Friday, 5 October 2012

(சதுர்த்திக்)கொண்டாட்டமும் திண்டாட்டமும்.. (2)

"ஒண்ணிலிருந்து ஒன்பது வரைக்கும் கொண்டாட்டம்..
ஒன்பதுக்குப் பின்னே பத்தாம் நாளு திண்டாட்டம்"

புள்ளையார் சதுர்த்தியின் கடைசி நாளன்னிக்கு அவர் படற பாட்டை, நகைச்சுவைப் பேரரசு, கலைவாணர் திரு. என்.எஸ்.கே அவர்கள் மட்டும் இப்ப இருந்திருந்தா இப்படித்தான் பாடியிருப்பாரோன்னு தோணுது. முதல் நாள் பேண்ட் வாத்தியம் முழங்க,"கண்பதி பப்பா மோரியா"ன்னு வீட்டுக்கு அழைச்சுட்டு வந்து ஒன்பது நாளும் விதவிதமா மோதகங்கள், கொழுக்கட்டைகள்ன்னு படைச்சு ஒரு சுத்து பெருக்க வெச்சு, பஜனை, பூஜைன்னு கொண்டாடறோம். கடைசியில் அனந்த சதுர்த்தசியன்னிக்கும் ஊர்வலமா அழைச்சுட்டுப்போயி நீர் நிலைகள்ல கரைக்கிற(???) வரைக்கும் எல்லாம் நல்லாத்தான் நடக்குது. அப்புறம்தான் இருக்குது கொடுமையே.

நம்மூர் மாதிரி களிமண்ணுல செஞ்சாலாவது சட்டுன்னு கரைஞ்சு, மண்ணுல பிறந்த பிள்ளையார் திரும்பி வந்த இடத்துக்கே போயிருவார். ஆனா, எந்தப் பகுதி பிள்ளையார் ரொம்பப் பெருசா இருக்கார், ஜொலிக்கிறார்ன்னு ஒவ்வொரு பேட்டையிலும் நடத்திக்கிற போட்டி காரணமா பிளாஸ்டர் ஆஃப் பாரீசும், பெயிண்டுகளும் களிமண்ணோட இடத்தைப் பிடிச்சுக்கிச்சு. இவையெல்லாம் தண்ணீர்ல சட்ன்னு கரையாதுன்னு இப்போல்லாம் சின்னப் புள்ளைங்களுக்குக் கூட தெரியும். பலன்,... கரைச்சுட்டு வந்த மறுநாள், அங்கங்கள் சிதைவுற்ற நிலையில் பிள்ளையார்களை கடல் அலைகள் கரையில் சேர்க்குது. பத்து நாளும் நாம கொண்டாடி, பக்தியோட கையெடுத்துக் கும்பிட்ட கடவுள் இப்படிச் சிதைந்து கிடக்கறதைப் பார்க்க முடியலை.

சமீபத்தில் மும்பையின் மாஹிம் கடற்கரைக்குப் போயிருந்தப்ப, இப்படிச் சிதைந்து கிடந்த புள்ளையார்கள் கரையோரமா ஒதுங்கிக்கிடந்தாங்க. அதுல ஒருத்தர் முழுசா, கொஞ்சம் கூடச் சேதமில்லாம அப்படியே இருந்தார். இதைப் பார்த்ததும் அவரை மறுபடியும் கடல்ல கரைச்சுரலாம்ன்னு அங்க நின்னுட்டிருந்த சில பசங்க முயற்சி செஞ்சாங்க. ஆனா, பார்க்கத்தான் முழுசா இருக்காரே தவிர, தொட்டுத் தூக்குனா பொலபொலன்னு சிதைந்து விழுந்துருவார் போல தோணுச்சு. சரி,.. ஹை டைட் சமயம்தானே. எப்படியும் ஒண்ணு ரெண்டு மணி நேரத்துல கடல் தண்ணி கரை வரைக்கும் வந்துரும். அப்ப தானா தண்ணிக்குள்ள போயிருவார்ன்னு முயற்சியைக் கை விட்டுட்டுப் போயிட்டாங்க.
ஒவ்வொரு வருஷமும் இயற்கையைக் காப்போம்ன்னு கோஷமிட்டதன் பலனா மக்கள் இப்ப கொஞ்ச காலமா காகிதக்கூழில் செஞ்சு, இயற்கை வண்ணங்கள் தீட்டப்பட்ட புள்ளையார்களை புழக்கத்தில் கொண்டார ஆரம்பிச்சுருக்காங்க. நல்ல விஷயம்தான். மும்பையில் இந்த வருஷம் TV 9 என்ற சேனல்காரங்க அவங்க பந்தலில் இயற்கைப் பிள்ளையாரை வெச்சு வழிபட்டு, கரைக்கிறதுக்காகக் கொண்டாந்துருந்ததை போன பகுதியில் சொல்லியிருந்தேன்.

முந்தியெல்லாம் பிள்ளையாருக்கு அணிவிச்ச மாலைகளை ஒரு பையில் போட்டுக்கொண்டாந்து அதையும் நீர் நிலைகள்ல எறிஞ்சுருவாங்க. இப்ப குறைந்தபட்சம், அந்த நிர்மால்யங்களை எறிஞ்சு மாசு படுத்தறதையாவது குறைச்சுக்குவோமேங்கற விழிப்புணர்வு காரணமா, விஸர்ஜனுக்கு முன்னாடியே பூ, அருகம்புல் மாலைகள்ன்னு எல்லாத்தையும் கழட்டி ஆங்காங்கே வெச்சுருக்கும் நிர்மால்ய கலசத்துல போட்டுடறாங்க. கலசம் வைக்கப்படாத இடங்களில் தன்னார்வத் தொண்டர்கள் அதைச் சேகரிச்சுக்கும் பொறுப்பை ஏத்துக்கிட்டிருக்காங்க.
மும்பையைப் பொறுத்தவரைக்கும் 'லால்பாக்'ங்கற இடத்துல இருக்கற புள்ளையார் ரொம்பவும் புகழ் வாய்ந்தவர். மொதல்ல லால்பாக்ல சின்ன அளவுலதான் ஆரம்பிச்சது இப்ப பெரூசா மும்பையின் வி.ஐ.பிக்கள் தவறாம தரிசிக்கிற அளவுக்கு ஆகிட்டார். திருப்பதி மாதிரியே இங்கியும் மணிக்கூர் கணக்கா காத்திருந்துதான் தரிசனம் செய்ய முடியும். இவருக்குக் குவியற காணிக்கைகளுக்கு கணக்கே கிடையாது. மொத்த காணிக்கை வசூல் கோடிக்கணக்குல இருக்கும். இவருக்குன்னு சொந்தமா தங்க அணிகலன்களும் உண்டு. அருள் பாலிக்கிற அந்த தங்கக்கையே கதை கதையாச் சொல்லுமே :-)
மும்பையின் ஜூஹு கடற்கரையில் கரைக்கப்படும் பிள்ளையார்களை வானத்திலிருந்தும் தரிசிக்கலாம். தனியார் விமானக்கம்பெனிகளில் பணம் கட்டிட்டா அவங்களுக்குச் சொந்தமான ஹெலிகாப்டரில் கூட்டிட்டுப் போயி சுமார் பதினஞ்சு நிமிஷத்துக்குச் சுத்திக்காமிக்கறாங்க. ஒருத்தருக்கு 3,500 வரைக்கும் வசூலிக்கறாங்க. இது கம்பெனியைப் பொறுத்துக் கொஞ்சம் கூடக்குறைய இருக்கும். வருஷாவருஷம் இந்தச் சேவையைப் பயன்படுத்தும் மக்களோட எண்ணிக்கை கூடிக்கிட்டே போகுதாம்.

இந்தப் பண்டிகை சமயம் ஏற்படும் ஒலி மாசைப் பத்திச் சொல்லியே ஆகணும். அனந்த சதுர்த்தியன்னிக்கு இருக்கறதை விட அஞ்சாம் நாளான கௌரி கணபதியன்னிக்குத்தான் இது கூடுதலா இருக்கும். இந்த வருஷம் சுமார்115 டெசிபல் வரைக்கும் போனதா செய்திகள் கவலை தெரிவிக்குது. குறைஞ்ச பட்சம் மருத்துவமனைகள் அருகிலாவது அவங்க சத்தத்தையெல்லாம் கொஞ்சம் குறைச்சுக்கிட்டிருந்தா அது மனிதாபிமானம். ஆனா, கொண்டாட்டத்தின் உச்சக்கட்டத்தில் தன்னை மறந்து இருக்கறவங்க கிட்ட அதை எதிர்பாக்க முடியுமோ?..

குடியிருப்புப் பகுதிகளில் இரவு நேர ஒலியளவு 45டெசிபலாகவும் அதுவே அமைதிப்பகுதிகள்ல 40 டெசிபல் மட்டுந்தான் இருக்கணும்ன்னு விதி. ஆனா, பட்டாசுகளும் வெடிக்கப்பட்டதால் 120லேருந்து 125 வரைக்கும் ஒலியளவு இருந்ததாம். வழக்கமான ட்ரம் பத்தாதுன்னு டீஜேயும் சேர்ந்துக்கிட்டது. நானும் பையரும் மாஹிம் போயிட்டுத் திரும்பறப்ப எங்க வண்டி ட்ராபிக் ஜாமில் மாட்டிக்கிட்டது. திடீர்ன்னு வண்டியே அதிர்றமாதிரி திடும்.. திடும்ன்னு தூக்கிப்போடுது. காதைப்பிளக்கற மாதிரியொரு சத்தம். என்னன்னு பார்த்தா விசர்ஜன் ஊர்வலத்துல டீஜேயும் உபயோகப்படுத்தறாங்க. சத்தம்ன்னாலே அலர்ஜியாகற பையரால காதுல வெச்ச கையை கால் மணி நேரத்துக்கு எடுக்க முடியலை. அந்த இடத்தைக் கடந்ததும்தான் அப்ப்பாடீன்னு மூச்சு வந்தது. நமக்கே இப்படீன்னா பிள்ளையாரின் காது என்னாச்சுதோ பாவம். மராட்டிய மக்களின் பாரம்பரிய நடனத்தின்போது உபயோகப்படுத்தற லெஸீம்களை வெச்சுக்கிட்டு அழகா ஒரு கூட்டம், ஒரே மாதிரியான காஸ்ட்யூமில் ஆடிக்கிட்டே போனதை ரசிக்க முடிஞ்சது.

எத்தனை நிறை குறைகள் இருந்தாலும் அதையெல்லாம் மறந்துட்டு சந்தோஷமா நட்புகளோடும், உறவுகளோடும் கொண்டாடறதுக்குத்தான் பண்டிகைகள். மும்பையும் இதோ மும்பையின் ஹீரோவுக்கு தற்காலிக விடை கொடுத்து அனுப்பிய கையோட அடுத்ததா வரப்போற பண்டிகையான நவராத்திரியைக் கொண்டாடறதுக்கு இப்பவே தயாராக ஆரம்பிச்சுட்டுது. 

"கணபதி பப்பா மோரியா.. புட்ச்சா வர்ஷி லௌக்கர் யா"

31 comments:

மோகன் குமார் said...

படங்கள் வழக்கம் போல் அருமை

மோகன் குமார் said...

தமிழ் நாட்டிலும் லவுட் ஸ்பீக்கரில் சவுண்டா பக்தி பாட்டு போட்டு கொல்லுவாங்க

Lakshmi said...

சாந்தி நீ சொல்லுறதெல்லாமே உண்மைதான் நம்மளால புலம்புரததவிர என்னதான் செய்ய முடுயும் இல்லியா

பால கணேஷ் said...

மண்ணில் செஞ்சுட்டிருந்த பிள்ளையார்கள் இப்போ வர்ணம் பூசறதால வர்ற விளைவுகள் படிக்கறப்பவே வருத்தத்தை தருது. லக்ஷ்மிம்மா சொன்ன மாதிரி நம்மால புலம்பத்தான் முடியுது சாரல் மேடம். படங்கள் அத்தனையும் தத்ரூபம். சூப்பர்ப்.

இராஜராஜேஸ்வரி said...

பத்து நாளும் நாம கொண்டாடி, பக்தியோட கையெடுத்துக் கும்பிட்ட கடவுள் இப்படிச் சிதைந்து கிடக்கறதைப் பார்க்க முடியலை.

கோவை2தில்லி said...

காகிதக்கூழ் உபயோகப்படுத்துவதும், நிர்மால்ய கலசமும் நல்ல விஷயங்கள்.

படங்கள் அருமை.

அமுதா கிருஷ்ணா said...

சென்னையும் இப்ப மும்பை ஆகிட்டு வருது பிள்ளையாருக்கு போட்டி தான். கல்கத்தாவில் நவராத்திரி சமயம் போன போது அங்கு துர்க்கா சிலைகளை கங்கையில் கரைத்து கொண்டு இருந்தனர். அவ்ளோ தண்ணீரிலும் கரையாமல் அலங்கோலமாய் கிடந்த அம்மன்களை பார்த்தும், மாசுபட்ட தண்ணீரினை பார்த்தும் ரத்த கண்ணீரே வந்தது. தயவு பார்க்காமல் இதை தடை செய்தால் வருங்காலத்திற்கு நல்லது.

திண்டுக்கல் தனபாலன் said...

படங்கள் (பிள்ளையார்) அசர வைக்கிறார்... அழகு... அருமை...

ராமலக்ஷ்மி said...

நல்ல பதிவு சாந்தி. பல தகவல்கள். பெங்களூரிலும் இந்தமுறை பத்து மணிக்கு மேல் ஒலிபெருக்கி, மேளம் கூடாதென தடை போட்டிருந்தார்கள்.

Sasi Kala said...

கோவிலில் இருக்க வேண்டிய சிலைகள் குப்பைமேடுகளில் வருத்தமே மிஞ்சுகிறது.

வெங்கட் நாகராஜ் said...

இப்போது நமது ஊரிலும் ஊர்வலங்கள்.... காவிரியிலும், கொள்ளிடத்திலும் கொண்டு சேர்க்கப்பட்ட பிள்ளையார் சிலைகள் பார்த்தேன் சமீபத்திய பயணத்தின் போது....

அருமையான புகைப்படங்கள்...

கோமதி அரசு said...

நல்ல பதிவு அமைதிச்சாரல், பிள்ளையார் நீரில் கரைக்கபடும் போது மனதுக்கு கஷ்டமாய் தான் இருக்கு.
களிமண்ணல் மட்டும் தான் செய்யவேண்டும் என்று சட்டம் கொண்டுவர வேண்டும்.
இந்தமுறை எங்கள் ஊரில் கலர் பிள்ளையார் கொஞ்சம் குறைச்சல்.

ஸ்வர்ணரேக்கா said...

பத்து நாளும் நாம கொண்டாடி, பக்தியோட கையெடுத்துக் கும்பிட்ட கடவுள் இப்படிச் சிதைந்து கிடக்கறதைப் பார்க்க முடியலை

--உண்மை. பார்த்தால் கஷ்ட்டமாகத் தான் இருக்கும்... ஆனாலும், கரைகிற இயற்கை பிள்ளையார், சத்தம் குறைவான பண்டிகை என்பது சிரமம் தான்.. ஒவ்வொருவரும் உணரவேண்டும்..

ஹுஸைனம்மா said...

இதன் முந்தைய பதிவு மகிழ்ச்சியா எழுதிருந்தீங்க. இதில் இருக்கும் சோகம், இயற்கை குறித்த அக்கறையைத் தெரிவிக்கிறது.

புதுமைகளின் பலன்கள், பூமராங்காக நம்மையே தாக்கும்போதுதான் பழமையின் அருமை தெரிகிறது. மரம் வெட்டுவது, துரித உணவு வகைகள், அளவுக்கதிகமான செல்ஃபோன் பயன்பாடு.... இப்படி எல்லாத்திலும் ஓரளவு மீண்டு வந்துகிட்டிருக்கோம். மாறித்தானே ஆகணும்!! :-)))))

ஸ்ரீராம். said...

பிள்ளையாரை நீரில் கரைக்கும் இந்த வைபவம் வேதனையைத் தருவது உண்மைதான். சிலர் கட்டையால் அடித்து உள்ளே தள்ளி... பக்தி என்பது ஷோ பிசினஸ் ஆகி விடுகிறது. எப்பொழுது மாறுமோ?

வை.கோபாலகிருஷ்ணன் said...

அழகிய படங்கள். அற்புதமான கருத்துக்கள். நிலைமை மாறத்தான் வேண்டும். எப்போ மாறுமோ? ;(

அமைதிச்சாரல் said...

வாங்க மோகன் குமார்,

படங்களை ரசித்ததோடு இடையிடையே சொல்லியிருக்கும் செய்திகளையும் கண்டுக்கிட்டா நல்லது :-)

லவுட் ஸ்பீக்கர் :-)))

நன்றி.

அமைதிச்சாரல் said...

வாங்க லக்ஷ்மிம்மா,

குறைஞ்ச பட்சம் நம் வீட்டளவிலாவது மாற்றங்களைக் கொண்டாரலாம்மா.

வரவுக்கும் கருத்துக்கும் நன்றி.

அமைதிச்சாரல் said...

வாங்க கணேஷ்,

வரவுக்கும் ரசித்தமைக்கும் நன்றி.

அமைதிச்சாரல் said...

வாங்க ராஜராஜேஸ்வரி,

வரவுக்கு நன்றிங்க.

அமைதிச்சாரல் said...

வாங்க ஆதி,

வரவுக்கும் படங்களை ரசித்தமைக்கும் நன்றி.

அமைதிச்சாரல் said...

வாங்க அமுதா,

கரையாமக் கிடக்கிற தெய்வச்சிலைகளை அடித்தும் உதைத்தும் சிதைச்சு வலுக்கட்டாயமாக் கரைக்கிறதைப் பார்க்கறப்ப 'ச்சே'ன்னு ஆகிருதுங்க. இதுக்குப் பதிலா கரையும் பொருட்களாலயே சிலைகளைச் செய்யலாமில்லே. மன உளைச்சலாவது மிஞ்சும்.

வரவுக்கும் கருத்துக்கும் நன்றிங்க.

அமைதிச்சாரல் said...

வாங்க தனபாலன்,

வரவுக்கும் படங்களை ரசித்தமைக்கும் நன்றி.

அமைதிச்சாரல் said...

வாங்க ராமலக்ஷ்மி,

நல்ல தகவல். இரவு பத்து மணி என்பது குழந்தைகள், வயதானவர்கள் ஓய்வெடுக்கும், மாணவர்கள் படிக்கிறதுக்காக உக்காரும் சமயம். இந்தச் சமயத்தில் வேண்டாத ஒலி அவங்களுக்குத் தொந்தரவாத்தான் இருக்கும். தடை செஞ்சது ரொம்ப நல்ல விஷயம்.

வரவுக்கும் கருத்துக்கும் நன்றி.

அமைதிச்சாரல் said...

வாங்க சசிகலா,

அழகாச் சுருக்கமாச் சொல்லிட்டீங்க :-)

வரவுக்கும் கருத்துக்கும் நன்றி.

அமைதிச்சாரல் said...

வாங்க வெங்கட்,

கிட்டத்தட்ட இந்தியா முழுமைக்கும் இப்ப இந்த பாணியில்தான் கொண்டாடப்படுதுன்னு நினைக்கிறேன்.

வரவுக்கும் ரசித்தமைக்கும் நன்றிங்க.

அமைதிச்சாரல் said...

வாங்க கோமதிம்மா,

அந்தக்காலத்துல பச்சரிசி மாவால கூட வீட்லயே பிள்ளையார் பிடிச்சு சதுர்த்தி கொண்டாடி முடிச்சதும், நீர் நிலைகள்ல கரைச்சுருவாங்கன்னு கேள்விப் பட்டிருக்கேன். இயற்கையிலிருந்து பிறந்த பொருள் மறுபடியும் இயற்கைக்கே சேதப்படாமப் போய்ச்சேர்ந்தாத்தானே நல்லது.

வரவுக்கும் கருத்துக்கும் நன்றி.

அமைதிச்சாரல் said...

வாங்க ஸ்வர்ணரேக்கா,

கொஞ்சம் கொஞ்சமா மக்கள் உணர ஆரம்பிச்சிருக்கறதே முதல் படின்னுதான் எடுத்துக்கணும்.

வரவுக்கும் கருத்துக்கும் நன்றி.

அமைதிச்சாரல் said...

வாங்க ஹுஸைனம்மா,

ரொம்பச் சரியாச்சொன்னீங்க.

வரவுக்கும் கருத்துக்கும் நன்றி.

அமைதிச்சாரல் said...

வாங்க ஸ்ரீராம்,

வரவுக்கும் கருத்துக்கும் நன்றி.

அமைதிச்சாரல் said...

வாங்க வை.கோ ஐயா,

வரவுக்கும் படங்களை ரசித்தமைக்கும் நன்றி.

LinkWithin

Related Posts with Thumbnails