ஏதோ இப்பவாவது எங்களுக்கெல்லாம் தரிசனம் கொடுக்க வேண்டுமென்று தோன்றியதே.. நம்மூருக்கு வந்தவங்களை நாம் போய்ப் பார்க்கவில்லையென்றால் எப்படி? வயதில் நம்மை விட மூத்தவர்களாக இருந்தால் நாம் நேரில் போய்ப்பார்ப்பதுதானே மரியாதை. அதுவும் எங்களையெல்லாம் விட 3000 வருஷம் வயதில் பெரியவர்களாகப் போய் விட்டார்கள். பார்த்து விட்டு வருவோமென்று நானும் பெண்ணும் பெண்ணின் தோழியுமாகக் கிளம்புனோம். :-)
எங்களூர் மியூசியத்தில்தான் இப்போது தற்காலிக வாசம். போன மாதம் அதாவது நவம்பர் 21-ம் தேதியன்று வந்தார்கள். அடுத்த வருஷம் மார்ச் 24-ம் தேதி வரைக்கும்(இந்த டிசம்பர் 21-ம் தேதி உலகம் அழிஞ்சுராம இருந்தா) இங்கேதான் ஜாகை. மும்பையில் சுற்றிப்பார்க்க வேண்டிய இடங்களில் ஒன்றாக இப்ப இதுவும் சேர்ந்து விட்டது. நாலைந்து மம்மிகளும் கூடவே அவர்களுக்குண்டான பொருட்களுமாக மியூசியத்தின் முதல் மாடியில் நல்லாவே செட்டிலாகி விட்டார்கள்.
வேல்ஸ் மியூசியமென்று முன்னாளிலும் சிவாஜி வஸ்து சங்க்ரஹாலயா என்று இன்னாளிலும் அழைக்கப்படும் இந்த மியூசியத்திற்கு மும்பையின் சத்ரபதி சிவாஜி டெர்மினஸ் ரயில் நிலையத்திலிருந்தோ அல்லது சர்ச் கேட் ரயில் நிலையத்திலிருந்தோ பொடி நடையாகவே போய்ச்சேரலாம். சத்ரபதி சிவாஜி ரயில் நிலையத்திலிருந்து வெளியே வந்ததும் இடது கைப்பக்கமாக போய்க்கொண்டே இருந்தால் மும்பையின் புகழ் பெற்ற ஃப்ளோரா ஃபவுண்டனுக்கு அடுத்தபடியாக மியூசியத்தின் வாசலில்தான் நம் கால்கள் சென்று நிற்கும். மியூசியத்தைத் தொட்டடுத்துதான் ஜஹாங்கீர் ஆர்ட் காலரி இருக்கிறது.
இந்தக்கண்காட்சியைப் பார்ப்பதற்கென்று தனியா ஏதும் அனுமதிச்சீட்டு வாங்க வேண்டியதில்லை. மியூசியத்தைச் சுற்றிப்பார்ப்பதற்காக மாணவர்களிடம் 20, பொதுமக்களிடம் 50, வெளி நாட்டினரிடம் 300 ரூபாய்கள் வசூலிக்கிறார்கள். மாணவர்கள் தங்களோட ஐ.டி கார்டை கூடவே கொண்டு வரவேண்டியது அவசியம். நம்ம நாட்டைப்பத்தித் தெரிந்து கொள்ள ஆவலோடு வரும் வெளிநாட்டுக்காரர்கள் கிட்டே கூடுதல் காசு வசூலிப்பதுதான் கொஞ்சம் இடிக்குது. இவ்ளோ அதிகத் தொகை வசூலித்தால் வருபவர்கள் வாசலோடு போய்விட மாட்டார்களா?..
நாம் கொண்டு செல்லும் பைகள் எல்லாவற்றையும் சோதித்துப் பார்த்து விட்டு, உள்ளே அனுப்புகிறார்கள். தண்ணீர் பாட்டில்களுக்கு உள்ளே அனுமதி இல்லை. பிடுங்கிப்போட்டுக்கொண்டு டோக்கனைத்தந்து அனுப்புகிறார்கள்.
மியூசியத்தின் முன்பகுதியிலேயே 3D காட்சி நடக்கிறது. உள்ளே இருக்கும் மம்மியை அதன் கட்டுகளைப்பிரிக்காமலேயே சிடி ஸ்கேன்,எக்ஸ்ரே, எல்லாம் செய்து அதன் ரகசியங்களைக் கண்டறிந்து நமக்கு விளக்கிச்சொல்கிறார்கள். மம்மியை வைத்திருக்கும் மரப்பெட்டியின் மேல் எழுதப்பட்டிருக்கும் எழுத்துகளை வைத்து அதன் பெயர், குடும்பத்தகவல்கள் போன்ற எல்லாவற்றையும் கண்டறிந்து விளக்குகிறார்கள். இந்த ஷோவைப் பார்த்து விட்டு அப்புறம் கண்காட்சியைப் பார்க்கப்போனால் இன்னும் கூடுதலாக விளங்கிக் கொள்ளலாம்.
முதல் மாடியில் மம்மிகள் இருக்கும் இடத்துக்குப் போனதுமே படமெடுக்க அனுமதி இல்லை என்று சொல்லி விட்டார்கள். ஆனால் மியூசியத்தில் மற்ற பகுதிகளைச் சுற்றிப்பார்க்கும்போது படம் எடுத்துக்கொள்ளலாம். மொபைல் காமிராவுக்கு 20, ஸ்டில் காமிராவுக்கு 200 மற்றும் வீடியோ காமிராவுக்கு 1000 ரூபாய்கள் வசூலிக்கப்படுகிறது. ஃப்ளாஷுக்கும், ட்ரை பாடுக்கும் அனுமதியில்லை. மற்றபடி தாராளமாக வளைத்து வளைத்துச் சுட்டுக்கொள்ளலாம். காமிராவுக்கு அனுமதிச்சீட்டு வாங்கியதும் அதை ஒரு நூலில் இணைத்து காமிராவிலேயே கட்டித்தொங்க விட்டு விடுகிறார்கள். மணிக்கட்டிலும் சின்னதாக ஃபோட்டோ பாஸ் என்று எழுதப்பட்ட ஒரு பாண்டேஜைக் கட்டி விடுகிறார்கள். ஒவ்வொருத்தரா போட்டோவுக்கு பாஸ் எடுத்துருக்கீங்களா என்று கேட்டுக்கொண்டிருக்க தேவையில்லாமல் காமிராவையும் கையையும் பார்த்ததுமே விலகி வழி விடுகிறார்கள்.
மம்மிகளெல்லாம் பாவம்போல் படுத்திருக்கிறார்கள். போரடித்தால் ஒருத்தருக்கொருத்தர் பேசிக்கொள்ளக்கூட முடியாதபடி அவர்களது உடம்போடு வாயையும் சேர்த்து துணியால் பொதிந்து வைத்திருக்கிறார்கள். :-) மொத்தம் நான்கு மம்மிகளும் நூற்றுக்கும் மேற்பட்ட பொருட்களுமாக கண்காட்சியில் இடம் பெற்றிருக்கின்றன. மம்மிஃபையிங் என்று சொல்லப்படும் முறையில், மூளையை மூக்கு வழியாக வெளியே இழுக்க உபயோகப்படுத்தப்படும் கருவிகள் முதற்கொண்டு சில ஒரிஜினல்களும் பல மாதிரிகளுமாகப் பொருட்கள் இடம் பெற்றிருக்கின்றன. மற்ற மம்மிகளெல்லாம் காபினில் சமர்த்தாகப் படுத்துக்கொண்டிருக்க,, காற்றாட வெளியே வந்து படுத்திருந்த, வெறுமே பாண்டேஜ் துணியால் சுற்றப்பட்ட மம்மி ஒன்றை நம் கண்ணெதிரே பார்ப்பது விசித்திரமான அனுபவம்தான்.
இங்கே இருக்கும் மம்மிகள் அனைத்தும் லண்டனிலிருக்கும் பிரிட்டிஷ் மியூசியத்திலிருந்து கொண்டு வரப்பட்டவை. பொதுவா இந்தியாவில் ஆங்காங்கே மியூசியங்களில் மம்மிகள் இருப்பதாகச் சொல்லப்பட்டாலும், எகிப்திலிருந்து, அதுவும் பிரமிடுகளிலிருந்து கொண்டு வரப்பட்ட ஒரிஜினல் மம்மிகள் இந்தியாவுக்கு வருவது இந்திய வரலாற்றில் இதுவே முதல் முறை. அந்த வகையில் அதைப்பார்வையிட்ட நாங்களும் வரலாற்றில் இடம் பிடித்தோம்.
இங்கே இருக்கும் மம்மிகளில் “நெஸ்பரனூ”வின் மம்மி குறிப்பிடத்தகுந்தது. இதன் ரகசியங்களைத்தான் பல்வேறு தொழில் நுட்பங்களை உபயோகப்படுத்தி வெளிக்கொண்டு வந்திருக்கிறார்கள்.
இந்தப்படம் இணையத்தின் நன்கொடை..
“நெஸ்பரனூவும் அவரது தந்தையும் கார்னாக் கோயிலில் பூசாரிகளாக இருந்தவர்கள். சுமார் ஐம்பது வயதில், அதுவும் ப்ரெயின் ட்யூமர் காரணமாக நெஸ்பரனூ இறந்திருக்கக்கூடும். என்று அறியப்படுகிறது. இந்த மம்மியில் வெகு நாட்களாகக் யாருமறியாமல் இருந்த ஒரு சுவாரஸ்யமான ரகசியம் கண்டறியப்பட்டிருக்கிறது.
பொதுவாக மம்மிகளை அடுத்த உலகத்திற்கான வாழ்க்கைக்காகத் தயார் செய்யும்போது சில பொருட்களையும் மந்திரச்சொற்களையும், மந்திரசக்தி வாய்ந்ததாகக் கருதப்படும் சில படங்களையும் அதனுடன் வைத்து மூடுவது வழக்கம். இதனுடன் கூடுதலாக நெஸ்பரனூவின் தலைக்கு அடியில் வைக்கப்பட்டிருந்த ஒரு களிமண் கிண்ணம் ஆராய்ச்சியின்போது அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. இதை வைக்கும் சம்பிரதாயம் கிடையாதே என்று விவாதித்து அலசும் வேளையில்தான் ஒரு உண்மையைக் கண்டறிந்தார்கள்.
அதாவது, உடலைப் பதப்படுத்தும்போது ஒரு விதப் பசையை உடல் முழுக்கப் பூசி விடுவது வழக்கம். அவ்வாறு ஒரு நாள் மூளையை வெளியே எடுத்தபின் தலைப்பகுதியில் பூசும்போது அதிகப்படியான பசை வழிந்து தேங்குவதற்கு ஏதுவாக தலைக்கடியில் களிமண் கிண்ணம் ஒன்றை வைத்தவர்கள் அதை எடுக்க மறந்து விட்டார்கள். ஞாபகம் வந்து அதை எடுக்க முயற்சித்தபோது அது நன்றாக ஒட்டிகொண்டு விட்டது. இப்போது என்ன செய்வதென்று குழம்பிய அவர்கள், பிறர் தன்னுடைய தப்பைக் கண்டுபிடித்து விடுமுன் மளமளவென்று பாண்டேஜ்களைச் சுற்றி வைத்து விட்டார்கள். இத்தனை ஆயிரம் ஆண்டுகளாக புதைந்து கிடந்த இந்த ரகசியம் இப்போதுதான் வெளியாகியிருக்கிறது.
நாங்கள் கண்காட்சியைச் சுற்றிப்பார்த்து முடிக்கும்போது மாலை மணி ஆறு ஆகிவிட்டது. மியூசியம் மூடப்படும் நேரம். அனேகமாக மியூசியம் மொத்தமுமாக அங்கிருந்த கடைசி பத்து ஆட்களில் நாங்களும் அடக்கம். குழந்தைகளுக்கானால் இன்னும் பார்த்துத்தீரவில்லை. அந்த அரையிருட்டுச் சூழ்நிலையில் வெறுமே பாண்டேஜால் சுற்றப்பட்ட அந்த மம்மி, லேசானதொரு அமானுஷ்ய உணர்வைத்தூண்டியதென்னவோ நிஜம்.
“நாம உள்ளே இருக்கறதைக் கவனிக்காம வெச்சுப்பூட்டிட்டுப் போயிட்டாங்க, ராத்திரியானதும் மம்மிகளுக்கெல்லாம் உயிர் வந்துருதுன்னு வெச்சுக்குவோம். என்னவாகும்?” என்று ஒரு பிட்டைப்போட்டேன்.
“என்னாகும்,.. அதுகளை உக்கார வெச்சு விடிய விடிய கதை பேசுவோம்.”ன்னு கோரசா பதில் வந்தது. நிறைய இடுகைகளுக்கு ஐடியா கிடைக்கும் போலிருக்கே :-)
