Friday, 12 February 2010

சிவராத்திரியில் அம்மன் தரிசனம்

வாக்கு கொடுத்தா, நிறைவேத்தணுமா இல்லையா?...கொடுத்த வாக்கை காப்பாத்தறதுதானே மனுஷத்தனம்.

சந்தர்ப்ப சூழ்நிலை அப்படி இருந்தா என்னப்பா செய்றது?

'சந்தர்ப்ப சூழ்நிலையை ஃபேஸ் பண்றவந்தான் மனுஷன்'... திரிசூலம் சிவாஜி டயலாக்க எடுத்து விட்டதும் மனசாட்சி அடங்கிப்போச்சு.

அம்மாவை பாக்க வரேன்னு, நேத்து வாக்கு கொடுத்திட்டு வந்தேனில்லையா..கெளம்பிட்டேன்.

ஏதோ ஒரு தெரு வழியா ஆட்டோ போய்க்கிட்டு இருக்கு.அப்ப கண்ணுல பட்டது அந்தக்கோவில். ஆட்டோவை வெயிட்டிங்கில் போட்டுட்டு,உள்ளே போனோம். நம்ம நேரத்தை பாருங்க. நடை சாத்திட்டு பட்டர் அப்பத்தான் வெளியே வந்துட்டு இருக்கார்.அதேதான்... பெருமாள் கோவில்தான்.'அழகியமன்னார் ஸ்ரீ ராஜகோபாலசுவாமி' என்ற திருநாமம்.
சாயந்திரம் ஆறுமணிக்கு நடை திறப்போம், கண்டிப்பா வாங்க..இவரை மாதிரி ஆஜானுபாகுவானவரை நீங்க பாத்திருக்க மாட்டீங்கன்னார். கோவில் புதுப்பொலிவுடன் இருக்கு. ஐநூறு வருடங்களுக்குப்பின் கோவில் கும்பாபிஷேகம் நடந்திருக்காம்.கிருஷ்ணர் மேய்ச்சலுக்கு கூட்டிக்கொண்டு போவார்ன்னு எதிர்பார்த்தோ என்னவோ,பக்கத்திலேயே நிறைய பசுக்கள்.கோசாலையா இருக்குமோன்னு கேட்டால் இல்லையாம். வந்ததுக்கு கோபுர தரிசனமாவது கிடைச்சுதே.



கோபுரத்தின் ஒரு தோற்றம்.

நெல்லையப்பர் கோவிலுக்கு போய் சேர்ந்ததும்,அவருக்கு ஒரு வணக்கம் வைத்துவிட்டு,அம்மாவைப்பாக்கப்போனோம்.வெளிப்பிரகாரத்திலேயே,
பாதியில்இடதுபக்கம் திரும்புனா கோவிலுக்கு போகும் வழி. நாயக்க மன்னர்களின் சிலைகள் வரிசையா நின்னு,நம்மளை வரவேற்குது.கல்மண்டபத்தை கடந்ததும் வருகிறது அம்மனின் கோவில். முன்மண்டபமே மிரட்டுது. ஏகப்பட்ட சிற்ப வேலைப்பாடுகள். பாக்க ரெண்டு கண்ணு பத்தாது. சிகரம் வெச்ச மாதிரி ரெண்டு ஆஞ்சநேயர்கள் எதிரெதிரே நின்னுகிட்டு ஒருத்தரை ஒருத்தர் முறைச்சு பாக்கிறாங்க.என்ன கோபமோ!!!(வாலியும் சுக்ரீவனுமோன்னு நினைச்சேன். ஆஞ்சநேயர்தான்னு கோவிலில் பணிபுரியும் ஒருத்தர் சொன்னார்)

ஏனிந்த கோபம் ஐயா!!!
நேரே வந்து நின்னது அம்மன் சன்னிதியில். இங்கேயும் மூணு ரூபா கொடுத்தா.. அம்மனை அர்த்த மண்டபம் வரைக்கும் சென்று பாக்கலாம்.திரை போட்டு வெச்சிருக்காங்க. அலங்காரம் நடக்குது போலிருக்கு. அஞ்சு நிமிஷம் காத்திருந்தோம்.பரவாயில்லை... புழுக்கம் இல்லாமலிருக்க மின்விசிறிகள் இருக்குது.சரேல்னு திரை விலகினதும், பச்சைபார்டர், ஆரஞ்சு பட்டுப்புடவையில் அம்மனின் தரிசனம்.வலது பாதம் சற்றே தூக்கி, இடது பக்கம் ஒசிந்த நிலை. பிரசாதம் கொடுக்கும் போது எதிர்பாராவிதமா, அம்மன் கழுத்தில் இருந்த மாலை ஒன்னைக்கழட்டி பையர் கழுத்தில் போட்டு அர்ச்சகர் ஆசிர்வாதம் பண்ணினார்.அவளே வந்து ஆசிர்வாதம் செஞ்சமாதிரி மெய் சிலிர்த்துப்போய்விட்டது... தட்சணையெல்லாம் கேக்கலை.

உள் பிரகாரத்தில் சின்னச்சின்ன பல்லக்குகளில்,உற்சவர்கள்.சாயந்திரம் தெப்பக்குளத்தில் தெப்பத்திருவிழாவாம். ஏற்பாடுகள் பலமா நடந்திட்டிருக்கு.முன் மண்டபத்தில் ஏராளமான தொட்டில்கள், பிரார்த்தனைக்காக கட்டப்பட்டவை.இந்தியாவின் மக்கள் தொகை பெருகிட்டிருக்குன்னு கவலைப்பட்டுகிட்டு இருக்கும்போது இப்படியும் ஒரு நிலை இருக்கத்தான் செய்யுது, 'இல்லை ஒரு பிள்ளை என்று... ஏங்குவோர் பலரிருக்க இங்கு வந்து ஏன் பிறந்தாய் செல்வ மகனே' ன்னு தானே கவியரசரும் பாடியிருக்கார்.முன் மண்டபத்தில் போட்டோ எடுக்க அனுமதி இல்லையாம். அம்மான்னாலே கெடுபிடி கொஞ்சம் ஜாஸ்திதான் போலிருக்கு. நான் காந்திமதி அம்மன் கோவிலைச்சொன்னேன்.

வெளியே வரும்போது நமக்கு வலதுபக்கம் ஆயிரங்கால் மண்டபம். பூட்டிவெச்சிருக்காங்க. உள்ளே கம்பிகளினூடே எட்டிப்பாத்தா, திருநெல்வேலி கோவிலின் சரித்திரம் சித்திரங்களாக. ஏழெட்டு வருஷம் முன்பு வந்தபோது, இன்னும் நிறைய கதைகளை உள்ளே போய் பார்த்த ஞாபகம். இப்போ அனுமதி இல்லையோ என்னவோ!!!!

உள்ளே கோவிலின் மாதிரி ஒன்னை செஞ்சு, கண்ணாடிப்பொட்டிக்குள்ள வெச்சிருக்காங்க.

அம்மன் சன்னிதியின் நேர் எதிரே இருக்கும் ஊஞ்சல் மண்டபத்தில் நிறைய யாளிகளின் சிற்பங்கள்.ஊஞ்சல் மண்டபத்தின் இடதுபுறம் அழகான பெரிய தெப்பக்குளம். தூத்துக்குடி மீன்வள ஆராய்ச்சிக்கல்லூரியின் பராமரிப்பில் இருக்குது.தண்ணீர்தான் கொஞ்சம் பரவாயில்லாம லேசா பச்சைப்பிடிச்சுஇருக்கு.

தெப்பக்குளம்.

இன்னொரு கோணத்தில்..
வெளிப்பிரகாரத்தில் அரசமர மேடையின் கீழே வரிசையா நாகர்கள்.ரெண்டு எட்டு எடுத்து வெச்சா கோவிலின் தலவிருட்சமான மூங்கில் புதர்மாதிரி வளந்து நிக்கிது.

தல விருட்சம்.

வெளிப்பிரகாரம் சுத்தி வந்துட்டு அப்படியே வெளியே வரவும் ,தனி வாசல் இருக்கு.திரும்பிப்போய் ஆறுமுகனை தரிசிச்சிட்டு,கோவில்யானை காந்திமதியை காணோமேன்னு தேடுனா, வெளியே போயிருக்காளாம். நிறைவான தரிசனம் கிடைச்ச மன நிறைவோட வீட்டுக்கு போக, ஆட்டோ நிறுத்துன இடத்துக்கு வந்தா, .... 'காந்திமதி'. ஓட்டமும் நடையுமா கோவிலுக்கு போய்க்கிட்டு இருக்கா. கேமிராவை ஆன் செய்றதுக்குள்ள கடந்துட்டான்னா பாருங்களேன்.என்ன அவசரமோ!!

இன்னிக்கு சிவராத்திரி. அம்மாவை தாஜா செஞ்சாலே,போதும்அப்பாவின்
கவனிப்பு நிச்சயம்.

ஒரு நாலு படங்கள் ஆல்பத்தில் கிடக்கு.

21 comments:

ராமலக்ஷ்மி said...

படங்களும் பதிவும் மிக அருமை. திருநெல்வேலியைப் பற்றி இவ்வளவு அழகாய் நீங்கள் எழுதியிருப்பது பார்த்து சந்தோஷம் பொங்குகிறது எனக்கு! நன்றி!

எல் கே said...

//பச்சைபார்டர், ஆரஞ்சு பட்டுப்புடவையில் அம்மனின் தரிசனம்.//

ingayuma :D

nalla darisanam

தேவன் மாயம் said...

அம்மன் கோவிலும் படங்களும் ரொம்ப சூப்பர்!!

துபாய் ராஜா said...

அருமையான பகிர்வு.

படங்களும், வர்ணனைகளும் நினைவுகளை இழுத்துச்சென்று நேரில் பார்க்கும் உணர்வை தந்தன.

தொடருங்கள்.தொடர்கிறோம்.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க ராமலஷ்மி,

இவ்வளவு அழகான கோயிலை பாக்க கொடுத்து வெச்சதில் எனக்கும் சந்தோஷமே.

வந்ததுக்கு நன்றிங்க.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க L.K.

பட்டு நகரத்துக்கு போயிட்டு, கவனம் சிதறாம திரும்ப முடியுமா!!!

நன்றிங்க.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க தேவன் மயம்,

வந்ததுக்கும்,கருத்துக்கும் நன்றி.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க துபாய் ராஜா,

தொடர்ந்து வாருங்கள்.

நன்றி.

சாந்தி மாரியப்பன் said...

ஆல்பத்தில் சில போட்டோக்கள் கிடக்கு.

தமிழ் அமுதன் said...

பதிவும் படங்களும் அருமை...!

கண்மணி/kanmani said...

அமைதிச் சாரல் எனக்குப் பிடித்த மிக அழகான அம்மன் களில் காந்திமதி டாப்பு.அப்படியே ஒரு அள்ளிக்கலாம் போல அழகு.

இன்னொருத்தி திருக்கருகாவூர் வடிவுடையம்மன்.அத்துணை ஒய்யாரம்

அடுத்தது குட்டிப் பொண்ணா கடற்கரையில் தவமிருக்கும் கன்னியாகுமரி.

கண்மணி/kanmani said...

அப்படியே அம்மன் சன்னிதி உள் பிரகாரம் சுத்தி வெளிவரும்போது தூணில் ஒரு வயிறு பெருத்த பிள்ளைத் தாச்சி உருவம் செதுக்கப் பட்டிருக்கும்.
விபரம் தெஇயலை.எல்லோரும் வயிற்றைத் தடவி கும்பிடுவாங்க.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க ஜீவன்,

முதல் வரவா...

கருத்துக்கு நன்றி.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க கண்மணி,

திருக்கருகாவூர் இன்னும் போனதில்லைப்பா...

எனக்கும் கன்னியாகுமரியை ரொம்ப பிடிக்கும்.

சாந்தி மாரியப்பன் said...

கண்மணி,அதை நானும் பார்த்தேன். குங்குமமெல்லாம் தடவி வெச்சிருந்தாங்க.

விபரம்தானே!!!! ஒரு பெண் காந்திமதி அம்மனின் தீவிர பக்தை. தினமும் தரிசனம் பண்ணாம சோறு, தண்ணி இறங்காது. அடுத்த ஊருக்கு, வாக்கப்பட்டு போனா, கோவிலுக்கு போறது தடைபட்டு போகுமுன்னு, உள்ளூருலயே கல்யாணமாச்சு.கர்ப்பமும் ஆனா... நிறைமாசமான நிலையிலும் அவ கோயிலுக்கு வராம இருக்கமாட்டா. ஒரு நாள் அவ உள்ளே இருக்கிறது தெரியாம, நடையை சாத்திட்டு போயிடறாங்க. அப்ப பாத்து பிரசவ வலி வந்துடுது. அம்மன் ஒரு முதிய பெண் வடிவத்தில் வந்து உதவி செய்கிறாங்க. மறு நாள் விடிஞ்சதும் தான் , வந்தது அம்மன்னு எல்லோருக்கும் தெரியுது.

அதேபோல் நமக்கும் அம்மன் துணையா இருக்கணும்ன்னு வேண்டிக்கிட்டுதான்,அந்தப்பெண்ணோடஉருவத்தை கோவிலில் செதுக்கி வழிபட ஆரம்பிச்சாங்க.

எப்படி நான் விட்ட 'கதை'... அனேகமா நிறைய கோவில்களின் கதைகள் இப்படித்தான் ஆரம்பிக்குது போலிருக்குது. :-)))))))

எல் கே said...

//திருக்கருகாவூர் இன்னும் போனதில்லைப்பா//

போயிட்டு வாங்க அங்க ஒருமுறை.. அம்மன் அவ்ளோ அழகா இருப்பா அங்க...

சாந்தி மாரியப்பன் said...

வாங்க L.K.,

லிஸ்டில் சேத்தாச்சு.:-)

தக்குடு said...

யப்பா! நீங்க நம்ப திருனெல்வேலிகாரங்களா?? நெல்லையப்பர் அருள் காந்திமதியின் வழியாய் உங்களுக்கு கிட்டியுள்ளது.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க தக்குடு,

முதல்வரவா!!! நன்றிப்பா.

என் பூர்வீகம் திருநெல்வேலி மாவட்டம்தான். அருள் கிடைச்சிடுச்சுன்னு சொல்றீங்க!!! நன்றிப்பா.

Rathnavel Natarajan said...

அருமையான எழுத்து நடை.
திருநெல்வேலியை பற்றி அருமையான பதிவு.
வாழ்த்துக்கள்.

Madhu said...

Water superaa irukkum intha kulathil..azgaga kuzhikalam.. ..evvalau fish irukkum teriyuma...ippa kulame dull adikuthe

LinkWithin

Related Posts with Thumbnails