Sunday 25 November 2012

பூந்தோட்டம்.. (25-11-2012 அன்று பூத்தவை)


அனிச்சம்: சாப்பிட்ட சாப்பாடு விஷமாகி அதனால் உயிரிழந்த கதைகளை நிறையக்கேட்டிருக்கிறோம். இங்கே சாப்பிடும் முன்பே, அந்தச் சாப்பாட்டாலேயே உயிரை இழக்க நேரிட்ட நிலை ஒரு பாம்புக்கு ஏற்பட்டிருக்கிறது. அதுவும் இங்கல்ல தைவான் நாட்டில். Nantoun பகுதியில் குடியிருப்புக்குப் பக்கத்துல சுமார் 35 அங்குலம் அளவு நீளமுள்ள விரியன் பாம்பைப் பார்த்த மக்கள் உடனே தீயணைப்பு நிலையத்துக்குப் போன் செய்து சொன்னதும் வீரர்கள் வந்து அதை அள்ளிக்கொண்டு போனார்கள். மிருகக்காட்சிச்சாலையில் ஒப்படைக்குமுன் அதைப் பாதுகாப்பாக இருக்கட்டுமென்று சின்னக் கூண்டு ஒன்றில் அடைத்து வைத்தார்கள். வீட்டுக்கு வந்த விருந்தினருக்கு உபசாரமாக மதிய உணவாக எலி ஒன்றையும் அந்தக்கூண்டுக்குள் அனுப்பினார்கள். கடைசி மூச்சு வரைக்கும் போராடிப் பார்த்துவிடுவதென்று அந்த எலி தீர்மானித்து விட்டது போலிருக்கிறது. சுமார் 30 நிமிடப்போராட்டத்திற்குப்பின் எட்டிப்பார்த்த வீரர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. உடலெங்கும் சிராய்ப்புகளுடனும் கடிபட்ட காயங்களுடனும் பாம்பு இறந்து கிடக்க எலி, ”இந்த வீரச்செயலுக்கு விருதொன்றும் கிடையாதா?” என்று பார்வையால் அவர்களைக்கேட்டது. 

இயல்வாகை: எங்கோ வாசித்ததில் பிடித்தது --- Manage your anger which is one letter shorter than danger.

வாகை: நமக்கெல்லாம் ஓட்டுநர் உரிமம் ஒரு தடவை தொலைந்தாலோ, அல்லது பறிமுதல் செய்யப்பட்டாலோ மறுபடியும் அதைப்பெறுவதற்குள் ‘உன்னைப்பிடி, என்னைப்பிடி’ என்று ஆகிவிடுகிறது. ஆனால் மும்பையைச் சேர்ந்த மோதிவாலாவுக்கோ இதெல்லாம் ஜுஜூபி மேட்டர். கிட்டத்தட்ட ஆறு வருட காலமாக, உரிமம் பறிபோனபோதெல்லாம் மறுபடியும் சம்பந்தப்பட்ட ஆபீசுக்குப் படையெடுத்தோ, அல்லது அபராதம் கட்டியோ மீட்டு விடுவார், அல்லது டூப்ளிகேட் உரிமமாவது வாங்கி விடுவார். இந்த உண்மை இப்போது சமீபத்தில்தான் கண்டு பிடிக்கப்பட்டிருக்கிறது. கெத்து அதிகமாகி ஒரு நாள் உரிமமே இல்லாமல் வண்டி ஓட்டியபோது பிடிபட்டார். ஃபோர்ஜரி மற்றும் பிறரை ஏமாற்றுதல் போன்ற குற்றங்களுக்காக வழக்குப் பதிவு செய்து 700 ரூபாய் அபராதமும் விதித்ததோடு அல்லாமல் அவரது உரிமமும் தற்காலிகமாக தடை செய்யப்பட்டுள்ளது. பல நாள் திருடன் ஒரு நாள் அகப்படுவான் என்று தெரியாமலா சொல்லி வைத்தார்கள் நம் முன்னோர்கள்.

அனங்கம்: பேஸ்புக்கில் வாராவாரம் நடைபெறும் புகைப்படப் போட்டியில் கலந்து கொண்ட இப்படம், முத்துக்கள் பத்தில் ஏழாவது முத்தாகத் தேர்ந்தெடுக்கப்பட்டது.
கார்த்திகைப்பூ: குழந்தைத்தொழிலாளர் முறையை ஒழிக்க வேண்டும். அவர்களுக்குக் கல்வி வழங்க வேண்டும் என்ற கருத்தில் நமக்கெல்லாம் கருத்து வேறுபாடு கிடையாது. அதே சமயம் ரஞ்சனி பரஞ்ச்பாயே என்பவர் ஒரு படி மேலே சென்று அவர்களுக்குக் கல்வி வழங்கி வருகிறார். மும்பையின் ஒரு கல்லூரியில் ஆராய்ச்சித்துறைத்தலைவியாக இருக்கும் அவர், ஒரு சமயம் மேற்கொண்ட ஆராய்ச்சியின் முடிவாக கட்டிடத் தொழிலாளர்களின் குழந்தைகள் படிக்க ஆர்வமிருந்தாலும் தொழில் காரணமாக அடிக்கடி நேரும் இடப்பெயர்ச்சியின் விளைவாக படிக்க முடியாமலிருப்பதை அறிந்தார். இவர்களுக்குப் பயனளிக்கும் விதமாக “வீட்டருகே பள்ளி” என்ற முறையில் பள்ளிக்கூடங்களை நடத்தி வருகிறார். கட்டிடத்தொழில் நடைபெறும் அந்த இடத்திலேயே, ஒரு ஓரத்தில் அமைக்கப்படும் தகரக்கொட்டகைதான் பள்ளிக்கூடம். இந்தப்பள்ளியில் சேருவதற்கு மூன்று வயது நிரம்பியிருந்தால் போதும்.வயது வித்தியாசமில்லாமல் அனைவரும் ஒரே வகுப்பில் படிக்கின்றனர். கணக்கு, அறிவியல், சமூகவியல் போன்றவை மராத்தி மீடியத்தில் கற்றுக்கொடுக்கப்படுகின்றன. 

குறைந்த பட்சம் பத்தாம் வகுப்புவரை படித்தவர்கள் பயிற்சி கொடுக்கப்பட்டு இங்கே ஆசிரியர்களாகப் பணிபுரிகின்றனர். 1988-ல் ஆரம்பிக்கப்பட்டு மும்பை மற்றும் பூனாவில் வெவ்வேறு இடங்களில் நடைபெறும் இப்பள்ளிகளில் சுமார் 25000 பேர் பயில்கிறார்களாம். குழந்தைகளால் இயலும் பட்சத்தில் நகராட்சிப்பள்ளிகளில் சேர்ந்து கல்வி பயில இங்கே தயார்படுத்தப் படுகிறார்கள் என்றே சொல்லலாம். கைக்குழந்தைகளாக இருக்கும் தம்பி தங்கைகளைப் பார்த்துக் கொள்ளும் பொறுப்பு காரணமாக பள்ளிக்கு வர இயலாமலிருக்கும் குழந்தைகளுக்கு உதவும் பொருட்டு பேபி சிட்டிங்கும் இங்கே இருக்கிறது. “ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவிக்கும்” மனித நேயமிக்க இவர்களைப் போன்றவர்கள் சமுதாயத்திற்கு இன்னும் நிறையத்தேவை.

காகிதப்பூ: "இனியெல்லாம்.." என்ற எனது சிறுகதை இன் அண்ட் அவுட் சென்னை இதழின் செப்டம்பர் மாதப் பதிப்பில் வெளியாகியிருக்கிறது. வெளியிட்ட இதழாளர்களுக்கு நன்றி.   

15 comments:

துளசி கோபால் said...

WOW!!!!!!!!!!!

வெங்கட் நாகராஜ் said...

சிறப்பான பூந்தோட்டம். பூக்களைப் பகிர்ந்த உங்களுக்குப் பூங்கொத்து!

திண்டுக்கல் தனபாலன் said...

எலிக்கு என்ன ஒரு தைரியம்...!

படம் மிகவும் அருமை....

இன் அண்ட் அவுட் சென்னை இதழின் வெளியாகி உள்ளதற்கு வாழ்த்துக்கள்...
tm2

வை.கோபாலகிருஷ்ணன் said...

//காகிதப்பூ: "இனியெல்லாம்.." என்ற எனது சிறுகதை இன் அண்ட் அவுட் சென்னை இதழின் செப்டம்பர் மாதப் பதிப்பில் வெளியாகியிருக்கிறது. வெளியிட்ட இதழாளர்களுக்கு நன்றி.//

மனமார்ந்த வாழ்த்துகள்.

எல்லாத்தகவல்களுமே அருமை..
பாராட்டுக்கள். பகிர்வுக்கு நன்றிகள்.

வல்லிசிம்ஹன் said...

எல்லாப்பூக்களுமே அழகு அருமை சாரல்.
இனியெல்லாம் கதை வெக அழகு. குழாயடியில் குடத்தை நர்த்துவது ஒரிஜினல் மூவ்!!
முகநூல் போட்டிப் படம் அமைதிச் சுடர். வாழ்த்துகள் மா.

குறையொன்றுமில்லை. said...

பாராட்டுக்கள், வாழ்த்துகள்.

வல்லமை said...

அன்பின் சாந்தி,

மனமார்ந்த வாழ்த்துக்கள்.

அன்புடன்
பவளா

மகேந்திரன் said...

பூக்களின் அறிமுகம்
வித்தியாசமான கோணத்தில்...

அமுதா கிருஷ்ணா said...

அனங்கம் சூப்பரா இருக்கு.அனிச்சம் வியப்பை தருது.

ஸ்ரீராம். said...

செய்திகளும் அதே அளவு தலைப்புகளும் அருமை. அனிச்ச செய்தி ஆச்சர்யம். அனங்கம் மற்றும் காகிதப்பூ இவற்றுக்கு வாழ்த்துகளும் பாராட்டுகளும். காகிதப்பூ தலைப்புக்கு பதிலாக வேறு ஏதாவது தலைப்புக் கொடுத்திருக்கலாம். :))

ADHI VENKAT said...

முதலில் வாழ்த்துக்கள்.

அனைத்து மலர்களுமே அருமை.

எலிக்கு தான் எத்தனை தைரியம்!!!

ராமலக்ஷ்மி said...

தொடுத்த பூச்சரம் அழகு.

பாராட்டுக்குரியவர் ரஞ்சனி!

இனியெல்லாம் வெளியீட்டுக்கும், புகைப்படப் பிரியன் வெற்றிக்கும் வாழ்த்துகள் சாந்தி.

திண்டுக்கல் தனபாலன் said...

உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது...

வாழ்த்துக்கள்...

மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2012/11/blog-post_29.html) சென்று பார்க்கவும்...

நன்றி...

கோமதி அரசு said...

பூந்தோட்டம் அருமை. பூச்சரம் அருமையான மண்ம வீசுகிறது.

கதை வெளியீட்டுக்கும், புகைபட வெற்றிக்கும் வாழ்த்துக்கள்.

இராஜராஜேஸ்வரி said...

கருத்தை நிறைத்த அருமையான பூந்தோட்டம் ..பாராட்டுக்கள்..

LinkWithin

Related Posts with Thumbnails