Saturday 26 November 2016

பூச்சிகள் ராஜ்யத்தில்..

பூச்சிகள் முதுகெலும்பிலிகளின் ஒரு வகுப்பைச் சேர்ந்த கணுக்காலிகள் வகையுள் அடங்கும் முதன்மையான உயிரினமாகும். இவை தலை, மார்பு, வயிறு என்ற மூன்று பாகங்களாகப் பிரிக்கப்பட்ட உடலையும், மூன்று ஜோடிக்கால்களையும், கூட்டுக்கண்களையும், ஒரு ஜோடி உணர்வுறுப்புக்களையும் கொண்டவையாக இருக்கின்றன. இவை தமது வாழ்க்கை வட்டத்தில் வெவ்வேறு வளர்நிலைகளைக் கொண்டிருப்பதுடன் உருமாற்றத்திற்கு உட்படுவனவாக இருக்கின்றன. 

உலகில் உள்ள விலங்குகளின் எண்ணிக்கையில் பூச்சிகளே மிக அதிகப் பங்கு, அதாவது சுமார் 90%மாக இருக்கலாம் எனவும் கணக்கிடப்பட்டுள்ளது. உலகில் மிகவும் வேறுபட்ட குழுக்களைக் கொண்ட விலங்குகளில் பூச்சிகளும் அடங்கியுள்ளன,இவ்வுலகிலிருக்கும் மொத்த விலங்கினத்தில் பெரும்பகுதியளவுக்கு பூச்சியினம் இருக்குமென கருதப்படுகிறது. மொத்தமாக இருக்கும் பூச்சி இனங்கள் 6-10 மில்லியன்கள் இருக்கலாம் எனவும் அதற்கும் மேலாக 80-100 மில்லியன்கள் இருக்கலாம் எனவும் வெவ்வேறு தகவல்கள் கூறுகின்றன. 

பூச்சிகள் உலகின் எல்லா வகையான சூழல்களிலும் வாழ்வதுடன், புதிய சூழலுக்கு இலகுவில் தம்மை இசைவாக்கிக்கொள்ள வல்லனவாகவும் இருக்கின்றன. குளிரான காலநிலை, சூடான காலநிலை இரண்டிலும் அவை வாழ்கின்றன. குளிரான பகுதிகளில் வாழும் பூச்சிகள் குளிரைத் தாங்கி, தமது தொழிற்பாடுகளைத் தொடர்பனவாகவோ, அல்லது வேறு சூடான இடங்களுக்கு இடம்பெயர்ந்து செல்பனவாகவோ, அல்லது தமது செயற்பாடுகள் அனைத்தையும் குறைத்துவிட்டு, உறங்குநிலை போன்ற மிகவும் மந்தமான நிலையில் இருக்கின்றனவாகவோ உள்ளன. வேறு சில பூச்சிகள் சாதகமற்ற சூழ்நிலைகளைத் தாங்குவதற்காக அசைவற்ற நிலைகளான முட்டைகளாகவோ, கூட்டுப்புழுக்களாகவோ இருக்கும் நிலையை நீடித்து, சாதகமான சூழல் வரும்வரை தம் இனவிருத்தியைத் தள்ளிப்போடுகின்றன.

பூச்சி ஆங்கிலத்தில் Insect என்ற சொல்லால் குறிப்பிடப்படுகிறது. இச்சொல் இலத்தீன் மொழியில் உள்ள சொல்லான insectum என்பதிலிருந்து தோற்றம் பெற்றுள்ளது. insectum என்பதன் பொருள் வெட்டப்பட்ட அல்லது பிரிக்கப்பட்ட உடல் என்பதாகும், இச்சொல்லுக்கேற்ப பூச்சிகளின் உடல், தலை, மார்பு, வயிறு என மூன்று பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. 

தலைப் பகுதியானது ஒரு ஜோடி உணர்விழைகளையும், ஒரு ஜோடி கூட்டுக்கண்களையும், சிலசமயம் 1லிருந்து 3 தனிக்கண்களையும், பல்வேறு விதமாகத் திரிபடைந்திருக்கும் வாயுறுப்பு எனப்படும் துணையுறுப்புக்களையும் கொண்டிருக்கும். தலைப்பகுதியே உணர்வுகளுக்கான முக்கியப் பகுதியாகக் காணப்படுகின்றது. இது மிகவும் தடித்த தலையுறையினால் மூடப்பட்டிருக்கும்.

மார்புப் பகுதியானது முன்மார்பு, இடைமார்பு, கடைமார்பு என்று வரையறுக்கப்பட்ட மூன்று துண்டங்களைக் கொண்டிருக்கும். ஒவ்வொரு துண்டத்திலும், ஒரு ஜோடிக்கால்கள் வீதம், ஆறு துண்டங்களாக்கப்பட்ட கால்கள் இருக்கும். அத்துடன் மார்புப் பகுதியிலேயே இறக்கைகள் அமைந்திருக்கும். எல்லாப் பூச்சி இனங்களும் இறக்கைகளைக் கொண்டிருப்பதில்லை. சிலவற்றில் இரு சிறகுகளும், வேறு சிலவற்றில் இரு ஜோடிச் சிறகுகளும் காணப்படும்

வயிற்றுப் பகுதியானது பொதுவாக 11 துண்டங்களைக் கொண்டிருக்கும். ஆனாலும் வெவ்வேறு பூச்சியினங்களில், இதன் அளவு குறைவாகவோ, அல்லது இணைந்த துண்டங்களாகவோ காணப்படும். அத்துடன் வயிற்றுப் பகுதியின் உள்ளேயே, சமிபாடு, சுவாசம், கழிவகற்றல், இனப்பெருக்கம் போன்ற செயற்பாடுகளுக்கான உள்ளுறுப்புக்கள் காணப்படும். வயிற்றுப் பகுதியின் வெளிப்புறமானது தலை, மார்புத் துண்டங்களை விடவும் கடினத்தன்மை குறைந்ததாகக் காணப்படும்.

மனிதர்களால் பல பூச்சிகள் தீங்குயிர்களாக  அடையாளப்படுத்தப்பட்டுள்ளன. இவை வேளாண்மை மூலம் பயிர்நிலங்களில் விளைவிக்கப்படும் பயிர்கள், வீட்டுத் தோட்டத்தில் வளர்க்கப்படும் பயிர்கள், பூஞ்செடிகள் போன்றவற்றிற்கோ, அல்லது விளைச்சலில் பெறப்பட்டு பாதுகாத்து வைக்கப்படும் தானியங்கள், காய்கறிகள், மற்றும் ஏனைய உணவு வகைகள், கால்நடைகள் அல்லது நேரடியாகவே மனிதருக்குக் கேடு விளைப்பனவாக உள்ளன

சில பூச்சிகள் மனிதர்களால் பயிர் செய்யப்படும் பயிர்கள் அல்லது அவற்றின் விளைபொருளின் சாற்றை உறிஞ்சுவதால் அல்லது இலைகள், பழங்களை உண்ணுவதனால் தீங்கு விளைவிக்கின்றன, வேறுசில ஒட்டுண்ணி வாழ்வை மேற்கொண்டு பல இடர்களைத் தோற்றுவிக்கும், வேறு சில நோய்களை உருவாக்கும் நோய்க்காரணிகளைப் பரப்புகின்றன.   கறையான் போன்ற சில பூச்சிகள், கட்டட அமைப்புக்களை சேதப்படுத்துகின்றன. புத்தகப் பூச்சி போன்ற சில வகை வண்டுகள் புத்தகங்களைச் சேதப்படுத்துகின்றன. 
அதேவேளை சில பூச்சிகள் மனிதருக்கு மட்டுமன்றி உயிரியல் சூழலுக்கும் நன்மை பயப்பனவாக உள்ளன. அனேகமான பூக்கும் தாவரங்களின் இனப்பெருக்கத்திற்குத் தேவையான மகரந்தச் சேர்க்கைக்குப் பல பூச்சிகள் உதவுகின்றன. தேனீ, குளவி, எறும்பு, பட்டுப்பூச்சி போன்றன மகரந்தச் சேர்க்கைமூலம் தாவரங்களின் இனப்பெருக்கத்திற்கும், பயிர்களின் விளைச்சலுக்கும் உதவுகின்றன. அதேவேளை பூச்சிகளுக்குத் தேவையான உணவு தாவரங்களிலிருந்து அவற்றிற்குக் கிடைக்கின்றது. அத்துடன் விதைகளின் பரவலுக்கும் பூச்சிகள் உதவுகின்றன. பட்டுப்புழு மூலம் பட்டுநூல் பெறப்படுகின்றது. தேனீயானது தேனையும், மெழுகையும் உருவாக்குகின்றது. இவ்விரு பயன்பாட்டையும் முன்னிட்டு மனிதரால் இந்தப் பூச்சிகள் பல்லாண்டு காலமாக வளர்க்கப்பட்டு வருகின்றன.
சில பூச்சிகள் தமது கொன்றுண்ணல் செயற்பாட்டினால் அல்லது தமது ஒட்டுண்ணி வாழ்வு முறையினால், மனிதருக்குக் கெடுதல் விளைவிக்கும் தீங்குயிர்களைக் கொன்று அழிப்பதன் மூலம் மனிதருக்கு உதவுகின்றன.

சில இடங்களில் தமது சாதாரண உணவாகவே பூச்சிகளைப் பயன்படுத்துகின்றனர். அவற்றிலிருக்கும் புரத ஊட்டச்சத்துக் காரணமாக அவற்றை மனிதருக்கான புரத உணவாகக் கொள்ளலாம் என்ற கருத்தும் உள்ளது. ஆனாலும் பல இடங்களில் இது ஏற்றுக்கொள்ளப்படுவதில்லை இருப்பினும் எதிர்காலத்தில் உலக மக்களின் உணவுத்தேவை அதிகரிக்கையில், பூச்சிகளின் எண்ணிக்கையும் மிக அதிகளவில் இருக்கையில் பூச்சியுண்ணல் மிகச் சாதாரணமானதாக மாறக்கூடும் என்று நம்பப்ப்படுகின்றது. சில பூச்சிகளிலிருந்து கிடைக்கும் வேதிப்பொருட்கள் மனிதருக்குத் தேவையான மருந்துப் பொருட்களாகப் பயன்படுத்தப்படுகின்றன. சில பூச்சிகளை மீன்பிடித்தலின்போது, மீனுக்கான இரையாகப் பயன்படுத்துவர்








பொதுவாகப் பூச்சிகள் தனி வாழ்வு கொண்டனவாக இருப்பினும் சில பூச்சியினங்கள் சமூக வாழ்வைக் கொண்டிருக்கின்றன. தேனீ, எறும்பு, கறையான், குளவி போன்றவை கட்டுக்கோப்பான ஒரு சமூக வாழ்வை மேற்கொள்வதுடன், மிகவும் ஒழுங்குபடுத்தப்பட்ட பெரிய  குழுக்களாக வாழும் தன்மை கொண்டவை.

வால்: தகவல்களித்த இணையம் மற்றும் எனது விலங்கியல் பாடப்புத்தகத்திற்கு நன்றி.

3 comments:

சுசி said...

துக்கிளியூண்டு பூச்சிகளுக்குள்ள இவ்வளவு மேட்டர் இருக்கா!!! சூப்பர் !

வெங்கட் நாகராஜ் said...

அருமையான படங்கள். என்ன லென்ஸ் பயன்படுத்துகிறீர்கள்?

ராமலக்ஷ்மி said...

தகவல்களுடன் அழகான படங்கள்.

LinkWithin

Related Posts with Thumbnails