Friday, 20 July 2012

வாழ விடுங்கள்..


பிறந்த நாட்டைத் தாய்நாடென்று போற்றுகிறோம். நதிகள், மலைகள் யாவற்றையும் பெண்ணாக உருவகித்து வர்ணிக்கிறோம், வணங்குகிறோம். ஏன்!.. நிலவிலும், மலர்களிலும், இப்பூமியிலும் கூட பெண்ணின் மென்மையையும் குளுமையான பண்பையும், பொறுமையையுமே காண்கிறோம். இப்படி அனைத்திலும் பெண்மையைப் போற்றும் இப்பூமியில்தான் பெண்ணைச் சுமையாக எண்ணி அழிக்கும் மனிதர்களும் இருக்கின்றனர்.
இந்தியாவில் பெண்சிசுக்கொலை என்பது 1789-லிருந்தே ராஜஸ்தான் மாநிலத்தில் செயல்பாட்டில் இருக்கிறது. மற்றும் குஜராத்தின் மேற்குப்பகுதியிலிருக்கும் சூரத், கட்ச், மற்றும் உ.பியில் ராஜபுத்திரர்கள் வாழும் பகுதிகளிலும் இக்கொடுமை நடந்தது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. சமுதாயத்தில் பெண்களின் மதிப்பிழந்த நிலை, வறுமை, வரதட்சணைக்கொடுமை, மற்றும் குடும்பக் கட்டுப்பாட்டு முறைகளில் போதிய அறிவின்மை என்பன காரணங்களாகச் சொல்லப்படுகின்றன. கட்டுப்படுத்தத் தெரியாமல் மேலும் குழந்தைகளைப் பெற்றுக்கொள்பவர்கள் அக்குழந்தைகள் பெண்குழந்தைகளாக இருக்கும் பட்சத்தில் சிசுக்கொலை செய்து விடுகின்றனர். அறியாமையின் உச்சத்தில் தாங்கள் செய்வது தவறு என்று கூட உணர மறுக்கின்றனர் இவர்கள்.

1986-ல் இந்தியா டுடே பத்திரிகைதான் முதன்முதலில் இக்கொடுமையை வெளிச்சம் போட்டுக் காட்டியது. உசிலம்பட்டியில் இக்கொடுமை அப்போது பெருமளவில் வெளிப்படையாகவே நடந்து வந்தது. இரண்டாவது குழந்தையும் பெண்ணாகப் பிறந்து விட்டால் வெளியே தெரியாமல் உடனேயே அதன் மூச்சை நிறுத்தி விடுவார்கள். வீடுகளிலேயே பிரசவம் நடைபெற்று வந்த அக்காலங்களில் இச்செயலை அப்பா வழிப்பாட்டியோ அல்லது பிரசவத்தின் போது உடனிருக்கும் தாதி பணத்தைப் பெற்றுக்கொண்டோ செய்வது வழக்கமாம். அக்காலத்தில் கள்ளிப்பாலோ, பாலுடன் நெல்மணிகளைச்சேர்த்துப் புகட்டியோ விடுவார்கள். இல்லையெனில் ஈரத்துணியை அதன் முகத்தில் போட்டு மூடியோ, பானையில் போட்டு இறுக மூடியோ இக்கொடூரம் நடப்பதுண்டாம். நெஞ்சைப் பதற வைக்கும் இக்கொடுமைகளைச் செய்பவர்களைக் காவல்துறை கைது செய்து தண்டிக்க ஆரம்பித்ததும் தங்களது முறைகளை நவீனமாக்கிக் கொண்டு விட்டார்கள்.

பிறந்த குழந்தைக்குப் பால் தராமல் பசியால் அழ விட்டுச் சாகடிப்பது, சரியான ஊட்டம் தராமல் விட்டு விடுவது, பச்சைத்தண்ணீரில் குளிப்பாட்டி முழுவேகத்தில் சுழலும் காற்றாடியின் முன் கிடத்தி மூச்சு முட்டியோ அல்லது ஜன்னி வந்தோ இறக்க விடுவது என்று புதிய வழிகளைக் கண்டறிந்து பெண் சிசுக்களை அழித்து விடுகின்றனர். இதனால் பிணப்பரிசோதனை செய்தாலும் இறப்பிற்கான காரணம் இயற்கையான முறையாகத்தான் தெரியுமாம். செய்தவர்கள் சட்டத்தின் பிடியில் அகப்படாமல் தப்பி விடுவார்கள்.

பிறந்தபின் பெண்குழந்தை என்று தெரிந்ததும் அழிக்கும் காலம் மலையேறி விட்டது. எதற்குப் பத்து மாதம் சுமந்து வேதனைப்பட்டுப் பெற வேண்டும். அதை விட கருவிலேயே பெண்குழந்தையென்று தெரிந்து கொண்டால் அழித்து விடலாமே என்று எண்ண ஆரம்பித்து விட்டனர் மக்கள். அதனால்தான் கருவிலிருக்கும் குழந்தைக்கு ஏதேனும் உடல் ரீதியாகவோ, மரபணு ரீதியாகவோ ஏதேனும் குறைபாடுகள் இருக்கிறதா? வளர்ச்சி நல்ல முறையில் இருக்கிறதா என்பதைக் கண்டறிந்து, குறைபாடுகள் இருப்பின் சிகிச்சை அளிக்கவும், பலன் தராத சிகிச்சையெனில், அக்குழந்தையின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு, கருவினைக் கலைத்து விடவும் மருத்துவ அறிவியலின் முன்னேற்றத்தின் பலனாகக், கண்டுபிடிக்கப்பட்ட அல்ட்ரா சோனோக்ராபி, மற்றும் ஆம்னியோசெண்டசிஸ் போன்றவற்றைத் துர்பிரயோகம் செய்யவும் துணிந்து செயல்படுகின்றனர். உலகமெங்கும் இது நடந்தாலும் மக்கள் தொகைப் பெருக்கத்தில் முதலிரண்டு இடங்களையும் வகிக்கும் சீனா மற்றும் இந்தியாதான் இக்கொடுஞ்செயலைச் செய்வதிலும் முன்னணி வகிக்கின்றன.

ஆம்னியோசெண்டசிஸ் என்பது பனிக்குட நீரை ஊசி மூலம் எடுத்து அந்த நீரிலிருக்கும் திசுக்களைச் சோதனை செய்யும் முறையாகும். ஸ்கேன் என்ற பெயரில் இப்போது பட்டிதொட்டியெங்கும் பிரபலமாகியிருக்கும் அல்ட்ராசோனோக்ராபி என்பது ஒலியலைகளைச் செலுத்திக் கருவின் அப்போதைய நிலையைக் கண்டறியும் முறையாகும். இதெல்லாம் பிரசவத்தின்போது தாய்க்கும் சேய்க்கும் சிக்கல்கள் ஏதேனும் ஏற்படக்கூடுமா என்பதை ஆராய்ந்து பிரசவகால மரணங்களைத் தவிர்க்கக் கண்டுபிடிக்கப் பட்டவை. ஆனால் இப்போது பெண்கருக்களைக் கண்டறிந்து அழிப்பதற்கே அதிகம் பயன்படுகின்றன. பஞ்சாப் மற்றும் ஹரியானா பகுதிகளில் நடமாடும் ஸ்கேனிங் நிலையங்களே இருக்கின்றன. கிராமப்புறங்களுக்கு அடிக்கடி சென்று இச்சேவையை செய்து வருகிறார்கள் அவர்கள்.

1994-ல் இவ்வாறு கருவின் பால் பரிசோதனை செய்வதும், பெண்சிசு எனில் கருக்கலைப்பு செய்வதும் சட்டப்படிக் குற்றமாக்கப் பட்டன. ஸ்கேனிங் நிலையங்களில் திடீர் பரிசோதனைகள் நடத்தப்பட்டன. என்.ஜி.ஓக்கள் நடத்திய கணக்கெடுப்பின்படி 1984-85ல் மட்டுமே 15,914 கருக்கலைப்புகள் நடந்தது அறியப்பட்டது. அவை அனைத்தும் பெண் சிசுக்கள் என்பது குறிப்பிடத்தகுந்தது. நம் தமிழ் நாட்டிலும் ஆண்டொன்றுக்கு 4000 பெண்சிசுக்கள் அழிக்கப்படுகின்றன என்று அறியப்பட்டுள்ளது.

ஒவ்வொரு வினைக்கும் அதற்குச் சமமான எதிர்வினையொன்று உண்டு என்பது நியூட்டனின் மூன்றாம் விதி. இங்கேயும் அப்படித்தான் பெண்களின் எண்ணிக்கை குறைந்து ஆண் பெண் விகிதாச்சாரம் மாறுபட்டதால் திருமணத்திற்குப் பெண் கிடைக்காமல் ஆண்கள் திண்டாடினர். 2011-ல் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி ஆயிரம் ஆண்களுக்கு 940.27 பெண்கள்தான் இருக்கின்றனர். பஞ்சாப் மற்றும் ஹரியானாவிலோ முறையே 126.1 மற்றும் 122.0 ஆண்களுக்கு 100 பெண்கள்தான் இருக்கின்றனர். இது வட இந்தியாவில் இன்னொரு விபரீதத்திற்கு வழி வகுத்துள்ளது. என்னவெனில் அறியாச் சிறுமிகள் கடத்தப்பட்டு விற்கப்படுகின்றனர். “ஹ்யூமன் ட்ராபிக்கிங்” என்று அழைக்கப்படும் இக்கொடுமையைப் பற்றிச் சமீபத்தில் சோனி டிவியின் “க்ரைம் பேட்ரோல்” நிகழ்ச்சியில் கூட விரிவாக விளக்கினார்கள்.

கிராமப்புறங்களைப்பொறுத்தவரை ஆணோ பெண்ணோ பெற்றுக்கொடுப்பது பெண்களின் கையில்தான் இருக்கிறது என்ற நம்பிக்கை இன்னும் இருக்கிறது. க்ரோமோசோம் விளக்கங்களெல்லாம் அவர்களுக்குப் புரிவதில்லை. ஆகவே பேர் சொல்ல ஒரு ஆண்குழந்தையைப் பெற்றுக்கொடுக்காத மருமகள் விரட்டப்பட்டு விடுகிறாள். அல்லது ஒரு வேலைக்காரியைப்போல் மூலையில் முடக்கப்படுகிறாள். அதன் பின் பேரக்குழந்தையைப் பெற்றுக்கொடுப்பதற்கும் ஏவின வேலைகளைச் செய்யவும் இன்னொரு பெண்ணைப் பார்த்து திருமணம் செய்து வைக்கின்றனர். இதற்கு கடத்தப்பட்டு வரும் பெண்களை உபயோகப் படுத்திக்கொள்கின்றனர். விடிவுகாலம் ஏதுமில்லாமல் இச்சிறையில் அகப்பட்டுக் கண்ணீர் வடிக்கும் பெண்கள் எத்தனை எத்தனையோ!!
படங்கள் தந்த இணையத்துக்கு நன்றி..
பெற்றுக்கொள்ளும் குழந்தை பெண்ணாக இருந்தால் கொல்வது மட்டுமன்றி தேவையற்ற குழந்தையெனில் அது ஆணாக இருந்தாலும் கூட வீசி விடுகின்றனர். இவ்வாறு குடும்பத்தாராலேயே ஒதுக்கப்படும் குழந்தைகளுக்கென 1992-ல் தொட்டில் குழந்தைத்திட்டம் கொண்டு வரப்பட்டது. இப்படி தொட்டிலில் விடப்பட்ட சுமார் 77 குழந்தைகளில் 20 பேர் தத்துக் கொடுக்கப்பட்டதாக புள்ளி விபரம் சொல்கிறது.

இவ்வாறு பெண்கள் ஒதுக்கப்பட என்ன காரணங்களென்று ஆராய்ந்தால் சமூகத்தில் பெண்களுக்கு மதிப்பில்லாத நிலை நிலவுவதும், வரதட்சணைக்கொடுமையும் முக்கிய இடம் வகிக்கின்றன. பெண் என்ற காரணத்தினாலேயே உடல் ரீதியாகவும், உள ரீதியாகவும் அவள் சந்திக்க நேரிடும் இன்னல்கள் எக்கச்சக்கம். பெண் குழந்தைகளை வைத்திருக்கும் நிறையத் தாய்மார்களின் ஒரே கனவு, ‘தான் பட்ட கஷ்டம் எதையும் தன் பெண் படக்கூடாது. அவள் நன்றாக இருக்க வேண்டும்’ என்பதாகத்தான் இருக்கும். பிறந்தபின் வாழ்க்கையில் கஷ்டப்படுவதைவிட போய்ச் சேருவதே மேல் என்றெண்ணித்தான் இக்கொடுமையை மனம் துணிந்து செய்கிறார்களோ என்னவோ 

இப்பொழுதெல்லாம் மக்கள் இவ்விஷயத்தில் விழித்துக்கொள்ள ஆரம்பித்து விட்டார்கள். மதுரையருகே ஒரு கிராமத்தில் சுய உதவிக்குழுக்களில் இருக்கும் பெண்கள் ஒன்றுகூடி இக்கொடுமைக்கு எதிராக குரல் கொடுப்பதாக எங்கோ வாசித்தேன். அக்கிராமத்தில் ஒரு பெண் கர்ப்பமுற்றிருப்பதாகத் தெரிய வந்ததிலிருந்து அக்குழந்தை பிறக்கும் வரைக்கும் அடிக்கடி சென்று பார்த்துக் கொள்கிறார்கள். பிறந்தது பெண்ணாக இருந்தால், தென்னை மரக்கன்று, மற்றும் குழந்தைக்கு வேண்டிய பொருட்களைச் சீராக ஊர்வலமாக எடுத்துச் சென்று அக்குழந்தையின் வீட்டாருக்கு பரிசளிக்கிறார்கள். அதன் பின் குறிப்பிட்ட காலம் வரைக்கும் குழுவிலிருக்கும் ஏதேனும் பெண்மணி அக்குழந்தைக்குக் காவலாகவும் இருப்பதுண்டு. இதனால் அக்குழந்தையின் உயிர் காப்பாற்றப்படுகிறது.

குடும்பத்தினருக்கு மன ரீதியான ஆலோசனை அளிப்பதும், குழந்தைகளை வைத்துக் காப்பாற்றும் அளவுக்கு அக்குடும்பத்தின் நிதி நிலைமை உயர தொழில் ஆரம்பிக்க ஆலோசனை கொடுப்பதும், அதுவரைக்கும் ஒரு குறிப்பிட்ட தொகையை உதவித்தொகையாக வழங்குவதுமாக அரசாங்கமும் தன் பங்கைச் செய்து வருகிறது. சிசுக்கொலை நடந்திருக்கும் என்று சந்தேகம் வந்தால் சம்பந்தப் பட்ட அக்குடும்பத்தினரைப் பற்றிக் காவல்துறையினரிடம் புகார் அளிக்கலாம் என்றாலும், முதல் தகவலறிக்கை பதியப்பட தாமதமாகி விட்டால் தடயங்கள் அழிக்கப்படும் அபாயமும், லஞ்சம் கொடுத்துச் சில காவலர்களைச் சரிக்கட்டும் நிலைமையும் ஏற்படக்கூடும். இவ்வளவு நடக்கும்போது இயற்கை மரணம்தான் நிகழ்ந்ததென்று பொய்ச்சான்றிதழ் பெறுதலும் நடக்காதா என்ன?

சட்டப்படிக் குற்றமென்று அறிந்தும், பால்பரிசோதனை அடிப்படையில் கருக்கலைப்பு செய்யும் மருத்துவர்களைத் தண்டித்து அவர்கள் தொழில் புரியும் உரிமையைப் பறிக்க வேண்டுமென்று இப்போதெல்லாம் குரல் ஒலிக்க ஆரம்பித்து விட்டது. மஹாராஷ்ட்ராவின் ஷிக்ராபூரைச் சேர்ந்த மோகன் நகானே என்ற மருத்துவரின் தொழிலுரிமை அப்படித்தான் பறிக்கப்பட்டிருக்கிறது. குழந்தை ஆணா பெண்ணா என்று கண்டறிய முனையும் பெற்றோரையும் அப்படிச்செய்யக் கட்டாயப்படுத்தும் சுற்றத்தாரையும் குற்றம் சாட்டி மரண தண்டனை விதிக்கும் வகையில் இ.பி.கோ-302-ல் திருத்தம் கொண்டு வர வேண்டுமென்று எங்கள் சுகாதார அமைச்சர் சுரேஷ் ஷெட்டி வேண்டுகோளும் விடுத்திருக்கிறார். இதைப்பற்றிக் கடந்த பூந்தோட்டத்திலும் பகிர்ந்திருந்தேன்

எப்பொழுதுமே மக்கள் மனதில் மாற்றம் ஏற்படாத வரையில் எந்தவொரு சட்டமும் சீர்திருத்தமும் பலனளிக்காது. ஆணென்றால் வரவு, பெண்ணென்றால் செலவு, சுமை என்று ஒவ்வொரு பெற்றோரும் எண்ணும் வகையில் தலை விரித்தாடும் வரதட்சணைக் கொடுமைக்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்தாலே இக்கொடுமைக்கும் ஓரளவு முற்றுப்புள்ளி வைத்து விடலாம். பெண் குழந்தைகள் சுயமாகச் சம்பாதித்து தன் காலில் நிற்கும் வகையில் கல்வியறிவும் அளிக்க வேண்டும். குறைந்த பட்சம் தன்னுடைய ஆண்குழந்தைக்குத் திருமணம் பேசும்போது வரதட்சணை வாங்க மாட்டேன் என்று ஒவ்வொரு பெண்ணும் உறுதி பூண வேண்டும். குடும்பத்தினரும் அதற்குத் துணை நிற்க வேண்டும். வீட்டில் ஏற்படும் சிறு மாற்றங்கள்தானே நாட்டில் பெருமளவில் எதிரொலிக்கும்..


டிஸ்கி: வல்லமையில் எழுதினதை இங்கேயும் பகிர்ந்துக்கறேன்..

22 comments:

துளசி கோபால் said...

ஆணோ பெண்ணோ அது நம்ம குழந்தை என்ற அன்பு எங்கே போச்சு:(

VijiParthiban said...

நல்ல ஒரு விழிப்புணர்வு பகிர்வு அக்கா... ஆமாம் பெண்குழந்தைகள் சிசுவில் கொள்ளபடுவது தடுக்கப் படவேண்டும் ... இப்பொழுது எல்லாம் நீங்கள் கூறுவது போன்று ஒவ்வொரு வீட்டிலும் கடைப்பிடித்தால் பெண் சிசு கொலைகள் தடுக்கப்படும்.... ஆணோ பெண்ணோ எதுவாக இருந்தாலும் ஏற்றுக்கொள்ளகூடிய மனது எல்லோருக்கும் வரவேண்டும்....

CS. Mohan Kumar said...

உலகம் எவ்வளவோ மாறுது. ஆனால் வரதட்சணை ஒழிய மாட்டேங்குதே !

வயதான பின் பாசமாயும் உதவியையும் இருப்பது பெண்கள் தான். ஆண்கள் அல்ல. இதையாவது உணர்கிறார்களா இந்த மக்கள்?

பால கணேஷ் said...

ஆணுக்குப் பெண் இங்கே இளைப்பில்லை காண் என்று முழக்கமிட்டு, எல்லாத் துறையிலயும் பெண்களின் பங்களிப்பும் வந்தபின் இந்த விஷயம் குறைஞ்சிருக்கும்னு மனப்பால் குடிச்சிட்டிருந்தேன். உங்க கட்டுரை என் மனசுல அறைஞ்சுது. பாவிகளா... பெண்களின் ஆதரவும். பாசமும் இன்றி வளர்ந்துட முடியுமா ஆண்களால...? பெண் சிசுவைப் பாரமா நினைச்சா அதன் விளைவுகளை அனுபவிச்சுத்தான் ஆகணும். ஆக மொத்தத்துல இன்னும் இதுக்கான போதனைக்கு தேவை இருக்குன்ற நிஜம் புரிஞ்சு மனசைக் கனக்க வெக்குது சாரல் மேடம்.

நிரஞ்சனா said...

பெண்மையைப் போற்றி மகிழும் கவிதைகளும் கதைகளும் ஆயிரம் உண்டிங்கே. ஆனால் நிதர்சனம்...? வலியைத் தான் தருகிறது. வேறென்ன சொல்ல...

நாடோடி said...

பெண் சிசுக் கொலை என்பது ஒரு புறம் இருந்தாலும், மறுபுறம் குழந்தையின்மையும் அதிகரித்து வருகிறது சகோ.. இப்போது அதிக மக்கள் வரிசையில் நிற்கும் இடம் மகப்பேறு மருத்துவ மனைகள் தான்...

மக்களிடம் கண்டிப்பாக மன‌ மாற்றம் வர வேண்டும்.

sathishsangkavi.blogspot.com said...

அனைவரும் படிக்க வேண்டிய பதிவு...
நிறைய புது விசயங்க...

அமுதா கிருஷ்ணா said...

இரண்டும் பெண்ணா என்று கேட்கும் கேள்வியிலேயே பயத்தினை உண்டாக்கும் இந்த சமுதாயம்.வரதட்சணை வேண்டாம் என்றால் பையனிடம் ஏதோ குறையோ என்று சந்தேகப் படும் சமூகம்.

ஆனால், நீங்கள் சொல்கிற மாதிரி ஒவ்வொருவரும் மாற முயல்வோமே.

ராமலக்ஷ்மி said...

அல்ட்ராசோனோக்ராபி தவறாகப் பயன்படுத்தப்படுவது நாடெங்கிலும் பரவலாக இருக்கிறது:(. நீங்கள் சொல்லியிருப்பது போல் மக்கள் மனதில் மாற்றம் வருவதே தீர்வாக அமையும்.

திண்டுக்கல் தனபாலன் said...

வேதனை தரும் பதிவு...
பகிர்வுக்கு நன்றி...(த.ம. 5)

சா.கி.நடராஜன். said...

இன்றைய நடப்பினை அப்படியே உங்களது கட்டுரையில் வடித்துள்ளீர்கள்
துயரமான நடப்பு ,இந்த அறியாமை இருளை விலக்கச் செய்வது ஒவ்வொரு இந்தியக் குடிமகனின் கடமையாகும்
வாழ்த்துகள் நல்லதொரு படைப்பினை தந்தமைக்கு

என்றும் அன்புடன்
சா.கி.நடராஜன்.
கவிதை : தமிழ் சுவாசம் http://tamizhswasam.blogspot.in/
குழுமம் : தமிழ் சிறகுகள் http://groups.google.com/group/tamizhsiragugal

கோமதி அரசு said...

எப்பொழுதுமே மக்கள் மனதில் மாற்றம் ஏற்படாத வரையில் எந்தவொரு சட்டமும் சீர்திருத்தமும் பலனளிக்காது. //

விரைவில் மக்கள் மனம் மாறவேண்டும்.
மாற்றங்கள் விரைவில் வர வாழ்த்துக்கள்.
நல்ல விழிப்புணர்வு பதிவு.
வாழ்த்துக்கள் அமைதிச்சாரல்.

ஸ்ரீராம். said...

பெண்களை தெய்வமாக மதிக்கிறோம், தாய்மையைப் போற்றுகிறோம் என்றெல்லாம் சொல்லிக் கொள்ளும் நம் நாட்டில்தான் இந்தக் கொடுமையும் நிகழ்கிறது என்பது வேதனையான விஷயம். மகளிர் சுய உதவிக் குழுக்கள் செய்வதாகக் கூறும் செயல்கள் பாராட்டப் பட வேண்டியவை.

ரிஷபன் said...

சொல்லி சொல்லித்தான் மக்கள் மனசில் மாற்றம் கொண்டு வர வேண்டும்.

'பரிவை' சே.குமார் said...

நல்ல விழிப்புணர்வுப் பகிர்வு.
எல்லாக் குழந்தையும் ஒன்றுதான்... இதுல ஆண் என்ன பெண் என்ன...

ஸாதிகா said...

அனைவரும் படித்து பயனுறதக்க பகிர்வு.

வெங்கட் நாகராஜ் said...

ஆணோ பெண்ணோ அது நம் உயிர் அல்லவா?

சில நாட்களுக்கு முன் ஹரியானாவில் ஒரு பஞ்சாயத்து பெண் குழந்தைகளுக்கு ஆதரவாக குரல் கொடுத்திருப்பது மிகவும் மகிழ்ச்சியான விஷயம்.

த.ம. 7

ஹுஸைனம்மா said...
This comment has been removed by the author.
ஹுஸைனம்மா said...

கிராமங்களில் மாற்றம் ஓரளவு வர ஆரம்பிச்ச அதே சமயம், படிப்பறிவு கூடினவங்கதான் இப்ப இதில முன்னே நிக்கிறாங்க!!

“A Family is incomplete without a girl child"- இந்த ஒருவரி போதும்.

சத்ரியன் said...

சமூக அக்கறையுள்ள பதிவு. நீங்கள் குறிப்பிட்டிருப்பது போல் படித்தவர்களே இது போன்ற குற்றங்களைப் புரிவோர் பட்டியலில் முதலிடத்தை ஆக்கிரமித்துக் கொள்கின்றனர்.

தானே உணராதவரை இச்சமூகத்தை என்ன செய்ய?

Avargal Unmaigal said...

எனது கருத்தை இங்கே நான் பதிவாக பதிந்துள்ளேன். உங்கள் மனம் மிக இளகியது என்றால் இங்கே நீங்கள் செல்ல வேண்டாம்.
Tuesday, October 26, 2010 ல் நான் பதிவிட்டது. நீங்கள் படித்திருக்கமாட்டீர்கள் என நினைக்கிறேன்
http://avargal-unmaigal.blogspot.com/2010/10/abortion.html
கருக்கலைப்பு (Abortion) பெண்கள் அவசியம் படிக்க வேண்டியது

Anonymous said...

செய்திகள் அனைத்தும் மனதைப் பிழிகின்றன.
அதனை வெளிச்சம் போட்டுக் கட்டியதற்கு மிக்க நன்றி தோழி .

LinkWithin

Related Posts with Thumbnails