நூல்: வாரணம்
ஆசிரியர்: ராம் தங்கம்
வெளியீடு: வம்சி பதிப்பகம்
விலை: 350 Rs.
ராஜவனத்தின் தொடர்ச்சியாக வெளிவந்திருக்கிறது “வாரணம்” எனும் இந்த நாவல். “திருக்கார்த்தியல்” எனும் நூலுக்காக சாகித்ய அகாடமி யுவபுரஸ்கார் விருதை வென்ற எழுத்தாளர் ராம்தங்கம் எழுதிய இந்த நாவலில் ராஜவனம் ஒளித்து வைத்திருக்கும் பல ரகசியங்களான மேகமூட்டி மலை, ஆனையருவி மற்றும் பலவற்றை மன்றோவுக்கு மட்டுமல்ல, நமக்கும் காட்டித்தருகிறார் ஆனை ராஜசேகர்.
வனத்தின் உண்மையான அரசன் யாரெனில் அது யானைதான். ஒரு காட்டையே உருவாக்கும் வல்லமை யானைக்கு உண்டு என்பர். உணவையும் நீரையும் தேடி யானை உருவாக்கும் பாதையில்தான் பிற உயிர்கள் சென்று அவற்றைக் கண்டுகொள்ளும். ‘வனத்துல சாமி மாதிரி’ என ஆனை ராஜசேகர் சொல்வது அந்த அனுபவ உண்மையையே.
வனத்துக்கும், திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் அரசியலுக்குமிடையே ஒரு ஊஞ்சலைப்போல் நாவல் ஆடியாடித்திரும்புகிறது. இவ்விரண்டும் இரு வேறு துருவங்களானாலும் இணைக்கும் புள்ளிகளாக மன்றோவும் அவனது மாமாவான சாமர்வெல்லும் இருப்பதாகத்தோன்றுகிறது. கன்யாகுமரி மாவட்டத்தில் கிறிஸ்துவம் உதயமானதும், அது எவ்வாறு பரவியது என்பதும், மாவட்டத்தின் முதல் சர்ச் மயிலாடியில் கட்டப்பட்ட வரலாறும், முதல் அச்சகம் ஆரம்பிக்கப்பட்ட நிகழ்வும் சாமர்வெல்லின் வாயிலாக விவரிக்கப்பட்டுள்ளன.
அக்கால அடிமை முறையில் மக்கள் எப்படி விலங்குகளை விட மோசமாக நடத்தப்பட்டார்கள் என்பதையெல்லாம் வாசிக்கையில் நமக்கும் கண்கள் கசிகின்றன. மேலாடை உடுத்தக்கூட உரிமையின்றி பெண்கள் அடக்கியொடுக்கப்பட்டிருந்ததையும் அந்த அவல நிலையிலிருந்து அவர்களை மீட்டெடுப்பதற்கு ஜோகன்னா செய்த முயற்சிகளையும், கன்யாகுமரி மாவட்டத்தில் கல்வி புகட்ட அவர் செய்த தொண்டுகளையும் அறிய நேர்கையில் அவர் மீது பெருமதிப்பு மேலிடுகிறது. கன்யாகுமரி மாவட்டத்தில் சில வருடங்களுக்கு முன்பு வரை அடிமுறை ஆசான்கள் வர்மக்கலை, களரி போன்ற போர்க்கலைகளைப்பயிற்றுவிப்பதிலும், வைத்தியத்தைக் கற்றுக்கொடுப்பதிலும் வல்லவர்களாக விளங்கினர். அப்படியொரு அடிமுறை ஆசானான தங்கையா நாடாருக்கும் மிஷனரியின் ரெவரெண்ட் மீட்டுக்குமிடையே நடக்கும் உரையாடல்கள் மூலம் அக்கால திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் அரசியல் நிகழ்வுகளைப்பற்றியும், மிஷனரிகளின் செயல்பாடுகளைப்பற்றியும் அறிய முடிகிறது.
‘வனத்தை நேசிக்கக்கூடியவன் இல்லைன்னா வனம் எப்படி சார் காப்பாத்தப்படும்?’ என சாமர்வெல் ஆதங்கப்படுவது நியாயமானதே. நேசிப்பவர்கள் இல்லாததால்தான் இன்று பல மலைகள் கரைந்து காணாமல் போய்க்கொண்டிருக்கின்றன. அதன் காரணமாக மலைவாழ் உயிரினங்கள் தங்கள் தேவைக்காக ஊருக்குள் புகுந்து உணவைத்தேடுகின்றன. இதனால் பல இடங்களில் மனிதனுக்கும் மிருகத்துக்குமிடையே மோதல்கள் ஏற்பட்டு உயிர்ச்சேதம் விளைகிறது. அழகாக இருந்தாலே ஆபத்துதான் போலிருக்கிறது.
ஆனை வேறு வனம் வேறல்ல.. இரண்டுமே வனப்பானவை, அறிந்து கொள்ளும் ஆவலைத்தூண்டுபவை, எல்லைமீறி நெருங்கிச் சீண்டினால் ஆளை ‘உண்டு.. இல்லை’ என ஆக்கும் ஆபத்தானவை. ஆராதித்தால் அருள்பவை.
ஆனை ராஜசேகருடன் மன்றோ காட்டுக்குள் செய்யும் பயணத்தில் காட்டையும், அங்கிருக்கும் இயற்கை வளங்கள், செடிகொடிகள், விலங்குகள் என ஒவ்வொன்றைப்பற்றியும் ஆசிரியர் வர்ணித்திருப்பவை அபாரம். துளித்துளியாய் நம்மையும் ரசிக்க வைக்கிறார். அதுவும் கதைக்களமான மலையகத்தமிழை நாவலின் உரைமொழியாய்க்கொண்டிருப்பது நாவலோடு இன்னும் ஒன்ற வைக்கிறது. ஆனைதுருத்தி மலையையும், ஆனையருவியையும் மன்றோ காணும் காட்சிகள் வர்ணனையின் உச்சகட்டம். எத்தனை வாசித்தாலும் ரசித்துத்தீராது. அவற்றை வாசிக்கும்போதே நாமும் அந்த அருவியில் நனைவது போல் பிரமை ஏற்படுகிறது.
கட்டையன், நெட்டையன் என ஆனைகளின் வகைகள், சபரிமலையில் பக்தர்கள் கூடும் சமயத்தில் அங்கிருக்கும் யானைகள் இந்தப்பக்கம் வலசை வந்துவிடும் புத்திசாலித்தனம், தண்ணீரைக்கண்டதும் குழந்தை போல் அவை செய்யும் அட்டகாசம், பிருத்திச்சக்கை என கன்யாகுமரி மாவட்டத்தில் வழங்கும் அன்னாசிப்பழ விவசாயத்தில் விவசாயிகள் யானையால் எதிர்கொள்ள நேரிடும் நஷ்டம், அதைத்தடுக்க அவர்கள் வைக்கும் ‘வெடிக்காய்’ என்ற கொடுமை என பல தகவல்களை உரையாடல் உத்தி மூலம் பகிர்ந்திருக்கிறார் ராம் தங்கம். ஜெயமோகனின் “கீறக்காதன்” யானையைப்போலவே “கீரிப்பாறை ராஜா”வும் நம் மனதில் அழியா இடம் பிடிக்கிறான்.
இயற்கையோடு இயைந்த வாழ்வையும் யானைகள் மேலான அன்பையும் அவரது அப்பாவான சுடலை மூலம் புரிந்து ஏற்றுக்கொள்ளும் ராஜசேகர் அந்த அன்பை தனது மகனிடம் மட்டுமல்ல மன்றோவிடமும் கண்டு பெருங்களிப்பு கொள்கிறார். “வனம் இல்லைன்னா மனுசனா இருந்தாலும் அவ்வளவுதான்” என்பது உண்மைதானே?
இயற்கை எல்லோரையும் நேசிக்கிறது, ஆனால் மனிதன்தான் இயற்கையை விட்டு வெகுதூரம் கடந்து சென்றுவிட்டான். “தூரத்தைக்கடக்குறதுக்குத்தானே பாதை” என்கிறார் சாமர்வெல். ஆனால், இந்த தூரத்தைக் கடப்பதற்கான பாதைதான் எதுவெனப்புலப்படவில்லை. மனிதனின் பேராசை எனும் திரை அவனது அறிவுக்கண்ணை மறைத்திருப்பது விலகும்வரை பெருவனத்தையும் அதைக்காக்கும் வாரணங்களையும் காக்க ஆனை ராஜசேகர் போன்றவர்கள் யானைகளுக்காக வாழைகளை நட்டு வைத்து உணவிட்டு மனிதர்களுக்கும் ஆனைகளுக்குமிடையே போராடிக்கொண்டுதான் இருப்பார்கள்.
No comments:
Post a Comment