Sunday 29 January 2017

வரத விநாயகர் (அஷ்ட விநாயகர்-மஹட்)

பிள்ளையாரை இஷ்ட தெய்வமாகக் கொண்டுள்ள மராட்டிய மக்கள், பூனாவின் சுற்றுப்புறப்பகுதிகளில் அமைந்திருக்கும் எட்டுப் பிள்ளையார்களை மிகவும் முக்கியமானவர்களாகக் கருதி விரும்பி வணங்குகின்றனர். அக்கோயில்கள் மஹாராஷ்ட்ர மண்ணில் “அஷ்டவினாயக்” எனக் குறிப்பிடப்படுகின்றன. தமிழ்நாட்டில் தம்பிக்கு அறுபடை வீடு எனில் அண்ணனுக்கோ மராட்டிய மண்ணில் எட்டு வீடுகள். இவற்றைத் தரிசனம் செய்ய இங்குள்ள மக்கள் குழுவாகவோ குடும்பத்தினருடனோ “அஷ்டவினாயக் யாத்ரா” செல்வது வழக்கம். சேர்ந்தாற்போல் நான்கு நாட்கள் விடுமுறை கிடைத்தாலும் கிளம்பி விடுவார்கள். இங்குள்ள ட்ராவல் ஏஜென்சிகளின் சுற்றுலா நிரல்களில் இந்த யாத்ராவிற்கு முக்கிய இடமுண்டு.
வரவேற்பு வளைவு
இளம் தொழிலதிபர்கள்
“மஹட்” என்னுமிடத்திலிருக்கும் வரத வினாயகர் அஷ்ட வினாயகர்களில் நான்காமவர் ஆவார். மஹட் பூனாவிலிருந்து 85 கி.மீ தொலைவிலும் மும்பையிலிருந்து 63 கி.மீ தொலைவிலுமிருக்கிறது. புதிய மும்பை-பூனா ஹைவேயில் பன்வெல்லைக் கடந்ததும் சற்றுத்தொலைவில் மஹடுக்கான பாதை பிரிகிறது. இச்சாலை மும்பை-பன்வெல்-கோப்போலி ரோடு எனவும் அறியப்படுகிறது. இரண்டு டோல் சந்திப்புகளைக் கடந்து பளிங்கு போன்ற வழவழப்பான சாலையில் பயணித்தால் சிறிது நேரத்தில் வலது புறம் அலங்கார வளைவு நம்மை மஹடுக்கு வரவேற்கிறது. கோவிலுக்கு முன்புறம் வாகனங்களை நிறுத்த மைதானம் இருக்கிறது. சிறு கட்டணம் செலுத்தி, வாகனத்தை நிறுத்தி விட்டு இருபுறமும் இருக்கும் கடைகளை வேடிக்கை பார்த்தபடியே இரண்டு நிமிடம் நடந்தோமானால் கோவிலின் முன்புறத்துக்கு வந்து சேர்ந்து விடலாம். காலணிகளைப் பாதுகாக்கவென்று லாக்கர் வசதி எதுவும் இங்கே காணப்படவில்லை. சிறு ஷெல்புகளில் வைத்து விட்டு கோவிலுக்குள் போக வேண்டியதுதான். 
கோவிலின் முன்வாயில்
கருவறையிலிருக்கும் பிள்ளையார், அருகில் தனிச்சன்னிதியில் இருக்கும் சிவன், அம்பாள் இவர்களைத்தவிர வேறு சன்னிதிகள் எதுவும் இங்கே கிடையாது. நவக்கிரகங்களையும் அன்னதானக்கூடத்தின் அருகேயிருக்கும் தத்தரையும் போனால் போகிறதென்று ஒத்துக்கொள்ளலாம். மூர்த்தி சிறிதானாலும் இக்கோயிலின் கீர்த்தி பெரிது. காலை ஆறுமணியிலிருந்து இரவு ஒன்பது மணி வரை திறந்திருக்கும் இக்கோவிலுக்கு மக்கள் சாரிசாரியாக வந்து தரிசித்துச்செல்கிறார்கள். கோவிலுக்குள் நுழைந்ததும் நெருக்கியடிக்கும் கூட்டத்தில் கம்பித்தடுப்பு வழியே ஊர்ந்து சென்று முதலில் அப்பனையும் அம்மையையும் வணங்கினோம். அம்மையப்பன் சன்னிதி வாசலின் வலது புறம் பிள்ளையாரும் இடது புறம் விஷ்ணுவும் புடைப்புச் சிற்பங்களாகச் செதுக்கப்பட்டு சிந்தூரத்தால் மெழுகி மூடப்பட்டிருந்தார்கள். சிற்பக்கலையின் நுட்பங்கள் எதுவும் இல்லாத,.. இருந்தாலும் நம் கண்ணுக்குப் புலப்படாத மொழுமொழு மூர்த்தங்கள் மராட்டியக்கோவில்களின் சிறப்பு.

அம்மையப்பனை வணங்கி இடது புறம் திரும்பினால் வரத வினாயகரின் தனிச்சன்னிதி. இதன் நான்கு புறமும் ஒவ்வொரு ஜோடி யானைகளின் சிற்பம் செதுக்கப்பட்டிருக்கிறது. இவை காவல் புரிவதாக ஐதீகம். வெள்ளித்திருப்பணி செய்யப்பட்டிருக்கும் குறுகிய வாயிலைக் கடந்து உள்ளே போகிறோம். நம் வரதுக்குட்டி சித்தி புத்திகளுடன் கிழக்கு நோக்கி, இடஞ்சுழி தும்பிக்கையுடன் ஜம்மென்று வீற்றிருக்கிறார். அவர் முன் 1892-லிருந்து தொடர்ந்து ஒளிரும் அணையாவிளக்கொன்று இருக்கிறது. பக்தர்கள் தாம் கொண்டு வந்த மலர்மாலைகளை தம் கையாலேயே அவருக்குச் சூட்டலாம். மற்ற காணிக்கைகளான பேடாக்கள் மற்றும் தேங்காய்களை பண்டிட்டுகள் வாங்கிப் படைத்து விட்டு, பிரசாதமாக பக்தர்களுக்கு வழங்குகின்றனர். நாங்களும் அவர் பாதம் தொட்டு வணங்கி விட்டு, “எல்லோரையும் காப்பாத்து” என்ற வழக்கமான பிரார்த்தனையைச் சொல்லிக்கொண்டு கண்ணும் மனமும் நிறைய அவரைத் தரிசனம் செய்து விட்டு வெளியே வந்தோம். பிரசாதம் விற்கப்பட்டுக்கொண்டிருந்தது. முன்னெல்லாம் இங்குள்ள கோவில்களில் பேடா எனப்படும் பால் இனிப்புதான் பிரசாதமாக வழங்கப்பட்டு வந்தது. தென்னாட்டுக்கோவில்களின் தாக்கமோ என்னவோ!!.. இப்பொழுது ஆறு லட்டுகள் கொண்ட பாக்கெட் பிரசாதமாக விற்கப்பட்டுக்கொண்டிருந்தது. ஷிர்டியிலும் இதே கதைதான். வெளிப்படி இறங்கியதும் இடது பக்கம் யாத்ரீகர் நிவாஸும் அன்னதானக்கூடமும் வலப்புறம் குடிநீர்க்குழாய்களும் திருக்குளமும் அமைந்துள்ளன. வெளியே வந்தபின்னும் சி.சி.டி.வி மூலமாக வரதுக்குட்டியின் தரிசனம் நமக்குக் கிடைப்பது விஞ்ஞான வளர்ச்சியின் பலனே.
கோவிலின் பின்புற வாயில்


திருக்குளம்
வரதவினாயகர் என்ற பெயருக்கேற்ப கேட்கும் வரங்களையெல்லாம் அள்ளியள்ளித் தரும் வரப்பிரசாதியான இந்தப்பிள்ளையார் சுயம்புமூர்த்தி. கோவிலையடுத்துள்ள குளத்தில் கி.பி.1690ல் கண்டெடுக்கப்பட்டுள்ளார். கி.பி. 1725ல் மராட்டிய பேஷ்வாக்களின் ஆட்சிக்காலத்தில் சுபேதார் ராம்ஜி மஹாதேவ் பிவள்கர் என்பவரால் கட்டப்பட்ட இக்கோவில் அக்குளத்தின் கரையிலேயே அமைந்திருக்கிறது.

கோவிலுக்குக் கதை இல்லாமல் இருக்குமா? இருக்கிறதே.. முன்னொரு காலத்தில் கௌடின்யபூரின் இளவரசரான ருக்மாங்கதர், வேட்டைக்குச் சென்றபோது வழியில் வசக்நவி முனிவரின் ஆசிரமத்தில் சிறிது சிரமபரிகாரம் செய்து கொண்டார். முனிவரின் மனைவியான முகுந்தா, இளவரசரின் அழகில் மயங்கி தன்னை ஏற்றுக்கொள்ளுமாறு வேண்டினாள். இளவரசர் மறுத்துவிட, இதற்கென்றே காத்திருந்தாற்போல்.. யார் எவ்வளவு அடித்தாலும், அவமானப்படுத்தினாலும் தாங்கும் இந்திரன் ருக்மாங்கதரின் உருவெடுத்து வந்து முகுந்தையின் விருப்பத்தை நிறைவேற்றினான். பலனாக கர்ப்பமடைந்த அவள், க்ருத்ஸமத் என்றொரு மகனைப்பெற்றெடுத்தாள். அறிவிற்சிறந்த அவன், அறிஞர்கள் கூடியிருந்த சபையில் ஒரு சமயம் அவமானப்பட்டு, தன் தந்தை யார்? என அன்னையிடம் வினவியபோதுதான் தான் ருக்மாங்கதரின் மகன், வசக்நவி முனிவரின் மகனல்ல என்றறிந்தான். 
விதவிதமாய் வினாயகர்
தனது பிறப்பின் ரகசியமறிந்தவன் கோபமுற்று தன் அன்னையை, “நீ முட்கள் நிரம்பிய இலந்தை மரமாக மாறுவாயாக” எனச்சபித்தான். காட்டில் தானாக வளர்ந்து நிற்கும் இந்த இலந்தை மரத்தை மராட்டியர்கள் bhor என அழைப்பார்கள். “பெற்ற அன்னையை சபித்த உனக்கு ஒரு ராட்சசன் மகனாகப் பிறப்பானாக” என அவளும் சபித்தாள். அச்சமயம், ‘க்ருத்ஸமத் இந்திரனின் மகன்” என அசரீரி கூறியது கேட்டு இருவருமே தலையில் இடி விழுந்தாற்போல் அதிர்ந்து போனார்கள். அடக்கடவுளே!!.. இந்திரன் இப்படி மோசம் செய்வானென்று முகுந்தா அறிந்திருந்தாளா என்ன?. மகனின் சாபம் பலித்து அவள் இலந்தை மரமானாள். மகனோ பெற்றவளைச் சபித்த பாவம் நீங்க, இன்றைய மஹடான அன்றைய மணிபத்ர காட்டில், “ஓம் கண்கணபதயே நமஹ” எனும் மந்திரத்தை உச்சரித்தபடி பிள்ளையாரை நோக்கி தவம் செய்ய ஆரம்பித்தார். தவத்திற்கு மெச்சிய பிள்ளையார், “வேண்டிய வரங்களை எந்த உச்சவரம்புமின்றிப் பெற்றுக்கொள்” என தாராள மனத்தோடு செப்ப, க்ருத்ஸமத்தும், தன் மேல் விழுந்த பழிச்சொல்லும் தனது பாவமும் நீங்க வேண்டும் என வேண்டிக்கொண்டதோடு கொசுறாக, “எக்காலமும் இங்கேயே எழுந்தருளியிருந்து மக்களுக்கு வேண்டிய வரங்களை அருள வேண்டும்” எனக்கேட்டுக்கொண்டார். அந்தப்படியே அவர் இங்கே எழுந்தருளினார். தரிசிப்பவர் வேண்டும் வரங்களை அள்ளி வழங்குவதால் வரதவினாயகர் எனப் பெயரும் பெற்றார்.
குளத்தின்  அக்கரையிலிருந்து கோவிலின் தோற்றம்
மும்பை-பன்வெல்-கோப்போலி ரோட்டில் சற்று உள்வாங்கி அமைந்திருக்கும் இந்தக்கோயிலுக்கு ரயில் மார்க்கமாகச்செல்ல வேண்டுமென்றால் கர்ஜத் அல்லது கோப்போலி ரயில் நிலையங்களில் இறங்கி அங்கிருந்து பேருந்து மூலமோ அல்லது டாக்ஸி மூலமோ செல்லலாம். இந்த ஊரில் யாத்ரீகர்கள் தங்குவதற்கு வசதியான ஹோட்டல்கள் கிடையாது. கோவிலின் பின்பக்கம் அன்னதானக்கூடம் அருகே இருக்கும் நிவாஸில் தங்கிக்கொள்ளலாம். கோவிலின் வலதுபக்கமும் தங்குமிடமொன்று ,,,,,ஹோட்டல் என்ற பெயர்ப்பலகையைச் சுமந்து கொண்டு இருக்கிறது. ஆனால், கோப்போலி ரோட்டிற்கு வந்து விட்டால் கோவிலிலிருந்து இரண்டு கி.மீ தொலைவுக்குள் நல்ல ரிசார்ட்டுகள் இருக்கின்றன. கோவிலின் சார்பாக தினமும் அன்னதானமும் நடைபெறுகிறது. தவிர, முன்பதிவு செய்துகொண்டால் ஊர்மக்களும் சாப்பாடு ஏற்பாடு செய்து தருகிறார்கள் என அறியப்படுகிறது. வழக்கமான உணவு போதுமென்றால் ரிசார்ட்டுகளையும் ஹோட்டல்களையும் நாடலாம்.. அதுவே மராட்டிய மண்ணின் பாரம்பரிய உணவைச் சுவைக்க வேண்டுமானால் ஊர்மக்களிடம் முன்பதிவு செய்து கொள்வது நல்லது.
அக்கரையிலிருக்கும் பாண்டுரங்கன் துணைவியுடன்
அஷ்டவினாயகர்களில் ஒருவரானதால் அருள் வழங்குவதில் வருடம் முழுவதும் பிஸியோ பிஸி. கூடுதலாக மராட்டிய மாதமான பாத்ரபத் (Bhadrapath - ஆகஸ்ட்-செப்டம்பர்) மற்றும் மாக்(Magha  - ஜனவரி-பெப்ரவரி) மாதங்களில் கோவிலில் விழாக்காலம். சனிக்கிழமை கோவிலுக்குச் செல்லும் வழக்கப்படி இன்று வரதரை சந்திக்கச்சென்றோம். வருகிற 31-ம் தேதி கணேஷ் ஜெயந்தி வருவதையொட்டி கோவில் புது அலங்காரம் கண்டிருந்தது. அடித்த பெயிண்ட் கூட இன்னும் காயவில்லை. முன்மண்டபத்தில் தம்பதியராக அமர்ந்து ஒரு ஜோடி பூஜை செய்து கொண்டிருந்தது. மாக் மாதத்தில் அமாவாசைக்குப் பிறகு தேய்பிறையில் வரும் சதுர்த்தசி திதி பிள்ளையாரின் பிறந்த நாளாக மராட்டியர்களால் கொண்டாடப்படுகிறது. இதை தில்குட் சதுர்த்தி எனவும் அழைப்பார்கள். மஞ்சள் அல்லது சிந்தூரத்தினால் பிள்ளையாரைப் பிடித்து வைத்து பூஜித்து நாலாம் நாளன்று நீரில் விசர்ஜன் செய்வார்கள். அன்று உணவில் எள்ளும் சேர்த்துக்கொள்ளப்படும். இந்த சதுர்த்தியையும் வழக்கமாக செப்டம்பரில் கொண்டாடப்படும் சதுர்த்தியையும் குழப்பிக்கொள்ளக்கூடாது. 

பார்வதி நீராடச்சென்றபோது பாதுகாவலனாக இருந்த பிள்ளையாரின் தலை, சிவனால் துண்டிக்கப்பட்டு மறுபடியும் யானைத்தலை பொருத்தி உயிர்பெற்ற நாளே செப்டம்பர் மாத சதுர்த்தியாகக் கொண்டாடப்படுகிறது. எல்லாம் ஒரே நாளில் நடந்தவைதானே, பிறகேன் இத்தனை மாத வித்தியாசம்? என ஆராய்தல் அறியாமை. நமது காலக்கணக்கும் கடவுளரின் காலக்கணக்கும் வெவ்வேறு எனத் தெளிவதே அறிவு. வேண்டுமானால் மாக் சதுர்த்தியை குளிர்கால வினாயகர் சதுர்த்தி எனக்கொள்ளலாம். செவ்வாயன்று சதுர்த்தி திதியும் சேர்ந்து கொண்டால் இன்னும் சிறப்பு. இங்குள்ள மக்கள் விரதமிருந்து “அங்காரக சதுர்த்தி” எனக் கொண்டாடித் தீர்த்து விடுவார்கள். மும்பையிலிருக்கும் சித்தி வினாயக் போன்ற பெரு நகரங்களின் பெரிய கோவில்களில் எள் போட்டால் விழாத அளவுக்குக் கூட்டம் நெருக்கும். ஆகவே, அரச மரத்தடியில் காற்றோட்டமாக அமர்ந்து அருள் பாலிக்கும் பிள்ளையார்களை, கூட்ட நெரிசல் ஏதுமில்லாமல் நாமும் தரிசித்து அருள் பெறுவோமாக. 

கணபதி பப்பா.. மோர்யா.
மங்கள் மூர்த்தி.. மோர்யா.

2 comments:

வெங்கட் நாகராஜ் said...

சிறப்பான தகவல்கள் மட்டும் படங்கள்.....

நன்றி.

Nagendra Bharathi said...

அருமை

LinkWithin

Related Posts with Thumbnails