Wednesday, 13 January 2016

பிரியாத வரம் வேண்டும்..

மாதாந்திர ஷாப்பிங்கை முடித்துக்கொண்டு டி-மார்ட்டிலிருந்து வெளியே வந்து கொண்டிருந்தோம். வழியில் நிற்பவர்களை இடித்துத்தள்ளாத குறையாக கண்ணீருடன் ஓட்டமும் நடையுமாக உள்ளே வந்து கொண்டிருந்தாள் அந்த இளவயதுப்பெண். வந்தவள் உள்ளே பில் போடுமிடத்தின் அருகே நின்று கொண்டிருந்த கணவனிடம் நேராகச்சென்று, “புள்ளையைக் காணலைங்க. பக்கத்துலதான் நின்னுட்டிருந்தா. ஒரு செகண்ட் இந்தப்பக்கம் திரும்பிட்டு அந்தப்பக்கம் பார்த்தா காணலை” என்று அழுது கொண்டே கூறினாள். 

நல்லவேளை,.. அவள் அளவுக்கு கணவன் பதட்டப்படவில்லை. பதறாத காரியம் சிதறாது என்று பழமொழியே இருக்கிறதே. “இங்கேதான் எங்கியாச்சும் நிப்பா. வா ஆளுக்கொரு பக்கமா தேடிப்பாக்கலாம்” என்று நிதானமாகக்கூறியபடி கடையின் உள்ளே சென்று தேட ஆரம்பித்தான். அவள், வெளிப்பக்கமாக குழந்தையின் பெயரைக்கூவி அழைத்தபடி தேட ஆரம்பித்தாள். டி-மார்ட்டின் வெளிப்பக்கத்திண்ணையில் ஐஸ்க்ரீம் ஸ்டால், மிட்டாய்க்கடை இரண்டும் உண்டு. போதாக்குறைக்கு திண்ணையிலிருந்து இறங்கும் படிக்கட்டுகளின் அருகே பலூன், பொம்மை இத்யாதிகளை விற்கும் கடையும் உண்டு. குழந்தை அங்கே கூட வேடிக்கை பார்த்துக்கொண்டு நிற்க வாய்ப்பு உண்டே. 

இந்த களேபரங்களையெல்லாம் அப்போதுதான் கவனித்த காவலாளி, “அந்த கண்ணாடிக்கதவு கிட்ட ஒரு குழந்தை ரொம்ப நேரமா நிக்குது. உங்க குழந்தையான்னு பாருங்க” என்று கை காண்பித்தார். திரும்பிப்பார்த்த அந்தத்தாய், ஓடிச்சென்று குழந்தையை அள்ளி அணைத்துக்கொண்டு கதறி விட்டார். பாவம்.. இந்தப் பதட்டங்கள் எதுவுமே பாதிக்காத குழந்தை பேந்தப்பேந்த விழித்துக்கொண்டிருந்தது. அழுதழுது மயக்கமடையும் நிலைக்கே அந்தத்தாய் வந்து விட்டாள். குழந்தையை வாங்கிக்கொண்ட கணவன் மனைவியை மெல்லத்தேற்றி சமாதானப்படுத்தினான். சற்றே ஆசுவாசமடைந்து ஃபேமிலி ரியூனியனெல்லாம் நல்லபடியாக முடிந்தபின் அப்பாவும் அம்மாவும் குழந்தைக்கு மாறி மாறி ஐஸ்க்ரீம் ஊட்டி பாசத்தைப் பொழிந்தார்கள். 

“அப்பா, அம்மான்னு ரெண்டு பேரும் வந்திருக்கீங்க. பிள்ளையை கூட்டத்துல பத்திரமாக் கூட்டிட்டுப்போகணுமேங்கற பொறுப்பு கொஞ்சங்கூட இல்லாம, பாய்ஞ்சு பாய்ஞ்சு ஷாப்பிங் செஞ்சு ஆளுக்கொரு பக்கமா வேடிக்கை பார்த்து என்னைய தொலைச்சுட்டு இப்ப கொஞ்சுறீங்களா?. போகட்டும்.. எங்க போய்த்தொலைஞ்சன்னு முதுகுல சாத்தாம விட்டாங்களே. அந்த வரைக்கும் பாசப்பொழியலையாவது அனுபவிப்போம்” என்று அந்தக்குழந்தை நினைத்திருக்கலாம். யார் கண்டது? :-))

அவர்கள் என்னவோ குழந்தையும் ஐஸ்கிரீமுமாக செட்டில் ஆகிவிட்டார்கள். நாங்கள்தான் வரும் வழியெல்லாம் விவாதித்துக்கொண்டே வந்தோம்.

“கையைப்பிடிச்சுக்க முடியாத அளவுக்கு பைகள் இருந்திருந்தா, குறைஞ்ச பட்சம் அம்மாவோட புடவை அல்லது துப்பட்டாவைப்பிடிச்சுக்கிட்டு கூடவே வான்னு சொல்லிக்கொடுத்திருக்கணும். (என் குழந்தைகள் சின்னவர்களாக இருந்தபோது மார்க்கெட் கூட்டிப்போக நேர்ந்த பொழுதுகளில் நான் அப்படித்தான் செய்தேன்)

“அதெதுக்கு,.. சின்னப்புள்ளைக்கு என்ன தெரியும். ஒருத்தருக்கு ரெண்டு பேரா வந்திருக்காங்க இல்லே. பெத்தவங்கதான் பத்திரமாக் கூட்டிட்டுப் போகணும்”

நல்லவேளை,.. "உன்னால்தான் குழந்தை தொலைஞ்சுது. கொஞ்சங்கூடப் பொறுப்பில்லை உனக்கு" என்று ஒருவரையொருவர் மாறிமாறிக் குற்றம் சாட்டி பொது இடத்தில் சண்டை போட்டுக்கொள்ளாமல் இருந்தார்களே என்று நிம்மதிப்பட்டுக்கொண்டேன்.

ரயில் மற்றும் பஸ் நிலையங்களில் 'காணவில்லை' போஸ்டரில் சிறு குழந்தைகளின் படங்களைக்காண நேரும்போது சற்று அதிகமாகவே வேதனையாக இருக்கும். பாவம், குழந்தையைத் தொலைத்து விட்டு என்ன மனக்கஷ்டப்படுகிறார்களோ!! குழந்தை சீக்கிரமே கிடைத்து விடட்டும் என்று தன்னையறியாமலேயே மனதுக்குள் தோன்றும். இந்தியாவில் ஒரு வருடத்திற்கு ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட குழந்தைகள் காணாமற்போவதாக புள்ளி விவரம் சொல்கிறது. இதில் எத்தனை பேர் தனது குடும்பத்துடன் மறுபடி இணைகிறார்கள் என்று பார்த்தால் வேதனைதான் மிஞ்சும்.

பொதுவாகவே திருவிழாக்கள், கண்காட்சி போன்ற கூட்ட நெரிசல் அதிகமிருக்கும் இடங்களில், ஏதாவது குழந்தை தொலைந்து போவதும் அப்பா அம்மா திக்குத்தெரியாமல் தேடித்தேடி இளைப்பதும் நடப்பதுதான். நல்ல மனம் கொண்டவர் யாராவது, குழந்தையை போலீஸ் கட்டுப்பாட்டு அறையில் ஒப்படைத்து விட்டுச் சென்று விட ஐந்து நிமிடத்துக்கொரு முறை பிள்ளையின் உடை மற்றும் அங்க அடையாளங்களைச்சொல்லி அறிவிப்பு அலறிக்கொண்டே இருப்பது சகஜம். கூட்டத்தின் களேபரக்கூச்சலையும் தாண்டி பெற்றோர் காதில் அறிவிப்பு விழுந்து, குழந்தையைக் கூட்டிக்கொண்டு போவது வரை அது அழுது அழுதே ஐஸ்க்ரீம், சாக்லெட் என்று சாதித்துக்கொண்டிருக்கும். ஒரு பக்கம் பெற்றவர்களும் உற்றவர்களும் பிள்ளையைத்தேடி இற்று இடியாப்பமாகிக்கொண்டிருக்க இன்னொரு பக்கம் பிள்ளையும் ஏங்கித்தவித்துக் கொண்டிருப்பது உண்டுதானே?!

சோகங்களில் மிகப்பெரிது புத்திரசோகம் என்பார்கள். ஆனானப்பட்ட தசரதரே ராமனை இழந்து புத்திர சோகத்தால் வாடினாரே. கூட்ட நெரிசல் உள்ள இடங்களில் செல்லும்போது யாராவது ஒருத்தர் பிள்ளையைப் பத்திரமாகப் பார்த்துக்கொள்ளும் பொறுப்பை ஏற்றுக்கொள்ள வேண்டும். இங்கே குறிப்பிட்ட நிகழ்வில் ஏதோ.. குழந்தையும் சமர்த்தாக இருந்து, வாசலிலேயே நின்றும் கொண்டதால் திரும்பக்கிடைத்தது. இதுவே, வால்தனமுள்ள குழந்தையாயிருந்தால்!!. அதுவும் படிக்கட்டில் இறங்கி சாலைக்கு வந்திருந்தால் என்னவாகியிருக்கும்? குழந்தை பக்கத்தில் நிற்கிறதா இல்லையா என்று கூடக் கவனிக்காமல் இப்படியா அலட்சியமாக இருப்பது? ஏதேதோ காரணங்களால் சின்ன வயசில் பிரிந்து ஆளுக்கொரு திசையில் பிரிந்து போய், ஒவ்வொரு விதமாக வளர்ந்தபின் மறுபடி குடும்பப்பாட்டு பாடிக் கூடிக்கொள்ள வாழ்க்கை என்ன இரண்டரை மணி நேர சினிமாவா? ஒண்ணும் புரியலை.. என்னவோ போங்க. 

9 comments:

ஹுஸைனம்மா said...

உண்மைதான், ஆனாலும் கண்மூடித் திறக்கும் வேளைக்குள் குழந்தைகளும் சி(ஜெ)ட்டா பறந்துடுறாங்க... ரொம்ப கவனமாத்தான் இருக்க வேண்டிருக்கு!! என் சின்னவன் இந்த மாதிரிதான்... ரெண்டு வாட்டி (மட்டும்) காணாமப் போய் கிடச்சிட்டான்! :-( :-)

இதுக்காகவே pram-ல் வச்சு கூட்டிட்டு போவேன், அதுவும் எத்தனை நாளைக்குத் தாங்கும்? அப்புறம் கொஞ்சம் விபரம் தெரிந்த பிறகு, ”காணாமப் போனா தேடவே மாட்டேன்”ன்னு மிரட்டி வச்சிருந்தேன்!! அவ்வ்வ்வ்வ்....

அதிகக் கூட்டமிருக்கும் மக்காவுக்கு உம்ரா போயிருந்தப்போ, சின்னவனுக்கு நெஞ்சில் (அதற்கென்று உள்ள)நீண்ட பெல்ட் மாட்டி, அதை என் கையில் மாட்டிருந்தேன்!! வேற வழியில்லை... தொழும்போது ஓடிடக்கூடாதே!!

//அம்மாவோட புடவை அல்லது துப்பட்டாவைப்பிடிச்சுக்கிட்டு கூடவே வா//

அக்கா, வெளியே போனா கையை - சேலையை புடிச்சுட்டு வர்ற அளவு நல்ல புள்ளங்க காணாமப் போக மாட்டேங்களே... அத்துணூண்டு இருக்கும்போதே, ‘தனி மனித சுதந்திரம்’ல வேணுங்கிறாங்க... :-(

ஓடியாடும் வயசுல பிள்ளைங்க இருந்தா ரொம்ம்மபவே கவனமாருக்கணும் என்பது மட்டும் உண்மை!!

வை.கோபாலகிருஷ்ணன் said...

பிரியாத வரம் வேண்டும்.. என்ற தலைப்பும், படத்தேர்வும், யோசிக்க வைத்து அனைவருக்கும் ஓர் விழிப்புணர்வு ஊட்டிடும் அமைதியான இந்தக் கட்டுரையும் மிகச்சிறப்பாக உள்ளது. பகிர்வுக்குப் பாராட்டுகள் + நன்றிகள்.

அப்பாவி தங்கமணி said...

Scary, but eye opener

மாதேவி said...

பிரியாதவரம் தலைப்பு அருமை.

பெற்றோரில் ஒருவர் குழந்தையை பார்த்துக்கொள்ள வேண்டும். அதைவிட வேறுஎன்ன முக்கியவேலை.

கவிஞர்.த.ரூபன் said...

வணக்கம்

கதையும் அருமையும்... தலைப்பும் அருமை வாழ்த்துக்கள்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

வல்லிசிம்ஹன் said...

ஒருவர் ஷாப்பிங்க் செய்யட்டும் . ஒருவர் குழந்தையைப் பார்த்துக்கட்டும்.
ஷிஃப்ட் முறையில வேணாலும் ஷாப்பிங்க் செய்யட்டும். மனம் கலங்குகிறது. அதுவும் தீமைகள் மலிந்த சமூகத்தில் இன்னும் எத்தனை ஜாக்கிரதை யாக இருக்கணும்.
எங்க குழந்தைகள் வளருகம் காலத்தில் இந்த மாதிரிக் கஷ்டப்பட்டதில்லை. என் காலை விட்டு நகர மாட்டார்கள். பாவம் அந்தப் பாப்பா.

ராமலக்ஷ்மி said...

விழிப்புணர்வைக் கோரும் அவசியமானதொரு பகிர்வு. சிலரின் இதுபோன்ற பதட்டம் அளிக்கும் அனுபவங்களை அறிந்திருக்கிறேன். குழந்தைகள் மேல் எப்போதும் கவனம் இருக்க வேண்டும்.

கரந்தை ஜெயக்குமார் said...

தமிழர் திருநாள் வாழ்த்துக்களை
மகிழ்வோடு நவில்கின்றேன்
கனிவோடு ஏற்றருள்வீர்

'பரிவை' சே.குமார் said...

நல்ல பகிர்வு அக்கா...
தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் தமிழர் திருநாளாம் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்.

LinkWithin

Related Posts with Thumbnails