அமுதசுரபி இதழில் ஜூலை மாத வெண்பாப்போட்டிக்கான ஈற்றடியை கவிமாமணி எஸ்.ஆர்.ஜி. சுந்தரம் வழங்கியிருந்தார். "விடுதலை வீரரை வாழ்த்து" என்ற அந்த ஈற்றடிக்கான வெண்பாக்களில் நான் எழுதிய வெண்பாவும் தேர்வாகி பிரசுரமாகியிருக்கிறது.
தேர்வாகிப் பிரசுரமான வெண்பாவைத்தவிர, அதே ஈற்றடிக்கு நான் எழுதிய மேலும் சில வெண்பாக்கள் இங்கே உங்கள் பார்வைக்கு:
அடிமைத் தளைதொலைத்து அன்னியரை ஓட்ட
குடிமை நலம்வாழக் கூடி - கடிதாம்
கெடுதல் பொறுத்துக் கொடுவினை தாங்கும்
விடுதலை வீரரை வாழ்த்து.
செங்குருதி சிந்திச் சிறைவாசம் தான்ஏற்று
மங்காத வான்புகழை மாநிலத்தே - இங்கு
நெடுநாள் சுமக்கின்ற நேர்மைச் சுடராம்
விடுதலை வீரரை வாழ்த்து.
இன்னுயிரைத் துச்சமாய் எண்ணியும் இந்நாட்டின்
நன்னலம் நெஞ்சில் நயந்துநின்றும் - என்றும்
நெடுநாள் கனவை நனவாய் விளைத்த
விடுதலை வீரரை வாழ்த்து.
சுடுகுண்டு வான்மழையாய்த் தூவினும் அஞ்சான்
நடுக்கடல் வெஞ்சிறையும் நன்றே - ஒடுக்கும்
கெடுமதியை வீழ்த்தி கொடுங்கோல் தகர்த்த
விடுதலை வீரரை வாழ்த்து.

No comments:
Post a Comment