Sunday 28 February 2010

ஹோலி ஹை!!!!!!!.



கடைத்தெருவெங்கும் களை கட்ட ஆரம்பிச்சிடுச்சு.. எங்கும் கு(g)லால்,பலூன் பாக்கெட்டுகள்,கலர் தண்ணீரை மத்தவங்க மேல தெளிக்க பிச்காரி ன்னு சொல்லப்படும் பிஸ்டன்கள்,எல்லாம் வந்து இறங்கி, வியாபாரம் சூடு பிடிக்க ஆரம்பிச்சு விட்டது.தெருவில் போகும்போது, கொஞ்சம் ஜாக்கிரதையாத்தான் போக வேண்டியிருக்கு. எங்கயிருந்து, எப்ப தண்ணீர் நிரப்பிய பலூன் வந்து விழும்ன்னு சொல்லமுடியாது. யாரும், திட்ட மாட்டோம். ஏன்னா!!! பூ(b)ரா நா.. மான்னா... ஹோலி..ஹே..!! (தப்பா நினைக்காதீங்க... ஹோலி வந்தாச்சு..)இதுதான் அதன் அர்த்தம்.


ஹோலி வடநாட்டுப்பண்டிகையா??.. இருக்கலாம்.. இல்லாமலும் இருக்கலாம். தமிழ்நாட்டில் கொண்டாடப்படுகிறதே என்று நினைக்கிறீர்களா!!!.. சமீப காலமா கொண்டாடப்படறதைச் சொல்லலைங்க.. நாம காமன்பண்டிகைன்னு கொண்டாடுகிறோமே.. அதுதான் நம்மூரு ஹோலி. ஹோலின்னா எரித்தல்ன்னு அர்த்தம்... இப்ப தெளிவாயிட்டுதா!!!

திரிபுரம் எரித்த விரிசடைக்கடவுளைப்பற்றித் தெரியும்தானே!!!. அவர் மன்மதனை எரித்ததும், ரதியின் வேண்டுகோளுக்கிணங்கி உயிர்ப்பித்ததும்ன்னு எல்லாம் கதைகள். இந்தச் சம்பவத்தின் நினைவா நம்மூரிலும் மன்மதனின் உருவபொம்மையை எரிப்பது வழக்கம்.

வட இந்தியாவுல ஹோலி பிரகலாதனோட சம்பந்தப்பட்டது. பிரகலாதன் தன்னை விட்டுட்டு, ஹரி நாமத்தை ஜபித்ததால் அவங்கப்பா ஹிரண்யகஷ்புக்கு கோபம் வந்துட்டுது. பின்னே.. வராதா!!!. 'அது எப்படி நீ இன்னொருத்தரை பெஸ்ட்'ன்னு சொல்லலாம்ன்னு அவருக்கு கோபம்.. பக்கத்துல உக்காரவெச்சி அட்வைஸ் கொடுத்துப்பாத்தார், பயமுறுத்திப்பாத்தார், ஒன்னும் வேலைக்காவலை!! :-((
கவுன்சிலிங் கொடுக்க வேற யாரு இருக்கான்னு பார்த்து ஒவ்வொருத்தரையா அழைச்சார். வந்தவங்களும் 'தம்பி, உங்கப்பா, நல்லவரு... நாலும் தெரிஞ்ச வல்லவரு, அவரை பகைச்சுக்காதே'ன்னெல்லாம் அட்வைஸ் பண்ணாங்க.. ம்ஹூம்.. பிரகலாதன் மசியலை..

பெத்த மகன்னு கூட பாக்காம, பிரகலாதனோட உயிருக்கே ஆபத்து விளைவிச்சும் பாத்தார்.. பயத்துலயாவது புள்ளை.. "ஹிரண்யகஷ்பாய நமஹ" ன்னு சொல்லிட மாட்டானான்னு ஒரு நப்பாசை. புள்ளை என்னான்னா அந்த ஆசையில ஒரு லோடு மண்ணைக்கொட்டிட்டு ' நாராயணாய நமஹ' ன்னு சொல்லுது!!! இது சரிப்படாது.. தங்கையுடையான் எதற்கும் அஞ்சான்னு நினைச்ச ஹிரண்யகஷ்பு ஓலை அனுப்பினார் தங்கை ஹோலிகாவுக்கு..

'ஹோலிகா'வும் 'அண்ணே.. கூப்பிட்டு விட்டியாமே? ஆள் வந்து சொல்லுச்சு' என்றபடி வந்து சேந்தா.. .அப்பாடா!!!..பண்டிகைக்கு பெயர்க்காரணம் வந்தாச்சு.. விபரத்தைச்சொல்லி 'நீயாவது புத்தி சொல்லும்மா' ன்னு அண்ணன் வேண்டுகோள் வைக்க, அவளுக்கும் தோல்விதான். கடைசி சந்தர்ப்பத்திலயும் தோல்வின்னதும் ரெண்டு பேருக்கும் கோபம் தாங்கல. போட்டுத் தள்ளிட வேண்டியதுதான்னு முடிவு பண்ணி 'தங்கச்சி, ஒன்னோட வரம் இன்னும் active ஆகத்தானே இருக்கு' ன்னு உறுதி செஞ்சுக்கிட்டு ஏற்பாடுகளெல்லாம் செய்ய ஆரம்பிச்சாரு ஹிரண்யகஷ்பு.

ஹோலிகாவை தீ எரிக்காது என்பது அவளுக்குக் கிடைச்ச வரங்களில் ஒன்னு. இதைப்பயன்படுத்தி, பிரகலாதனை எரிச்சு, ஒழிச்சுடணும்ன்னு திட்டம். பாவம்.. சின்னப்பையன்னு கூடப்பாக்கலை.. தயாரா இருந்த சிதையில், அவனை மடியில் வெச்சிக்கிட்டு, ஹோலிகா உக்காந்துக்கிட, நெருப்பு மூட்டப்பட்டது. 'ஐயோ.. அம்மா' ன்னு ஒரு அலறல் குரல்.... அலறல் வளர்ந்து, எதிரொலிச்சு, பின் தேய்ந்து மறையுது. நெருப்பும், புகைமண்டலமும் மெல்லமெல்ல குறைஞ்சபின்னே பாத்தா!! இதென்ன!!!... பிரகலாதன் நெருப்பால் எந்தவித சேதாரமுமில்லாம, நிக்கிறான்.. ஹோலிகா சாம்பலாகிக் கிடக்கிறாள். பிரகலாதன் வாய் மட்டும் 'நாராயணாய நமஹ'ன்னு உச்சரிச்சுக்கிட்டிருக்கு. ஹிரண்யகஷ்புக்கு ஒன்னும் புரியலை.. அப்புறமாத்தான் தெரிய வருது.. ஹோலிகா தனியா நின்னா நெருப்பு அவளை ஒன்னும் செய்யாது. அப்படித்தான் வரம் கிடைச்சிருக்கு. அவளும் பிரகலாதனுமா ரெண்டு பேரா நின்னதால வரம் back fire ஆகிடுச்சு. வாங்கும்போதே terms and conditions ஐ பாத்து வாங்கியிருக்க வேண்டாமோ!!! கியாரண்டி, வாரண்டி பீரியட் ஒன்னும் பாக்காம வாங்கிட்டாங்க. இப்போ எக்ஸ்பயர் ஆயாச்சு.

இதுதான் ஹோலியும்,பெயரும் வந்த கதை. ஹோலி இங்கே இரண்டு நாள் பண்டிகை. முதல் நாள் ச்சோட்டி ஹோலி, ரெண்டாம் நாள் ப(b)டீ ஹோலின்னு கொண்டாடப்படுது. ச்சோட்டி ஹோலி அன்னிக்குக் காலையிலேயே பண்டிகைக்கான ஏற்பாடு ஆரம்பிச்சுடும். பில்டிங் முன்னாடி காலி இடத்திலும், தெருக்களிலுமா சின்னதா குழி தோண்டி வெச்சிடுவாங்க. அப்புறமா, தோகையுடனுள்ள கரும்பு ஒன்னும், இலைகளோட கூடிய சின்ன மரக்கிளை ஒன்னும் முதல்ல நடுவாங்க. பச்சை மரம் ஹோலிகா உயிரோட எரிஞ்சதை குறிக்குமாம். அப்புறம், அதைச் சுத்தி, பெரிய பெரிய மரத்துண்டுகள், விறகுகள், வரட்டி, எல்லாம் அடுக்குவாங்க. கடைசியா பூமாலை ஒன்னும், ஹோலிக்குன்னே கிடைக்கிற சர்க்கரை மாலை ஒன்னும் போடுவாங்க.


bonfire க்கான ஏற்பாடுகள்.
ஹோலிக்கு நைவேத்தியமா பூரண்போளி, பாப்டி, குஜியா(சோமாஸ் அல்லது கரஞ்சி) மற்றும் அவரவர்க்கு வசதிப்பட்டதைச் செய்து, ஆரத்தித் தட்டில் அடுக்கி கொண்டு சென்று பூஜை செய்வார்கள். சில இடங்களில் சத்ய நாராயண பூஜை செய்வதுமுண்டு. பின் கலசத்திலிருக்கும் நீரை bonfire ஐ சுற்றி வலம் வந்து கொண்டே, தரையில் ஊற்றிக்கொண்டு வருவார்கள். கடைசியா, தட்டிலிருக்கும் தேங்காயை, bonfire ல் போட்டு விடுவார்கள். கூட்டத்தில் வயதில் பெரியவரை அழைச்சு, அவர் கையாலே நெருப்பிடச்செய்வார்கள். bonfire எரியும் நிகழ்ச்சிக்கு 'ஹோலிகா தகன்' என்றே பெயர். நெருப்பு எரியும் போது, எல்லோரும் ஒருவரை ஒருவர், 'ஹோலி ஹை'ன்னு சொல்லி வாழ்த்திக்குவாங்க. ஆரத்தி தட்டிலிருக்கிற, மஞ்சள்,குங்குமம், குலாலை ஒருவருக்கொருவர் இட்டுக்குவாங்க. இன்னிக்கு கலர்ப்பொடியை சின்னப் பசங்க மட்டும் பூசிக்குவாங்க. நெருப்பிலிடப்பட்ட தேங்காய்கள் சில சமயம் வெடித்துச்சீறிக்கொண்டு தீக்கு வெளியே வந்து விழும். சுட்ட தேங்காயை துண்டுகளாக்கி எல்லோருக்கும் பிரசாதமா கொடுப்பாங்க.

மறுநாள் எப்போ விடியும்ன்னே காத்திட்டிருப்பாங்க. காலை நாஷ்டா ஆனதும்,கிளம்பிடுவாங்க. முகம், கை கால்களில் தேங்கா எண்ணெய் தேய்ச்சுக்குவோம். அப்படித்தேய்ச்சுக்கிட்டா கலர்ப்பொடிகள் ஒரு அளவுக்கு மேல் ஒட்டாதில்ல. அதுக்குத்தான். ஒருவர் வீட்டிலிருந்து புறப்ப்பட்டு, இன்னொருவர் வீட்டுக்குப்போய் அவரை அழைச்சிக்கிட்டு அடுத்தவரை அழைக்கப் போறதைப் பாத்தா நம்ம ஆண்டாளம்மா மார்கழி நீராட கிளம்பினமாதிரிதான் தோணும். வீட்டுக்கு வர்றவங்களுக்காக ஏதாவது பலகாரமும் செஞ்சு வெச்சிருப்பாங்க. பில்டிங்குகளில் எல்லோருக்கும் பொதுவா, கலர்ப்பொடிகள், ஸ்நாக்செல்லாம் அரேஞ்ச் பண்ணியிருப்பாங்க. கலர்ப்பொடி பூசாத முதல் நாள் கணக்கையெல்லாம் இன்னிக்கி நேர் பண்ணிடுவாங்க. கையில் யார் அகப்பட்டாலும் அவங்களுக்கு வேஷங்கட்டிட்டுதான் விடுவாங்க. நம்ம பிள்ளைங்களையே குரலை வெச்சித்தான் அடையாளம் காணணும். மிகையா இருந்தாலும் இதுதான் உண்மை.. சில இடங்களில் ஹோலி ஸ்பெஷலா பாங் என்று சொல்லப்படற ஒருவகை பானமும் இருக்கும். அதைக்குடிச்சிட்டு சிலபேர் பண்ற அலப்பறை இருக்கே...

தண்ணி வசதி நிறைய இருக்கிற பில்டிங்குகளில் ரெயின் டான்செல்லாம் கூட நடக்கும். இந்த தடவை அதுக்கு ஆப்பு வெச்சிட்டாங்க. மும்பையில் சம்மரில் வரும் தண்ணீர் தட்டுப்பாடுதான் இதற்கு காரணம். குடிக்கிற தண்ணியை இப்படியெல்லாம் சீரழிக்கிறதான்னு மக்களுக்கும் ஒரு விழிப்புணர்வு வந்திருக்கு.எப்போதும் உள்ள அளவை விட குறைச்சலாத்தான் ஹோலி அன்னிக்கி தண்ணி சப்ளை செய்யப்படுமாம். நோட்டீஸே வந்தாச்சு..மக்கள் கொஞ்சம் முணுமுணுத்தாலும் ஏத்துக்கிடுவாங்க. ஹோலி வந்தாச்சுன்னா சம்மர் ஆரம்பிச்சாச்சுன்னு அர்த்தம். அடிக்கிற வெயிலுக்கு தண்ணியில ஊறினா நல்லாத்தான் இருக்கும்.

Eco friendly holi ன்னு இப்ப புதுசா பிரச்சாரம் பரவிக்கிட்டிருக்கு. ஹோலிகா தகனுக்காக நிறைய மரங்கள் வெட்டப்படுறதால மரங்களோட எண்ணிக்கை குறையுதில்லையா?? இப்ப இருக்கிற மாசுபட்ட சூழலுக்கு, இன்னும் மரங்கள் குறைஞ்சா எப்படி!!! அதனால ஒரு வேண்டுகோள் விடுத்திருக்காங்க.. எல்லோருக்கும் பொதுவா, ஒரு இடத்தில கொண்டாடினா bonfires எண்ணிக்கை குறையுமே..அதுவும், நல்லா இருக்கிற மரங்களை வெட்டாம, காய்ஞ்சு விழுந்துபோன மரம், மற்ற வேஸ்ட்டுகள் இதெல்லாம் உபயோகப்படுத்தலாமாம். அதுக்காக டயர், ப்ளாஸ்டிக்கெல்லாம் போடணும்ன்னு அர்த்தமில்லை. அது இன்னும் மோசமாச்சே!!

இதில் கலர்ப்பொடிகளை முக்கியமா சொல்லணும்.கண்ட கெமிக்கல்சையும் உபயோகப்படுத்தி தயாரிக்கப்படுற லிக்விட் கலர், கலர்ஸ்ப்ரே, சில்வர்,தங்கக்கலர்ன்னு கண்டதையும் உபயோகிக்கிறாங்க. விளைவு... சருமத்தில் அலர்ஜி, பருக்கள், தோல் சொரசொரப்பாதல்ன்னு பக்கவிளைவுகள். இதெல்லாம் ஆயிலை அடிப்படையா கொண்ட கலர்கள். பவுடர் கலர்கள் அவ்வளவா சேதம் விளைவிப்பதில்லை. என்னதான் ஹோலி விளையாடப்போகும்முன் தேங்காய் எண்ணெய்யை தேய்ச்சுக்கிட்டு போனாலும், ஒட்டறது ஒட்டத்தான் செய்கிறது..

ஹோலி ஸ்பெஷல் பாட்டு ஒன்னு கேளுங்க..

இவர் இல்லாம ஹோலி கொண்டாட்டமா!!!.. நோ ச்சான்ஸ் :-))).




"ஹேப்பி ஹோலி."

23 comments:

எல் கே said...

//ஸ்பெஷலா பாங்//

மகா சிவராத்திரி ஸ்பெஷல் ஆச்சே

ஹுஸைனம்மா said...

ஹோலியில இவ்வளவு விஷயம் இருக்கா? இங்க (தமிழ்நாட்டுல) ஈயடிச்சான் காப்பியா, கலர் மட்டும் பூசி விளையாடுறாங்க!!

எல்லாருக்குமே சுற்றுச்சூழல் விழிப்புணர்வு வர்றது சந்தோஷமான விஷயம்!!

சந்தனமுல்லை said...

பாங் பத்தி கேள்விப்பட்டிருக்கிறேன். என்னோட மஹாராஷ்ட்ரா ஃப்ரெண்ண்ட் சொல்ல்யிருக்கா..எப்படியிருக்குனு பார்க்கணும்னு ஆசைப்பட்டேன்! :-)

ராமலக்ஷ்மி said...

ஹோலி கொண்டாடுவதற்கான காரணத்தை உங்கள் பதிவிலிருந்துதான் அறிகிறேன். பல விவரங்களை அறிய முடிந்தது. நன்றி அமைதிச் சாரல்! வட இந்தியரோடு சேர்ந்து ஹோலி கொண்டாடி மகிழும் அனைவருக்கும் ஹாப்பி ஹோலி:)!

கண்மணி/kanmani said...

நல்ல விளக்கம்.உங்களுக்கும் குடும்பத்தாருக்கும் ஹாப்பி ஹோலி
யார் பண்டிகையா இருந்தா என்னா இருக்கிற இடத்துல நடந்தா நம்ம பண்டிகைதானே அமைதிஜி

ப்ரியமுடன் வசந்த் said...

ஹோலின்னா தெரியும் ஆனா அதுக்குண்டான காரணம் இந்த பதிவுக்கப்புறம்தான் தெரியுதுங்க...

டாங்ஸ்பா...

ஹேப்பி ஹோலி..

சாந்தி மாரியப்பன் said...

வாங்க L.K.

மஹா சிவராத்திரிக்கு மட்டுமல்ல, ஹோலிக்கும், துர்க்கா பூஜைக்கும் கூட இது ஸ்பெஷல்தான்.

வருகைக்கு நன்றி.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க ஹுஸைனம்மா,

இளைய தலைமுறைகிட்டேயிருந்து நாம கத்துக்க வேண்டியது நிறைய இருக்கு.

வருகைக்கு நன்றி.

pudugaithendral said...

super songs

மும்பையில் இருந்த போதும் ஹோலி ஆடியதில்லை. கலர் ஒட்டிக்கொள்ளும் பயம்தான். இன்னைக்கு என் பசங்க இரண்டும் ஹோலி ஆடிவிட்டு வந்தப்பாத்து பயந்து போயிட்டேன். அந்தக் கலரை போக்க கைவலிக்க தேய்ச்சது மகா கொடுமை. :(( :))

சாந்தி மாரியப்பன் said...

வாங்க சந்தனமுல்லை,

பாங் என்பது பாதாம்,பிஸ்தா,தர்பூஸ் அல்லது முலாம்பழ விதைகள்,கசகசா,பெருஞ்சீரகம்,ஏலக்காய்,நல்லமிளகு மற்றும் உலர் ரோஜா இதழ்கள் எல்லாத்தையும் ஊறவெச்சு,அரைச்சு வடிகட்டி அதோட பால் மற்றும் சர்க்கரையை சேர்த்து செய்வாங்க. இந்த நிலையில் இதோட பேர் "தண்டாய்". இதைக்குடிச்சா ஒன்னும் ஆகாது.

ஹோலிக்குன்னு வெவகாரமான வஸ்து ஒன்னு சேர்ப்பாங்க. இரண்டுமடக்கு குடிச்சாலே ஆளைத்தூக்கிடும். போதை தெளியறதுக்கு ரெண்டு நாளாவது ஆகும். உ.பி, மற்றும் பீகாரில் வசிக்கும் சகோதரர்களுக்கு இது இல்லைன்னா ஹோலியோட மஜா இருக்காது ;-))))

சிவபெருமானின் பிரசாதம் என்றும் இதை சொல்வாங்க. யூ ட்யூபில் ரங் பர்ஸே ன்னு பாடிக்கிட்டே பச்சன் சார் குடிக்கிறார். பாத்துக்கோங்க :-)))

சாந்தி மாரியப்பன் said...

வாங்க ராமலஷ்மி மேடம்,

எல்லாப்பண்டிகைகளுக்கும் ஒரு காரணம் இருக்கத்தான் செய்யுது, இல்லீங்களா...

புரிஞ்சிக்கிட்டு கொண்டாடினா இன்னும் சிறக்கும் என்பது என் கருத்து.

வாழ்த்துக்களுக்கு நன்றிங்க.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க கண்மணி,

உண்மைதான்.'ரோமாபுரியில் இருக்கும்போது ரோமனாக இரு'ன்னு பழமொழியே இருக்கே.. அப்படி இருக்கிறப்போ நம்ம இந்தியாவுல நடந்தா நம்ம பண்டிகைதானே :-))

வாழ்த்துக்களுக்கு நன்றிங்க.

சாந்தி மாரியப்பன் said...

உங்களுக்கும் ஹேப்பி ஹோலி வசந்த்,

நாலு பேருக்கு விஷயம் தெரிவிக்கணும்ன்னா பதிவு போடுறதுல தப்பே இல்லை :-))))

சில வருடங்களுக்கு முன் தமிழ்நாட்டில் ஹோலி கலாச்சார சீரழிவை ஏற்படுத்துதுன்னு, ஒரு சின்ன பிரச்சாரம் நடந்தது.அது ஹோலி வரும்போதெல்லாம் மனசை உறுத்திக்கிட்டே இருந்தது.வெறுமனே கலர் பூசுறது மட்டும் பண்டிகை இல்லைன்னு சொல்ல இப்பத்தான் வாய்ப்பு கிடைச்சிருக்கு.

வந்ததுக்கு நன்றிப்பா..

சாந்தி மாரியப்பன் said...

வாங்க புதுகைத்தென்றல்,

பச்சன் சார் அட்டகாசம் பண்ணியிருக்கார் இல்லையா :-)))

தேங்காய் எண்ணையை நல்லா தேய்ச்சிக்கிட்டு விளையாடினா கலர் அவ்வளவா ஒட்டாது. அடுத்த வருசம் தைரியமா விளையாடுங்க :-)))

பசங்க நல்லா எஞ்சாய் பண்ணியிருப்பாங்க போலிருக்கு :-))))

வந்ததுக்கு நன்றிங்க.

வல்லிசிம்ஹன் said...

அட ஹோலிக்குள்ள இவ்வளவு கதை இருக்கா.
ரொம்ப நன்றிப்பா அமைதி. நீங்க வர்ணம் பூசிக்கிட்டீங்களா இல்லையா:)
சில்சிலால வர அமிதாப் ஹோலிப் பாட்டும் ரொம்பப் பிடிக்கும்.
ஸ்மிதா பாட்டில் படப் பாடலு, நல்லா இருக்கும். எப்படியோ வடைந்தியர்கள் சந்தோஷமாக இருக்க நல்ல வழிகளெல்லாம் கண்டுபிடிச்சு, ஒரு இன்ஹிபிஷன் இல்லாம ஆனந்தப் படுவது அருமையா இருக்கு. நல்லா இருந்ததுப்பா.

கண்ணகி said...

ஹேப்பி,,,,,ஹோலி.....

வாழ்த்துக்கள்..

Unknown said...

ஹோலி எதுக்குக் கொண்டாடுறாங்கன்ற விளக்கத்தைக் குடுத்ததுக்கு நன்றி.

ஆமா அது என்னவோ காமன் பண்டிகைன்னு சொன்னீங்களே அது என்ன?

நசரேயன் said...

ஹோலி வாழ்த்துக்கள்

சாந்தி மாரியப்பன் said...

வாங்க வல்லிம்மா,

உண்மைதான் வல்லிம்மா,இங்கே, எந்த ஒரு பண்டிகையானாலும் ஆட்டம்,பாட்டம் இல்லாமல் நடக்காது.ஹோலி, மற்றும் நவராத்திரியில், அதன் உச்சக்கட்டத்தை எட்டிவிடும். நானும், ஜோதியில் கலந்துக்கிறது உண்டு :-)))

ரங் பர்ஸே அழியாப்புகழ் பெற்றுவிட்டது. பாக்பானும் அருமையா இருக்கும். வாய்ப்பு கிடைச்சா படம் பாருங்க.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க கண்ணகி,

வந்ததுக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றிப்பா..

சாந்தி மாரியப்பன் said...

வாங்க நசர்,

வந்ததுக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றிப்பா..

சாந்தி மாரியப்பன் said...

வாங்க முகிலன்,

நீங்க ஒருத்தராவது கவனிச்சீங்களே!! ஸ்பெஷல் நன்றிங்க.

சிவனின் தங்க்ஸான சக்தி, ஒருசமயம் தன் தந்தை தக்ஷன் நடத்திய வேள்விக்கு கணவர் அனுமதியில்லாம, அழையா விருந்தாளியாக சென்று அவமானப்பட்டு, அந்த யாகத்தீயிலேயே விழுந்து தன் உடம்பை உகுத்தாள்.

இதை அறிந்த சிவன் அங்கே சென்று யாகசாலையையும்,தட்சனையும் அழித்து திரும்பினார்.பின் நெடுங்காலம் தவத்தில் ஆழ்ந்தார்.

சக்தி, பார்வதியாக மறுஜென்மமெடுத்து சிவனை அடைய பல விதங்களில் முயற்சி செய்தும், தவத்தை கலைக்க முடியவில்லை. இறுதியாக காமன் என்று அழைக்கப்படும் மன்மதனின் உதவியை நாடினாள்.

மன்மதனும் கரும்புவில்லுடன் சென்று, கணை தொடுக்க, கண்விழித்த சிவபெருமான், நெற்றிக்கண்ணை திறந்து அவனை எரித்துச்சாம்பலாக்கினார். பின் உண்மை அறிந்து, ரதியின் வேண்டுகோளுக்கிணங்க அவனை உயிர்ப்பித்தார். இதைத்தான் தமிழ் நாட்டில் சில இடங்களில் கொண்டாடுகிறார்கள்.மன்மதனின் உருவபொம்மையை எரித்து,அந்த சாம்பலை பிரசாதமாக வீட்டுக்கு எடுத்துச்செல்வார்கள். தீக்காயத்துக்கு குளுமையா இருக்கட்டும்ன்னு சந்தனம் படைப்பதும் உண்டு.

Unknown said...

காமன் பண்டிகையும் இதே நாள்தானா?. புதிய தகவல். கடைசி வீடியோ வரல...

LinkWithin

Related Posts with Thumbnails