Monday, 14 March 2011

தோட்டத்துப்பச்சிலை..


இருக்கையில் வந்து அமர்ந்தபின்னும், கேசவனுக்கு இன்னும் படபடப்பாகவே இருந்தது. லேசில் மனசு ஆறவேயில்லை.. இன்னது செய்கிறோம் என்றறியாமலேயே, டேபிளில் இருந்த பேப்பர்களை மறுபடியும் ஒழுங்குபடுத்தி வைத்தான்.. நேராக இருந்த தொலைபேசியின் ரிசீவரை எடுத்து மறுபடியும் அதன் இடத்திலேயே வைத்தான்..  இலக்கில்லாமல் எதிரிலிருந்த கணிணியை வெறித்துக்கொண்டிருந்தவன் தம்ளரின் மூடியை எடுத்து பக்கத்தில் வைத்துவிட்டு தண்ணீர் குடித்துக்கொண்டான். அப்படியே அழுந்த முகத்தைத்துடைத்துக்கொண்டு, நெற்றியில் கைகளை முட்டுக்கொடுத்து தாங்கிக்கொண்டு சிறிது நேரம் தலைகுனிந்து கண்மூடி அமர்ந்திருந்தான்...  மனசு கொஞ்சம் கொஞ்சமாக ஒருநிலைப்படத்தொடங்கியது.

'ச்சே... இந்த முறையும் தவறிப்போயிடுச்சே'.. சத்தமில்லாத வார்த்தைகள் உதடுகளிலிருந்து உதிர்ந்தன. இந்த பதவி உயர்வை ரொம்பவே எதிர்பார்த்திருந்தான்..  நாலைந்து முறை அவனது பெயர் லிஸ்டில் வருவதும், சீனியாரிட்டி முறையில் மற்றவர்கள் தட்டிக்கொண்டு போய்விடுவதுமாக இருந்தது. இந்தமுறை அவனது பேட்ச்மேட் ப்ரேம்தான் அவனுக்கு போட்டியாக இருக்கப்போகிறான்,.. ஆகவே கேசவனுக்கு வாய்ப்பு உறுதி என்று தலைமையகத்தில், மேலதிகாரியின் அந்தரங்க உதவியாளராக இருக்கும் ஒரு நம்பகமான நண்பன் அடித்துச்சொல்லியிருந்தான். ஆகவே ரொம்பவே நம்பிக்கையோடிருந்தான்.

ஆனால், வந்த லிஸ்டைப்பார்த்ததும் நம்பமுடியாமல் தன்னுடைய நேரடி மேலதிகாரியிடம் விளக்கம் கேட்க ஓடினான் , அவர்தானே தலைமையகத்துக்கு சிபாரிசு செய்தது. ஆனால் இவனிடம் ஏதேதோ காரணங்களைக்கூறி சாக்குச்சொல்லிவிட்டார். 'சார்.. உங்களுக்கே தெரியும், நான் எவ்வளவு எதிர்பார்ப்போட இருந்தேன்னு' என்றவனிடம் ' என்னப்பா செய்யறது!! ப்ரேம்மாதிரி ஒரு ஹார்டுவொர்க்கர்தான் வேணும்ன்னு கேட்டப்ப என்னால தட்டமுடியல' என்று சொல்லிவிட்டு பார்த்துக்கொண்டிருந்த ஃபைலில் முகத்தை புதைத்துக்கொண்டார். 'நீங்க போகலாம்'என்பதற்கான மறைமுக உத்தரவு அது. தலையை தொங்கப்போட்டுக்கொண்டு இருக்கைக்கு திரும்பிவிட்டான்.

எல்லா எரிச்சலையும் சேர்த்துக்கொடுத்த உதையில் பைக் உடனே கிளம்பியது.. ட்ராபிக்கில் நீந்திவந்து வீட்டையடைந்ததும் சோபாவில் அமர்ந்தவன்,.. வழக்கம்போல ஷூக்களையும் காலுறைகளையும் மூலைக்கொன்றாக எறிந்தான். அவன் நீட்டிய ஃப்ரீப்கேசை வாங்கி டீபாயில் வைத்தவள், வழக்கம்போல ஷூக்களை அதற்கான அலமாரியில் வைத்துவிட்டு, காலுறைகளை அழுக்குத்துணிகளுடன் சேர்த்துப்போட்டாள்.

'ஏங்க... காபி, டீ... என்ன கொண்டுவரட்டும்??'

'காபி கொண்டுவா'

அவன் கொண்டு போயிருந்த டிபன் பாக்ஸை சிங்கில் கழுவப்போட்டபடி, அங்கிருந்தே குரல் கொடுத்தாள்.

'மத்தியானம் வத்தக்குழம்பு நல்லாயிருந்ததா??'

'வத்தக்குழம்புக்கென்ன?!!.. வத்தக்குழம்புமாதிரிதான் இருந்தது. ஒலகத்துலயே நீ ஒருத்திதான் அலுசமா குழம்பு செஞ்சுட்டியா??.. எங்கம்மா எவ்வளவு சூப்பரா பண்ணுவாங்க தெரியுமா!!'

பதில் பேசாமல் பாலை அடுப்பில் சுடவைத்தாள். காலையிலும் இப்படித்தான், பாத்ரூமிலிருந்து வந்தவன்..  அங்கிருந்தே குரலுயர்த்தி கத்தினான்.

'என்னோட கைக்குட்டையை எங்கே?.. ஆபீசுக்கு கிளம்புறதுக்கு முன்னாடி எல்லாத்தையும் எடுத்து வைக்கணும்ன்னு தெரியாது??'

சர்ர்ர்ர்ர்ர்ர்...ர்...ர்..ர் ஓடிக்கொண்டிருந்த மிக்ஸி நின்றது. ஈரக்கையை துடைத்துக்கொண்டு வெளிப்பட்டவள், ப்ரீப்கேசின் பின்புறம் சரிந்து விழுந்திருந்த கைக்குட்டையை எடுத்து அதன்மேல் வைத்துவிட்டு அரக்கப்பரக்க சமையலறைக்கு சென்று டிபன் செய்வதில் முனைந்தாள். நேரமாகிவிட்டதென்றால் சாப்பிடாமல் கொள்ளாமல் ஓடிவிடுவானே. ஆனாலும் அன்று 'அடையை இன்னும் கொஞ்சம் முறுகவிட்டிருக்கலாம்' என்ற 'அட்வைசுடன்' சாப்பிட்டுவிட்டு கிளம்பினான்.

அவன் இப்படித்தான்.. அவள் செய்யும் எல்லாவற்றிலும் நொட்டை சொல்வான்.  அவனைப்பொறுத்தவரை அவளுக்கு சாமர்த்தியம் போதாது..  இன்னும் கொஞ்சம் புத்திசாலித்தனமாக அவளை நாம்தான் உருமாற்றவேண்டும் என்ற நினைப்புதான்... மற்றபடி மனைவியை கொடுமைப்படுத்தும் ரகமில்லை. ஆரம்பத்தில் இது அவளுக்கும் மனக்கஷ்டமாகத்தான் இருந்தது.. மறைமுகமாகவும், நேரடியாகவும் சொல்லிச்சொல்லி அலுத்துவிட்டாள். அவளும் படித்தவள்தான்.. நறுவிசாக காரியம் பார்ப்பவள்தான். ஆனாலும், என்ன செய்தாலும் திருப்தியில்லாமல் குற்றம் கண்டுபிடிப்பவனை, என்ன சொல்லி திருத்துவது!!  என்று அவளுக்கும் புரியவில்லை.

டீயை கொண்டுவந்தவள் பக்கத்திலேயே ஸ்னாக்ஸ் தட்டையும் வைத்தாள்.

மெதுவாக விரல் நுனியால் தட்டை தன்னைவிட்டு நகர்த்தியபடி 'இன்னிக்கும் அதே மெதுவடையா... இன்னிக்கு மத்தியானம், எங்க ஆபீஸ்ல சுப்பு சார் வீட்லேர்ந்து கேசரி செஞ்சு குடுத்துவிட்டிருந்தாங்க. அடடா... என்னருசி தெரியுமா??.. ஏதோ மாம்பழ கேசரியாம். நீயும் அதேமாதிரி வெரைட்டியா செய்ய கத்துக்க..' என்றான்.

'சரி.. கத்துக்கறேன்... ஏன் ஏதோ மாதிரியாயிருக்கீங்க?? ஆபீஸ்ல ஏதாவது பிரச்சினையா!!'

எல்லாவற்றையும் சொல்லிவிட்டு,' இந்தக்காலத்துல உழைக்கிறவனுக்கு ஏது மரியாதை.. எவ்வளவு உழைச்சாலும் மேலதிகாரிங்களுக்கு திருப்தி வரமாட்டேங்குது. எங்கிட்ட ஒரு வேலையை கொடுத்தா எவ்வளவு கஷ்டப்பட்டுன்னாலும் செஞ்சு முடிச்சிருக்கேனே தவிர, இன்னொருத்தர் கிட்ட அந்த வேலையை தள்ளிவிட்டதில்லை.. எவ்வளவுதான் மாங்குமாங்குன்னு உழைச்சாலும் அதுக்கொரு அங்கீகாரம் கிடைச்சாத்தானே நம்ம மனசுக்கும் ஒரு திருப்தி... ஹூம்!. இதெல்லாம் வீட்ல சொகுசா உக்காந்துக்கிட்டிருக்கிற உனக்கெங்கே புரியப்போவுது' என்றான்.

'ஏன் புரியாது??.. நல்லாவே புரியும்' என்றபடி பாத்திரங்களை எடுத்துக்கொண்டு, இரவுசமையலை கவனிக்க அடுக்களைக்குள் புகுந்தாள். தினமும் அவள், தன்னுள்ளே நினைத்து நினைத்து புழுங்கும் எண்ணங்கள், இன்று அவன் வாயிலிருந்து வார்த்தைகளாக வெளிப்பட்டிருப்பதை சொல்லிக்காட்ட அவளுக்கு நேரமில்லை.. விருப்பமுமில்லை. என்றாவது ஒரு நாள் காலம் அவனுக்கு அதை உணர்த்தட்டும், என்று நம்பிக்கையுடன் நினைத்துக்கொண்டபடி சமையலை கவனிக்க ஆரம்பித்தாள்.

டீபாயில் கிடந்த மாதப்பத்திரிக்கையில்,.. அவள் எழுதியனுப்பி முதல்பரிசு பெற்ற சமையல் குறிப்பான, 'மாம்பழ கேசரி' .. அச்சாகி வெளிவந்திருந்த பக்கம் காற்றில் படபடத்துக்கொண்டிருந்தது. அந்தப்புத்தகம் பழசாகி, பழையபேப்பர்காரரின் கைக்குப்போகிறவரை.. அதை அவன் கவனிக்கவேயில்லை.

டிஸ்கி: என்னுடைய கவிதைகளைத்தவிர இந்த சிறுகதையையும் வெளியிட்ட திண்ணைக்கு நன்றி.

62 comments:

வெங்கட் நாகராஜ் said...

திண்ணையில் வெளிவந்த உங்கள் கதை மிகவும் அருமை. பெரும்பாலான வீடுகளில் நடக்கும் சம்பவங்களை வைத்து பின்னப்பட்ட உங்கள் கதை நிதர்சனம்! பாராட்டுகள்.

FOOD said...

கதை அருமை. உயிரோட்டமான நடை.

RVS said...

மாம்பழக் கேசரி ... அற்புதமா இருந்தது. ஆரம்பித்ததில் இருந்து விறுவிறுப்பு குறையாமல் எழுதியிருந்தீர்கள். நன்று. ;-))

சே.குமார் said...

திண்ணையில் வெளிவந்த உங்கள் கதை மிகவும் அருமை.

Lakshmi said...

ஆஹா, அருமையான கதை, பெரும்பான்மை வீடுகளில் இதுதான் நிலைமையே.

raji said...

மிகவும் நேர்த்தியான நடையுடன் கூடிய
மெல்லிய உணர்வுகளை வெளிக்காட்டும் அற்புதமான
சிறுகதை

ஹேமா said...

சாரல்...ஆரம்பத்திலிருந்து கதை இயல்பாய் ஆர்வமாய் இருக்கு.
வத்தக்குழம்பு,மாம்பழக் கேசரி வாயூறுது !

கோவை2தில்லி said...

கதையும், அதற்கான தலைப்பும் அருமையாக இருந்தது. திண்ணையில் வெளிவந்ததற்கு வாழ்த்துக்கள்.

MANO நாஞ்சில் மனோ said...

கதை அருமையா இருக்கு...

தேனம்மை லெக்ஷ்மணன் said...

மிக அருமை சாரல்.. கதைகளை தொகுப்பாக போடலாமேப்பா..

சிறுகதை அருமையாக வருகிறது உங்களுக்கு..

மாதேவி said...

வாழ்த்துகள்.

வித்யா said...

கதை இயல்பா நல்லாருக்கு..

எல் கே said...

திண்ணையில் படித்தேன். பல வீடுகளில் இது நடக்கிறது. யதார்த்தம் சாரல்

vanathy said...

நல்லா இருக்கு கதை, அமைதி அக்கா.

Mukilarasi said...

சாரல் அக்கா,

வாழ்க்கையில இயல்பா நடக்குற நிகழ்வுகள் -ல அழகான கதையா வடிக்கிறீங்க...

ரொம்பவே ரசனையோட ஒவ்வொரு விசயத்தையும் பாப்பீங்க போல.

திண்ணையில உங்க கட்டுரை வெளிவந்தமைக்குப் பாராட்டுகள் அக்கா. உண்மையான உழைப்புக்கு என்னிக்குமே அங்கீகாரம் உண்டு! :-))

ஒரு சின்ன திருத்தம்..

கேசவன் காபி தானே கேட்டார். அவங்க டீயும் ஸ்நாக்ஸூம் கொண்டு வந்து வெக்கிறதா சொல்லிருக்கீங்க.. :-)

-முகில்

பா.ராஜாராம் said...

நல்லாருக்கு சாரல்! வாழ்த்துகள்! :-)

Pranavam Ravikumar a.k.a. Kochuravi said...

அருமை!

தோழி பிரஷா said...

வாழ்த்துக்கள்.

ஈரோடு தங்கதுரை said...

அருமையான கதை வாழ்த்துக்கள்..!

http://erodethangadurai.blogspot.com/

பாச மலர் / Paasa Malar said...

எதார்த்தம் பேசும் கதை..வாழ்த்துகள்

Part Time Jobs said...

Indian No 1 Free Classified website www.classiindia.com
No Need Registration . Just Post Your Articles Get Life time Income.

Start to post Here ------ > www.classiindia.com

ராமலக்ஷ்மி said...

மிக அருமையாய் சொல்லியிருக்கிறீர்கள் சாரல். வாழ்த்துக்கள்.

அன்னு said...

:)

இக்கரைக்கு அக்கரை பச்சை!!

raji said...

உங்களை தொடர் பதிவுக்கு அழைத்துள்ளேன்.
பதிவு போடுமாறு கேட்டுக் கொள்கிறேன்

http://suharaji.blogspot.com/2011/03/blog-post_17.html

அமைதிச்சாரல் said...

வாங்க வெங்கட்,

வாசிச்சதுக்கு நன்றி.

அமைதிச்சாரல் said...

வாங்க FOOD,

ரொம்ப நன்றிங்க..

அமைதிச்சாரல் said...

வாங்க RVS

வாசிச்சதுக்கு நன்றி.

அமைதிச்சாரல் said...

வாங்க குமார்,

ரொம்ப நன்றிங்க.

அமைதிச்சாரல் said...

வாங்க லஷ்மிம்மா,

சரிபாதிக்கும் அங்கீகாரம் கொடுக்கத்தவறும்போது அந்தப்பெண்ணின் உணர்வுகளும் இப்படித்தானே இருந்திருக்கும்!!

அமைதிச்சாரல் said...

வாங்க ராஜி,

ரசிச்சு வாசிச்சதுக்கு நன்றி.

அமைதிச்சாரல் said...

வாங்க ஹேமா,

காம்பினேஷன் நல்லாருக்கில்ல :-)))

அமைதிச்சாரல் said...

வாங்க கோவை2தில்லி,

பக்கத்துல இருக்கும் பொருளோட அருமை தெரியாம இருக்கறப்ப இதத்தானே உதாரணம் காட்டுவாங்க :-))

அமைதிச்சாரல் said...

வாங்க மனோ,

நன்றி சகோ.

அமைதிச்சாரல் said...

வாங்க தேனம்மை,

ஆஹா!!.. கெளப்பிவுட்டுட்டீங்களே :-)))ஆனா அதுக்கு இன்னும் கொஞ்சம் தூரம் போகணும்ன்னு நினைக்கிறேன் நான் :-)

ரொம்ப நன்றிங்க.

அமைதிச்சாரல் said...

வாங்க மாதேவி,

கதை எப்படியிருந்துச்சுன்னு சொல்லவேயில்லியே :-))

வாழ்த்துகளுக்கு நன்றி.

அமைதிச்சாரல் said...

வாங்க வித்யா,

நன்றிங்க.

அமைதிச்சாரல் said...

வாங்க எல்.கே,

தன்னைப்போல் மற்றவரையும் நினைக்கத்தெரியாதவங்க அந்த பலவீடுகளில் இருப்பதால்தான் இந்த நிலையே..

அமைதிச்சாரல் said...

வாங்க வானதி,

வாசித்ததுக்கு நன்றிங்க..

அமைதிச்சாரல் said...

வாங்க முகிலு,

திண்ணையில் நம்ம கவிதைகள் அடிக்கடி வரும். அப்படியே சுட்டியை பிடிச்சுட்டு போனீங்கன்னா படிக்கலாம். கதை இப்போதான் முதல்தடவையா வெளிவந்திருக்கு.

ஒரு மனுஷன் எதுக்கெடுத்தாலும் குத்தம் சொல்லிக்கிட்டுருக்கும்போது.. பாவம் அவங்களும் குழம்பத்தானே செய்வாங்க!! (ஹி..ஹி.ஹி.. சமாளிஃபிகேஷன் :-))))

அமைதிச்சாரல் said...

வாங்க பா.ரா அண்ணா,

உங்க ஒற்றைச்சொல்லில் மறைஞ்சிருக்கும் எக்கச்சக்க பாராட்டுகளை அள்ளிக்கிட்டேன் :-))))

அமைதிச்சாரல் said...

வாங்க ரவிகுமார்,

நன்றிங்க.

அமைதிச்சாரல் said...

வாங்க பிரஷா,

நன்றிங்க.

அமைதிச்சாரல் said...

வாங்க தங்கதுரை,

வாசிச்சதுக்கு நன்றி.

அமைதிச்சாரல் said...

வாங்க பாசமலர்,

நன்றிங்க..

அமைதிச்சாரல் said...

வாங்க Part Time Jobs,

உங்க தளத்துக்கும் வரேன்..

அமைதிச்சாரல் said...

வாங்க ராமலஷ்மி,

நன்றிங்க.

அமைதிச்சாரல் said...

வாங்க அன்னு,

புரியலீங்களே :-(

அமைதிச்சாரல் said...

வாங்க ராஜி,

சாப்பாடு சீக்கிரமே போடறேம்ப்பா :-)))

ஹுஸைனம்மா said...

வாய்ப்பு கிடைச்சும், அவன் தவறைச் அவள் சுட்டிக்காட்டாமல் இருப்பது எனக்கு வருத்தமா இருக்கு.

அப்பாவி தங்கமணி said...

திண்ணைலையே படிச்சேன் அக்கா... மெல்லிய உணர்வுகளை படம் பிடித்து காட்டிய அழகிய சிறுகதை...

asiya omar said...

வாழ்த்துக்கள்.இரண்டு நாளாய் வராமல் இருந்து விட்டேனே! அருமையான கதை.மிக யதார்த்தமானதும் கூட.

DrPKandaswamyPhD said...

தனக்கு ஒரு நீதி, அடுத்தவர்களுக்கு ஒரு நீதி என்பது காலம் காலமாக நடந்துகொண்டுதான் இருக்கிறது.
நல்ல கதை. அடுத்தவர்களின் மனதைப் புரிந்து நடக்காதவர்களை என்ன செய்வது?

சில சமயம் அப்படிப்பட்டவர்களை சுண்ணாம்புக் காளவாயில் போட்டால் என்ன என்கிற எண்ணம் வருவதைத் தவிர்க்க முடியவில்லை.

அமைதிச்சாரல் said...

வாங்க ஹுஸைனம்மா,

ஏற்கனவே சொல்லிச்சொல்லி அலுத்துதான் அவனா புரிஞ்சுக்கட்டும்ன்னு விட்டுட்டாங்க.. தானா கனியாததை தடிகொண்டு கனியவைக்க முடியாதே :-))

அமைதிச்சாரல் said...

வாங்க அப்பாவி,

வாசிச்சதுக்கு நன்றிப்பா :-))

அமைதிச்சாரல் said...

வாங்க ஆசியா,

வாசிச்சதுக்கு நன்றிப்பா.

அமைதிச்சாரல் said...

வாங்க கந்தசாமி ஐயா,

சிலசமயங்களில் அதன்போக்கில் விட்டுத்தான் பிடிக்கணும் :-))

Anonymous said...

நெறய பேர் வீட்ல இப்படிதாங்க இருக்காங்க. அவங்களுக்கா தெரியணும்

அமைதிச்சாரல் said...

வாங்க திவ்யாம்மா,

கரெக்டா சொன்னீங்க..

ப்ளாக் ஆரம்பிச்சப்புறம் முதல்தடவையா வீட்டுக்கு வந்திருக்கீங்க.. நன்றி. அடிக்கடி வாங்க :-)

RKM said...

தோட்டத்து பச்சிலை மருதானிபோல் மனதில் ஒட்டியது. கேசவன் கேட்டது காபி அவள் தந்தது டீ - கேசவன் குறைசொல்வதில் நியாயம் இருக்குமோ என்று தோன்றியது. நல்ல கதைக்கு நன்றி.

அமைதிச்சாரல் said...

வாங்க RKM,

அவங்க மேல தப்பில்லைங்க..டைப் செஞ்ச என் கை செஞ்ச குத்தம். கடைசி நேரத்து நகாசு வேலைகளெல்லாம் முடிச்சு அனுப்பி, திண்ணையிலும் வெளிவந்துட்டுது. சரி.. இனிமே மாத்தவேண்டாம்ன்னு அப்படியே விட்டுட்டேன் :-)))

தமிழ்ல டைப் செய்ய ஆரம்பிச்சதுக்கு வாழ்த்துகள் :-)

இராஜராஜேஸ்வரி said...

இன்னும் கொஞ்சம் புத்திசாலித்தனமாக அவளை நாம்தான் உருமாற்றவேண்டும் என்ற நினைப்புதான்//
நெறய பேர் வீட்ல இப்படிதாங்க இருக்காங்க.

அமைதிச்சாரல் said...

வாங்க ராஜராஜேஸ்வரி,

உண்மைதாங்க.. பெண்ணுக்கு இயற்கையா இருக்கும் திறமைகள் கூட சிலசமயங்களில் கண்டுகொள்ளப்படுவதில்லை..

LinkWithin

Related Posts with Thumbnails