புளி, நெல்லி, மாங்காய் வரிசையில் பேரைச்சொன்னாலே நாவில் எச்சில் ஊற வைக்கும் ஒரு பழம்தான் ஸ்ட்ராபெர்ரி. உருண்டை உடம்புடன் செக்கச்செவேலென்ற ட்ரெஸ்ஸுடன் பச்சைத்தொப்பிப் போட்டுக்கொண்டு ஒய்யாரமாய் இந்தச்சீமாட்டி மால்களிலும் பழக்கடைகளிலும் உட்கார்ந்திருக்கும் அழகே அழகு. பார்த்தவுடனேயே கொத்திக்கொண்டு போய்விட வைக்கும் இந்தக் கொள்ளையழகுச் சீமாட்டி தன்னை விழுங்கியவரையும் நோயின்றி வாழ வைக்கும் ஈர மனசுக்காரி.
கொடி வகையைச் சேர்ந்த ஸ்ட்ராபெர்ரி ஐரோப்பாவைத் தாயகமாகக் கொண்டாலும் இப்பொழுது உலகம் முழுக்கப் பயிரிடப்படுகிறது. ரோஜாக்குடும்பத்தைச் சேர்ந்த ஸ்ட்ராபெர்ரி Fragaria ananassa என்ற தாவரவியல் பெயராலும் அறியப்படுகிறது.
காட்டுப்பயிராக இருந்த ஸ்ட்ராபெர்ரியை நாட்டுக்குள் கொண்டு வந்த பெருமை பிரெஞ்சுக்காரர்களையே சாரும். 1300களின் கடைசியில் ஆட்சி புரிந்த ஐந்தாம் சார்லஸ் மன்னனின் தோட்டத்தில் 1200 செடிகள் இருந்தனவாம். பழங்கால ரோம் இலக்கியங்களில் இதன் மருத்துவ மகிமையைப்பற்றி நிறையச் சொல்லி வைத்திருக்கிறார்களாம். 1500களில் பரவலாகப் பயிரிட ஆரம்பித்திருக்கிறார்கள். பயிரிடும் மற்றும் அறுவடை செய்யும் முறைகளை பக்காவாக 1578லேயே எழுதி வைத்திருக்கிறார்கள்.
மஹாராஷ்டிராவில் மஹாபலேஷ்வரில் இருக்கும் ஸ்ட்ராபெர்ரித் தோட்டங்கள் ருசியான பழங்களுக்குப் பெயர் பெற்றவை. பிரிட்டிஷார் ஆஸ்திரேலியாவிலிருந்து செடிகளைக்கொண்டு வந்து பஞ்ச்கனியிலும் மஹாபலேஷ்வரிலும் நட்டு வைத்து வளர்த்திருக்கிறார்கள். இங்கே விளையும் பழங்கள் உலகம் முழுக்கவும் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. மஹாபலேஷ்வருக்கு சுற்றுலா போய்த்திரும்புபவர்கள் கையில் நிச்சயமாக பழப்பாக்கெட்டும், கண்கள் விரியச்சொல்வதற்கு ஸ்ட்ராபெர்ரி ஃபார்மில் சுற்றித்திரிந்த ஏராளமான அனுபவங்களும் இருக்கும்.
மகளின் தோழியொருத்தி அங்கே பஞ்ச்கனியில் தங்கிப்படித்தவளாததால் தோட்டங்களில் செடி வளர்க்கப்படும் விதம் பற்றிச் சொன்னதுண்டு. சில இடங்களில் நம்மூரில் திராட்சை வளர்க்கப்படுவது மாதிரியே உயரத்தில் செடிகள் நடப்பட்டிருக்கும். பழங்களும் காய்களுமாக அந்தரத்தில் தொங்கிக்கொண்டிருக்கும். இம்முறையில் பழங்கள் மண்ணில் புரண்டும், காலில் மிதிபட்டும் வீணாவது தடுக்கப்படுகிறது. இன்னும் சில இடங்களில் ப்ளாஸ்டிக் விரிப்பொன்று தயார் செய்யப்பட்ட நிலத்தின் மேல் விரிக்கப்படுகிறது. ஆங்காங்கே துளையிடப்பட்ட அந்த விரிப்பில் துளைகளில் செடிகள் நடப்படுகின்றன. இந்தச்செடிகளுக்கு சொட்டு நீர்ப்பாசன முறையில் நீர் பாய்ச்சப்படுகிறது. இதிலும் பழங்கள் விரிப்பின் மேல் பாதுகாப்பாக இருப்பதால் அறுவடைக்கால நஷ்டம் தவிர்க்கப்படுகிறது. இந்தக் குளிர்கால லீவில் போய் அதையெல்லாம் பார்த்து வர வேண்டுமென்ற எனது ஆசை வழக்கம்போல் வீட்டார் நடத்திய ஒத்துழையாமை இயக்கத்தால் ஊற்றி மூடிக்கொண்டது. அவ்வ்வ்வ்வ்வ்….
ஸ்ட்ராபெர்ரியை வீட்டிலும் வளர்க்கலாம் என்றும் இணையம் சொல்கிறது. விதை போட்டும் கன்றுகளை நட்டும் வளர்க்கும் வழக்கமான முறைகளைத்தவிர நன்கு முதிர்ந்த பழத்திலிருந்து விதைகளை உபயோகப்படுத்தியும் வளர்க்கலாமாம். பழத்தை ஐந்து மி.மி. அளவுக்கு ஸ்லைஸ் செய்து கொண்டு அதை மண்ணில் நட்டு வைக்க வேண்டுமாம். அதிலிருக்கும் விதைகள் மூலம் செடிகள் வளருமாம். இந்தப்பழத்தில் எங்கே விதைகள் இருக்கின்றன என்றுதானே கேட்கிறீர்கள்?.. சிவந்த பட்டுப்புடவையில் மஞ்சள் ஜரிகைப்பொட்டுகள் போன்று இருக்கின்றனவே அவைதான் விதைகள். அடுத்த தடவை வாங்கும்போது நட்டு வைத்து வளர்கிறதா என்று பரிசோதனை செய்து பார்க்க வேண்டும்.
செடிகளுக்குத்தண்ணீர் பாய்ச்சும்போது இலைகளில் படாமல் வேரில் மட்டும் படும்படியாக ஊற்ற வேண்டும். இல்லையெனில் இலைகள் அழுகி விடும். சம்மரின் பிற்பகுதி அல்லது ஸ்ப்ரிங்க் சமயம் பயிரிட ஏற்றது. மணற்பாங்கான பகுதி உகந்தது. எல்லாக் கால நிலைகளிலும் நிலைத்து நிற்கக்கூடியதென்றாலும் பழம் வரும் சமயம் ஈரப்பதம் இருந்தால் நல்லது
கலோரிகள் குறைந்த அளவில் இருக்கும் இந்தப்பழத்தில் வைட்டமின் சி மற்றும் இரும்புச்சத்து அதிக அளவில் இருக்கிறது. ஒரு கப் பழத்தில் வெறும் 49 கலோரிகள் மட்டும்தான் இருக்கிறதாம். ஒரு நாளைக்கு எட்டுப்பழங்கள் எடுத்துக்கொண்டாலே போதும். குழந்தைகளுக்கு அன்றைக்குத்தேவையான வைட்டமின் சி 140 சதவீதம் கிடைத்துவிடும். மேலும் இதில் ஃபோலிக் அமிலம், பொட்டாசியம் மற்றும் ஆன்ட்டி ஆக்சிடெண்ட்டுகள் அதிகம் இருக்கிறது. இவை உடலில் நோய் எதிர்ப்புச் சக்தியைப் பெருக்குகின்றன. ஒரு ஸ்ட்ராபெர்ரியை இரண்டாக வெட்டி அதன் சாறு பற்களிலும் ஈறுகளிலும் படுமாறு நன்றாகத் தேய்த்து விட்டு சிறிது நேரம் அப்படியே விட்டு விட வேண்டும். பின் சுத்தமான தண்ணீரில் வாயைக் கொப்பளிக்க வேண்டும். இப்படிச்செய்தால் பற்களில் ஏற்படும் கறை போய்விடும். ஈறுகளும் பலப்படுமாம். இந்தப்பழத்திலிருக்கும் மாங்கனீஸ் உப்புச்சத்து நமது எலும்புகளைப் பலப்படுத்துகிறது.
ஸ்ட்ராபெர்ரியைச் சேர்த்து வாசனையூட்டிய பால், மில்க் ஷேக், ஐஸ்க்ரீம், கேக், பை(pie) இன்னும் எத்தனையோ ஐட்டங்களைச்செய்யலாம். மருந்து சாப்பிடப் படுத்தும் சின்னக்குழந்தைகள்கூட இதன் வாசனை சேர்க்கப்பட்ட மருந்துகளாயிருந்தால் அடம் பிடிக்காமல் சாப்பிட்டு விடுவார்கள். எல்லோருக்கும் பிடித்தமான இந்தப்பழம் சிலருக்கு மூச்சுத்திணறல், வாய்ப்புண் போன்ற ஒவ்வாமையையும் உண்டாக்கலாம்.
இந்தப் பழத்தை வாங்கி வந்து இரண்டு நாட்களுக்குள் உபயோகப்படுத்தி விட வேண்டும். அதற்கு மேல் தாங்காது. அழுக ஆரம்பித்து விடும். ஃப்ரிஜ்ஜில் வைத்தால் கூடுதலாக இரண்டு நாள் அவ்வளவுதான். இப்பொழுதெல்லாம் பழங்களின் மேலும் பூச்சி மருந்து தெளிக்கப்படுவதால் திராட்சை போன்று இதையும் தண்ணீரில் கழுவிச்சுத்தப்படுத்தி உபயோகிப்பது நல்லது. வாங்கி வந்த பழங்களை சாப்பிடுமுன் கொஞ்சத்தைச் சுட்டு வைத்தேன். சுடுவதற்கு ஏற்ற இடம் ஏது?.. அடுக்களைதானே. அதுதான் இங்கே ஷூட்டிங் ஸ்பாட். அடுத்தது காட்டும் பளிங்காய்ப் பளபளத்த மேடை வா.. வா.. என்று அழைக்க மேடையில் அழகாகப் பிரதிபலித்த தன்னழகைத்தானே பார்த்துப் பெருமைப்பட்டுக்கொண்டது ஸ்ட்ராபெர்ரி. வெள்ளைப்பின்னணிக்கு ட்ராயிங் பேப்பர் உதவி செய்தது :-))
சிவப்பாக இருக்கும் பழங்களெல்லாம் இதயத்தைப்பலப்படுத்துவதிலும், புற்று நோய் வரும் வாய்ப்புகளைக் குறைப்பதிலும், வயதாவதைத் தாமதப்படுத்துவதிலும் முக்கியப்பங்கு வகிக்கின்றன. எல்லாவற்றுக்கும் மேலாக இப்பொழுது மார்க்கெட்டில் ஸ்ட்ராபெர்ரி மலிவாகக் கிடைக்கிறது. இந்த ஒரு காரணத்துக்காகவே தினமும் அதைச்சாப்பிடலாமே.
39 comments:
அழகழகான படங்களுடன் ஸ்ட்ராபெர்ரி பற்றி விரிவான தகவல்கள்! அருமை சாந்தி.
ஆகா! அழகிப் பட்டம் வென்றுவிட்டதே :))
நம் நாட்டிலும் கிடைக்கின்றது விலை சற்று அதிகம். முற்றாத கனியாக விற்பனைக்கு வந்துவிடுவதால் புளிப்பு அதிகமாக இருக்கின்றது.
தகவல்களுடன் சிறப்பான பகிர்வு.
ஸ்ட்ராபெர்ரி பழத்தைப்பற்றிய சிறப்பான தகவல்கள் அறிந்து கொண்டேன்.படங்கள் கண்ணைக் கவரும் விதமாக இருக்கு.
ஸ்ட்ராபெர்ரி பிரியையான ரோஷ்ணிக்கு படங்களை காட்டினேன். தகவல்களும் அருமை. பகிர்வுக்கு நன்றிங்க.
படங்களும் பதிவும் அருமையாக உள்ளது.
இதனுடன் எனக்குத் தெரிந்ததையும் சொல்கிறேன்.
வீட்டின் தோட்டத்தில்... ஏன் சின்ன ஜாடியில் கூட வளர்க்கலாம்.
ஸ்டாபெரி வளர்க்க மண் இளகுவாக இருக்க வேண்டும். இங்கே (பிரான்ஸ்) சூலை, ஆகஸ்ட்டில் நன்றாக பழுக்கிறது.
உண்மையில் வீட்டில் வளர்க்கும் பழத்தில் இனிப்பதிகமாக இருக்கும்.
தவிர இது கொடி இனம். ஒரு செடியின் கிளை நன்கு வளர்ந்த்தும் பக்கத்தில் தானாய் படர்ந்து அங்கே ஒரு செடியை உருவாக்கிவிடும்.
நன்றி.
ஆஹா.. ஸ்ட்ராபெர்ரின்னா எனக்கு ரொம்ப பிடிக்கும் அத சாப்பிட்டுகிட்டே பதிவுகளை டேஷ் போர்டில் பார்க்கும் போது இங்க ஒரு ஸ்டெர்ராபெர்ரி பதிவு.. நன்றி!
//எனது ஆசை வழக்கம்போல் வீட்டார் நடத்திய ஒத்துழையாமை இயக்கத்தால் ஊற்றி மூடிக்கொண்டது.//
உங்க ஆசை மட்டுமா, அந்த தோட்டத்தின் படங்களைத்தான் போட்டிருப்பீங்கன்னு ஆர்வமா பார்க்க நினைச்ச என் ஆசையும்ல... பேசாம, நம்ம மதிமுக வைகோ மாதிரி தனியாளா நடைப்பயணம் போயாவது பார்த்துட்டு வந்து படம் போடுங்க!! :-))
//சிவந்த பட்டுப்புடவையில் மஞ்சள் ஜரிகைப்பொட்டுகள்//
ஆ... கவித.. கவித...
//பற்களில் ஏற்படும் கறை போய்விடும்//
புதிய, பயனுள்ள டிப்ஸ்.
//பளிங்காய்ப் பளபளத்த மேடை //
நெஜம்மாச் சொல்லணும்னா, அந்தக் கருப்புக் கண்ணாடி மேடைதான் பழத்துக்கே அழகு சேர்த்தது!! அது என்னவாயிருக்கும்னு யோசிச்சுகிட்டே இருந்தேன்... நல்லவேளை சொல்லிட்டீங்க.. :-))
ஸ்ட்ராபெர்ரி என்றால் மில்க் ஷேக் என்ற அளவில் மட்டுமே தெரிந்தது. அதை வச்சு ஒரு பதிவே போடற அளவு விஷயம் வச்சிருக்கீங்களே!! இதுக்காகவே “ஸ்ட்ராபெர்ரி பெண்ணே” என்று பட்டம் கொடுத்துடுவோமா? :-)))
ஸ்ட்ராபெர்ரி பழத்தைப்பற்றிய அனைத்துத் தகவல்களும் தந்து விட்டீர்கள்! அருமை! விதைகளைப்பற்றிய கவிதை வரிகள் மிக அருமை! அதென்ன ' சுட்டு வைத்தேன்' என்று எழுதியிருக்கிறீர்கள்? புரியவில்லை!
சாக்லேட், கேக் இப்படி எல்லாமே ஸ்ட்ராபெர்ரி ப்ளேவர்னு கேட்டு வாங்கிச் சாப்பிடறவன் நான். உங்க கட்டுரையையும் ஆர்வமா ரசிச்சு ருசிச்சு சாப்பிட்டேன்... ஐமீன் படிச்சேன்..! நீங்க வெச்சிருக்கற படங்களும் நாவில் நீர் ஊற வைக்கும் டைப்தான்! சூப்பர்ப்!
Nice details about strawberry! Beautiful pictures.
வாங்க மனோம்மா,
ஹி..ஹி.. காமிராவால் சுட்டதை, அதாவது ஷூட் செய்ததை அதாவது படம் எடுத்ததைத்தான் அப்படிச் சொல்லியிருக்கேன் :-)))))
நன்றிம்மா.
வாங்க ராமலக்ஷ்மி,
ஸ்ட்ராபெர்ரியைப் போணி செஞ்சதுக்கு நன்றிங்க :-)
இனிப்பா இருக்குதுதானே :-)))))
வாங்க மாதேவி,
அவங்களுக்கென்னங்க?.. கேட் வாக்கவெல்லாம் வேணாம். சும்மா ஒய்யாரமா அப்படி உக்காந்துருந்தாலே போதும். கிரீடம் தானாவே கிடைச்சுரும்.
நல்லா செக்கச் செவேல்ன்னு இருக்கற பழம் இனிக்கும். கொஞ்சம் டல்லாவோ இல்லை ஆங்காங்கே பச்சைக்கலரோ தெரிஞ்சா பழுக்கலைன்னு அர்த்தம். சில பழங்களைப்போல ஸ்ட்ராபெர்ரி பறிச்சப்புறம்கூட பழுக்கவும் செய்யாது. சிலரோட சட்டைப்பாக்கெட்டுகளை நிரப்பறதுக்காக சீக்கிரமே சந்தைக்கு வந்துருது.
வரவுக்கு நன்றிங்க.
வாங்க ரமா,
பழத்தையும் இடுகையையும் ரசிச்சதுக்கு நன்னிங்க :-)
வாங்க ஆதி,
படங்கள் ரோஷ்ணிக்குப் பிடிச்சிருந்ததா.. மேடம் எனக்கு பாஸ்மார்க் போடுவாங்களா :-))
நன்றிங்க
வாங்க அருணா,
தொங்க விடற தொட்டிகளில் வளர்த்தால் இன்னும் நல்லது. போற வர்ற சமயங்களிலெல்லாம் லைட்டா கையை உசத்துனாப்போறும். கையில் செடி வாயில் பழம் இல்லையா :-))))
மேலதிகத்தகவல்களுக்கும் நன்னிங்க
வாங்க உஷா,
ஸ்ட்ராபெர்ரியால் நிரம்பியது இவ்வுலகம்... குறைஞ்ச பட்சம் இந்த சீசன் முடியற வரைக்குமாவது :-)
நன்றிங்க ருசிச்சதுக்கு.
வாங்க ஹுஸைனம்மா,
என்ன இருந்தாலும் கூட்டணி அவியலுக்குன்னு ஒரு தனி ருசி இருக்கேப்பா. தனிமையில் இனிமை இல்லையே :-))
குறைஞ்ச பட்சம் அங்கே தோட்டத்துல இருக்கற பழங்களைப்பறிக்க நான் கையை நீட்டுனா, "நோ.. அது நம்மது இல்லே"ன்னு தடுக்க பசங்களாவது வேணாமோ :-))
பட்டமா?.. வேணாம்ப்பா. மாஞ்சா அறுத்ததுல காயம்ன்னு இப்பல்லாம் அடிக்கடி செய்தி வருது.
வாங்க கணேஷ்,
ஸ்ட்ராபெர்ரிக்கு இவ்ளோ ரசிகர்களா?.. பிரமிப்பா இருக்கே. இத்தனை ருசியா ஒரு பழம் இருந்தா ரசிக்க மாட்டாங்களா என்ன :-)
ருசிச்சதுக்கு நன்றிங்க.
வாங்க மஹி,
உங்கூட்டு ஸ்ட்ராபெர்ரி அறுவடை அமோகம்ப்பா.
ருசிச்சதுக்கும் நன்னி.
ஸ்ட்ராபெர்ரி படங்களும் செய்திகளும் மிக அருமை சாந்தி.
ஸ்ட்ராபெரி கண்ணேயா, பெண்ணேயா?? தெரியலை, ஏதோ ஒரு பாட்டு இருக்கு இல்லையா? ஸ்ட்ராபெரியோட கலர் தான் இங்கே இந்தியாவில் கொஞ்சம் வித்தியாசமா இருக்கோ? யு.எஸ்ஸில் கொஞ்சம் ரோஸ் கலந்தாற்போல் இருக்கும். ஸ்ட்ராபெரி ரோஸ் கலரில் எசென்ஸே இருக்கே. ஆனால் இங்கே நல்ல சிவப்பும், மஞ்சளும் கலந்து. சாப்பிட்டிருக்கேன். இங்கே இல்லை; அங்கே! :))))
அது சரி, உங்களுக்குக் கூடவா போணியாகறதில்லை? :)))))
சிறப்பான படங்கள் மற்றும் தகவல்கள்....
அருமையான படங்கள்..நல்ல பகிர்வுக்கு நன்றி.
seasonal fruit from june to Nov. farm near my house sell them cheap. so i store a lot and make jam too.
.
நேற்றுதான் ஸ்ட்ராபெரி வாங்கி வந்தேன்,. இன்று இந்தப் பதிவு. நான்
ஸ்ட்ராபெர்ரியுடன் குட்டித்தாளியையும் போட்டு உப்பு மிளகு தூவி ம்ம்ம் சாப்பிடுவேன்.
படங்கள் அழகோ அழகு. பற்கரையைப் போக்குமா. எவ்வளவு நல்ல பலன். இத்தனை தகவல்களுக்கும் மிக
மிக நன்றி சாரல்.
இனி கிடைக்கும்போதெல்லாம் ஸ்ட்ராபெரி உண்ணுவேன்.
சுவையான பதிவு! ஸ்ட்ராபெர்ரி பிடித்தவர்கள் நிறைய இருக்கிறார்கள் என்று தெரிகிறது! படங்கள் நன்றாக இருக்கின்றன.
http://asiya-omar.blogspot.com/2013/02/blog-post.html
அன்புடன் தொடர தொடர் பதிவிற்கு அழைத்துள்ளேன்.
பார்த்தவுடனேயே கொத்திக்கொண்டு போய்விட வைக்கும் இந்தக் கொள்ளையழகுச் சீமாட்டி தன்னை விழுங்கியவரையும் நோயின்றி வாழ வைக்கும் ஈர மனசுக்காரி.//அருமையான படங்களுடன் என்ன அழகாக வர்ணித்து இருக்கின்றீகள்.:)
வாங்க கோமதிம்மா,
வாசித்தமைக்கு நன்றி.
வாங்க கீத்தாம்மா,
ஹி..ஹி.. முதல் விற்பனையை போணின்னுதானே சொல்லுவோம் :-)
வாசித்தமைக்கு நன்றிம்மா
வாங்க வெங்கட்,
வாசித்தமைக்கு நன்றி.
வாங்க ஆசியா,
வாசித்தமைக்கும் ரசித்தமைக்கும் நன்றி.
வாங்க மஹி-க்ரானி,
இங்கே இப்பத்தான் நிறையக் கிடைக்கிறது.
வாசித்தமைக்கு நன்றி.
வாங்க வல்லிம்மா,
உப்பும் மிளகுமா?.. ஹைய்யோ. வித்தியாசமான காம்பினேஷனா இருக்கே.
வாசித்தமைக்கு நன்றி.
வாங்க ஸ்ரீராம்,
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பும் பழம் போலிருக்கு :-) எல்லோருக்குமே பிடிச்சிருக்கே.
வாசித்தமைக்கு நன்றி.
வாங்க ஆசியா,
நிச்சயமாகத்தொடர்கிறேன். கொஞ்சம் டைம் கொடுங்க ப்ளீஸ் :-)
வாங்க ஸாதிகா,
ரசித்தமைக்கு மிக்க நன்றிங்க.
Post a Comment