Thursday 11 July 2013

ஈச்சை... பேரீச்சை!!..

ஒரு காலத்தில் "பழைய இரும்புச்சாமான், ஈயம் பித்தாளைக்குப் பேரீச்சம்பழேம்ம்ம்ம்ம்" என்று கூவிக்கொண்டு வருபவரைக் கண்டால் குழந்தைகளுக்கு ஒரே உற்சாகம்தான். திருவிழாக்களிலும், பழைய பொருட்களை வாங்குபவரிடமும் மட்டுமே பேரீச்சம்பழம் கிடைத்துக்கொண்டிருந்த காலமது. இப்போது மாதிரி அப்போதெல்லாம் பிரபலமான கம்பெனிகளின் விதவிதமான பேரீச்சம்பழம் மற்றும் சிரப்புகளின் டப்பாக்கள் கடைகளில் மலிந்து கிடக்காது. எங்கள் கம்பெனிகளின் தயாரிப்புகள்தான் சிறந்தவை, அவைகளையே வாங்குங்கள் என்று வலிந்து வாய்க்குள் திணிக்காத  குறையாய் அலறும் விளம்பரங்கள் எதுவும் அப்போது வரவில்லை. இப்பவும்கூட கோயில் திருவிழாக்கள் என்றால் அங்கே பேரீச்சம்பழக் கடைகள் இல்லாமல் இருக்கின்றனவா என்ன?. நாங்களெல்லாம் சுசீந்திரம் தேரோட்டத்திற்குப் போவதே ஓலைப்பெட்டியில் பேரீச்சம்பழமும் வாங்குவதற்காகத்தான். அதெல்லாம் அப்போது காணாப்பண்டம் :-)) "இதெல்லாம் பாலைவனத்தில் மட்டுந்தான் வளருமாக்கும்" என்ற நினைப்பு வேறு அதை அபூர்வமாக்கி வைத்திருந்தது.

இங்கே வந்து இத்தனை நாட்களானபின்னும் அப்படியான நினைப்புதான் இருந்து கொண்டிருந்தது. சில சமயங்களில் அரைப்பக்குவமான மஞ்சள் நிறப் பழக்கொத்துகளைக் காண நேரும்போது கூட அது பேரீச்சம்பழம்தான் என்று அடையாளம் காணத் தெரியவில்லை. மால்களிலும் சூப்பர்மார்க்கெட்டுகளிலும் ஃப்ரெஷ் பழம் வேறு வழக்கமான அடர்ந்த பிரவுன் கலரில் இருந்து தொலைத்தால் என்னதான் செய்வது :-))) சத்தியமாக மரத்தையே போட்டுத்தாண்டினாலும் நம்பியிருக்க மாட்டேன். பின்னொரு காலம் அடர்சிவப்பில் மார்க்கெட்டில் மின்னிய பழங்களைக்கண்டதும், வாங்கி வந்தேன். இனிப்பும் லேசான துவர்ப்புமாக நன்றாகத்தான் இருந்தது. அப்பொழுது கடைக்காரரிடம் கேட்டபோதுதான் இது பாலைவனத்தில் மட்டுமல்ல, நன்கு பராமரித்தால் உள் நாட்டிலும் வளரும் என்றார். 

ஆச்சரியமாக இருந்தது.. முதன்முதலில் பேரீச்சை மரத்தை நேரில் கண்டபோது. அதுவும் அந்தச்சமயத்தில் பழங்களோடு இல்லாமல் இருந்திருந்தால் அப்போதும் தெரிந்துகொண்டிருக்க இயலாது. பட்டிக்காட்டாள் முட்டாய்க்கடையைப் பார்த்ததைப்போல் பார்த்துக்கொண்டேயிருந்தேன். நவிமும்பையில் பேலாப்பூரிலிருக்கும் croma-வின் வெளியே சுமார் இருபது மரங்களாவது இருக்கும். கடைக்காரர்கள் நன்றாகவே பராமரிக்கிறார்கள்.  வெயில் காலத்தில் பாளை விட்டுப்பூத்துக் காய்க்க ஆரம்பித்து மழைக்காலம் முழுவதும் கனிகளை அள்ளியள்ளித்தருகிறது பேரீச்சை மரம்.
பாளைச்சிரிப்புடன்..
குலை குலையாய்ப் பேரீச்சைக்காய்..
ஒரு மரப்பழங்களுக்கு ஒரு கொத்து பதம்..

பேரீச்சம்பழத்தில் இரும்புச்சத்து இருப்பது எல்லோரும் அறிந்ததே. வீட்டில் யாருக்காவது, முக்கியமாக கர்ப்பிணிப்பெண்களுக்கு இரும்புச்சத்து குறைபாடு இருப்பதாக டாக்டர் சொல்லி டானிக்குகளை எழுதிக்கொடுத்தாலும், நாமும் நம் பங்கிற்கு கீரை முதலியவற்றுடன் பேரீச்சம்பழங்களையும் கொடுக்க ஆரம்பிப்பதுண்டு. என்னதான் நல்ல சாப்பாடு சாப்பிட்டாலும் குழந்தைகள் சரியான வளர்ச்சியில்லாமல் புஷ்டியாக இல்லாமல் இருந்தால் உடனே, "நாலஞ்சு பேர்த்தம்பழத்த பால்ல போட்டு கொதிக்க வெச்சு மசிச்சுக் கொடுக்கப்டாதா.. புள்ள நல்லா கிண்ணுன்னு ஆகிருவானே" என்று விவரமறிந்த பெரியவர்கள் சிபாரிசும் செய்வதுண்டு. பழத்தைத் தேனில் ஊறவைத்துக் கொடுத்தாலும் குழந்தைகள் வலுவாக இருப்பார்கள்.

இப்படிப் பேரீச்சம்பழத்தைப் பாலில்  வேக வைத்துச்சாப்பிடுவது நிறையக் குறைபாடுகளை நீக்குகிறது. முக்கியமாக இதயத்திற்கும் நல்லது.  இதனுடன் ஒன்றிரண்டு பாதாம்பருப்புகளையும் சேர்த்துக் கொதிக்க வைத்துச்சாப்பிட்டால் நரம்புத்தளர்ச்சி நீங்கும், ஞாபகசக்தியும் கூடும். இதுபோகவும் இந்தப் பழத்தில் கால்சியம், விட்டமின் , பி, பி2, பி5 மற்றும் விட்டமின் சத்துக்கள் நிறைந்திருக்கின்றனனவிட்டமின் ஏ இருப்பதால் கண்பார்வையில் கோளாறுகள் இருப்பவர்கள் இதைத்தொடர்ந்து சாப்பிட்டால் மிகவும் நல்லது. 
  

மங்களகரமாய் ஆரம்பம்..

பேரீச்சம்பழம் பனை வகையைச் சேர்ந்ததுதான். பொதுவாகப் பாலைவனம் அல்லது வறண்ட மண்ணில்தான் வளரும் என்றாலும், நம் நாட்டில் வேறு எங்கேனும் வளர்கிறதா என்று தெரிந்துகொள்வதற்காக கூகிளாத்தாவை நாடியபோது, தகவல்களைப் புட்டுப்புட்டு வைத்தார்.

தண்ணீர் வளமுள்ள நம் தென்னிந்தியாவில் அதுவும் திண்டுக்கல் அருகே முள்ளிப்பாடியில்  வளர்த்துச் சாதனை புரிந்திருக்கிறார் சகோ.திருப்பதி. திண்டுக்கல் நகர்ப்பகுதியில் நாகல் நகர், மெங்கிள்ஸ் ரோடு பகுதிகளில் தானாகவே வளர்ந்திருந்த மரங்களைப்பார்த்துவிட்டு, இதை ஏன் நாம் பெரிய அளவில் முயற்சி செய்து வளர்க்கக்கூடாது என்று எண்ணினார். அப்போதுதான் குஜராத்திலிருக்கும் பேரீச்சம்பண்ணையைப் பற்றியும் அறிந்து கொண்டார். அங்கே நடத்திய விசாரணையில் 'பரி' என்னும் வகை மரத்திலிருந்து பறித்ததுமே சாப்பிட ஏதுவானது என்று தெரிந்து கொண்டார். இப்போது மார்க்கெட்டில் கிடைப்பதும் இந்த வகைதான். (சில வகைகளில் 'டாரின்' பால்சத்து கூடுதலாக இருக்கும். சாப்பிட்டால் தொண்டை கரகரக்கும், இவைகளைப் பதப்படுத்தாமல் சாப்பிட முடியாது) லண்டனிலிருந்து கொண்டு வந்த திசுக்கன்றுகளை குஜராத் பண்ணையின் உதவியுடன் வளர்த்து, பின் ஊருக்குக் கொண்டு வந்து சுமார் 12 ஏக்கர் நிலத்தில் பயிரிட்டிருக்கிறார்.

பேரீச்சமரம் வளர அடிப்படைத்தேவையாக 40 டிகிரி வெப்பமும், தண்ணீர் வசதியுமே போதுமானது. நம்மூர் வெப்பநிலையும் கிட்டத்தட்ட இவ்வளவுதானே இருக்கிறது.  சொட்டு நீர்ப்பாசன முறையில் தண்ணீரும் கிடைத்ததில் மூன்று வருடங்களில் காய்க்க ஆரம்பித்து இப்போது ஒரு மரத்திற்கு சுமார் 20 கிலோ அளவில் பழங்கள் கிடைக்கிறதாம். கேரளாவிலிருந்தெல்லாம் ஆட்கள் வந்து வாங்கிப்போகிறார்களாம். இங்கே மும்பையிலும் இப்போது அதிகமாகக் கிடைக்க ஆரம்பித்திருக்கிறது. அதுவும் இப்போது நோன்பு காலமாதலால் விலை மலிவாகவும் கிடைக்கிறது. சீசன் ஆரம்பத்தில் கிலோ 200 ரூபாய் இருந்தது இப்போது 80 ரூபாயாக இருக்கிறது.

சீசன் சமயங்களில் பேரீச்ச மரத்திலிருந்து 'ரஸ்' (நம்மூர் பதநீர் மாதிரி) இறக்குவதுண்டு. இதிலிருந்தும் வெல்லம் தயாரிக்கப்படுகிறது. இதைக் கதைக்களமாகக் கொண்டு அமிதாப், நூதன் நடித்து வெளியான 'சௌதாகர்' என்ற இந்திப்படம் ரொம்பவே பிரபலம். படத்தை விட 'சஜ்னா ஹை முஜ்ஜே.. சஜினா கே லியே' என்ற பாட்டு ரொம்பவே பிரபலம். அழகுசாதன விளம்பரங்கள் ஒன்றிலும் இந்தப்பாட்டை உபயோகப்படுத்தியிருந்தார்கள்.


பழைய இரும்புச்சாமான், ஈயம் பித்தாளைக்கு பேரீச்சம்பழேம்ம்ம்ம்..

பதப்படுத்தப்பட்ட பழங்கள் ஒருவகை ருசி என்றால், 'பரி(றி)'த்த பழங்கள் இன்னொரு வகை ருசி. எக்கச்சக்கமான இனிப்புடன் அடிநாக்கில் லேசான துவர்ப்புடன் அருமையாக இருக்கிறது. நாமெல்லாம் அப்படியே சாப்பிடும் ரகம் என்றாலும் சமையல் ராணிகள் பக்குவப்படுத்தப்பட்ட பழங்களை வைத்து விதவிதமாகச் சமைத்து விருந்தே படைத்து விடுவார்கள். வழக்கமாகச் செய்யும் அல்வா, மில்க்ஷேக், லட்டு தவிரவும் எக்கச்சக்கமான தீனிகள் இங்கே மார்க்கெட்டில் கிடைக்கின்றன. நம்மூர் சிங்கம் விற்கும் பழங்களைத்தவிரவும் அரபு நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் ஃப்ரெஷ் பழங்களும் மால்களில் கிடைக்கின்றன. ஏதாவது புதிதாக சாப்பாட்டுஅயிட்டம் செய்யலாம் என்று வாங்கி வந்தால் 'என்ன செய்யலாம்?' என்று சிந்திக்கும்போதே கைக்கும் வாய்க்குமாக வேலை கொடுத்து விடுகிறது அதன் ருசி :-)) அதனாலென்ன?.. 'அடுத்த தடவையாவது' என்ற வார்த்தை எதற்குத்தான் கண்டு பிடிக்கப்பட்டிருக்கிறதாம். ஆகவே அடுத்த தடவையாவது :-))))

34 comments:

அமுதா கிருஷ்ணா said...

super..பேரீச்சம்பழம் பற்றிய செய்தி முழுவதும் தெரிந்து கொள்ள முடிந்தது. ஃபோட்டாக்களும் அருமை. 'சௌதாகர்'அமிதாப் ஈக்களை விரட்டி கொண்டே வெல்லம் விற்பாரே அந்த படமா? எப்போதோ தூர்தர்ஷனில் பார்த்த ஞாபகம்.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க அமுதா,

அதேதான்.. நானும் மனிஷா கொய்ராலா நடிச்ச சௌதாகர்தான்னு எதிர்பார்த்து பார்க்க ஆரம்பிச்சேன். அமிதாப்ன்னதும் சின்ன ஏமாற்றம். இருந்தாலும் அமித்ஜிக்காக பார்த்தேன். படம் ஏமாத்தலை. சுவாரஸ்யமாத்தான் இருந்தது.

ரசிச்சதுக்கு நன்றி.

இமா க்றிஸ் said...

அபூர்வமான படங்களோடு அருமையான தகவல்கள் கொடுத்திருக்கிறீங்க. மிக்க நன்றி.

sathishsangkavi.blogspot.com said...

நல்லதொரு தகவல்...

பால கணேஷ் said...

பேரீச்சையை விரும்பி சாப்டிருக்கேன். மரம் இப்பதான் உங்களால காணக்கிடைச்சது. தகவல்களும் சூப்பர்.

வை.கோபாலகிருஷ்ணன் said...

படங்களும் விளக்கங்களும் பேரீச்சைப்பழங்கள் போலவே சுவையாகயும் இனிப்பாகவும் உள்ளது. பாராட்டுக்கள்.

ராஜி said...

பேரீச்சம்பழம் பற்றி அறிந்தேன்

Menaga Sathia said...

பகிர்வுக்கு நன்றிக்கா!! அருமையான தகவல்கள் + புகைப்படம்!!

ராமலக்ஷ்மி said...

படங்களும் தகவல்களும் அருமை.

வெங்கட் நாகராஜ் said...

நல்ல தகவல்கள். படங்கள் அசத்தல்....

Dhiyana said...

அருமையான தகவல் மற்றும் படங்கள்.. நன்றி..

ADHI VENKAT said...

பேரீச்சை மரம், பழம் எல்லாமே சூப்பராக இருந்தது...தகவல்களும் அருமை.

தில்லியில் பனிக்காலத்தில் பேரீச்சைகள் கொட்டிக் கிடக்கும்..காபூலிலிருந்து வரும்...

'பரிவை' சே.குமார் said...

பேரீச்சம் பழம் பற்றி படங்களுடன் அழகியான பகிர்வு.

அரைக்காயாக மரத்தில் இருந்து பறித்துச் சாப்பிடுவது அலாதி சுவைதான் அக்கா...

வல்லிசிம்ஹன் said...

சென்னைக்கு வந்தா நம்மவீட்டிலயும் பார்க்கலாம் பேரிச்சை மரத்தை.
எப்பொழுது பழம் வரும்னு தெரியவில்லை
உங்காள் படங்களைப் பார்க்கும்போது பழம் சாப்பிட ஆசை வருகிறது. துபாயில் பாதாமும் பேரீச்சையும் சேர்த்தே விற்பார்கள். அதுதான் நாங்கள் வாங்கி வரும் பரிசுப்பொருட்கள்.

ஸ்ரீராம். said...

பேரீச்சையில் இல்லை பெரிய இச்சை. மதுரை அழகர் கோவில் பக்கம் மரங்கள் பார்த்த நினைவு. சவுதாகர் படத்தில் 'சஜ்னா ஹை முஜே' பாடலை விட 'தேரா மேரா ஸாத் ரஹே...' பாடல் எனக்கு ரொம்ப்.....ப......ப் பிடிக்கும். என் அலைபேசியில் அந்தப் பாட்டு இருக்கிறது.

ஹுஸைனம்மா said...

ச்சே.. எங்கே பாத்தாலும் பேரீட்சை மரங்கள் இங்கே.. பார்த்துப் பார்த்து அலுத்துப் போனதுல இப்படி ஒரு பதிவு எழுதிருக்கலாம்கிற ஐடியாவே இல்லாமப் போச்சு பாருங்க!! :-((((

நல்ல பகிர்வு. பேரீட்சை மரத் தோப்பு இந்தியாவில் சில வருடங்கள் முன்பே இருப்பதாகப் படித்த ஞாபகம்!!

வந்த புதுசில், சீஸன் சமயத்தில் ரோட்டில் நிற்கும் மரங்களிலிருந்து ப்ழங்களைக் கொத்தாகப் பறித்து வீட்டுக்குக் கொண்ட் வருவோம். பிற்காலங்களில் கணவரின் சக அலுவலர்கள் வீடுகளிலிருந்து விதவிதமாக ரக ரகமாக வர ஆரம்பித்ததும், டீஸண்டாகி விட்டோம். இப்பவும் சீஸன் என்பதால், ரோட்டோரம் வண்டிகளை நிறுத்தி மக்கள்ஸ் பறிச்சுட்டுப் போறதைப் பார்க்கலாம்.

ஹுஸைனம்மா said...

//மழைக்காலம் முழுவதும் கனிகளை அள்ளியள்ளித்தருகிறது பேரீச்சை மரம்.//

அப்படியா? இங்கல்லாம் கோடைக் காலம்தான் சீஸன்!!

மாதேவி said...

"கைக்கும் வாய்க்குமாக வேலை..." நடக்கட்டும் வேலை :)))

படங்கள் அழகு.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க இமா,

வாசிச்சதோடு படங்களையும் ரசிச்சதுக்கு நன்றி.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க சங்கவி,

வாசிச்சதுக்கு நன்றி.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க கணேஷ்,

நானுமே பேரீச்சை மரத்தை இப்பத்தான் கனிகளோடு பார்த்தேன். இத்தனை நாளா அதுகளைக்கடந்து போகும்போதெல்லாம் சும்மா அலங்காரத்துக்காக வளர்க்கறாங்கன்னே நினைச்சதுண்டு. என் குழந்தைகளில் கல்லூரியிலும் வரிசையா நட்டு வெச்சு வளர்ந்து நிக்குது. நேத்துப் போயிருந்தப்ப ஒரு மரத்தில் மஞ்சள்கனிகள் :-)

சாந்தி மாரியப்பன் said...

வாங்க வை.கோ ஐயா,

வாசித்தமைக்கு நன்றி.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க ராஜி,

வாசித்தமைக்கு நன்றி.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க மேனகா,

வாசித்தமைக்கு நன்றி.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க ராமலக்ஷ்மி,

வாசித்தமைக்கு நன்றி.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க வெங்கட்,

வாசித்தமைக்கும் படங்களை ரசித்தமைக்கும் நன்றிகள்.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க தியானா,

வாசித்தமைக்கு நன்றி.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க ஆதி,

ஆஹா.. அங்கே விளையறவை இன்னும் அதிக ருசியாயிருக்குமே..

வாசித்தமைக்கு நன்றி.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க குமார்,

மஞ்சள் பழங்கள் ஓ.கே. அதுக்கும் முன்னாடி உள்ள நிலையில் பறிச்சா சாப்பிட முடியாதுன்னு நினைக்கிறேன். அதிலிருக்கும் பாலால் நம்ம தொண்டை கட்டிக்கும் :-))

வாசித்தமைக்கு நன்றி.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க வல்லிம்மா,

நட்டு மூணே வருஷத்தில் திண்டுக்கல்லாருக்குப் பலன் கிடைச்சிருக்கு. சென்னைவாசிகளின் அதிர்ஷ்டம் எப்படியோ :-)))

உங்க மரம் விரைவிலேயே பழுக்கட்டும்.. போட்டோ எடுத்துப்போடுங்க.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க ஸ்ரீராம்,

நீங்க குறிப்பிட்ட பாடலும் நல்லாத்தான் இருக்கும்.

வாசித்தமைக்கு நன்றி.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க ஹுஸைனம்மா,

தோட்டத்துப் பேரீச்சை கண்ணுக்குத்தெரியாதலில் ஆச்சரியமில்லை. 'கர் கி முர்கி தால் பராபர்' இல்லையோ :-))

வாசிச்சதுக்கு நன்றீஸ்.

சாந்தி மாரியப்பன் said...

ஹுஸைனம்மா,

இப்ப எங்கூர்ல மழை கொட்டுது.. ஆனா உங்கூர்ல??.. கோடை காலம். கணக்கு சரியாப்போச்சா :-)))

சாந்தி மாரியப்பன் said...

வாங்க மாதேவி,

வாசித்தமைக்கு நன்றி.

LinkWithin

Related Posts with Thumbnails