Monday 5 September 2011

புள்ளையார் பேரைச் சொல்லி.. ஒரு விருந்து.

எங்கூர்ல இன்னும் புள்ளையார் சதுர்த்தி முடியலை. அதனால, கொழுக்கட்டை செஞ்சு அவருக்கு கை காமிச்ச கையோட உங்களுக்கும் பரிமாறியாச்சு.

பூரணத்திற்குத் தேவையான பொருட்கள்.(இரண்டு வகைகளுக்கு)

கடலைப்பருப்பு – அரை கிலோ.
வெல்லம் – 600 கிராம்
ஏலக்காய் – 4
சுக்கு – ஒரு சிறு துண்டு.

செய்முறை:
கடலைப்பருப்பை நன்கு ஊற விட்டு, கிள்ளுப் பதமாக வேக விட்டு கூடுதலாக இருக்கும் தண்ணீரை வடிய விடவும். பின் அதை நன்கு மசித்துக் கொள்ளவும்.  ஏலக்காயையும், சுக்கையும் நன்கு பொடித்து வைத்துக் கொள்ளவும்.

அடி பிடிக்காத ஒரு பாத்திரத்திலோ அல்லது வாணலியிலோ, சர்க்கரையை பொடித்துப் போட்டு, அதனுடன் ரெண்டு தேக்கரண்டி தண்ணீர் விட்டு கொதிக்க விடவும். சர்க்கரை கரைந்ததும், வடிகட்டியில் வடிகட்டிக் கொள்ளவும். இல்லையென்றால் சர்க்கரையில் இருக்கும் மண் துகள்கள் பல்லைப் பதம் பார்த்து விடும்.

இந்த சர்க்கரைக் கரைசலை மறுபடியும் அடுப்பிலேற்றி பாகுப்பதம் வரும் வரை காய்ச்சவும். பதம் வந்ததும், மசித்து வைத்திருக்கும் பருப்பை அதில் போட்டு, ஏலஞ்சுக்குப் பொடியை அதில் போட்டு, பூரணம் நன்கு இறுகி வரும் வரை கிளறவும். பின் இறக்கி ஆற விடவும். இந்தப் பூரணத்திலேயே இரண்டு வகை கொழுக்கட்டைகள் செய்யலாம்.

முதல் வகை: மோதகம்.

மேல் மாவிற்கு தேவையானவை.
மென்மையான பச்சரிசி மாவு, சிட்டிகை உப்பு, கொதிக்கும் வெந்நீர்.

செய்முறை:
மாவுடன் உப்பை நன்கு கலக்கவும். அதனுடன் சிறிது சிறிதாக வெந்நீரைச் சேர்த்து கட்டிகளில்லாமல் சப்பாத்தி மாவுப் பதத்தில் பிசைந்து வைத்துக் கொள்ளவும். பின் அரிசி மாவைத் தொட்டுக் கொண்டு, சின்னச்சின்ன சொப்புகள் செய்து கொண்டு, அதனுள் கொஞ்சம் பூரணத்தை வைக்கவும். 

பின் சொப்பை நன்கு இடைவெளிகளில்லாமல் மூடி பூண்டு வடிவத்தில் செய்து கொள்ளவும். எல்லா மோதகங்களையும் தயார் செய்த பின் ஆவியில் வேக வைத்து எடுக்கவும்.

இரண்டாம் வகை: பொரித்த மோதகம்.

மேல் மாவிற்கு தேவையானவை.
கோதுமை அல்லது மைதா மாவு – 1 கிண்ணம்.
டால்டா – கால் கிண்ணம்(கொஞ்சம் குறைத்துக் கொண்டாலும் தப்பில்லை)
உப்பு – 1 சிட்டிகை.

செய்முறை:
டால்டாவை நன்கு சூடாக்கி, அதை உப்புச் சேர்த்த மாவுடன் நன்கு கலந்து துண்டுகளில்லாமல் பிசிறிக் கொள்ளவும். அதனுடன் சிறிது சிறிதாக தண்ணீரைச் சேர்த்து, சப்பாத்திக்குப் பிசைவது போல் பிசைந்து கொள்ளவும். அதனை கால் மணி நேரம் ஊற விடவும்.

பின் அதில் சிறிதளவு எடுத்து, மெல்லியதாக சப்பாத்திப் பலகையில் திரட்டிக் கொண்டு, அதன் நடுவில் பூரணத்தை வைத்து, சொப்பு போல் மூடி பூண்டு வடிவத்தில் செய்து கொள்ளவும். பின் அதை கொதிக்கும் எண்ணெய்யில் ஐந்தைந்தாக போட்டு பொரித்து எடுக்கவும். இது சுமார் ஒரு வாரம் வரைக்கும் கெடாமல் இருக்கும். 

எங்க வீட்டுப் பிள்ளையார்(பையர்தான் :-)) கொஞ்ச நாளா டயட்டில் இருக்கார். அரிசி மற்றும் மைதாவுல செஞ்ச எதையும் சாப்பிடுறதில்லை. கோதுமையில் செஞ்சதை மட்டுமே சாப்பிடுறார். அவருக்காக, கோதுமை மாவில் மோதகம் செஞ்சு, வேக வெச்சுக் கொடுத்தேன். ஜூப்ப்பரா இருந்திச்சுன்னார்.
கோதுமை மோதகம்(வேக வெச்சது)
தேங்காய்க் கொழுக்கட்டை.

தேவையானவை
புட்டு மாவு -1 கப்
அரிசி ரவை – கால் கப்
உப்பு – சிட்டிகையளவு
தேங்காய் – 1

செய்முறை:
மாவு, ரவை, உப்பு எல்லாவற்றையும் கலந்து கொள்ளவும். பின் தண்ணீர் சேர்த்து கொஞ்சம் கெட்டியாக பிசைந்து கொள்ளவும்.

தேங்காயை உடைத்து முழுவதையும் துருவிக் கொள்ளவும். (தேங்காய்த் தண்ணீரை மாவுடன் கலந்தால் ருசி கூடும்)

எலுமிச்சையளவு மாவை எடுத்து, பருமனான அப்பளம் போல் உள்ளங்கையளவுக்கு தட்டிக் கொள்ளவும். அதனை தேங்காய்த் துருவலில் இரண்டு பக்கமும் புரட்டி எடுக்கவும். 
பின் அதை இரண்டாய், நான்காய் மடித்து, பின் உருண்டையாய் உருட்டிக் கொள்ளவும். இதனால், கொழுக்கட்டையின் எல்லா மடிப்புப் பாகங்களிலும் தேங்காயின் ருசி பரவியிருக்கும். பின் அதை ஆவியில் வேக விட்டு எடுக்கவும்.

மாவுடன் மொத்தமாகவே தேங்காயை கலக்கலாமே என்பவர்களுக்கு ஒரு விளக்கம்,… கொழுக்கட்டை மொத்தையாக இல்லாமல், மடிப்புகளுடன் இதன் ருசியும் கொஞ்சம் வித்தியாசப்படும்.

ஒவ்வொரு மாதமும் அமாவாசைகளில் கொழுக்கட்டை செய்து, வேழ முகத்தானுக்கு படைத்தால் நல்லது நடக்குமாம்.  நம்ம தென்றல் சொல்லியிருக்காங்க. புள்ளையார் பேரைச் சொல்லி நாம சாப்பிடுவோம் :-)

வல்லமையில் எழுதினதை இங்கியும் பகிர்ந்துக்கறேன்.
 நேயர் விருப்பத்திற்கிணங்க மோதக அச்சை இணையத்தில் தேடிக் கொண்டாந்துருக்கேன் :-). 

கையால் எப்படி வடிவமைக்கிறதுங்கற முறை, அடுத்த ரெசிப்பியின் போது போடப்படும் :-)

டிஸ்கி: கொஞ்சம் வித்தியாசமா இருக்கட்டுமேன்னு, நடைய மாத்தி நடந்து பார்த்திருக்கேன். 



54 comments:

வை.கோபாலகிருஷ்ணன் said...

கொழுக்கட்டை பிரஸாதங்கள் எல்லாம் பார்க்க அருமையாக இருந்தன.

செய்முறை விளக்கங்களும் அருமையே.
பாராட்டுக்கள். வாழ்த்துக்கள்.

வை.கோபாலகிருஷ்ணன் said...

Voted in தமிழ்மணம்: 2/2

வல்லமையுள்ளவர் எழுதியதால் மட்டுமே ‘வல்லமை’யில் வெளிவந்துள்ளது. பாராட்டுக்கள்.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க வை.கோ ஐயா,

'அங்க' ஆத்துன கடமையை இங்கியும் பகிர்ந்து பதிவு செஞ்சுக்கணுமில்லையா :-)))).

raji said...

பதிவை மட்டும் பகிர்ந்துகிட்டு கொழுக்கட்டையை வெறும் ஃபோட்டோ
பிடிச்சு போட்டதோட சரியா?அதெல்லாம் நாங்க ஒத்துக்கிட மாட்டோம்.
யாரங்கே!உடனே மும்பையில ஒரு பதிவர் சந்திப்பு போடுங்க.
நமக்கும் சாரல் வரட்டும்

மாய உலகம் said...

கோதுமை மோதகம் பாக்கும்போதே திங்கனும் போலருக்கே நான் என்ன செய்வேன்... பார்சல்

தமிழ் said...

சாரல் அக்கா,

காலம் தாழ்ந்த விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்! :-))

இந்த வருடம் நானும் கொழுக்கட்டை செஞ்சேனே... முதல்தடவையா தனியா... நல்லா வந்துச்சு! எல்லாம் விநாயகர் திருவிளையாடல் தான். கடலைப்பருப்பு பூரணம் வெச்சதுதான்...

இமா க்றிஸ் said...

வேக வைச்ச கோதுமை மோதகம் ஷேப் அச்சில போட்டு எடுத்த மாதிரி சூப்பரா இருக்கு.

ஸ்ரீராம். said...

படங்கள் அருமை. பதிவும்தான். கோதுமை மோதகத்தில் அச்சில் வார்த்தது போல எப்படி இழை இழையாய்க் கோடுகள்? வெல்லப் பூரணம் வெளியில் கசியாமல் பளீரென்று வெண்மையில் இருக்கும் வெல்லக் கொழுக்கட்டை பார்க்க பாந்தம்.

ஸாதிகா said...

கொழுக்கட்டை அசத்தல்.என்ன ஒரு அம்சமா கொழுக்கட்டை செய்து இருக்கீங்க!!!!

goma said...

அருமையான ருசியான கொளுக்கட்டை ரெசிபி.
நான் எப்பொழுதும் தேங்காய் வெல்லம் மோதகம்தான் செய்றது.

ஹுஸைனம்மா said...

கொழுக்கட்டை வேற, மோதகம் வேறயா? நான் அதான் இது, இதான் அதான் இதுன்னு நெனச்சிருந்தேன்!! ;-))))

ராமலக்ஷ்மி said...

//கோதுமை மோதகத்தில் அச்சில் வார்த்தது போல எப்படி இழை இழையாய்க் கோடுகள்? //

ஆமா இதே கேள்வி படத்தைப் பார்த்ததும் எனக்கும் எழுந்தது. பதிலுக்குக் காத்திருக்கிறோம்.

கோதுமையில் செய்யலாம்ங்கிறது புதுசு. டயட்டுக்காக என்றே செய்து சாப்பிடுகிறேன்:))!

சாந்தி மாரியப்பன் said...

வாங்க ராஜி,

பதிவர் சந்திப்புதானே.. நடத்திடுவோம். நீங்க மும்பைக்கு பறந்து வரணும் சரியா :-))

சாந்தி மாரியப்பன் said...

வாங்க மாய உலகம்,

பார்சல் வந்துக்கிட்டே இருக்கு சகோ :-)

ஹுஸைனம்மா said...

//மோதகத்தில் அச்சில் வார்த்தது போல//

நிறைய பேருக்கு இந்த டவுட் வருது!! மோதக அச்சுன்னு ஒண்ணு இருக்கது யாருக்குமே தெரியாதுபோல!! கரெக்ட்டுதானே அமைதிக்கா?

(துளசி டீச்சர் பதிவுல படிச்சுத்தான் எனக்கும் தெரியும்!!) ;-)))))))))

சாந்தி மாரியப்பன் said...

வாங்க முகிலு,

எனக்கும் ரொம்ப வருஷமா டிமிக்கி கொடுத்துட்டே இருந்திச்சு. பூரணத்தை அப்படியே சொப்புக்குள்ள வெச்சு உருட்டிப் போட்டுடுவேன். இப்ப ஓரளவு செய்ய வருது :-)

சாந்தி மாரியப்பன் said...

வாங்க இமா,

அது அச்சில் வார்த்ததுதாங்க. கையாலயே செய்யலாம்தான். ஆனா, கொஞ்சம் நேரமெடுக்குமே :-)

சாந்தி மாரியப்பன் said...

வாங்க ரத்ன வேல் ஐயா,

வாசிச்சதுக்கு ரொம்ப நன்றிங்க.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க ஸ்ரீராம்,

அச்சில்தான் வார்த்தேன். ஆற அமர ஸ்பூன் உதவியுடன், கோடுகள் போட்டு, கையாலயே அந்த வரிகளை கொண்டு வரலாம்தான். ஆனா, நேரப் பத்தாக்குறை... அதான் சுருக்கு வழி. இங்கே சில பேர் வாழையிலை உதவியுடனும் அந்த வரிகளை கொண்டாருவாங்க. அசப்பில் வெள்ளைப்பூண்டு மாதிரியே இருக்கும்.

அதையும் முயற்சிக்கலாம்தான். அவசர யுகத்தில் அதுக்கு ஏது நேரம் :-)))

சாந்தி மாரியப்பன் said...

வாங்க ஸாதிகா,

ரொம்ப நன்றிங்க :-)

சாந்தி மாரியப்பன் said...

வாங்க கோமாக்கா,

ஹைய்யோ.. அசத்தலான அயிட்டமாச்சே அது :-)

குறையொன்றுமில்லை. said...

கொழுக்கட்டை படங்களும் செய்முறை விளக்கங்களும் சூப்பரா இருக்கு.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க ஹூஸைனம்மா,

எனக்குமே செஞ்சதை திங்கத்தான் ரொம்ப நாளாத் தெரியும். அதுவும், நம்மூர்ப் பக்கத்துல மோதகத்தை சுசியம்ன்னு வேற சொல்லுவாங்களா, அதைக் கூட ரொம்ப நாளா வேற வேற அயிட்டம்னே நினைச்சிட்டிருந்தேன் :-))))

இமா க்றிஸ் said...

அந்த அச்சு ஃபோட்டோ போட மாட்டீங்களா? பார்க்க ஆசையா இருக்கே. ப்ளீஸ்ஸ்ஸ்.

வாழை இலை ஐடியாவும் நல்லா இருக்கு; குறிச்சு வச்சுக்கறேன்.

துளசி கோபால் said...

அடடாடா..... படங்கள் அப்படியே அள்ளிக்கிட்டுப்போகுதே!!!!!!

செய்முறைகளையும் அழகாக் கொடுத்ததுக்கு நன்றிப்பா.

புள்ளையாரைத்தான் அங்கே பத்து நாள் கொண்டாடுவீங்களே!!!! சதுர்த்தி தொடங்கி சதுர்த்தசி வரை 11 நாளாகிருதோ!!!!!

தினம் அவருக்குத் திகட்டத் திகட்ட தித்திப்புதான்:-)

rajamelaiyur said...

படத்த பாத்ததும் சாப்பிட தோணுது

ADHI VENKAT said...

படங்களும், செய்முறையும் ஆசையை தூண்டுது.
தேங்காய் கொழுக்கட்டை செய்முறை வித்தியாசமா இருக்குங்க. ஒவ்வொரு மடிப்பிலும் தேங்காய். செய்து பார்க்கிறேன்.

பையருக்காக கோதுமை கொழுக்கட்டை. சூப்பர்.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க ராமலஷ்மி,

ஸ்ரீராமுக்கு பதில் சொல்லியிருக்கேன் பாருங்க :-)

கோதுமை, மைதாவுல செய்யும்போது கையாலயே அழகா பூண்டு வடிவத்தை கொண்டாந்துடலாம். அரிசி மாவுன்னாதான் கொஞ்சம் அடம் புடிக்கும். பயிற்சி கை வர்ற வரைக்கும் மோதகம் செஞ்சுட்டு, அச்சுல கடைசி டச்சப் கொடுத்துட்டா போச்சு :-)

சாந்தி மாரியப்பன் said...

வாங்க ஹூஸைனம்மா,

மஹாராஷ்ட்ராவில் அச்சு இல்லாத வீடுகளே கிடையாது. இப்பத்தான் இந்த மெல்லிய வரிகள் உள்ள அச்சு கிடைக்குது. முந்தியெல்லாம் பூண்டுப் பற்கள் அளவுல கிடைக்கும். அதுவும் புள்ளையார் சதுர்த்தி சமயம், சூப்பர் மார்க்கெட்டுகள்,பாத்திரக் கடைகள்ல மலிஞ்சு கிடக்கும் :-)

சாந்தி மாரியப்பன் said...

வாங்க லஷ்மிம்மா,

வாசிச்சதுக்கு ரொம்ப நன்றிம்மா.

சாந்தி மாரியப்பன் said...

இமா,

நேயர் விருப்பம் நிறைவேற்றப்பட்டது :-)

சாந்தி மாரியப்பன் said...

வாங்க துளசியக்கா,

அதேதான்.. முதல் நாள் புள்ளையார் சதுர்த்தி தொடங்கி, கடைசி நாள் ஆனந்த சதுர்த்தசி வரைக்கும் மோதகப்ரியனை இனிப்பாலயே குளிப்பாட்டிருவோம்.

ட்ரை ஃப்ரூட்ஸ் மோதகமாவது பழசு, இப்ப லேட்டஸ்டா சில பேர் சாக்லெட் மோதகமும் செய்யறாங்களாம் ;-)

ஒரு நாளைக்கு ச்சைனீஸ் மோதகம்(மோமோ) செய்யலாமான்னு எங்கூட்டு புள்ளையாரை கேட்டேன். வாயில இருக்கிற மோதகத்தை முழுங்கிட்டு சொல்றேன்னு சைகை செய்யறார் :-)

சாந்தி மாரியப்பன் said...

வாங்க ராஜா,

உங்களுக்கு இல்லாததா சகோ.. பாத்திரத்துல இருக்கற மோதகங்கள் அத்தனையையும் எடுத்துக்கோங்க :-))

சாந்தி மாரியப்பன் said...

வாங்க கோவை2தில்லி,

மடிப்பு மட்டுமல்ல, அவிச்சப்புறம் பார்த்தா கொழுக்கட்டைக்குள் கொழுக்கட்டைன்னு ஒரு மினியேச்சர் கொழுக்கட்டை அதுக்குள்ள இருக்கும். விரும்பினா, உருண்டை பிடிச்சப்புறமும் ஒரு தடவை தேங்காய்த் துருவல்ல புரட்டி எடுங்க.

இராஜராஜேஸ்வரி said...

அருமையாய் பூரண கொழுக்கட்டை பகிர்வுக்குப் பாராட்டுக்கள்>

ராமலக்ஷ்மி said...

// ச்சைனீஸ் மோதகம்(மோமோ) செய்யலாமான்னு//

விதம் விதமா செஞ்சு கொடுத்தா சந்தோஷமாதான் வாங்கிப்பார்:)!

மோதக அச்சு இங்கும் கிடைக்கிறதா பார்க்கிறேன்.

Asiya Omar said...

கொழுக்கட்டை படங்களும் செய்முறையும் சூப்பர்,கண்ணில் ஒற்றிக்கொள்ளலாம் போல் இருக்கு.கொழுக்கட்டையை விட்டு கண்ணை எடுக்க மனம் வரலே,அத்தனை நேர்த்தி.

r.v.saravanan said...

கொழுக்கட்டை செய்முறை அசத்தல்.

r.v.saravanan said...

படங்கள் சூப்பர்

மோகன்ஜி said...

படமெல்லாம் அட்டகாசம்.. உன் களுக்கு அத்திரி பாச்சா கொழக்கட்டை கதை தெரியுமோ... எங்கபாட்டி சொன்னது .. நினைப்பு வந்தது மேடம்!

RAMA RAVI (RAMVI) said...

வணக்கம்.மேடம்.என் பதிவிர்க்கு வந்து கருத்து சொன்னதர்க்கு நன்றி.
உங்களை தொடர ஆரம்பித்துவிட்டேன்.
எனக்கு கொழுக்கட்டை பண்ண தெரியாது
அதனால் பார்சல் பிளீஸ்.

pudugaithendral said...

juper.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க ராஜராஜேஸ்வரி,

ரொம்ப நன்றிங்க.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க ராமலஷ்மி,

மால்கள்லயும்,பாத்திரக் கடைகள்லயும் கிடைக்க வாய்ப்பிருக்கு. தேடிப் பாருங்க :-)

சாந்தி மாரியப்பன் said...

வாங்க ஆசியா,

ரொம்ப நன்றிங்க.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க சரவணன்,

ரொம்ப நன்றிங்க :-)

சாந்தி மாரியப்பன் said...

வாங்க மோகன்ஜி,

அந்தக் கதை ரொம்ப நல்லாத் தெரியுமே. இப்ப உங்களுக்கு அத்திரி பாச்சா கொழுக்கட்டை எப்படி ஞாபகம் வந்துச்சு. வீட்ல நிறைய கிடைச்சுதா :-))

சாந்தி மாரியப்பன் said...

வாங்க ராம்வி,

பார்சல் வந்துக்கிட்டே இருக்குங்க :-)

தொடர்ந்து வருவதற்கு நன்றிங்க.

சாந்தி மாரியப்பன் said...

வாங்க தென்றல்,

நன்றீஸ் :-)

Jaleela Kamal said...

முன்றுமே ரொம்ப ஜூப்பரு

என்னக்கு ரொம்ப பிடிக்கும் ஆனால் நாங்கள் செய்யும் முறை வேறு
ஆனால் உங்கள் வீட்டு பிள்ளையார் டயட்டுன்னுட்டு

டால்டாவில் குழைத்து எண்ணையி ல் சுட்டெடுத்தால் ஐ எபப்டி டயட் ஹிஹி

சாந்தி மாரியப்பன் said...

வாங்க ஜலீலாக்கா,

அடைப்புக்குறிக்குள் 'பையர்'ன்னு போட்டிருக்கேனே.. பார்க்கலீங்களா :-))

டயட்டில் இருக்கும் பிள்ளையார் சாட்சாத் என் சீமந்த புத்திரன்தான் :-)))))))

உங்க முறையையும் பகிர்ந்துக்கோங்களேன்.

துளசி கோபால் said...

நேற்று இங்கே அனந்தசதுர்த்தசி பூஜைக்கு ஒரு தோழி வீட்டுக்குப் போனோம்.

பிள்ளையாருக்கு ஒரு ஸ்பூன் பாலபிஷேகம் ஒவ்வொருத்தரும் செஞ்சோம். ஆனால் எல்லாம் முடிஞ்சு அவரைக் குளிப்பாட்டி எடுத்து வச்சுக்கிட்டால்தான் அடுத்த வருசத்துக்கு!

பிரசாதம் தின்னுட்டு வாயைத் திறக்கலை(யாக்கும்) க்ளூட்டேனியஸ் அரிசி மாவு கொழுக்கட்டை!!!!

இமா க்றிஸ் said...

நேயர் விருப்பத்தை நிறைவேற்றியமைக்கு மிக்க மிக்க மிக்க நன்றி. எவ்வளவு அழகா இருக்கு அந்த அச்சு. தேட ஆரம்பிக்கிறேன்.

மாதேவி said...

பிள்ளையார் மோதகம் சூப்பர்.

LinkWithin

Related Posts with Thumbnails