நெல்லை மண்ணுக்கேயுரிய மண்வாசனையுடன் எழுதும் எழுத்தாளர்களில் ஒருவரான திரு. நாறும்பூநாதன் அவர்களுக்கு கோவில்பட்டியின் புகழ்பெற்ற எழுத்தாளர்கள் வரிசையிலும் மிக முக்கிய இடமுண்டு. "கனவில் உதிர்ந்த பூ, ஜமீலாவை எனக்கு அறிமுகப்படுத்தியவன், இலை உதிர்வதைப்போல" போன்ற சிறுகதைத்தொகுப்புகளையும், "கண் முன்னே விரியும் கடல், யானைச்சொப்பனம்" என்ற கட்டுரைத்தொகுப்புகளையும், வெளியிட்டுள்ளார். இவர், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் திருநெல்வேலி மாவட்டத் தலைவருமாவார். எனது கவிதைத்தொகுப்பான "சிறகு விரிந்தது" பற்றி அவரது மதிப்புரையை இங்கே பகிர்ந்து கொள்கிறேன்.
சாந்தி மாரியப்பனின்"சிறகு விரிந்தது"(கவிதைத் தொகுப்பு )
---------------------------------------------------------
கடந்த ஜனவரி மாதமே சென்னை புத்தகக்கண்காட்சியில் வாங்கிப் படித்து விட்டேன் என்றபோதிலும், உடனடியாக அபிப்பிராயம் சொல்லாமல் காலம் தாழ்த்தி விட்டேன்.
இவரது நிழற்படங்களை ரசித்த எனக்கு, தற்போது தான் கவிதைகளை வாசிக்க நேரம் கிடைத்தது. திருநெல்வேலியில் பிறந்து (சரிதானா..?) தற்போது மும்பையில் வசிக்கும் சாந்தி மாரியப்பன், அவ்வப்போது நெல்லை பாஷையில் பின்னூட்டங்கள் இடுவார். அவரது முதல் கவிதை தொகுப்பு இது.
"கால் தடம் பதியாப்பாதையெனவும்
எழுதப்படாத வெற்றுக் காகிதமெனவும்
முன் நீண்டு கிடக்கிறது இன்றைய தினம்"
என்றொரு கவிதை துவங்குகிறது. பல்வேறு எதிர்பார்ப்புகளை தெளித்து விட்டு, இறுதியில்
"அற்புதமானதாகவோ
சாதாரணமாகவோ
ஏதேனும் ஒரு கிறுக்கலையாவது
பரிசளிப்பது மிக நன்று
அதை வெறுமையாகவே விட்டு செல்வதை விட.."
என்று அற்புதமாக முடித்திருக்கிறார்.
கள்ளிப்பால் குடித்த சிசுவொன்றின் சன்னமான குரல் இன்னொரு கவிதையில் ..
"உணவென்று நம்பி அருந்திய பால்
சுரந்தது கள்ளியிலிருந்தென்று அறியுமுன்னே
உறக்கம் கொண்டு விட்டோம்
கள்ளித்தாய் மடியிலேயே
பெற்றவள் முகம் கண்ட திருப்தியினூடே
அறுக்கிறதொரு கேள்வி
என் முகம் அவள் பார்த்த
தருணமென்றொன்று இருந்திருக்குமா"
என்று கேள்வி பெற்றவளுக்கு மட்டும் அல்ல, சமூகத்திற்கும் தான்.
இவரது கவிதைக்குள் சஞ்சரிக்கும்போது, சில வரிகளில் கடக்க முடியாமல் மனம் நங்கூரமிட்டு அங்கேயே நின்று விடுகிறது.
உதாரணத்திற்கு...
"சட்டைப் பையைத்துழாவும் கைகள்
வெளிக்கொண்டு வருவதெலாம்
ஏதோவொரு காகிதமாகவும்
கைக்குட்டையாகவும்
இருக்கும்போதெல்லாம் .."
என்ற வரிகள் நம்மை வேறொரு நினைவுக்கு திசை திருப்பி விடுவது தற்செயலானதா அல்லது இவரது கவிதையின் இயல்பா என்று தெரியவில்லை.
"துரத்தித்திரிந்த தும்பிகளையும்
பூவரச இல்லை பீப்பியையும்
நினைவுகளிலிருந்து மீட்டெடுத்து
விவரிக்கும்போது
பனையோலைக் காற்றாடிகளுடன்
ஓட ஆரம்பித்திருக்கிறோம் நாங்கள்
சென்ற தலைமுறையின்
மனதெங்கும் அப்பிக்கிடக்கும்
செம்மண் புழுதியில்.."
என்று பால்யத்தின் நினைவுகளை மீட்டெடுத்து, கணினியில் உழலும் கூண்டுக்கிளிகளை பார்த்து நகைக்கிறார்.
"பூனைப்பாதம் வைத்துப் பின் வந்து
மெல்லக் கண்பொத்தி
கன்னம் கடித்த தருணங்களில்
சீறிச்சினந்ததை பொருட்படுத்தாமல்
சில்லறையாய் சிதற விடும் சிரிப்பால்
தண்ணீர் பட்ட பொங்கிய பாலாய்
அமிழ்த்தி விடுகிறாய் என் மனதை"
என அன்பின் மகத்துவத்தை வெளிப்படுத்தும் கவிதை உச்சம்..!
ரயில் விளையாட்டு விளையாடாத குழந்தைகள் உண்டா என்ன ?
கி.ரா.வின் கதவு கதையை நினைவுபடுத்தும் கவிதை இவரது"ரயிலோடும் வீதிகள்".
"அலுத்துப்போன கடைசிப்பெட்டி
சட்டென்று திருப்பிக்கொண்டு இஞ்சினாகியதில்
வேகம் பிடித்த ரயிலில்
இழுபட்டு அலைக்கழிந்து வந்தது
முன்னாள் இன்ஜின்
வலியில் அலறிக்கொண்டு"
என்று வாழ்வின் அவலங்களை சற்றே மறந்து சிரிக்க வைக்கிறார்.
இவரது நிழற்படங்களை போலவே, நுட்பமான வாழ்வின் பதிவுகளை கவிதைகளில் பதிவு செய்திருக்கிறார். இவர்"வல்லமை"என்ற மின்னிதழின் ஃப்ளிக்கர் குழுமத்தின் பொறுப்பாசிரியர்."அமைதிச்சாரல்"மற்றும்,"கவிதை நேரம்"போன்ற வலைத்தளங்களில் தொடர்ந்து எழுதி வரும் சாந்தி மாரியப்பன் தொடர்ந்து அடுத்தடுத்து தொகுப்புக்கள் கொண்டு வர வாழ்த்துகிறேன்!
மதிப்புரைக்கு நன்றி திரு. நாறும்பூநாதன் அண்ணாச்சி.
"சிறகு விரிந்தது" கவிதைத்தொகுப்பை ஆன்லைனில் வாங்க, சுட்டியைச் சொடுக்குங்கள்.
http://aganazhigaibookstore.com/index.php?route=product%2Fproduct&manufacturer_id=12&product_id=1802
நேரடியாகச் சென்று வாங்க விரும்பும் நண்பர்கள் சென்னையிலிருக்கும் கடைக்கு விஜயம் செய்யலாம்.
முகவரி:
AGANAZHIGAI - THE BOOK STORE
390 ANNA SALAI, KTS COMPLEX,
SAIDAPET (OPP. BUS STAND)
CHENNAI - 600 015 .
Phone: 91 44 4318 9989 / 91 44 999 454 1010 / 91 44 988 407 5110
aganazhigai@gmail.com
1 comment:
அருமையான கவிதைகளை
அடையாளம்காட்டி
மிக மிக அருமையான செய்த
விமர்சனம்தனை
பதிவாக அறியத் தந்தமைக்கு
மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்
சாதனைகள் தொடர வாழ்த்துக்கள்
Post a Comment