Monday 20 February 2012

அசலும் நகலும் - ஜோதிர்லிங்கங்கள் - 1

இது அசல்..
சிவராத்திரி விரதமும் சிவ தரிசனமும் எமபயம், மரண பயம் போக்கி, முக்திக்கு வழி கோலும்ன்னு நாயன்மார்களே சொல்லி வெச்சிருக்காங்க. காஞ்சிபுரம், திருவண்ணாமலை, காளஹஸ்தி, சிதம்பரம், திருவானைக்காவல் ஆகிய பஞ்சபூத ஸ்தலங்களிலும் குற்றாலம், திருநெல்வேலி, மதுரை, சிதம்பரம், திருவாலங்காடு ஆகிய பஞ்சரத்ன சபைகளிலும், மற்றும் பக்கத்துல இருக்கற சிவன் கோயில்கள்லயும் சிவதரிசனம் செஞ்சா ரொம்பவும் சிறப்பு மட்டுமல்ல போற வழிக்கு புண்ணியமும் கிடைக்கும்.

மனுஷன் தன்னோட வாழ்க்கையில் சந்திக்க நேரிடும் இன்பதுன்பங்கள், ஏற்றத்தாழ்வுகள், தோஷங்கள் எல்லாத்துக்கும் தன்னோட கர்ம வினைகளும், செஞ்ச பாவங்களுமே காரணம்ன்னு நம்புறான். இதுலேர்ந்து விடுபடவும், பயங்களைப் போக்கிக்கவும் கடவுளைச் சரணடையறான். பூஜை புனஸ்காரங்கள், விரதங்கள்ன்னு விதவிதமான வழிபாடுகளை மேற்கொண்டாலும் அவன் நாடுவது இறையருளை மட்டுமே. எல்லா நாட்களிலும் இறைவனை வழிபட்டாலும் சில நாட்களுக்கும் மாதங்களுக்கும் மட்டும் தனிப்பட்ட சிறப்பு கிடைச்சுருது. உதாரணமா, மார்கழி, புரட்டாசி, கார்த்திகை, தை மாதங்கள்ல திருமால், அம்பாள், ஐயப்பன்னு ஒவ்வொரு தெய்வத்துக்கும் தனிச்சிறப்புக் கொடுத்து கும்பிடறோம். இதுல மாசி மாசம் வரும் சிவராத்திரியையும் சேர்த்துக்கலாம்.

சிவனுக்குரிய ராத்திரிகளான நித்ய சிவராத்திரி, பட்ச சிவராத்திரி, மாத சிவராத்திரி, யோக சிவராத்திரி, மகா சிவராத்திரி ஆகியவற்றைப் பஞ்சராத்திரிகள்ன்னு சொல்லுவாங்க. இதில் மாசி மாசம் வரும் சிவராத்திரியை மஹா சிவராத்திரின்னு கொண்டாடறோம். பகல் முழுக்க உபவாசமிருந்து, சிவபுராணம், சிவ அஷ்டோத்திரம் படிச்சுட்டு ராத்திரி நாலு காலப்பூஜைகள்ல கலந்துக்கிட்டு பால், தேன், சந்தனம், இளநீர், தயிர், கரும்புச்சாறுன்னு விதவிதமா நடக்குற அபிஷேக ஆராதனைகளைத் தரிசிக்கறது ரொம்ப விசேஷம். இதில் இரவு 11.30லேர்ந்து 1 மணி வரைக்குமான லிங்கோற்பவ காலப் பூஜையில் கலந்துக்கறது ரொம்பவே சிறப்பானது.

தமிழ் நாட்டைப் பொறுத்தவரைக்கும் சிவனுக்கு உருவ வழிபாடு கிடையாது. லிங்க வடிவில்தான் வணங்கறோம். இந்த லிங்க வடிவங்களிலும் கூட ஜோதிர்லிங்கங்களுக்குத் தனிச்சிறப்பு உண்டு. ஜோதின்னா ஒளின்னு அர்த்தம். ஒரு திருவாதிரை நாள்ல சிவன் தன்னை ஒளிமயமான லிங்க வடிவில் வெளிப்படுத்திக்கிட்டதாச் சொல்லப்படுது. அதனால மத்த நாட்களை விட திருவாதிரை தினத்தன்னிக்கு ஜோதிர்லிங்க வழிபாடு செய்யறது விசேஷம். இந்தியாவுல மொத்தம் 12 ஜோதிர்லிங்கங்கள் இருக்கு.

1.      சோம் நாத் ஜோதிர்லிங்கம்குஜராத்.
குஜராத்தின் சோம்நாத் பட்டான், கத்தியவாட் தாலுகாவில் இருக்கும் இந்தக் கோயிலில்தான் முதலாவது ஜோதிர்லிங்கமான சோமநாதர் இருக்கார். ‘சோம்என்ற வார்த்தைக்கு அமிர்தம்ன்னு அர்த்தமாம். இறையருளான அமிர்தம் அஞ்ஞானத்தைப் போக்கி, அறியாமை இருளிலிருந்து நம்மை மீட்டுக் கொண்டு வர்றதால இவரை சோம்நாத்ன்னு அழைக்கிறது பொருத்தமே.
தல வரலாறு: தக்ஷ ப்ரஜாபதி தன்னோட மகள்களான 27 நட்சத்திரங்களையும் சந்திரனுக்கு கல்யாணம் கட்டி வெச்சார். பத்துக் குழந்தைகள் இருந்தாலும் பெற்றோருக்கு ஒரு குறிப்பிட்ட குழந்தை செல்லக் குழந்தையாகிடறதுண்டு. அது மாதிரி சந்திரனுக்கும் தன்னோட மனைவிகளில்ரோகிணிமேல் தனிப்பிரியம். அதனால சக்களத்திச் சண்டையும் வந்தது. பஞ்சாயத்து செஞ்ச தக்ஷன் மருமகனோட ஒளியும் அழகும் அழிஞ்சு போகட்டும்ன்னு சாபமிட, விமோசனத்துக்காக சந்திரன் வந்திறங்கிய இடம்தான் சோம்நாத். இங்கிருந்த ஜோதிர்லிங்கத்தைப் பூஜித்துத்தான் சந்திரனுக்கு சாப விமோசனம் கிடைச்சது. சோமன் என்ற வார்த்தை சந்திரனையும் குறிக்கும். அதனால இங்கேயிருக்கும் இறைவனுக்கு சோமநாதர்ன்னு பேர் வந்துச்சுன்னும் சொல்லிக்கிறாங்க.

இந்தக்கோயிலின் செல்வத்தைக் குறிவெச்சு நடந்த கஜினி முகமது, ஔரங்கசீப், மற்றும் அலாவுதீன் கில்ஜியின் தளபதியான அலஃப் கான் போன்றவர்களின் படையெடுப்புகளுக்கு வரலாற்றுச் சிறப்பு உண்டு. கணக்கற்ற தடவைகள் தாக்கப்பட்டாலும் ஒவ்வொரு முறையும் புதுப்பிக்கப்பட்டுப் பொலிவோட நிக்குது.

மல்லிகார்ஜூனர்ஸ்ரீசைலம்- ஆந்திரப் பிரதேசம். 
ஆந்திராவின் கிருஷ்ணா நதி தீரத்துல பாதாளக் கங்கைக்கரையிலிருக்கும் ஸ்ரீசைலம் மலையுச்சியில் இருக்குது இந்தக் கோயில். இந்த மலையின் சிறு நுனியைப் பார்த்தாலே வினையெல்லாம் நம்மை விட்டு ஓடிருமாம். அத்தனை புண்ணியமுண்டாம்.
தலவரலாறு: ஒரு சமயம் தனக்கு முன்னாடி தன்னோட அண்ணனான புள்ளையார் கல்யாணம் கட்டிக்கிட்டதால தம்பியான முருகனுக்குக் கோபம் வந்து வீட்டை விட்டு வெளியேறிட்டாராம். எதுக்குக் கோவப்படணும். ஞானப்பழ விஷயமா நடந்த பஞ்சாயத்தே இன்னும் தீரலை. அதுவுமில்லாம சீனியாரிட்டிப்படி அண்ணனுக்குத்தானே முதல்ல கல்யாணம் நடக்கணும்?. இதெல்லாம் முருகக்கடவுளுக்குத் தெரியாதா என்ன?. அவங்க எது செஞ்சாலும் அதுல ஒரு அர்த்தம் இருக்கும். நாமதான் அஞ்ஞானிகளா கேள்வி கேக்கறோம். இந்தியாவின் சில பகுதிகள்ல பிள்ளையார் பிரம்மச்சாரியாவும், சில பகுதிகள்ல குடும்பஸ்தராவும் கருதப்படறார் என்பதையும் நினைவில் கொள்க.

சமாதானப்படுத்தறதுக்காக வந்த அப்பனும் அம்மையும் ஒண்ணாக் கலந்து ஜோதிர்லிங்க உருவெடுத்து இங்கே அருள் பாலிக்கிறாங்க. மல்லிகா என்பது பார்வதியின் ஒரு பெயர். சிவனுக்கு அர்ஜூனர்ன்னு இன்னொரு பெயரும் உண்டாம். கோயிலுக்கு பெயர் வந்த காரணக் கணக்கு சரியாப் போச்சுஇந்தக் கோயிலைப்பத்தி மஹாபாரதத்துலயும் கந்த புராணத்துலயும் சொல்லப்பட்டிருக்கு. நாயன்மார்களோட பாடல் பெற்ற சிறப்பும் இதுக்கு உண்டு. ஆதிசங்கரர் தன்னோட சிவானந்த லகிரி எனும் சமஸ்கிருத நூலை இங்கேதான் எழுதினார்ன்னும் சொல்லப்படுது.

மஹா காலேஷ்வர்- உஜ்ஜயினி- மத்தியப் பிரதேசம்
மத்தியப் பிரதேசத்தின் உஜ்ஜயினி பகுதியில் ஷிப்ரா நதிக்கரையில் இருக்கும் இந்தக்கோயிலுக்கு சைவர்களிடையே ரொம்பவும் முக்கியத்துவம் உண்டு. மனித உயிருக்கு முக்தி அளிக்கும் ஏழு தலங்களில் இதுவும் ஒண்ணு. மற்ற மூர்த்திகளைப் போல இல்லாம இங்கேயிருக்கும் சிவன் ரொம்பவே சக்தி வாய்ந்தவராம். இங்கே தெற்கு நோக்கியிருக்கும் இறைவனின் சிலை தட்சிணாமூர்த்தியின் வடிவமாகும். தந்திர மரபுகளில் சொல்லப்பட்டிருக்கும் இந்தச் சிறப்பம்சத்தை  12 ஜோதிர்லிங்கங்கள்ல இங்கே மட்டுந்தான் காண முடியுது.
தலவரலாறு: ஸ்ரீகர் என்ற சிறுவன் தானும் இறைவனைப் பூஜை செய்யணும்ன்னு ஆசைப்பட்டு, ஒரு கல்லை எடுத்து வெச்சு பூஜிச்சான். அவனோட அன்புக்குக் கட்டுப்பட்டு இறைவன் ஜோதிர்லிங்கமா உருவெடுத்து இங்கே தங்கினார்ன்னும், அவந்தி நாட்டு மக்களுக்குத் தொல்லை கொடுத்துட்டிருந்த துஷ்ணாங்கற துஷ்ட அரக்கனை பூமியிலிருந்து  வெளிப்பட்டு அழிச்சு, மக்களைக்காத்த பின்னாடி, அவங்க வேண்டுகோளை ஏத்துக்கிட்டு இங்கே தங்கினார்ன்னும் விதவிதமாக் கதைகள் சொல்லப்படுது. இந்தக்கோயிலின் மூணாவது அடுக்குல இருக்கற நாகசந்திரேஷ்வரரை நாகபஞ்சமி அன்னிக்கு மட்டுமே தரிசிக்க முடியும்ங்கறது ஒரு சிறப்பு.

ஓம்காரேஷ்வர்- சிவபுரி-மத்தியப் பிரதேசம். 
நர்மதை ஆற்றிலிருக்கும் சிவபுரிங்கற தீவுல இந்தக் கோயில் இருக்குது. இந்தத்தீவு இந்துக்களின் அடையாளமான ஓம் என்ற வடிவத்துல இருக்கறதால இறைவன் ஓம்காரேஷ்வர்ன்னு வழங்கப்படறார். தீவின் இன்னொரு பகுதியில் அமரேஷ்வர் கோயிலும் இருக்குது.
தலவரலாறு: திரிலோக சஞ்சாரியான நாரதர் ஒரு சமயம் விந்திய மலை கிட்ட, மேரு மலையை ரொம்பவும் புகழ்ந்து பேச, பொறாமைப்பட்ட விந்திய மலை தான் அதை விடப் பெரூசா வளரணும்ன்னு ஆசைப்பட்டது. ஓம்காரேஷ்வரை நோக்கித் தவமும் பூஜைகளும் செஞ்சது. “விந்தியா,.. உன் பக்தியை மெச்சினோம். காம்ப்ளான் குடிக்காமலேயே நீ வளருவாயாகன்னு சிவனும் திருவாய் மலர்ந்தருளிட்டார். அப்றமென்ன?.. “நான் வளர்றேனே மம்மின்ன்னு வளர ஆரம்பிச்ச விந்திய மலை ஒருகட்டத்துல கர்வம் தலைக்கேறி சூரிய சந்திரர்களையே வழி மறிக்க ஆரம்பிச்சது. கடைசியில் அகத்தியர் வந்து அதன் கர்வமடக்கியது தனிக்கதை.

வைத்தியநாதர்- தேவ்கட்-ஜார்கண்ட் 
ஜார்கண்ட் மாநிலத்துல தேவ்கட் பகுதியில் இருக்கும் இந்தக் கோயிலுக்கு வந்து வழிபட்டா தீராத வியாதிகளும் தீர்ந்து ஆரோக்கியம் கிடைக்கும்ங்கற நம்பிக்கையில் மக்கள் வந்து கும்பிடறாங்க. இராவணன் சிவனைக் குறிச்சு தவம் செய்யறப்ப தன்னோட பத்து தலைகளையும் ஒவ்வொண்ணாச் சீவி எறிய, பதைச்சுப் போன சிவன் இராவணனுக்கு வேண்டிய வரங்களையும் கொடுத்து தலைகளையும் திரும்ப உருவாக வெச்சார் என்பது கர்ண பரம்பரைக் கதை.
தல வரலாறு: சிவனை தன்னோடு இலங்கைக்குக் கூட்டிட்டுப் போக விரும்பிய ராவணனுக்கு தன்னோட அம்சமா ஒரு சிவலிங்கத்தைக் கொடுத்தார். கூடவே இதை இலங்கைக்கு கொண்டு போய்ச் சேர்க்கறவரைக்கும் தரையில் வைக்கக்கூடாதுன்னு நிபந்தனையும் விதிச்சார். நிபந்தனையை மீற வேண்டிய கட்டாயத்துக்கு உள்ளானதால சிவலிங்கம் மறுபடி எடுக்கமுடியாம தரையோட ஒட்டிப் பிடிச்சுக்கிச்சு. ஏமாத்தமடைஞ்ச ராவணன் தன்னோட ஒன்பது தலைகளையும் ஒவ்வொண்ணாக் காணிக்கையாக் கொடுக்க, பதறிய சிவன் காட்சி கொடுத்து அந்தத் தலைகளை மறுபடி ஒட்ட வெச்சார். ராவணனுக்கு வைத்தியம் பார்த்ததால வைத்தியநாதருமானார். இந்தத்தலம் 52 சக்தி பீடங்களில் ஒன்னாவும் கருதப்படுது. இது சக்தியின் இதயம் விழுந்த இடமாம்.

பீமாசங்கர்- சஹயாத்ரிமஹாராஷ்ட்ரா
பூனாவுக்கருகே சஹயாத்ரி மலைப்பிரதேசத்துல இருக்கற பவகிரி என்ற ஊரில், பீமரதி நதிக்கரையில் இருக்கும் இந்தக்கோயில் 18-ம் நூற்றாண்டைச் சேர்ந்தது. நாகரா கட்டடக் கலை முறையில் கட்டப்பட்ட இந்தக்கோயிலுக்கு சிவாஜி மன்னரும்,வருகை தந்து மானியங்களை அள்ளி வழங்கியிருக்கார். இந்தக் கோயிலின் கோபுரம் நாநா ஃபட்னவிஸ் என்பவரால் கட்டப்பட்டிருக்கு.
தலவரலாறு: இலங்கைப்போரில் கொல்லப்பட்ட கும்பகர்ணனின் மகனான பீம், விஷ்ணுவின் ஒரு அவதாரமான ராமரால் தன் தந்தை கொல்லப்பட்டதை தாய் மூலம் அறிஞ்சு, விஷ்ணுவை பழி வாங்கறதுக்காக பிரம்மாவை நோக்கித் தவம் செஞ்சார். பிரம்மா கொடுத்த வரங்களின் பலத்தால் மூவேழு லோகங்களையும் அடிமைப்படுத்தி, தனக்குன்னு பறக்கும் கோட்டைகளையும் ஏற்படுத்திக்கிட்டு அட்டகாசம் செய்ய ஆரம்பிச்ச பீமனை சிவன் சண்டையிட்டு முப்புரம் எரித்து அத்துடன் பீமனையும் சாம்பலாக்கி அழிச்சார். அப்போ அவர் உடம்பில் ஏற்பட்ட வியர்வைதான் பீமரதி நதியா உருவெடுத்துது. அப்றம் அனைவரின் வேண்டுகோளுக்கிணங்கி சிவன் அங்கே ஜோதிர்லிங்கமா உருவெடுத்து கோயில் கொண்டார்.

டிஸ்கி: சிவராத்திரியும் அதுவுமா ஜோதிர்லிங்கங்களைத் தரிசிச்ச புண்ணியம் வெறும் ஒரே ஒரு நாள் மட்டும் கிடைச்சா ஆச்சா??.. ரெண்டாவது பகுதியில் மீதி ஜோதிர்லிங்கங்களையும் தரிசிக்கலாம். இடுகை நீண்டுருச்சுங்கறதை நாசூக்காச் சொல்றேன். ஹி..ஹி.. :-)

டிஸ்கி-2: அசலைத்தரிசிக்க எப்ப நேரம் வரும்ன்னு தெரியலை. அதனால சமீபத்துல இங்க நடந்த ஒரு ஆன்மீக விழாவுல வெச்சிருந்த ஜோதிர்லிங்கக் கோயில்களைச் சுட்டுட்டு வந்துருக்கேன். நகல்தான்னாலும் சாமிதானே.. அவந்தான் தூண்லயும் இருக்கான் துரும்புலயும் இருக்கான்னு நம்புறவங்களாச்சே நாம. நகல்ல இருக்கற கடவுளைக் கும்புடாமயாப் போயிருவோம் :-))




18 comments:

பாச மலர் / Paasa Malar said...

வரலாற்றுப் பகிர்வுக்கு நன்றி சாரல்..

RVS said...

சம்போ மகாதேவா! தென்னாடுடைய சிவனே போற்றி! எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி!!

பக்தியுடன்,
ஆர்.வி.எஸ்.

பால கணேஷ் said...

சிவராத்திரி தினத்தன்று இந்தப் பதிவைப படித்ததன் மூலம் நிறையப் புண்ணியம் தேடிக்கிட்டேன். அருமையான பல புதிய விஷயங்களையும் தெரிஞ்சுக்கிட்டேன். (சந்திரனுக்கு 27 மனைவிகளா? ஒண்ணை சமாளிக்க நான் படற பாடு... அவ்வவ்வ!) எல்லாப் படங்களும் ரொம்பவே ரசிக்க வெச்சது சாந்தி மேடம்!

ஸ்ரீராம். said...

நீங்க டிஸ்க்கியில் சொல்லியிருபதுதான் எனக்கும் தோன்றியது. (முதல் ரெண்டு வரி..)

ஹேமா said...

சிவராத்திரி ஸ்பெஷலா.
சிவசிவா.படங்களும் அதற்குண்டான வரலாறும் வாசித்தேன். !

RAMA RAVI (RAMVI) said...

ஜோதிர்லிங்கங்கள் பற்றிய அரிய சிறப்பான தகவல்களுக்கு நன்றி.
அழகிய படங்களுடன் சிறப்பான பதிவு.

தி.தமிழ் இளங்கோ said...

வணக்கம்! பன்னிரண்டு ஜோதிர்லிங்கங்களின் தல புராணங்களை
// “விந்தியா,.. உன் பக்தியை மெச்சினோம். காம்ப்ளான் குடிக்காமலேயே நீ வளருவாயாக”ன்னு சிவனும் திருவாய் மலர்ந்தருளிட்டார். அப்றமென்ன?.. “நான் வளர்றேனே மம்மி”ன்ன்னு வளர ஆரம்பிச்ச விந்திய மலை // - என்று கிருபானந்தவாரியார் கதாகாலேட்சப நடையில் சுவையாக விளக்கியமைக்கு நன்றி!

ராமலக்ஷ்மி said...

முதல் பாகம் இப்போதுதான் பார்க்கிறேன். தல வரலாற்றினை அறியத் தந்தமைக்கு நன்றி.

நானும் நகலாக பலமுறை பெங்களூரில் பார்த்து விட்டேன். அசல் பார்க்க எல்லாம் வல்லவனே நம் எல்லோருக்கும் அருள் புரியணும்:)!

வல்லிசிம்ஹன் said...

நகலாக இருந்தாலும் வரலாறு விவரம் இருக்கிறதே. மிகவும் நன்றி சாரல்.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க பாசமலர்,

பாசமான நன்றிங்க :-)

சாந்தி மாரியப்பன் said...

வாங்க ஆர்.வி.எஸ்,

சிவனருள் உங்களுக்குக் கிடைச்சிருக்கும்ன்னு நம்பறேன் :-)

சாந்தி மாரியப்பன் said...

வாங்க கணேஷ்,

சந்திரன்... நான் ஒண்ணும் சொல்லலை. உங்க மேடத்தோட போன் நம்பர் கொடுங்களேன் :-)))

படங்களை ரசிச்சதுக்கு ரொம்ப நன்றி..

சாந்தி மாரியப்பன் said...

வாங்க ஸ்ரீராம்,

அதானே.. தினமும் அருள் கிடைச்சா வேணாம்ன்னா சொல்லப்போறோம்..

வாசிச்சதுக்கு நன்றி.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க ஹேமா,

சிவராத்திரி கழிஞ்சு ஹோலியும் வந்துட்டுப் போயாச்சு. தாமசமான பதிலுக்கு மீ மாப்பு கேட்டுக்கறேன் :-)

வாசிச்சதுக்கு நன்றி.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க ரமா,

வாசிச்சதுக்கு நன்றிங்க.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க தமிழ் இளங்கோ,

லயிச்சுப் பாராட்டியதுக்கு ரொம்ப நன்றி..

சாந்தி மாரியப்பன் said...

வாங்க ராலலக்ஷ்மி,

அசல் கிடைக்கிறவரைக்கும் நகலைப் பார்த்துக்கோன்னு அவன் சொன்னதா எடுத்துக்க வேண்டியதுதான் :-)

சாந்தி மாரியப்பன் said...

வாங்க வல்லிம்மா,

நகல்தான்னாலும் அங்கேயும் மக்கள் பக்திப் பரவசத்தோட வழிபட்டதைப் பார்க்க முடிஞ்சது.

நம்மூர்க் கோயில்கள்ல கருங்கல் மூர்த்திகளைப் பார்த்துட்டு இங்கே பளிங்குச் சிலைகளை மொத மொத பார்த்தப்ப மனசு ஒன்றலை. அப்றம் தானாச் சரியாப் போச்சு. வடிவம் எதுவாயிருந்தா என்ன?.. உள்ளுக்குள்ளே இருக்கறது இறைவந்தானேன்னு தோண ஆரம்பிச்சுருச்சு. :-))

வாசிச்சதுக்கு நன்றிம்மா..

LinkWithin

Related Posts with Thumbnails