Monday, 30 January 2017

குள்ராட்டி - புத்தக விமர்சனம்

இணையத்தின் படக்கொடைக்கு நன்றி
தான் வாழும் காலகட்டத்தின் நிகழ்வுகளைப் பதிவு செய்யும் படைப்பாளி, தன்னைச்சுற்றியிருக்கும் மனிதர்களின் குணாதிசயங்களை, தன் மண்ணின் பெருமையையும் சேர்த்தேதான் பதிவு செய்கிறார். அந்த வகையில்  தான் பிறந்த நெல்லைச்சீமையின் கீழாம்பூரையும் அதன் சுற்று வட்டாரக் கிராமப்பகுதிகளையும் அங்கே நடமாடும் மனிதர்களையும் மண்ணின் மணத்தோடு ஏக்நாத் தன் சிறுகதைகளில் நம் கண் முன்னே கொண்டு வந்து "குள்ராட்டி" என்ற தொகுப்பாய் நிறுத்தியிருக்கிறார். இவர் "ஆடுமாடு" என்ற வலைப்பூவிலும் எழுதி வருகிறார். கிராம வாழ்க்கையின் யதார்த்தம் தொட்டு எழுதப்பட்டிருக்கும் ஒவ்வொரு சிறுகதையும் வாழ்வியலில் ஒரு புதிய தரிசனத்தை நமக்குக் கிடைக்கச்செய்கிறது. 

தெற்கத்திக் கிராம வாழ்க்கை முறையை அடிப்படையாகக் கொண்ட இச்சிறுகதைகளில், அதற்கேயுரிய, பரம்சம், பத்தாடி மவன், ஆறுமாச்சி, நைன்த் பி முப்புடாதி பிள்ள, போன்ற பெயர்களோடு அவர்களுக்கேயுரிய மொழிவழக்குமாக கிராமிய மணம் வீசுகிறது. பொசுக்கென்று பொங்குவதும் அதே வேகத்தில் சட்டெனத் தணிவதுமான இந்த மனிதர்களின் ஈரமனசின் ஒரு துளிதான் “மூணு பொட்டுச் செவளை”. ஊர் வம்பெல்லாம் விலைக்கு வாங்கி வந்து தன்னைப் பாடாய்ப்படுத்தும் அந்த நாலு கால் ஜீவனை வாய்க்கு வாய் “அர்தலி” என்று திட்டித்தீர்த்தாலும், “விக்கதுக்காய்யா நான் மாடு வளக்கேன்?” என்று ஊர் மக்களிடம் சுள்ளென்று கோபப்படும் அதே கதை நாயகன்தான், இரவோடிரவாக கயிற்றை அறுத்துக்கொண்டு போகும் அந்த மாட்டை, “வந்தம்ன்னா முதுகு தொழிய பிச்சுருவேன்” என்று திட்டியபடி துரத்தியோடுகிறான். செய்வதையெல்லாம் செய்து விட்டு அப்பாவி போல் நிற்கும் அந்த வாயில்லா ஜீவனோடு அவன் படும் பாடு இருக்கிறதே.. கதை முழுக்க அங்கதச்சுவை தாண்டவமாடுகிறது.  ஒரு கட்டத்தில், அந்த செவளையைப் பார்த்து "க்க்கியே.. சொன்னவ்டி கேக்க மாட்டியா? என்னா செர படுத்துத" என நாமே அலுத்துக்கொள்வோம் போல் ஓர் உணர்வு :-)

கிராம மக்களைப்பொறுத்தவரை கால்நடைகளும் குடும்பத்தில் ஓர் அங்கம்தான். பாபநாசம் மலைக்கு மேலிருக்கும் “குள்ராட்டி” எனப் பெயர் மருவிய குளிர்ஆட்டிக்கு மேய்ச்சலுக்கு அனுப்பப்பட்ட இடத்தில் சொந்தக்காரருக்குத் தெரியாமல் விற்கப்பட்ட பசுமாடு, எதிர்பாராமல் நடுச்சாலையில் தனது முன்னாள் சொந்தக்காரனை கண்டு கொண்டு தன் பாசத்தை வெளிப்படுத்தும் விதம் வாசிப்பவர் கண்களில் நிச்சயமாக ஈரம் படரச்செய்யும்.

உணர்வுகளால் பந்தாடப்படும் இந்த எளிய மனிதர்களின் அலைக்கழிப்பை இதை விட அற்புதமாகச் சொல்லி விட முடியாது. மந்திரமூர்த்தி கோயில் கொடையில் வேட்டி கட்டு முறையைத் திருப்பிச் செய்ய முடியாமல் கருக்கலில் மனைவியுடன் ஊரை விட்டுச் செல்லும் பூச்சிக்கண்ணனாகட்டும், பார்வதி தன்னைக்காதலிப்பதாகக் கனவில் திளைத்து நித்தம் அலையும் முனியசாமியாகட்டும், தன் குடும்பத்தில் செத்தும் கெடுக்கும் அந்தக் கன்னி யார்? என்ற கேள்விக்கு விடை தேடிக்குமையும் லட்சுமியாகட்டும், டிம்சனக்கா என்று அழைக்கப்படும் அம்பிகாபதியாகட்டும்,, ஒரு கணம் நம் முன் வந்து, “என்னா? கெதியாயிருக்கியளா?” என்று கேட்டு விட்டுப் போகிறார்கள். 

“தெரியாமச் சொல்லிட்டேன் விடுங்க” என்றால் கூட, ஏழு தெருவுக்குக் கேட்கிறமாதிரி, “அதெப்படி நீ தெரியாமச் சொல்லலாம்’ என்று அழிச்சாட்டியம் செய்கிற மக்களுக்கு, மச்சான் கொழுந்தியா என்ற உறவு முறையில் காதலித்துக்கொண்டிருக்கும் இளஞ்ஜோடிகளை, வேறொரு உறவு முறையில் அவர்கள் அண்ணன் தங்கை எனச்சொல்லி பட்டுக்கத்தரித்தாற்போல் பிரிக்கவும் தெரியும். ‘தாய் முறையோ.. நாய் முறையோ’ என நெல்லைச்சீமையில் சொல்வார்கள். அதாவது தாய் தந்தை என இருவரின் வழியிலும் ஒருவர் உறவினராக இருந்தால், தாய் வழியில் வரும் உறவு முறையைக் கணக்கில் கொள்ளாமல் தந்தை வழி உறவு முறைப்படிதான் அவரை அழைக்க வேண்டுமென்பார்கள். வீட்டினர் விரும்பாத காதலென்றால் அவர்களைப்பிரிக்க பிரிக்க தாய் வழி உறவு முறையையும் கொள்ளலாமென்பது “முறைகள்” மக்களின் கணக்கு. ஆனால், கும்பிடும் கடவுளான பூதத்தாராகவே இருந்தாலும், தன் தாத்தாவின் முகத்தை அணிந்து விட்டதால் இனிமேல் அவரும் சேக்காளிதான் என்பது ஒரு பேரனின் கணக்கு.

வாசிக்குந்தோறும் நம்முன் விரிந்து செல்லும் ஏக்நாத்தின் மண்ணிலிருந்து ஒவ்வொரு கதையாக முளைத்து வந்து கொண்டே இருக்கிறது. அந்த சாதாரண மனிதர்களின் அன்றாட வாழ்வில் நிகழும் மிகச்சாதாரண சம்பவங்கள் அசாதாரணமாகவும் அமைந்து விடுகின்றன. எவ்விதமாகவும் அணி செய்து கொள்ளாமல் அவற்றை உள்ளது உள்ளபடி உரைத்துச்செல்லும் அவரது மொழியில், புதிய எளிய அழகில் சொல்லப்பட்டிருக்கிறது அவ்வுலக மாந்தர்களின் காதல், சூழ்ச்சி, அறியாமை, பாசம், கண்ணீர் நிரம்பிய வாழ்வியல். அவற்றின் தொகுப்பே “குள்ராட்டி”. 

ஆசிரியர் : ஏக்நாத்
பதிப்பகம் : சந்தியா பதிப்பகம்
விலை :50
ஆன்லைனில் வாங்க: உடுமலை.காம்,  New Horizon Media

3 comments:

கோமதி அரசு said...

புத்தக விமர்சனம் படிக்க தோன்றுகிறது சாரல்.

வெங்கட் நாகராஜ் said...

நல்லதொரு அறிமுகம்..... நன்றி.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க வெங்கட்,

வாங்க கோமதிம்மா,

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

புத்தகம் கிடைத்தால் நிச்சயமாக வாசியுங்கள். மிகவும் சுவாரஸ்யம் நிரம்பியது.

LinkWithin

Related Posts with Thumbnails