Monday, 29 October 2012

ஒவ்வொன்றும் ஒரு விதம்..

அனங்காம கொள்ளாம ஒரு இடத்துல இருந்தாத்தானே.. ஓரக்கண்ணால நாம கிட்டே வர்றோமான்னு பார்க்கறதும் நாம ஒரு எட்டு எடுத்து வெச்சாலும் சர்ர்ர்ருன்னு பறக்கறதுமா ஒரே அலப்பறை. என்னதான் பூனைப்பாதம் வெச்சு மெதுவா நாம நடந்தாலும் ஒரு அசைவிலேயே கண்டு பிடிச்சுருதுகள். 

இவர் cattle egret இனத்தைச் சேர்ந்தவர். பச்சைப்பசேல் புல்லை மேய்ஞ்சுட்டிருக்கும் ஆடு, மாடுகளோட பின்னாடியே வால் மாதிரி போயிட்டிருப்பார். அதுகள் புல் மேயும் போது வெளிப்படுற புழு, பூச்சிகள்தான் இதுக்கு உணவு.

இவங்க கொஞ்சம் சாதுவானவங்க. மும்பையைப் பொறுத்தவரை மக்கள் கூட்டத்தோடயே இருந்து பழக்கப்பட்டுட்டதாலயோ என்னவோ, ஆட்களைக் கண்டதும் ஓடறதில்லை. 'உன் வழியில் நீ போயிக்கோ'ன்னு கொஞ்சம் பெருந்தன்மையா விட்டுக்கொடுத்துட்டு அவங்க வேலையைப் பார்த்துட்டிருப்பாங்க. அடுக்களை ஜன்னல் கொஞ்சம் திறந்திருந்தா "இன்னிக்கு என்ன சமையல்?"ன்னு எட்டிப்பார்த்து விசாரிச்சுட்டுப் போற அளவுக்கு ஜகஜமா இருப்பாங்க :-)
முன் ஜாக்கிரதை முத்தண்ணாக்கள்ன்னா அது இவங்க ஆட்கள்தான். பத்தடி தூரத்துல இருந்தாலும் லேசான அசைவையும் கண்டுபிடிச்சு உஷாராயிடுவாங்க. 
தீபாவளிக்குப் பட்டுப்புடவை வாங்கிக்கொடுக்க மாட்டேன்னு ஊட்டுக்காரர் சொல்லிட்டாராம். உர்ர்ர்ர்ன்னு இருக்காங்க. கிட்டே போயி ஏதாச்சும் கேட்டா கடிச்சு வெச்சாலும் வெச்சுருவாங்க. வாங்க,.. அந்தப்பக்கமா போயிடலாம் :-)
இந்த கெட்டப்பை இன்னும் கொஞ்ச நாளைக்கு மெயிண்டெயின் செஞ்சாத்தான் பர்ஸ் பொழைக்கும் :-)
என்னா லுக்கு!!!..
வாஷிங் மெஷின்லேருந்து இப்பத்தான் வெளியில எடுத்தேன். பளபளக்கிறாங்க..
குடியிருப்பையடுத்து இருக்கும் சின்ன காலி மனையில் தற்காலிகமா இவங்க குடியிருக்காங்க. கிட்டத்தட்ட அஞ்சு நாளா முயற்சி செஞ்சு இதைக் கிளிக்கினேன். ரொம்பவும் கூச்ச சுபாவமுள்ள புல்புல் இவங்க. ஆனா, ஒரு செகண்டுக்கு மேல ஒரு இடத்துல இருக்கறதில்லை. இடம் மாறி மாறிப் பறந்துட்டே இருப்பாங்க. வழக்கமா பறவைகளைப் படம் பிடிக்கறப்ப ஷட்டர் ஸ்பீடு 1/1000 இருந்தாலே போதும், ஆனா, இவங்களைப் பிடிக்கறப்ப 1/2000 வரைக்கும் தேவைப்பட்டது. மேனுவல் செட்டிங்கில் 1/2000 ஷட்டர் ஸ்பீட், அப்பர்ச்சர் 4 அல்லது 5.6 வெச்சு எடுக்கும்போது ரிசல்ட் நல்லாவே கிடைக்குது.
"என்னடி மைனாம்மா உன் கண்ணுலே மையி.."
போகுமிடமெல்லாம் கூடவே போயி ஃப்ரெண்டு பிடிச்சு, ஏதாவது தின்னக் கொடுத்து "நீ ரொம்ப நல்லவ"ன்னு அதுகள்ட்ட பேரு வாங்கிட்டா போறும். பறவைகளும் விலங்குகளும் போட்டோ செஷனுக்கு நல்லாவே ஒத்துழைக்கும். இது என்னோட அனுபவம். இன்னொரு பறவைத்தொகுப்பையும் விரைவில் எதிர்பாருங்கள்..

Tuesday, 23 October 2012

நிரம்பும் வெளிகள்..

1.பிடிவாதம், ஈகோ போன்ற முகமூடிகளைக் கழற்றி வைத்து விட்டுப் பொது நலனை மட்டுமே குறியாகக் கொண்டு நடத்தப்படும் பேச்சு வார்த்தைகள் தோற்றுப்போவதில்லை.

2.விரும்பியவை கிடைக்காவிடினும் கிடைத்தவற்றைக் கொண்டு சுவையாய்ச் சமைப்பவர் திறமைசாலிகள். வாழ்க்கையும் அது போல்தான்.

3.ஒருவரது தவறுகள் மற்றவர்களுக்குப் படிப்பினைகளாக அமைந்து விடுகின்றன.

4.வேலையை "இன்று" செய்து முடிக்காமல், நாளை செய்யலாமென்று தள்ளிப்போடும் சோம்பேறிகளின் வாழ்நாள் "நாளை"கள் மட்டுமே நிரம்பியதாகக் கழிந்து விடுகிறது.

5.சுறுசுறுப்பாய்ச் செய்வதாய் எண்ணிப் பதட்டத்துடன் செய்பவர்களின் வேலைகள் நிறைவாய் அமையாமல் அள்ளித்தெளித்த கோலமாய் அமைந்து விடுகின்றன.

6.நேர்மறைச் சிந்தனைகளும், மனம் நிறைந்த சந்தோஷமும் தம்மைச் சுற்றியிருப்பவர்களையும் சிறிதளவாவது நிரப்புகின்றன.

7.கோடுகளை இழந்தாலும் கர்ஜிப்பதைப் புலி மறந்து விடுவதில்லை, அது போல் புற அடையாளங்களில் ஏற்படும் மாற்றங்கள் ஒருவரது அடிப்படைக் குணாதிசயங்களில் எந்தவொரு மாற்றத்தையும் ஏற்படுத்தி விடுவதில்லை.

8.மலர்ந்த சில பொழுதுகளிலேயே சருகாகி விடப்போகிறதென்பதற்காக மொட்டு மலராமல் இருப்பதில்லை. வாசம் பரப்பித் தன் கடமையைச் சரியாகச்செய்கிறது,

9.வளைந்து கொடுப்பதன் எல்லையென்பது ஒடிந்து விடும் புள்ளியில் தீர்மானிக்கப் படுகிறது.

10.மறந்து விட்டதாக நினைப்பவையெல்லாம் ஏதாவதொரு தருணத்தில் தம்மை வெளிப்படுத்திக் கொண்டுதான் இருக்கின்றன.

Wednesday, 17 October 2012

கை விடப்பட்டவை - இம்மாதப் போட்டிக்கான புகைப்படப் பகிர்வுகள்..

புறக்கணிக்கப்பட்டவை அல்லது கை விடப்பட்டவை(Abandoned).. இதுதான் 'பிட்' போட்டியின் இம்மாதத் தலைப்பு. புறக்கணிக்கப்படுவது, கை விடப்படுவதென்பது எப்போதும் வலி நிரம்பியதாகவே இருக்கிறது. ஆறறிவுள்ள மனிதர்கள் மட்டுமல்ல, உயிரற்ற பொருட்கள், பராமரிப்பற்ற கோயில்கள், கட்டிடங்கள், விலங்குகள் கூட இந்தப் பட்டியலில் இடம் பெறலாம்.

என்னவெல்லாம் கனவுகளோடு கட்ட ஆரம்பித்திருப்பார்களோ இந்த வீட்டை..
டீசலும் பெட்ரோலும் இப்படி விலை ஏறிக்கிட்டே போனா கடைசியில் இதுதான் நிலைமையோ?..
பாதியில் கைவிடப்பட்ட வழிபாட்டுத்தலம்..
காய்கறிக்கடையாக ஒரு காலத்தில் இருந்தவை..
கை விட்டவர்கள் மறுபடியும் வருவார்களா?.. ஏக்கத்தோடு காத்திருக்கிறது.
புறக்கணிக்கப்பட்ட வலியுடன் எத்தனைக் கதைகள் புதைந்து கிடக்கின்றனவோ ஒவ்வொன்றின் பின்னும்!!


Monday, 8 October 2012

எண்ணத்துளிகள்..


1.பிறர் தமது மனத்துயரை நம்மிடம் பகிர்ந்து கொள்ளும்போது, அவரது மன இருளைப்போக்கி ஆறுதலளிக்கும் சிறு விளக்கொளியாக நமது வார்த்தைகள் இருக்க வேண்டும். மாறாக வீட்டையே கொளுத்திச் சாம்பலாக்கும் பெரு நெருப்பாக இருந்து விடக்கூடாது.

2.மயக்கமும் கலக்கமும் வாழ்வில் குழப்பமும் ஏன் வருகிறது என்று எதிர்மறையாகச் சிந்திப்பதை விடவும் குழம்பிய குட்டையில்தான் மீன் பிடிக்க முடியும், கலங்கினால்தான் மனது நன்கு தெளியும், மயங்கி விழித்தபின் ஒரு தெளிவு நிச்சயம் பிறக்கும் என்று நேர்மறையாகச் சிந்திப்பது நல்லது...

3.போக்குவரத்துச் சிக்கலில் மாட்டிக் கொண்டிருக்கும்போதோ,பச்சை விளக்குக்காகக் காத்திருக்கும் போதோ, நேரமாவதைப் பற்றிச் சலிப்படைந்து பொறுமை இழப்பதில் பயனில்லை. மாறாகச் சற்றே நம்மைச் சுற்றி நோக்கினால், மரக்கிளையில் கீச்சிடும் குருவி, விளக்குக் கம்பத்திலமர்ந்து கொஞ்சும் மைனாக்கள், குழந்தையின் விரல்  பிடித்தோ, தோளில் சுமந்தோ அழைத்துச் செல்லும் பாசக்கார பெற்றோர்கள் போன்ற, அவசர உலகில் காணத்தவறும் இனிய தருணங்கள் பலவற்றைக் காண முடியும்.

4.வாழ்தல் என்பதென்னவோ இனிமையானதும் எளிமையானதுமாகத்தான் இருக்கிறது. அதைக் கடினமானதாய் மாற்றிக்கொள்ள மனிதன் பெருமுயற்சி எடுக்கும் வரை.

5.சின்னச்சின்ன முடிச்சுகளாலான கயிற்றைப் பற்றிக்கொண்டு மலையேறுவது போன்றதே வாழ்வில் வாய்ப்புகளைப் பற்றிக்கொண்டு சிறுகச்சிறுக நாம் அடையும் முன்னேற்றம். ஒரே நோக்கில் முன்னேறினால் இலக்கை அடைவது நிச்சயம்.

6.வாழ்க்கைப்படிகளோ அல்லது மாடிப்படிகளோ எவ்வளவு உயரத்திலிருந்து வீழ்கிறோமோ அவ்வளவுக்கு அவ்வளவு காயமும் அதிகம் படும்.. ஆகவே எப்போதும் விழிப்பாகவும் ஊன்றியும் அடியெடுத்து வைப்பது நன்று.

7.அன்பு, நம்பிக்கை, நேர்மை போன்ற அஸ்திவாரங்களின் மேல் எழுப்பப்படும் பாலங்களே உறவுகளைப் பிணைத்துப் பலப்படுத்துகின்றன.

8.வாழ்வில் வெற்றியடைந்த ஒவ்வொரு மனிதனும், அதற்காகத் திட்டமிடுகிறான், முயற்சிக்கிறான், கடுமையாக உழைக்கிறான், தன்னுடைய இலக்கை நோக்கிக் குறி தவறாமல் நடக்கிறான். ஆனால் அந்த வெற்றியை, முயற்சி செய்ய விரும்பாத சிலர் 'அதிர்ஷ்டம்' என்று அழைத்து அலட்சியப் படுத்துகிறார்கள்.

9.எதிலும் குறை காண்பவர்களைத் திருப்திப் படுத்துவதென்பது காதறுந்த ஊசியில் நூல் கோர்ப்பதற்குச் சமம்.

10.சாதாரணமாய் நினைத்து வீணே கழிக்கும் ஒவ்வொரு பொழுதும் காலத்தின் விலைமதிப்பற்ற பொக்கிஷங்களாகும். 


Friday, 5 October 2012

(சதுர்த்திக்)கொண்டாட்டமும் திண்டாட்டமும்.. (2)

"ஒண்ணிலிருந்து ஒன்பது வரைக்கும் கொண்டாட்டம்..
ஒன்பதுக்குப் பின்னே பத்தாம் நாளு திண்டாட்டம்"

புள்ளையார் சதுர்த்தியின் கடைசி நாளன்னிக்கு அவர் படற பாட்டை, நகைச்சுவைப் பேரரசு, கலைவாணர் திரு. என்.எஸ்.கே அவர்கள் மட்டும் இப்ப இருந்திருந்தா இப்படித்தான் பாடியிருப்பாரோன்னு தோணுது. முதல் நாள் பேண்ட் வாத்தியம் முழங்க,"கண்பதி பப்பா மோரியா"ன்னு வீட்டுக்கு அழைச்சுட்டு வந்து ஒன்பது நாளும் விதவிதமா மோதகங்கள், கொழுக்கட்டைகள்ன்னு படைச்சு ஒரு சுத்து பெருக்க வெச்சு, பஜனை, பூஜைன்னு கொண்டாடறோம். கடைசியில் அனந்த சதுர்த்தசியன்னிக்கும் ஊர்வலமா அழைச்சுட்டுப்போயி நீர் நிலைகள்ல கரைக்கிற(???) வரைக்கும் எல்லாம் நல்லாத்தான் நடக்குது. அப்புறம்தான் இருக்குது கொடுமையே.

நம்மூர் மாதிரி களிமண்ணுல செஞ்சாலாவது சட்டுன்னு கரைஞ்சு, மண்ணுல பிறந்த பிள்ளையார் திரும்பி வந்த இடத்துக்கே போயிருவார். ஆனா, எந்தப் பகுதி பிள்ளையார் ரொம்பப் பெருசா இருக்கார், ஜொலிக்கிறார்ன்னு ஒவ்வொரு பேட்டையிலும் நடத்திக்கிற போட்டி காரணமா பிளாஸ்டர் ஆஃப் பாரீசும், பெயிண்டுகளும் களிமண்ணோட இடத்தைப் பிடிச்சுக்கிச்சு. இவையெல்லாம் தண்ணீர்ல சட்ன்னு கரையாதுன்னு இப்போல்லாம் சின்னப் புள்ளைங்களுக்குக் கூட தெரியும். பலன்,... கரைச்சுட்டு வந்த மறுநாள், அங்கங்கள் சிதைவுற்ற நிலையில் பிள்ளையார்களை கடல் அலைகள் கரையில் சேர்க்குது. பத்து நாளும் நாம கொண்டாடி, பக்தியோட கையெடுத்துக் கும்பிட்ட கடவுள் இப்படிச் சிதைந்து கிடக்கறதைப் பார்க்க முடியலை.

சமீபத்தில் மும்பையின் மாஹிம் கடற்கரைக்குப் போயிருந்தப்ப, இப்படிச் சிதைந்து கிடந்த புள்ளையார்கள் கரையோரமா ஒதுங்கிக்கிடந்தாங்க. அதுல ஒருத்தர் முழுசா, கொஞ்சம் கூடச் சேதமில்லாம அப்படியே இருந்தார். இதைப் பார்த்ததும் அவரை மறுபடியும் கடல்ல கரைச்சுரலாம்ன்னு அங்க நின்னுட்டிருந்த சில பசங்க முயற்சி செஞ்சாங்க. ஆனா, பார்க்கத்தான் முழுசா இருக்காரே தவிர, தொட்டுத் தூக்குனா பொலபொலன்னு சிதைந்து விழுந்துருவார் போல தோணுச்சு. சரி,.. ஹை டைட் சமயம்தானே. எப்படியும் ஒண்ணு ரெண்டு மணி நேரத்துல கடல் தண்ணி கரை வரைக்கும் வந்துரும். அப்ப தானா தண்ணிக்குள்ள போயிருவார்ன்னு முயற்சியைக் கை விட்டுட்டுப் போயிட்டாங்க.
ஒவ்வொரு வருஷமும் இயற்கையைக் காப்போம்ன்னு கோஷமிட்டதன் பலனா மக்கள் இப்ப கொஞ்ச காலமா காகிதக்கூழில் செஞ்சு, இயற்கை வண்ணங்கள் தீட்டப்பட்ட புள்ளையார்களை புழக்கத்தில் கொண்டார ஆரம்பிச்சுருக்காங்க. நல்ல விஷயம்தான். மும்பையில் இந்த வருஷம் TV 9 என்ற சேனல்காரங்க அவங்க பந்தலில் இயற்கைப் பிள்ளையாரை வெச்சு வழிபட்டு, கரைக்கிறதுக்காகக் கொண்டாந்துருந்ததை போன பகுதியில் சொல்லியிருந்தேன்.

முந்தியெல்லாம் பிள்ளையாருக்கு அணிவிச்ச மாலைகளை ஒரு பையில் போட்டுக்கொண்டாந்து அதையும் நீர் நிலைகள்ல எறிஞ்சுருவாங்க. இப்ப குறைந்தபட்சம், அந்த நிர்மால்யங்களை எறிஞ்சு மாசு படுத்தறதையாவது குறைச்சுக்குவோமேங்கற விழிப்புணர்வு காரணமா, விஸர்ஜனுக்கு முன்னாடியே பூ, அருகம்புல் மாலைகள்ன்னு எல்லாத்தையும் கழட்டி ஆங்காங்கே வெச்சுருக்கும் நிர்மால்ய கலசத்துல போட்டுடறாங்க. கலசம் வைக்கப்படாத இடங்களில் தன்னார்வத் தொண்டர்கள் அதைச் சேகரிச்சுக்கும் பொறுப்பை ஏத்துக்கிட்டிருக்காங்க.
மும்பையைப் பொறுத்தவரைக்கும் 'லால்பாக்'ங்கற இடத்துல இருக்கற புள்ளையார் ரொம்பவும் புகழ் வாய்ந்தவர். மொதல்ல லால்பாக்ல சின்ன அளவுலதான் ஆரம்பிச்சது இப்ப பெரூசா மும்பையின் வி.ஐ.பிக்கள் தவறாம தரிசிக்கிற அளவுக்கு ஆகிட்டார். திருப்பதி மாதிரியே இங்கியும் மணிக்கூர் கணக்கா காத்திருந்துதான் தரிசனம் செய்ய முடியும். இவருக்குக் குவியற காணிக்கைகளுக்கு கணக்கே கிடையாது. மொத்த காணிக்கை வசூல் கோடிக்கணக்குல இருக்கும். இவருக்குன்னு சொந்தமா தங்க அணிகலன்களும் உண்டு. அருள் பாலிக்கிற அந்த தங்கக்கையே கதை கதையாச் சொல்லுமே :-)
மும்பையின் ஜூஹு கடற்கரையில் கரைக்கப்படும் பிள்ளையார்களை வானத்திலிருந்தும் தரிசிக்கலாம். தனியார் விமானக்கம்பெனிகளில் பணம் கட்டிட்டா அவங்களுக்குச் சொந்தமான ஹெலிகாப்டரில் கூட்டிட்டுப் போயி சுமார் பதினஞ்சு நிமிஷத்துக்குச் சுத்திக்காமிக்கறாங்க. ஒருத்தருக்கு 3,500 வரைக்கும் வசூலிக்கறாங்க. இது கம்பெனியைப் பொறுத்துக் கொஞ்சம் கூடக்குறைய இருக்கும். வருஷாவருஷம் இந்தச் சேவையைப் பயன்படுத்தும் மக்களோட எண்ணிக்கை கூடிக்கிட்டே போகுதாம்.

இந்தப் பண்டிகை சமயம் ஏற்படும் ஒலி மாசைப் பத்திச் சொல்லியே ஆகணும். அனந்த சதுர்த்தியன்னிக்கு இருக்கறதை விட அஞ்சாம் நாளான கௌரி கணபதியன்னிக்குத்தான் இது கூடுதலா இருக்கும். இந்த வருஷம் சுமார்115 டெசிபல் வரைக்கும் போனதா செய்திகள் கவலை தெரிவிக்குது. குறைஞ்ச பட்சம் மருத்துவமனைகள் அருகிலாவது அவங்க சத்தத்தையெல்லாம் கொஞ்சம் குறைச்சுக்கிட்டிருந்தா அது மனிதாபிமானம். ஆனா, கொண்டாட்டத்தின் உச்சக்கட்டத்தில் தன்னை மறந்து இருக்கறவங்க கிட்ட அதை எதிர்பாக்க முடியுமோ?..

குடியிருப்புப் பகுதிகளில் இரவு நேர ஒலியளவு 45டெசிபலாகவும் அதுவே அமைதிப்பகுதிகள்ல 40 டெசிபல் மட்டுந்தான் இருக்கணும்ன்னு விதி. ஆனா, பட்டாசுகளும் வெடிக்கப்பட்டதால் 120லேருந்து 125 வரைக்கும் ஒலியளவு இருந்ததாம். வழக்கமான ட்ரம் பத்தாதுன்னு டீஜேயும் சேர்ந்துக்கிட்டது. நானும் பையரும் மாஹிம் போயிட்டுத் திரும்பறப்ப எங்க வண்டி ட்ராபிக் ஜாமில் மாட்டிக்கிட்டது. திடீர்ன்னு வண்டியே அதிர்றமாதிரி திடும்.. திடும்ன்னு தூக்கிப்போடுது. காதைப்பிளக்கற மாதிரியொரு சத்தம். என்னன்னு பார்த்தா விசர்ஜன் ஊர்வலத்துல டீஜேயும் உபயோகப்படுத்தறாங்க. சத்தம்ன்னாலே அலர்ஜியாகற பையரால காதுல வெச்ச கையை கால் மணி நேரத்துக்கு எடுக்க முடியலை. அந்த இடத்தைக் கடந்ததும்தான் அப்ப்பாடீன்னு மூச்சு வந்தது. நமக்கே இப்படீன்னா பிள்ளையாரின் காது என்னாச்சுதோ பாவம். மராட்டிய மக்களின் பாரம்பரிய நடனத்தின்போது உபயோகப்படுத்தற லெஸீம்களை வெச்சுக்கிட்டு அழகா ஒரு கூட்டம், ஒரே மாதிரியான காஸ்ட்யூமில் ஆடிக்கிட்டே போனதை ரசிக்க முடிஞ்சது.

எத்தனை நிறை குறைகள் இருந்தாலும் அதையெல்லாம் மறந்துட்டு சந்தோஷமா நட்புகளோடும், உறவுகளோடும் கொண்டாடறதுக்குத்தான் பண்டிகைகள். மும்பையும் இதோ மும்பையின் ஹீரோவுக்கு தற்காலிக விடை கொடுத்து அனுப்பிய கையோட அடுத்ததா வரப்போற பண்டிகையான நவராத்திரியைக் கொண்டாடறதுக்கு இப்பவே தயாராக ஆரம்பிச்சுட்டுது. 

"கணபதி பப்பா மோரியா.. புட்ச்சா வர்ஷி லௌக்கர் யா"

Wednesday, 3 October 2012

இரண்டாமிடமும், முத்துகளில் கோர்க்கப்பட்டவையும்.. இந்த வாரம் மகிழ்ச்சி வாஆஆஆரம் :-)))

பிட்டில் மாசா மாசம் நடக்கும் போட்டிக்கு நானும் அசராம பிட்டு பிட்டா போட்டுட்டிருந்தேன், என் சில படங்களும் அசராம முதல் சுற்று வரைக்கும் ஜெயிச்சு வந்துட்டு, அதுக்கப்புறம் வெற்றி கரமா வெளியேறிட்டிருந்தன. ஆர்வம் இருந்தாலும் நேரம் ஒத்துழைக்காததால இடையிடையே 'டூ' விட்டுட்டு ஒதுங்கியிருந்தாலும் காமிரா பிடிச்ச கை சும்மாயிருக்குமா என்ன?.. மறுபடி போட்டியில கலந்துக்க ஆரம்பிச்சேன். "இதனால் தாங்கள் சொல்ல வருவது என்னவோ?"ன்னுதானே கேக்கறீங்க. சொல்றேன்... அதுக்குத்தானே இவ்ளோ பில்டப்பு :-))

ஆகவே நண்பர்களே,.. 'பிட்' நடத்தும் போட்டிகளில், செப்டம்பர் மாதப் போட்டிக்கான  தலைப்பான வெற்றிடத்துக்காக நான் அனுப்பிய ஊஞ்சல் இரண்டாமிடத்தை வென்றிருக்கிறது என்பதைத் தெரிவித்துக் கொள்வதில் பெருமகிழ்ச்சியடையும் அதே நேரத்தில், என்னை வாழ்த்திய நல்ல உள்ளங்களான உங்களுக்கும் படத்தைத் தேர்வு செய்த நடுவர் அவர்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகளைக் காணிக்கையாக்கும் அதே சமயத்தில், மகிழ்ச்சியான தருணங்கள் இரண்டொன்றை உங்களிடம் பகிர்ந்து கொள்ள நான் கடமைப்பட்டிருக்கிறேன் என்பதை இந்த மேடையில் நான் சொல்லிக்கொள்கிறேன்.

இரண்டாம் இடம் பிடிப்பது அமைதிச்சாரல்...
ஜெயித்த மற்றவர்களுக்கும் வாழ்த்தை இங்கே சொல்லிக்கலாம்.

ஃபேஸ்புக்கில் புகைப்படப்பிரியன் குழுமத்தில் வாராவாரம் ஏதாவதொரு தீமில் புகைப்படப் போட்டி நடக்கும். ஒருவர் தினமும் ஒரு படம் வீதம் ஏழு படங்களை இதில் பதிந்து போட்டியிடலாம். எந்தப் படத்துக்கு நிறைய லைக் விழுதோ அது அந்த வாரத்தோட கிங் அல்லது குயினாகத் தேர்ந்தெடுக்கப்படும். அது போக சிறந்த பத்துப் படங்கள் முத்துக்களாகவும் தேர்ந்தெடுக்கபடும்.

"அலைகள்" என்ற தலைப்பில் அனுப்பிய இந்தப் படம் அந்த வாரத்தோட பத்து முத்துகளில் ஒன்றாக ஜொலித்தது.
"பாலங்கள்"என்ற தலைப்பில் அனுப்பிய பாந்திரா-வொர்லி பாலத்தின் இந்தப்படம் சென்ற வார முத்துகள் பத்தில் ஒன்றாகக் கோர்க்கப்பட்டது.
இந்தப் பாலத்துக்கு ஃப்ளிக்கரிலும் நல்ல வரவேற்பு கிடைச்சது :-)

புகைப்படப்பிரியனில் இந்த வாரப் போட்டியோட தலைப்பு "ரோஜா(கள்). நிறையப்பேர் விதவிதமான ரோஜாக்களைப் பதிந்து ஆல்பமே கமகமன்னு மணக்குது. உங்களுக்கும் ஆர்வமிருந்தா கலந்துக்கலாம்.. கலக்கலாம்.

Monday, 1 October 2012

(சதுர்த்திக்)கொண்டாட்டமும் திண்டாட்டமும்.. (1)

மும்பைன்னதும் மக்களுக்கு இங்கே  கோலாகலமா நடக்கற பிள்ளையார் சதுர்த்திக் கொண்டாட்டங்கள் நினைவுக்கு வராம இருக்காது . பத்து நாளும் மும்பை முழுக்க ரொம்பவும் சந்தோஷமா கொண்டாடற இந்தப் பண்டிகைக்காக மக்கள் வருஷம் முழுக்கக் காத்திருப்பாங்க. ஒவ்வொரு தடவையும் பண்டிகை முடிஞ்சதும், அடுத்த சதுர்த்தி எப்போ வரும்ன்னு ரொம்ப ஏக்கமா இருக்கும். ஒவ்வொரு பகுதிகள்லயும் குடியிருப்புகள்லயும் இருக்கற பிள்ளையார்களை தினமும் நண்பர்கள் குழுமத்தோட போயிப் பார்த்துட்டு வர்றது ரொம்பவே ஜாலியான விஷயம்.  கொண்டாட்டங்கள் முடிஞ்சு புள்ளையாரை வழியனுப்பி வெச்சுட்டு வந்தப்புறம் அந்தக் காலியிடத்தைப் பார்க்கறதுக்கு மனசுக்கு ரொம்பவே கஷ்டமா இருக்கும்.

சின்னதுலேர்ந்து பெரூசு வரைக்கும் விதவிதமான அளவுகள்ல வாங்கிட்டு வரும் கணபதிகளை அவரவர் வசதிக்கேற்ப மூணு, அஞ்சு ஏழுன்னு ஒற்றைப் படை எண்ணிக்கையில் வரும் தினங்கள்ல கரைப்பாங்க. சில வீடுகளில் வெறும் ஒண்ணரை நாள் மட்டும் வெச்சுட்டு சத்ய நாராயணா பூஜை முடிஞ்சதும் கரைச்சுருவாங்க. எங்க குடியிருப்பில் ஏழு நாள் வரைக்கும் வெச்சிருந்தோம். அஞ்சாம் நாள் சத்ய நாராயண பூஜை அமோகமா நடந்தது. ஏழாம் நாள்  மஹா கணபதி ஹோமம், நட்சத்திர பூஜை, லக்ஷ்மி பூஜை எல்லாம் நடத்தி, மதியம் மஹா பிரசாதமா சாதம், சாம்பார், உசிலி, வடை, அப்பளம், ஊறுகாய், மோர், பால் பாயசம், பூரி பாஜியோட புள்ளையார் சாப்பாடு போட்டார். அன்னிக்கு சாயந்திரமே அவரை வழியனுப்பிட்டு வந்ததும் என்னவோ, கலகலன்னு இருந்த கல்யாண வீடு எல்லா விருந்தாளிகளும் கிளம்பினப்புறம் ஒரு வெறுமையோட இருக்குமே. அப்டி இருந்தது..

இது எங்க குடியிருப்புக்கு இந்த வருஷம் வந்த புள்ளையார். ராஜ கம்பீரமா தலைப்பாகையோட எவ்ளோ அழகாருக்கார்.
முந்தி மாதிரி இல்லாம இப்பல்லாம் ரூம் போட்டு ஜிந்திச்சு புள்ளையாரை புதுப்புது டிசைன்கள்ல உருவாக்கறாங்க. எல்லா மண்டலிகள்லயும் போயிப் பார்த்துட்டு வர்றதுங்கறது முடியாத காரியம். சுருக்கு வழியா, கரைக்கிற இடத்துக்கே போயிட்டா நமக்கு அங்கியே வந்து தரிசனம் கொடுத்துட்டு அப்றமாத்தான் கைலாயம் போவார். இப்பல்லாம் புள்ளையாருக்கு மேட்சா மண்டலிக்காரங்களும் காஸ்ட்யூம் போட்டுக்கறாங்களாம். யாராச்சும் கூட்டத்துல தொலைஞ்சு போனா கண்டு பிடிக்க ஈஸியா இருக்கும் பாருங்க :-). இங்கியும் அப்டித்தான் வயலட் நிறமே.. வயலட் நிறமேன்னு புள்ளையாரும் பக்தர்களும் மேட்சிங்கா இருக்காங்க. கிரிக்கெட்ல மட்டுந்தான் மேட்ச் ஃபிக்ஸிங் இருக்கணுமா என்ன?.. இங்கியும் இருக்குது :-))


என்னோட காமிராவான பீரங்கி அடிக்கடி மக்கர் செய்ய ஆரம்பிச்சுருச்சு. சரின்னு கடாசிட்டு, நிக்கான் 5100க்கு மாறிட்டேன். புதுக்காமிராவால நிறையப் புள்ளையார்களைப் பிடிச்சுட்டு வர்றதுக்காக மும்பையின் கிர்காம் சௌபாட்டி(பீச்)க்குப் போலாம்ன்னு நானும் ரங்க்ஸும் ப்ளான் செஞ்சுருந்தோம். லால்பாக்ச்சா ராஜா, மும்பைச்சா ராஜா எல்லோரும் வருவாங்க, பார்க்கலாம்ன்னு ஐடியா. ஆனா, திடீர்ன்னு பையரோட காலேஜுக்கு அவசரமா நான் போயே ஆக வேண்டிய சூழல்,. அதனால என்னோட அஸிஸ்டெண்ட் போட்டோகிராபரான ரங்க்ஸை அனுப்பி வெச்சேன்.. ஆட்டோவுலயே எல்லாப் படங்களையும் சுட்டுட்டு வந்துருக்கார். முதல் படம் மட்டுந்தான் என்னோடது. மீதி எல்லாம்  என் மறுபாதியின் கை வண்ணம் :-))
முன்னாடி கணபதி இருக்கார். பின்னாடி என்ன பார்க்கறாங்க????
ஆனைமுகனுக்கு ஆளுயர அருகம்புல் மாலை..
ஒட்டிப்பிறக்காத ட்வின்ஸ்.. அடையாளம் கண்டுபிடிக்கறது சுலபம்தான் :-))
எங்கூரு ராஜா.. தங்கக்கையால அள்ளி அள்ளிக்கொடுப்பார் வரங்களை :-)
தேங்காய்ல ஒரு மூடி இங்கே இருக்கு. இன்னொண்ணு எங்கே??
ஞானப்பழப் பஞ்சாயத்தே இன்னும் தீரலை.. அதுக்குள்ள தேங்காயைக் கொண்டாந்துருக்காரே இந்த நவீன நாரதர் :-))
க்ருஷ் மாமா மாதிரியே வேஷம் போட்டிருக்கேன்.. நல்லாருக்கா?..
புள்ளையாரப்பா.. காணாமப்போன உன்னோட வாகனத்தை கூகிளில் தேடுனா சட்ன்னு கிடைச்சுரும். அதை விட்டுட்டு எங்களைத் தேடச்சொல்றது ஞாயமாப்பா?.. குனிஞ்சு தேடித்தேடி முதுகு வலிக்குது..
TV-9 சேனல் காரர்கள் கொண்டாந்த சுற்றுச்சூழலுக்கு மாசு விளைவிக்காத புள்ளையார்.
புள்ளையாரே,.. மின்வெட்டு இனிமே இருக்காதா. காமெடி பண்ணாதேப்பா :-)))
தேமேன்னு அரச மரத்தடியில உக்காந்துருந்தேன். கூட்டிட்டு வந்து இங்க வெச்சுட்டாங்க.
(தொடரும்.... இல்லையில்லை, அடுத்த பகுதியில் முடியும் :-))

LinkWithin

Related Posts with Thumbnails