Friday, 8 January 2016

சித்தூர் தென்கரை மஹாராஜன்

சன்னிதி வாசல்
எத்தனை தெய்வங்களை விருப்பப்பட்டு வணங்கினாலும் ஒவ்வொரு குடும்பத்துக்கெனவும் குலதெய்வம் என ஒரு தெய்வத்தை தனிப்பட்ட முறையில் வணங்கி வழிபடுவது நம் வழக்கம். முறையாக தன் குலதெய்வத்தை வழிபடுபவர்களுக்கு வாழ்வில் எந்தத்தீங்கும் வராமல் அத்தெய்வம் காக்கும் என்று நம்புபவர்கள் அதிகம். “கொலதெய்வத்துக்கப்றம்தான் மத்த சாமியெல்லாம்” என்பது அவர்களின் உறுதியான பிடிப்பு. “வாள்க்கைல நிம்மதியே இல்ல. எப்பமும் சங்கடமும் கண்ணீருமாத்தான் இருக்கு” என்று நொந்து கொள்பவர்களுக்கு “கொலதெய்வத்துக்கு எதாம் கொற வெச்சிருப்பீங்க. மொதல்ல போயி ரெண்டு பூப்போட்டு கும்புட்டுட்டு வாங்க. அது கண்ணெடுத்துப்பாத்தா எல்லாஞ்சரியாப்போவும்” என்று ஆறுதல்  கூறுபவர்களும் உண்டு. பெரும்பாலான குடும்பங்களின் குலதெய்வம் எதென ஆராய்ந்தால் வாழ்ந்து மறைந்த முன்னோர்களாகவோ, அல்லது சிறு கிராம தேவதைகளாகவோதான் இருக்கும். குலதெய்வத்தை சாஸ்தா எனக்குறிப்பிடுவது தென் மாவட்ட வழக்கு. பேச்சு வழக்கில் சாத்தாங்கோவில். என்னதான் நாள் கிழமைகளில் வணங்கினாலும் பங்குனி உத்திரம் அன்று பொங்கலிட்டு வழிபடுவது தனிச்சிறப்பு. 
 நம்பியாற்றை நோக்கிய மண்டபமும் படித்துறையும்
தென் மாவட்டங்களில் குறிப்பாக நெல்லை மற்றும் அதன் சுற்று வட்டாரப்பகுதிகளைப்பொறுத்தவரை பெரும்பாலான குடும்பங்களுக்கு குலதெய்வமாக தென்கரை மஹாராஜேஸ்வரர் விளங்குகிறார். இவர் வடக்கு வள்ளியூருக்கு அருகேயிருக்கும் சித்தூர் என்ற இடத்தில் கோயில் கொண்டிருக்கிறார். “பங்குனி உத்திரம் அன்னிக்கு எள்ளுப்போட எடமிருக்காது. அன்னிக்கி அவ்வளவு கூட்டம் சாடும். எங்க இருந்துல்லாமோ பொங்க வச்சுக் கும்புட ஆட்கள் வருவாங்க. இருக்கந்தொறைக்கிப் போறதுக்குப் பதிலா இப்ப நான் இங்கதாம் போயிட்டு வாரேன்” என்றான் கடந்த சில வருடங்களாக அங்கே சென்று வரும் இரண்டாவது தம்பி. எங்கள் குலதெய்வம் நெல்லை மாவட்டம் இருக்கந்துறையில் இருக்கிறது. குலதெய்வம் யாரென்றே தெரியாதவர்களும், குலதெய்வக்கோயிலுக்குச் செல்ல இயலாதவர்களும் கூட இங்கே வந்து பிரார்த்தனையைச் செலுத்தினால் பலனுண்டு, மேலும் சமுதாயத்தில் பல்வேறு சாதி அடுக்குகளில் இருப்பவர்களுக்கும் இது குடும்பக்கோவில் என்பது இக்கோவிலின் தனிச்சிறப்பு.

இக்கோவில் அத்துவானக்காட்டில் அமைந்திருப்பதால் வள்ளியூரிலிருந்தே ஆட்டோ ஏற்பாடு செய்து கொண்டு சென்றோம். மதியமே கிளம்ப வேண்டும் எனச்சொல்லியிருந்தும், கல்யாணத்துக்கு அழைத்தால் வளைகாப்புக்கு வந்து சேரும் தன் வழக்கப்படி மாலை நான்கு மணிக்கு மேல் ஆட்டோ வரவழைத்தான் பெர்ரிய தம்பி. வளைகாப்புக்கு அழைத்தால் பெயர் சூட்டு விழாவுக்கு வந்து சேரும் தன் வழக்கப்படி தாமதமாக வந்து சேர்ந்தது ஆட்டோ. ‘போட்டோ எடுக்க வேண்டுமே.. வெளிச்சம் இருக்குமா?’ என்ற எனது கவலையை அந்த தெங்கரையாரிடமே சமர்ப்பித்து விட்டு நண்டு, நாழி, உழக்குகளை அதாவது பிள்ளை குட்டிகளை சேகரித்துக்கொண்டு கிளம்பினோம். தாமதமானதால் நஷ்டப்பட்ட நேரத்தை மீட்டு விடும் நோக்கோடு விர்ர்ர்ர்ர்ரென ஓடியது ஆட்டோ. 

“ரோட்ல ஒரு பாம்பு வந்திச்சி. ஆட்டோ சத்தங்கேட்டதும் மறிஞ்சு ஓடிட்டுது” என்று பாம்பைக்கடந்து அரை மைல் வந்தபின் சொல்லி படம் எடுக்கும் ஆசையில் மண்ணைப்போட்டார் டிரைவர். “இனும எதாம் வந்தா சொல்லுங்க” என்று சொல்லி வைத்ததால் சற்றுத்தொலைவு சென்ற பின் ஆட்டோவை நிறுத்தி “அந்தா ஒரு மயில் நிக்கி. படம் எடுக்கணுமா?” என்று கேட்டார். அவர் குறிப்பிட்ட மயில் நிற்கும் இடத்துக்குச் செல்லவே இன்னொரு ஆட்டோ பிடிக்க வேண்டியிருக்கும் எனத்தோன்றியதால் பிள்ளைகளுக்கு வனப்பகுதியில் மயில் மேய்ந்து கொண்டிருந்த அரிய காட்சியைக் காண்பித்ததோடு திருப்தியடைந்து கொண்டேன். 

சுசீந்திரம் தாணுமாலயன் கோவில் மற்றும் நெல்லையப்பர் கோவில் அளவுக்கு இந்த தென்கரை சாஸ்தா கோவிலும் புகழ் வாய்ந்ததே. தேர் இருக்கும் ஒரே சாஸ்தா கோவில் இதுதான் என்ற தனிச்சிறப்பும் இதற்குண்டு. கோவிலில் பணிபுரிபவர்கள் தங்கியிருக்கும் வீடுகள் கோவில் வளாகத்திலேயே அமைந்திருக்கின்றன. அதைத்தவிர ஊரில் வீடுகள் ஏதும் இருப்பதாகத்தெரியவில்லை. கோவிலையொட்டி ஓடும் நம்பியாற்றின் தென் கரையில் இக்கோவில் அமைந்திருப்பதால் தென்கரை சாஸ்தா எனப்பெயர் பெற்றார். இக்கோவில் பாண்டிய மன்னர்களால் கட்டப்பட்டதாகச் சொல்லப்படுகிறது. இதைத்தவிர சமீபத்தில் கட்டப்பட்ட முன் மண்டபம் மற்றும் சில மண்டபங்கள் காணப்படுகின்றன.
சன்னிதியின் முன் கொடிமரம்
கொடிமரம் கடந்து உள்ளே போய் சாஸ்தாவை வணங்கி கற்பூர ஆரத்தியைக் கண்ணில் ஒற்றிக்கொண்டோம். சபரிமலை சாஸ்தாவை அப்படியே சின்னஞ்சிறு உருவில் கண்ணெதிரே காண்பது போல் தோன்றியது. அஞ்சேல் என்று அபயமளித்த அபயஹஸ்தத்தைத் தரிசித்ததும் மனம் லேசானது போல் ஓர் உணர்வு. கூடவேயிருக்கும் தளவாய் மாடனையும், பிரகாரம் சுற்றி வந்து முதற்பிரகாரத்திலிருக்கும் பேச்சியம்மனையும் தரிசித்துக்கொண்டோம். பேச்சியம்மனின் சன்னிதிக்கு எதிரே வேண்டுதலுக்காகச் செலுத்தப்பட்ட ஆணிச்செருப்புகள் குவிந்து கிடந்தன. இதை அணிந்து கொண்டு சாஸ்தா இரவில் ஊரைச்சுற்றி வந்து காவல் புரிவதாக ஐதீகம்.

பிரார்த்தனைகள்
கோவிலையொட்டி ஓடும் நம்பியாறு
கோவிலையொட்டினாற்போல் குளுகுளுவென்று ஓடிக்கொண்டிருக்கிறது நம்பியாறு. கோவிலிலிருந்து ஆற்றை நோக்கிய ஒரு வாசலும், அங்கிருந்து ஆற்றுக்குள் இறங்குவதற்கு படித்துறையும் இருக்கிறது. கார்த்திகை மாதமாதலால் நிறைய ஐயப்ப சாமிகளும், பிற ஆசாமிகளுமாக நீராடிக்கொண்டிருந்தார்கள். பளிங்கு போல் ஓடிய தண்ணீரில் பயமில்லாமல் காலை நனைத்ததும் அடுத்த முறை வந்தால் ஆற்றில் குளிக்க வேண்டும் என்ற ஆசை துளிர்த்தது. எப்போது கூப்பிடுகிறாரோ பார்ப்போம். சற்று இருட்ட ஆரம்பித்து விட்டதால் மேலும் சுற்றிப்பார்க்கவோ, தேர் இருக்கும் பகுதிக்குச்செல்லவோ இயலவில்லை. கோவிலைப்பற்றி இன்னும் விவரங்கள் சேகரித்துக்கொண்டு வர வேண்டும் என்ற நினைப்பெல்லாம் ஆற்றங்கரையில் காற்று வாங்கியபோதே கரைந்து விட்டிருந்தன. திரும்பி வரும்போதுதான் “அடடா!!.. கோட்டை விட்டு விட்டேனே” என்று வருத்தமாக இருந்தது. பரவாயில்லை.. இதைச்சாக்கிட்டு இன்னொரு முறை போய் வந்தால் ஆயிற்று. எழுத்தாளர் ஜெயமோகன் அவர்களின் தளத்திலும் இக்கோவிலைப்பற்றி எழுதியிருக்கிறார்.
  நம்பியாற்றை நோக்கிய கோவில் வாசல்
இத்திருக்கோவிலில் திருமணம், காது குத்து போன்றவையும் நடைபெறுகின்றன. சிலர் இவற்றை ஒரு வேண்டுதலாகவே செய்வார்கள். நல்ல காரியங்களை நல்லபடி முடித்துக்கொடுத்த குலதெய்வத்துக்கு நன்றிக்கடனாகவும் செய்வதுண்டு. ஆற்றை நோக்கி ஒரு கலையரங்கம் இருப்பதையும் காண முடிந்தது. மற்ற நாட்களை விட பங்குனி உத்திரத்தன்று இந்தக்கோவில் ஜே ஜே என்று இருக்கும். இதோ.. பங்குனி மாதம் சமீபிக்கிறது. முடிந்தால் சித்தூருக்கு ஒரு நடை போய் தென்கரை மஹாராஜரைத் தரிசித்து வாருங்கள்.

Friday, 1 January 2016

அடிச்சுவடுகள் - 2015

ராமேஸ்வரம்- சீதா தீர்த்தக் கட்டத்தின் முகப்பிலிருக்கும் சிவனார் சிற்பம்
சென்ற வருடம் முழுவதும் தென்றலும் சூறாவளியும் மாறி மாறி முறை போட்டு அடித்துத் துவைத்துக் காயப்போட்டு விட்டுச் சென்று விட்டன. உருப்படியாக ஏதாவது செய்தேனா என்று மூளையைக் கசக்கி யோசித்துப் பார்த்தால் எதுவுமே தேறவில்லை. இருப்பினும் இருத்தலை நிரூபிக்கும் விதமாக மாதத்திற்கு ஒரு இடுகையாவது எழுதி வந்திருப்பதும், ஃப்ளிக்கரில் முடிந்தபோதெல்லாம் படங்களைப் பகிர்ந்து வருவதும் எனக்குக்கொஞ்சம் ஆறுதலளிக்கிறது. தவிர, கவிதைகளில் "நல்லாச்சி"க்குக் கிடைத்து வரும் வரவேற்பு பெருமகிழ்ச்சியளிக்கிறது. பிறந்து வளர்ந்த நாஞ்சில் நாட்டிற்குச் செய்யும் நன்றிக்கடனாக அதன் பாரம்பரிய உணவு வகைகளைப் பதிந்து வரும் பணியையும் ஆரம்பித்திருக்கிறேன். தொடர்வேனென்று நம்புகிறேன் :-)

சென்ற வருடத்தில் கடந்து போன கசப்பான அனுபவங்களை எண்ணிக்கொண்டே இருப்பதை விட வரவிருக்கும் இனிய அனுபவங்களை வரவேற்க மனதை உற்சாகமாய் வைத்திருப்பது மேலல்லவா. 

சென்றதினி மீளாது மூடரே நீர்
எப்போதுஞ் சென்றதையே சிந்தை செய்து 
கொன்றழிக்கும் கவலையெனும் குழியில் வீழ்ந்து 
குமையாதீர்! சென்றதனைக் குறித்தல் வேண்டா
இன்று புதிதாய்ப் பிறந்தோமென்று நீவீர்
எண்ணமதைத் திண்ணமுற இசைத்துக் கொண்டு 
தின்றுவிளையாடி இன்புற்றிருந்து வாழ்வீர்!

என்று பாரதியும் பாடிச்சென்றிருக்கிறாரே. எத்தனையோ இயற்கைப்ப்பேரிடர்கள் வந்து குலைத்துப்போட்டு விட்டுச் சென்ற போதிலும் மனித குலம் மறுபடியும் கரம் கோர்த்து மீண்டெழுகிறது. சமீபத்திய சென்னை வெள்ளத்தின்போது ஒருவருக்கொருவர் உதவியதே இதற்குச் சான்று. மனிதம் இன்னும் செத்து விடவில்லை. நீறு பூத்த நெருப்பாய் அது ஒவ்வொருவருக்குள்ளும் உறங்கிக்கொண்டுதான் இருக்கிறது. 

சென்ற வருஷம் சந்தோஷங்களும் , சில கஷ்டங்களும் நிறைந்ததாக இருந்திருக்கலாம். நல்லவை எடுத்து, அல்லவை தள்ளலாமே. மனமும் ஒரு குப்பைத்தொட்டிதான், அதையும் அவ்வப்போது சுத்தம் செய்யலாமே.
சுசீந்திரம் கோயிலின் விடையேறிய பெருமான்
கொண்டாட்டமென்பது இன்றோடு முடிந்து விடாமல், இன்று என்பது இன்னொரு நாளாகி விடாமல்,மகிழ்ச்சி என்பது பண்டிகையின்போது மட்டுமே என்றாகி விடாமல், புது வருடத்திற்கும், புது வாழ்க்கைக்குமாய் புத்தாண்டு வாழ்த்துக்கள்.

எல்லாம் வல்ல இறைவன் அனைவருக்கும் எல்லா நலன்களையும் வழங்க பிரார்த்திக்கிறேன். அனைவருக்கும் இந்த வருடம் மிக இனிய வருடமாக அமையட்டும்.

Friday, 18 December 2015

தொலைத்த பொக்கிஷங்கள்

 நன்றி- தி இந்து
2005 ஆம் வருடம் ஜூலை மாதம் மும்பையை ஒரு மழை உருட்டி விளையாடியது. வருடாவருடம் வந்து செல்லமாய் மெல்லக்கிள்ளிப்போகும் மழை அவ்வருடம் பேயறை அறைந்ததில் நாங்களெல்லாம் நிலை குலைந்துதான் போனோம். சில இடங்களில் தரைத்தளத்தை மூழ்கடித்ததோடு நில்லாமல் முதல் தளத்தையும் அசுர வேகத்தில் விழுங்கியிருந்தது வெள்ளம். அவற்றில் என் குழந்தைகள் படித்த பள்ளியும் ஒன்று.

அப்போது யூனிட் டெஸ்டுகள் நடந்து கொண்டிருந்ததால் அதற்கு முன்பே வகுப்பு நோட்டுப்புத்தகங்கள் சேகரிக்கப்பட்டு தரைத்தளத்திலிருந்த ஸ்டாஃப் ரூமில் வைக்கப்பட்டிருந்தன. எதிர்பாரா விதமாய் பெருமழை வெள்ளம் இரவே ஸ்டாஃப் ரூமில் புகுந்து அத்தனையையும் மூழ்கடித்தது. வெள்ளம் வேறு இரண்டு நாட்களுக்கு மேலாகியும் வடியாததால் புத்தகங்கள் அனைத்தும் மழை+சாக்கடை நீரில் ஊறிக்கிடந்தன. மழைநீர் வடிந்து பள்ளியும் திறந்தபின் நோட்டுப்புத்தகங்கள் மாணவர்களிடம் ஒப்படைக்கப்பட்டன. இங்க் பேனாவை உபயோகித்து எழுதப்பட்டவை தண்ணீரில் கந்தரகோலமாயிருக்க பால் பாயிண்ட் பேனாவால் எழுதப்பட்டிருந்த குறிப்பேடுகள் தப்பிப் பிழைத்திருந்தன.

அவற்றை வீட்டுக்குக் கொண்டு வந்து நாற்றத்தைப் பொறுத்துக்கொண்டு துணி காய வைக்கும் கொடிக்கயிற்றில் தொங்க விட்டு நீரெல்லாம் வடிந்தபின் அப்படியே உலர விட்டு தாள்கள் கிழியாது என்று நம்பும் பக்குவத்திற்கு உலர்ந்தபின் இஸ்திரிப்பெட்டியால் தேய்த்து மீதமிருந்த ஈரத்தையும் உலர்த்தினோம். இங்க் பேனாவால் எழுதப்பட்ட குறிப்பேடுகளை குடும்பத்தினர் அனைவரும் கொஞ்சங்கொஞ்சமாக எழுதிக்கொடுத்தோம்.

சமீபத்திய சென்னை மழையின்போது ஏராளமான புத்தகங்கள் பாழான செய்திகளைப் பார்க்கும்போதும் கேட்கும் போதும் இப்படி ஏதாவது செய்து அந்தப்புத்தகங்களைக் காப்பாற்ற முயற்சிக்கலாமே என்று மனது அடித்துக் கொள்கிறது. வாக்யும் க்ளீனர் ஹேர் ட்ரையர் போன்ற உபகரணங்களின் ஃப்ளோயர் கொண்டும் வெப்பக்காற்றால் உலர வைக்கலாம். இயன்றவர்கள் தெரிந்தவர்களுக்கு செய்து கொடுக்கலாம்.

அச்சுப்பிரதிகளை ஏதாவது செய்து நிச்சயமாக மீட்டெடுக்கலாம். குப்பை மலையில் இன்னொரு குவியலாக அவை கிடப்பதைக் காணும்போது மனது வலிக்கிறது. //புத்தகங்கள் வெறும் அச்சடிக்கப்பட்ட காகிதங்களின் தொகுப்பல்ல. அவை நேற்றின் வரலாற்றை, இன்றைய நிகழ்வை நாளைய தலைமுறைக்குக் கொண்டு சேர்க்கும் பொக்கிஷங்கள்’ என்பார்கள்.// ரொம்பவும் சரி. விதி வசத்தால் பெரும்பாலான சமயங்களில் அப்பொக்கிஷம் நம் கண்ணெதிரிலேயே நம் கையை விட்டுப்போவதை ஒரு விதக் கையாலாகாத்தனத்துடன் பார்த்துக்கொண்டே இருக்க நேர்ந்து விடுகிறது.

வெள்ளத்தால் போகாது, வெந்தணலால் வேகாது
கொள்ளத்தான் இயலாது, கொடுத்தாலும் நிறைவொழிய குறைபடாது
கள்வர்க்கோ மிக அரிது, காவலோ மிக எளிது
கல்வி என்னும் பொருள் இங்கிருக்க உலகெல்லாம் பொருள் தேடி அலைவதேனோ" எனும் ஆன்றோர் வாக்கு, ஒருவன் கற்ற கல்விக்கு மட்டும்தான் பொருந்துமே தவிர கல்வி கற்க உதவும் புத்தகங்கள், ஓலைச்சுவடிகள் முதல் மடிக்கணினி, மேசைக்கணினி வரையிலான சாதனங்களுக்குப் பொருந்தாது என்பது இது வரை எத்தனையோ முறை நிரூபணமாகியிருக்கிறது. ஒரு புத்தகம் வெளியாகிறதெனில் எழுத்தாளரிலிருந்து அச்சிடுபவர் வரை அதன் பின் எத்தனையோ பேரின் உழைப்பும் அர்ப்பணிப்பும் மறைந்திருக்கிறது. அத்தனையையும் இப்போதைய மழை விழுங்கி ஏப்பம் விட்டிருக்கிறது. இப்போதும் தனி நபர்களின் சேமிப்பிலிருந்த புத்தகங்கள் முதல் வரும் ஜனவரியில் நடைபெறவிருந்த புத்தகத்திருவிழாவிற்காக பதிப்பகத்தார் அச்சிட்டு தயார் செய்து வைத்திருந்த புத்தகங்கள் வரையில் அத்தனையும் வெள்ளநீரில் மூழ்கி பெருத்த நஷ்டத்தை ஏற்படுத்தி விட்டிருக்கின்றன. இவற்றில், பதிவர்களாகிய நாம் வெளியிட்டிருந்த நூல்களும் அடங்கும் என்பது ஆற்றவியலாத சோகமே. நீரில் மூழ்கியதால் ஒரு சில இடங்களில் அச்சு இயந்திரங்களும் பழுதாகியிருப்பதும் பெரும் குலைவை ஏற்படுத்தியுள்ளது. தமிழில் வெளியாகும் தி இந்து இது தொடர்பாக சிறப்புக்கட்டுரையொன்று வெளியிட்டிருக்கிறது.

மும்பை வெள்ளம் வடிந்த போது, அதிகம் சேதமாகாத, குறைந்த சேதமுள்ள பொருட்களை கடைக்காரர்கள் மிகக்குறைந்த விலைக்குக் கொடுத்தார்கள். தள்ளி விட்டார்கள் என்றே சொல்லலாம். மக்களும் போட்டி போட்டுக்கொண்டு வாங்கினார்கள். அம்மாதிரியே அதிகம் சேதப்படாத புத்தகங்களை அப்படியே தூக்கி குப்பையில் எறிவதை விட, தள்ளுபடி விலையில் விற்பனைக்கு வைக்கலாம். வீணாக குப்பையில் மக்கி அழிவதை விட வாசிப்பில் விருப்பமுள்ள ஒருவர் கையில் சென்று சேர்வது கலைமகளுக்கும் விருப்பமான ஒன்றாகத்தான் இருக்கும்.

Thursday, 19 November 2015

ஃபுட்டோக்ராபி..

உணவைத்தயாரிப்பது ஒரு கலை என்றால் அதை பார்வைக்கு அழகாக அலங்கரித்து வைப்பது இன்னொரு கலை. பார்க்க அழகாக இருந்தாலே அது சாப்பிடவும் தோன்றும். அப்படி சாப்பிடத்தூண்டும் அழகுடன் இருக்கும் உணவை படம் பிடிப்பதுவும் ஒரு கலையே. ஃபுட் ஃபோட்டோகிராஃபி எனப்படும் அவ்வகைப் படங்களில் ஒரு சில உங்கள் பார்வைக்கு. ஏற்கனவே பகிரப்பட்டிருந்த முதல் பாகம் காண சாட்டையைச்சொடுக்குங்கள்.



பால்யம் திரும்புகிறதே..

அம்ச்சி மும்பையின் வடாபாவ்.

 ஸ்வீட் ஹார்ட்ஸ்.

 நொறுக்ஸ்..

பழம் நல்லது.

கிச்சாவின் ஸ்னாக்ஸ் :-)

பல்லை உடைக்காத மைசூர்பாக்
 அடேங்"கப்பா" (தாளித்த கப்பைக்கிழங்கு)
 ஜலேபி.

கோத்தம்பிர் வடி.

தில் குட் க்யா.. கோட் கோட் போலா.

Thursday, 12 November 2015

சாரல் துளிகள்

1. ஒவ்வொரு பெண்ணுக்குள்ளும் பசிமுகம் பார்க்கப் பொறாத தாய் ஒருத்தி இருக்கிறாள். அவள் வீட்டில் எந்நேரத்திலும் நிரம்பி வழிகிறது அட்சய பாத்திரம், அவள் அன்பைப்போல்.

2. உலகில் அதிகமாகக் கவி பாடப்படுபவர்களில் குழந்தை, நிலா, அன்னை இம்மூவரும் முக்கியமான இடங்களை வகிக்கிறார்கள்.

3. ஒரு செயலை, "ஏன் செய்தாய்?" என்று கேட்பதற்குப் பத்து பேர் இருப்பதைப் போலவே "ஏன் செய்யவில்லை?" என்று கேட்டுத் திட்டுவதற்கும் பத்து பேர் இருப்பார்கள் என்பது உலக நியதி.

4. தவழ்ந்தபடி தரையை ஆராய்ந்து கொண்டிருந்த குழந்தையின் பார்வையில் பட்டிருக்க வேண்டாமென்று, அப்புறமாய் வருத்தப்பட்டுக் கொண்டது கட்டெறும்பு.

5. யாரோ தன் குழந்தையைக்
கொஞ்சிக்கொண்டே செல்கிறார்கள்.
தன்னைத்தான் கொஞ்சுவதாக
மகிழ்ந்து மிழற்றுகிறது
பிச்சைக்காரியின் இடுப்பிலிருக்கும்
சிறு மழலை.

6. இன்னொரு வீட்டில் கொழுந்து விட்டெரிந்த நெருப்பில் குளிர் காய்ந்து கொண்டிருந்தவனின் ஆடையில் தீ எப்பொழுதோ பற்றிப்பரவ ஆரம்பித்திருந்தது.

7. அனுபவங்களின் தொகுப்பே வாழ்க்கை
என்கிறது உன் தரப்பு
வாழ்வென்பது திருப்பங்களாலும் ஆனது
என்பது என் கட்சி
இரண்டையும் கேட்டுக்கொண்டு
மௌனமாய்த் தீர்ப்பெழுதிக்கொண்டிருக்கிறது வாழ்க்கை
இரண்டும் ஒன்றுதானென்று.

8. அடுத்தடுத்த விவாதங்களின்போது மாற்றி மாற்றிச் சொல்லி குழப்பி விட்டாலும் முதன்முறை கேட்கும்போது பெரும்பாலும் மிகச்சரியாகவே பதிலளித்து விடுகிறது மனது.

9. அடமாய் ஒளித்து வைத்திருக்கிறது ஆழ்குளம்,
வெளிவர வேண்டிய ஏற்பாடுகளை அந்தத் தாமரை மொட்டு ரகசியமாய் செய்து கொண்டிருப்பதை அறியாமல்.

10. மிகப்பத்திரமாக வைத்து விட்ட திருப்தியிலேயே வைத்த இடமும் பொருளும் நினைவிலிருந்து அகன்று விடுகின்றன.

Tuesday, 10 November 2015

தீப ஒளியில்..

புற இருளை அகற்ற அகல் ஏற்றுதல் போல் அக இருளகற்ற ஞானதீபம் ஏற்றுவோம். 








அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்.

Saturday, 3 October 2015

உலர்பழ ஷீரா சாப்பிடலாம்..

ஷீராவுக்குத் துணையாக கொழுக்கட்டையும் மோதகமும்.
‘சற்றே ரவையை எடும் பிள்ளாய்.. பாந்தமாய் அதனை நெய்யில் வறுத்து, பாலும் சீனியும் சேர்த்துக்கிளறி, இன்னபிறவும்  கலந்தால் கிடைப்பது ட்ரைஃப்ரூட் ஷீரா தாமே’ என்று அடுக்களைச்சித்தர் அருளிச்செய்தபடி ஆக்கப்பட்டதே இந்த உலர்பழ ஷீரா. நம்மூர் சர்க்கரைப்பொங்கலைப்போல் வடக்கில் நல்ல நாட்களிலும் பண்டிகை சமயங்களிலும் "ஷீரா பூரி" இறைவனுக்குப் பிரசாதமாகப் படைக்கப்படுகிறது. பிள்ளையார் சதுர்த்தி தொடங்கி தீபாவளி வரைக்கும் கடைகளில் உலர்பழங்கள் அதிகமாகவும் மலிவாகவும் கிடைப்பதால் இங்கெல்லாம் அடிக்கடி செய்யப்படும் இந்த அயிட்டம், திருமண நாள் மற்றும் பிறந்தநாட்களில் நடக்கும் சிறப்பு விருந்துச் சமையலிலும் முக்கிய இடம் வகிக்கிறது. அசப்பில் நம்மூர் கேசரியை நினைவுபடுத்தினாலும் செய்யும் முறை மற்றும் சேர்க்கப்படும் பொருட்களால் இதற்கு அரச அந்தஸ்து கொடுக்கப்பட்டிருக்கிறது. ஆப்பிள், வாழை போன்ற புத்தம்புதுப் பழங்களை சேர்த்தும் ஷீரா செய்யப்படுகிறது எனினும் உலர்பழ ஷீராவின் சுவை அட்டகாசமானது. 

தேவையானவை:

ரவை – 1 பங்கு

நெய் – முக்கால் பங்கு

உலர்பழங்கள் (முந்திரி, கிஸ்மிஸ், பாதாம், சாரப்பருப்பு, பூசணி அல்லது வெள்ளரி விதை, அக்ரோட் எல்லாம் கலந்த கலவை) – 1 பங்கு. இவற்றில் பிஸ்தா அதன் மெலிதான கசப்புச்சுவை காரணமாக கண்டிப்பாகத் தவிர்க்கப்பட வேண்டும். 

பால் – 1 பங்கு

சர்க்கரை – 1 பங்கு (இனிப்புப்பிரியர்கள் சற்று அதிகம் சேர்த்துக்கொள்ள அனுமதி வழங்கப்படுகிறது)

ஏலக்காய் – 4. தோலை உரித்து உள்ளிருக்கும் விதைகளைப் பொடித்து வைத்த பின் தோலை தேயிலைத்தூள் டப்பாவில் போட்டு வைத்துக்கொண்டால் விரும்பும்போது வாசனையான ஏலக்காய் தேநீர் தயாரிக்கலாம். அப்படியில்லாமல் தோலுடன் பொடித்துக்கொள்ள விரும்பினால் அப்படியே செய்யலாம்.

இவற்றுடன் அடி கனமான வாணலியையும் பொறுமையையும் சேகரித்துக்கொள்ளவும்.

ஷீரா செய்யவிருக்கும் வாணலியில் இரண்டு ஸ்பூன் நெய்யைச் சூடாக்கி கிஸ்மிஸ் நீங்கலான உலர்பழங்களை மிதமான தீயில் வறுத்து, நெய்யிலிருந்து வடித்து எடுத்துத் தனியாக வைத்து ஆற விடவும். ஆறியபின் அவற்றைக் கத்தியால் பொடிப்பொடியாக நறுக்கிக்கொள்ளவும். எக்காரணம் கொண்டும் மிக்ஸியின் உதவியை இதற்கு நாடக்கூடாது. 

ஒரு பாத்திரத்தில் பாலையும் சர்க்கரையையும் கலந்து மிதமான தீயில் கொதிக்க விடவும். அதே நேரத்தில் நாம் ஷீரா செய்யும் நற்பணியை இன்னொரு அடுப்பில் தொடரலாம். உலர்பழங்கள் வறுக்கப்பட்ட வாணலியில் இருக்கும் நெய்யுடன் மீதமிருக்கும் நெய்யைச் சேர்த்துச் சூடாக்கவும். இதனால் நெய்யில் இறங்கியிருக்கும் உலர்பழங்களின் சாரம் வீணாகாமல் ஷீராவுடன் இரண்டறக்கலந்து மேலும் சுவை கூட்டும். 

இதில் ரவையை இட்டு மெல்லிய தீயில் கருகாமலும் சிவக்காமலும் வறுக்கவும். ரவை வறுபட்ட வாசனை வந்ததும் உடைத்து வைத்திருக்கும் உலர்பழக்கலவையையும் ஏலக்காய்ப்பொடியையும் சேர்த்து நன்கு கிளறவும். சுமார் இருபது நிமிடங்களுக்கு கிளறப்பட்ட ரவைக்கலவையில் நெய் மேலாக மிதந்து வர ஆரம்பிக்கும். சப்பாஷ்.. இதுவே சரியான சந்தர்ப்பம். அதை வீணாக்காமல் கொதித்துக்கொண்டிருக்கும் பாலை கால் கப் அளவில் எடுத்து ரவைக்கலவையில் சேர்த்து கை விடாமல் கிளறவும். 

பிள்ளையார் மட்டுந்தான் பால் குடிப்பாரா என்ன?. நம் ஷீராவும் அத்தனை பாலையும் உறிஞ்சி விட்டு உதிரி உதிரியாகும். மறுபடியும் கால் கப் பாலை அதன் தலையில் ஊற்றிக்கிளறவும். இப்படியே எல்லாப்பாலையும் கொஞ்சம் கொஞ்சமாகச் சேர்த்துக்கிளறவும். ஒவ்வொரு தடவை உதிரியாகும்போதும் ரவைக்கலவையில் நெய் பிரிந்து வரும். அதுவே பாலைச் சேர்க்க வேண்டிய பதமான நேரம் எனக்கொள்க. இத்தனை பணிவிடைகளுக்கிடையிலும் சர்க்கரை முறுகி விடாமல் ஒரு கண் வைத்துக்கொள்ள வேண்டும். அதே போல் அடுப்பையும் இறுதி வரை மெல்லிய தீயிலேயே எரிய விட வேண்டும். வறுக்கும்போது வெளுப்பாகவே இருக்கும் ரவையானது பாலைச் சேர்க்கச்சேர்க்க நிறம் கொஞ்சம் கொஞ்சமாக மாறி லேசான பொன்னிறத்துக்கு வர ஆரம்பிக்கும்.

எல்லாப்பாலையும் சேர்த்தபின் இறுதியாக நெய் மேலாக மிதந்து வரும் பொழுதில் அடுப்பை அணைத்து விட்டு கிஸ்மிஸை மேலாகத்தூவி மூடி விடவும். இச்சமயத்தில் பார்ப்பதற்கு ஷீரா “ரவை பாயசம்” போல் மாயத்தோற்றம் காட்டும். ஆனால், ஆறி அறை வெப்பநிலைக்கு வந்தபின் இறுகி உப்புமாவுக்கும் கேசரிக்கும் இடைப்பட்ட பதத்திற்கு வந்து விடும். இப்பொழுது அடிமேலாகக் கிளறி வைத்து பகவானுக்குக் கை காண்பித்தபின் இரண்டு மூன்று நாட்கள் வரை வைத்திருந்து உண்ணலாம், கெட்டுப்போகாது. விரும்பினால் குளிர்சாதனப்பெட்டியில் வைத்தும் உபயோகிக்கலாம்.

தீபாவளிக்கு பரிசாகக்கொடுக்கப்படும் உலர்பழங்களைத் தீர்த்துக்கட்ட இது சிறந்த வழி. எல்லாவற்றுக்கும் மேலாக உலர்பழங்களை விரும்பாத குழந்தைகளுக்கு ஊட்டச்சத்தை உடம்பில் சேர்க்க ஏற்றதொரு அருமையான வித்தை :-). ஆதலினால் ஷீரா செய்வீர்.

வால்: சமீபத்திய பிள்ளையார் சதுர்த்தியின்போது மகள் தன் கையால் நைவேத்தியத்திற்காக தயார் செய்தது இந்த ஷீரா. மோதகமும் அம்மணியின் கைவண்ணமே :-)

LinkWithin

Related Posts with Thumbnails