கண்களைத்தேய்த்து விட்டுக்கொண்டு கை கால்களை நீட்டி சோம்பல் முறித்தான். புரண்டு தலையணைக்கருகில் வைத்திருந்த மொபைலை எடுத்து லேசாகக் கண்களைச்சுருக்கி, மணி என்னவென்று பார்த்தான். ஆறு மணிக்கு இன்னும் ஐந்து நிமிடங்கள் இருந்தன. விடிந்து விட்டிருந்தாலும் மழைக்காலம் என்பதால் குளிருடன் லேசான இருளும் இன்னும் மிச்சமிருந்தது. இடுப்பில் நெகிழ்ந்திருந்த லுங்கியை இன்னும் சற்று நெகிழ்த்தி தோள் வரை ஏற்றிக்கொண்டு போர்த்திக்கொண்டான். போர்வையை விட இப்படிப்போர்த்திக்கொள்வதுதான் அவனுக்குப் பிடிக்கும். கதகதப்பாகவும் இருக்கும், வழக்கத்தை விட இன்னும் சற்று நேரம் உறங்குவான். இன்று கூட இன்னும் சற்று உறங்கலாம், "எழுந்து என்ன செய்யப்போகிறோம்? ஆபீஸ் போவதா பாழாய்ப்போகிறது?" தனக்குள் நினைத்தபடியே அப்படியே கிடந்தான்.
என்றைக்கு இந்த பாழாய்ப்போன கொரோனா கிருமி நாட்டுக்குள் நுழைந்ததோ அன்றைக்குப்பிடித்தது கேடு. முதல் தடவை லாக்டவுன் அறிவிக்கப்பட்டபோது எல்லோரையும் போல அவனும் ‘அப்பாடா.. தினமும் அவதியவதியாய் ஆபீசுக்கும் வீட்டுக்கும் ஓடுவதிலிருந்து சற்று விடுதலை கிடைத்தது’ என மகிழ்ந்தவன்தான். அதன்பின் வீட்டிலிருந்தே வேலை செய்யலாம் என அறிவிக்கப்பட்டபோது, அதையும் ஒரு மகிழ்வுடனேயே எதிர்கொண்டான். ஆனால், எத்தனை பிரியமானவர்களானாலும், வீட்டுக்குள் அடைந்து கொண்டு எந்நேரமும் இருபத்து நாலு மணி நேரமும் ஒருத்தர் முகத்தை ஒருத்தர் அன்பொழுகப் பார்த்துக்கொண்டே இருக்க முடியாது என்ற நிதர்சனம் அப்புறம்தான் அவர்களுக்கு உறைத்தது. லேசாகச் சீறினார்கள், கத்தினார்கள்.. பின் ஒருத்தரையொருத்தர் பிறாண்டிக்கொண்டார்கள். வீட்டிலும் ஆபீஸிலும் இருவரும் வேலை பார்த்துக்கிழிக்கும் லட்சணத்தை விமர்சித்துக்கொண்டார்கள். எதிர்பாரா விதமாய் லாக்டவுன் நீட்டிக்கப்பட்டுக்கொண்டே போனபோது, இது வீடுமல்ல… தாங்கள் வாழ்வது வாழ்க்கையுமல்ல.. எனவும், மீள முடியாத நரகத்தில் மாட்டிக்கொண்டு அழுந்துவதாகவும் சுயபரிதாபப்பட்டார்கள். இத்தனை நாள் இனித்த சம்சாரம் இப்போது இருவருக்கும் கசந்தது, கசப்பை வார்த்தைகளால் துப்பிக்கொண்டார்கள். வழித்துப்போட்டுவிடவோ துடைத்துப்போட்டு விடவோ முடியாத காஞ்சிரக்கசப்பு வழிந்தது வார்த்தைகளில்.
உலகம் முழுக்கவே பொருளாதாரம் அடி வாங்கிக்கொண்டிருந்தபோது இவர்களது வாழ்வு மட்டும் விதி விலக்கா என்ன? அவன் வேலை பார்த்த கம்பெனி ஊழியர்களுக்குச் சம்பளம் கொடுக்கமுடியாமல், ஆட்குறைப்பு என்ற பெயரில் அவன் சீட்டைக் கிழித்தது. கையிருப்பைக் கணக்கிட்டபோது எப்படியும் நாலு மாதங்களுக்குத் தாக்குப்பிடித்து விடலாமெனத்தெரிந்தது. அதற்குள் வேறு வேலை ஏதேனும் தேடிக்கொள்ள வேண்டும். வீட்டுக்கடனின் மாதத்தவணை, மகளின் படிப்பு, அம்மாவின் மருத்துவச்செலவு, எதிர்காலச்செலவுகள் என எல்லாமும் மனக்கண்ணெதிரே நின்று பயமுறுத்தின. இரவுகளில் தூக்கம் வராமல் தவித்தான். எப்படியோ ஒரு மாதம் ஓடி விட்டது.. ‘சீக்கிரத்திலேயே ஒரு வேலையைத்தேடிக்கொள்ளாவிடில் சீரழிவுதான்’ என நினைத்தபடியே எழுந்து உட்கார்ந்தான். அருகில் தூங்கிக்கொண்டிருந்த மகளின் பூமுகத்தை ஒரு கணம் வாத்சல்யத்துடன் பார்த்து விட்டு, அவள் உறக்கம் கலையாமல் தலைமுடியைக் கோதினான், பின் நன்கு இழுத்துப்போர்த்தி விட்டு வெளியே வந்து வாசல் திண்ணையில் அமர்ந்தான்.
இரவில் கனத்த மழை பெய்திருக்க வேண்டும்.. எதிர் வீட்டுக்கூரையில் பதித்திருந்த ஓடுகளிலிருந்து வழிந்த தண்ணீர் மண்ணில் சொட்டிய இடங்களில் சிறு குழிகளைப்பறித்திருந்தது. சொட்டிய தண்ணீர் வெளியேற்றிய கருமண், பருக்கை மணல் நிரம்பிய குழிகளைச்சுற்றிப் படர்ந்து அழகிய கோலம் போல் தோற்றமளித்தது அவனுக்குப்பிடித்திருந்தது. இன்றைய தினம் இப்படியொரு அழகிய காட்சியுடன் விடிந்தது அவனுக்கு மனதுக்கு சொல்லவொண்ணா நிறைவாக இருந்தது. எதிர்வீட்டு முருங்கை மரத்தின் பழுத்த இலைகள் காற்றில் உதிர்ந்து மழையில் நனைந்து தரையுடன் ஒட்டிப்பிடித்துக்கொண்டு கிடந்தன. பழுத்த செம்பருத்தி இலையொன்று, ஒரு பூ உதிர்வது போல மேல்கிளையிலிருந்து சொட்டிய நீர்த்துளி பட்டு, மெல்லென ஆடி உதிர்ந்தது. இப்படியே இதைப்பார்த்துக்கொண்டே வாழ்நாளைக் கழித்து விட, முடிந்தால் அந்த இலையைப்போல் யாருக்கும் தெரியாமல் உதிர்ந்து விட முடிந்தால் எத்தனை நன்றாக இருக்கும். எதற்கு இத்தனை பாடுகள்?
சூடாக ஒரு காப்பி குடித்தால் நன்றாக இருக்கும் போலிருந்தது. இரவு சாப்பிடாததாலோ என்னவோ நெஞ்சுக்குள் காந்தியது. உள்ளே வந்தான்.. பல் தேய்ப்பதற்காகப் பாத்ரூம் பக்கம் போனவன், திரும்பி சோம்பல் முறித்து கொட்டாவி விட்டுக்கொண்டே அடுக்களைப்பக்கம் நகர்ந்தான். யானையெல்லாம் பல்லா தேய்க்கிறது? ஒரு நாள் பல் தேய்க்காமல் காப்பி குடித்தால் ஒன்றும் குறைந்து விடாது. அடுக்களைக்குள் எட்டிப்பார்த்தான், மனைவியையும் காணோம், அம்மாவையும் காணோம். திரும்பி ஹாலுக்கு வந்தான், டைனிங் டேபிளில் மகள் உட்கார்ந்திருந்தாள்.
“ம்ம்ம்.. எஞ்செல்லக்குட்டி” கொஞ்சிக்கொண்டே வளைத்து அணைக்க வந்தவனின் கைகளைத் தடுத்தாள் மகள்.
“எப்பா… ஹோம்வொர்க் பண்றேன், டிஸ்டர்ப் பண்ணாதே. ஆன்லைன் க்ளாஸ் முடிஞ்சப்புறம் கொஞ்சிக்கோ”
“ஏதுடி இது? புது பென்சில் பாக்ஸ் மாதிரி இருக்கு? கடையெல்லாம் அடைச்சு மூடிக்கிடக்கே.. எங்க வாங்குன?”
“சரியான மக்குப்பா நீ. ஆன்லைன்லதான் எல்லாமும் கெடைக்குதே, பெரீப்பா வாங்கிக்குடுத்தாங்க”
“போன வாரம் பூப்போட்ட குடை, அதுக்கும் முன்னால ஸ்கூல் பேக்கு, இப்ப பென்சில் பாக்ஸா? ஹூம்… ஒனக்கென்னா!!! தாங்குகதுக்கு ஆளு இருக்கு. ஒங்காரியமெல்லாம் கரெக்டா நடந்துரும் போ. எங்க அண்ணன நல்லா கொள்ளையடி” பெருஞ்சிரிப்புடன் மகளின் முன்னுச்சி முடியைக் கலைத்தான்.
“போப்பா… கண்ணு போடாத” என்றபடி பெண் திரும்பிக்கொண்டது.
“ஆச்சியையும் அம்மையையும் எங்கடீ?. ஒரு காப்பி போட்டுக் கேக்கலாம்ன்னா ஒருத்தரையும் காணோம்”
“அம்மா மார்க்கெட்டுக்குப் போயிருக்காங்க, ஆச்சி இன்னா வந்தாச்சு” என்றபடி முகவாயை நீட்டி அவன் பின்னால் காண்பித்தது.
“துணி காயப்போட மாடி ரூமுக்குப் போனேன் மக்கா. மேலயும் கீழயும் ஏறி எறங்குறதுக்குள்ள காலு முட்டு ரெண்டும் கழந்துரும் போல இருக்கு. காயப்போட்டுட்டுப்போன்னு ஒம்பெண்டாட்டி… அந்தப்புண்ணியவதிட்ட சொன்னேன், காதுலயே வாங்காம போயிட்டா. மாமியார் சொல்லுக்கு கொஞ்சமாது மதிப்பிருக்கா? எனக்க சாஸ்தாவே… நீதான் இதெல்லாம் கேக்கணும்” நாற்காலியில் உட்கார்ந்து மூட்டுகளை நீவி விட்டுக்கொண்டாள் அவனது அம்மா.
“எம்மா… எம்மா.. காலைலயே ஆரம்பிக்காதீங்கம்மா. ஒங்க பஞ்சாயத்து பெரும்பஞ்சாயத்துல்லா.. தீத்து முடியாதும்மா” அவசரமாய் உதடுகளின் குறுக்கே விரலை வைத்துக்காட்டினான்.
“பொண்டாட்டிய விட்டுக்குடுக்க மாட்டியே, இந்த அழகுசுந்தரிய கெட்டுனதுக்கே இந்தப்பாடு. ஒனக்கெல்லாம் இன்னுங்கொஞ்சம் அழகா, சம்பாதிக்கற பொண்டாட்டி வாச்சிருந்தா ஒன்னிய கையிலயே புடிக்க முடியாது போ. நேத்து என்ன செஞ்சா தெரியுமா?”
“நீங்க சொல்றதத்தான் அவ கேக்க மாட்டான்னு தெரியுமில்லே, எதுக்கு வம்பு வளர்த்துதீங்க?. அவ கிட்ட ஒரு வேலையைச் சொல்ல வேண்டியது, அப்றம் அங்கியே நின்னு மேற்பார்வை பாத்துக்கிட்டு நொட்டை சொல்லிட்டே இருக்க வேண்டியது. மாமியா இப்படியிருந்தா எந்தப்பொம்பளைக்கும் கோவம் வரத்தாம்மா செய்யும். அவள நம்பி வேலையை ஒப்படைச்சுட்டு நகர்ந்துருங்க, சரியாச்செய்யலைன்னா அப்றம் திருத்தம் சொல்லுங்க. அத விட்டுட்டு எப்பமும் சண்டை போட்டுட்டே இருந்தா எப்படிம்மா?”
“எலேய்.. போக்கத்துப்போயி ஒனக்க வீட்டுல வந்து கெடக்கேம்லா.. நீ இதுவும் பேசுவ.. இன்னுமும் பேசுவ. இதே.. ஒங்க மயினின்னா, எம் பேச்சுக்கு எதிர்ப்பேச்சு பேச மாட்டா தெரியுமா?”
அவனுக்குச் சிரிப்பாக வந்தது. அம்மை படுத்தும் பாடு தாங்காமல் புருஷனுக்குச் சாவி கொடுத்து அம்மையை இங்கே அனுப்பியதே அண்ணிதான். கொஞ்ச நாளாவது அண்ணி நிம்மதியாக இருக்கட்டுமென இவனும் போய்க் கூட்டி வந்து விட்டான். வந்த இரண்டாம் நாளிலிருந்தே மாமியாருக்கும் மருமகளுக்கும் முட்டிக்கொள்ள ஆரம்பித்து விட்டது. நோய்த்தொற்றைப்பற்றிய பயமும், எதிர்காலத்தைப்பற்றிய நம்பிக்கையின்மையும் மனித மனங்களை மிகவும் பலவீனமாக்கி விட்டிருப்பதும், கூடுதலாக ஒரு நாள் விடுமுறை கிடைக்காதா!! வீட்டிலிருக்க மாட்டோமா!! என ஏங்கியது போய் இப்போது காற்று வாங்கக்கூட வெளியே செல்ல வழியில்லாமல் வீட்டுக்குள்ளேயே அடைபட்டுக்கிடப்பது அப்பலவீனத்தை இன்னும் பெருக்குவதும் அவனுக்கு ஆயாசமாக இருந்தது. பெருகிய பலவீனம் தற்கொலை எண்ணங்களைத் தோற்றுவித்தது. இப்படியே போனால் மனநோயாளியானால் கூட ஆச்சரியப்பட ஏதுமில்லை எனத்தோன்றியது. “இனிமேல்தான் ஆக வேண்டுமா?” என மனைவி கேட்பாள். சிந்தனை விளைவித்த சிரிப்பை அடக்கியதில் லேசாகப் புரையேறி இருமினான். நெஞ்செரிச்சல் அதிகப்பட்டது போல் தோன்றியது, நீவி விட்டுக்கொண்டான்.
“எம்மா.. சூடா ஒரு கப் காப்பி தாருங்க, நெஞ்சுக்குள்ள என்னமோ போல இருக்கு, சூடா என்னமும் குடிச்சா கொள்ளாமாட்டு இருக்கும்”,
“இன்னா தாரேன்” அம்மா எழுந்து போய் பாலைச்சூடாக்க அடுப்பில் வைப்பது தெரிந்தது. தலை கனத்தது, டேபிளில் கவிழ்ந்து கொண்டான்.
“சூடாட்டு குடி மக்கா, இப்பம் ஒரு நிமுசத்துல இட்லி அவிச்சுருதேன், சாப்புடு. அசிடிட்டியெல்லாம் ஓடிப்போயிரும். நேரா நேரத்துக்குச் சாப்பாடு குடுக்காம கொள்ளாம எம்புள்ளைக்கு வியாதிய வரவழைச்சுட்டாளே மகராசி” கையில் காப்பியைக் கொடுத்து விட்டு நகர்ந்தாள் அம்மா.
வாங்கிக்கொண்டு ஒரு மிடறு உறிஞ்சியபடி திரும்பியபோது, கைகளில் கனத்த பைகளுடன் மூச்சு வாங்க அவன் மனைவி வீட்டுக்குள் நுழைந்து கொண்டிருந்தாள். காப்பியை அப்படியே டேபிளில் வைத்து விட்டு விரைந்து போய் பைகளை வாங்கிக்கொண்டான். ‘அம்மா சொன்ன வார்த்தைகளில் எதெல்லாம் இவள் காதில் விழுந்திருக்குமோ!! இன்னிக்கு எப்படில்லாம் ஆடப்போறாளோ!!’ நெஞ்சத்துடிப்பு காது வரைக்கும் கேட்டது. பைகளை உள்ளே கொண்டு வைத்து விட்டு, கைகளைக் கழுவிக்கொண்டு முன்னறை நோக்கி நகர்ந்தான். உள்ளே அம்மாவுக்கும் மனைவிக்கும் வாக்குவாதம் நடப்பது காதில் விழுந்தது.
அலுப்பாக உணர்ந்தான், ‘போதும்டா சாமி’ என எரிச்சலாக இருந்தது. சோபாவில் மடங்கிப்படுத்துக்கொண்டான். ‘ஏ.. யப்பா!!.. இன்னும் மழை அடிக்கும் போலிருக்கு, என்னமா புழுங்கி வேர்த்து ஊத்துது’ புரண்டு அப்படியே கிடந்தான்.
‘ஃபேன் போட்டுக்கோ’ என்றது ஒரு மனம்
‘ஆம்மா.. நீ கெட்ட கேட்டுக்கு ஃபேன் ஒண்ணுதான் குறைச்சல்’ என கரித்துக்கொட்டியது இன்னொரு மனம். கண்ணைச்சுழட்டிக்கொண்டு வர அப்படியே மெல்ல.. மெல்ல.. அமிழ்ந்தான்.
டேபிளின் மேலிருந்த காப்பிக்கோப்பையை சற்று நேரம் கழித்துதான் அவன் அம்மா பார்த்தாள். ‘புள்ள சூடா கேட்டான், ஆறிப்போயிட்டுதே.. யெய்யா வேற காப்பி கொண்டாரட்டுமா? என குரல் கொடுத்தாள்.
பதில் வரவில்லை.
அவனைத்தேடி முன்னறைக்கு வந்து மறுபடியும் கேட்டாள்
பதிலில்லை.
தூங்கி விட்டானோ எனத் தோன்றினாலும் அவன் படுத்திருந்த கோணத்தில் ஏதோ வித்தியாசமாக உணர்ந்தாள், அருகில் வந்து அவன் தோளைப்பற்றி உலுக்கினாள்… வியர்த்துக் குளிர்ந்திருந்தான்.
“ஏ எம்மா… எம்புள்ள என்னமோ போல கெடக்கானே, யாராச்சும் வந்து என்னன்னு பாருங்களேன்” அவள் போட்ட கூப்பாடில் அடுக்களையிலிருந்த அவன் மனைவி ஓடி வந்தாள், எதிர் வீட்டினர் வந்தனர், அடுத்த தெருவிலிருந்து அழைத்து வந்திருந்த டாக்டர் பார்த்தார். இசிஜி மெஷினை இணைத்தார், நீளநீளமான கோடுகளாக தாளில் வரைந்து தள்ளியது அது. பார்த்து விட்டு, அவன் கழுத்தில் இரு விரல்களால் லேசாக அழுத்தி சோதித்து விட்டு, “மாஸிவ் அட்டாக் மாதிரி தெரியுதும்மா, ஹி இஸ் நோ மோர்” என்று உதட்டைப்பிதுக்கி விட்டு போய் விட்டார்.
அங்கமெல்லாம் பதற, கண்ணீர் வழிய நின்று கொண்டிருந்த அவன் மனைவியை நோக்கி கையை நீட்டியபடி கத்தத்தொடங்கினார் அவன் அம்மா ”அடிப்பாவி.. டென்ஷனக்குடுத்துக்குடுத்து எம்புள்ளயக்கொன்னுட்டியே. மாரடைப்புல மனுசன் சாகறது என் பரம்பரைலயே கெடையாதே”
அவன் உடல் குளிர்ந்து சில்லிட ஆரம்பித்திருந்தது. நிகழ்கால எதிர்காலக் கவலைகளிலிருந்து ‘அவனுக்கு’ விடுதலை கிடைத்து விட்டது. “மல மாதிரி சப்போர்ட்டா இருந்தியளே, இப்பம் என்னை நட்டாத்துல விட்டுட்டியளே.. இனி எனக்கு ஆரு இருக்கா? ஓரோருத்தர் கிட்ட ஏச்சு வாங்க வெச்சுட்டுப்போயிட்டியளே” பெருங்குரலெடுத்து அவன் மனைவி அழுத குரல் வீடெங்கும் எதிரொலித்தது.
தேற்றத்தான் அவன் இல்லை.
சிறுகதையை வெளியிட்ட "விருட்சம்" நாளிதழுக்கு நன்றி.