Tuesday, 11 February 2014

"நிழற்படக் கவிதைகள்".. நன்றி முனைவர் அண்ணாகண்ணன் :-)

இலக்கிய உலகில் திரு. அண்ணா கண்ணனைத் தெரியாதவர்கள் இருக்க முடியாது. இருப்பினும் பூக்கடைக்கு ஒரு அறிமுகம் :-))

கவிஞர்; இதழாளர்; ஆய்வாளர்; 18 நூல்களின் ஆசிரியர்; இவரது இரு கவிதைகள், 32 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. ‘தமிழில் இணைய இதழ்கள்’ என்ற தலைப்பில் இளம் முனைவர்; ‘தமிழில் மின் ஆளுகை’ என்ற தலைப்பில் முனைவர். அமுதசுரபி, தமிழ் சிஃபி, சென்னை ஆன்லைன் இதழ்களின் முன்னாள் ஆசிரியர். வல்லமை வளர்தமிழ் மையத்தின் நிறுவனர்.

இனி,
நிழற்படக் கவிதைகள் - முனைவர் அண்ணாகண்ணன்

கவிதை, காலத்தின் சாட்சியாக இருக்க வேண்டும் என்பர். உண்மையில், அச்சிதழ்களும் மின்னிதழ்களும் இன்னும் பற்பல ஊடகங்களும் காலத்தின் சாட்சியாகத்தான் இருக்கின்றன. அப்படியானால், கவிதைக்கும் அவற்றுக்கும் என்னதான் வித்தியாசம்? இந்தக் காலத்தில் இவ்வாறு நடந்தது என்பது, ஒரு செய்திப் பதிவு. அந்தச் சம்பவத்தைக் கவிதையாகப் பரிமளிக்கச் செய்வது, கவிஞரின் மனம். அந்த வகையில் சாந்தி மாரியப்பனின் கவிதைகள், மனசாட்சியுடன் கூடிய காலத்தின் சாட்சியாக ஒளிருகின்றன.

மாநகரம், எத்தனையோ பழிகளையும் வசைகளையும் சுமந்துகொண்டு நிற்கிறது. இங்குள்ள நெருக்கடிகள், துரத்தல்கள், பற்றாக்குறைகள், சிக்கல்கள், ஏமாற்றங்கள்.... அனைத்தும் பல்வேறு கோணங்களில் பல்லோரால் பல்லாண்டுக் காலமாகப் பதிவாகி வருகின்றன. இந்தப் பதிவுகளின் விளைவுகள் என்ன என்ற கேள்வி ஒரு புறம் இருக்கட்டும். மாநகரச் சூழல் எவ்வளவு வறட்சிகரமாக இருப்பினும் இதனால், இங்கு வாழும் படைப்பாளர்களின் படைப்பூக்கமும் படைப்பாக்கமும் வறண்டுவிடவில்லை. இது, எதிர்மறைக்குள்ளும் ஒரு நேர்மறை அம்சம்.

மும்பை மாநகரில் வசிக்கும் சாந்தி மாரியப்பன், மாநகரின் அழுத்தங்களுக்கு இடையிலும் தன்னை ஒரு படைப்பாளியாகத் தக்கவைத்துக்கொண்டிருப்பவர். இவர், கவிதை, சிறுகதை, கட்டுரை, நிழற்படம்... எனப் பல்வேறு களங்களில் இயங்கி வருகிறார். வல்லமை மின்னிதழின் ஃபிளிக்கர் படக் குழுமத்தையும் இவரே நிர்வகித்து வருகிறார். இவருடைய நிழற்படங்களைத் தொடர்ந்து கவனித்து வருகிறேன்.  அவை, தனித்துவம் வாய்ந்தவை. புதிய கோணங்களில் நவீன வாழ்வை வெளிப்படுத்துபவை. இயற்கை எழில் கொஞ்சும் காட்சிகள், அன்றாட வாழ்வில் கவனிக்கத் தவறும் நுணுக்கமான கூறுகள், எளிய நிகழ்வுகளில் உள்ள அழகியல், மனிதர்களின் பல்வகை உணர்வு வெளிப்பாடுகள்... எனப் பலவும் இவரின் நிழற்படங்களில் மிளிருகின்றன.

நிழற்படக் கலைஞரான இவரது கவிதைகளிலும் காட்சிப் படிமங்கள் ஆதிக்கம் செலுத்துகின்றன. சிதறிக் கிடக்கும் சூரியச் சில்லறைகளில் புரண்டெழுந்த அணிற்பிள்ளை, கொத்துக் கொத்தாய்ப் பூத்த பறவைகளின் வாசத்தில் கிறுகிறுத்து நின்ற மாமரம், ஏகாந்த வெளியில் ஒன்றையொன்று துரத்தும் ஜோடி மைனாக்கள், தலையைத் தலையை ஆட்டிக்கொண்டு உட்கார்ந்திருக்கும் பறவை.... எனப் பலவும் நேரடியாகக் காணும் உணர்வை நம்முள் ஏற்படுத்துகின்றன. தேய்பிறைப் புன்னகை என்ற சொல்லாடல், நேர்த்தியான காட்சிப் பதிவு.

குழந்தைகள், மன அழுத்தத்திலிருந்து நம்மைக் காத்து வருகிறார்கள். எவ்வளவு சிக்கல்கள் இருப்பினும் ஒரு குழந்தையைப் பார்க்கும்போது, மனம் லேசாகிவிடுகிறது. குழந்தைகளைக் கருவாகக் கொண்ட இவரது கவிதைகளை நான் பெரிதும் ரசித்தேன். அறிதுயில் என்ற கவிதை, மிக அழகு. ரயிலோடும் வீதிகள், வாசனையாய் ஒரு வானவில், மழலை நிலா... உள்ளிட்ட பல கவிதைகளில் குழந்தைமையை இவர் கொண்டாடியிருக்கிறார்.

சிறைப்படும் 
ஒவ்வொரு தருணத்திலும்
குதித்துக் கூத்தாடுகிறது காற்று
குழந்தைகள் கைகளில்
பலூன்களாய்

என்ற வரிகளில்தான் எவ்வளவு உற்சாகம்!

கதைக் கவிதைகளும் இவருக்கு இயல்பாக வருகின்றன. தாத்தா இறந்த பிறகு திண்ணைக்கு இடம்பெயரும் பாட்டியும் பொறந்த வீட்டுச் சொத்தில் பங்கு கேட்டு மனைவியை விரட்டுகையில் நிகழும் திருப்பமும் நிகழ்காலச் சிக்கல்களின் சூடான பதிவுகள். 

வென்றுவிட்டதாய்
பேரிகை கொட்டும் தருணங்களில்தான்
ஆரம்பிக்கவே செய்கின்றன
பெருவாரியான யுத்தங்கள்

என அவர் குறிப்பிடுவது, வாழ்க்கை நமக்குக் கற்பிக்கும் பாடங்களில் ஒன்றாகும்.

இந்தக் கவிதைத் தொகுப்பு, கலவையான உணர்வுகளுடன், கதம்பமாக மணம் வீசுகிறது. சாந்தி மாரியப்பன், ஏதோ பெயருக்கும் எண்ணிக்கைக்கும் எழுதாமல், உள் உணர்வுக்கும் சமூகப் பயனுக்குமாக எழுதி வருகிறார். எதிர்காலத்தில் இவரது மொழி,  இன்னும் கூர்மை பெறும். இவரால் இன்னும் சிறப்பான படைப்புகளை அளிக்க முடியும் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு. இவரது கவிதைப் பயணம் சிறப்புடன் தொடர, எனது நல்வாழ்த்துகள். இவரது வல்லமையால் இந்த மாநிலம் பயனுறட்டும்.

"சிறகு விரிந்தது" கவிதைத்தொகுப்பிற்கு அணிந்துரை வழங்கிக் கௌரவித்த முனைவர் அண்ணா கண்ணனுக்கு மறுபடியும் மனமார்ந்த நன்றிகள்..

கவிதைத்தொகுப்பைத் தபாலில் வாங்க..

AGANAZHIGAI - THE BOOK STORE
390 ANNA SALAI, KTS COMPLEX,
SAIDAPET (OPP. BUS STAND)
CHENNAI - 600 015 .
Phone: 91 44 4318 9989 / 91 44 999 454 1010 / 91 44 988 407 5110

aganazhigai@gmail.com

9 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

அணிந்துரை சிறப்பு... முனைவர் அவர்களுக்கு வாழ்த்துக்கள்...

Thenammai Lakshmanan said...

சிறப்பான அணிந்துரை.. விரைவில் என்னுடைய மதிப்புரையும் வரும் சாந்தி.. மென்மையான கவிதைகள் உங்களுடையவை. அதிகம் பறவைகள் பூக்கள், இயற்கை எல்லாம் கொட்டிக் கிடக்குது :)

குழந்தைகளும் அவர்களின் குறும்புகளும் கூட.

ராமலக்ஷ்மி said...

நூலிலும் வாசித்தேன். உங்கள் கவிதைகள் அனைத்தையுமே இணையத்தில் வாசித்திருக்கும் வகையில் அணிந்துரையை மேலும் இரசித்தேன். வாழ்த்துகள்!

Jaleela Kamal said...

வாழ்த்துக்கள் சாந்தி

சாந்தி மாரியப்பன் said...

வாங்க தனபாலன்,

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க தேனக்கா,

உங்கள் மதிப்புரையை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன். :-)

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க ராமலக்ஷ்மி,

வருகைக்கும் ரசிப்புக்கும் நன்றி.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க ஜலீலாக்கா,

வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் நன்றி.

வெங்கட் நாகராஜ் said...

சென்ற சனிக்கிழமை அன்றுதான் வாங்கினேன். விரைவில் படித்து விடுகிறேன்...

சிறப்பான அணிந்துரை....

த.ம. +1

LinkWithin

Related Posts with Thumbnails