வென்றவர்களிடமும் தோற்றவர்களிடமும் இரண்டே கதைகள்தான் உள்ளன. உலகிற்குத் தெரிந்த கதை ஒன்று. அவர்களும் மனசாட்சியும் மட்டுமே அறிந்த இன்னொன்று.
யாரோ எரித்துக்கொண்டிருக்கும் சொற்தீயின் அடையாளம் தெரியாத சாம்பல் துகள்கள் படிந்து சிதைக்கின்றன இன்னொருவரின் வாழ்வை. அத்தனை பேருக்குமாய்ப் பெய்யும் ஒரு மழை துளிர்க்கச்செய்கிறது மறுபடியும்.
வானத்தின் சுருக்குப்பையில் ஔிந்துகொண்டு மண்ணின் தாகத்தை வேடிக்கை பார்க்கிறது மழை. வெயிலைச் சேமிக்கும் மேகம் கானல்நீரைக் குடித்துவிட்டு நகர்கிறது.
இல்லையெனாமல் கொடுத்துக்கொண்டிருந்ததால், கர்ணனைப்பற்றி உலகம் புரிந்து கொண்டது. ஒருமுறையேனும் கொடுக்க மறுத்திருந்தால் உலகத்தைக் கர்ணன் புரிந்து கொண்டிருப்பான்.
தோல்வியடையும்போது நம்மீது இரக்கங்கொண்டு நமக்கு ஆறுத்ல் கூற நம்மை விடச் சிறந்த நட்பு வேறில்லை. அதே சமயம், தன்னிரக்கம் என்பது சுய பரிதாபச்சேற்றில் மூழ்குவது அல்ல; சுய அன்பெனும் கயிற்றின் உதவியால் மீட்டுக்கொள்வதாம்.
உழைப்பு என்பது ஏதோ ஒரு இலக்கை அடைவதற்கான வழி மட்டுமல்ல, நம்மால் எவ்வளவு தூரம் பயணிக்க முடியும் என்பதை நமக்கே அறியவைக்கும் தேடலும் அதுவே.
தடைகளை எதிர்கொள்ளும் துணிவிருந்தால், தடுக்கி விழவைக்கும் பாதையில் கூட பயணித்து சரியான இலக்கைச் சென்றடையலாம்.
ஒருபோதும் நியாயத்தின் பக்கம் நில்லாமல் தனக்கு யாரால் லாபம் என்பதை மட்டும் கருதி அவர்கள் பக்கம் நிற்கும் சுயநலமிகளை அடையாளம் கண்டு விலக்குவதும், வாழ்க்கைப்பாடங்களில் ஒன்றே.
இருள் கண்டு அஞ்சாது பொறுமையுடன் சரியான தருணத்திற்காய்க் காத்திருந்து ஆர்ப்பாட்டமில்லாது மலர்ந்து மணம் பரப்பி அனைவரையும் கவரும் இந்த மல்லிகையின் அமைதியான ஆளுமைதான் என்னே!
தன்முன் வந்து நிற்கும் அழகையும் விகாரமாய்க் காட்டும் ரசமிழந்த துருப்பிடித்த கண்ணாடிக்கும், பிறரின் நிறைகளைக் காணாது குறைகளையே காணும் விகாரங்கொண்ட மனதுக்கும் வித்தியாசமில்லை.

2 comments:
// ஒருமுறையேனும் கொடுக்க மறுத்திருந்தால் உலகத்தைக் கர்ணன் புரிந்து கொண்டிருப்பான். //
அட்சரலட்சம். எல்லா வரிகளுமே அருமை. .எப்படி இப்படி யோசிக்கிறீர்கள்? ஒவ்வொரு வரியும் அனுபவங்களால் நனைக்கப்பட்ட ஆழமான வரிகள்.
வாங்க ஸ்ரீராம்,
மிக்க நன்றி _/\_
Post a Comment