Friday 24 December 2010

விழுதுகள் இருக்கும்வரை...

'பன்னிரண்டு.. பதிமூணு.. பதினாலு.....'

ஒரு பழைய துப்பட்டாவை ரெண்டாக மடித்து, தரையில் விரிக்கப்பட்டிருந்தது. துணிகளை ஒவ்வொன்றாக எண்ணிப்போடப்போட அவனும் கூடவே உதடுபிரியாமல் எண்ணிக்கொண்டிருந்தான். கணக்கு தப்பிவிடக்கூடாதே!!.. அப்புறம் ஒரு துணி குறைஞ்சாலும் வீட்டுக்காரங்ககிட்டயும், முதலாளிகிட்டயும் திட்டு வாங்க வேண்டிவருமே.

'பதினஞ்சு'.. என்ற முத்தாய்ப்புடன் கடைசி துணியும் போடப்பட்டதும், துப்பட்டாவின் முதல் ரெண்டு நுனிகளையும் சேர்த்து குறுக்காக இழுத்துக்கட்டிவிட்டு, மறு நுனிகளையும் இழுத்துக்கட்டி முடிச்சுப்போட்டான். பின்,.. நுனியில் ட்வைன் நூலில் கட்டப்பட்டிருந்த சின்ன அட்டைத்துண்டில் முந்தைய எண்ணை பேனாவால் அழித்துவிட்டு '15'  என்று எழுதி சுழித்தான். மூட்டையை தூக்கி சைக்கிள் காரியரில் வைத்துக்கொண்டே, ' நாளைக்காலைல கொண்டாந்து தந்துடுப்பா' என்ற குரலுக்கு தலையசைத்துவிட்டு கடையை நோக்கி சைக்கிளை மிதித்தான்.

டேபிளின் ஒரு ஓரத்தில், கணக்குப்புத்தகம் ஒன்றை வைத்துக்கொண்டு குனிந்து ஏதோ எழுதிக்கொண்டிருந்த வேலு, கண்ணாடியினூடாக கண்களை மட்டும் நிமிர்த்தி அவனைப்பார்த்துவிட்டு எழுதுவதை தொடர்ந்தார். அருகே போனவன், அன்றைக்கு எடுத்துவந்த துணிகளின் விவரத்தை ஒவ்வொன்றாக சொல்லச்சொல்ல, புத்தகத்தில் வீட்டு நம்பரையும் அதற்கு நேராக துணிகளின் எண்ணிக்கையையும் எழுதிக்கொண்டு அதன் பக்கத்தில் வசூலிக்கவேண்டிய பணத்தையும் எழுதிவைத்தார். கணக்கில் அவர் எப்பவுமே கறார். ஒரு ரூபாய் என்றாலும் அடுத்தவன் காசு அவர்கிட்ட வைத்துக்கொள்ளமாட்டார். அந்தப்புத்தகத்தைத்தான் அயர்ன் செய்யப்பட்ட துணிகளை வீடுகளில் டெலிவரி கொடுக்கும்போது பசங்களிடம் கொடுத்துவிடுவார். இன்னிவரைக்கும்,... ஒரு துணி தொலைஞ்சதுன்னோ, பணவிஷயத்திலோ ஒரு குழப்பமும் வந்ததில்லை.

'மீரா ட்ரை க்ளீனர்ஸ்'.. அவருடைய மூத்த பெண்ணின் பெயரால் தொடங்கப்பட்ட கடை. துணிகளுக்கு பெட்டிபோட்டுக்கொடுப்பது, விலையுயர்ந்த புடவைகளை உலர்சலவை செய்து கொடுப்பது, மற்றும் விரும்பிக்கேட்பவர்களுக்கு துணிகளை ஸ்டார்ச் செய்து கொடுப்பது என்று தொழிலை விஸ்தரித்திருந்தார். இன்றைக்கு ஓரளவு வசதி வந்துவிட்டபோதிலும் ஆரம்பத்தில் கைவண்டியில் சென்று பெட்டிபோட்டுக்கொடுத்த காலத்தை அவர் என்றுமே மறந்ததில்லை. படித்துமுடித்துவிட்டு வேலை தேடிக்கொண்டிருந்த காலத்தில் சோறுபோட்ட தெய்வமல்லவா அது.

அப்போது ஒருதடவை ஊருக்கு வந்திருந்த உறவினர் ஒருவரிடம் அவரது அம்மா, ' எப்பா!!.. இவனையும் ஒன்னோடவே பட்டணத்துக்கு கூட்டிட்டுப்போயி ஒரு வழியை காமிச்சு விடேன். ஒனக்கு புண்ணியமா போவும்' என்று வைத்த வேண்டுகோளை தட்டமுடியாமல் போகவே கையோடு கூட்டிவந்தார். வந்தபின்தான் பட்டணத்துவாழ்வும், எவ்வளவோ அலைந்தபின்னும் வேலை கிடப்பது குதிரைக்கொம்பு என்ற நிதர்சனமும் புரிபட, மேற்கொண்டு என்னசெய்வது என்று புரியாமல் திகைத்து நின்றார். திரும்பவும் எந்தமுகத்தை வைத்துக்கொண்டு ஊருக்கு போவது. அம்மா ஊர்க்காரர்கள் முகத்தில் எப்படி விழிப்பாள் என்ற கவலையும் சேர்ந்துகொண்டது. அப்போதெல்லாம் எந்நேரமும் வீட்டிலிருக்கப்பிடிக்காமல் பக்கத்திலிருந்த மைதானத்துக்குப்போய் போகிறவருகிறவர்களை வேடிக்கை பார்த்துக்கொண்டிருப்பது வழக்கம்.

அப்படி போனதில்தான் அங்கே ஒரு இஸ்திரி வண்டியை வைத்திருந்த நீலகண்டன் பழக்கமானான். அவனுடன் உட்கார்ந்துகொண்டு பேசிப்பொழுதைப்போக்கியதில் இந்தத்தொழிலின் நெளிவுசுழிவுகளை நன்றாகவே கற்றுக்கொண்டுவிட்டார். புத்தருக்கு போதிமரத்தடியில் ஞானம் வந்ததாம்... வேலுவுக்கு வேப்பமரத்தடியில் ஞானம் வந்தது. யாரையும் ஏமாற்றக்கூடாது.. பொய்சொல்லக்கூடாது.. திருடக்கூடாது... மற்றபடி ஆகாயத்துக்குக்கீழே எந்தத்தொழிலும் இழிவானதல்ல என்று முடிவு செய்தார். உறவினரிடம் சொல்லிவிட்டு சில நாட்களிலேயே அவரும் ஒரு மொபைல் இஸ்திரிக்கடையை ஆரம்பித்துவிட்டார். அந்த ஏரியாவில் நல்லபெயர் கிடைத்தது... ஒரு நாள் வங்கிக்கடனுதவியுடன் ஒரு கடையையும் திறந்துவிட்டார்.

கடைன்னா எதுவும் பெரிசா கிடையாது.. பத்துக்கு பன்னிரண்டில் ஒரு அறை. அதில் ரெயில்வே பெர்த்தை முக்காலளவு அளந்து நறுக்கியமாதிரி நாலு மேசைகள். முன்பக்க மேசை சமயத்தில் கல்லாவாகவும் அவதாரம் எடுக்கும்.ரெண்டு அங்குல உயரத்தில்,..பருத்திப்பஞ்சடைத்த முண்டுமுடிச்சில்லாத மெத்தைகள் அதன்மேல். அதுக்குமேல மெத்தைக்கு உறைபோட்டமாதிரி ஒரு வெள்ளைத்துணி. ஒவ்வொரு மேசையின் மேலயும் ஒரு இஸ்திரிப்பெட்டி. அதன் தொப்புள்கொடிமாதிரி நீண்டுசெல்லும் ஒயர் மேலேயிருக்கும் மின்சார இணைப்பில் போய் முடியும். பகலில் வேலையிடமாயிருக்கும் மேசைகள் இரவானால் அங்கே வேலை செய்யும் பையன்களுக்கு சப்ரமஞ்சமாகிவிடும்.

சாயந்திரம் துணிகளை சரிபார்த்து அடுக்கிக்கொண்டிருந்தபோது, அவர் மகன் வந்தான். எப்போதாவது அத்திபூத்தமாதிரி எட்டிப்பார்ப்பான். தோளுக்கு மேல் வளர்ந்துவிட்டால் தோழன் என்று சொல்லுவார்கள். இவன் தோழனாகவும் இல்லை.. மகனாகவும் இல்லை. அப்பா செய்யும் தொழில் என்னவோ அவனுடைய கவுரவத்தையே குலைப்பதாக அவனுக்கு நினைப்பு. ' இந்தக்காசில்தான் உங்களையெல்லாம் படிக்கவெச்சேன், வளர்த்திருக்கேன். எது உன் உடம்பை வளர்த்ததோ அதை கேவலமா நினைக்காதேடா' என்று ஒரு நாள் பொரிந்துவிட்டார். ஆனாலும், அப்போது அந்தப்பணம் மட்டும் அவனுக்கு வேண்டியிருந்தது.

"அண்ணாச்சி...." தலையை சொறிந்துகொண்டு வந்து நின்றான் பையன்களில் ஒருத்தன்.

"என்னடா...??"

" நம்மூர்ல அம்மன் கோயில்ல பூக்குழி எறங்குதாகல்லா.. அதுக்கு போகணும். ஒரு பதினஞ்சு நாளு லீவு வேணும்"

"அண்ணாச்சி... இப்பத்தான் அம்மை போன் பேசுனா... 'கண்ணுக்குள்ளயே நிக்க.. ஒரு எட்டு வந்து மொகத்தைக்காட்டிட்டு போ..' அப்டீன்னு அழுவுறா.." இன்னொருத்தன் வாய்க்குள்ளயே முனகினான்.

"ஏண்டா... பூக்குழிக்கு இன்னும் ஒரு வாரம் இருக்கே.. அதுக்குள்ள ஏன் பறக்கறே.. எனக்கும்தான் அது சாமி... கையில இருக்கிற வேலையை முடிச்சுக்கொடுத்துட்டு, எல்லார்ட்டயும் லீவுசொல்லிட்டு, அப்புறம் போகும்போது எல்லோரும் ஒண்ணுமண்ணா போலாம் சரியா...??"

பையன்கள் ஒருத்தருக்கொருத்தர் முகத்தைப்பார்த்துக்கொண்டு அப்படியே நின்றார்கள்.எல்லோருக்கும் பின்னால் நின்றுகொண்டிருந்த நாராயணன் முன்னால் வந்தான்.. 'இல்ல அண்ணாச்சி.. நாங்க வேலையை விட்டே போப்போறோம். உங்ககிட்ட எப்படி சொல்றதுன்னு தயங்கித்தான் ஊருக்கு போனப்புறம் அங்கிருந்தே தகவல் சொல்லலாம்ன்னுதான் நெனைச்சேன். பரவால்ல.. எங்க கணக்கை தீர்த்துடுங்க. நாங்க வேற வேல செஞ்சு பொழச்சிக்கலாம்ன்னு முடிவெடுத்துருக்கோம்...'

"இப்படி திடீர்ன்னு வந்து கேட்டா எப்படிடா...??. இங்க வேலையெல்லாம் அப்படியப்படியே கிடக்குதுல்லா.. ரெண்டு நாளு முன்கூட்டியே சொல்றதுக்கென்ன??.. நான் ஏதாவது வேறஏற்பாடு பண்ணியிருப்பேன்லா...."

ஒன்றும் சொல்லாமல் அவர்கள் நிற்பதை பார்த்ததுமே,.. ஏற்கனவே பேசித்தான் செய்கிறார்கள். இவர்கள் முடிவை மாற்றிக்கொள்ள மாட்டார்கள் என்று புரிந்துபோனது. 'சரிடா... எங்கிருந்தாலும் நல்லாருங்க. உங்க சம்பளத்தை நான் உங்க வீட்டுக்கே அனுப்பிடுறேன். பேங்குக்கு போயித்தான் எடுத்தாரணும்..' என்று சொல்லவும், காத்திருந்தவர்கள் போல ஏற்கனவே தயாராக இருந்த உடமைகளை எடுத்துக்கொண்டு போய்விட்டார்கள்.

கடையினுள் பார்வையை சுழற்றிய வேலுவுக்கு மலைப்பாக இருந்தது. பெட்டி போடப்படவேண்டிய துணிகள் மலைமாதிரி குவிந்து கிடந்தன..டெலிவரி செய்யப்படவேண்டியவை பக்கத்து அலமாரியில் ஒன்றின்மேல் ஒன்றாக அடுக்கிவைக்கப்பட்டிருந்தன. பார்க்கப்பார்க்க அவர்மனதில் உணர்வுகள் போட்டிபோட்டுக்கொண்டு வந்தன.

'இப்படி திடீர்ன்னு தனியாவிட்டுட்டானுகளே..' என்றது ஒரு மனசு.

'வாடிக்கையாளர்களெல்லாம் கோவிச்சுப்பாங்களே.. நேரத்துக்கு டெலிவரி தரணுமே. இத்தனை நாளு இல்லாம இப்பப்போயா கெட்டபேரு வாங்கணும்..' என்று இன்னொரு மனசு பதட்டப்பட்டது.

அலைபாய்ந்துகொண்டிருந்தவர்,. படீரென்று எழுந்தார்.. ' போங்கலே... நீங்கல்லாம் இல்லேன்னா நானொண்ணும் ஓய்ஞ்சு போகமாட்டேன். இன்னும் என் கையில தெம்பிருக்கு. உழைக்க மனசுல வலுவிருக்கு.ரெண்டு நாளு ராத்திரி பகல்னு வேலை செஞ்சா எல்லாத்தையும் சரிசெஞ்சுற மாட்டனா. மொதலாளியாயிட்டாலும் நான் இன்னும் தொழிலாளிதாம்...'.. பரபரவென்று துணிமூட்டையொன்றை அவிழ்த்துக்கொட்டி, துணியொன்றை எடுத்து தண்ணீரை ஸ்ப்ரே செய்துவிட்டு, இஸ்திரிப்பெட்டியின் பட்டனை ஆன் செய்தார்.

பக்கத்து டேபிளிலும் பெட்டி ஆன் செய்யப்படுவதைப்பார்த்து திரும்பிப்பார்த்தார். இந்தக்களேபரத்தில் அவர் கவனிக்காமல் போன அவர்மகள் துணிகளை உதறிப்போட்டுக்கொண்டிருந்தாள்.. ஒரு புன்னகையுடன் அவளைப்பார்த்துவிட்டு திரும்பியவர் கண்களில்..  அவர் மகன் கடைக்குள் வந்து சட்டையை கழட்டி ஆணியில் தொங்கப்போட்டுவிட்டு, முன் பக்க மேசையில் நிற்பது தெரிந்தது...

என் விழுதுகள் இருக்கும்வரை நான் பட்டுப்போகமாட்டேன்... அந்த ஆலமரம் சொல்லிக்கொண்டது மனசுக்குள்.....

டிஸ்கி:  என்னுடைய வலைப்பூ நேற்றுடன் முதல்வருடம் முடிவடைந்து இன்று இரண்டாம் வயதில் அடியெடுத்து வைக்கும் நிகழ்வுக்காக எழுதப்பட்டது சற்றே பெரிய இந்த சிறுகதை. ஒரு வருடமாக இதைப்போலவே பொறுமையுடன் என்னுடைய எழுத்துக்களை வாசித்ததற்கும், பின்னூட்டமிட்டு ஆதரவளித்ததற்கும்,.. பின் தொடர்ந்து ஊக்குவித்ததற்கும் ஒரு வார்த்தையில் அடக்கிச்சொல்லிவிட முடியாத நன்றிகள்..







41 comments:

Unknown said...

சிறுகதை நல்லாயிருக்குங்க..

Unknown said...

ஓராண்டு நிறைவுக்கு
எமது நல்வாழ்த்துக்கள்.
இரண்டாம் ஆண்டில் இன்னும் கலக்கலாய் சாதிக்க வேண்டும்.

வெங்கட் நாகராஜ் said...

சிறுகதை நன்றாக இருக்கிறது. முதலாம் ஆண்டுக்கு வாழ்த்துக்கள். இன்னும் பல ஆண்டுகள் உங்கள் பதிவுகள் வெளிவர வாழ்த்துக்கள்.

ராமலக்ஷ்மி said...

மிக அருமையான கதை. நிறைவான முடிவு.

முதல் வருட நிறைவு. மிக்க மகிழ்ச்சி.

அந்த ஆலமரம் போலவே பதிவுகள் தழைந்தோங்க என் வாழ்த்துக்கள் சாரல்.

முத்துலெட்சுமி/muthuletchumi said...

கதை நன்று..

வருட நிறைவுக்கு வாழ்த்துக்கள்.. :)

நண்டு @நொரண்டு -ஈரோடு said...

வாழ்த்துக்கள்

ஜெய்லானி said...

ஹேப்பி மெனி மோர் ரிடன்ஸ் ஆஃப் டே ...!!

((இதுவும் உங்களுக்கு பிறந்த நாள் மாதிரிதானே..!! ))


கதை ..ரியலா இருக்கு :-))

எல் கே said...

கதை அருமை சாரல். முதல் வருடம் வெற்றிகரமாக முடித்ததற்கு வாழ்த்துக்கள்

ADHI VENKAT said...

சிறுகதை ரொம்ப நல்லாயிருக்கு. முதல் ஆண்டு முடிந்து இரண்டாம் வருடத்தில் அடி எடுத்து வைத்திருக்கும் உங்களுக்கு என் வாழ்த்துக்கள்.

Mukil said...

வெற்றிகரமாக முதலாமாண்டை நிறைவு செய்தமைக்கு வாசகர்களின் பாராட்டுகள்! இந்த ஆண்டும் சிறப்பாக அமைய வாழ்த்துகள்! :-))

அனைவருக்கும் கிறிஸ்துமஸ் மற்றும் ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துகள்! :-))

ஆங்கிலப் புத்தாண்டு ஜனவரி ல தானே! மாறலியே! அவ்வ்வ்...

pudugaithendral said...

ippathan shankranthiku neenga haldi kumkum koduthu koopitta mathiri iruku. athukulla oru varushama!!

congrats. keep going

ஆமினா said...

கதை சூப்பர்!!

பிறந்த நாள் வாழ்த்துக்கள் வலைபூவுக்க்கு!!!!

கோமதி அரசு said...

விழுதுகள் தாங்கும் ஆலமரம் அருமை அமைதிச்சாரல்.

கதை நல்லா இருக்கு.

இரண்டாம் ஆண்டுக்கு வாழ்த்துக்கள்.

ஹுஸைனம்மா said...

Congrats and best wishes. A heart- touching story!! (Sorry for English)

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...

சிறுகதை சூப்பர்..தலைப்பு அருமை!!!

அன்புடன்,

ஆர்.ஆர்.ஆர்.
https://twitter.com/sridar57#

சாந்தி மாரியப்பன் said...

வாங்க பாரத் பாரதி,

உற்சாகமூட்டும் உங்கள் வார்த்தைகளுக்கு நன்றி.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க வெங்கட்,

நன்றி..

சாந்தி மாரியப்பன் said...

வாங்க ராமலஷ்மி,

ரொம்ப நன்றி..

சாந்தி மாரியப்பன் said...

வாங்க முத்துலெட்சுமி,

நன்றிப்பா..

சாந்தி மாரியப்பன் said...

வாங்க நண்டு,

வாழ்த்துக்களுக்கு நன்றி.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க ஜெய்லானி,

என்னதான் கற்பனைன்னாலும் கொஞ்சூண்டு உண்மையும் கலந்துடுதே. அதான் ரியல்லா இருக்கு :-))))

நன்றி.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க எல்.கே,

நன்றி.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க கோவை2தில்லி,

வாழ்த்துக்களுக்கு நன்றி.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க முகிலரசி,

எத்தனை சட்டம் கொண்டுவந்தாலும் வருஷக்கணக்கா கொண்டாடுறதை மாத்தமுடியுமா... ஜனவரியிலதான் புத்தாண்டு :-)))))

நன்றி.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க தென்றல்,

ஆமாம்ப்பா,.. இதோ அடுத்த ஹல்திகுங்கும் கொடுக்க ரெடியாயிட்டிருக்கேன் :-))

நன்றி.

அன்புடன் நான் said...

சிறுகதையை மிக சிறப்பா எழுதியிருக்கிங்க... பாராட்டுக்கள்.

அன்புடன் நான் said...

ஓராண்டு நிறைவுக்கும்.... இரண்டாம் ஆண்டு துவக்கத்திற்கும்.... வாழ்த்துக்கள்
தொடர்ந்து எழுதுங்க.

ஹேமா said...

நிறைவான வாழ்த்தும் மகிழ்ச்சியும் சாரல் !

Asiya Omar said...

கதை அருமை.வாழ்த்துக்கள்.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க ஆமினா,

வரவுக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி..

சாந்தி மாரியப்பன் said...

வாங்க கோமதி அரசு,

நன்றிம்மா..

சாந்தி மாரியப்பன் said...

வாங்க ஹுஸைனம்மா,

எந்த மொழியில வாழ்த்தினா என்னங்க!! மனசுதான் முக்கியம் :-))

நன்றிப்பா.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க அப்துல் காதர்,

விருதுக்கு நன்றிகள் சகோ..

சாந்தி மாரியப்பன் said...

வாங்க ஆர்.ஆர். மூர்த்தி,

மிக்க நன்றி.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க சி.கருணாகரசு,

ரொம்ப நன்றிங்க..

சாந்தி மாரியப்பன் said...

வாங்க ஹேமா,

உங்க மகிழ்ச்சி என்னையும் தொற்றிக்கொண்டுவிட்டது :-))

நன்றி.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க ஆசியா,

நன்றிப்பா.

Thenammai Lakshmanan said...

கதை அருமை சாரல்.. முதலாம் ஆண்டுக்கு வாழ்த்துக்கள். இன்னும் பல்லாண்டுகள் தொடரட்டும் உங்கள் எழுத்துப் பணி..:))

வல்லிசிம்ஹன் said...

அன்பு சாரல், எத்தனை அருமையான கதைம்மா. வெகு அழகு.
உணர்ச்சிகள் வெளிப்படுத்திய அமைதி உங்கள் பெயருக்கு ஏற்ற முடிவு. மனம் ந்நிறைந்த வாழ்ட்த்துகள் சாரல். நல்ல எண்ணங்கள் புறப்படும் எப்பொழுதும் மன எப்பொழுதும் மகிழ்ச்சி நிறைந்து இருக்கணும்.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க தேனம்மை,

பதிலெழுத ஒரு வருஷம் ஆகிட்டுது.. மன்னிப்பு :-))

வருகைக்கு நன்றி.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க வல்லிம்மா,

நிறைவாயிருக்கு உங்க வார்த்தைகள்..

நன்றிம்மா.

LinkWithin

Related Posts with Thumbnails