Tuesday, 25 August 2026

சாரல் துளிகள்..


வென்றவர்களிடமும் தோற்றவர்களிடமும் இரண்டே கதைகள்தான் உள்ளன. உலகிற்குத் தெரிந்த கதை ஒன்று. அவர்களும் மனசாட்சியும் மட்டுமே அறிந்த இன்னொன்று.

யாரோ எரித்துக்கொண்டிருக்கும் சொற்தீயின் அடையாளம் தெரியாத சாம்பல் துகள்கள் படிந்து சிதைக்கின்றன இன்னொருவரின் வாழ்வை. அத்தனை பேருக்குமாய்ப் பெய்யும் ஒரு மழை துளிர்க்கச்செய்கிறது மறுபடியும்.

வானத்தின் சுருக்குப்பையில் ஔிந்துகொண்டு மண்ணின் தாகத்தை வேடிக்கை பார்க்கிறது மழை. வெயிலைச் சேமிக்கும் மேகம் கானல்நீரைக் குடித்துவிட்டு நகர்கிறது.

இல்லையெனாமல் கொடுத்துக்கொண்டிருந்ததால், கர்ணனைப்பற்றி உலகம் புரிந்து கொண்டது. ஒருமுறையேனும் கொடுக்க மறுத்திருந்தால் உலகத்தைக் கர்ணன் புரிந்து கொண்டிருப்பான்.

தோல்வியடையும்போது நம்மீது இரக்கங்கொண்டு நமக்கு ஆறுத்ல் கூற நம்மை விடச் சிறந்த நட்பு வேறில்லை. அதே சமயம், தன்னிரக்கம் என்பது சுய பரிதாபச்சேற்றில் மூழ்குவது அல்ல; சுய அன்பெனும் கயிற்றின் உதவியால் மீட்டுக்கொள்வதாம். 

உழைப்பு என்பது ஏதோ ஒரு இலக்கை அடைவதற்கான வழி மட்டுமல்ல, நம்மால் எவ்வளவு தூரம் பயணிக்க முடியும் என்பதை நமக்கே அறியவைக்கும் தேடலும் அதுவே.

தடைகளை எதிர்கொள்ளும் துணிவிருந்தால், தடுக்கி விழவைக்கும் பாதையில் கூட பயணித்து சரியான இலக்கைச் சென்றடையலாம். 

ஒருபோதும் நியாயத்தின் பக்கம் நில்லாமல் தனக்கு யாரால் லாபம் என்பதை மட்டும் கருதி அவர்கள் பக்கம் நிற்கும் சுயநலமிகளை அடையாளம் கண்டு விலக்குவதும், வாழ்க்கைப்பாடங்களில் ஒன்றே.

இருள் கண்டு அஞ்சாது பொறுமையுடன் சரியான தருணத்திற்காய்க் காத்திருந்து ஆர்ப்பாட்டமில்லாது மலர்ந்து மணம் பரப்பி அனைவரையும் கவரும் இந்த மல்லிகையின் அமைதியான ஆளுமைதான் என்னே!

தன்முன் வந்து நிற்கும் அழகையும் விகாரமாய்க் காட்டும் ரசமிழந்த துருப்பிடித்த கண்ணாடிக்கும், பிறரின் நிறைகளைக் காணாது குறைகளையே காணும் விகாரங்கொண்ட மனதுக்கும் வித்தியாசமில்லை.

Friday, 7 August 2026

கவியரசர் கண்ணதாசன் நூற்றாண்டு நினைவு வெண்பாப்போட்டியில் பரிசு பெற்றது,


ஃபேஸ்புக்கில் Tadrupa Events என்போர், கவிஞர் கண்ணதாசன் நூற்றாண்டு விழாவையொட்டி தினந்தோறும் ஒரு ஈற்றடியைக்கொடுத்து அதற்கு வெண்பா எழுதும் போட்டியை நடத்தி வருகின்றனர். இப்போட்டி ஒரு வருடத்திற்கு நடக்கவிருக்கிறது. 

42ம் நாள் (04-08-2026) அன்று நடந்த போட்டியில் கொடுக்கப்பட்ட "எப்படிச் சொல்வேன் இதை" என்ற ஈற்றடிக்கு எழுதப்பட்ட எனது வெண்பாவும் பரிசுக்குரியதாய்த் தேர்வானது.


எனது வெண்பா:
செப்பரிய பேரன்பைச் சிந்தை தனில்நிறைத்து 
ஒப்பற்ற இன்பம் உவந்தளித்தாய் - எப்பொழுதும் 
தப்பாமல் என்னுள்ளே தங்கிவிட்ட பேரன்பே 
எப்படிச் சொல்வேன் இதை.

Thursday, 6 August 2026

ஈற்றடிக்கு எழுதிய வெண்பா - அமுதசுரபியில் வெளியானது

அமுதசுரபி இதழில் ஜூலை மாத வெண்பாப்போட்டிக்கான ஈற்றடியை கவிமாமணி எஸ்.ஆர்.ஜி. சுந்தரம் வழங்கியிருந்தார். "விடுதலை வீரரை வாழ்த்து" என்ற அந்த ஈற்றடிக்கான வெண்பாக்களில் நான் எழுதிய வெண்பாவும் தேர்வாகி பிரசுரமாகியிருக்கிறது.


தேர்வாகிப் பிரசுரமான வெண்பாவைத்தவிர, அதே ஈற்றடிக்கு நான் எழுதிய மேலும் சில வெண்பாக்கள் இங்கே உங்கள் பார்வைக்கு:

அடிமைத் தளைதொலைத்து அன்னியரை ஓட்ட
குடிமை நலம்வாழக் கூடி - கடிதாம்
கெடுதல் பொறுத்துக் கொடுவினை தாங்கும்
விடுதலை வீரரை வாழ்த்து.

செங்குருதி சிந்திச் சிறைவாசம் தான்ஏற்று
மங்காத வான்புகழை மாநிலத்தே - இங்கு
நெடுநாள் சுமக்கின்ற நேர்மைச் சுடராம்
விடுதலை வீரரை வாழ்த்து.

இன்னுயிரைத் துச்சமாய் எண்ணியும் இந்நாட்டின்
நன்னலம் நெஞ்சில் நயந்துநின்றும் - என்றும்
நெடுநாள் கனவை நனவாய் விளைத்த
விடுதலை வீரரை வாழ்த்து.

சுடுகுண்டு வான்மழையாய்த் தூவினும் அஞ்சான்
நடுக்கடல் வெஞ்சிறையும் நன்றே - ஒடுக்கும்
கெடுமதியை வீழ்த்தி கொடுங்கோல் தகர்த்த
விடுதலை வீரரை வாழ்த்து.

LinkWithin

Related Posts with Thumbnails