ஊரெல்லாம் வீடுகளுக்கு வெள்ளையடிக்கவும், கூரை மாத்தவும், இடிஞ்ச மண்சுவர்களை எடுத்துக்கட்டவும், பசையுள்ள பார்ட்டிகள் ஓடுமாத்தவுமா, அல்லோலகலப்பட்டுக்கிட்டு இருக்கு. 'ம்.. பொங்க வந்தாச்சுது.. தை பொறந்தா வழி பொறக்கும்ன்னு சொலவடை உண்டு,.. நமக்குத்தான் எப்ப பொறக்கும்ன்னு தெரியலை'.. தலையில் வெயிலுக்காக போட்டிருந்த முக்காட்டை இழுத்து விட்டுக்கொண்டு, மாட்டுக்கு புல்லறுத்துக்கொண்டிருந்தாள் நல்லம்மா ஆச்சி.
'தீபாவளிக்கு செஞ்ச சீர் பத்தாது,.. மாப்பிள்ளைக்கு போடறதா சொன்ன கைச்செயினை போடலை'ன்னு சாட்டுச்சொல்லி மகள் செவந்தியை அவ மாமியாவீட்டுலேர்ந்து திருப்பியனுப்புனதுல இருந்து, ஆச்சியின் வீட்டுல சந்தோஷமே காணாம போயிடுச்சு..
'மக வாழணும்ன்னு எண்ணமிருந்தா, பாக்கி சீரையும், பொங்கச்சீரையும் நல்லா செஞ்சு, அவள இங்க கொண்டுவிடுங்க. இல்லின்னா,.. உங்க மகளை நீங்களே வெச்சு அழகுபாருங்க'.. மாமியார் கொட்டிவிட்டுப்போன அமிலவார்த்தைகள் அடிக்கடி ஞாபகம் வந்து, அவர்களை இம்சித்துக்கொண்டிருந்தன.
'இருந்தா செய்யமாட்டோமா??.. வெச்சிக்கிட்டா வஞ்சகம் பண்றோம். காடுகரை வெளைஞ்சாலாவது அவள கரையேத்திடலாம். இங்க மழை பெஞ்சும் கெடுக்குது.. பேயாமலும் கெடுக்குது. கைகொடுத்துட்டிருந்த பால்மாடுகள்ல ஒண்ணு மழையில நோய்வந்து செத்துப்போச்சுது... ஆத்தா இப்படி ஒரேயடியா சோதிச்சா மனுசன் எவ்வளவுதான் தாங்குவான்!! ம்ம்.. விதிவிட்ட வழி" தனக்குத்தானே புலம்பியவாறு, மெதுவாக கையை ஊன்றி எழுந்தவள் புல் சேகரித்து வைத்திருந்த கடவப்பெட்டியை இடுப்பில் வைத்துக்கொண்டு வீட்டை நோக்கி நடந்தாள்.
'யாத்தோ.. புல்லு கொண்டாந்துட்டியா?? கொண்டா.. கொண்டா" என்றபடி நழுவும் நிஜாரை கையில் பிடித்துக்கொண்டு ஓடிவந்தான் பாண்டி.
"ஏலேய்.. ஒன்னோட ஆட்டுக்கு குடுக்கத்தான், பொட்டி நெறைய புல்லுகொண்டாந்திருக்கோமாக்கும். அவனுக்கு ரெண்டு வாழப்பழத்தோல பிச்சிப்போடு போதும்.. அளவுக்கு மேல தின்னு ஊதிக்கிட்டே போறான்"
" ம்க்கூம்.. நீ குடுக்கலைன்னா, அவன பட்டினி போட்டுடுவேனாக்கும்.. செவனு வீட்டு பொட்டிக்கடை முன்னாடியில்ல அவன கெட்டிப்போட்டுருக்கேன். அங்க அவனுக்கு விருந்தே கிடைக்குது தெரியுமா!!"
"யெய்யா.. ரொம்பத்தான் கோவிச்சுக்காதே.. அம்புட்டையும் அள்ளிப்போட்டுடாதே.. தின்னதைவிட அவன் சிந்தறதுதான் கூடுதலாருக்கு.. ஏ அய்யா... இந்த அகத்திக்கொழையையும் கொண்டுபோயி கொடு"
வாங்கிக்கொண்டு சிட்டாகப்பறந்தான் செவனுவின் வீட்டுக்கு. வீட்டையொட்டி ஒரு பொட்டிக்கடை.. அதன்முன் கம்பத்தில் கட்டப்பட்டிருந்த ஆட்டுக்குட்டி பாண்டியைக்கண்டதும் துள்ளிக்குதித்தது. ஓடிச்சென்று அதன் முகத்தோடு முகம்வைத்து செல்லம் கொஞ்சியவன், அகத்திக்குழையை அதற்கென கட்டப்பட்டிருந்த கயிற்றில் தொங்கவிட்டுவிட்டு புல்லை சின்னப்பெட்டியில் பரப்பி வைத்தான்.
"ஏது!!.. உனக்கு பசிக்கலையா??... திங்காம சும்மா மோந்து பாத்துக்கிட்டிருக்கே!!"
"அது இப்பத்தான் ஒரு சருவம் நிறைய நீச்சத்தண்ணி குடிச்சுட்டு நிக்குது. வயித்தைப்பாரு.. பைப்படி வீட்டு மாமாவோட தொப்பை மாதிரி..."
கடைக்குள்ளிருந்து சொன்ன செவனுவுடன் சேர்ந்து இவனும் சிரித்தான். ரெண்டுபேருக்கும் பள்ளிக்கூடம் போற நேரம்தவிர 'வீரா'.. அதான்,.. அந்த ஆட்டுக்குட்டியுடந்தான் பொழுதுபோக்கே. பாண்டியின் வீட்டு ஆடுதான் என்றாலும், ரெண்டுபேரும் சந்திக்க ஒரு முகாந்திரம் வேண்டும் என்பதாலும்.. பெட்டிக்கடையிலிருந்து வீசப்படும் பழத்தொலிகள் அதற்கு உணவாக இருக்கும் என்பதாலும் இப்படி ஒரு ஏற்பாடு. ரெண்டுவீட்டு சாப்பாட்டையும் நல்லா தின்னு இப்பவே ஒரு முழுஆடு அளவுக்கு அதன் வளர்த்தி இருந்தது.
மெதுவாக அவன் வீட்டுக்கும் பொங்கல் வந்தது.. வெள்ளையடித்த சுவர்கள், ஓட்டை உடைசலெல்லாம் அடைக்கப்பட்ட புதுஓலை வேய்ந்த கூரை, குண்டுகுழிகளையெல்லாம் சிமிண்ட் வைத்து பூசி பாவப்பட்ட தரை.. என்று எங்கும் புத்தம்புதிதாக பார்க்கப்பார்க்க , அவனுக்கு பரவசமாக இருந்தது. 'தீவாளி வந்து எல்லாத்தையும் அழுக்காக்கிட்டு போயிடுது... பொங்கல் வந்தாத்தான் சுத்தமா இருக்கு. அடிக்கடி பொங்கல் வந்தா எப்படியிருக்கும்??!!' கரும்பின் இனியசுவை அடிநாக்கில் இன்னும் தித்திப்பாக நினைவிருந்தது.
அன்றும் பள்ளிக்கூடத்துக்கு போய்விட்டு வீடுதிரும்பியவன், வீட்டில் புதுவிதமான சந்தோஷ அலைகளை உணர்ந்தான். "ஆத்தா கண்ண தொறந்துட்டாப்பா!!!.. உங்க அக்காவோட மாமியா சேதியனுப்பியிருக்கா.. 'சீரு செனத்தி எதுவும் வேண்டாம்.. பொங்கலுக்கும் உங்களாலமுடிஞ்சதை மட்டும் செஞ்சு எங்கவீட்டு மகாலச்சுமிய அனுப்பிவையுங்க'ன்னு ஆளு வந்து சொல்லிச்சு. ஆத்தாவுக்கு வேண்டுதலை நிறைவேத்தணும். ஏங்க!!.. மாட்டுப்பொங்க கழிஞ்ச மறுநாள், குலதெய்வக்கோயிலுக்கு போலாம். எல்லோருக்கும்..., முக்கியமா சம்பந்த ஊட்டுக்காரங்களுக்கு மறக்காம சொல்லியனுப்பிடுங்க" அம்மாவின் குரலில் தொனித்தது, சந்தோஷமா.. நிம்மதியா!!
"திடீர்ன்னு எப்படி மனசு மாறினாங்களாம் அந்த கல்நெஞ்சுக்காரங்க"
"பெரியவங்களை அப்படில்லாம் சொல்லக்கூடாதுய்யா.. என்னமோ,.. அவளோட மவளை கெட்டிக்குடுத்த எடத்துலயும், ஒரே தும்பந்தானாம்.. படாதபாடு படுத்தறாளாம் ராட்சசி. ஊரான் பொண்ணை பாடா படுத்தின பாவத்துக்குத்தான் தம்பொண்ணு அனுபவிக்கிறாளோ!!.. உங்கக்கா பாவந்தான் அவளை தொடருதோன்னு மனசுல ஒரே கிலி. அந்தப்பொண்ணு, மகளிர் போலீசுக்கு போயிடுவேன்னு அவ மாமியாளை மிரட்டி வெச்சிருக்காளாம். ரெண்டுபேரு வீட்டுக்கே விசாரிக்கக்கூட வந்தாங்க போலிருக்கு. எங்கே, நாமளும் அப்படி செஞ்சுடுவோமோன்னு அவங்களுக்கு பயம். அதான் முந்திக்கிட்டா. எப்படியோ, எம்பொண்ணு நல்லாருந்தா சரி..."
"ஏங்க.. தொறந்த ஆட்டோ போதுமா.. சாமான்செட்டு, ஆட்டுக்குட்டியெல்லாம் அதுலயே கொண்டுபோயிடலாம்"
"ஆட்டுக்குட்டி எதுக்கும்மா??"
"ஆத்தாளுக்கு படையல் போடத்தான். உங்கக்காவோட பிரச்சினை தீர்ந்தா செலுத்துறதா வேண்டிக்கிட்டது. இல்லைன்னா ஆத்தா கோவிப்பா"
ஒரு பெரிய பாரம் வந்து உட்கார்ந்துகொண்டது அந்த பிஞ்சுமனதில். என்னென்னவோ அழுது,புலம்பி, ஆர்ப்பாட்டம் பண்ணிப்பார்த்தான்.. 'சின்னப்பய.. அவனுக்கென்ன தெரியும்.. விளையாட்டுப்புத்தி..' என்றெல்லாம் அவனுடைய எதிர்ப்பு அலட்சியப்படுத்தப்பட்டது.
அழுதுகொண்டே செவனுவின் வீட்டுக்குப்போனவன், ஆட்டுக்குட்டியை கட்டிக்கொண்டான். கொஞ்ச நேரம் அழுதுபுலம்பியபிறகு, செவனுவின் யோசனையை அரைமனதுடன் ஏற்றுக்கொண்டான்.
"இது நடக்குமா!!.."
"முயற்சி செஞ்சு பார்க்கறதுல என்ன நட்டம் இருக்கு. ஆத்தாளா.. நாமளான்னு பாத்துடுவோம்"
அந்தப்பொங்கல் அவனுக்கு மட்டும் சுரத்தேயில்லாமல் கழிந்தது. புதுத்துணி எடுப்பதும், பலகாரங்கள் செய்வதும், கரும்பு மற்றும் மஞ்சளின் வாசனையுமாக பொங்கல் வந்துபோனது. அக்காவை பிரியப்போகிற ஏக்கத்தில் பயல் இருப்பதாக பெரியவர்கள் பேசிக்கொண்டது, அவனுக்கு இன்னும் எரிச்சலையூட்டியது.
அன்று விடிகாலையே ,ஒரு கூட்டமாக கிளம்பினார்கள்.. பெரியவர்களெல்லாம் வேனிலும் , ஆட்டுக்குட்டியும் சாமான்செட்டுகளும் திறந்த ஆட்டோவிலுமாக ஏற்றப்பட்டு கோயிலுக்கு வந்து சேர்ந்தார்கள்.
'பூசாரி கூப்பிடுறவரை ஆட்டுக்குட்டியோட விளையாடிக்கிறனே' என்ற அப்பீல் பாசானதில் பாண்டிக்கு ரொம்பசந்தோஷம். அவர்களை யாருமே கவனிக்காததில் இன்னும் சந்தோஷம்.அக்காகூட, கணவனையும் மாமியாரையும் பார்த்தபின்.. புகுந்தவீட்டுக்கூட்டத்து ஆட்களோடயே உட்கார்ந்துவிட்டாள்.
"ஆத்தாளுக்கு பொங்கலிட்டாச்சா.. அடுத்தது ஆகவேண்டியதை பாருங்க.. ஆட்டை கூட்டியாங்கடா" ஓங்கி ஒலித்தது ஒரு குரல்.
வந்துகொண்டிருந்த ஆட்டைப்பார்த்ததும், பூசாரி கூர்ந்து நோக்கி பின் கத்தினார்.. "ஏ... நிறுத்துங்கப்பா.. வேற ஆடு கிடைக்கலையா உங்களுக்கு??.. ஒச்சம் இருக்கிற ஆடாப்பார்த்து கொண்டாந்து ஆத்தாளை ஏமாத்தறீங்களா?.."
அனைவரின் பார்வையும் ஆட்டின் மீது திரும்பியது. ஆடு காலை விந்திவிந்தி நடந்துவந்து கொண்டிருந்தது.
"அய்யா.. நல்லாத்தானே இருந்திச்சு. எப்படியாச்சுன்னு தெரியலியே!!.. ஏண்டா பாண்டி.. எப்படா இப்படியாச்சு" சாமிக்குத்தமாகிவிட்டதே.. என்ற கவலை அம்மாவுக்கு.
"அது.. அது.. முந்தாநேத்து ஒரு 'எருமை' முட்டிடுச்சும்மா.. மேலத்தெரு அண்ணன் மாட்டுடாக்டருக்குத்தானே படிச்சிருக்காரு. அவரு மருந்துகொடுத்தப்புறம் வீக்கம் வத்திடுச்சு. அதான் எதுக்கு வீணான்னுட்டு உங்கிட்ட சொல்லலை" ஓரக்கண்ணால் செவனுவை பார்த்துக்கொண்டே சொன்னான்.
"நல்ல காரியம் செஞ்சீங்க போங்க.. எம்மா.. இப்ப பொங்கலை படைச்சுட்டு வீட்டுக்கு போங்க. அப்புறம் வசதிப்படறப்ப, சந்தைலேர்ந்து குறையில்லாத ஆடா புடிச்சுட்டு வந்து, வேண்டுதலை நிறைவேத்துங்க.. ஆத்தா கொஞ்ச நாளைக்கு பொறுத்துக்கமாட்டாளா??.. அவ மக்கதானே நாம..." பூசாரி சொல்லவும் நிம்மதி பரவியது அங்கே.
"மைனி,..இவ எங்கூட்ல வந்து சந்தோஷமா இருக்கணும்ன்னுதானே உங்க வேண்டுதல். அதெதுக்கு ஒரு உயிரை பலிகொடுத்து ஆரம்பிக்கணும். வேண்ணா, ஆட்டோட மதிப்புக்குத்தக்கன ரூபாய வெச்சு கோயிலுக்கு ஏதாவது திருப்பணி செய்யலாமே.." என்றபடி சம்பந்தக்காரம்மா முன்வந்தார்.
ரூபாய் என்றதும் பூசாரிக்கு ஒரே குதூகலம் "அதுவும் சரிதான்.. ராத்திரி இந்தப்பக்கமெல்லாம் ஒரே இருட்டா இருக்குது.ஊருக்கெல்லாம் வெளிச்சம் கொடுக்கிறவ.. அவ இருட்டுல இருக்கலாமா..?. இந்தக்கோயிலுக்கு கரெண்ட் கனெக்ஷன் கொடுக்க ஏற்பாடு செய்யுங்களேன்"
"நம்ம அழகர் மகன் ரொம்பவே புத்திசாலி.. அவனே இதெல்லாம் பொறுப்பெடுத்து செய்யட்டும்"
"ஊருக்கு ஒரு நல்லது நடக்கும்ன்னா நிச்சயம் செய்றேன்" என்று பொறுப்பேற்றுக்கொண்டார் அந்த இளைஞர்.
"இந்தாங்க.. எம்பங்கு ஐநூறு ரூபா"
"எம்பங்கு இது"
"நானும்.. நானும்.."
தட்டு நிரம்பத்தொடங்கியது.. அவர்களின் மனதைப்போலவே..
பாண்டியும் செவனுவும் ரகசியமாக, ஆட்டைக்காப்பாற்றிவிட்ட வெற்றிக்களிப்பில்.. ஒருத்தரையொருத்தர் கிள்ளிக்கொண்டது யாருக்கும் தெரியாமலேயே போனது,.. அதன் கால் எப்படி உடைந்தது என்ற ரகசியத்தைப்போலவே. அது அவர்கள் இருவருக்கும் மட்டுமே தெரிந்தது..
டிஸ்கி: இந்த சிறுகதையை பொங்கல் மலரில் வெளியிட்ட லேடீஸ் ஸ்பெஷலுக்கு நன்றிகள்..
46 comments:
me the firsta வாழ்த்து சொல்லிக்கறேன்.
அட்வான்ஸ் பொங்கல் வாழ்த்துக்களும்
பத்திரிகையிலேயே வாசித்து விட்டேன் சாரல். மிக அருமையான கதை. சிறப்பான நடை. வாழ்த்துக்கள் லேடீஸ் ஸ்பெஷலில் வெளிவந்தமைக்கும்:)!
லேடீஸ் ஸ்பெஷலில் வெளிவந்தமைக்கு வாழ்த்துக்கள்.கதை அருமை சாரல்.
அருமையான சிறுகதை.வாழ்த்துக்கள்.தொடர்ந்து பத்திரிகைகளில் வெளிவர வாழ்த்துக்கள்.
ரொம்ப அழகான கதை. லேடீஸ் ஸ்பெஷலில் வெளியானதற்கு வாழ்த்துக்கள்.
அருமை...வாழ்த்துகள்...அப்புறம், எங்களுக்கும் தெரிஞ்சுடுச்சே...பாண்டிக்கும் செவுனுக்கும் தெரிஞ்சது..:-)
வாழ்த்துக்கள் எழுத்தாளரே ...கதை நல்லா இருக்கு
வாழ்த்துக்கள்!
எழுத்தாளருக்கு வாழ்த்துக்களும் வணக்கமும். படமும் நல்லா போட்ருக்காங்க.. ;-)
தங்களுக்கு இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்.
லேடீஸ் ஸ்பெஷலில் வெளியானதற்கு வாழ்த்துகள். கதை ரொம்ப நல்லா இருந்தது.
அருமையான கதை. அதைவிட எழுதிய விதம் ரொம்ப அருமை. நிகழ்வுகள் கண் முன்னே வந்துபோகின்றன. கடா வெட்டுவதற்காக அரிவாளைத் தீட்டுகிற காட்சி கூட வந்துபோனது இக்கதையில் இல்லாவிட்டாலும்.
எழுத்தாளர் அமைதிச்சாரல் அவர்களுக்கு இனிய பொங்கல் நல்வாழ்த்துகள். லேடீஸ் ஸ்பெஷல் பத்திரிக்கையில் கதை வந்தமைக்கும் வாழ்த்துகள்.
சுவாரசியாமன சிறுகதை
பொங்கல் நல்வாழ்த்துக்கள்
ம்ம்ம்ம்....கலக்குங்க!! வாழ்த்துக்கள்.
பொங்கலுக்கும் சேர்த்து!!!!
நல்ல கதை.வாழ்த்துக்கள்.
டபுள் வாழ்த்துக்கள்! முதலில் பொங்கல் வாழ்த்துகள், இரண்டாவதாக சிறுகதைக்காக...! :-)
பேச்சு வழக்கு நல்லாருக்கு. வாழ்த்துகள்.
மனதை நெகிழவைத்த சிறுகதை. ரொம்ப நல்லாருக்கு சாந்தியக்கா. வாழ்த்துகள்.
Super! Congratulations!
HAPPY PONGAL!
வாங்க தென்றல்,
உங்களுக்கும் வாழ்த்துக்களை சொல்லிக்கிறேன்..
நன்றி.
வாங்க ராமலஷ்மி,
நன்றிங்க..
வாங்க ஆசியா,
நன்றிங்க..
வாங்க ஸாதிகா,
நன்றிங்க..
வாங்க புவனேஸ்வரி,
நன்றிங்க..
வாங்க முல்லை,
ஹே.. எனக்கும் சொல்லுங்கப்பா.. எப்படிக்கேட்டுப்பாத்தாலும் இந்தப்பசங்க அதை சொல்லமாட்டேங்குறாங்க :-))
நன்றி.
வாங்க எல்.கே,
நன்றி சகோ :-))
வாங்க ஜீ,
நன்றிங்க..
வாங்க RVS,
படம் எனக்கும் ரொம்ப பிடிச்சிருந்தது :-))
நன்றி.
well written. Congrats.
வாங்க சசிகுமார்,
உங்களுக்கும் இனிய பொங்கல் வாழ்த்துக்கள்..
நன்றி.
வாங்க கோவை2தில்லி,
ரொம்ப நன்றிங்க..
வாங்க உழவன்,
ரொம்ப நன்றிப்பா..
வாங்க வெங்கட்,
வாழ்த்துக்களுக்கு நன்றி..
வாங்க ஆமினா,
உங்களுக்கும் பொங்கல் வாழ்த்துகள்..
வாங்க நானானிம்மா,
நன்றிம்மா :-)
வாங்க மாதேவி,
வாழ்த்துக்களுக்கு நன்றி.
வாங்க சேட்டைக்காரன்,
டபுள் நன்றிங்கோ :-))))
வாங்க ஹுஸைனம்மா,
கிராமத்து பேச்சுவழக்கை கொஞ்சமாவது ஞாபகப்படுத்திச்சான்னு நீங்கதான் சொல்லணும் :-))))
நன்றி.
வாங்க ஸ்டார்ஜன்,
ரொம்ப நன்றிங்க..
வாங்க சித்ரா,
உங்களுக்கும் பொங்கல் வாழ்த்துக்கள்..
தங்களுக்கும் தங்கள் குடும்பத்தார் அனைவர்களுக்கும் இனிய பொங்கல் நல் வாழ்த்துகள்!!
வாங்க அப்துல் காதர்,
வாழ்த்துகளுக்கு நன்றி.
அட்டா எல்லாரும் பத்திரிகை பக்கம் போயீட்டீங்களா.:)
எங்களையெல்லாம் மறந்துடாதீங்கப்பா.
மிகவும் இனிய பெருமையாக இருக்கிறதுப்பா. மனம்நிறைந்த வாழ்த்துகள்.
கதை மிக அருமை.
வாங்க வல்லிம்மா,
பால் நல்லபடியா பொங்கிச்சா..
வாழ்த்துகளுக்கு நன்றிம்மா. :-))
சமுதாய சிந்தனைகள் : சீர் கேட்பதால் குடும்பத்தில் சிக்கல், சமுதாய விழிப்புணர்வு:போலிஸ் புகார், உயிர் பலி வேண்டாம். புதிய கரன்டு கனைகசன்...அற்புதம். பாண்டியின் செயல்...எனது மனமும் நிரம்பத்தொடங்கியது.. மிக்க நன்றி.
Post a Comment