Saturday, 10 April 2010

கலாட்டா கல்யாணம்...

உங்க வாழ்க்கைத்துணையை எப்போ?..எப்படி சந்திச்சீங்கன்னு, ... கொசுவத்தி ஏத்தச்சொல்லி, நம்ம புதுகைத்தென்றல் கேட்டுருந்தாங்க.. நம்ம கதையைவிட சுவாரஸ்யமான சம்பவம் இருக்கவே இருக்கு.. எங்க குடும்பத்துல இன்னிக்கும், கலாட்டா செய்யப்படுற சம்பவம் இது..

அது கறுப்பு வெள்ளையிலிருந்து ,நிறங்களுக்கு புகைப்படங்கள் மாறிக்கிட்டிருந்த காலம்.என்னுடைய கடைசி தாய்மாமா(இருக்கிறதே ரெண்டு பேர்தான்..)அப்போ டிகிரி முதல் வருஷம் சேர்ந்திருந்த காலம். திடீர்ன்னு ஒரு நாள்.. தாத்தாவுக்கு உடம்பு சரியில்லாமபோய், ஆஸ்பத்திரியும் வீடுமா அலைஞ்சு... ஒரு மாசத்துக்கப்புறம் தேறி வந்தார்.உடனே எங்க ஆச்சி .."டேய்.. உங்க அப்பா உசிரோட இருக்கும்போதே ஒனக்கு ஒரு கல்யாணத்தை செஞ்சு போடணும்ன்னு நினைக்கிறோம்"ன்னு ...அஸ்திரத்தை கையில் எடுத்துட்டாங்க.மாமாவோட எதிர்ப்பை பொருட்படுத்தாம,பொண்ணும் பாக்க ஆரம்பிச்சுட்டாங்க. அப்பல்லாம், கிராமங்களில் வீட்டுல உள்ளவங்க பாத்துட்டு வந்து,பிடிச்சிருந்தாதான்.. மாப்பிள்ளை, பொண்ணை பாக்க முடியும்.

ஒரு நாள் எங்க அம்மா,மற்றும் பக்கத்து வீட்டு அக்காவோட, நாங்களும் படம் பாக்க போயிருந்தோம்.பாதி படத்துல, பக்கத்து வீட்டு அண்ணன் வந்து, 'அக்கா.. உங்க ஊர்ல இருந்து உங்க தம்பியும் இன்னும் ரெண்டு பேரும் வந்து, வீட்டுத்திண்ணையில் ஒக்காந்திருக்காங்க.. முகமே சரியில்லை"ன்னு சொல்லவும், ஒடனே வீட்டுக்கு கிளம்பிட்டோம். அம்மாவுக்கு மனசுல என்னன்னவோ பயத்தோட கூடிய குழப்பங்கள் ஓடுது.. வீட்டுக்கு வந்ததும்.. தாத்தாவுக்கு ஒன்னுமில்லைன்னு தெரிஞ்சதும் வந்த ஆசுவாசம், அடுத்த வினாடியே புயலாய் வந்த செய்தியால் குலைஞ்சிடுச்சு.

'தம்பியை காணோம்.. எல்லா இடங்களிலும் தேடியாச்சு.. எல்லா சொந்தக்காரங்க வீடுகள், அவன் சினேகிதர்கள் வீடுகள் எல்லா இடங்களுக்கும் போய் பார்த்தாச்சு."

"வயக்காட்டுல போய் பாத்தீங்களா??" அம்மா கேட்டாங்க. ரெண்டு மாமாக்களும் தாத்தாவுக்கு உதவியா விவசாயத்தையும் கவனிச்சிக்கிடதுண்டு.

"மொதல்ல அங்கதான் போய் பாத்தோம்.. ஏன் இவன் இப்படி செஞ்சான்?.. அதுவும் இந்த நேரத்துல?.."

அப்பதான் விஷயம் வெளிய வந்துச்சு. தாத்தாக்கள் சும்மா.. ஒரு பொண்ணை விசாரிக்க போயிருக்காங்க. போன இடத்துல பொண்ணை பிடிச்சு போயிட்டுது. அவங்களுக்கும் நல்ல சம்பந்தம்ன்னு சந்தோஷம். நிச்சயதாம்பூலம்ன்னு ஊரைக்கூட்ட வேண்டாம். வரதட்சிணைன்னு எதுவும் வேண்டாம்ன்னு அங்கியே முடிவெடுத்து, பக்கத்துகடையில வெத்திலை பாக்கு வாங்கி, மாத்திக்கிட்டு சம்பந்திகளாயாச்சு. மறு நாள் மாப்பிள்ளை வீடுபாக்க ,அவங்க அண்ணன் வர்றதா இருந்திச்சு. இதான் சந்தர்ப்பம்ன்னு,மாமா எஸ்ஸாகிட்டார்.

எங்கூருக்கு பக்கத்து ஊர்லதான் சித்தி வீடு. அங்க போய் பாக்கலாம்ன்னு கிளம்பினாங்க. .. ஆப்டுக்கிட்டார் மாமா. ஏண்டா இப்படி செஞ்சன்னு கேட்டப்ப,

"பொண்ண அப்பாவும், சித்தப்பாக்களும் பாத்தா போதுமா?.. நான் பாக்க வேண்டாமா.. அதுவுமில்லாம என் சொந்தக்கால்ல நின்னப்புறம்தான் கல்யாணமெல்லாம்"

"இப்ப மட்டுமென்ன வாடகை கால்லயா நிக்கிற?.. எல்லாம் இருக்கிற சொத்தை பாத்துக்கிட்டா போதும்"

அப்புறமா எல்லோரும் சமாதானப்படுத்தி, பொண்ணை பாக்க சம்மதிச்சாங்க.மாமா அதுக்கும் ஒரு கண்டிஷன் போட்டார். நான் மட்டும் தனியா போய், இன்னாருன்னு காட்டிக்காமலேயே பாத்துட்டு வருவேன்னார்.அவரு விருப்பப்படியே, பொண்ணு வீட்டுக்கு நெருக்கமான ஒரு அண்ணா, மாமாவை தன்னோட ஃப்ரெண்டுன்னு சொல்லி பொண்ணுக்கு அறிமுகப்படுத்தி வெச்சார். அப்ப.. பேச்சுவாக்குல மாமா ஒரு பேனாவை கொடுத்து, "இது புது பேனா, இப்பத்தான் வாங்கினேன்.. சரியா எழுதுதான்னு கொஞ்சம் எழுதிப்பாத்து சொல்லுங்க"ன்னு பொண்ணு கிட்ட கொடுக்க, பொண்ணு தன்னோட பேர எழுதிப்பாத்துட்டு, நல்லா இருக்குன்னாங்க.

"மொதமொத எழுதறீங்க ஏதாச்சும் சாமி பேர எழுதுங்க"ன்னு புள்ளையாரோட இன்னொரு பேரான, தன்னோட பேரச்சொல்ல... அவங்களும் வெள்ளந்தியா எழுதினாங்க. "அடடா.. நம்ம கல்யாணபத்திரிகையிலும் இதே மாதிரி எழுதச்சொல்லிடலாம்"ன்னு குட்டை உடைக்கவும் அப்பத்தான் விஷயம் தெரிஞ்சு, பேனாவை தூக்கிப்போட்டுட்டு பொண்ணு ஓரே ஓட்டமா வீட்டுக்குள்ள ஓடிட்டாங்க. அப்புறமென்ன!!!.. கல்யாணமாகி,அவங்க எங்க அத்தையா வர்றதுவரையும், வந்தபின்னாடியும் இதையே சொல்லித்தான் ஓட்டுவோம். அத்தை கூட சிலசமயங்களில்," இவரை ஏன் மறுபடியும் கண்டுபிடிச்சி கூட்டி வந்தீங்க?.."ன்னு எங்க கூட சேர்ந்துகிட்டு வாருவாங்க.


9 comments:

எல் கே said...

எங்க உங்க கதைய சொல்ல சொன்ன உங்க மாமா கதைய சொல்லி எஸ்கேப் ஆகிடீங்க. நல்லாத்தான் இருந்துச்சி

//இவரை ஏன் மறுபடியும் கண்டுபிடிச்சி கூட்டி வந்தீங்க?.."ன்னு/

கல்யாணம் வரைக்கும்தாங்க ரங்கமணி ஆட்டம். அப்புறம் ரங்கமணி சாம்ராஜ்யம்தான்

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) said...

சூப்பர் ஸ்டோரிங்க... நெஜமாவே நல்லா இருக்கு... அதுலயும் கடசீல உங்க அத்த சொன்ன டயலாக் டாப்பு. எந்த ரங்கமணிய எந்த தங்கமணி வாரினாலும் அங்க நம்ம ஒட்டு First
சொன்னதுக்கு நன்றி... அப்படியே உங்க கதையையும் கொஞ்சம் சொல்லுங்களேன்

துபாய் ராஜா said...

// LK said...
ஏங்க உங்க கதைய சொல்ல சொன்ன உங்க மாமா கதைய சொல்லி எஸ்கேப் ஆகிடீங்க....//

ரிப்பீட்டேய்ய்ய்ய்ய்ய்.... :))

Chitra said...

மாமா கதையே இவ்வளவு நல்லா இருக்கே, உங்கள் கதை, இன்னும் சூப்பரா இருக்குமே. இல்ல, இது தான் உங்கள் கதையா? ஹி,ஹி,ஹி,ஹி.....

sathishsangkavi.blogspot.com said...

உங்க அனுபவம் அருமைங்க...

pudugaithendral said...

எங்க உங்க கதைய சொல்ல சொன்ன உங்க மாமா கதைய சொல்லி எஸ்கேப் ஆகிடீங்க.//

உங்க கதைதான் வரணும். அஸ்கு புஸ்கு விடமாட்டோம்ல

:))

முத்துலெட்சுமி/muthuletchumi said...

Chitra said...
மாமா கதையே இவ்வளவு நல்லா இருக்கே, உங்கள் கதை, இன்னும் சூப்பரா இருக்குமே//


ரிப்பீட்டேய்ய்ய்ய்ய்ய்.... :))

வெங்கட் நாகராஜ் said...

உங்க கதை தான் வேணும். ஆமாம் சொல்லிட்டேன்.

வெங்கட் நாகராஜ்

சாந்தி மாரியப்பன் said...

என் கதையை கேக்க எவ்ளோ ஆர்வம்!!!கண்கள் பனித்தன.. இதயம் கனிந்தது. மக்களே, நீங்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் கலாட்டா கல்யாணம் பாகம் -2 விரைவில்.அதாவது அடுத்த போஸ்ட்.(சொந்த செலவில் சூனியம் வெச்சிக்கிறீங்க..வேறென்ன சொல்ல :-D :-D)

LinkWithin

Related Posts with Thumbnails