Friday, 8 February 2013

ஒரு ஒளிப்பட நிபுணரின்(???) டைரிக்குறிப்பு..


"ஆடின காலும் பாடின வாயும் சும்மா இருக்காது" என்று சொல்வார்கள். இதனுடன் காமிரா பிடித்த கையையும் சேர்த்துக்கொள்ளலாம். மொபைல் காமிராவாக இருந்தாலும் சரி, டியெஸ்ஸெல்லார் வகைக்காமிராவாக இருந்தாலும் சரி, வாங்கிய பின் அதிலுள்ள வசதிகளை ஒவ்வொன்றாக இயக்கிப்பார்த்து, இஷ்டம்போல் கண்ணில் கண்டதையெல்லாம் பாலு மஹேந்திரா, பி.சி. ஸ்ரீராம் ரேஞ்சுக்கு வளைத்து வளைத்துப் படமெடுக்கத் தோன்றும். ஓரளவுக்கு நிதானப்பட்டபின் தேர்ந்தெடுத்துப் படமெடுப்போமே தவிர "போதும்" என்று காமிராவை நிச்சயமாகக் கீழே வைக்கத்தோன்றாது.

படம் எடுப்பதற்கு எது முக்கியம்?.. காமிராவா? படமெடுக்கத்தூண்டும் காட்சிகளா? என்னைக்கேட்டால் ஆர்வம்தான் முக்கியம் என்று சொல்வேன். நல்ல காமிரா கையிலிருந்தும், அபூர்வமான அசர வைக்கும் காட்சிகள் கடந்து போகும்போதும் படமெடுத்துப் பதிந்து வைக்கும் ஆர்வமில்லையென்றால் என்ன பிரயோஜனம்?. என்னதான் டியெஸ்ஸெல்லாரின் ரேஞ்சே வேறு என்றாலும் விலையுயர்ந்த டியெஸ்ஸெல்லார் வகை காமிராவில்தான் நல்ல படங்கள் வசப்படும் என்றில்லை. பாயிண்ட் அண்ட் ஷூட் வகைக்காமிராக்களும் இப்போது மேக்ரோ, ஸ்போர்ட்ஸ் போன்ற செட்டிங்குகளுடன் வரத்தான் செய்கின்றன. ஒளியை எப்படிப் பயன்படுத்திக்கொள்வது?, கோணங்களை எப்படி அழகாக அமைப்பது? போன்ற அடிப்படை விஷயங்களை ஓரளவு கற்றுக்கொண்டாலே போதும். அசத்தி விடலாம்.  நம்மிடம் இருக்கும் மொபைலில் தரமான காமிரா இருந்தால் அவசர அடிக்கு அதை வைத்தும் அசரடிக்கும் படங்களை எடுக்கலாம்.

காமிரா வாங்கினால் மட்டும் போதாது. பழகவும் வேண்டும் என்று இப்போதெல்லாம் காமிராப்பை இல்லாமல் எங்கேயும் செல்வதில்லை. எங்கே? என்ன மாதிரி தீனி காமிராவுக்குக் கிடைக்கப்போகிறதென்று யாருக்குத்தெரியும்? ஆகவே, குறைந்த பட்சம் பாயிண்ட் அண்ட் ஷுட் காமிராவாவது எப்பொழுதும் கைவசம் இருக்கும். பொது இடங்களில் இந்த ஜூனியர் காமிராவிலோ அல்லது மொபைலிலோ படமெடுக்கும்போது ஒரு பிரச்சினையும் ஏற்படுவதில்லை.அதுவே சீனியர் அதுதான் டியெஸ்ஸெல்லாரைக் கையிலெடுத்தால் ஏதோ ஏலியன் ரேஞ்சுக்கு நம்மை உற்று நோக்கிக்கொண்டே மக்கள் கடந்து செல்வார்கள். சில சமயம் செக்யூரிட்டி எங்கிருந்தோ பாய்ந்து வந்து, "எந்த ப்ரஸ்?.." என்று கேட்பார். "இண்டர் நெட்" என்று மையமாகச் சொல்லி விட்டால் போதும், ஏதோ புரிந்தாற்போல் தலையை ஆட்டிக்கொண்டு சென்று விடுவார். சில சமயங்களில் "ஆட்களை எவ்ளோ வேண்ணாலும் படம் எடுத்துக்கோங்க.  ப்ராப்பர்ட்டீஸை மட்டும் எடுக்க வேணாம்" என்று அன்பாகக் கேட்டுக்கொள்வார். நாம் படமெடுப்பதே அந்தப் ப்ராப்பர்ட்டீஸைத்தானே என்று பாவம் அவருக்குத்தெரியாது :-))))

பொது இடங்களில், அதுவும் திருவிழா, கடைத்தெரு, மால்கள் போன்ற மக்கள் கூட்டம் அதிகமுள்ள இடங்களில் படமெடுக்கும்போது கவனம் தேவை. அனுமதியின்றிப் படம் பிடிப்பதை சிலர் விரும்புவதில்லை. சில சமயம் பெண்கள் கூட, "அதற்கென்ன?.. எவ்ளோ வேண்ணாலும் எடுத்துக்கோ" என்று அனுமதிப்பார்கள். சில ஆண்கள் "இல்லைங்க வேணாம். அளகு குறைஞ்சுரும்" என்று சொல்லி விடுவார்கள். எதுவென்றாலும் அனுமதியுடன் படமெடுப்பது நல்லது. இல்லையெனில் தர்ம அடி விழவும் வாய்ப்பிருக்கிறது. அப்படியில்லாமல் மக்களையோ, அந்தச்சூழலையோ அதன் அழகு குறையாமல் எடுக்க நினைத்தாலோ அல்லது கூட்டத்தில் வரும் சின்னக்குழந்தைகளைப் படம் பிடிக்க விரும்பினாலோ ஜூம் லென்ஸைப் பயன்படுத்துவது உத்தமம்.

காமிராவும் கையுமாக நம்மைப் பார்த்ததும் பத்திரிகைக்காரர்கள் என்று நினைத்து(இன்னுமா இந்த உலகம் நம்மளை நம்புது?) "இந்த போட்டோ எந்த சேனல்லங்க வரும்?" என்று அப்பாவித்தனமாக ஆர்வமாகக் கேட்பவர்களும் இருக்கிறார்கள், பயப்படுபவர்களும் இருக்கிறார்கள். ஒரு சமயம் திடீரென்று உறக்கம் விழித்தெழுந்த எங்கள் நவி மும்பையின் சிட்கோ, கடைத்தெருவில் ரெய்டு ஒன்றை நடத்தியது. எல்லாம் ப்ளாஸ்டிக் பை விவகாரம்தான். வாடிக்கையாளர்களுக்கு ப்ளாஸ்டிக் பை கொடுத்து கை கொடுத்த கடைக்காரர்களுக்கு 1500 ரூபாய் அபராதமும், பக்காவாக கூரை போட்டு நடந்து கொண்டிருந்த ப்ளாட்பாரக் கடைகளுக்கு அதையெல்லாம் அப்புறப்படுத்தச் சொல்லி எச்சரிக்கையும் விடுத்து விட்டு கடமையைச் செய்த நிறைவுடன் கிளம்பி விட்டார்கள் அதிகாரிகள். ஒவ்வொரு கடைக்காரர்களும் கிலியடித்துக் கிடந்தார்கள். இது தெரியாமல் அப்பாவியாக நான் ஃபலூடாவிற்கு மலாய் குல்பி வாங்கப்போனேன். ஆர்டர் கொடுத்து விட்டு சும்மா அங்கே வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த என் கண்ணில் பக்கத்திலிருந்த கரும்பு ஜூஸ் கடை தட்டுப்பட்டது. கட்டுக்கட்டாக அடுக்கி வைத்திருந்த கரும்புகளும் காலி நாற்காலிகளும் அப்போதுதான் குடித்து வைத்திருந்த காலிக்கோப்பைகளும் அழகான ஒரு காட்சியமைப்பாக என் கலைக்கண்ணுக்குத்தெரிந்தது( நோ... நோ.. சிரிக்கப்டாது. ஓ.கே). கையில் வைத்திருந்த ஜுனியரிடம் கடமையைச் செய்யச்சொல்லி ஏவினேன்.  
"ஏங்க.. நீங்க மீடியாவா?" என்றார் கடைக்காரர். 

"அப்டில்லாம் ஒண்ணுமில்லை. இது சும்மா, எனது பொழுது போக்கு" என்றேன். மனிதர் நம்பவில்லை. "காலைல சிட்கோக்காரங்க வந்தாங்க, இப்ப நீங்க படம் எடுக்கறீங்க. பத்திரிகையில் வரப்போவுதுதானே?. நெஜமாச் சொல்லுங்க, ஏதும் பிரச்சினை வரப்போவுதா?"என்று அரை மணி நேரமாக "ஆத்தா வையும்.. காசு கொடு" என்றே அனத்திக் கொண்டிருந்தார். கடைசியில், "பயப்படாதே,.. உன் கடைக்கு எதுவும் ஆகாது, நான்(வீட்டிலிருந்து டிவியில்)பார்த்துக்கறேன்" என்றதும்தான் நிம்மதியானார். என்னத்தைச் சொல்வது,.. ஒவ்வொன்றும் ஒரு அனுபவம் :-))

மும்பை நகருக்குள்,.. அதுவும் சனி ஞாயிறென்றால் போட்டோ ஷூட்டுக்கென்றே அரை நிஜாரும் டி ஷர்ட்டும் அணிந்து கொண்டு காமிராவும் கையுமாக ஆட்கள் செல்வதைக் கண்டிருக்கிறேன். சுவாரஸ்யமான காட்சிகள் எதையாவது கண்டு விட்டால் நின்று க்ளிக்கி விட்டு நகர்வார்கள். மக்களும் இந்தக் காட்சிகளுக்கெல்லாம் நன்றாகவே பழகி விட்டார்கள். ஒரு சமயம் மும்பைக்குள் சென்று கொண்டிருந்தோம். மாஹிம் பகுதியின் சிக்னலில் டாக்சி நிற்கும்பொழுது பொம்மைகள், பூக்கள், புத்தகங்கள் என்று விற்றுக்கொண்டிருந்தனர் சில இளைஞர்கள். புத்தங்களா? என்று ஆச்சரியப்படாதீர்கள். மும்பையின் பாந்திரா-குர்லா காம்ப்ளெக்ஸ் தாண்டி பாந்திராவின் லிங்கிங் ரோடு போகும் பாலத்தில் ஏறி இறங்கி சிக்னலில் நின்றால் ஷிட்னி ஷெல்டனே கிடைப்பார் புத்தக வடிவில். அந்த சிக்னலில் புத்தகங்கள் மட்டுமே கிடைப்பதைப் பார்த்திருக்கிறேன். எங்கே விட்டேன்?.. ஆங்.. மாஹிம் சிக்னலில்..
அடுத்த வரிசை வாகனங்களில் கடையை விரித்திருந்தவர்களைக் க்ளிக்க ஏதுவாக ஜூம் லென்ஸை மாட்டி வேலையை முடித்து விட்டு, அருகில் வரும்போது படம் பிடிக்க வைட் ஆங்கிள் லென்ஸை மாட்டிக் கொண்டிருந்தேன். அதற்குள் சிக்னல் விழுந்து விடவே காரினருகில் வந்தவர்கள் காருக்குள் எட்டிப்பார்த்து விட்டு, "அரே யார்,.. மீடியா வாலே ஹைங்(மீடியாக்காரங்கப்பா)" என்று சாதாரணமாக எடுத்துக்கொண்டு நகர்ந்தனர்.

இன்னும் சில இடங்களில் புகைப்படத்துக்கு போஸ் தர வேண்டுமென்றால் காசு கேட்கும் சிறுவர்களும் உண்டு. மும்பையின் "ஹாஜி அலி தர்கா" பகுதிக்குப் போயிருந்தபோது கடலில் குட்டிக்கரணம் அடித்துக்கொண்டிருந்த குழந்தைகளைப் படம் பிடிக்க அனுமதி கேட்டபோது,"எடுத்துக்கோ,.. ஆனா தலைக்கு ஐம்பது ரூபாய் தருவியா?" என்று கேட்டது அந்தக்கூட்டத்திலிருந்த ஒரு வாண்டு. மறுத்து விட்டு நகர்ந்த என்னால் வாஷியின் பகுதியில் பூ விற்றுக்கொண்டிருந்த ஒரு சிறுவனைப் படம் பிடித்து விட்டுச் சும்மா வர முடியவில்லை. பணம் கொடுத்தேன்.. பதிலுக்கு நாலு துண்டு மல்லிகைப்பூவைக் கொடுத்து விட்டு ஓடி விட்டான் அந்தச்சிறுவன்.

பயணம் செய்யும்போது, அதாவது இன்னொருவர் வண்டியோட்ட நாம் பயணம் செய்யும்போது காமிராவைத் தயார் நிலையில் வைத்திருப்பது நல்லது. சில சமயம் சாலைகளிலும் அருமையான காட்சிகள் கிடைக்கும். வேகமாக நகரும் பொருட்களையோ அல்லது நகரும் வாகனத்திலிருந்து படம் எடுக்கவோ ஷட்டர் ஸ்பீடை அதிகமாக வைத்திருக்க வேண்டும் என்பது பாலபாடம். பறவைகளைப் படம் பிடிக்கவும் இந்த உத்தியைப் பயன்படுத்தலாம். இல்லாவிட்டால் காமிராவிலிருக்கும் ஸ்போர்ட்ஸ் என்ற ஆப்ஷனையும் தேர்வு செய்து வைத்துக்கொள்ளலாம். மற்ற அளவுகளைக் காமிராவே தீர்மானித்துக்கொள்ளும். அதுவே நகரும் வாகனங்களின் ஒளியையோ அல்லது அருவியையோ படம் பிடிக்கும்போது ஸ்பீடைக்குறைத்து வைத்து எடுத்தால் அழகான ஒளிக்கோடுகளும் பாலருவியின் படமும் கிடைக்கும். வாண வேடிக்கைகளை இந்த முறையில் எடுத்தால் அழகாக வரும். ஆனால் ஷட்டர் குறைந்த வேகத்தில் இயங்கும்போது ட்ரைபாட் அல்லது முக்காலி, மதில்சுவர் போன்ற அசையாப்பொருட்களின் மேல் காமிராவை வைத்துப் படம் பிடித்தல் நல்லது. படம் ஷேக்காகாமல் ஷோக்காக வரும்.
வீட்டிலேயே ஏற்பாடுகள் செய்து கொண்டு அழகான படங்கள் எடுப்பது ஒரு விதம் என்றால், தானாகவே கிடைக்கும் வாய்ப்புகளைப் பயன் படுத்தி படம் பிடிப்பது இன்னொரு விதம். பழங்களை மரத்தில் வைத்துப் படம் பிடித்தல் ஒரு அழகு என்றால் பழக்கூடையில் அடுக்கிப் படம்  பிடித்தல் இன்னொரு அழகு இல்லையா.. ஒவ்வொருவரிடமும் மூன்றாவது கண்ணான கலைக்கண் இருக்கத்தான் செய்கிறது. சிலர் விழித்துக்கொண்டு விடுகிறார்கள். சிலர் இன்னும் உறங்குகிறார்கள். அவ்வளவே.. கலைக்கண்ணால் நம்மைச் சுற்றி நோக்கினால் பொன்னான வாய்ப்புகள் கொட்டிக்கிடப்பதைக் காணலாம். ஆர்வம் வற்றாமல் கிடைக்கும் வாய்ப்புகளைப் பயன்படுத்தி இன்னும் இன்னும் என்று இந்தத்துறையில் எவ்வளவோ முன்னேறலாம்.

34 comments:

கோமதி அரசு said...

படம் எடுப்பதற்கு எது முக்கியம்?.. காமிராவா? படமெடுக்கத்தூண்டும் காட்சிகளா? என்னைக்கேட்டால் ஆர்வம்தான் முக்கியம் என்று சொல்வேன்.//

நீங்கள் சொல்வது உண்மைதான் அமக்திச்சாரல். நீங்கள் ஆர்வத்தில் எடுத்தபடங்களை பார்க்கும் போதும், நீங்கள் கொடுக்கும் ஆலோசனைகளை கேட்கும் போதும் அது உண்மைதான் என்று விள்ங்குகிறது.

பூ விற்றுக்கொண்டிருந்த ஒரு சிறுவனைப் படம் பிடித்து விட்டுச் சும்மா வர முடியவில்லை. பணம் கொடுத்தேன்.. பதிலுக்கு நாலு துண்டு மல்லிகைப்பூவைக் கொடுத்து விட்டு ஓடி விட்டான் அந்தச்சிறுவன்.//

வறுமையிலும் செம்மை என்பது இது தான் போலும்!

மதுரை அழகு said...

ஃபோட்டோகிராஃபி ஓர் அருமையான பொழுதுபோக்கு! அதை ஒரு கான்செப்ட்டோடு சேர்த்து செய்வது இன்னும் சுவாரஸ்யமானது!!

புதுகைத் தென்றல் said...

நல்லாத்தான் சொல்லியிருக்கீக. சில பல அனுபவங்கள் எனக்கும் உண்டு

துளசி கோபால் said...

வாவ்!!! வரிவரியாய் ரசித்து வாசித்தேன்.

செயல்படுத்தும்போதுதான் படுத்த்த்த்தல்:-)

அதுவும் உங்க அண்ணன் கையில் கெமெரா இருந்தால்.... செத்தேன்:-))))))

பத்து நிமிசமா கோணம் பார்த்துப் பார்த்து நமக்கு என்ன நடக்குதுன்னு தெரியாமல் கோபம் வந்து எதாவது சொல்ல வாய் திறக்கும்போது க்ளிக்!

semmalai akash said...

சில சமயம் செக்யூரிட்டி எங்கிருந்தோ பாய்ந்து வந்து, "எந்த ப்ரஸ்?.." என்று கேட்பார். "இண்டர் நெட்" என்று மையமாகச் சொல்லி விட்டால் போதும், ஏதோ புரிந்தாற்போல் தலையை ஆட்டிக்கொண்டு சென்று விடுவார்.


ஹா ஹா ஹா! இந்த வரிகளை படித்ததும் குபீர்ன்னு சிரிச்சிட்டேன். நல்ல குறிப்புகள் அருமையான எழுத்து நடையில் சொல்லிருக்கிங்க. பாராட்டுகள்.

திண்டுக்கல் தனபாலன் said...

ஒவ்வொருத்தற்கும் ஒவ்வொரு கண்ணோட்டம்... சிலருக்கு ஆரம்பத்திலேயே... சிலருக்கு பயிற்சியினால்... நீங்கள் சொன்னது போல் ஆர்வம் இருந்தால் எதையும் சாதிக்கலாம்-மற்றவர்களை ஒப்பிடாதவரை...

விளக்கங்களுக்கு நன்றி...

கோவை2தில்லி said...

நீங்க சொல்லியுள்ள தகவல்கள் பயனுள்ளவை. எந்த நேரத்திலும் அழகான சந்தர்ப்பம் அமையலாம்...

டீச்சரின் பின்னூட்டத்தை வெகுவாக ரசித்தேன்....:))

ஸாதிகா said...

படங்களை பார்த்தும்,பகிர்வை படித்தும் ரசித்தேன்.

RAMVI said...

நல்லதொரு அனுபவப்பகிர்வு. தகவல்கள் சுவாரசியமாகவும்,பயனுள்ளதாகவும் இருக்கு.

பால கணேஷ் said...

என்ன சந்தேகம்? கேள்விக்குறி எல்லாம்...? நீங்க நிச்சயம் புகைப்பட நிபுணர்தாங்க. படங்களையும், நகைச்சுவை ததும்ப நீங்கள் விவரித்திருந்த விஷயங்களையும் வெகுவாக ரசித்தேன். அருமைங்க.

ராமலக்ஷ்மி said...

ஆம், ஆர்வமும் தேடலுமே இக்கலையில் ஈடுபடுவோருக்கு அவசியமானவை. என் எண்ணங்களோடு ஒத்துப் போகிற பதிவு.

பெங்களூரில் DSLR மாட்டிக் கொண்டு பொது இடங்களில் நடப்பவர்கள் சகஜமாகப் பார்க்கப்படுவதில்லை:). அதனால் பெரும்பாலும் தவிர்த்து விடுகிறேன். P&S பையோடு இருக்கும். பூங்கா, மால் ஆகிய இடங்களில் பரவாயில்லை.

ஸ்ரீராம். said...

சுவையான பதிவு. பொது இடங்களில் கேமிரா தூக்கக் கூச்சம் இன்னும் விலகவில்லை. எடுப்பதுமில்லை. ரொம்பக் கஷ்டப் பட்டதில்லை. டெக்னிகலாக யோசித்ததில்லை! கண்ணில் கிடைக்கும் காட்சி கேமிராவில்! கொஞ்ச நாள் முன்பு வரை அப்பாதுரை பரிசளித்திருந்த கையடக்கக் கேமிரா வசதியாக இருந்தது. தற்சமயம் அலைபேசிப் படங்கள்தான். உங்கள் அனுபவங்கள் ரசிக்க வைத்தன, பாராட்டுகள்.

ஹுஸைனம்மா said...

அழகா எழுதிருக்கீங்க.வாசிக்கும்போதே ஆசை வருது. பதிவில் உங்க மற்றும் ராமலக்ஷ்மிக்கா படங்களப் பார்க்கும்போது ஆர்வம் வரும். ஆனா, ஸ்ரீராம் சார் சொன்ன மாதிரி கூச்சம் தடுக்குது. :-)))

வெங்கட் நாகராஜ் said...

சிறப்பான பகிர்வு....

என்னை நானே பார்த்துக் கொண்டேன்! :)

மாதேவி said...

அழகாக பகிர்ந்துள்ளீர்கள்.

Asiya Omar said...

நல்ல பகிர்வு.மிகவும் ரசித்து வாசிக்கும் படியான பகிர்வு..நல்லா எழுதறீங்க,படம் எடுக்கறீங்க..ஜர்னலிஷம் பக்கம் சான்ஸ் அடிக்கலாம்..

அமைதிச்சாரல் said...

வாங்க கோமதிம்மா,

வரவுக்கும் வாசித்தமைக்கும் நன்றி.

அமைதிச்சாரல் said...

வாங்க மதுரை அழகு,

உண்மைதான், ஒவ்வொரு நிகழ்வுகளையும் காமிராவுக்குள் சிறைப்படுத்தும் அந்தத்தருணங்கள் இனிமையானவைதான்.

வரவுக்கும் வாசித்தமைக்கும் நன்றி.

அமைதிச்சாரல் said...

வாங்க தென்றல்,

ஆஹா.. உங்க அனுபவங்களையும் பகிர்ந்துக்கலாமே.

அமைதிச்சாரல் said...

வாங்க துள்சிக்கா,

கோணம் பார்க்கறதெல்லாம் புகைப்படம் அழகா வரணுமேங்கற மெனக்கெடலாக்கும் :-)))

வரவுக்கு நன்றி.

அமைதிச்சாரல் said...

வாங்க செம்மலை ஆகாஷ்,

ரசிச்சு வாசிச்சதுக்கு நன்றிங்க.

அமைதிச்சாரல் said...

வாங்க திண்டுக்கல் தனபாலன்,

நிச்சயமாக ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு தனிப்பாணி இருக்கும். இதில் ஒருவருடன் மற்றவர்களை ஒப்பிடுதல் கூடாதுதான். அதே சமயம் தன்னை மெருகேற்றிக்கொள்ள வேண்டுமானால் நிறையப் படங்களைப் பார்த்துக் கற்றுக்கொள்ளவும் வேண்டும்.

வரவுக்கும் வாசித்தமைக்கும் நன்றி.

அமைதிச்சாரல் said...

வாங்க ஆதி,

சில சமயங்களில் கேமராவைக்கொண்டு போயிருக்க மாட்டோம். அன்னிக்குன்னு பார்த்து வகையா வந்து விழுந்துட்டே இருக்கும். அடடா!!.. இனிமே காமிரா இல்லாம வெளியே போகக்கூடாதுன்னு அதைச் சுமந்துட்டுப் போனா ஒண்ணும் மாட்டாது. இப்படியும் சில சமயங்கள் :-))

துள்சிக்காவின் எழுத்துக்குக் கேக்கணுமா என்ன!! :-)

வாசித்தமைக்கும் வரவுக்கும் நன்றிகள்.

அமைதிச்சாரல் said...

வாங்க ஸாதிகா,

வாசித்தமைக்கும் வரவுக்கும் நன்றிங்க..

அமைதிச்சாரல் said...

வாங்க ரமா,

வாசித்தமைக்கும் வரவுக்கும் நன்றிங்க.

அமைதிச்சாரல் said...

வாங்க கணேஷ்,

வாசித்தமைக்கும் ரசித்தமைக்கும் நன்றிங்க :-)

அமைதிச்சாரல் said...

வாங்க ராமலக்ஷ்மி,

வாசித்தமைக்கும் வரவுக்கும் நன்றி.

அமைதிச்சாரல் said...

வாங்க ஸ்ரீராம்,

ஆரம்பத்தில் கூச்சமாகத்தான் இருக்கும். முதலில் இயற்கைக்காட்சிகள் அப்புறம் மனிதர்கள், முக்கியமாகக் குழந்தைகள் என்று படிப்படியாகப் பழக்கப்படுத்திக்கொண்டால் கூச்சம் குறைந்து விடும்.

அமைதிச்சாரல் said...

வாங்க ஹுஸைனம்மா,

அடடா!!.. தயங்காதீங்க. உங்க வீட்டுக்கு வர்ற பறவைகளைப் பார்க்க எத்தனை நாளாக் காத்துட்டிருக்கேன் தெரியுமா?.. உடனே காமிராவைக் கையில் எடுங்க :-))

வரவுக்கும் வாசித்தமைக்கும் நன்றி.

அமைதிச்சாரல் said...

வாங்க வெங்கட்,

வாசித்தமைக்கும் வரவுக்கும் நன்றி.

அமைதிச்சாரல் said...

வாங்க மாதேவி,

வாசித்தமைக்கும் ரசித்தமைக்கும் மிக்க நன்றிகள்..

அமைதிச்சாரல் said...

வாங்க ஆசியா,

ஆஹா.. அப்படீங்கறீங்க?.. காலம் கனியட்டும் :-)))))

வாசித்தமைக்கு நன்றி.

Mahi said...

Nice and useful post..enjoyed reading it! I love photography too...but not into your level. :) I don't do any research, what ever attracts me, I will click it. That proves me as an amature photographer,right? :))))

அமைதிச்சாரல் said...

வாங்க மகி,

பிடிச்சதையெல்லாம் க்ளிக்கறீங்க இல்லே,.. இந்த ஆர்வம்தான் நல்ல புகைப்படக் கலைஞருக்கான அடையாளம். விரைவிலேயே உங்க கிட்டேயிருந்து இன்னும் அழகான படங்களை எதிர்பார்க்கிறேன். வாழ்த்துகள்.

LinkWithin

Related Posts with Thumbnails