Tuesday, 26 February 2013

காட்டுக்கொடியும் நூல்கண்டும்..


தவறைத் தவறென்று ஒப்புக்கொள்ளாமல் அதுதான் சரியென்று வாதிடுபவர்களால் தவறுகளும் காலப்போக்கில் சரியெனக் கொள்ளப்பட நிர்ப்பந்திக்கப்படுகின்றன.

வாழ்க்கையும் தொலைக்காட்சித்தொடர்களும் ஒன்றே.. முதலில் மகிழ்ச்சியாகவும் எளிமையாகவும்தான் ஆரம்பிக்கின்றன. அதன்பின் வந்து சேரும் கிளைத்தொடர்களாலும் புதிய பாத்திரங்களாலும் எங்கெங்கோ சிக்கல்களில் கொண்டு செல்லப்பட்டு, கடைசியில் ஒரு வழியாய் முடிகிறது  அல்லது முடித்து வைக்கப்படுகிறது.

பரீட்சையும் வைத்து வலிக்க வலிக்கத் தண்டனையும் கொடுத்தபின், பாடம் சொல்லிக்கொடுக்கும் வாழ்க்கையைப்போல் சிறந்த ஆசான் வேறு யாருமில்லை.

எந்தவொரு நல்லது கெட்டது நடக்கும்போதும், “இது நடக்குமென்று அப்பொழுதே சொன்னேன்” என்று சொல்ல நாலு பேராவது இருப்பார்கள்.

மரணம் நிஜத்தில் ஒரு தடவைதான் சம்பவிக்கிறது. அது ஏற்படுத்தும் பயத்திலோ கற்பனையில் ஒவ்வொரு கணமும் மரணிக்கிறோம்.

பலரை விரக்தியடைய வைக்கும் சிக்கல்களும் ஏமாற்றங்களும் சிலரை வாழ்வில் பக்குவப்படவும் வைக்கின்றன. ஆகவே வயதானால்தான் என்றில்லாமல்.. அனுபவங்களாலும்கூட ஒருவன் பக்குவப்படக்கூடும்.

சிக்கல்களிலிருந்து எவ்வளவுக்கெவ்வளவு விலகி ஓடுகிறோமோ அவ்வளவுக்கவ்வளவு அவை மேலும் சிக்கலாகின்றன. 

சிலருக்குப் பிறப்பாலும் பலருக்குப் பயிற்சியாலும் கைவரப்பெறுகிறது பொறுமை.

துக்கங்களையும் வெறுப்பையும் முளையிலேயே கிள்ளி எறிவது நல்லது. இல்லையெனில் அவை, மழைக்காலத்தில் வேகமாகப்படர்ந்து மரத்தையே மூடிவிடும் காட்டுக்கொடிகள் போல் நம் மனதை முழுவதும் மூடிவிடும்.

பிறருடைய உணர்வுகளுக்கும் மதிப்புக்கொடுக்கும் ஒருவனின் உறவைப் பலரும் விரும்பி ஏற்பார்கள்.

18 comments:

dheva said...

//சிக்கல்களிலிருந்து எவ்வளவுக்கெவ்வளவு விலகி ஓடுகிறோமோ அவ்வளவுக்கவ்வளவு அவை மேலும் சிக்கலாகின்றன. //

இது மிகவும் பிடித்தது.

அருமை!!!!!

திண்டுக்கல் தனபாலன் said...

சில அனுபவங்கள் மேலும் சிந்திக்க வைக்கும்...

கவியாழி said...

பிறருடைய உணர்வுகளுக்கும் மதிப்புக்கொடுக்கும் ஒருவனின் உறவைப் பலரும் விரும்பி ஏற்பார்கள்.// உண்மை நல்ல மனிதனாக வாழ விரும்புபவன் பிறரின் உணர்வுகளுக்கு மதிப்புகொடுப்பான்

ராமலக்ஷ்மி said...

அத்தனை துளிகளும் அருமை, சாந்தி. காட்டுக்கொடியிடம் சாக்கிரதையாகதான் இருக்கவேண்டும்.

RAMA RAVI (RAMVI) said...

//ஆகவே வயதானால்தான் என்றில்லாமல்.. அனுபவங்களாலும்கூட ஒருவன் பக்குவப்படக்கூடும்.//

உண்மை.

மிகவும் சிறப்பான பதிவு.

ஸாதிகா said...

சத்தான பத்து முத்துக்கள்!!!

கோமதி அரசு said...

துக்கங்களையும் வெறுப்பையும் முளையிலேயே கிள்ளி எறிவது நல்லது. இல்லையெனில் அவை, மழைக்காலத்தில் வேகமாகப்படர்ந்து மரத்தையே மூடிவிடும் காட்டுக்கொடிகள் போல் நம் மனதை முழுவதும் மூடிவிடும்.//

ஆம், உண்மை அமைதிச்சாரல் ,காட்டுக்கொடிகள் வளர இடம் கொடுக்க கூடாது.
கவலைதான் ஒரு மனிதனை கொல்லும் வியாதி.

முத்துக்கள் அருமை.

பால கணேஷ் said...

அனுபவ மொழிகள் எல்லாமே அருமையானவை. அதிலும் கடைசி மொழி எனக்கு ரொம்பப் பிடிச்சிருந்தது.

வெங்கட் நாகராஜ் said...

சாரல் துளிகள் அனைத்துமே அருமை! படம் - ரசித்தேன்!

ஸ்ரீராம். said...

அனைத்தும் அருமை. குறிப்பாக 5 வது. கடைசி குறிப்பில் உறவு என்ற சொல்லை விட நட்பு எனும் சொல் இன்னும் பொருத்தமாக இருக்குமோ?!

ADHI VENKAT said...

எல்லாமே அருமை. பூவையும் சேர்த்து...

கடைசி நாலு சிந்தனைத் துளியுமே எனக்கு பிடிச்சிருக்கு...

வல்லிசிம்ஹன் said...

சிறிய நூல்கண்டா நம்மைச் சிறைப் படுத்துவது என்று சிவசங்கரியின் தொடர் பதிவு ஜுனியர் விகடனில் எழுதி இருப்பார்.

பெரும்பள்ளங்களைத் தாண்டிவிடுவோம். சிறியதாக்கங்கள் நம்மைத் தகர்க்கும்.

எப்பொழுதும் நிதானமும் பொறுமையும் கைவிடாமல் பார்த்துக் கொள்ளவேண்டும். உங்கள் உரை அருமை சாரல்.

Easwaran said...

//சிக்கல்களிலிருந்து எவ்வளவுக்கெவ்வளவு விலகி ஓடுகிறோமோ அவ்வளவுக்கவ்வளவு அவை மேலும் சிக்கலாகின்றன.//

உண்மை!

(என்னவோ இன்னைக்கு தத்துவ முத்துக்களா படிக்கணும்னு எழுதியிருக்குபோல.)

பூ விழி said...

மனம் என்பதை திறந்து வைத்தால் வரவேற்க துறக்கவும் துணிவு வந்துவிடும்
உங்கள் இந்த பதிவு மிக மிக அருமை எழுதிவைத்து கொள்ள வேண்டிய உண்மைகள் நம்மை புடம்போட உங்கள் பேரன்ஸ் கிளப்பும் நல்ல இருக்கு நான் புதுசு பதிவுலகத்திற்கு friends .....

Ranjani Narayanan said...

ஆழமான சிந்தனைக் கருத்துக்கள்.

மாதேவி said...

அருமையான சிந்தனைத் துளிகள்.

'பரிவை' சே.குமார் said...

சிந்திக்க வைக்கும் கருத்துக்கள்..

kowsy said...

அனைத்தும் சிறப்பே . தொடருங்கள். வாழ்த்துகள்

LinkWithin

Related Posts with Thumbnails