Monday, 17 December 2012

“ஐயய்யோ.. என் வீட்டைக்காணோம்..”


குழந்தைகளின் படிப்பை முன்னிட்டு நிரந்தர வீட்டை விட்டு தற்காலிகக் குடியிருப்பு தேடிய போது, இந்த வீட்டைப் பார்த்ததுமே பிடித்துப்போனதற்கு ஹாலுக்கப்பால் புல்வெளி, புல்வெளிக்கப்பால் மரம், செடி, கொடிகள், பறவைகள் மண்டிக்கிடந்த மனை, மனைக்கப்பால் காற்றின் வழியைத் தடைசெய்யாத உயரம் குறைந்த குடியிருப்புகள், குடியிருப்புகளுக்கப்பால் பாலருவி வழிந்து கொண்டிருந்த மரகதமலையும் ஒரு காரணம். கோடைக்காலத்தில் மரகதத்தை அடகு வைத்து விட்டு மூளியாய் நின்றிருக்கும் மலைக்கு, வருணக்கணவன் வந்ததும் அதை மீட்டுக் கொடுப்பது வருடாவருடம் நடக்கும் கூத்து.

தினமும் காலையில் பல குரல்களில் பாடித் திருப்பள்ளியெழுப்பும் பறவைகள் கூட்டம். குடியிருப்பின் புல்வெளிக்கு தண்ணீர் பாய்ச்சப்படும் நேரத்துக்குக் கரெக்டாக அந்தப்பக்கம் வந்து ஆஜர் கொடுக்கும் மைனாக்களைக்கண்டதும் சீனியர்களைக்கண்ட ஜூனியர்களைப்போல் அலறியடித்துக்கொண்டு புறாக்கள் இந்தப்பக்கம் பறந்து விடும். தண்ணீரில் விளையாட வரும் குருவிகள், தென்னை மரக்கிளையில் அமர்த்தலாக உட்கார்ந்து கொண்டு ஓரக்கண்ணால் நோட்டமிட்டுக்கொண்டிருக்கும் காகங்கள் என்று லூட்டிக்குப் பஞ்சமிருக்காது. இவர்கள் அடிக்கும் கொட்டத்தினிடையே பக்கத்துக்குடியிருப்பிலிருந்து கூண்டுக்கிளியொன்றின் கதறல் ஒலியும் விட்டுவிட்டுக் கேட்டுக்கொண்டிருக்கும்.
கம்பிகளுக்கப்பால்..
இப்படியான ஒரு காலைப்பொழுதில்தான் டுவ்வீக்.. டுவ்வீக்.. என்றொரு வித்தியாசமான பறவைக்குரல். எங்கிருந்து வருகிறதென்று அனுமானிக்க முடியவில்லை. அதேசமயம், பக்கத்து மனையில் மண்டிக்கிடந்த புதரில் ஆங்காங்கே அசைவுகள், திடீரென ஒரு சின்னஞ்சிறிய உருவத்தின் தாவல்கள் தென்பட்டன. ஒன்று.. இரண்டு.. நாலைந்து ஜோடிகள் இருக்கலாம். அன்று முழுவதும் காத்திருந்தும் தரிசனம் கிடைக்கவில்லை.

ஒரு வாரம் சென்றிருக்கலாம். சோம்பலான ஒரு மதிய வேளை. எதேச்சையாக வெளியே பார்த்தால் குடியிருப்பின் காம்பவுண்டுச்சுவரில் குருவிக்கூட்டம் ஒன்று உட்கார்ந்திருந்தது. உட்கார்ந்திருந்தது என்றா சொன்னேன்?. ஒரு நிமிஷம் கூட சேர்ந்தாற்போல் உட்காரவில்லை. அங்குமிங்கும் தாவுவதும், தள்ளிப்போய் உட்கார்ந்திருக்கும் தன்னுடைய இணையின் அருகே போய் உட்கார்ந்து கொள்வதும், யாராவது வருவதுபோல் தெரிந்தால், சட்டென மதிலுக்கு அந்தப்பக்கம் இருக்கும் ஆமணக்குச் செடியின் இலை மறைவில் மறைந்து கொள்வதுமாக ஒரே சேட்டை. பார்த்தால் சாதாரணக் குருவிகள் மாதிரியும் தெரியவில்லை. தலைக்குக் கறுப்புத்தொப்பி வேறு போட்டுக்கொண்டிருந்தன. வீட்டிலிருந்து கீழிறங்கிப்போய்ப் பார்ப்பதற்குள் பறந்தாலும் பறந்து விடும். எடு காமிராவை. ஜும் செய்து பார்த்தால்… ஹைய்யோ!!. “புல்புல்”. சமீப வருடங்களில் பார்த்ததில்லை. இந்த வருடம்தான் புதுவரவு போலிருக்கிறது.
அடித்த காற்றில் ஃபோகஸ் பறந்துவிட்டது. பொறுத்தருள்க :-)
சில நாட்கள் பொறுமையாகக் கவனித்ததில் தினமும் ஒரே நேரத்தில், ஒரே இடத்தில் வந்து உட்கார்ந்து கொண்டிருப்பது தெரிய வந்தது. ஒரு நாள் கொஞ்சம் அரிசி மணிகளைக்கொண்டு போய் அவைகள் வழக்கமாக உட்காருமிடத்தில் போட்டு விட்டுக் கொஞ்சம் தள்ளிப்போய் காமிராவுடன் நின்று கொண்டேன். வந்து உட்கார்ந்தவை சுதாரிக்குமுன் சுட்டுத்தள்ளினேன்.

புல்புல்கள் அந்த மனைக்குக் கிட்டத்தட்ட பட்டா போடாத சொந்தக்காரர்கள் ஆகிவிட்டன என்றே சொல்லலாம். குடியும் குடித்தனமுமாக சொந்தபந்தம் சூழ வாழ்க்கை நடத்திக்கொண்டிருந்தன. ஒரு மழைத்துளி விழுந்தாலும் போதும். சட்டென ஆமணக்கு இலைக்குடைக்குள் பாதுகாப்பாக உட்கார்ந்து கொள்ளும். மழை விட்டதும் வெளியே வந்து சுவரில் உட்கார்ந்து பொழுதைப்போக்கும். ரொம்பவே கூச்சசுபாவமுடையவை. கொஞ்சம் தொலைவில் ஆள் நடமாட்டம் தெரிந்தாலே “புடிக்க வர்றாங்க.. ஓடிக்கோ” என்பதுபோல் சரேலென்று மறைந்து விடும். மழைக்காலத்தைக் கொண்டாடித் தீர்த்துக் கொண்டிருந்தன. காலையிலும் மாலையிலும் வழக்கமான நேரத்தில் வந்து விடுவார்கள். வந்து விட்டேன் என்று அறிவிப்பதைப்போல் “டுவீக்..டுவீக்” என்று குரலெழுப்பிக்கொண்டே தோட்டம் முழுக்கச் சுற்றிப் பார்வையிட்டு விட்டு, அரைமணி நேரம்போல் விளையாடிவிட்டுச் சென்று விடுவார்கள்.
படம் மீள்பதிவு :-)
மழைக்காலம் முடிந்து பச்சைப்பசேல் புற்களெல்லாம் காய்ந்து காவி அணியத்துவங்கியிருந்த சமயம். தினமும் இரவில் காய்ந்த புற்களைத் தீக்குத்தின்னக்கொடுக்கும் படலம் ஆரம்பமாகியிருந்தது. இதுவும் வருடாவருடம் நடப்பதுதான். அதன்பின் இயந்திரங்களைக்கொண்டு வந்து ஓரளவு செடி செத்தைகளையெல்லாம் அகற்றி, தரையைச் சமன்படுத்துவார்கள் எதிரிலிருக்கும் திருமண மண்டபத்துக்காரர்கள். இல்லாவிட்டால் திருமணத்திற்கு வருபவர்கள் வாகனங்களை எங்கே நிறுத்துவதாம்? கோடிக்கணக்கில் காசு கொடுத்து வாங்கிய இடத்தை உரிமையாளர் சும்மா போட்டு வைப்பாரா என்ன?

இந்த அலங்காரங்களெல்லாம் முடிந்த ஒரு சாயந்திர வேளை. வழக்கம்போல் விசிட்டுக்கு வந்த புல்புல் வித்தியாசத்தை உணர்ந்து திணறியது.. தடுமாறியது. “கிணத்தைக் காணோம்..” என்று கூப்பாடு போட்ட வடிவேலுவைப்போல் “ஐயய்யோ.. என் வீட்டைக்காணோம்..” என்று அதன் மொழியில் டுவ்வீக்.. டுவ்வீக் என்று அலறியபடியே சுவரில், ஒரு காலத்தில் அதன் இருப்பிடமாயிருந்த ஆமணக்குச்செடியின் மொட்டைக்கொம்புகளில், அருகிருந்த மரக்கிளையில் என்று தாவித்தாவி அமர்ந்து அலைபாய்ந்தது. அந்த இடத்தின் மேலாகப் பறந்து பறந்து தேடியது. பின் சென்று விட்டது.

குடியிருக்கும் வீட்டைப் பறிகொடுப்பதைப் போன்ற துயரம் எதுவுமே கிடையாது. நம்முடைய சுகங்கள், துக்கங்கள், வறுமை, சந்தோஷம், செல்வச்செழிப்பு எல்லாவற்றையுமே தனதாக்கிக்கொள்ளும் ஒரு நட்பு அது. செங்கல் சிமெண்டுடன் நம் உயிரையும் சேர்த்தல்லவா பிணைத்துக்கொண்டு அது நிற்கிறது. ‘எது இருக்கிறதோ இல்லையோ தலைக்கு மேல் சொந்தமாக ஒரு கூரை இருந்தால் அதுவே போதும்’ என்பதே நிறையப்பேரின் தாரகமந்திரமாகவும் இருக்கிறது என்பதற்குப் பெருகி வரும் வீட்டு விளம்பரங்களே சாட்சி. குடியிருந்த குடிசையைத் தீவிபத்தில் தொலைத்து விட்டு ஓரிரவில் நடுத்தெருவுக்கு வரும் மக்களின் துயரமோ சொல்லவொண்ணாதது. எவ்வளவு கஷ்டப்பட்டாலும் தனக்கென்று ஓர் கூரை இருக்கிறதென்ற நிறைவுதானே மனிதனை அத்தனையையும் தாங்கச்செய்து, நிம்மதியான உறக்கத்தை இரவில் பரிசளிக்கிறது.

அதன்பின் இரண்டொரு நாட்கள் காலையிலும் மாலையிலும் பக்கத்து மனையில் டுவ்வீக்.. டுவ்வீக் என்ற கதறல் கேட்டபடியே இருந்தது. தன்னுடைய இருப்பிடம் மறுபடியும் கிடைத்துவிடுமென்ற நப்பாசையில் வந்திருக்குமோ என்னவோ. அதன்பின் காணாமலே போயிற்று.

ஒரு நாள் சாயந்திரம் அந்தக்காலி மைதானத்தில் கிரிக்கெட் விளையாடிக்கொண்டிருந்தன மீசை முளைத்த சில இளம்பறவைகள்..

19 comments:

வேடந்தாங்கல் - கருண் said...

Nice.,

வல்லிசிம்ஹன் said...

அடப் பாவமே. இதுங்க ஏன்ப்பா இன்னும் மனுஷங்களைப் புரிஞ்சுக்கலை.

ப்ளூக்ராஸ் இருப்பது போல இந்தப் பறவைகளுக்கும் ஒரு நிரந்தர் புகலிடம் இருக்கலாம். படங்களும் உங்கள் வர்ணனையும் அழகு. வெகு அழகு.

semmalai akash said...

வீட்டைக் காணும் என்றதும் பதறிப்போய் ஓடி வந்தேன், ஹா ஹா ஹா! அருமையான அனுபவம் மிகவும் ரசித்தேன்.

ஹுஸைனம்மா said...

பறவைகளின் கீச்சுகளைக் கேட்பது ஆனந்தமானது.

வீடு இழப்பவரின் நிலைமையை எழுதியது மனதைப் பிசைந்தது. உண்மைதான். இங்கே வேலை பார்ப்பவர்கள், வெளிநாட்டு வாழ்வு நிரந்தரமில்லை என்பதால், எப்போதானாலும் இந்தியாவில் போய் இருக்க ஒரு வீடு வேண்டும் என்று எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் ஊரில் ஒரு வீடு கட்டி/வாங்கிக் கொள்ளப் பார்ப்பார்கள்.

அதுமட்டும் நடந்துவிட்டால், ’என்னதான் நடக்கும் நடக்கட்டுமே’ என்று ஒரு தெனாவட்டு வந்துவிடும் அவர்களுக்கு!! :-)))

அருணா செல்வம் said...

நாடு நாகரிகம் அடைய அடைய... நல்ல நல்ல இயற்கை அழகுகள் அழிந்து விடுகின்றன.

அந்தக் குருவிகள் பாவம் தான்.
நல்ல பகிர்வு.

Lakshmi said...

ரொம்ப டச்சிங்கான பகிர்வு

கோமதி அரசு said...

ஒரு காலத்தில் அதன் இருப்பிடமாயிருந்த ஆமணக்குச்செடியின் மொட்டைக்கொம்புகளில், அருகிருந்த மரக்கிளையில் என்று தாவித்தாவி அமர்ந்து அலைபாய்ந்தது. அந்த இடத்தின் மேலாகப் பறந்து பறந்து தேடியது. பின் சென்று விட்டது.//

படிக்கவே கஷ்டமாய் இருக்கிறது.

நான் இந்த பறவையைப்பற்றி ”காத்திரு காத்திருந்து” என்று போஸ்ட் போட்டு இருக்கிறேன் அமைதிச்சாரல். இப்போது சிட்டுக் குருவி போல் வீடுகளில் கூடு கட்ட ஆரம்பித்து விட்டது. நானும் இதன் படம் பகிர்ந்து இருக்கிறேன் ஆனால் இத்தனை அழகாய், தெளிவாய் இல்லை. தினம் நான் வைக்கும் உணவை அது தான் முதலில் வந்து கொத்தி தின்கும். மறுபடியும் அதன் கூட்டை செப்பனிட்டு மறுபடியும் முட்டை வைத்து இருக்கிறது.

புதுகைத் தென்றல் said...

படிக்கவே கஷ்டமா இருக்கு.

அந்த பறவைகளின் சத்தம் எனக்கு ரொம்பவே பிடிக்கும்.

ஐ மிஸ் யூன்னு சொல்லிக்க வேண்டியதுதான்.

புதுகைத் தென்றல் said...

படிக்கவே கஷ்டமா இருக்கு.

அந்த பறவைகளின் சத்தம் எனக்கு ரொம்பவே பிடிக்கும்.

ஐ மிஸ் யூன்னு சொல்லிக்க வேண்டியதுதான்.

Easy (EZ) Editorial Calendar said...

உங்கள் பதிவுக்கு மிக்க நன்றி.....

நன்றி,
மலர்
http//www.ezedcal.com/ta(வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)

Asiya Omar said...

பறவைகளின் சத்தமும் அவற்றை ரசிப்பதும் எனக்கு பிடித்த பொழுது போக்கு.ஆஹா உங்கள் அனுபவமும் பகிர்வும் படங்களும் அருமை.நான் ஒரு குருவியை படம் எடுக்க பட்ட பாடு தான் நினைவுக்கு வருது..

ராமலக்ஷ்மி said...

நெகிழ்வான பகிர்வு சாந்தி. படங்கள் அருமை.

சே. குமார் said...

நெகிழ்ச்சியான பகிர்வு அக்கா.
பறவைகளில் குரலை கேட்பதில் கிடைக்கும் ஆனந்தமே தனிதான்.

ஹேமா said...

நானும் ஒரு அகதிப்பறவை.எனக்குப் புரிகிறது வலி.... !

மாதேவி said...

வீட்டைகாணோம் என அதுகள் துடிக்கும் துடிப்பு வருத்தமாகத்தான் இருக்கின்றது.

இருக்கும் ஓரிரு மரங்களும் இல்லாமல்போவதில் அவையும் இருப்பிடமின்றி ஓடிவிடுகின்றன.

ஸ்ரீராம். said...

மனதுக்குக் கஷ்டமாக இருக்கிறது. மொட்டை மாடியில் ஒரு கூண்டு வைத்தால் வந்து தங்காதா? ஹேமாவின் பின்னூட்டம் மனதைத்தொட்டது.

ஸ்ரீராம். said...

T F

rishi said...

மனம் நெகிழச் செய்த பதிவு
வாழ்த்துகள்

இராஜராஜேஸ்வரி said...

மழைக்காலத்தைக் கொண்டாடித் தீர்த்துக் கொண்டிருந்தன. காலையிலும் மாலையிலும் வழக்கமான நேரத்தில் வந்து விடுவார்கள். வந்து விட்டேன் என்று அறிவிப்பதைப்போல் “டுவீக்..டுவீக்” என்று குரலெழுப்பிக்கொண்டே தோட்டம் முழுக்கச் சுற்றிப் பார்வையிட்டு விட்டு, அரைமணி நேரம்போல் விளையாடிவிட்டுச் சென்று விடுவார்கள்.


அழகான வாழ்க்கையை கடைசியில் மனிதனிடம் பறிகொடுத்துவிட்டதே !

LinkWithin

Related Posts with Thumbnails