறிந்தால் தவித்த வாய்க்குத் தண்ணீர் கூட கொடுக்க மாட்டார்கள். அந்தளவுக்கு அக்காலத்தில் தீண்டாமை என்னும் கொடுமை தலை விரித்தாடியது. எனவே தங்கள் வீட்டுக் கிணற்றிலிருந்து நீர் இறைத்துக் கொள்ளுமாறு கூறி அவர்களுக்கு ஆதரவுக் கரம் நீட்டினார். பூனாவில் சாவித்திரி பாய் எனும் கல்வித்தெய்வம் வாழ்ந்த அந்த வீடு நினைவிடமாக்கப்பட்டு தினமும் மக்கள் தரிசித்துச் செல்லும் கோயிலாக உள்ளது. ஒரு சமயம் பூனா சென்றிருந்த போது, அங்கே செல்லும் வாய்ப்புக் கிடைத்தது. அழகான சிறிய வீடுதான். சாணம் பூசி மெழுகப்பட்ட மண் தரையுடன் கூடிய அந்த வீடும், அதிலிருக்கும் கிணறும் மிகவும் நல்ல முறையில் பராமரிக்கப்பட்டு வருகிறது.

தனக்கு எல்லா வகையிலும் துணையிருந்த கணவர் ஜோதிராவ் ஃபுலே 1890-ம் ஆண்டு இயற்கையெய்தி தன்னை விட்டுப் பிரிந்த நிலையில் தன் கணவரின் சிதைக்குத் தானே கொள்ளி வைத்து அவர் காட்டிய மன உறுதி அசாத்தியமானதும் கூட. கணவர் இறந்த பின், மூலையில் முடங்கி விடாமல் அவர் விட்டுச் சென்ற சமுதாயப் பணிகளில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டு, அத்தகையதொரு சமூகப் பணியின் போதே தன் இன்னுயிரையும் நீத்தார். பூனாவில் அச்சமயம் பரவியிருந்த ப்ளேக் நோயால் பாதிக்கப் பட்டிருந்தவர்களுக்குப் பணிவிடை செய்வதில் ஈடுபட்டிருந்த சாவித்திரிபாயையும் நோய் தாக்கியதன் காரணமாக 1897-ம் ஆண்டு மார்ச் 10-ம் தேதி இவ்வுலக வாழ்வைத் துறந்தார்.

மாணவி, ஆசிரியை, சமூக சேவகி, ஆதரவற்றவர்களுக்கு அன்னை என்று மட்டுமல்லாது கவிதாயினி என்றொரு முகமும் இவருக்குண்டு. இன்றைய நவீன மராட்டியக் கவிதைகளுக்கு அடி கோலிய சாவித்திரி பாயின் கவிதைகள் “காவ்ய ஃபுலே”, “பவன் கஷி சுபோத் ரத்னாகர்” என்ற பெயர்களில் நூல்களாகத் தொகுக்கப்பட்டன. சாவித்திரி பாயின் நினைவு தினத்தன்று அவரது உருவப்படம் தாங்கிய அஞ்சல் தலைகளை வெளியிட்டு இந்திய அரசாங்கம் அவரைக் கௌரவப் படுத்தியுள்ளது. சிறந்த சமூக சேவை செய்பவர்களுக்குச் சாவித்திரி பாய் நினைவு விருதை அளிப்பதன் மூலம் அவர் பிறந்த மராட்டிய மாநிலமும் அவரைக் கௌரவப் படுத்தியுள்ளது.

வரலாற்றின் பக்கங்களில் சிலர் மட்டுமே இடம் பெறுகிறார்கள். சிலர் செய்த நற்செயல்களும், தியாகங்களும் வெளியில் தெரியாமலேயே குடத்திலிட்ட விளக்காக மறைந்தும் மறைக்கப்பட்டும் விடுகிறது. ஒரு தீபத்திலிருந்து கோடிக்கணக்கான தீபங்களை ஏற்றினாலும் தீபத்தின் ஒளி குன்றுவதில்லை, மாறாக அது ஒன்று பலவாகப் பல்கிப் பெருகுவதன் மூலம் மேலும் பிரகாசமாகவே ஒளிர்கிறது. அவ்வாறே இத்தகைய தீபங்களும் வரலாற்றில் இடம் பெறவில்லையெனினும் தானிருக்கும் இடத்தை மட்டுமாவது ஒளிரச் செய்கின்றன.

அனைத்து சகோதரிகளுக்கும் இனிய மகளிர் தின நல்வாழ்த்துகள்.


டிஸ்கி: வல்லமையில் எழுதுனதை இங்கியும் பகிர்ந்துக்கறேன்.


36 comments:

கணேஷ் said...

உங்களால் இன்று ஒரு குடத்திலிட்ட விளக்கை அறிந்து கொண்டேன். மிக்க நன்றி. இனிய மகளிர் தின நல்வாழ்த்துக்கள்.

வெங்கட் நாகராஜ் said...

நல்ல கட்டுரை....

மகளிர் தினத்தன்று இவரைப் பற்றித் தெரிந்து கொண்டதில் மகிழ்ச்சி....

அனைவருக்கும் சர்வதேச மகளிர் தின நல்வாழ்த்துகள்.

Lakshmi said...

சாவித்திரிபாய் புலே பற்றி பகிர்ந்துகொண்டமைக்கு நன்றி

அம்பிகா said...

சிறந்த மகளிர் தின பதிவு.
மகளிர் தின வாழ்த்துக்கள்.

தி.தமிழ் இளங்கோ said...

வணக்கம்! ஜோதிராவ் புலே அவர்களைப் பற்றி அறிந்த அளவுக்கு அவரது மனைவி சாவித்திரிபாய் புலேயைப் பற்றி நான் அறிந்து கொள்ளவில்லை. உங்கள் கட்டுரை முலம் தெரிந்து கொண்டேன். நன்றி! மகளிர் தின வாழ்த்துக்கள்!

DhanaSekaran .S said...

அருமைக்கட்டுரை வாழ்த்துகள்.

இனிய மகளிர் தின நல்வாழ்த்துகள்.

Anonymous said...

மகளிர் தின நல்வாழ்த்துகள்...

இவரைப் பற்றித் தெரிந்து கொண்டதில் மகிழ்ச்சி...நன்றி சகோதரி...

S.Menaga said...

மகளிர்தின ஸ்பெஷலாக இவரைப்பற்றி அறிந்துக்கொண்டதில் மிக்க மகிழ்ச்சி+நன்றி!!

துரைடேனியல் said...

அறியப்படாத அருமையான ஒரு மாணிக்கத்தை அடையாளம் காட்டியதற்கு நன்றி. அக்காலத்தில் இப்படி வாழ முடியுமா என்று ஆச்சர்யப்படவைக்கிறது இந்த சாவித்திரிபாய் புலே யின் வாழ்க்கை. பகிர்வுக்கு நன்றி. தொடருங்கள்.

துரைடேனியல் said...

தமஓ 4.

வல்லிசிம்ஹன் said...

ஒரு அருமையான பெண்மணியை அறியக் கொடுத்ததற்கு மிகவும் ந்ன்றி.இவருக்கு இருந்த உரம் இப்போது வேறெங்காவது காணப்படுகிறதா தெரியவில்லை. அபூர்வமான பெண்மணி.பகிர்வுக்கு மிக நன்றி.சாரல்.மனம் நிறைந்த மகளிர்தின வாழ்த்துகள்.

Anonymous said...

நண்பா. உங்கள் பதிவுகளை திரட்டிகளில் புதிய வரவாக வந்துள்ள கூகிள்சிறியில் இணைக்கலாமே? நீங்களாகவே உடனுக்குடன் உங்கள் பதிவின் தலைப்பை மின்னஞ்சலின் Subject பகுதிக்குள்ளும் பதிவின் சுருக்கத்தையும் இணைப்பையும் Body பகுதியிலும் இட்டு rss4sk.googlesri@blogger.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு மின்னஞ்சல் செய்யுங்கள்.உங்கள் பதிவுகள் உடனுக்குடன் சமூக வலைத்தளங்களில் தன்னியக்க முறையில் பிரசுரமாகும்.

நன்றி
யாழ் மஞ்சு

பாச மலர் / Paasa Malar said...

மகளிர் தின வாழ்த்துகள்...தகவல் பகிர்வுக்கு நன்றி...கடினமான சவால்களைக் கண்டு துவண்டு விடாத கண்ணுக்குத் தெரியாத மகளிர் எத்தனை பேரோ?

கோவை2தில்லி said...

சிறப்பான பல சேவைகள் செய்த ஒரு பெண்மணியைப் பற்றி தெரிந்து கொள்ள முடிந்தது.

பகிர்வுக்கு நன்றிங்க.

Lakshmi said...

நல்ல கட்டுரை....

மகளிர் தினத்தன்று இவரைப் பற்றித் தெரிந்து கொண்டதில் மகிழ்ச்சி....

அனைவருக்கும் சர்வதேச மகளிர் தின நல்வாழ்த்துகள்.

பாச மலர் / Paasa Malar said...

படப்பதிவுகளுடன் பகிர்ந்ததற்கு நன்றி...

FOOD NELLAI said...

வித்யாசமான ஆனால் அறிந்து கொள்ள வேண்டிய அவசியமான பதிவும்கூட.

இராஜராஜேஸ்வரி said...

பூவோடு சேர்ந்த நார் மணப்பது இயல்பு. ஆனால் இயற்கையாகவே மணமிக்க பூக்கள் ஒன்று சேர்ந்தால் அது கதம்பமாகி இறைவனுக்கு அர்ப்பணிக்கப்படும் பெருமையைப் பெறுகிறது.

குடத்திலிட்ட தீபத்தை குன்றிலேற்றி தரிசிக்கவைத்த அருமையான பகிர்வுகள்.. பாராட்டுக்கள்..

ஹுஸைனம்மா said...

ஒரு புதியவரை, உறுதியானவரை அறிமுகம் செய்ததற்கு நன்றிக்கா. இந்த மாதிரி எழுதணும்னா நமக்குத் தமிழ்ப் பெண்கள்தான் சட்டுனு ஞாபகம் வரும். ஆனா, இருக்கும் இடத்தின் புகழ் பெற்றவரக்ளையும் அறிமுகப்படுத்தியது வித்தியாசம். அதுதான் அமைதிக்கா!! :-)))))

அமைதிச்சாரல் said...

வாங்க கணேஷ்,

மிக்க நன்றி,.. இந்தியாவுல இப்படிக் கண்டுகொள்ளாம விடப்பட்ட விளக்குகள் எத்தனையோ இருக்குங்க..

அமைதிச்சாரல் said...

வாங்க வெங்கட்,

ரொம்ப நன்றி.

அமைதிச்சாரல் said...

வாங்க அம்பிகா,

மிக்க நன்றி..

அமைதிச்சாரல் said...

வாங்க இளங்கோ,

இத்தனைக்கும் ஜோதிராவ் பெண்களை வீட்டுக்குள் பூட்டி வைப்பவர் கிடையாது. அப்படி இருந்துமே இந்தியாவின் முதல் ஆசிரியையைப் பற்றி நிறையப்பேர் தெரிஞ்சுக்க முடியலைன்னா, மத்தவங்க நிலையை நினைச்சுப்பாருங்க..

வருகைக்கு நன்றி.

அமைதிச்சாரல் said...

வாங்க தனசேகரன்,

மிகவும் நன்றிங்க..

அமைதிச்சாரல் said...

வாங்க ரெவெரி,

மிக்க நன்றிங்க..

அமைதிச்சாரல் said...

வாங்க மேனகா,

ரொம்ப நன்றிங்க..

அமைதிச்சாரல் said...

வாங்க துரை டேனியல்,

ஆமாம்,.. இத்தனைக்கும் அப்போ தீண்டாமையும், அறியாமையும் கொடிகட்டிப் பறந்த காலம். அப்பவே அதையெல்லாம் சமாளிச்சு வந்துருக்காங்க..

மிக்க நன்றி..

அமைதிச்சாரல் said...

வாங்க வல்லிம்மா,

வசதி வாய்ப்புகள் சாதகமா இருக்கும்போது செய்யப்படும் சாதனைகளை விட, பாதகமா இருக்கும்போது செய்யப்படும் சாதனைகளுக்கு மவுசு கூடுதல். இல்லையா!!

ரொம்ப நன்றிம்மா.

அமைதிச்சாரல் said...

வாங்க மஞ்சு,

செஞ்சுரலாம்.. வருகைக்கு நன்றிங்க.

அமைதிச்சாரல் said...

வாங்க பாசமலர்,

ஆமாங்க,.. எதிர்ப்புக்கற்களையே படிக்கட்டுகளாக மாத்திக்கிடற துணிச்சலும், வலிமையும் இருக்கறவங்கதான் ஜெயிக்கிறாங்க.அப்படியும் நிழல்லயே இருந்து மறைஞ்சு போறவங்கதான் அதிகம்.. இப்படிப்பட்ட முத்துக்களை நிச்சயம் வெளிக்கொணரணும்.

வருகைக்கு நன்றி.

அமைதிச்சாரல் said...

வாங்க ஆதி,

வருகைக்கு நன்றிங்க..

அமைதிச்சாரல் said...

வாங்க லஷ்மிம்மா,

ரொம்ப நன்றிங்க..

அமைதிச்சாரல் said...

ரசிச்சதுக்கு நன்றி பாசமலர் :-))

அமைதிச்சாரல் said...

வாங்க சங்கரலிங்கம் அண்ணா,

ரொம்ப நன்றிங்க..

அமைதிச்சாரல் said...

வாங்க ராஜராஜேஸ்வரி,

ரொம்ப நன்றிங்க..

அமைதிச்சாரல் said...

வாங்க ஹுஸைனம்மா,

மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மணம் உண்டேப்பா :-))

வருகைக்கு நன்றி.

LinkWithin

Related Posts with Thumbnails