பறக்க வேண்டிய தூரமெல்லாம் ஒரு பொருட்டேயில்லை, இளைப்பாற ஏதுவாய் நட்சத்திரங்கள் சில கதைகளுடன் வந்தால் போதும்.
முளைத்துப் பலன்தருமென விதைத்தவற்றையெலாம் உரமாய் உண்டு, தழைத்தோங்குகின்றன களைச்செடிகள். வீரியமற்ற விதைகளுக்கும், சாமர்த்தியமிக்க களைகளுக்கும் நடக்கும் போட்டியை அமைதியாய் வேடிக்கை பார்க்கிறது தாங்கும் நிலம்.
அபாயத்திலிருந்து தப்பித்ததும் மனிதன் செய்யும் முதல்வேலை அச்சூழலைப் பகடி செய்வதுதான். அவ்வாறு செய்வதன் மூலம் அவன் தானடைந்த மன இறுக்கத்தைத் தளர்த்திக்கொண்டு அச்சூழலைக் கடந்து செல்ல முயல்கிறான்.
தேடல் உள்ள உயிர்களெல்லாம் தேடித்தேடிக் களைத்திருக்க, ஆர்வமற்றிருப்பவனின் மடியில் விழுகிறது அருங்கனி.
இருளும் ஔியும் கண்ணாமூச்சி விளையாடிக்கொண்டிருந்தன. எங்கும் வியாபித்திருந்த இருளை ஔி தேடிக்கொண்டிருக்க, தனக்குள்ளிருந்த ஔியை நொடியில் தொட்டிழுத்துப் போட்டது இருள்.
தீட்டிய மரத்திலேயே கூர் பார்க்கும் அரிவாள் அதன் பின் அதை வெட்டியும் சாய்க்கிறது. செய்த தவறென்னவென்று கடைசி நிமிடங்கள் வரை யோசிக்கிறது குற்றமற்ற மரம்.
ஒரு வாசலை கான்க்ரீட்டால் பூசி மூடி, மறுவாசலைத் திறக்கும் இறைவன் அதன் சாவியைத் தொலைக்குமுன் பிடுங்கிக்கொண்டு நுழைந்து விடுங்கள். இனியெப்போதும் அடையா நெடுங்கதவமாக அது இருக்கட்டும்.
ஆசை, கோபம் முதலானவை கூர் கொண்டிருக்குமிடத்தில் அறிவு மழுங்கி விடுகிறது.
கனவுகளை நனவாக்க முயற்சியேதும் செய்யாமல் வெறுங்கனவு கண்டுகொண்டிருப்பவர்கள் தங்கள் தோல்விக்குப் பிறரைக் காரணம் காட்டி, தங்களைச் சமாதானம் செய்து கொள்கிறார்கள்.
இறுதியாக தனது உடும்புப்பிடியை இன்னும் இறுக்கி, தலை கோதியது அவரவர் இயல்புடனேயே அவரவரை நேசிப்பதாகச் சொன்ன அன்பு. காயங்களிலிருந்து ரத்தம் கசிய மூச்சுக்காற்றுக்காய் தவித்துக்கொண்டிருந்தனர் அவரவரும்.
No comments:
Post a Comment