Monday, 5 August 2013

மிசல் பாவ்.. அம்ச்சி மும்பை ஸ்பெஷல்.

மழைக்காலமும் அதற்குப் பின் குளிர்காலமும் வந்தாலே, சூடாகவும் சுவையாகவும் காரசாரமாகவும் நச்சென்று நாலு அயிட்டங்களைக் கேட்கிறது நான்கு இஞ்ச் நீளம் கூட இல்லாத இந்தப் பொல்லாத நாக்கு. இன்றைக்கு அதை 'மிசல் பாவ்' கொடுத்து அடக்குவோம். 'மிசல்பாவ்' மஹாராஷ்ட்ராவில் வடாபாவுக்கு அடுத்தபடியாக அதிகம் விரும்பிச் சாப்பிடப்படுகிறது. எல்லா நேரத்திற்கும் ஏற்ற உணவு. டிபனாகவோ அல்லது லஞ்ச், மற்றும் ப்ரேக்ஃபாஸ்டாகவோவும் சாப்பிடப்படுகிறது. சின்னச்சின்ன டிபன் ஸ்டால்களிலும்கூட இதற்கென்று ஒரு ரசிகர் கூட்டமே இருக்கிறது. வாருங்கள்,.. இதை நாம் வீட்டிலும் செய்து ரசித்துப் புசிப்போம்.

மிசல் செய்ய அரைகப் வெள்ளை அல்லது பச்சைப்பட்டாணி, அரை டீஸ்பூன் மிளகாய்த்தூள், ஒரு டீஸ்பூன் கரம் மசாலாத்தூள், அரை டீஸ்பூன் சோளே மசாலாத்தூள், இரண்டு தேக்கரண்டி சமையல் எண்ணெய், உப்பு, இஞ்சி பேஸ்ட் அரை டீஸ்பூன், சீரகம் அரை டீஸ்பூன், ஒரு பெரிய தக்காளி, ஒரு பெரிய வெங்காயம், ஒரு டிஷ்யூ டவல், இரண்டு சின்னக்கிண்ணங்கள், ஒரு பெரிய கிண்ணம், எலுமிச்சை இவற்றுடன் கொஞ்சம் பொறுமையும் தேவை.

முதலில் பட்டாணியை அளந்து எடுத்துக்கொள்ளவும். அரை கப் அளவு இருக்கிறதா என்று சரிபார்க்கவும். சரியாக இருந்தால் உங்கள் திறமைக்கு ஷொட்டும், இல்லையென்றால் குட்டும் கொடுத்துக்கொள்ளவும். இதை வேண்டிய அளவு தண்ணீரில் ஊற வைக்கவும். வேண்டிய அளவு என்றால் எவ்வளவு என்பதைத் தீர்மானிக்கும் சுதந்திரம் இந்தத்திருநாட்டில் உண்டு. ஆகவே அதைப் பயன்படுத்திக்கொண்டு, பட்டாணி நன்கு முழுகி நீச்சலடிக்கும் அளவிற்குத் தண்ணீரை ஊற்றி விட்டு, பொறுமை என்னும் நகையை அணிந்து கொண்டு கடலை நன்கு ஊறும் வரைக்கும் வேறு ஏதாவது வெட்டி வேலை பார்க்கவும்.

கடலை ஊறியபின் தண்ணீரை வடித்து வைக்கவும். முதலில் பூர்வாங்க வேலைகளைச் செய்து வைக்கலாம். எலுமிச்சையைத் துண்டுகளாக அரியவும். ஒரு தக்காளியை வட்டவட்டமாக அரிந்து கொள்ளவும். அதன் பின் வெங்காயத்தைப் பொடிப்பொடியாக நறுக்கிக்கொள்ளவும். வெங்காயம் நறுக்கும்போது வழியும் கண்ணீரை டிஷ்யூவால் துடைத்துக் கொள்ளவும். 'இதை' மட்டும் வீட்டிலிருக்கும் ரங்க்ஸ்களின் முன்னால் செய்தால் பல அற்புதங்கள் நடக்கும்.

இப்போது குக்கரையோ அல்லது அடிப்பாகம் கனமான பாத்திரத்தையோ எடுத்துக்கொள்ளவும். ‘குக்கர் என்றால் குக் செய்பவர்தானே?. எங்க வீட்டில் ‘*****’தான் குக்கர் என்றெல்லாம் மொக்கை போடக்கூடாது. அழுது விடுவேன் ஆமாம் :-). இப்பொழுது பாத்திரத்தை அடுப்பில் வைத்துச் சூடாக்கி, அதில் எண்ணெய்யை ஊற்றவும். சீரகத்தைப் போட்டு வெடிக்க விட்டபின் இஞ்சியை அதில் போட்டு வதக்கவும். பச்சை வாசனை போனவுடன் நறுக்கிய வெங்காயத்தை அதில் போட்டு பொன்னிறமாக வதக்கவும், பின் தக்காளியைப் போட்டு லேசாக வதங்கியபின், மசாலாத்தூள்களையும் ருசிக்கேற்றபடி உப்பையும் போட்டு இன்னும் வதக்கவும். வெந்து குழைந்து கிடக்கும் தக்காளிக்கலவையின் மேல் பட்டாணியைப்போட்டு, மூன்று கப் தண்ணீரை ஊற்றி நான்கு விசில் வரும் வரை வேக விடவும்.

குக்கர் குளிருவதற்குள் சாப்பிடுவதற்கான ஏற்பாட்டைச் செய்து கொள்ளலாம். ஒரு வெங்காயத்தைப் ஃப்ரிஜ்ஜிலிருந்து எடுத்து பொடியாக நறுக்கி ஒரு கிண்ணத்தில் போடவும். ஃப்ரிஜ்ஜில் வைக்கப்பட்ட வெங்காயங்களை நறுக்கும்போது கண்ணீர் வருவதில்லை என்பது இங்கே சொல்லாமல் சொல்லப்பட்ட டிப்ஸ் எனக்கொள்க. இன்னொரு கிண்ணத்தில் கொஞ்சம் கொத்துமல்லித்தழைகளை நறுக்கி வைக்கவும். இப்பொழுது ஆவி அடங்கிய குக்கரைத்திறந்து, மிசலை இரண்டு நிமிடங்களுக்குக் கொதிக்க விடவும். ரொம்பவும் நீர்க்க இருப்பதைப் பார்த்து பயந்து விட வேண்டாம். தண்ணீர் நிறைய இருந்தால்தான் அதில் போடப்படும் மிக்சர் நன்கு ஊறி சாப்பிட நன்றாக இருக்கும். பின் மிசலை இன்னொரு பெரிய பாத்திரத்தில் ஊற்றி, சாப்பிடும் இடத்தில் கொண்டு போய் வைத்துக்கொள்ளவும். 

பரிமாறும் தட்டில், மிசலை ஊற்றவும், அதன் மேல் ஒரு பிடி மிக்சரைப் போடவும். இங்கே, மும்பையில் கிடைக்கும் மிக்சரை நாங்கள் ஃபர்ஸாண் என்று சொல்லுவோம். பின் கொஞ்சம் வெங்காயத்தைத் தூவவும். கடைசியாக, நறுக்கிய கொத்தமல்லி இலையால் அலங்கரித்து, ஒரு ஸ்பூனும் போட்டு, ஒரு எலுமிச்சைத்துண்டும் வைத்து இரண்டு பாவ்கள் அல்லது ப்ரெட்டுடன் பரிமாறவும். இந்த இடத்தில், முன்னொரு முறை சாப்பிட்ட பாவ்பாஜி உங்கள் நினைவுக்குக் கண்டிப்பாக வரும். 

எலுமிச்சையை இரண்டு சொட்டுகள் மிசலில் பிழிந்து கொண்டு, ஸ்பூனால் எல்லாவற்றையும் கலக்கிக்கொண்டு பாவை குழம்பில் முக்கிச்சாப்பிடவும். விரும்பினால் இடையிடையே மிசலையும் ஸ்பூனால் சாப்பிடலாம். மும்பைக்கர்களைப் பொறுத்தவரை இது ரெடி டூ ஈட் அயிட்டம். மார்க்கெட்டுகளில் ரெடியாகக் கிடைப்பவற்றை வாங்கி வந்து வீட்டில் சட்டென்று ரெடி செய்வதுதானே ரெடி டூ ஈட்டின் தத்துவம் :-). தத்துவத்தைத் தவறாமல் கடைப்பிடிப்பது எப்படியென்றால், மும்பை மார்க்கெட்டுகளில் நவதானியங்களைத் தனித்தனியாக ஊறவைத்து முளைகட்டி விற்கப்படுபவற்றை, ஆபீஸ் விட்டு வீட்டுக்கு வரும்போதோ, அல்லது மிசல்பாவ் செய்ய வேண்டுமென்று நினைத்தவுடனோ சட்டென்று தேவைக்கேற்ப ஊற வைத்த பட்டாணி, மற்றும் இத்யாதிகளை வாங்கி வந்து டின்னருக்கு ஐந்து நிமிடத்தில் மிசல் பாவ் ரெடி செய்வதுதான். தன் கையே தனக்குதவி என்றிருப்பவர்கள் தனித்தனி டப்பாக்களில் தலா நூறு கிராம் விரும்பிய தானியங்களை ஊற வைத்து முளைகட்டி ஃப்ரிஜ்ஜில் வைத்துக்கொள்ளலாம். வேண்டிய சமயம் வெளியே எடுத்தால் விதவிதமான அயிட்டங்களை நிமிடத்தில் செய்து அசத்தி விடலாம்.

16 comments:

இராஜராஜேஸ்வரி said...

அருமையான ருசியான உணவு,,!

வெங்கட் நாகராஜ் said...

அருமையாக இருக்கு......

இங்கே சில இடங்களில் கிடைக்கிறது. ஆனால் மும்பை போன்ற சுவை இருக்காது என நினைக்கிறேன்.....

Ramani S said...

அருமையான உணவு
சமீபத்தில் மும்பை வந்தபோது ரசித்து உண்ட சுவை
இன்னும் மனதில் இருக்கிறது
இங்கு மதுரையில் கிடைப்பதில்லை
படங்களுடன் பகிர்வு அருமை
தொடர வாழ்த்துக்கள்

Ramani S said...

tha.ma 2

ராஜி said...

முயற்சி செஞ்சு பார்க்கலாம், ஆனா, அதே ருசி வருமா?!

சங்கவி said...

பார்க்க பார்க்க ருசி வயத்தை கிள்ளுதுங்கோ...

அமுதா கிருஷ்ணா said...

try செய்யணுமே...

கோவை2தில்லி said...

அருமையான குறிப்பு. படிக்கும் போதே நாவில் நீர் சுரக்க வைத்து விட்டீர்கள்....:) பாவ் பாஜி சாப்பிட வேண்டும் என்று நீண்ட நாளாக எண்ணம்....:))

தங்களின் நகைச்சுவை வரிகளையும் மிகவும் ரசித்தேன்.

ஸாதிகா said...

இங்குள்ள சாட் கடைகளில் கூட இந்த பெயரை கணடதில்லையே.

//மழைக்காலமும் அதற்குப் பின் குளிர்காலமும் வந்தாலே, சூடாகவும் சுவையாகவும் காரசாரமாகவும் நச்சென்று நாலு அயிட்டங்களைக் கேட்கிறது நான்கு இஞ்ச் நீளம் கூட இல்லாத இந்தப் பொல்லாத நாக்கு. இன்றைக்கு அதை 'மிசல் பாவ்' கொடுத்து அடக்குவோம். 'மிசல்பாவ்'// யப்பா..என்னா பில்டப்பு?

வை.கோபாலகிருஷ்ணன் said...

காரசாரமான ருசிமிக்கப் பகிர்வுக்குப் பாராட்டுக்கள்.

வல்லிசிம்ஹன் said...

மிசல் பாவ் நல்லா தான் இருக்கு. சுலபம் கூட என்று தோன்றுகிறது.

அசத்துறீங்களே சாரல்.:)

சே. குமார் said...

நண்பர்கள் தின வாழ்த்துக்கள் (ஒரு நாள் தாமதமாக)

தங்கள் அனுமதியின்றி ஒரு தொடர்பதிவுக்கான அழைப்பு... எழுதுவீர்கள் என்ற நம்பிக்கையில்....


http://vayalaan.blogspot.com/2013/08/blog-post_5.html

ராமலக்ஷ்மி said...

செய்து ருசிக்கும் ஆவலைத் தூண்டுகிறது நீங்கள் குறிப்பைக் கொடுத்த விதம். அப்படியே எடுத்து சாப்பிட ஆரம்பிக்கலாம் போலப் படமும்:)!

ராமலக்ஷ்மி said...

செய்து ருசிக்கும் ஆவலைத் தூண்டுகிறது நீங்கள் குறிப்பைக் கொடுத்த விதம். அப்படியே எடுத்து சாப்பிட ஆரம்பிக்கலாம் போலப் படமும்:)!

சே. குமார் said...

மிசல் பாவ் சூப்பர்...
நாங்கதான் பாவம்... இப்படி நல்ல நல்ல ஐட்டமா சொன்னா படிச்சு படிச்சு ரசிச்சிக்கிறோம்... ம்....

கோமதி அரசு said...

படமும், செய்முறைக் குறிப்பும் அருமை.

LinkWithin

Related Posts with Thumbnails