இன்னும் சற்று நேரத்துக்குப்பின் நடக்கப்போவதன் எந்தவொரு அறிகுறியும் இல்லாமல் வானம் பளீரென்றிருந்தது. அசையவே கூடாதென யாரோ கட்டளையிட்டு விட்டதைப்போல மரங்களும் செடிகளும் ஒரு இலையைக்கூட அசைக்காமல் சிலைகளாய் நின்று கொண்டிருந்தன. வெக்கை தகிப்பேறி கானல் அலையலையாய் மிதந்து கொண்டிருந்தது. வெயிலின் வெப்பத்தில் மயங்கியோ என்னவோ தெரு நாய்கள் கூட கிடைக்கும் நிழல்களில் ஒதுங்கியும், வாகனங்களின் அடியில் பதுங்கியும் கண்களை மூடி, வாலைச்சுருட்டிக்கொண்டு சுருண்டு கிடந்தன.
சந்தானம் தெருவை எட்டிப்பார்த்தார், பின் உள்ளே திரும்பி, “எத்தனை மணிக்குன்னு போட்ருக்கான்?” என்றார்.
“பத்து மணிக்கிப்பா. காத்தும் நல்ல மழையும் உண்டுன்னு போட்ருக்கான்” என்றான் மகன்.
“சொன்னது போல நடக்குமா? நம்பலாமா?”
“அப்பா.. இது கூகிளாக்கும். பொய் சொல்ல மாட்டான். என்னத்த கேட்டாலும் பதிலு இன்னாண்ணு அள்ளிக்கொட்டிரும் தெரியுமா?”
“ம்ம்.. அப்டியா? நீ இந்த வருசம் பரிச்சைல பாசாயிருவியாண்ணு அதிலே போட்டிருக்குமா? போலே.. போயி புக்கை எடுத்துப்படி”
“அப்பா.. முழுப்பரிச்சை முடிஞ்சு லீவு விட்டாச்சு. இப்பம் என்னத்தை படிக்கச்சொல்லுகே?”
“அடுத்த வருசத்துக்குள்ள பாடத்தைப் படி.. போ”
நேரமாக ஆக புழுக்கம் அதிகமாகிக்கொண்டிருப்பதைப்போல பட்டது. தலையில் முத்து முத்தாக அரும்பிய வியர்வைத்துளிகள் பெருகி கோடுகளாக நெற்றியிலிறங்கி புருவங்களில் தேங்கி நின்றன. கழுத்தில் மாலையாகக் கிடந்த துவர்த்தை எடுத்து புறங்கழுத்தையும் முகத்தையும் அழுந்தத்துடைத்துக்கொண்டார். போன வருஷத்தை விட இந்த வருஷம் வெயில் அதிகமாகியிருப்பதாகப் பட்டது அவருக்கு. வெயில் மட்டுமா? மழை, குளிர் என எல்லாமே ஒவ்வொரு வருஷமும் அதிகமாகிக்கொண்டிருப்பதைப்போல்தான் அவருக்குத் தோன்றியது. மனைவியிடம் சொன்னால் சிரிப்பாள். ‘ஒவ்வொரு வருஷமும் வயசு கூடுதலாகுதில்லே? அப்படித்தான் தோணும்’ என்பாள். “ஏ புள்ள.. அப்புடி எனக்கு என்ன வயசாகிட்டுது? மூத்தவனே மூணாங்க்ளாஸ்தானேடி படிக்கான்?” என ஒருமுறை சொன்னபோது, “ரெண்டு பிள்ள பெத்தாச்சுல்ல… அப்பம் வயசாளிதானே. இன்னும் இளவட்டமா நீங்க?” என அவள் சிரித்த பின் வாயை மூடிக்கொண்டார்.
ஒரு மழை பெய்தால் நன்றாக இருக்குமெனத் தோன்றியது. மகன் தினமும் இணையத்தில் அன்றைய வானிலை எப்படியிருக்குமென பார்த்து விடுவான். அவன்தான் சொன்னான், இன்றும், இந்த வாரத்தில் இன்னும் இரண்டொரு தடவைகளும் மழை பெய்ய வாய்ப்பு இருக்கிறதென. ஒருவேளை நேற்றிலிருந்து அதிகமாகியிருக்கும் இந்தப் புழுக்கம் மழைக்காகத்தானோ! அவருக்குக் கோடைமழை மிகவும் பிடிக்கும். பாறையும் வெந்துவிடும் அளவுக்குக் காய்ச்சி எடுத்த வெயிலுக்குப்பின் மண்ணைத் தொடும் முதல் துளிக்காக ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருப்பார். சிறு வயதில், அம்மா கத்தக்கத்த காதிலேயே வாங்கிக்கொள்ளாமல் அப்பாவின் கையைப் பிடித்துக்கொண்டு முற்றத்து மழையில் நனைந்து குதியாட்டம் போடுவார். ‘கத்தாத புள்ள. அவேன் நனையட்டும், மொத மழைல நனைஞ்சாச்சின்னா அதுக்கப்புறம் எந்த மழைல நனைஞ்சாலும் தடுமம் புடிக்காது’ என சப்போர்ட்டுக்கு அப்பா வருகையில் அம்மாவிடம் பயம் எப்படி வரும்?
“லே மக்கா.. தாத்தாவ எங்க? ஒறங்குதாங்களா?”
“இல்லப்பா, தண்ணியெடுக்கப் போயிட்டு வாரேன்னுட்டு போனாங்க”
“ஏட்டி.. அப்பாவ தண்ணிக்கி அனுப்பாதண்ணு ஒனக்கு எத்தனை மட்டம் சொல்லட்டும்? வயசான காலத்துல விழுந்து வெச்சா ஆருட்டி பாப்பா?” என சுள்ளென விழுந்தார்.
“நான் என்ன செய்யட்டும்? அவ்வோதான் வம்படியா கொடத்த எடுத்து சைக்கிள்ள கெட்டிக்கிட்டுப் போறாங்க. தடுத்தாலும் நிக்கறதுல்ல. எனக்குத்தான் கெட்ட பேரு” லேசாகத் தலையைச் சாய்த்தபடி மனைவி சொன்னதும், “சரி.. சரி.. பொலம்பாத. உள்ள போ” என்றார்.
‘மளயும் புயலும் இன்னா வருகுதுன்னு சொல்லுதானுவோ, இந்நேரத்துக்கு வெளிய போகாட்டா என்னா இந்த அப்பாக்கு?’ தனக்குத்தானே புலம்பியவர், ஒரு எட்டு போய் அப்பாவைக்கூட்டி வந்து விடலாமா என யோசிக்க ஆரம்பித்தார்.
அங்கே இரண்டு தெருக்கள் தள்ளி, நெற்றி வியர்வை கன்னங்களில் வழிய முக்கித்தக்கி சைக்கிளை ஓட்டிக்கொண்டு வந்த பேச்சியப்பன் குழாயடியருகே வந்ததும் சைக்கிளை விட்டிறங்கி, குடங்களை வரிசையில் போட்டார்.
“என்ன பாட்டையா? நாலு நடை தண்ணி சொமந்தாச்சி. போதாதாக்கும்? வயசான காலத்துல திண்ணையடங்கிக் கெடக்கத உட்டுட்டு தண்ணி சொமந்துட்டுக் கெடக்கேளே? மருமவள அனுப்பலாம்லா?” என்றாள் வசந்தா.
“என்ன மக்ளே செய்யச்சொல்லுகே? காலைல அவளுந்தான் எத்தனை சோலி பாப்பா? அவன வேலைக்கும் புள்ளைய பள்ளியூடத்துக்கும் அனுப்பணும். கைப்பிள்ள வேற காலலதான் சிணுங்கிட்டுக்கெடக்கும். காலைல நாமளும் கூடமாட நாலு வேலையும் சோலியும் செஞ்சு குடுத்தா அவளுக்கு ஏந்தலா இருக்கும். நமக்கும் காலைல காப்பியும் சாப்பாடும் நேரத்துக்குக் கெடைக்கும்லா?”
“அது சரிதான்.. மருமவள உட்டுக்குடுக்க மாட்டீங்களே. இன்னிக்கி என்னமோ காத்தும் மழையுமா இருக்கப்போவுதுன்னு டிவில சொல்லிக்கிட்டிருந்தாங்க. இன்னிக்காவது வீட்ல இருக்கலாமில்லே?” என நொடித்தவள் “காப்பி குடிச்சாச்சா?” என கரிசனமாய் விசாரித்தாள். பேச்சியப்பனின் முகம் வாடி வதங்கிக்கிடந்தது. பசியோ அல்லது வெயிலோ.. யாரறிவார்!
“வெறுங்காப்பி குடிச்சாச்சு மக்ளே. இனி போயித்தான் டிபன் சாப்பிடணும்” என்ற பேச்சியப்பனின் குடங்களைப்பிடுங்கிய வசந்தா அத்தனையையும் நிரப்பிக்கொடுத்தாள். பார்த்து பத்திரமாகப் போகச்சொன்னவளின் குரல் முதுகுக்குப்பின் கேட்டது. வீட்டை நோக்கி சைக்கிளை மிதிக்க ஆரம்பித்தவருக்கு மருமகள் காலையில் கொடுத்த காப்பியெல்லாம் எப்போதோ வியர்வையாய் ஆவியாகியிருந்தது. என்றாலும் தென்றலாய் வீசிய காற்று முகத்தில் மோத சைக்கிளில் போவதும் சுகமாகத்தான் இருந்தது.
அவருக்கு, இரண்டு வருடங்களுக்கு முன் மறைந்த மனைவியின் ஞாபகம் வந்தது. அவளை எண்ணும்போதே கண்கள் நிறைந்து பாதை மறைத்தது. வேலைக்குப்போய்க்கொண்டிருக்கும்போதும் சரி, ரிடையர் ஆன பின்பும் சரி, அன்போடு அவள் பரிமாறும்போது கணக்கில்லாமல் சாப்பிட்டு விட்டு, “குண்டாயிட்டே போறேன்னு சபாபதி சொல்லுதான் சாலாச்சி, சாப்பாட்டைக்கொறைக்கணும்” என்றபடி எழுவார். முதுகுக்குப்பின் சபாபதியை சாலாச்சி திட்டுவது கேட்கும். சிரித்துக்கொண்டே நகர்வார்.
‘ஹ்ம்ம்ம்.. தாரம் போனா சகலமும் போச்சுன்னு சும்மாவா சொல்லுதாங்க’ என்றெண்ணியவாறே பெருமூச்செறிந்தார். கணிசமானதொரு தொகை பென்ஷனாக வருகிறதென்றாலும் அவரது கைச்செலவுக்கென நூறு ரூபாய் மிஞ்சினாலே அதிகம். மாதாமாதம் பென்ஷன் வந்ததும் மகனுக்குப் பாதி, கஷ்ட ஜீவன் நடத்தும் மகளுக்கு கணிசமான மீதி, பேரன்பேத்திகளுக்கு அவ்வப்போது தின்பண்டத்துக்காக மிச்சசொச்சம் என செலவாகி விடும்.
சைக்கிளை மிதிக்க முடியாமல் எதிர்காற்று தள்ளியது. தம் கட்டிக்கொண்டு பெடலை மிதித்தார். புயல் வருமெனத்தெரிந்திருந்தும் வெளியே வந்திருக்கக்கூடாதோ என எண்ணியது மனம். ‘க்க்கும்.. நான் பார்க்காத மழையா? புயலா?’ என எண்ணியவருக்கு அவரது மகள் பிறந்த வருடம் அடித்த புயல் நினைவுக்கு வந்தது. பிரசவவலியுடன் ஆஸ்பத்திரியில் சேர்த்தும் குழந்தை பிறக்க தாமதமாகிக்கொண்டிருந்தது. எப்படியும் சாயந்திரமாகி விடும் என பெரிய டாக்டர் சொல்லிவிட்டபடியால் அதற்குள் வீட்டுக்குப்போய் மாற்றுடைகளும் அத்தியாவசியமான பொருட்களையும் எடுத்து வந்து விடலாம் என அவரது அம்மாவைத்துணைக்கு வைத்து விட்டு வீட்டுக்கு வந்தார்.
அவர் ஆஸ்பத்திரியிலிருந்து கிளம்பும்போதே லேசான மழை ஆரம்பித்திருந்தது. வீட்டிலிருந்து வேண்டியவற்றை எடுத்துக்கொண்டு கிளம்பும்போது பலத்த காற்றும் மழையுமாகப் பிடித்துக்கொண்டது. பாதி தூரம்தான் பஸ் கடந்திருந்தது, ஆற்றுப்பாலம் உடைந்து கிடக்கிறதென்று இருபக்கமும் போக்குவரத்தை நிறுத்தி விட்டார்கள். கெஞ்சிக்கூத்தாடி ஒவ்வொருவரிடமாய் லிஃப்ட் கேட்டு பத்து மைல் சுற்றிக்கொண்டு ஆஸ்பத்திரி இருந்த சாலைக்குப்போனவருக்கு மயக்கமே வந்துவிடும் போலிருந்தது. ஆஸ்பத்திரியின் முன்னிருந்த சாலையில் இடுப்பளவுக்குத் தேங்கிக்கிடந்த நீர் அவரை மலைக்க வைத்தது. என்ன செய்வதென்று தடுமாறியவரின் மனக்கண் முன் ஆஸ்பத்திரியில் அவருக்காகக் காத்திருக்கும் இரண்டு பெண்களும், இன்னும் பிறக்காத சிசுவும் நிழலாடினர்.
வேட்டியை மடித்துக்கட்டிக்கொண்டு, செருப்புகளைக் கக்கத்தில் இடுக்கிக்கொண்டார். கையிலிருந்த பையை நெஞ்சோடு அணைத்துக்கொண்டார். சாலையை இடவலமாக நெடுகப்பிரித்த கம்பித்தடுப்பைப் பற்றிக்கொண்டு மெல்ல மெல்ல முன்னேறினார். இதோ இன்னும் சற்றுத்தூரம்தான்.. ஆஸ்பத்திரி வந்து விடும் என தனக்குத்தானே தைரியமூட்டிக்கொண்டார். கால்களை அடிமேல் அடியாக எடுத்து வைத்து நடந்தவருக்கு வெள்ளத்தின் வேகத்தைப் பாதங்களில் உணர முடிந்தது. ஒரு வழியாக ஆஸ்பத்திரிக்குப் போய்ச்சேர்ந்த போது மகளின் அழுகுரல் அவரை வரவேற்றது.
பழசை அசை போட்டவாறே சாலையின் முனை திரும்பியவருக்கு காய்த்துக்குலுங்கிக்கொண்டிருந்த மாமரம் கண்ணில் பட்டது. செங்காயாய்க்கிடந்த ஒன்றிரண்டு மாங்காய்கள் நாவூறச்செய்தன. சைக்கிளை விட்டிறங்கி, கைக்கெட்டும் தூரத்தில் கிடந்த ஒன்றிரண்டு காய்களை நோக்கிச்சென்றார். உப்பும் மிளகாய்த்தூளும் தூவிக்கொடுத்தால் பிள்ளைகள் ஆசையாகச்சாப்பிடுமே என்ற நினைப்பு.
காற்றில் ஆடிய காய்கள் கைக்குக்கிடைக்காமல் போக்குக்காட்டின. எங்கிட்டயேவா எனக்கறுவிக்கொண்டவர் மரத்தில் கால் பதித்து ஏறினார். அது பிடிக்காதது போல் மரம் பேயாட்டம் போட்டது, காற்று ஊளையிட்டது. அக்கம்பக்கத்திலிருந்த மரங்களும், ‘வேண்டாம் வேண்டாம்’ என்பது போல தலையைச்சுழற்றி ஆடின. அவரோ எதையும் கவனிக்காமல் கொக்குக்கு ஒன்றே குறி என்பது போல் எக்கி மாங்காய்களைப்பறிக்க முயன்றார். அவரை, கீழே இறங்கச்சொல்லி யாரோ போட்ட கூச்சல் காற்றில் பறந்தது.. தாத்தா.. தாத்தா.. என்ற அலறலை அமுக்கிக்கொண்டு பக்கத்திலிருந்த ப்ளெக்ஸ் பேனர் பெருஞ்சத்தத்துடன் சாய்ந்தது. எதிரிலிருப்பவர் தெரியாத அளவுக்கு அள்ளி வீசிய புழுதிப்புயல் ஓய்ந்தபோது பேனரின் கீழே பேச்சியப்பனை அமுக்கிக்கொண்டு விழுந்து கிடந்த மரத்தின் கிளைகளினூடே மாங்காய்களைப் பற்றியிருந்த ஒரு கையைக்கண்டனர்.
இப்போதெல்லாம் தண்ணீர் பிடிக்க பேச்சியப்பனின் மருமகள்தான் வருகிறாள். அப்பாவுக்கு உடல் ஊனமுற்றோருக்கான சலுகைகளைப்பெறுவதற்காக அவரது மகன் அலைந்து கொண்டிருக்கிறார். ஒற்றைக்கையால் தன்னுடைய வேலைகளைச்செய்ய ஓரளவு பழகிக்கொண்ட பேச்சியப்பன் இப்போதெல்லாம் வீட்டுக்குள்ளேயே மருமகளுக்குத் தன்னால் முடிந்த ஒத்தாசை செய்கிறார். அவரை அப்படிக்காணுந்தோறும் வசந்தாவுக்கு அவர் சொன்னது இன்றைக்கும் காதில் எதிரொலிக்கிறது.
“நாமளும் கூடமாட நாலு வேலையும் சோலியும் செஞ்சு குடுத்தா அவளுக்கு ஏந்தலா இருக்கும். நமக்கும் காலைல காப்பியும் சாப்பாடும் நேரத்துக்குக் கெடைக்கும்லா?”
நின்று நிதானித்த வசந்தா ஒரு பெருமூச்சுடன் அவரைக்கடந்தாள்.
சிறுகதையை வெளியிட்ட கேலக்ஸி இணைய இதழுக்கு நன்றி.
No comments:
Post a Comment